World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Anti-G8 demonstration violence in Rostock: questions and contradictions

ரோஸ்டோக்கில் ஜி 8 எதிர்ப்பு ஆர்ப்பாட்ட வன்முறை: வினாக்களும், முரண்பாடுகளும்

By Marius Heuser and Ulrich Rippert
7 June 2007

Back to screen version

ரோஸ்டோக்கில் கடந்த சனியன்று G8 உச்சிமாநாட்டிற்கு எதிராக நடந்த வெகுஜன ஆர்ப்பாட்டத்தில் வெளிப்பட்ட வன்முறை, ஜேர்மனிய அரசியல் மற்றும் செய்தி ஊடக நடைமுறையில் இருந்து கடுமையான போலீஸ் நடவடிக்கைகள் வேண்டும் என்ற உரத்த முறையீடுகளுக்கு வழிவகுத்துள்ளது. பல வர்ணனையாளர்கள் ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் எதிர்ப்பு அமைப்பாளர்கள் மீது வரம்பு கடந்த செயலுக்காக குற்றம்சாட்டுவதை எடுத்துக் கொண்டு, ஆர்ப்பாட்டத்திற்கு முன் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கான உரிமை மற்றும் மக்கள் கூடும் உரிமை ஆகிய உரிமைகளின் மீதான தாக்குதலை இதையொட்டி நியாயப்படுத்தவும் முற்பட்டுள்ளனர்.

தன்னை பொறுத்தவரையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒரு குழுவாக கலகங்களுக்கு பொறுப்பு, ஏனெனில் ஆரம்பத்தில் இருந்தே அவர்கள் ("Autonomes" என்று அழைக்கப்படுபவர்) வன்முறை பெருங்குழப்பவாதிகளில் இருந்து தங்களை தெளிவாக பிரிவு படுத்திக்கொள்ளவில்லை என்று Reinhard Mohr, Spiegel-Online ல் எழுதியுள்ளார். அரசாங்கம் மற்றும் மற்ற G8 உச்சிமாநாட்டில் பங்கு கொண்டிருப்பவர்களை "கொள்ளைக் கூட்டத்தினர், குற்றவாளிகள்" என்று முத்திரையிடுபவர்கள் வன்முறை வெடித்தது பற்றி வியப்பு காட்ட வேண்டியதில்லை என்று மோர் முடிவாகக் கூறுகிறார். இவர் தன்னுடைய பத்திரிகை வாழ்க்கையை பிராங்போர்ட் பெரும் குழப்ப வாத "Pavement Beach" என்ற துண்டுப் பிரசுர வெளியீட்டுடன் தொடங்கினார்; அதில் 1970 களில் இவருடைய சக ஊழியர்களான ஜோஷ்கா பிஷர் மற்றும் டானியல் கோன்-பென்டிட் ஆகியோர் தெருக்களில் நடத்திய மோதல்கள் நியாயப்படுத்தப்பட்டிருந்தன.

Süddeutschen Zeitung ன் மைக்கேல் பாஷ்மல்லர் கார்களை எரித்தல், முகமூடி அணிந்து கற்களை எறிதல் இவற்றிற்கும், இருக்கும் சமூக ஒழுங்கை கேள்விக்கு உட்படுத்தும் ஓர் அரசியல் முன்னோக்கிற்கும் இடையே தொடர்பு ஒன்றை காட்டுகிறார். "G8 உடன் சேர்ந்து முழு ஒழுங்கையும் வரலாற்றுக்குள் ஆழ்த்திவிட வேண்டும் என்று விரும்புபவர்கள் [...] அடுத்த சில நாட்களுக்கு வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும் ஒரு நல்ல வருங்காலத்திற்காக போராடிக் கொண்டிருக்கும் உலகில் இவர்கள்தான் ஒத்திசைவற்ற தன்மையை கொண்டு வருபவர்கள் ஆவர்."

தெருச் சண்டைகள், மற்றும் 430 போலீசார் உட்பட ஆயிரம் பேர் காயமுற்றது பற்றிய தகவல்கள் (உண்மையில் 400 பேர் காயமுற்றனர், கடுமையாக காயமுற்ற 30 போலீசாரில் இருவர்தான் மருத்துவமனைக்கு சென்றனர், அவர்களும் அதிகக் காயம் இல்லாததால் மருத்துவமனையில் இரவு கூடத் தங்கவில்லை), ஆர்வத்துடன் முதலாளித்துவத்தை பற்றிய எந்தக் குறைகூறலையும் குற்றமாக்குவதற்கு பயன்படுத்தப்படுகின்றன; மேலும் அரசியல் வாதிகளும் மற்றும் செய்தி ஊடகமும் ரோஸ்டோக்கில் துல்லியமாக என்ன நடந்தது என்று தீர்மானிப்பதில் சிறிதும் ஆர்வம் காட்டவில்லை.

உண்மையில், ஆர்ப்பாட்டம் தொடங்கி பல மணி நேரமும் நகரத்தின் கப்பல்கட்டும் தளம் என்னும் இறுதிக் கூட்ட இடத்திற்கு செல்லும் வரையில் அமைதியாகத்தான் இருந்தது. அந்த இடத்தில்தான் எதிர்ப்பு, திருவிழா தன்மை கொண்டு ஒரு திரையரங்கு மற்றும் பண்பாட்டுக் குழுக்கள் முன்னணியில் அணிவகுத்துச் சென்ற நிலை இருந்தது. ஆர்ப்பாட்டக்காரர்களும், அமைப்பாளர்களும் வன்முறை திடீரென்று வெடித்ததில் அதிர்ச்சியுற்றனர்; கற்களை வீசுபவர்களையும் போலீசாரையும் சமாதனப்படுத்துவதற்கு பங்கேற்றவர்கள் பல முயற்சிகளையும் மேற்கொண்டனர்.

இதைத்தவிர, ஜேர்மனியின் உள்துறை அமைச்சரகத்தில் --குறிப்பாக உள்துறை மந்திரி Wolfgang Schäuble (CDU) -- பல வாரங்களுக்கு முன்பே வன்முறை வெடிக்கக்கூடிய வாய்ப்பு உண்டு என்று அறிவித்ததுடன், ஆர்ப்பாட்ட தினத்தன்று மாலை செய்தி நிலையங்கள் எரியும் கார்கள், சாலைத் தடைகள் ஆகியவற்றைக் காட்டிய வகையில், போலீசாருக்குக் கூடுதலான ஆயுதங்கள் வேண்டும் என்றும் கூறினார். இதற்கிடையில் CDU அரசியல் வாதிகள் GSG9 எனப்படும் இழிவுற்ற பயங்கரவாத எதிர்ப்பு சிறப்பு படைகளை ஆர்ப்பாட்டக்கார்கள்மீது ஏவிவிட வேண்டும், போலீசாரிடம் நிறைய ரப்பர் தோட்டாக்கள் கொடுக்க வேண்டும் என்றும் கூறினார். அடுத்த நடவடிக்கை எதிர்பார்த்ததுதான்: Schäuble ஜேர்மனிய இராணுவத்தை அழைத்து உள்நாட்டு எதிர்ப்பை அடக்க உத்திரவிட்டார்.

ஆனால், "இக்கலகங்களால் எவருக்கு நலன்கள் கிட்டின?" என்று ரோஸ்டோக் நிகழ்வுகளைப் பற்றி ஒருவர் சிந்திக்க முற்பட்டால், ஆர்ப்பாட்டக்காரர்கள் அனைத்து விதத்திலும் தோல்வியடைகின்றனர் என்பது தெளிவு. ஆனால் இதற்கு மாறாக, ஏற்கனவே கூடும் உரிமைக்கு (மற்றும் மே மாத நடுவில் இடதுசாரி அமைப்புக்கள், பூகோளமயமாக்கலிற்கு எதிர்ப்பாளர்கள் ஆகியோருக்கு எதிராக அவற்றின் அலுவலகங்கள், அதிகாரிகள் இல்லங்கள் ஆகியவற்றின்மீது நடத்தப்பட்ட தாக்குதலையும்) எதிராக நடத்தப்பட்ட தாக்குதல்களை நியாயப்படுத்த இக்கலகங்களை உள்துறை அமைச்சரகம் பயன்படுத்துகிறது; மற்றும் இன்னும் தொலை விளைவு கொடுக்கக் கூடிய தாக்குதல்கள் மற்றும் போலீஸ் நடவடிக்கைகள் ஆகியவற்றிற்கும் தயார் செய்து வருகிறது.

இவ்விதத்தில் போலீஸ் மற்றும் பாதுகாப்பு படையினர் நடந்து கொள்ளும் முறையில் காணப்படும் வெளிப்படையான முரண்பாடுகளை ஆராய்தல் முக்கியமாகும்.

பல வாரங்களுக்கு முன்பே "தன்னிச்சையாக செயல்படும் கலகக்கரார்களை" பற்றி போலீஸ் எச்சரித்து, பின்னர் "கறுப்பு முகாம்" பெரும் குழப்பவாதிகளை தடையின்றி இரு ஆர்ப்பாட்டங்களில் ஒன்றில் நெருக்கமாக இணைந்து செல்ல அனுமதித்தது என்ற உண்மையை எப்படி எடுத்துக்கொள்வது? இந்த "கறுப்பு முகாமுடன்" வழக்கமாக நடப்பது போல் அனுபவம் மிகுந்த போலீஸ் பிரிவுகள் ஏன் உடன் செல்லவில்லை? அணியின் இறுதிக் கட்டத்திற்கு செல்லும் பகுதியின் நடுவில் ஏன் ஒரு போலீஸ் வண்டி தூண்டிவிடும் வகையில் நிறுத்தப்பட்டிருந்தது? "நேரடியாகப் பார்த்த பலரின் தகவல்கள்படி, தாக்குதல்கள் "கறுப்பு முகாமில்" இருந்த சில உறுப்பினர்களால் இந்த வண்டியின்மீது நடத்தப்பட்டது; அதையொட்டி போலீஸ் தலையிடுவதற்கு வகையாயிற்று. இந்த வண்டி அகற்றப்பட வேண்டும் என்று அணிவகுப்பின் அமைப்பாளர்கள் பல முறை கூறியது, ஆர்ப்பாட்டத்துடன் தொடர்ந்து வந்திருந்த போலீசாரால் ஏன் கவனம் கொள்ளப்படவில்லை?

நிழற்படம் எடுக்கும் செய்தியாளர்களை ஆர்ப்பாட்டத்தின் அமைதிப் போக்கின்போது நிழற்படம் எடுக்கக்கூடாது என்று எவர் உத்தரவு இட்டது? நிழற்படங்கள் எடுக்கப்படக்கூடாது என்பதில் அதிகாரிகள் ஏன் ஆர்வம் காட்டினர்?.

இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜேர்மனிய அதிகாரிகள் "வன்முறை சார்ந்த தன்னாட்சி இயக்கத்தினுள்" இரகசிய ஒற்றர்களை ஊடுருவச் செய்வதில் தீவிரமாக இருந்தது நன்கு தெரிந்துள்ளதுதான். மே 14ம் தேதி பதிப்பில் Der Spiegel ஏடு எழுதியது: "ஆண்டுத் தொடக்கத்தில் கூட்டாட்சி உளவுத்துறை பிரிவு (BND) பூகோளமயமாக்கலுக்கு எதிர்ப்பாளர்கள் "நம் செயற்பாட்டிற்கு ஒரு 'குவியப்புள்ளியாக' உள்ளனர்" என்று அறிவித்தது. அனைத்து தயாரிப்புக் கூட்டங்களும் கண்காணிக்கப்படுவதுடன், இரகசிய ஒற்றர்களும் குழுக்களில் "ஊடுருவி நிற்பர்"

ஆர்ப்பாட்டத்திற்கு ஒரு வாரம் முன்புதான், மே 29 அன்று, Bild செய்தித்தாள், "G8 உச்சிமாநாட்டை ஒட்டி, "இரகசிய போலீஸ் திட்டங்கள்" இருப்பதாக தகவல் கொடுத்தது. Bild கருத்தின்படி, மூன்று அம்சத் திட்டத்தின் முதல் கருத்து, "உளவுத்துறையினால் நீண்ட காலம் முன்ரே அமைப்பில் ஊடுருவி நிறுத்தப்பட்டுள்ள இரகசிய ஒற்றர்கள் திட்டமிடும் தடுப்பு நடவடிக்கைகள் பற்றி முன்னதாகவே சான்றுகளை அளிப்பர்" எனக் கூறியது.

எனவே இப்பொழுது எழும் வினா: "கறுப்பு முகாமில்" எத்தனை இரகசிய ஒற்றர்கள் செயல்பட்டுவந்தனர்? இந்த இரகசிய ஒற்றர்களால் போலீஸ் கட்டுப்பாட்டிற்கு வன்முறை பற்றி எத்தகைய தகவல்கள் கொடுக்கப்பட்டன, அவ்வன்முறைகளை தடுக்க நடவடிக்கைகள் ஏன் எடுக்கப்படவில்லை? மேலும், வன்முறை வெடிப்பில் இரகசிய ஒற்றர்கள் தொடர்பு கொண்டிருந்தனரா, அப்படியானால் எந்த அளவிற்கு?

இவை அவசரமாக விசாரிக்கப்பட வேண்டிய வினாக்கள் ஆகும். பாதிப்புக்களின் எண்ணிக்கை மிக அதிக அளவில் இருப்பதால், இரகசிய ஒற்றர்களின் பங்கு பற்றித் தெளிவுபடுத்துவது மிகவும் முக்கியமாகும். இத்தகவல் கிடைக்கும் வரையில், ஆர்ப்பாட்டத்தில் தூண்டுதல் நடத்தும் வகையில் இரகசிய ஒற்றர்கள் நடந்து கொண்டனர் என்பதை மறுக்க இயலாது.

2001 ஜெனோவா

சில ஆண்டுகளுக்கு முன்பு ஜூன் 2001ல் ஜெனோவா G8 உச்சிமாநாட்டில் நடந்த நிகழ்வுகள் இன்னும் நினைவில் பசுமையாக நிற்கின்றன. ஆர்ப்பாட்டத்தின்போது, இளவயதினரான கார்லோ குலியானி (23) கொல்லப்பட்டார். அவருடைய இறப்பை சூழ்ந்திருந்த நிலைபற்றி தெளிவாக்குமாறு அவருடைய குடும்பத்தினரும் மற்ற போலீஸ் வன்முறையினால் பாதிக்கப்பட்டவர்களும் பல ஆண்டுகள் போராடினர். இறுதியாக இத்தாலிய அரசாங்க வக்கீல் அலுவலகம் ஜெனோவா ஆர்ப்பாட்டத்தில் ஏற்பட்ட வன்முறை 200 பேர் அடங்கிய கடின உளப்பாங்கு கொண்டிந்தவர்களால் தொடக்கப்பட்டது என்று அறிவித்தது; அவர்களில் கணிசமானவர்கள் போலீஸ் இரகசிய ஒற்றர்கள் அல்லது போலீசால் கூலிக்கு அமர்த்தப்பட்ட வலதுசாரி தீவிரவாதிகள் ஆவர். இந்த தூண்டிவிடுபவர்கள் தங்கள் தந்திரோபாய முறைகளை போலீசுடன் விவாதித்து, தங்கள் குற்றம் சார்ந்த நடவடிக்கைகளை தொடங்குவதற்கு முன்பு அராஜகவாதிகளாக சமாதான முறையில் ஆர்ப்பாட்டம் நடந்தியவர்களோடு மறைந்து கொண்டனர்.

கலகக்காரர்கள் பொதுவாக இடையூறின்றி விடப்பட்டபின், ஜெனோவா வன்முறை போலீசுக்கு எஞ்சியிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தீவிர மிருகத்தனமான தாக்குதலை நடத்துவதற்கு போலிக் காரணம் ஆயிற்று. போலீஸ் தூண்டுதல் பற்றி ஏராளமான சான்றுகள் வெளிப்பட்டன. அவர்கள் மகத்தான வலிமையை பயன்படுத்தினர் என்று நிறைய தகவல்கள் வந்தன. குயுலியானி ஒரு போலீஸ்காரரால் சுடப்பட்டார். அதே நேரத்தில் பாஸ்கொலி பள்ளிமீது குறிப்பிடத்தக்க வகையில் மிருகத்தனமான தாக்குதல் நடத்தப்பட்டது; அங்கு நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் தூக்கத்தில் இருந்தவர்கள் எழுப்பப்பட்டு மிருகத்தனமாக அடிக்கப்பட்டனர். இதன் பின்னர் அவர்களுள் பலர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றனர்.

இத்தாலிய போலீஸ், பள்ளிமீது தாக்குதல் நடத்தியதை நியாயப்படுத்துவதற்குக் கொடுத்த போலிக் காரணங்கள் அரசாங்க வழக்கறிஞர் அலுவலகத்தால் முற்றிலும் நிராகரிக்கப்பட்டன. பள்ளியில் உறங்கிக் கொண்டிருந்த இளைஞர்களிடையே மறைவாக வைப்பதற்காக போலீசார் தங்களுடைய மோலோடோவ் கலவையையும் (வெடிகுண்டுப் பொருட்கள்) கொண்டுவந்திருந்தனர்.

ஜேர்மனியிலும் இதேபோன்ற நிகழ்வுகள் நடக்காது என்று நம்புவர்கள் வரலாறு பற்றி அறியாமையில் உள்ளனர்.

1960 களின் கடைசியில் இரகசிய ஒற்றர் Peter Urbach, பின்னர் Red Army Faction (RAF) என்னும் அமைப்பின் தொடக்க கூறுபாடுகளாக இருந்த பேர்லின் APO (பாராளுமன்றத்தில் இல்லாத எதிர்ப்பினர்) விற்கு குண்டுகளும் ஆயுதங்களும் வழங்கினார். பத்து ஆண்டுகளுக்கு பின்னர் BND உறுப்பினர் ஒருவர் RAF உறுப்பினர் Sigurd Debus சிறைக் கலகம், வெளியேறுதல் ஆகியவற்றை செய்யும் முயற்சிக்கு Celle நகரச் சிறையொன்றின் சுவரில் ஒரு பெரும் ஓட்டையிட்டு உதவினார், இதன் மூலம் போலீசார் அவ்வமைப்பில் ஊடுருவ முடிந்தது.

இன்னும் சமீபத்திய ஆண்டுகளில் போலீஸ் தூண்டுதலாளர்கள் பயன்படுத்தப்படுவது பற்றி நிறைய தகவல்கள் வந்துள்ளன. மே 1993ல் Bischofferode ல் உள்ள கிழக்கு ஜேர்மனிய சுரங்கத் தொழிலாளர்கள் தங்கள் சுரங்கம் மூடப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசாங்க அலுவலகங்களுக்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துகையில், பெரும் குழப்பவாதிகள் போல் காட்டிக் கொண்டு போலீசார் தங்களை ஆர்ப்பாட்டத்திற்குள் செலுத்திக் கொண்டு பின்னர் சீருடையில் இருந்த தங்கள் சக ஊழியர்கள் மீது பாட்டில்களையும் கற்களையும் எறிந்தனர். இந்தக் கலகக்காரர்களை நிறுத்த சில தொழிலாளர்கள் முயன்று போலீசாரிடம் ஒப்படைக்க முயலுகையில், போலிசார் அதைச் சிறிதும் பொருட்படுத்தவில்லை. மாறாக போலீஸ் அதிகாரிகள் ஒருதலைப்பட்சமாக பல தொழிலாளர்களை இழுத்து, மிருகத்தனமாக அடித்து உதைத்தனர்.

Gorleban அணுவாயுத எதிர்ப்புக்களின்போது வேண்டுமென்றே போலீசார் தூண்டுதலில் பங்கு பெற்றார்கள் என்பது பற்றியும் நிறைய தகவல்கள் வந்துள்ளன.

நேரில் பார்த்தவர்கள் தகவல்

இது தொடர்பானதில், ரோஸ்டோக் ஆர்ப்பாட்டக்காரர்கள் பற்றி நேரடியாக பார்த்தவர்கள் கொடுத்த தகவல்களை மிக அக்கறையுடன் எடுக்க வேண்டியது அவசியமானதாகும். Indymedia வலைத் தளத்தில் தங்கள் அனுபவத்தை பற்றிப் பல ஆர்ப்பாட்டக்காரர்கள் எழுதியுள்ளனர். அத்தகவல்கள் அனைத்துமே அன்று பெரும்பாலும் ஆர்ப்பாட்டம் மிக அமைதியான முறையில் நடந்துவந்ததாகத்தான் விளக்கியுள்ளனர். அதே நேரத்தில் சில ஆர்ப்பாட்டக்காரர்கள் --ஒருவருக்கொருவர் தொடர்பற்றவர்கள்-- "கறுப்பு முகாமின்" உறுப்பினர்கள் சிலர் பெரும் குழப்ப வாதிகளின் முக்கிய பிரிவில் இருந்து தனித்து இயங்கியதாகவும், போலீசாருடன் தொடர்பு கொண்டிருந்தவர்கள் போல் இருந்தனர் என்றும் எழுதியுள்ளனர்.

Indymedia வில் இவ்விதத்தில் Rainer Zwanzleitner தகவல் கொடுக்கிறார்: "நாங்கள் ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தோம்; எங்கள் அணி ஹாம்பேர்க் தெருவில் இருந்து வந்தது; அது முன்னணிக்கு அருகாமையில் இருந்தது. நகரத்தின் கப்பல்கட்டும் தளத்தை நாங்கள் நெருங்கியதும், ஒரு போலீஸ் குழு (கிட்டத்தட்ட 10-20) ஒரு கட்டிடத்தின் முன்புற வேலிக்கு அருகாமையில் ஏதோ உத்தரவின் பேரில் நடப்பது போல், தங்கள் தலைக்கவசங்களை அணிந்து கொண்டனர், அதாவது, நடவடிக்கைக்கு தயாராக இருப்பது போல். அந்தக் கட்டம் வரை எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை."

போலீஸ் தலையீடு இருக்கும் என்ற அச்சத்தில் Zwanzleitmer தன்னுடைய குழுவை இந்த போலீஸ் வட்டத்தில் இருந்து விடுவித்துக் கொண்டு இறுதி அணிக்குத் திட்டமிட்டிருந்த அரங்கின் அருகே தொடர்ந்து சென்றார். "அங்கிருந்து போலீசார் ஆர்ப்பாட்ட முன்னணிப்புறம் சென்றனர் என்பதை நாங்கள் பார்க்க முடிந்தது. அதே நேரத்தில் சில போலீஸ் பிரிவுகள் நகர மையப் பகுதியில் இருந்து வந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது மோதினர்; பிந்தையவர்களோ ரயில் நிலையத்தின் பக்கத்தில் இருந்து வந்து கொண்டிருந்தனர்." இறுதி அணி ஏற்கனவே தொடங்கி விட்டது; 10 அல்லது 15 நிமிஷங்களில் அமைப்புக் குழுவின் உறுப்பினர் ஒருவர் ஒலிபெருக்கி மூலம் போலீசார் தங்கள் தூண்டுதல் நிலைப்பாட்டை நிறுத்த வேண்டும் என்று முறையிட்டார்.

ஆனால் இதற்கு எதிரானதுதான் நடந்தது. ஒரு போலீஸ் ஹெலிகாப்டர் அரங்கிற்கு மேலே குறைந்த உயரத்தில் பறந்து; அதில் கிளப்பிய சத்தம் ஒலிபெருக்கி முறை மூலம் அனைத்துப் பகுதியிலும் ஆதிக்கம் செலுத்தி அரங்கில் இருந்து வந்த அறிவிப்பை கேட்க முடியாமல் செய்துவிட்டது.

"அது சற்று அமைதியானவுடன், நாங்கள் கப்பல்கட்டும் தளத்தில் இருந்து நீங்கி நடைபாதையினர் பகுதிப் புறம் புறப்பட்டோம். வழியில் நாங்கள் பார்த்தது ஒரு போலீஸ் முகாமைத் தவிர வேறு எதுவும் இல்லை. எங்கு நோக்கினும் போலீஸ் வாகனங்கள் இருந்தன." இதற்கிடையில் மற்றொரு அச்சுறுத்தும் நிலைமை பல்கலைக்கழக சதுக்கத்தில் உருவாகிக் கொண்டிருந்தது.

"20 முதல் 30 பேர் அடங்கிய ஆர்ப்பாட்டக்காரர்கள் குழு கறுப்பு உடையில் போலீஸ் பிரிவுகள் பின்தொடர சதுக்கத்தில் நுழைந்தது. இந்த ஆர்ப்பாட்டக்காரர்களில் சிலர் சதுக்கத்திலேயே இருந்தனர்; சிலர் நகர மன்றத்தை நோக்கிச் சென்றனர். பின் 3 அல்லது 4 கறுப்பு உடையை அணிந்தவர்கள், வழக்கமாக இருக்கும் 'autonome' ஐ விட மாறுபட்ட வகையில் வந்ததை கண்டோம். அவர்கள் மிக வலிமையுடன் இருந்தனர்; ஒரே மாதிரியாக உடை உடுத்தியிருந்தனர் (மெல்லிய நைலோன் அனோரக்குகள், ஒரே மாதிரியான கால்சட்டைகள், முகமூடி தரித்த முகங்கள்). இந்த மெல்லிய உடையின் கீழ் உடல்கவசம் அணிந்திருந்ததும் தெரிய வந்தது. இன்னும் குறிப்பிடத்தக்க வகையில், முழு மறைப்பில் அவர்கள் சதுக்கத்தை விட்டு எதிர்த்திசையில் இருப்பவர்கள் புறம் செல்லுகையில், அதாவது போலீசாரை நோக்கிச் சென்றனர். இதன் பின்னர் அவர்கள் அடுத்து எங்கு சென்றார்கள் என்று நாங்கள் உறுதிபடுத்திக் கொள்ள முடியவில்லை." (http://de.indymedia.org/2007/06/180968.shtml)

ஆர்ப்பாட்டத்தில் ஏனைய பங்கு பெற்றவர்களும் "கறுப்பு முகாமில்" இருந்தவர்கள் துண்டுப்பிரசுரங்கள் போன்ற அரசியல் குறிப்புக்களை இகழ்வுடன் வாங்காமல் நிராகரித்ததை தாங்கள் பார்த்தது பற்றிக் குறிப்பிட்டுள்ளார்கள். "சுய ஆட்சி இடதைப் பொறுத்தவரையில் இது எனக்கு ஒரு புதிய அனுபவமாகும் ...இந்தப் பிரிவினரிடம் ஏதோ சரியில்லை என்ற உணர்வு எனக்குத் தோன்றியது; அவர்கள் ஒன்றும் இடது போலவோ அல்லது இடது அராஜகவாதிகள் போலவோ நடந்து கொள்ளுவதாக தோன்றவில்லை" என்பது Anna U என்ற பங்கு பெற்றவர் ஒருவருடைய தகவல் ஆகும்.

"மடத்தனமான அமைப்புமுறை"

போலீசாரின் தூண்டிவிடும் நடத்தை பற்றி ஆர்ப்பாட்டக்காரர்கள் மட்டும் குறைகூறவில்லை. Deutschland radio Kultur Munich இல் போலீஸ் உளநிலை ஆய்வு வல்லுனர் George Sieber ரோஸ்டோக்கில் போலீஸ் எடுத்த நடவடிக்கைகளை "மடத்தனமான செயற்பாடு" என்று விவரித்துள்ளார். காலம் கடந்து விட்ட தந்திரோபாயங்களை போலீசார் பின்பற்றுவதோடு, ஒவ்வாத தன்மை அளவில் வலிமையை பயன்படுத்துகின்றர் என்று சீபர் கூறினார்.

வன்முறை எப்படி ஏற்பட்டது என்று கேட்கப்பட்டபோது அவர் விடையிறுத்தார்: "இவ்விதத்தில் அது வெளிப்பட்டது: ரோஸ்டோக்கில் உண்மையில் சூடாவதற்கு முன்னரே தீவிரம் வெளிப்பட்டிருந்தது. சாதாரணமாகக் காணப்படாத வகையில் போலீஸ் அதிகாரிகள் உடல் கவசம் அணிந்திருந்ததை அனைவரும் பார்க்க முடிந்தது; ஒருவர் முதல் தோற்றத்திலேயே ஈராக்கில் இருக்கும் மரைன்களுடன் குழப்பிக் கொண்டிருக்கலாம்."

இந்த நெருக்கடி போலீசாரால் தோற்றுவிக்கப்பட்டது என்று நினைக்கிறீர்களா என்று கேட்கப்பட்டதற்கு, சீபர் ஏற்கனவே நெருக்கடி இருந்துவிட்டது என்றார். "பெரும் ஆபத்து வரும் அல்லது அத்தகைய உணர்வின் அடிப்படையில் அவர்கள் நடந்து கொண்டனர்; பின்னர் மனித உரிமைகளை கடுமையாக மீறிய வகையில் பாதுகாப்பு எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தனர். இதைத்தான் நான் படிப்படியான உக்கிரமடைதல் என்று கூறுகிறேன்--உண்மையில் உக்கிரமடைதலின் உச்சக்கட்டம் அதுதான்."

ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடக்கத்தில் அமைதியாக இருந்தனர்: "அந்த இடத்தில் நாங்கள் இரு கண்காணிப்பாளர்களை நிறுத்தியிருந்தோம்; அவர்கள் எங்களுக்கு தொலைபேசி மூலம் கூறினர்: "[பேர்லினில் ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் இசை நிகழ்வான] Love Parade ஐ ஒத்து இங்கு சூழ்நிலை இருக்கிறது. இதன் பின் ஒரு போலீஸ் வாகனம் சேதப்படுத்தப்பட்டபின் தீவிரமாக பல விஷயங்கள் நடந்தன; இதை போலீஸ் அதிகாரிகளுடைய ஒவ்வாத் தன்மையுடைய எதிர்விளைவு என்று கூறலாம்" என்றார்.

பாதுகாப்புப் படைகள் கிட்டத்தட்ட தன்னந்தனியாய் "ஒரு குறிப்பிட்ட முறையில் புறப்பட்டனர்" என்பது பற்றி சீபர் விமர்சித்தார். இத்தகைய வகையில் "மோதலுக்கான ரோந்து போல், ஒரு குறிப்பிட்ட வகையில், சங்கிலி போல் செல்லுதல்" முற்றிலும் பொருந்தாதவை, "தோராயமாக 1970களில் இருந்தே நடவடிக்கை ரீதியில் மடத்தனம்" என்று விவரிக்கப்படுபவை. "ரோஸ்டோக்கில் எல்லாமே புத்தகத்தில் கற்பிப்பதற்கு எதிரிடையாகத்தான் நடந்தது. போலீஸ் உயர்கல்விக் கூடத்தில் அதிகாரிகள் பொதுவாகவே இப்படி நடந்து கொள்ளக்கூடாது என்பதை கற்கின்றனர். எனவே இப்படி நடந்தது முதலில் இருந்தே பொருத்தமற்றது ஆகும்."

வியப்படைந்த நிருபர் பல முறை போலீஸ் கட்டுப்பாட்டை குறைகூறுகிறாரா எனக் கேட்ட பின், சீபர் விடையிறுத்தார்: "இல்லை; கடிந்து கூறவில்லை; ஒருவேளை அரசியல் நோக்கம் கூட இதில் இருந்திருக்கக்கூடும்."

இதுதான் இப்பொழுது துல்லியமான கேள்வி ஆகும்: ஆட்டோக்களை எரிக்கும், கற்களை எறியும் கலகக்காரர்கள் நிழற்படங்கள், ஆர்ப்பாட்டம் நடத்தும் உரிமைமீதான ஏற்கனவே நடந்துவிட்ட தாக்குதல்கள், மற்றும் இனி புதிதாக நடத்தப்பட உள்ள ஜனநாயக உரிமைகளின்மீதான தாக்குதலை நியாயப்படுத்தப்படுவதற்காக பயன்படுத்தப்படக் கூடும் என்ற வகையில், நிகழ்வுகள் தொடங்கி வைக்கப்பட்டனவா? இதுதான் "அரசியல் ரீதியாக நோக்கங்கொண்டிருந்தது" என்பதா?

ஒரு திட்டமிட்ட தந்திரோபாயத்தின் அடிப்படையின் விளைவில் கலகங்கள் வந்தனவா, இதில் இரகசிய போலீஸ் ஒற்றர்கள் துண்டிவிடும் வகையில் "கறுப்பு முகாமில்" செயல்பட்டனரா, அதை எதிர்கொள்ளும் வகையில் போலீசார் நெருக்கமான வகையில் தங்களை வகுத்துக் கொண்டனரா, அதையொட்டி பல நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் காயமுற்ற வகையில் நிகழ்வுகள் ஏற்பட்டது என்பது பற்றி ஒரு விசாரணை நடத்துவது முக்கியமாகும்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற வாசகர்கள், அங்கு முக்கியமாக என்ன நடந்தது என்பது பற்றித் தெரிந்தவர்கள் தங்கள் தகவல்களை எங்களுக்கு அனுப்பிவைத்து எங்களுடைய ஆசிரியர் குழுவுடன் தொடர்பு கொள்ளுமாறு அழைப்பு விடுகிறோம்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved