World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

US commander warns Iraq war will go on for a decade

ஈராக்கிய போர் ஒரு தசாப்தம் தொடரும் என்று அமெரிக்கத் தளபதி எச்சரிக்கிறார்

By Bill Van Auken
18 June 2007

Back to screen version

ஞாயிறன்று ஒரு தொலைக்காட்சிக்கு கொடுத்த பேட்டி ஒன்றில், நாட்டில் மூத்த அமெரிக்க தளபதியாக இருக்கும் ஜெனரல் டேவிட் பெட்ரியஸ் அமெரிக்க துருப்புக்கள் ஈராக்கில் வரவிருக்கும் ஒரு தசாப்தத்திற்கு கிளர்ச்சி எதிர்ப்பு நடவடிக்கைகளை நடத்தக்கூடும் என்று எச்சரிக்கை விடுத்தார்.

பெட்ரியஸ் ்Fox News ல் தோன்றி, அமெரிக்க காங்கிரசிற்கு தானும் பாக்தாத்தில் அமெரிக்க தூதராக இருக்கும் Ryan Crocker ம் முன்னேற்றம் பற்றிய அறிக்கையை வழங்க இருக்கும் பொழுது, அடுத்த செப்டம்பர் மாதம் ஈராக்கில் சமாதானத்தை ஏற்படுத்துவதில் அமெரிக்க இராணுவம் வெற்றி அடைந்துவிடும் என்ற கருத்தை உதறித் தள்ளினார்.

Fox ன் கிறைஸ் வாலஸ் கேட்டார், "படைப்பெருக்கத்தால் செப்டம்பருக்குள் பணி முடிந்துவிடும் என்று நீங்கள் உறுதியாக நம்பவில்லையா?". பெட்ரியஸ் விடை கூறினார்: "இல்லை, நான் நம்பவில்லை." அவர் மேலும் கூறினார், "கடினமாக பணிகளை செய்யவேண்டியுள்ளது. 2006 இலையுதிர்காலம், குளிர்காலம், 2007 தொடக்கத்தில் ....குறுகியவெறி வன்முறையால் ஏற்பட்ட சேதம் மிகக் கணிசமானது."

அடுத்த ஆண்டு ஈராக்கிற்குள் கூடுதலான படை விரிவாக்கம் இருக்கக் கூடும் என்ற தகவல்களை மறுக்காத பெட்ரியஸ், அப்பிரச்சினை பற்றி இப்பொழுது விவாதிப்பது "காலம் கனிவதற்கு முன்" பேசுவதற்கு ஒப்பாகும் என்று அறிவித்தார்.

பாக்தாத்தில் இருந்து பேசிய அமெரிக்கத் தளபதி அறிவித்தார்: "ஈராக் எதிர்கொண்டிருக்கும் பற்பல சவால்கள் இங்கு இருக்கும்போது, அங்கு ஒவ்வொருவரும் ஓராண்டிலோ, இரண்டாண்டிலோ கூட அனைத்திற்கும் தீர்வு காணப்பட முடியாது என்பதை உணர்ந்துள்ளனர். உண்மையில், ஒருவிதத்தில், எழுச்சி எதிர்ப்பு நடவடிக்கைகள் வரலாற்றளவில் குறைந்தது ஒன்பது பத்து ஆண்டுகள் கூட பிடிக்கலாம். எந்த அளவிற்கு என்பதுதான் பிரச்சினை."

நாட்டில் அமெரிக்க இராணுவத்தை நீடித்து நிலைக்க வைத்திருப்பது "ஒருவேளை சரியான யதார்த்த பூர்வமான மதிப்பீடாக இருக்கலாம்" என்றும் அவர் சேர்த்துக் கொண்டார்.

தளபதியின் கருத்தானது, திரும்பப் பெறுவது தொடர்பான கால அட்டவணை பற்றி ஜனநாயகக் கட்சியினர் பேசுவதன் பின்னே மற்றும் அதன் மூலோபாயம் செப்டம்பரில் மறு மதிப்பீடு செய்யப்படும் என்ற புஷ் நிர்வாகத்தின் உறுதிமொழிகளின் பின்னே நடந்து கொண்டிருக்கும் உண்மை விவாதம் பற்றிய ஒரு பார்வையை கொடுத்துள்ளது. எண்ணெய் வளம் கொழிக்கும் நாட்டில் காலவரையற்ற முறையில் ஆக்கிரமிப்பிற்கான திட்டங்கள்தான் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

சமீப வாரங்களில் நிர்வாகத்தின் அதிகாரிகள் ஒரு நீடித்த ஆக்கிரமிப்பு மற்றும் ஈராக்கில் எழுச்சி எதிர்ப்பு போர் நடவடிக்கைகள் போன்ற கருத்து பற்றி அமெரிக்க மக்கள் கருத்தை உருவாக்கும் நிலைமையை ஏற்படுத்த முயல்கின்றனர். வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் டோனி ஸ்நோவும் மற்றவர்களும் ஈராக்கிற்கும் தென் கொரியாவிற்கும் இடையே நகைப்பிற்குரிய ஒப்புமைகளை கூறுகின்றனர்; தென் கொரியாவில் அமெரிக்கத் துருப்புக்கள் பல்லாயிரக் கணக்கானவர்கள் ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

அந்த முயற்சியின் ஒரு பகுதியாக, செப்டம்பர் மாதம் காங்கிரசிற்கு அளிக்கப்ட இருக்கும் அறிக்கையின் முக்கியத்துவத்தை குறைக்கும் வகையில் வெளிப்படையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உதாரணமாக தளபதி பெட்ரியஸ் "இருக்கும் நிலை பற்றி நியாயமான புகைப்படம்" போல் தன்னுடைய வரவிருக்கும் அறிக்கை இருக்கும் என்று குறிப்பிட்டார்.

கடந்த ஜனவரியில் புஷ் அறிவித்திருந்த எழுச்சியை" ஒட்டி தேவைப்பட்ட கிட்டத்தட்ட 30,000 தரைப்படை, கடற்படை அமெரிக்க துருப்புக்கள் ஈராக்கில் சேர்ந்து விட்டனர் என்று பென்டகன் கொடுத்த தகவலை அடுத்து பெட்ரியஸின் கருத்து வந்துள்ளது.

படை விரிவாக்கத்தின் முதல் ஐந்து மாதங்களில், குறுங்குழுவாதிகளின் வன்முறை குறைக்கப்படும் என்று கூறிய இலக்கில் அமெரிக்க இராணுவம் வெற்றி அடைந்ததற்கான அறிகுறிகள் ஏதும் இல்லை; அதேபோல் அமெரிக்க எதிர்ப்பை அடக்குதல் என்ற அதன் மையப் பணி பற்றியும் அறிகுறி ஏதும் இல்லை. கடந்த வாரம் காங்கிரசிற்கு பென்டகன் அனுப்பிய காலாண்டு அறிக்கை ஒன்று ஈராக்கில் வன்முறை அளவு உண்மையில் பல்லாயிரக்கணக்கான அமெரிக்க துருப்புக்கள் கூடுதலாக குவிக்கப்பட்ட பின் பெருகியதாகத்தான் தெரிவிக்கிறது.

ஏப்ரல், மே இரண்டு மாதங்களிலும், மார்ச் 2003 அந்நாட்டில் படையெப்பு தொடங்கிய பின், அமெரிக்க தரைப்படையினரும், கடற்படையினரும் கடுமையான குருதி சிந்திய இரு மாதங்களில் துன்புற்றனர்; கிட்டத்தட்ட 230 துருப்புக்கள் உயிரிழந்து, இன்று வரை அமெரிக்க படைகளின் மொத்த இறப்பு எண்ணிக்கை குறைந்தது 3,524 என்று உயர்ந்துள்ளது. இதற்கிடையில், பென்டகன் கொடுத்துள்ள எண்ணிக்கையின்படி, ஈராக்கியர்கள் இதே காலத்தில் நாள் ஒன்றிற்கு 100 என்று மடிந்துள்ளனர்; இந்த எண்ணிக்கை நடந்து கொண்டிருக்கும் படுகொலையில் மிகக் குறைந்த மதிப்பீடு எனலாம்.

படைப் பெருக்கத்தின் மிகக் குறுகிய தாக்கத்தின் கூடுதலான அடையாளம் சனிக் கிழமை அன்று அமெரிக்க துருப்புக்களும் ஈராக்கிய கைப்பாவை சக்திகளும் ஈராக்கிய தலைநகரத்தில் 40 சதவிகிதத்தைத்தான் கட்டுப்பாட்டில் கொண்டுள்ளனர் என்று ஈராக்கில் உள்ள அமெரிக்க துருப்புக்களின் தலைவர் Lt.Gen. Raymond Odierno, ஒப்புக் கொண்டுள்ள வாக்குமூல வடிவில் வந்துள்ளது. ஐயத்திற்கு இடமின்றி இதுவே இருக்கும் நிலை பற்றி மிக நம்பகத்தன்மையான மதிப்பீடு ஆகும்.

எழுச்சியின் இறுதிப் படைப்பிரிவும் இருத்தப்பட்டுள்ள நிலையில், நாட்டில் இருக்கும் அமெரிக்க தளபதிகள் வார இறுதியில் அவர்கள் பாக்தாத்திற்கும் கிழக்கே மற்றும் தெற்கே இருக்கும் அண்டைப் பகுதிகளில் பெரும் தாக்குதல் நடத்த இருப்பதாக அறிவித்துள்ளனர்.

இந்த நடவடிக்கை அல் கொய்தாவிற்கு எதிரானது என்று பென்டகன் கூறுகிறது; ஆனால் உண்மை என்னவென்றால் ஆயிரக்கணக்கான அமெரிக்க படைத் துருப்புக்கள் முக்கிய சுன்னி பகுதிகளுக்கு அனுப்பப்படுகின்றனர்; அங்கு பெரும்பாலான மக்கள் நான்கு ஆண்டுகளாக நீடித்துவரும் அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு ஆழ்ந்த விரோதப் போக்கை காட்டி வருகின்றனர். உண்மையில் சமீபத்திய கருத்துக் கணிப்பு ஒன்று 90 சதவிகித்திற்கும் மேலான சுன்னி மக்கள் ஈராக்கில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேற வேண்டும் என்று விரும்புவதாக காட்டியுள்ளது.

ஈராக்கில் இறுதி வலிமையூட்டும் படைஅதிகரிப்பு என்பதை கவனிக்கையில், அங்கு இருக்கும் மொத்த அமெரிக்கப் படைகளின் எண்ணிக்கை 160,000 என்று குறிப்பிட்ட பெட்ரியஸ் "கூடுதலான படைகளும் வந்து விட்ட நிலையில் இயன்றது அனைத்தையும் செய்வோம்" என்று உறுதிபூண்டார்.

"பயங்கரவாதத்திற்கு எதிரான" போராட்டம் என்ற மோசடியான பதாகையின்கீழ் நடக்கும் தயாரிப்பு பல்லுஜா, ரமடி ஆகிய மற்ற எழுச்சி இடங்களில் கட்டவிழ்க்கப்பட்டது போல் மற்றொரு குருதிப் பாதைதான். ஆக்கிரமிப்புப் படைகளின் மீது அடிக்கடி நடக்கும் தாக்குதல்களால் தாக்குதல் நடத்தப்படும் பகுதியை அமெரிக்கத் தளபதிகள் "மரண முக்கோணம்" என்று கூறியுள்ளனர்; இத்தாக்குதல் பல வாரங்களுக்கு நீடிக்கும். ஏராளமான ஈராக்கிய குடிமக்கள் இறப்பை தவிர, இத்தாக்குதல் பல்லாயிரக்கணக்கான சாதாரண குடிமக்களை "பாதுகாப்பு நிமித்தம் காவலில் வைக்கப்படுவர்" எனக் கைது செய்தலும் நடக்கும்; அவர்கள் காலவரையற்று காவலில் வைக்கப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்படுவர்.

அத்தகைய "தேடி அழித்தல்" பணிகளின் தவிர்க்க முடியாத விளைவு, சாதாரண குடிமக்கள் நிறைந்திருக்கும் பகுதிகளில் இன்னும் கூடுதலான வகையில் ஈராக்கிய மக்களை அதிகமாக விரோதப்படுத்துதலும், எழுச்சிக்கு வளர்ச்சி ஏற்படுவதும் ஆகும்.

ஒரு நிரந்தரமான காலனித்துவ வகை ஈராக்கிய ஆக்கிரமிப்பை வாஷிங்டன் கொள்ள முற்படுகிறது என்பதற்கான தெளிவான குறிப்பு நான்கு மிகப் பெரிய அமெரிக்க இராணுவத் தளங்கள் அமைக்கப்படுதல் தொடர்ந்துள்ளதும், பாக்தாத்தின் பசுமை வலயத்தில் வத்திக்கான் நகர அளவான ஓர்அமெரிக்க தூதரக வளாகம் அமைக்கப்படுவதும் ஆகும்.

கடந்த ஆண்டு ஈராக்கிய ஆய்வுக் குழுவின் அறிக்கை புஷ் நிர்வாகம் நாட்டில் நிரந்தர தளங்களை அமைக்கும் நோக்கம் இல்லை என்று பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்ற கருத்தைக் கொண்டிருந்தாலும், வெள்ளை மாளிகை இவ்விஷயத்தில் குறிப்பிடத் தக்க வகையில் மெளனமாக இருக்கிறது. மேலும் ஜனநாயகக் கட்சி தலைமையில் இருக்கும் அமெரிக்க காங்கிரஸ் தயாரித்துள்ள வரைவுச் சட்டம் நிர்வாகத்திற்கு இன்னும் ஒரு $100 பில்லியனை போரிடுவதற்கு அளித்திருந்தாலும், அதில் இத்தகைய தளங்கள் இருக்காது என்று உறுதி கூறப்பட்டாலும். அத்தகைய சொற்கள் புஷ்ஷின் கையெழுத்திற்கு அனுப்பப்படுமுன் எந்தவித காரணமும் இன்றி இரு மன்றங்களின் கூட்டுக் குழுவினால் அகற்றப்பட்டுவிட்டன.

ஜனநாயகக் கட்சி தலைமைக்கும் வெள்ளை மாளிகைக்கும் ஈராக் பற்றி நடக்கும் பகிரங்க விவாதத்தின் பின்னணியில் இரு கட்சிகளும் முதலில் 2003ல் அமெரிக்க படையெடுப்பிற்கு உந்துதல் கொடுத்த கொள்கை இலக்குகளை தொடர வேண்டும் என்பதற்கான தேவையில் உடன்பாடு கண்டுள்ளன: அதாவது ஈராக்கின் மீது அமெரிக்க மேலாதிக்கத்தை நிறுவுதல், நாட்டின் எண்ணெய் வளத்தை பயன்படுத்துதல், நாட்டை ஒரு அமெரிக்க இராணும் நிலைத்திடுவதற்கும், மூலோபாய பகுதிகள் அனைத்திலும் செயற்பாடுகளை மேற்கொள்ளுவதற்கும் தளமாகக் கொள்ளுதல் ஆகியவையே அவை.

ஞாயிறன்று தொலைக்காட்சி பேட்டி உரையில் தோன்றியதில், மிச்சிகன் மாநில ஜனநாயகக் கட்சி உறுப்பினரும் செனட்டின் இராணுவக் குழுவின் தலைவருமான செனட்டர் கார்ல் லெவினும் இருந்தார்; ஜனநாயகக் கட்சியினர் கடந்த மாதம் போர் நிதிக்காக ஒதுக்கிய $100 பில்லியன் வரைவுச் சட்டத்தில் இருந்து நீக்கப்பட்ட பத்தி புதுப்பிக்கப்படும் என்று அவர் கூறியதுடன், இனி வரவிருக்கும் சட்டங்களில் படைகள் பகுதி பகுதியாக திரும்பப் பெற கால அட்டவணை இருக்கும் என்று மறு நிலைத்தலுக்கும் கால அட்டவணை இருக்கும் என்றும் உறுதி மொழி கொடுத்தார்.

"நாங்கள் மீண்டும் முயற்சி செய்வோம்; ஏனெனில் நாம் முயற்சி செய்தே தீரவேண்டும்" என்று CBS தொலைக்காட்சியின் "Face the Nation" நிகழ்ச்சியில் கூறினார். "இப்போக்கை நாம் மாற்ற வேண்டும்."

அவரும் மற்ற ஜனநாயகக் கட்சியினரும் "போக்கை மாற்ற வேண்டும்" என்று கூறியதின் பொருள் லெவினால் விளக்கப்பட்டது; கால அட்டவணை "இரு குறுகிய வரம்புடைய பணிக்காக இருக்கும்" என்று அவர் அறிவித்தார்; "இதில் பயங்கரவாத எதிர்ப் பணியும் அடங்கும்; ஈராக்கில் இராணுவத்திற்கு தேவையான முழு உதவிகள், பயிற்சி ஆகியவையும் அளிக்கப்படும்" என்று அவர் வலியுறுத்தினார்.

வேறுவிதமாகக் கூறினால், பெட்ரியஸைப் போலவே, ஜனநாயகக் கட்சி தலைமையும் --அமெரிக்க மக்களிடையே போர் எதிர்ப்பு உணர்வு மிகப் பெரிய அளவில் வந்ததால் இது தலைமைப் பொறுப்பை பெற்றது-- இன்னும் பல ஆண்டுகளுக்கு ஈராக்கின்மீது அமெரிக்க ஆக்கிரமிப்பு தொடரும் என்றும் இன்னும் பல ஆயிரக்கணக்கான ஈராக்கியர்களும் அமெரிக்கத் துருப்புக்களும் கொல்லப்படுவர் என்ற நிலையை காட்டுகிறது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved