World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : நினைவகம்

ரவீந்திரநாதன் செந்தில்ரவி

ஐப்பசி 12, 1969 - மாசி 28, 2007

Back to screen version

லண்டனில் வசித்த அனைத்துலகக் குழுவின் உறுப்பினரான ரவீந்திரநாதன் செந்தில் ரவி (செந்தில்) லண்டன் வி20 மோட்டார் வாகன பெருஞ்சாலையில் பெப்ருவரி 28 அதிகாலையில் நிகழ்ந்த ஒரு கார்விபத்தில் அகாலமரணமடைந்தார். அவர் அவரது துணைவியார் அன்பரசி மற்றும் துர்பின், அஜன் மற்றும் கைக்குழந்தையான லெயோன் ஆகிய மூன்று குழந்தைகளை விட்டுச்சென்றுள்ளார்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு, செந்திலின் குடும்பத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பையிட்டு அதன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. அவர் அன்பான கணவராக மற்றும் தந்தையாக, தனது குழந்தைகளை இட்டு ஆழ்ந்த பெருமை கொண்டவராக மற்றும் வர்க்க ஒடுக்குமுறைக்கு முடிவு கட்டுவதன் மூலமே அவர்கள் சிறந்த வாழ்க்கையைப் பெற முடியும் என்று மன உறுதி கொண்டவராகவும் விளங்கினார்.

செந்தில் 1969ம் ஆண்டு, அக்டோபர் 12ம் தேதி இலங்கையில், யாழ்ப்பாணத்தில் பிறந்தார். லங்கா சமசமாஜக் கட்சியின் (ல.ச.ச.க.) காட்டிக் கொடுப்புக்கு பாரிய விலை கொடுத்த ஒரு தலைமுறையை சேர்ந்தவராக செந்தில் இருந்தார். லங்கா சமசமாஜக் கட்சி பப்லோவாத திருத்தல்வாதத்தின் கலைப்புவாத கொள்கையை எடுத்ததன் தர்க்கவியல் முடிவாக 1964ல் திருமதி பண்டாரநாயக்காவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முதவாளித்துவ கூட்டரசாங்கத்தில் சேர்ந்தது.

லங்கா சமசமாஜக் கட்சி இலங்கையிலும் இந்தியாவிலும் நான்காம் அகிலத்தை கட்டுவதற்கான அதன் முந்தைய போராட்டத்தின் காரணமாகவும் சிங்கள மற்றும் தமிழ் மக்களின் ஐக்கியத்தை ஆதரிப்பதில் தனித்து நின்றிருந்ததன் காரணமாகவும் பெரும் அரசியல் செல்வாக்கை கொண்டிருந்தது. இந்தக் காரணத்திற்காக, தமிழ் மக்கள் தொழிலாள வர்க்கத்தையும் அதன் புரட்சிகர கட்சியையும் தேசிய ஒடுக்குமுறையிலிருந்து தங்களது சொந்த விடுதலையின் ஒரு கருவியாக பார்த்தனர். பதிலாக லங்கா சமசமாஜக் கட்சி இலங்கை அரசை பாதுகாப்பதற்கான பொறுப்பை எடுத்துக் கொண்டது மட்டுமல்லாமல், தமிழர் விரோத இனவாதத்தை ஸ்தாபனமயப்படுத்திய ஒரு அரசியலமைப்பிற்கும் உடன்பட்டது.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கை பகுதியை அமைத்த, இன்றைய சோசலிச சமத்துவ கட்சியின் முன்னோடியான புரட்சிக் கம்யூனிட் கழகத்தின் புரட்சியாளர்கள் இக்காட்டிக்கொடுப்பை எதிர்த்தனர். அவ்வாறிருந்தபோதிலும், இது தொழிலாள வர்க்கத்தின் அரசியல் அபிவிருத்தி மீது நீண்ட பாதிப்பை ஏற்படுத்தவிருந்தது. இக்காட்டிக்கொடுப்பு சோசலிச முன்னோக்கின் மீதிருந்த நம்பிக்கையை கீழறுத்ததுடன் தமிழ், சிங்களம் ஆகிய இரு வெகு ஜனங்களின் மத்தியிலும் குட்டி முதலாளித்துவ இயக்கங்களின் வளர்ச்சிக்கு வழிவகுத்தது.

செந்திலின் அரசியல் அபிவிருத்தியை இந்த சூழ்நிலைப் பொருத்தத்தில் இருந்து மட்டுமே புரிந்து கொள்ள முடியும். இவரது பெற்றோர்கள் பெரும்பான்மையான தமிழர்கள் வேலை செய்யும் தோட்டப் பகுதியில் ஆசிரியர்களாக பணிபுரிந்தனர். அங்கு அவர்கள் முகங்கொடுத்த திகைப்பூட்டுமளவிலான சுரண்டல் மற்றும் இனவாதத்தினை அவர் நேரடியாக கண்ணுற்றார்.

இரத்தம் தோய்ந்த தமிழ் விரோத இனப்படுகொலைகளை அடுத்து உடனடியாக தனது 15 வயதில் செந்தில் ஈழ புரட்சிகர மாணவர் இயக்கத்தில் (EROS) இணைந்தார். ஏனைய தேசியவாத இயக்கங்கள் போல் அன்றி, இந்தக் குழு சோசலிச முன்னோக்கை முன்னெடுப்பதாகவும் தொழிலாள வர்க்கத்தை பிரதிநிதித்துவம் செய்வதாகவும் கூறிக் கொண்டது. அது குறிப்பாக ஈழம் எனும் தனித் தமிழ் தேசத்தின் உருவாக்கத்திற்கான போராட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களை பிரதான காரணியாக குறிப்பிட்டது.

அவர் அரசியல் ரீதியாக செயலூக்கமாகி மூன்றே ஆண்டுகளில், 1987ல், இந்திய-இலங்கை ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இது இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதியில் தேசியவாத கிளர்ச்சியெழுச்சியை ஒரு முடிவுக்கு கொண்டு வருவதற்கான இரண்டு அரசாங்கங்களாலும் மேற்கொள்ளப்பட்ட ஒரு முயற்சியாக இருந்தது. இக்கிளர்ச்சியெழுச்சி பிரதான நிலப்பரப்பான தமிழ்நாட்டில் இந்திய முதலாளித்துவ வர்க்கத்தின் நலன்களை அச்சுறுத்தியது.

பிரதான தேசியவாத குழுவான தமிழீழ விடுதலைப் புலிகள், அந்த உடன்படிக்கையில் இருந்த மட்டுப்படுத்தப்பட்ட சுயாட்சிக்கான வாக்குறுதிகளை மேற்கோள் காட்டி, சுய நிர்ணயத்தை நோக்கி அடியெடுத்து வைத்தல் என அதை அங்கீகரித்தனர். ஆயினும், வடக்கு மற்றும் கிழக்கிற்கு இந்திய இராணுவத்தை அனுப்புவதற்கு பரந்த அளவில் எதிர்ப்பு இருந்தது. இரத்தம் தோய்ந்த மோதல் அதைப் பின்தொடர்ந்தது. அதில் தமிழ் மக்கள் ஒரு புறம் இந்திய இராணுவத்திற்கும் தமிழ் தேசியவாத இயக்கங்களுக்கிடையில் வெடித்த ஒருவரையொருவர் அழிக்கும் யுத்தங்களுக்கு இடையிலும் சிக்கிக் கொண்டனர்.

1991ல் இந்திய இராணுவத்தை திரும்பப்பெறல் ஆரம்பமானதை தொடர்ந்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இலங்கையை விட்டு கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் அரசியல் அடைக்கலம் தேடினர். இவர்களுள் ஒருவராக செந்திலும் ஆகஸ்ட் 1991ல் பாரிஸ் வந்தடைந்தார். ஈரோஸ் உடனான பிரமைகளிலிருந்து விடுபட்டு ஒரு புதிய அரசியல் இயக்கத்தின் உருவாக்கம் தொடர்பாக ஏனைய புலம்பெயர்ந்தோருடன் அவர் கலந்துரையாடல்களில் ஈடுபட்டார். இந்த காலகட்டத்தில்தான் அவர் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஆதரவாளர்களுடன் முதற்தடவையாக தொடர்பு கொள்ள நேரிட்டது.

இது செந்திலுக்கு லங்கா சமசமாஜக் கட்சியின் காட்டிக் கொடுப்பின் முக்கியத்துவத்தை மட்டுமன்றி, அதற்கு எதிராக ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி தத்துவத்தை பாதுகாப்பதில் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் கொள்கை சார்ந்த போராட்டத்தையும் மற்றும் தேசிய பிரிவினைவாதத்திற்கு எதிராக சிங்கள மற்றும் தமிழ் தொழிலாள வர்க்கத்தை சோசலிச அடித்தளத்தில் ஐக்கியப்படுத்துவதை முன்னெடுத்தலையும் புரிந்து கொள்ளும் முதல் வாய்ப்பை வழங்கியது.

செந்தில், இலங்கை தொடர்பான இந்த படிப்பினைகளை மட்டும் கிரகிக்கவில்லை மாறாக ஒரு உறுதியான சர்வதேசியவாதியாகவும் மற்றும் உலக சோசலிசத்தின் ஆதரவாளராகவும் ஆனார்.

1994ல் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் இணைந்த கணம் தொடங்கி செந்தில் தமிழ் புலம் பெயர்ந்தோர் மத்தியில் அதன் செல்வாக்கை கட்டியெழுப்பும் முயற்சியில் ஒய்வு ஒழிச்சலின்றி பணியாற்றிய அதேவேளை, ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்தில் அரசியல் தலையீடுகள் செய்வதை அவர் ஒருபோதும் தவிர்க்கவில்லை. 2000ம் ஆண்டில் உலக சோசலிச வலைத் தளத்தின் தமிழ் பகுதி தொடங்கப்பட்ட பொழுது, அவர் இந்திய துணைக் கண்டத்தில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவை கட்டி அமைப்பதில் ஒரு தீர்க்கமான கருவியாக அதனை ஏற்றுக் கொண்டார்.

ஐரோப்பாவிற்கு வந்த கணம் முதல், செந்தில் இனவாத சட்டங்களின் பாதிப்பை எதிர் கொண்டது மட்டுமல்லாமல், புலம்பெயர்ந்த தொழிலாளர்களை மோசமாக பாதிக்கும் சூறையாடலையும் கூட சகித்துக் கொள்ளும்படி நிர்பந்திக்கப்பட்டார்.

பாரிசில் தனது சகோதரிக்கான அகதி அந்தஸ்தை உறுதிப்படுத்த அவர் முயற்சித்துக் கொண்டிருந்தார். அதற்காக அவர் பாரிசுக்கு வருகை தந்து, அங்கிருந்து அதிகாலை நேரத்தில் திரும்பிக் கொண்டிருக்கையில் செந்தில் கொல்லப்பட்டமை முக்கியத்துவம் மிக்கதாகும்.

தேர்ச்சி பெற்ற தகுதிகள் இல்லாத நிலையில் செந்தில் தனது குடும்பத்தை வாழ்விப்பதற்காக மிகக் குறைவான சம்பளம் தரும், தொடர்ச்சியான தேர்ச்சியற்ற வேலைகளை செய்யும்படி நிர்பந்திக்கப்பட்டார். அடுத்த 12 ஆண்டுகள், இரண்டு தடவை பிரான்சிலிருந்து லண்டனுக்கு நகருவதை இன்றியமையாததாக்கியது. அத்துடன் கூட, இந்தியாவில் தனது அரசியல் வேலையின் அபிவிருத்திக்கு அவசியம் என்று தான் கருதிய ஆங்கில மொழித்திறனை அபிவிருத்தி செய்வதில் அவர் குறிப்பாக ஆர்வமுடையவராக இருந்தார்.

ஒருவரது வாழ்க்கையின் மதிப்பு மற்றும் முக்கியத்துவம் பற்றிய சிறப்பான மதிப்பீடுகள் ஒருவேளை அவர்கள் மற்றவர்களின் மீது கொண்டிருக்கும் தாக்கத்தில் இருக்கும். செந்திலின் விஷயத்தில், அவரது மரணத்தின் ஆழ்ந்த துயரம் ஏற்படுத்திய விளைவு அவர் ஒரு மிகச்சிறந்த மனிதர் என்பதற்கு சான்றாகும்.

உலக சோசலிச வலைத் தளத்திற்கு அனுப்பப்பட்ட பல நினைவு கூரல்களில், ஆழ்ந்த அர்ப்பணிப்புக் கொண்ட மனித நேயமிக்க ஒரு மனிதரைப் பற்றிய சித்திரத்தைக் காணலாம்.

ரொனி றோப்சன் மற்றும் டானியா கெண்ட் எழுதுகின்றனர்:

"அரசியல், வரலாறு மற்றும் ஆங்கில மொழியானாலும் சரி, அதைக் கற்றுக்கொள்வதில் அவர் காட்டும் ஆர்வம் அவரது சிறப்பியல்பாகும்.

"கிளைக் கூட்டங்களில் முழுமையாக பங்கேற்கவே எப்போதும் அவர் முயல்வார். ஏதாவது ஒரு விஷயம் பற்றி தெளிவாக தெரியாத பட்சத்தில், அவர் வெளிப்படையாக கூறிவிடுவார். தான் புரிந்து கொள்வதற்கும் மற்றவர்களுக்கு புரிய வைப்பதற்கும் ஆங்கிலம் தொடர்பான தனது மட்டுப்பாடுகளை நிவர்த்தி செய்வதற்கு எப்போதும் அவர் முயற்சிப்பார். அவர் இந்த தீவிரத்தை நகைச்சுவை கொண்ட குறும்பான உணர்வுடன் சேர்த்து ஆளுமை செய்வது எப்பொழுதும் வரவேற்கப்படும் மற்றும் பெரிதும் நேசிக்கக்கூடியாதாக இருக்கும்.

"கிழக்கு லண்டனில் வசிப்பது பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் இதயத்தானத்திற்குள்ளே நிலவுகின்ற வர்க்கப் பிளவினை புரிந்து கொள்ள அவரை திறனுள்ளதாக்கியது. பிரிட்டனில் உள்ள ஏனைய தமிழர்களைப் போல எதிர்காலமில்லாத வேலைகளுக்கு குறைந்த ஊதியத்திற்கு நீண்ட நேரம் அவர் உழைத்தார், பெரும்பாலும் பெட்றோல் நிலைய ஊழியராக வேலைசெய்தார். கேனிங் டவுனில் ஒரு நிலையத்தில் அவர் வேலை செய்து கொண்டிருந்த பொழுது உள்ளூர் தாய் ஒருத்தி அவரை அணுகி ஒரு பாண் துண்டை இலவசமாக கொடுத்தால் தனது குழந்தைகளுக்கு உணவூட்ட முடியும் என்று கேட்டிருக்கிறார். செந்தில் உண்மையாய் இதைக் கேட்டு அதிர்ச்சியுற்றார்.

"அவர் எப்பொழுதும் புதிய சவால்களை எதிர்கொள்ளவும் அவரது அறிவெல்லையை விசாலப்படுத்திக் கொள்ளவும் தயாராய் இருப்பார். இத்தகைய சூழ்நிலைமைகளில் எவரும் இறப்பதென்பது துயரமானதொன்றாகும், ஆனால் 37 வயதான வாழ்வை தனது இரு கரங்களாலும் அரவணைத்துக் கொண்டிருந்த செந்தில் போன்றவரை பொறுத்தவரையில், இது குறிப்பாகக் கொடூரமானதாகும். முகத்தில் சிறு புன்னகையுடன் சிரிக்கும் அவரை எப்பொழுதும் நாம் நினைவுகூருவோம்."

செந்திலின் நீண்டநாள் நண்பரான டிரெவோர் ஜோன்சனை அவர் ஆரம்பத்தில் ஆங்கிலம் பயிலும்பொழுது லண்டனில் முதற் தடவையாக சந்தித்தார்.

"அவர் அரசியலில் மிக அக்கறை எடுத்துக் கொள்வதோடு பிரதான விஷயங்களில் அடிக்கடி அதிகம் பேசக்கூடிய வகையில் படிப்படியாக நம்பிக்கையை வளர்த்துக் கொள்வார்.

"தன்னைப் பற்றியே அதிகமாகப் பேசிக் கொண்டிருக்கும் மனிதரல்ல செந்தில் - அவரது சாதனைகள் பல. ஆனால் அவற்றைப் பற்றி அவர் பேச விரும்புவதில்லை. 'அதைப்பற்றி எனக்கு அதிகமாக கூறமுடியும். ஆனால் நான் கூறாதது ஏன் என்பது உனக்கு விளங்கும்', என்று அவரது விஷேடமான சிறிய புன்னகை கூறும்.

"செந்தில் இறந்துவிட்டார் என்பது பெரும் துயரமாகும். அவரது நண்பர்களையும் தோழர்களையும் பொருத்தவரையில், தன்னால் முடிந்தவகையில் சிறந்தவராய் இருக்கவே அவர் தனது வாழ்கையில் முயற்சித்துக்கொண்டிருந்தார். இதனால் அவர் இறந்து விட்டார் என்ற உண்மையில் ஓரளவு ஆறுதலை அவரது குடும்பம் கண்டுகொள்ளும் என நான் நம்புகிறேன்."

உலக சோசலிச வலைத் தளத்திற்கு பங்களிப்பு செய்யும் தமிழ் இளைஞரான அஜய் பிரகாஷ் செந்திலோடு வேலை செய்தவரும் நெருங்கிய நண்பருமாவார். அவர் கடைசியாக கூறிய வார்த்தை மிகப் பொருத்தமானதாக இருக்கும்:

வலைத் தளத்தின் தமிழ் மொழி பக்கத்தை கட்டியெழுப்புவதில் செந்தில் முதுகெலும்பாக இருந்ததோடு நிறைய மொழிபெயர்ப்புக்களையும் செய்துள்ளார்.

"2005ல் இருந்து இந்தியத் துணைக் கண்டத்தில் நிகழ்வுகளை அரசியல் ரீதியாகப் பகுப்பாய்வு செய்யும் எமது வேலைகளை அதிகப்படுத்தியுள்ளதால், அது அங்கு ஒரு பகுதியை கட்டுவதற்கு எங்களை அனுமதிக்கும். நாங்கள் ஒன்றாய் தொடர்ச்சியான கலந்துரையடல்களில் ஈடுபட்டோம், வாரத்தில் மூன்று நாட்களாவது கூடுவோம். என்னை எழுத ஊக்குவித்தவரும் இந்திய வரலாற்றை பற்றி படிக்க ஆரம்பிக்க வேண்டும் என்று முன்மொழிந்தவரும் அவர்தான்.

"நான் பெரிதும் இழந்துள்ளேன் - ஒரு முன்னணி தோழரை, ஒரு மார்க்சிச தலைவரை மற்றும் ஒரு வழிகட்டியை. நான் லண்டன் வந்த பின்னர் எனது வளர்ச்சிக்கு அவர்தான் முதுகெலும்பாக இருந்தார். நான் வீடெடுக்கவும் ஒரு வேலை தேடிக்கொள்ளவும் அவர் உதவினார் மற்றும் என்னை கவனத்துடன் வளர்த்தெடுத்தார்.

"தோழர் செந்தில் நன்றாய் உறங்கிடுவீர். உங்கள் குடும்பத்தையும் குழந்தைகளையும் நாங்கள் பாதுகாப்போம், உலகை சோசலிசத்திற்கு இட்டுச்செல்வதற்கு நம்பிக்கையுடன், ஒரு நாள் அவர்களும் கூட போராட்டத்தை முன்னெடுப்பார்கள்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved