World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Democrats debate in the shadow of US war threats against Iran

ஈரானுக்கு எதிராக அமெரிக்கப் போர் அச்சுறுத்தல்களின் நிழலில் ஜனநாயகக் கட்சியினர் விவாதம்

By Patrick Martin
31 October 2007

Back to screen version

செவ்வாய்க்கிழமை இரவு பிலடெல்பியாவில் நடந்த ஜனநாயகக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர்களின் விவாதம் ஈரானுக்கு எதிரான அமெரிக்கத் தாக்குதல் பற்றிய அதிகரிக்கும் அச்சுறுத்தல்கள், ஈரான் அமெரிக்கா மற்றும் உலகிற்கு கணக்கிலடங்கா விளைவுகளை தரக்கூடிய மத்திய கிழக்கில் அமெரிக்க இராணுவத் தலையீட்டின் விரிவாக்கம் என்பவற்றின் நிழலில் நடாத்தப்பட்டது.

புஷ்ஷும் செனியும் ஈரான்மீது அமெரிக்க இராணுவத் தாக்குதல் ஒன்றை ஒரு சில மாதங்களுக்குள் கட்டளையிடுவர் என்பது நடக்கக்கூடியது என ஜனநாயகக் கட்சியின் அமைப்புமுறை நம்புகிறது என்பதை விவாதம் தெளிவாக்கியது. ஜனநாயகக் கட்சியின் முன்னணியில் இருக்கும் ஹில்லாரி கிளின்டனோ அல்லது வேட்புமனுத்தாக்கலுக்கு அவருடன் போட்டியிடும் எவருமோ இந்த புதிய, குற்றம் சார்ந்த அமெரிக்க ஆக்கிரமிப்பு போரை நிறுத்த எந்த நடவடிக்கையையும் எடுக்க மாட்டார்கள் என்பதையும் காட்டியது.

செப்டம்பர் 26ம் தேதி ஈரானின் புரட்சிக் காவலர் படைப் பிரிவை ஒரு பயங்கரவாத அமைப்பு என்றும், ஈரானில் இருந்து வருவதாகக் கூறப்படும் அச்சுறுத்தலை சமாளிக்கும் வகையில் அமெரிக்க இராணுவப் பிரிவுகள் ஈராக்கில் செயல்பட வேண்டும் என்றும் புஷ் நிர்வாகத்தை வலியுறுத்தும் தீர்மானத்திற்கு ஒப்புதல் தரும் வகையில் செனட்டின் பாதிக்கும் மேற்பட்ட ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களுடன் கிளின்டனும் சேர்ந்து கொண்டார்.

செவ்வாய் விவாதத்தில், ஏனைய ஜனநாயகக் கட்சி வேட்பாளர்கள் இப்படி வாக்களித்ததற்காக கிளின்டனை தாக்கிப் பேசினர். ஈரான் மீது தீர்மானத்திற்கும் அக்டோபர் 2002ல் ஈராக்மீது அமெரிக்க இராணுவ நடவடிக்கை எடுக்க இசைவு கொடுத்த தீர்மானம் காங்கிரசில் ஏற்கப்பட்டதற்கும் இடையே இருந்த ஒற்றுமைகளை செனட்டர் கிறிஸ்டோபர் டோட் சுட்டிக் காட்டினார். செனட்டர் ஜோசப் பிடேன் இத்தீர்மானம் ஒரு போர்ப் பிரகடனத்திற்கு ஒப்பானது என்று கூறினார். "புஷ்ஷிற்கு நாம் தைரியம் கொடுத்துவிட்டோம்" என்றும் அவர் ஒப்புக்கொண்டார்; அதே நேரத்தில் ஈரானுடனான போர் ஒருவேளை மூன்றாம் உலகப் போரை ஏற்படுத்தலாம் என்று புஷ் தெரிவித்த கருத்தை "நம்பமுடியாத அளவிற்கு பொறுப்பற்றது" என்றும் அழைத்தார்.

ஈரானுடன் போரை எதிர்ப்பதைக்காட்டிலும் "போருக்கு விரைவதை" எதிர்ப்பதாக நல்ல முறையில் இயற்றப்பட்ட சூத்திரத்தை கிளின்டன் இருமுறை கூறினார். வேறுவிதமாகக் கூறினால், ஈரான்மீது அவசரப்பட்ட மற்றும் திடீரென்ற தாக்குதலை அவர் எதிர்க்கிறாரே அன்றி, மெதுவான வேகத்தில் காங்கிரஸ் மற்றும் சர்வதேச ஆதரவுடன் வளர்ச்சியடையும் தாக்குதலுக்கு எதிர்ப்பு இல்லை என்ற விதத்தில் அவர் உரை இருந்தது.

"போருக்கு விரைதலை" எதிர்த்தல் என்பது, "எதையும் செய்யாமல் இருப்பதற்கு தான் ஆதரவு கொடுத்தல் போல்" ஆகிவிடாது என்று கிளின்டன் சேர்த்துக் கொண்டார்; பின்னர் புஷ், செனி இன் கருத்துக்களை எதிரொலிக்கும் வகையில் பேசினார். ஈரானிய புரட்சிக் காவலர் பிரிவு "அணுவாயுத வளர்ச்சியின் முன்னணி நிலையில் இருக்கிறது" என்றும் பயங்கரவாதத்தை வளர்ப்பதில் அது தொடர்பு கொண்டுள்ளது என்றும் கூறினார். மேலும் ஈரான்மீது அமெரிக்கா ராஜீய முறையிலான அழுத்தத்தை அதிகரிக்க வேண்டும் என்ற தீர்மானத்திற்கு ஆதரவு கொடுத்ததாகவும் கூறினார் --ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இவரும் ஏனைய முக்கிய ஜனநாயகக் கட்சித் தலைவர்களும் ஈராக்கிற்கு எதிராக இராணுவ வலிமை பயன்படுத்தப்படலாம் என்று இசைவு கொடுத்த கூற்றுக்களை எதிரொலிக்கும் நயமான வனப்புரையே இது ஆகும்."

ஜனநாயகக் கட்சியினரின் பணி "புஷ்ஷையும் குடியரசுக் கட்சியினரையும் தாங்களாகவே இராணுவ நடவடிக்கையில் ஈடுபடுதலை தடுத்தல் ஆகும்" என்று கிளின்டன் முடிவாகக் கூறினார் -- இத்தகைய கருத்து நிர்வாகம் ஒருதலைப்பட்ச போரை நடத்துவதை தடுத்தல் ஆகும்; காங்கிரசில் இருக்கும் ஜனநாயகக் கட்சியினர் இதை இருகட்சி முறை குருதி கொட்டுதலாக மாற்ற விரும்புகின்றனர்..

NBC News இன் "செய்தியாளர்களை சந்திக்கவும்" நிகழ்ச்சியின் விருந்தோம்புனராக இருந்த, விவாதத்தை இணைந்து நடத்திய Tim Russert, மிகக் கழுகுப்பார்வை கொண்ட பதில்நடவடிக்கைகளை தூண்டுவதை நோக்கமாகக் கொண்ட கேள்விகளுடன் இந்த தலைப்பு பற்றி முதல் 40 நிமிஷங்கள் குவிமையப்படுத்தி, ஈரானுக்கு எதிரான போரை நெறியானது, தவிர்க்க முடியாதது என்றுகூட காட்டும் முயற்சியில் ஒரேநோக்குடன் நடத்துவது போல் இருந்தது.

கட்டுப்படுத்தாத தீர்மானம் பற்றிய ஆரம்ப கலந்துரையாடலை அடுத்து அவர் ஒவ்வொரு வேட்பாளரையும் ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையில் அவர்களுடைய தனிப்பட்ட "மட்டுப்பாடுகள்" எதுவாக இருக்கும் என்பதை கூறச்சொன்றார்; பின்னர் ஒவ்வொருவரும் தன்னுடைய நிர்வாக காலத்தில் ஈரான் அணுவாயுதங்களை பெற (தயாரிக்க) அனுமதிக்க மாட்டோம் என்ற உறுதிமொழி கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் விடுத்தார்.

இதை எதிர்கொள்ளும் விதத்தில் கிளின்டன், தன்னுடைய இலக்கு "புஷ் நிர்வாகத்தின்மீது அழுத்தம் கொடுப்பதாகும்" என்று அறிவித்தார். "அவரை கட்டுப்படுத்துவதற்கு குடியரசுக் கட்சியினரின் ஆதரவும் தேவைப்படுகிறது இல்லாவிடில் அவர் தான் விரும்புவதை செய்துவிடக் கூடும்." என இவ்வம்மையார் கூறினார்.

முன்னாள் செனட்டரான ஜோன் எட்வார்ட்ஸ் மறுத்துக் கூறினார்: "ஒரு புதிய கன்சர்வேட்டிவால் எழுதப்பட்டிருக்கக் கூடிய தீர்மானத்திற்கு ஆதரவு கொடுக்கும் வாக்கு, எப்படி புஷ் நிர்வாகத்தின்மீது அழுத்தம் கொடுக்க முடியும்? முடியாது என்று கூறுவதன் மூலம் நீங்கள் நிர்வாகத்தை துணிவுடன் எதிர்த்து நிற்கிறீர்கள். புஷ்ஷும், ஷெனியும் ஈரான்மீது படையெடுப்பதை அனுமதிப்பதை நாங்கள் விரும்பவில்லை என்பதை தெளிவுபடுத்த வேண்டும்."

கிளின்டனை செனட் தீர்மானத்தில் வாக்களித்ததற்காக தாக்கிப் பேசிய பரக் ஒபாமா, தன்னுடைய கருத்துக்களை கவனமாக செதுக்கி, ஈரானுடனான போருக்கான வாய்ப்பை பின் ஒரு சமயம் நடத்துவது என்பது போல் கூறிவிட்டார்.

எட்வார்ட்ஸோ, ஒபாமாவோ அல்லது கிளின்டனோ ஜனநாயகக் கட்சி கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் காங்கிரஸ் அத்தகைய போரை தவிர்க்கலாம், தவிர்க்க முடியும் என்றோ ஈராக்கில் நடந்து கொண்டிருக்கும் போரை நிறுத்த முடியும் என்றோ கருத்துத் தெரிவிக்கவில்லை.

கிளின்டன் அவருடைய ஈராக்மீதான போர் பற்றிய நிலைப்பாட்டிற்காக தாக்குதலுக்கு உள்ளானார்; எட்வார்ட்ஸ், ஒபாமா இருவருமே போர் எதிர்ப்பு உணர்வு பற்றி, வரவிருக்கும் ஜனநாயக கட்சியின் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் ஆரம்பநிலைக் கூட்டங்கள் மற்றும் கட்சித் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படும் சிறப்புக் கூட்டங்களில் முறையிடுவதாக உள்ளனர்.

எட்வார்ட்ஸ், கிளின்டனை "இருவிதத்தில் பேசுவதாக" குற்றம் சாட்டினார்; ஒருபுறத்தில் போரை நிறுத்துவதாகவும், அதே நேரத்தில் ஈராக்கில் இருக்கும் போர்ப்படைகள் தொடர்ந்து நிறுத்தப்பட வேண்டும் என்று கிளின்டன் கூறுவது சுட்டிக்காட்டப்பட்டது. எட்வார்ட்ஸின் சொந்த "போர் எதிர்ப்பு" நிலைப்பாடு உண்மையில் அமெரிக்க ஆக்கிரமிப்பு தொடர்வதைத்தான் காட்டுகிறது. 2009க்குள் அனைத்து போரிடும் துருப்புக்களும் திரும்பப் பெற வேண்டும் என்றும், தற்போதைய அமெரிக்க துருப்பு எண்ணிக்கையில் பாதிக்கும் குறைந்தது எப்படியும் வரவேண்டும் என்றாலும், எஞ்சியுள்ள துருப்புக்களுக்கு காலக்கெடு எதையும் அவர் கூறிவில்லை.

ஈராக் போரை எதிர்க்கிறாரா என நேரடியாகக் கேட்கப்பட்டதற்கு கிளின்டன் தன்னுடைய வழக்கமான கலவையான தவிர்த்தல் மற்றும் நாட்டுப்பற்று கருத்துக்களை கூறினார். "நான் போரை எதிர்க்கிறேன். ஆனால் மிகச் சிறப்பாக இதுவரை போராடிய துருப்புக்களை எதிர்க்கவில்லை என்று அவர் குறிப்பிட்டார்-- ஒரு மில்லியன் ஈராக்கியர்களுக்கும் மேலானவர்களின் இறப்பிற்குப் பொறுப்பு கொண்டிருந்த ஒரு செயற்பாட்டை நடத்திய கொலைகார இயந்திரத்தை பற்றிய அவருடைய கருத்து இதுதான்.

தான் பதவிக்கு வந்த பின்னர் எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவாக துருப்புக்கள் நாட்டிற்கு கொண்டுவரப்படும் என்று கிளின்டன் கூறினார்; பின்னர் இதைக் கவனமாக மாற்ற முற்படுகையில் அவருடைய நிர்வாகம் வெள்ளை மாளிகையில் அவர் நுழைந்த பின்னர் "திட்டமிட்டு திரும்பப் பெறுதலை ஆரம்பிக்கும்" என்றார்.

கிளின்டனை 2002 போருக்கு இசைவு தரும் தீர்மானத்திற்கு ஆதரவு கொடுத்ததற்காக ஒபாமா குறைகூறினார்; "அடுத்த ஜனாதிபதி ஈராக்கில் இப்பொழுதுள்ள நிலைக்கு காரணமாக இருக்கும் இணை சூத்திரதாரிகளில் ஒருவராகவும் இருக்கக் கூடாது." என்றார். ஆனால் படைகள் திரும்பப் பெறுவதற்கான காலக்கெடு ஒன்றையும் கூறவில்லை; பெரும்பாலான ஜனநாயகக் கட்சி வேட்பாளர்கள் "அல் கொய்தாவை தொடர்வது" என்ற பெயரில் இன்னும் கூடுதலான காலத்திற்கு ஈராக்கில் அமெரிக்கத் துருப்புக்கள் இருக்கவேண்டும் என்று கிளின்டன் பதிலளித்தபோது அதற்கு எதிர் கருத்தும் தெரிவிக்கவில்லை.

இத்தகைய வெளிப்படையான போருக்கு ஒருமித்த உணர்வை காட்டியதற்கு விதிவிலக்கு டென்னிஸ் குசிநிக்தான்; இவர் ஜனநாயகக் கட்சியின் பிரச்சாரத்தில் முக்கிய பங்கை கொண்டிருக்கிறார். ஆனால் அதன் பொருள் இவருக்கு வேட்புத்தன்மைக்கான வாய்ப்பு உண்டு என்பது அல்ல; வலதுசாரி அரசியல் பற்றி வெறுத்து இருக்கும் போர் எதிர்ப்பு வாக்காளர்களுக்கு முறையீடு செய்வதற்காகவும், அவர்கள் ஜனநாயகக் கட்சியிடம் இருந்து உடைத்துக் கொள்வதை தடுப்பற்கும்தான்.

குசிநிக், ஈராக்கில் போர் தொடர்வது மற்றும் ஈரானுக்கு விரிவாக்கப்படுவது என்ற இரண்டையுமே நிராகரித்தார். தன்னுடைய சக ஜனநாயகக் கட்சியினரை "புஷ்ஷின் ஆதரவாளர்கள்" என்று அவர் விவரித்து, புஷ்ஷும் ஷெனியும் பெரிய குற்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று பலமுறை கூறினார். ஒரு கட்டத்தில் அவர், "ஈராக் போர் சட்டவிரோதமானது, ஈரானுக்கு எதிராக தயாரிக்கப்படும் போர் சட்டவிரோதமானது. ஜனநாயகம் ஆபத்திற்கு உட்பட்டுள்ளது. அரசியலமைப்புக்காக காங்கிரஸ் கட்டாயம் துணிவாக எதிர்த்து நிற்க வேண்டும் மற்றும் புஷ்ஷின் மீது பெரிய குற்ற விசாரணை நடத்த வேண்டும் என்றார்.

குறிப்பிடத்தக்க வகையில், Russert அல்லது சக நடுவரான NBC யின் Nightly News நபரான Brian Willaims மற்ற ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களை பெரிய குற்ற விசாரணை பற்றியோ ஈராக் போரின் சட்ட நெறி பற்றியோ அல்லது ஜனநாயக உரிமைகள், அமெரிக்க அரசியலமைப்பின் வடிவமைப்பு நெறிகள் புஷ் நிர்வாகத்தினால் பலமுறை மீறப்பட்டுள்ளது பற்றியோ கேள்விகளை எழுப்பவில்லை. அதேபோல் முக்கிய ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களும் தாங்களாகவே இத்தகைய தலைப்புக்கள் பற்றி ஏதும் கூறவில்லை.

விவாதம் கடைசி ஒன்றேகால் மணி நேரத்திற்கு உள்நாட்டுப் பிரச்சினைகளுக்கு திரும்பியபோது ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களிடையே அரசியல் அமைப்புமுறை பெருநிறுவன நலன்களால் ஊழலுக்கு ஆட்பட்டுவிட்டது, அனைவரும் இந்த ஊழலில் ஒரு பகுதிதான் என்ற வியக்கத்தக்க கருத்துஒருமைப்பாட்டை வெளிப்படுத்தினர். "நம்மில் எவரும் தூய்மையானவர்கள் அல்ல" என்று எட்வார்ட்ஸ் ஒரு கட்டத்தில் ஒப்புக் கொண்டு பின்னர், பெருவணிகத்தின் தீய செல்வாக்காக குறிப்பிடுகையில், "எமது அனைவருக்கும் சுகாதாரப் பாதுகாப்பு இல்லை என்பதற்குக் காரணம் மருந்துத் தயாரிப்பு நிறுவனங்கள், காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் பிற செல்வாக்கு செலுத்துபவர்கள் இருப்பதுதான்" என்றார்.

ஒதுக்கு நிதி (Hedge Fund) வைத்திருக்கும் பில்லியனர்கள் --தங்கள் உதவியாளர்கள், காவல்காரர்களைவிட குறைந்த வரிகளைக் கொடுப்பவர்கள்-- வரி ஏய்ப்பு வகைகளை பயன்படுத்துவதை மூடுவதை மறுக்கும் சட்டமன்றத்தில் இருக்கும் ஜனநாயகக் கட்சியினர் பற்றி வினவப்பட்ட போது, குசிநிக் அறிவித்தார்: "வோல்ஸ்ட்ரீட்டை ஜனநாயகக் கட்சி உறுதியாய் எதிர்ப்பு காட்டாது; போரை முடிவிற்குக் கொண்டு வராது, சுகாதாரக் காப்பீட்டு நிறுவனங்களை எதிர்த்து நிற்காது. மக்கள் கேட்கிறார்கள், "அப்படியானால் ஜனநாயகக் கட்சி எந்தக் கொள்கைகளுக்காக பாடுபடுகிறது?" என்று.

மீண்டும் இது ஒன்றும் ஜனநாயகக் கட்சியுடன் உடைத்துக் கொள்ள வேண்டும் என்று மக்களுக்கு விடுத்த அழைப்பு அல்ல. ஒரு நீண்டகால ஜனநாயகக் கட்சி அரசியல்வாதி தன்னுடைய பெருநிறுவன சக அரசியல் வாதிகளுக்கு அவர்கள் இன்னும் கூடுதலான முறையில் மக்களை திருப்தி செய்யும் வகையில் காட்டிக் கொண்டு அத்தகைய அரசியல் உடைவு வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற எச்சரிக்கைதான்.

அரசியல் வழிவகையில் பெருநிறுவன நலன்கள் எந்த அளவிற்கு பிடி கொண்டுள்ளன என்பதை ஒப்புக் கொண்டதற்கு அப்பால், பெரும்பாலான அமெரிக்க தொழிலாள வர்க்கத்தினரை எதிர்கொண்டுள்ள பொருளாதார, சமூக நெருக்கடி பற்றிக் கிட்டத்தட்ட எந்த விவாதமும் இல்லை எனலாம். வேலை தகர்ப்புக்கள் மற்றும் வாழ்க்கைத் தர சரிவுகள் ஆகியவற்றை நிறுத்துவதற்கு எந்தவித திட்டங்களும் முன்வைக்கப்படவில்லை.

ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்கள், குடியரசுக் கட்சி வேட்பாளர்களைப் போலவே, அநேகமாக அனைவரும் பல மில்லியன்களை உடையவர்கள் ஆவர்; பாலம் போட முடியாத அளவு சமூக பிளவினால் தொழிலாள வர்க்கத்தில் இருந்து பிரிந்து கிடப்பவர்கள் ஆவர்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved