World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஆசியா : பாகிஸ்தான்

With Washington's complicity, Musharraf imposes martial law in Pakistan

வாஷிங்டனின் உடந்தையுடன், முஷாரஃப் பாக்கிஸ்தானில் இராணுவ சட்டத்தை திணிக்கிறார்

By Vilani Peiris and Keith Jones
5 November 2007

Back to screen version

புஷ் நிர்வாகத்தின் முக்கிய நண்பரும், அதன் "பயங்கரவாதத்தின் மீதான" போருக்கு ஆதரவாளருமான பாக்கிஸ்தானின் வலிமையான இராணுவத் தலைவரான தளபதி பர்வேஸ் முஷாரஃப், மீண்டும் தன்னுடைய நச்சுப் பல்லைக் காட்டியுள்ளார். சனிக்கிழமை மாலை, பாதுகாப்பு பிரிவுகள் இஸ்லாமாபாத்தில் பாராளுமான்றம், தலைமை நீதிமன்ற கட்டிடங்களை சூழ்ந்து கொண்டு, தனியார் தொலைக்காட்சி நிலையங்களை மூடும் கட்டாயத்திற்கு உட்படுத்தி, எதிர்ப்பாளர்களை "தடுப்புக் காவலில்" வைத்த பின்னர், அக்டோபர் 1999ல் ஒரு இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பு மூலம் பதவியை கைப்பற்றிய முஷாரஃப் அவசரகால நிலைமை ஒன்றை அறிவித்தார்.

ஓர் இரண்டாம் ஆட்சிக் கவிழப்பு என்பது போல் இருந்த நிகழ்வில், முஷாரஃப் அரசியலமைப்பு, தடையற்ற பேச்சுரிமை, கூடும் உரிமை, கூட்டங்கள் போடும் உரிமை மற்றும் சுதந்திர நடமாட்டம் ஆகியவற்றை காலவரையற்று நிறுத்திவைத்துள்ளார்; நீதிமன்றங்கள் ஜனாதிபதி என்ற முறையில் இவருக்கு எதிராகவும், பிரதம மந்திரி அல்லது இவர்கள் சார்பில் செயல்படும் எவருக்கு எதிராகவும் உத்தரவுகளை பிறப்பிக்கும் அரசியலமைப்பு உரிமைகளையும் நிறுத்திவைத்தார்; கடுமையான செய்தி ஊடக தணிக்கை முறையை திணித்தார்; ஜனாதிபதி, இராணுவம் மற்ற நிர்வாகப் பிரிவுகள், சட்டமன்றம் அல்லது நீதித்துறை ஆகியவற்றை "எள்ளி நகையாடினால்", அந்த "குற்றத்திற்கு" கடுமையான அபராதங்கள் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

குற்றச் சாட்டுக்கள் ஏதுமின்றி நூற்றுக்கணக்கான, ஏன் ஆயிரக்கணக்காகவும் இருக்கலாம், எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் மற்றும் வக்கீல்கள் என்று சமீபத்திய மக்கள் எதிர்ப்பை இராணுவ ஆட்சிக்கு எதிராக தலைமை தாங்கி நடத்தியவர்களை பாதுகாப்புப் படைகள் கைது செய்து காவலில் வைத்துள்ளன. பாக்கிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் தலைவர் ஜவீட் ஹஷ்மி, பாக்கிஸ்தான் தலைமை நீதிமன்ற வக்கீல் சங்கத்தின் இடைக்காலத்தலைவரும் பாக்கிஸ்தான் மக்கள் கட்சி (PPP) யின் முக்கிய ஆதரவாளருமான Aitzaz Ahsan ஆகியோர் இதில் அடங்குவர்.

BBC World, உட்பட அரசுடையதல்லாத தொலைக் காட்சி நிலையங்கள் மற்றும் சர்வதேச வானொலி சேவைகள் அனைத்தும் ஞாயிறன்று ஒளிபரப்ப அனுமதிக்கப்படவில்லை. போலீஸ் மற்றும் துணை இராணுவப் பிரிவுகள் தலைநகரத்தில் முக்கியமான சோதனைச் சாவடிகளின் பொறுப்பை கொண்டுள்ளன; செய்தி ஊடகத்தின் தகவல்கள்படி எவ்வித எதிர்ப்பையும் உடைக்கும் வகையில் அவை விரைவாகச் செயல்படும் விதத்தில் உள்ளன.

தலைமை நீதிமன்ற தலைமை நீதிபதியான இப்டிகார் முகம்மது செளதரியை, முஷாரஃப் பதவி நீக்கம் செய்துள்ளார். தளபதியின் இடைக்கால அரசியல் அமைப்பு ஒழுங்கு (PCO-Provisional Constitutional Order) என்று அழைக்கப்படும் அவசரகாலநிலை உத்தரவிற்கு- ஒப்புதல் அளிக்க மறுத்ததால் செளதரியும் ஆறு உச்சநீதிமன்ற நீதிபதிகளும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முஷாரஃப்பின் ஆதரவாளரான நீதிபதி அப்துல் ஹமீட் டோகர், செளதரிக்கு பதிலாக தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். மாநில உயர்நீதிமன்றங்களிலும் பல நீதிபதிகள் களையெடுக்கப்பட்டுவிட்டனர்; புதிய இடைக்கால அரசியல் அமைப்பிற்கு உறுதியளிக்க அவர்கள் மறுத்ததால் இந்த விளைவு; சில நீதிபதிகள் கேட்கப்படக்கூடவில்லை.

பாக்கிஸ்தானிய மக்கள் எதிர்த்தால் இராணுவம் மிகப் பெரிய வன்முறையை பயன்படுத்தும் என்ற அச்சுறுத்தலைத்தான் இந்த நடவடிக்கைகள் வெளிப்படுத்தின. ஆனால் முஷாரஃப்பின் அதிகார பேராசையும் நாட்டை இராணுவக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர அவர் கொண்டிருக்கும் விருப்பமும் ஒரு இடைக்கால அரசியலைமைப்பு ஒழுங்கு என்பதை அறிவிக்கும் அவருடைய முடிவில் வெளிவந்துள்ளது; ஜனாதிபதி என்னும் முறையில் நாட்டின் 1973ம் ஆண்டு அரசியல் அமைப்பின் அடிப்படையில் நெருக்கடி அதிகாரங்களை இவர் பயன்படுத்தாமல், பாக்கிஸ்தான் இராணுவத்தின் தலைவர் என்ற முறையில் இதைச் செய்திருப்பது அதைக் காட்டுகிறது.

"இது உண்மையில் இராணுவ ஆட்சியைத் திணிப்பதாகும்" என்று பாக்கிஸ்தானின் இராணுவ விவகாரங்களில் ஒரு வல்லுனரான ஹசன் அஸ்காரி ரிஸ்வி குறிப்பிட்டுள்ளார். "ஏனெனில் அரசியலமைப்பு இப்பொழுது இல்லை, முஷாரஃப் ஜனாதிபதி என்ற முறையில் அறிவிக்காத, இராணுவத் தலைவர் என்ற முறையில் அறிவித்த ஒரு இடைக்கால அரசியலமைப்பு உத்தரவின் கீழ் பாக்கிஸ்தான் செயல்படுகிறது."

அமெரிக்க உடந்தை

புஷ் நிர்வாகம், பிரிட்டனின் தொழிற்கட்சி அரசாங்கம் மற்றும் பிற மேலை சக்திகள் முஷாரஃப் கொண்டுவந்துள்ள ஆட்சி மாற்றத்தை மிகமென்மையான மற்றும் பெயரளவிலான விமர்சனத்துடன் எதிர்கொண்டுள்ளன.

தன்னுடைய தலைமை நிர்வாகி ஜோர்ஜ் டபுள்யூ புஷ்ஷை போலவே, பலமுறையும் முஷாரஃப்பையும் அவர் ஜனநாயகத்தின் மீது கொண்டிருந்த பற்றுதலையும் பாராட்டிய, அமெரிக்க வெளியுறவு அமைச்சரான கொண்டலீசா ரைஸ், இந்த நெருக்கடி நிலைமை அறிவிக்கப்பட்டுள்ளதை "முற்றிலும் வருந்தத்தக்கது" என்று கூறியுள்ளார்; அதே நேரத்தில் வாஷிங்டன் பாக்கிஸ்தானின் இராணுவ ஆட்சியுடன் நெருக்கமாக தொடர்ந்து ஒத்துழைக்கும் என்றும் கூறினார். "மிக கடினமானதொரு அரசியல் நிலைமையில் அனைத்து தரப்பினரும் பெரும் நிதானத்துடன் இருக்க வேண்டும்" என்றும் ரைஸ் அழைப்புவிடுத்தார்.

இஸ்ரேலுக்கு சென்று கொண்டிருந்த ஒரு விமானத்தில் பேசிய அவர், இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டாம் என்று அமெரிக்கா முஷாரஃப்பிற்கு ஆலோசனை கூறிவந்ததாகவும், "அரசியலமைப்பு பாதைக்கு விரைவாக திரும்ப வேண்டும்" என்ற விருப்பத்தையும் தெரிவித்தார். முஷாரஃப் பாக்கிஸ்தானை "ஜனநாயகப் பாதையில்" நிறுத்தவதற்கு கடந்த காலத்தில் நிறைய செய்துள்ளதாக மேலும் சேர்த்ததன் மூலம் இந்த எச்சரிக்கை மிகுந்த விமர்சனத்தை சடுதியில் தகுதிப்படுத்தினார்.

ஞாயிறன்று, பாக்கிஸ்தானுக்கு அளித்து வரும் உதவி பற்றி வாஷிங்டன் மறுபரிசீலனை செய்யும் என்று ரைஸ் கூறினார். செப்டம்பர் 2001ல் இருந்து இஸ்லாமாபாத்திற்கு வாஷிங்டன் குறைந்தது 10 பில்லியன் டாலர்களையாவது கொடுத்துள்ளது; இது பெரும்பாலும் இராணுவப் பிரிவு உதவியாகும். ஆனால் ரைஸின் அறிவிப்பு ஒரு அச்சுறுத்தல் அல்ல; சில அமெரிக்க சட்டங்கள் புஷ் நிர்வாகத்தை பாக்கிஸ்தானின் இராணுவ ஆட்சிக்கு நிதி உதவி கொடுப்பதை குறைக்கக்கூடும் என்பதை நினைவுறுத்துவதாகும்.

முஷாரஃப்பின் ஆட்சி கவிழ்ப்பு பற்றி இதையும் விடக் குறைவாகத்தான் பென்டகனின் கருத்து உள்ளது. "[நெருக்கடி] அறிவிப்பு பயங்கரவாதத்தின் மீதான பாக்கிஸ்தானின் முயற்சிகளுக்கு எமது இராணுவ ஆதரவு இருப்பதில் பாதிப்பைக் கொடுக்காது." என்று Geoff Morrel கூறினார்.

பிரிட்டனின் வெளியுறவு மந்திரியான டேவிட் மிலிபாண்ட் ரைஸின் கருத்துக்களைத்தான் எதிரொலித்தார். "சர்வதேச சமூகத்தில் இருக்கும் பாக்கிஸ்தானின் நட்பு நாடுகளுடன் நெருக்கமாக ஆலோசித்து வருகிறோம்; அனைத்துத் தரப்பினரும் நிதானமாக இருந்து ஒரு சமாதான, ஜனநாயக தீர்வு காணப்பட வேண்டும் என்பதை ஊக்குவிக்கிறோம். தான் "பெரிதும் கவலை கொண்டுள்ளதாக" கூறிய மிலிபாண்ட், முஷாரஃப் அரசியலமைப்பை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளது பற்றிய பிரிட்டனின் எதிர்ப்பை பாக்கிஸ்தானிய வெளியுறவுத்துறை மந்திரி குர்ஷட் கசூரியிடம் நேரடியாகத் தெரிவிக்க இருப்பதாகவும் கூறினார்.

கடந்த மாதம் பர்மாவில், எண்ணெய் விலை உயர்வு, நாட்டில் ஜனநாயகம் இல்லாதது ஆகியவற்றை எதிர்த்து எழுந்த ஆர்ப்பாட்டங்களை இராணுவ ஆட்சிக் குழு வன்முறையில் அடக்கியபோது வாஷிங்டன், லண்டன் மற்றும் பிற மேலைநாடுகளின் தலைநகரங்களில் வெளிவந்த கடுமையான கண்டனங்களுக்கு முற்றிலும் எதிரான வகையில், முஷாரஃப்பின் ஆட்சி கவிழ்ப்பு மாற்றம் மற்றும் அதன் உட்குறிப்பான அச்சுறுத்தல் இவற்றுக்கு சாந்தமான முறையில் எதிர்கொள்ள் இருந்தது.

இதில் வேறுபாடு என்னவென்றால், வாஷிங்டனுடைய மத்திய ஆசியா மற்றும் மத்திய கிழக்கில் எண்ணெய் வளமுடைய பகுதிகளை கொள்ளையடிக்கும் திட்டங்களை தொடர்வதில் பாக்கிஸ்தான் ஆட்சி ஒரு முக்கிய நட்பு அமைப்பாக விளங்குவதுதான். ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கின்மீதான படையெடுப்பு ஆக்கிரமிப்பு ஆகியவற்றிற்கு முஷாரஃப் மிக முக்கியமான உதவிகளை அளித்துள்ளார்; மேலும் அமெரிக்க இராணுவம் பாக்கிஸ்தானை தளமாக கொண்டு ஈரான்மீது போர்த் தயாரிப்பு நடத்துவதற்கும் பாக்கிஸ்தானில் பயிற்சி முகாம்களை நடத்துவதற்கும், அதன் மேலை அண்டை நாட்டிற்குள் ஆய்வதற்குப் பயன்படும் எல்லை கடந்த திடீர்த்தாக்குதலை நடத்தும் பயிற்சிகளுக்கும் துணையாக இருந்துள்ளார்.

இவ்வாறு இருந்தும் கூட, புஷ் நிர்வாகத்திற்கு முஷாரஃப் அவசரகால ஆட்சிப் பிரகடனம் செய்தது ஒரு பெரும் சங்கடத்தை கொடுத்துள்ளது.

பெருகி வரும் மக்கள் எதிர்ப்பிற்கு முன் முஷாரஃப் ஆட்சி பெரும் சோதனையை கண்டுள்ளது என்பதை உணர்ந்த வாஷிங்டன் நீண்ட காலமாகவே முஷாரஃப்பின் இராணுவ ஆதிக்கம் செய்யும் ஆட்சிக்கும் பெனாசீர் பூட்டோ மற்றும் அவ்வம்மையாரின் பாக்கிஸ்தான் மக்கள் கட்சி இவற்றிற்கும் இடையே சமாதானத்திற்காக பெரும் முயற்சியை மேற்கொண்டது.

ஞாயிறன்று நியூ யோர்க் டைம்ஸ் "தடம் மாறும் பங்காளி வெள்ளை மாளிகைக்கு நெருக்கடி கொடுக்கிறார்" என்ற தலைப்பில் வெளியிட்ட ஒரு கட்டுரையில் கூறியதாவது: "ஐந்து மாதங்களுக்கும் மேலாக அமெரிக்கா பாக்கிஸ்தானில் ஒரு அரசியல் மாற்றத்தை கொண்டுவர முயற்சித்துவருகிறது; இது எப்படியும் தளபதி பர்வேஸ் முஷாரஃப்பை அதிகாரத்தில் கொண்டுவந்து அதே நேரத்தில் முஸ்லீம் உலகில் ஜனநாயகத்தை ஜனாதிபதி புஷ் போற்றி வளர்ப்பார் என்ற கருத்தை கேலிக்கூத்தாக செய்யாத வகையிலும் இருக்க வேண்டும்.

"ஆனால் சனிக்கிழமை அன்று மிகவும் கவனமாக திட்டமிடப்பட்டிருந்த இவை வியத்தகு அளவில் பெரும் சரிவிற்கு உட்பட்டன."

அதுமட்டுமல்ல, இராணுவ ஆட்சியை மீண்டும் முஷாரஃப் திணித்தது, புஷ் நிர்வாகம் மற்றும் அமெரிக்க அரசியல், மற்றும் நிதிய உயரடுக்குகளின் ஜனநாயகம் பற்றிய பகட்டான பேச்சுக்களை ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் தாங்கள் நடத்தும் குற்றம் சார்ந்த போர்களை நியாயப்படுத்துவதற்காக கூறப்பட்ட பொய்யுரைகள் என்று மீண்டும் ஒருமுறை காட்டியிருக்கிறது.

முஷரப்பின் ஆட்சிமாற்றம் ஒரு பெரும் திகைப்பான சூதாட்டத்திற்கு ஒப்பானது என்பதை வாஷிங்டன் மற்றும் லண்டன் அறிந்துள்ளன; இது அவர் மீதே திரும்பிப் பாயலாம் என்றும், ஒரு வெகுஜன எழுச்சி வெடிப்பு என்பது பாக்கிஸ்தானிய தளபதிகள், பாக்கிஸ்தானிய முதலாளித்துவம் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியம் ஆகியவற்றின் நலன்களுக்கு எதிராக இறுதியில் பெரும் தீங்கை தரும் என்றும் அறிந்துள்ளன.

துல்லியமாக அத்தகைய அபிவிருத்தியை முன்கணித்துத்தான் புஷ் நிர்வாகமும், பிரிட்டிஷ் அரசாங்கமும் முஷாரஃப்பிற்கும் PPP க்கும் இடையே ஒரு பேரத்தைக் கொண்டுவரும் முயற்சிகளில் ஈடுபட்டன; PPP யோ, அமெரிக்க ஆதரவு உடைய இராணுவச் சர்வாதிகாரங்கள் சீர்குலைந்த போது இருமுறை இராணுவத்தை மக்களின் சீற்றத்தில் இருந்து காப்பாற்றியது, அதன்மூலம் பாக்கிஸ்தானை ஒரு முதலாளித்துவ ஆட்சியின் முக்கிய கோட்டையாக தக்கவைத்துக்கொள்ள உதவியது.

அக்டோபர் 6ம் தேதி போலி ஜனாதிபதி தேர்தல் தொடங்கும் முன்னர், அமெரிக்கா PPP க்கும் முஷாரஃப்பிற்கும் இடையே அதிக உறுதியற்ற உடன்பாட்டை கொண்டுவந்தது; அதன்படி PPP எதிர்க்கட்சிகளுடனான ஒத்துழைப்பை கைவிட்டு தளபதியின் சமீபத்திய அரசியலமைப்பு கேலிக்கூத்து நடவடிக்கைகளுக்கு சட்டரீதியான நெறி கொடுக்க முன்வந்தது. 12 நாட்களுக்கு பின்னர் பூட்டோ வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்த ஒரு சில மணி நேரத்திற்குள்ளேயே ஒரு படுகொலை முயற்சி அவர்மீது நடத்தப்பட்டது; அவர் தப்பித்தாலும் 139 பேர் இறந்தனர். இராணுவ ஆதிக்கத்திற்கு உட்பட்ட ஆட்சியின் சில கூறுபாடுகள்மீது பூட்டோ குற்றம் சாட்டினார்; ஆனால் படுகொலை முயற்சிக்கு முஷாரப்பின் மீது குற்றம் சாட்டவில்லை.

முஷாரஃப்பின் ஆட்சி மாற்றத்திற்கு, லண்டன் மற்றும் வாஷிங்டனில் இவருடைய ஆதரவாளர்களைப் போலவே பூட்டோ அதிகமாக ஒன்றும் கூறவில்லை எனலாம். பாக்கிஸ்தானிய மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு இராணுவம் தன்இகழ்வை பெரிதும் காட்டும்போது, பூட்டோ, தான் மோதலை தற்பொழுது விரும்பவில்லை என்று கூறினார். CNN இடம் ஞாயிறன்று பேசிய அவர், தளபதி-ஜனாதிபதி உடன் மேலும் அதிகாரத்தை பகிர்ந்து கொள்ளுவது பற்றிய பேச்சுவார்த்தைகள் இருக்கக்கூடும் என்றுதான் கூறியுள்ளார்.

அதிகரித்து வரும் பொதுமக்களின் எதிர்ப்பு

முஷாரஃப் மற்றும் அவருடைய எடுபிடிகள் பல மாதங்களாக, சமூகத்தின் அனைத்து அடுக்குகளின் பெருகிய எதிர்ப்பிற்கு இடையே, அவசரகால நிலை ஆட்சியைக் கொண்டு வருவதாக அச்சுறுத்திக் கொண்டிருந்தனர். இந்த எதிர்ப்பு ஜனநாயகமற்ற நிலை, உயரும் உணவுப் பொருட்கள் விலை, பெருகிய சமூக சமத்துவமின்மை, மலிந்துள்ள ஊழல்கள் மற்றும் இராணுவ ஆட்சியினால் நடைமுறைப்படுத்தப்படும் எடுபிடி முதலாளித்துவம், கடைசி என்றாலும் முக்கியம் குறையாத,, முஷாரஃப்பின் வாஷிங்டனுக்கான ஆதரவு ஆகியவற்றிற்கு ஆகும்.

சனிக்கிழமை நிகழ்ந்துள்ள இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புக்கு உடனடியாக தூண்டுதலாக இருந்தது தலைமை நீதிமன்றத்தை கடந்த மாதம் நடைபெற்ற போலி ஜனாதிபதி தேர்தலுக்கு ஒரு நீதித்துறை-அரசியலமைப்பு நெறியை கொடுக்க வைக்கும் முயற்சியில் முஷாரஃப் தோல்வியடைந்துள்ளதே ஆகும்.

பாக்கிஸ்தானின் நீதித்துறை, இராணுவ சர்வாதிகாரிகளின் சட்ட விரோத செயல்களுக்கு அனுமதி கொடுத்த வகையில் ஒரு நீண்ட, இழிந்த வரலாற்றை கொண்டுள்ளது. ஆனால் இராணுவ ஆட்சி மக்கள் அதிருப்திக்கு உரமூட்டி வருகிறது என்ற உயரடுக்கின் பயங்களையும், இராணுவம் முதலாளித்துவ வளர்ச்சின் நலன்கள் அனைத்திலும் ஏகபோக உரிமை கொண்டுள்ளது என்ற உயரடுக்கின் விமர்சனங்களையும் கருத்திற்கொண்டு, தலைமை நீதிமன்றம், தலைமை நீதிபதி செளதரியின் கீழ் இராணுவ மற்றும் அதன் அரசியல் எடுபிடிகளின் செயற்பட்டியலை மீறும் வகையில் நிறைய தீர்ப்புக்களை கொடுத்தது. கடந்த மார்ச் மாதம் முஷாரஃப், செளதரியை பதவியை விட்டு நீக்கினார்; இதற்குக் காரணம் வரவிருக்கும் தேர்தல்களை தனக்குசாதகமாக ஆக்குவதில் விலைபேசுவதற்கு தான் சொன்னபடி தலைமை நீதிபதி கேட்கமாட்டார் என்று பயந்தார்; இதையொட்டி பல மக்கள் எதிர்ப்புக்கள் ஏற்பட்டு ஒரு தைரியமுற்ற தலைமை நீதிமன்றம் செளத்ரி பதவியில் மீண்டும் இருத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்டபோது முஷாரஃப்பிற்கு ஒரு அவமானகரமான தோல்வி ஏற்பட்டது.

பல வாரங்கள் இந்த இலையுதிர்காலத்தில், தலைமை நீதிமன்றம் முஷாரஃப்பின் வேட்புத்தன்மை ஜனாதிபதி தேர்தலில் எந்த அளவிற்கு சட்டத்திற்கு உட்பட்டது என்பது பற்றி சவால் விடுத்த மனுக்களை விசாரித்து வருகிறது. ஒரு சட்டக் கண்ணோட்டத்தில், இது மிகத் தெளிவான வழக்கு ஆகும்: பாக்கிஸ்தானிய அரசியல் அமைப்பு, தலைமை இராணுவத் தளபதி என்பது ஒரு புறம் இருக்க, இராணுவத்தின் சாதாரண உறுப்பினர் ஒருவரும் தேர்தலில் வேட்பாளராக நிற்கக் கூடாது என்று கூறுகிறது. மேலும் இராணுவத்தால் 2002ம் ஆண்டு திரித்த முறையில் நடத்தப்பட்ட ஒரு தேர்தலில் தேர்நதெடுக்கப்பட்டிருந்த ஒரு தேசிய பாராளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்கள் மூலம் நவம்பர் 2007ல் இருந்து ஐந்து ஆண்டு காலத்திற்கு ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கபட்ட முஷாரஃப்பின் திட்டத்தை தடுக்கிறது.

ஆனால் இவருடைய ஜனாதிபதித் தேர்தல் அரசியலமைப்பிற்கு முரணாது என்று அறிவிக்கப்பட்டால் அவசரகால நிலைமை கொண்டுவரப்படும் என்ற அச்சுறுத்தலை அமெரிக்க ஆதரவு கொடுக்கப்பட்டிருந்த பெனாசீர் பூட்டோவுடன் சமாதானமாக போதல் என்பதையும் இணைத்து, நீதிமன்றத்தை தன்னுடைய தேர்தலுக்கு ஒப்புதல் கொடுக்க வைக்கக் கட்டாயப்படுத்த முடியும் என்று முஷாரஃப் இன்னும் நினைத்தார்.

ஆனால் முஷாரஃப் இறுதியில், நீதிமன்றம் அவருக்கு எதிராக தீர்ப்பு அளிக்கக்கூடும் என்ற முடிவிற்கு வந்தார். கடந்த வார நடுப்பகுதியில் நீதிமன்றம் நவம்பர் 13 வரை இவ்வழக்கு பற்றிய விசாரணைகளை நிறுத்தி வைக்கிறது என்று அறிவித்தது; அதுவோ தற்போதைய ஜனாதிபதி பதவிக்காலம் முடிவடைவதற்கு இரண்டு நாட்கள் முன்பு உள்ள தேதியாகும்; பின்னர் அது தன் தீர்ப்பையே மாற்றிக் கொண்டு, நேற்று தீர்ப்பு அளிக்கப்படலாம் என்று குறிப்பு காட்டியிருந்தது. எனவேதான் முஷாரஃப்பின் இராணுவ ஆட்சியை உடனடியாக கொண்டுவரும் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.

முஷாரஃப் தன்னுடைய அவசரகால சட்டத்தை பிரகடனப்படுத்துகையில், பயங்கரவாத தாக்குதல்கள் பெருகியுள்ளதை பற்றியும், அரசாங்க அதிகாரத்திற்கு ஆயுதமேந்திய இஸ்லாமிய குழுக்கள் அறைகூவல்கள் விடுவது பற்றியும் குறிப்பிட்டார்; ஆனால் இக்குழுக்கள் வரலாற்று ரீதியாக இராணுவ, உளவுத்துறைப் பிரிவுகளால் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான தடுப்புஅரண் என்ற வகையில் வளர்க்கப்பட்டவை, இந்தியாவிற்கு எதிரான பாக்கிஸ்தானின் புவி-அரசியல் சூழ்ச்சிக்கையாளல்களின் கருவியாகவும் செயல்பட்டு வந்தவை.

ஆனால் பிரகடனத்தின் பெரும்பகுதி மற்றும் இராணுவ ஆட்சிக்கான முஷாரஃப்பின் நியாயப்படுத்தல், "நீதித் துறையின் சில உறுப்பினர்கள் நிர்வாகம் மற்றும் சட்டமியற்றும் பிரிவுகளுக்கு எதிராக குறுகிய நோக்கங்களுக்காக எதிர்த்து பணிபுரிகின்றனர்" என்ற கூற்றாகும். இந்தப் பிரகடனம் நீதித்துறை குற்றச்சாட்டின்றி காவலில் வைக்கப்பட்டுள்ள நபர்களை விடுவிக்குமாறு உத்தரவிடுவதன் மூலம் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தை கீழறுக்கிறது என்றும் இது அரசாங்கம் மற்றும் இராணுவத்தின் மீது சில கட்டுப்படுத்தலை தோற்றுவிப்பதன் மூலம் இது பாக்கிஸ்தான் அரசை சீர்குலைவிக்கிறது என்றும் குற்றம் சாட்டுகிறது.

பயங்கரவாத நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கென நீதித்துறை நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்படாமல், "இடைவிடாத" நீதித்துறை "குறுக்கீடு நிறைவேற்றும் செயற்பாடுகளில், பொருளாதார கொள்கை, விலைக் கட்டுப்பாடுகள், பெருநகரங்கள், நகரத் திட்டங்கள் என்று அரசாங்கக் கொள்கைகள் பலவற்றில் இருப்பது அரசாங்கத்தின் மதிப்பைக் குறைத்துள்ளது" என்று அது புகார் கூறுகிறது. மேலும் நீதித்துறை தன்னுடைய அரசியலமைப்பு அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதால், "போலீஸ் படைகள் முற்றிலும் சோர்வு அடைந்துவிட்டதாகவும், பயங்கரவாதத்தை எதிர்க்கும் திறமையை விரைவில் இழந்து கொண்டிருக்கிறது என்றும் உளவுத் துறை அமைப்புக்கள் பயங்கரவாதிகளுக்கு எதிரான தங்கள் நடவடிக்கைகளை செயல்படுத்த முடியாமல் தடுக்கப்படுகின்றன" என்றும் கூறியுள்ளது.

இக்குற்றச் சாட்டுக்கள் ஒன்றும் சர்வாதிகார நடவடிக்கைகளுக்கான அறிவார்ந்த விளக்கமாகாது. தன்னுடைய சர்வாதிகார அதிகாரங்களை புதிய தாராள பொருளாதார கொள்கைகளை செயல்படுத்துவதற்கும் அரசாங்க அடக்குமுறையை பயன்படுத்தி ஜனநாயக உரிமை இல்லா நிலை மற்றும் சமூக சமத்துவமின்மை இவற்றுக்கு எதிராக பெருகி வரும் எதிர்ப்பை நசுக்குவதற்காகவும் முஷாரஃப் ஆட்சி செயல்படுத்தும் என்ற எச்சரிக்கையைத்தான் இவை கொடுக்கின்றன.

புஷ் நிர்வாகம் மற்றும் அமெரிக்க அரசியல் உயரடுக்கு இரண்டும் பல ஆண்டுகளாக முஷாரஃப்பின் சர்வாதிகாரத்தை நிலைநிறுத்தி வந்துள்ளன. பாக்கிஸ்தான் மக்களுடைய ஜனநாயக உரிமைகள் வாடிக்கையாக கற்பழிக்கப்படுவதற்கும் இப்பொழுது பாக்கிஸ்தான் மீது படர்ந்துள்ள அரசபயங்கரத்திற்கும் அவர்கள் பொறுப்பேற்க வேண்டியது தளபதிக்கு எந்தவிதத்திலும் குறைந்த அளவிலானது அல்ல.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved