World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Why is the German press silent on US preparations for war against Iran?

ஜேர்மனிய செய்தி ஊடகம் ஈரான் மீதான அமெரிக்க தயாரிப்புக்கள் பற்றி மெளனமாக இருப்பது ஏன்?

By Peter Schwarz
19 September 2007

Back to screen version

ஈரானுக்கு எதிராக ஒரு இராணுவத் தாக்குதலை அமெரிக்கா கொண்டுள்ள திட்டங்கள் பற்றி அமெரிக்க, பிரிட்டிஷ் செய்தி ஊடகங்களில் சமீபத்தில் தொடர்ச்சியான தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. தன்னுடைய பங்கிற்கு ஜேர்மனிய செய்தி ஊடகம் எந்தக் கருத்தையும் தெரிவிக்காமல் இருக்கிறது. ஈரானுடனான ஒரு புதிய அமெரிக்க போரின் ஆபத்து பற்றிய இந்த மெளனம் ஜேர்மனிய அரசாங்கத்தாலும், ஜேர்மனிய பாராளுமன்றத்தில் பிரதிநிதிகளை கொண்டுள்ள அனைத்து கட்சிகளாலும் மேற்கொள்ளப்பட்டது

"ஈரானுடன் அமெரிக்க போருக்கான ஏற்பாடுகளை புஷ் செய்துவருகிறார்" என்ற தலைப்பில் பிரிட்டனின் Sunday Telegraph, கடந்த ஞாயிறன்று எழுதியது "ஜனாதிபதி ஜோர்ஜ் டபுள்யூ புஷ்ஷும் அவருடைய உள்வட்டமும் ஈரானுடன் ஒரு போர்ப்பாதையில் அமெரிக்காவை ஈடுபடுத்தும் முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர்." செய்தித்தாள் தன்னுடைய ஆதாரமாக "மூத்த அமெரிக்க உளவுத்துறை மற்றும் பாதுகாப்புத்துறை அதிகாரிகளை மேற்கோள்காட்டுகின்றது". (ஈரானுக்கு எதிரான போர்த் திட்டங்கள் புஷ் நிர்வாகம் ஒருங்கிணைக்கிறது)

"திரு.புஷ்ஷின் உள்வட்டம் ஒரு அணுவாயுதத்தை தயாரிக்கும் திறனை ஈரான் பெற முடியாது என்பதை உறுதிப்படுத்தாமல் பதவியை விட்டு அவர் விலகத்தயாராக இல்லை என்ற முடிவை கொண்டுள்ளார் என மூத்த அதிகாரிகள் நம்புவதாக" அறிக்கை கூறுகிறது. புஷ்ஷின் பதவி ஜனவரி 2009ல் முடிவடைய இருப்பதால் போர் அபாயம் அடுத்த சில மாதங்களில் இருக்கக்கூடும் என்பது இதன் பொருள் ஆகும்.

Sunday Telegraph இன் கருத்தின்படி நீண்ட காலமாக ஒரு இராணுவத் தாக்குதலுக்கு வாதிட்டு வரும் துணை ஜனாதிபதி டிக் ஷெனிக்கும், "ஒரு இராஜதந்திர தீர்வு" நல்லது என்று விரும்பும் வெளிவிவகார அமைச்சர் கொண்டலீசா ரைஸுக்கும் இடையே இருந்த வேறுபாடுகள் களையப்பட்டுவிட்டன. "தன்னுடைய துணை ஜனாதிபதியுடனான கருத்து வேறுபாடுகளை தீர்த்துக்கொள்ளவும், இராணுவ நடவடிக்கைக்கு அனுமதி அளிக்கவும்" ரைஸ் தயார் என்று கூறப்படுகிறது.

இச்செய்தித்தாள் ஒரு "உறைய வைக்கும் காட்சியையும்" கோடிட்டுக் காட்டியது --எப்படி ஒரு போர்த் தூண்டுதல் ஏற்படுகிறது என்பது பற்றி. ஈரான் ஈராக்கிய கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவு கொடுக்கிறது என்ற பகிரங்க குற்றச்சாட்டுகளுக்கு பின்னர் (அமெரிக்க இராணுவ மற்றும் அரசாங்கங்களின் பிரதிநிதிகள் ஏற்கனவே அத்தகைய குற்றச்சாட்டுக்களை எழுப்பியுள்ளனர்) அமெரிக்கா ஈரானிய பயிற்சி முகாம்கள், வெடிமருந்து ஆலைகள் என்று எல்லைக்கு அப்பால் இருப்பவை அனைத்தையும் தாக்கி, "வளைகுடா எண்ணெய் விநியோகத்தை நிறுத்தும் வடிவத்தை எடுக்கக்கூடியதான விதத்தில்'' ஈரானிடம் இருந்து ஒரு எதிர்விளைவை தூண்டலாம். இது "ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மற்றும் அதன் இராணுவ படைகள் மீதும் விமானத் தாக்குதல்கள் நடத்துவதற்கு" ஏற்ப தூண்டுதலை கொடுத்துவிடும்.

Sunday Telegraph அத்தகைய விமானத் தாக்குதல்கள் பற்றி இரு முக்கிய "தாக்குதல் திட்டங்கள் இருப்பதாக" ஒரு உளவுத் துறை அதிகாரியை மேற்கோளிட்டு கூறியுள்ளது. "ஒன்று ஈரானின் அணுசக்தி நிலையங்களை குண்டுவீசி தாக்குதல். இரண்டாவது விருப்புரிமை இன்னும் பெரிய முறையில், இரண்டு மூன்று நாட்கள் நடத்தப்படும் அனைத்து முக்கிய இராணுவத் தளங்களையும் தாக்குதல்" ஆகும். இத்திட்டத்தின்படி 2,000க்கும் மேற்பட்ட இலக்குகள் தாக்குதலுக்கு உள்ளாகும்."

இதேபோன்ற அறிக்கை ஒன்று ஏற்கனவே கடந்த செவ்வாயன்று வலதுசாரி அமெரிக்க தொலைக்காட்சி நிலையமான Fox News ஆல் வெளியிடப்பட்டது. "உயர்மட்டத்தில் இருக்கும் புஷ் நிர்வாக ஆதாரம் ஒன்றை" குறிப்பிட்டு நிலையம் "இப்பொழுது ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையின் செலவினங்கள் நலன்கள் பற்றி பரந்த விவாதங்கள் நடந்து கொண்டிருக்கிறது, அடுத்த எட்டு அல்லது பத்து மாதங்களில் அத்தகைய நடவடிக்கை எடுப்பதற்கான கால அட்டவணையும் இதில் அடங்கியுள்ளது" என்று கூறியுள்ளது.

இரண்டுவிதமான வகையில் இது நடக்கலாம் என்று Fox News தெரிவித்துள்ளது; அதன்படி மாற்றீடாக பரந்த முறையில் குண்டுவீச்சுக்கள் குறைந்தது "ஒரு வாரமாவது" தொடரக்கூடும்.

Fox News உடைய கருத்தின்படி, செப்டம்பர் தொடக்கத்தில் பேர்லினில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில், ஜேர்மனிய அரசாங்கம் ஈரானுக்கு எதிராக தீவிர பொருளாதார தடைகளுக்கு ஆதரவு கொடுக்க மறுத்துவிட்டது. இது புஷ் அரசாங்கம் போருக்கு செல்ல வேண்டிய முடிவு பற்றி ஒரு முக்கிய தன்மையை ஏற்படுத்திவிட்டது. "ஏனைய நாடுகளில் இருந்து வந்த தூதர்களை பொறுத்தவரையில்" அறிக்கை ஜேர்மனிய அரசாங்கத்தில் அதிகாரிகள் "தாங்கள் தனிப்பட்ட முறையில், பகிரங்கமாக எதிர்த்தாலும், ஈரானின் அணுசக்தி நிலையங்களை அமெரிக்கா தாக்கும் பிரச்சாரத்திற்கு வரவேற்போம்" எனக் கூறியதாகத் தெரிகிறது.

பிரிட்டனின் கார்டியன் செய்தித்தாள் சனிக்கிழமையன்று, "புஷ் நிர்வாகம் ஈரானின் அணுசக்தி திட்டத்தை தடுக்க இராஜதந்திர முயற்சிகளால் தாமதப்படுத்துவது பற்றி பொறுமை இழக்கும் அடையாளங்களை காட்டுகிறது. துணை ஜனாதிபதி டிக் ஷெனியின் தலைமையிலான பருந்துகள் இராணுவ நடவடிக்கைக்காக தங்கள் அழுத்தத்தை தீவிரப் படுத்தியுள்ளனர்; இதற்கு இஸ்ரேல் மற்றும் தனிப்பட்ட முறையில் சில சுன்னி வளைகுடா நாடுகளின் ஆதரவும் உள்ளது." என்று எழுதியுள்ளது

கார்டியன் தொடர்கிறது: "வாஷிங்டன் அணுசக்தி தளங்களை மட்டும் குண்டுவீசப்படுதல் என்ற திட்டங்களை தீவிரமாகப் பரிசீலித்து எண்ணெய் தளங்கள், இராணுவத் தளங்கள் மற்றும் தலைமை இலக்குகளையும் தாக்கலாம் என்று கருதுகிறது."

"ஜேர்மன் செய்தி ஊடகம் இப்பிரச்சினையில் எக்கருத்தையும் கூறவில்லை. திங்கள் மாலை வரை (செப்டம்பர் 17) Spiegel, Suddeutsche Zeitung, FAZ, Die Welt போன்று பொதுவாக ஒவ்வொரு மணிநேரமும் முக்கியமான சர்வதேச செய்தியைக் கூறும் வலைத்தள பதிப்புக்கள்கூட அமெரிக்க போர்த் தயாரிப்பு பற்றி எந்தத் தகவலையும், கருத்துக்களையும் வெளியிடவில்லை.

பிரெஞ்சு வெளியுறவு மந்திரி பேர்னார்ட் குஷ்நெர் வெளியிட்ட எச்சரிக்கை ஒன்றுதான் மிகப் பரந்த அளவில் குறிப்பாக வெளிவந்ததாகும். ஈரான் பற்றி கடந்த ஞாயிறன்று கொடுத்த பேட்டியில், குஷ்நெர் "மிக மோசமானதிற்கும் ஒருவர் தயாராக இருக்க வேண்டும். அதுதான் போர் என்பது." ஐரோப்பிய ஒன்றியத்தின் தெஹ்ரானுக்கு எதிரான பொருளாதார தடைகள் தீவிரமாக்கப்பட வேண்டும் என்றும் அதே நேரத்தில் பிரான்சை பொறுத்தவரையில் பேச்சுவார்த்தைகள் என்ற விருப்புரிமை முக்கியமாக உள்ளது என்றும் தற்போது ஒரு இராணுவ தாக்குதலுக்கு அடிப்படையை தான் காணவில்லை'' என்றும் அவர் கூறினார்.

ஒரு மாதத்திற்கு முன்பு, பிரெஞ்சு ஜனாதிபதி, நிக்கோலா சார்க்கோசி ஏற்கனவே ஈரான் அணுசக்தி ஆயுதங்களை தயாரிப்பது ஏற்கப்பட முடியாதது என்று கூறியுள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தின் பங்கிற்கு "பொருளாதார தடைகள்" விரிவாக்கப்பட வேண்டும் என்றும் அது "பேரழிவான மாற்றீட்டை, அதாவது ஒரு ஈரானிய குண்டை அல்லது ஈரான்மீதான குண்டுவீச்சு என்பதை" தவிர்க்கும் என்றும் கூறினார்.

இவையனைத்தையும் பேர்லின் மெளனமாகத்தான் எதிர்கொண்டுள்ளது. வெளியுறவு மந்திரி Fox News இல் வந்த அறிக்கையை சுருக்கமாக மறுத்து இன்னும் கூடுதலான பொருளாதார தடைகளுக்கு ஜேர்மனி எதிர்ப்பு காட்டுகிறது என்பதையும் மறுத்தார். வெளியுறவு அலுவலக செய்தித்தொடர்பாளர் Martin Jäger கருத்தின்படி, ஜேர்மனிய அரசாங்கம் இன்னும் கூடுதலான பொருளாதார தடைகளை சுமத்தும் விருப்புரிமை இருக்க வேண்டும் என்றும் தேவையானால் "இன்னும் அதிக நடவடிக்கைகளுக்கு" ஆதரவு கொடுக்கும் என்றும் கூறினார். வாஷிங்டனில் விவாதிக்கப்படும் போர்க்காட்சி பற்றி எக்குறிப்பும் காட்டப்படவில்லை.

ஜேர்மனிய செய்தி ஊடகம் மற்றும் அரசாங்கத்தின் மெளனத்தின் பின்னணி என்ன?

முதன்முதலில் கூறப்பட வேண்டிய கருத்து இத்தகைய மெளனம் சதிக்கு உடந்தை என்பதாகும். வாஷிங்டனிலுள்ள அரசியல் வட்டங்கள் தீவிரமாக ஈரானுக்கு எதிராக மின்னல் போன்ற தாக்குதல்களை நடத்த விவாதிக்கின்றன என்பதை வாசகர்களுக்கு விரிவாகக் கூறுவதற்கு எந்த செய்தித்தாளுக்கும் ஒரு அவுன்ஸாவது சுதந்திரம் இருக்க வேண்டும்.

ஓர் ஆக்கிரமிப்புப் போர், இருக்கும் சர்வதேச சட்டம் அனைத்தையும் மீறி, ஈராக் போரின் சட்டவிரோத போக்கையும் விட அதிகமான முறையில் தயாரிப்பில் உள்ளது. ஆகஸ்ட் மாதம் இரு பிரிட்டிஷ் பாதுகாப்பு வல்லுனர்கள் 80 பக்க அறிக்கை ஒன்றை ஈரானுக்கு எதிரான இராணுவத் தயாரிப்புக்கள் பற்றி கோடிட்டு தயாரித்தனர்; இதில் அமெரிக்க 10,000 இலக்குகளை அழிப்பதற்கு போதுமான இராணுவத் திறனை கொண்டுள்ளது எனக் கூறப்பட்டுள்ளது. அதன் விளைவு மிகப் பெரிய சேதம் மற்றும் பல ஆயிரக்கணக்கான இறப்புக்களாகும். இப்பகுதி முழுவதும் உருவாகும் நீண்டகால விளைவுகளைப்பற்றி கூறத் தேவை இல்லை. தந்திரோபாய அணுவாயுதங்களும் பயன்படுத்தப்பட்டால் (தகவல் கொடுத்துள்ளவர்கள் அதுவும் நேரலாம் என்றுதான் கூறியுள்ளனர்) இறப்பு எண்ணிக்கை கிட்டத்தட்ட 3 மில்லியன் என்று இருக்கலாம். (See "British academics warn US is preparing ‘shock and awe' attack on Iran")

இத்தகைய குற்றத்திற்கு பொதுமக்களின் விடையிறுப்பை கற்பனை செய்வது கடினமல்ல. 2003ல் ஈராக் படையெடுப்பிற்கு எதிரான மிகப் பெரிய சர்வதேச போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. ஜேர்மனியிலும் அத்தகைய எதிர்ப்புக்களில் மில்லியன்கணக்கான மக்கள் பங்கு பெற்றனர். ஈரானுக்கு எதிரான புதிய போர் தயாரிப்புக்கள் பற்றிய மெளனம் ஜேர்மனிய மக்களை இயன்றளவு இருட்டில் வைத்திருக்கும் ஒரு முயற்சியாக, அரசியலில் உணர்மையுடைய எதிர்ப்பு வெளிவருதை தடுக்கும் வகையில் இருக்கிறது.

ஜேர்மனிய அரசாங்கத்தின் மெளனம் அத்தகைய போருக்கு ஆதரவு கொடுப்பதற்கான முதற்கட்டம் என்றுதான் விளக்கம் காணமுடியும். ஈரானில் ஜேர்மனிய பொருளாதார நலன்கள் கணிசமாக இருக்கையில், அதிபர் அங்கேலா மேர்க்கெல் (கிறிஸ்துவ ஜனநாயக யூனியன் -CDU) மற்றும் வெளியுறவு மந்திரி பிராங் வால்டர் ஸ்ரைன்மயர் (சமூக ஜனநாயக கட்சி-SPD) இருவரும் தெஹ்ரானுடன் ஒரு இராஜதந்திர முறையை உறுதியாக விரும்புவர். ஆனால் அமெரிக்கா ஈரான் மீது போர் தொடுத்தால் --இது இப்பொழுது நடக்கும் எனத் தோன்றுகிறது-- மேர்க்கெல் தனக்கு முன்பு பதவியில் இருந்த ஹெகார்ட் ஷ்ரோடரின் (SPD) வழியை கையாளமாட்டார்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஈராக் போருக்கு எதிராக ஷ்ரோடர் பேசி, ரஷ்யாவுடனும் பிரான்ஸுடனும் நெருக்கமாக இணைந்திருந்தார். தன்னுடைய எதிர்ப்பில் இருந்து நடைமுறை முடிவுகளை அவர் எடுக்கவில்லை என்றாலும், ஜேர்மனிய தளங்கள் மற்றும் துணைச் செயல்களை அமெரிக்கா ஈரானுக்கு எதிரான போரில் பயன்படுத்த அனுமதித்தாலும், ஷ்ரோடரின் நிலைப்பாடு இரு நாடுகளுக்கு இடையே இருந்த உறவை பாதித்தது. ஜேர்மனியின் பாராளுமன்ற எதிர்க்கட்சியின் தலைவராக அப்பொழுது இருந்த மேர்க்கெல் பகிரங்கமாக ஷ்ரோடரின் நிலைப்பாட்டை குறை கூறியதுடன், அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபின், வாஷிங்டனுடன் இருந்த உறவில் காணப்பட்ட பிளவுகளை அகற்றவும் முற்பட்டார்.

இந்த வசந்த காலத்தில் ஜனாதிபதி தேர்தல்கள் முடிவடைந்த பின், பிரான்சும் அமெரிக்காவுடன் நெருக்கமாக வந்துள்ளது. ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசியும் அவருடைய வெளியுறவு மந்திரி பேர்னார்ட் குஷ்நெரும் பலமுறையும் தெஹ்ரானுக்கு எதிராக குறைகளைக் கூறியுள்ளனர். சிறிது காலமாகவே, சார்க்கோசி ஐரோப்பிய ஒன்றியம் ஒருதலைப்பட்சமாக ஈரானுக்கு எதிராக அமெரிக்கா சுமத்தியுள்ளது போன்று பொருளாதார தடைகளை சுமத்த வேண்டும் என்று பிரச்சாரம் செய்து வருகிறார். முக்கிய பிரெஞ்சு நிறுவனங்களான Total, Gaz de France போன்றவற்றை ஈரானில் மூதலீட்டுத்திட்டங்களை உறைய வைக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.

இதுவரை பேர்லின் ஐரோப்பிய ஒன்றியம் ஒருதலைப் பட்சமாக பொருளாதாரத் தடைகளை சுமத்த வேண்டும் என்பதை நிராகரித்துள்ளது. ஜேர்மனிய இரஜதந்திர முறை பொருளாதாரத் தடைகள் பற்றிய எந்த முடிவும் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் குழுவிடம் விடவேண்டும் என்றும் அதில் ரஷ்ய, சீனாவின் தடுப்புரிமை உள்ளது என்றும் கூறியுள்ளது. மாஸ்கோ, பீக்கிங்குடன் வெளிப்படையான உடைவு என்பது ஜேர்மனியை அமெரிக்காவிடம் காத்திரமற்றவகையில் தங்கியிருக்க செய்துவிடும் என பேர்லின் அஞ்சுகிறது. அதே நேரத்தில், பேர்லினில் ரஷ்யாவுடன் ஒரு நெருக்கமான உடன்பாடு பற்றியும் பெருகிய தயக்கங்கள் உள்ளன; அத்தகைய நிலைப்பாடு முன்னாள் அதிபர் ஷ்ரோடரால் விரும்பப்பட்டது. பெருகிய எண்ணெய் வருவாயினால் வலுவற்று இருக்கும் ரஷ்யா கூடுதலான முறையில் தன்னுடைய சொந்த பெரும் சக்தி நலன்களை உறுதிப்படுத்த தலைப்பட்டுள்ளது; இது ஜேர்மனியின் கருத்துடன் ஒத்திருக்கவில்லை.

இறுதியில் ஜேர்மனிய அரசாங்கம் அமெரிக்காவுடன் அது ஈரானுக்கு எதிராகப் போர்த் தாக்குதலுக்கு முடிவெடுத்தால் சேர்ந்து கொள்ளும் என்றுதான் தெரிகிறது. வாஷிங்டனுக்கு அது எப்படியும் தீவிர எதிர்ப்பை கொடுக்காது. போர் என்று வந்தால் அது வாஷிங்டனுடன் சேர்ந்து கொண்டு அப்பகுதியில் தன்னுடைய ஏகாதிபத்திய நலன்களுக்கு சிறந்த உத்தரவாதமாக இருக்கும் என்றும் கருதும்.

ஏற்கனவே ஜேர்மனி பாரிசில் இருந்து வரும் அழுத்தத்திற்கு விடையிறுக்கும் வகையில் தீவிர பொருளாதாரத் தடைகள் சுமத்த உடன்படும் என்பதற்கான அடையாளங்கள் உள்ளன. பிரெஞ்சு ஏடான Le Monde கடந்த வாரம் இரு தலைவர்களும் ஜேர்மனி Meseburg இல் பேச்சுவார்த்தைகள் நடத்திய பின், மேர்க்கெல் சார்க்கோசியின் ஆலோசனைகளை கொள்கையளவில் ஆதரித்ததாகவும், ஆனால் தன்னுடைய கூட்டணிப் பங்காளி சமூக ஜனநாயக கட்சி பற்றி தயக்கத்தை கொண்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது.

பேர்லினில் உள்ள உத்தியோகபூர்வ வட்டங்கள் ஜேர்மனிய நிறுவனங்கள் முழுத் தெளிவுடன் தெஹ்ரானுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள அமெரிக்க தடைகளை கடைப்பிடிப்பதாக கூறியுள்ளன. ஜேர்மனிய வங்கிகள் ஏற்கனவே ஈரானில் இருந்து, அவ்வாறு செய்யத் தேவையில்லை என்றாலும், அதிக அளவில் வெளிவந்துவிட்டன. ஆனால் இது ஜேர்மனியின் கொள்கையுடன் அதிக தொடர்பு உடையது அல்ல; ஜேர்மனியின் அட்லான்டிக்கிற்கு இடையிலான வணிகப் பங்காளிகளின் அழுத்தத்தைத்தான் பிரதிபலிக்கிறது; அவை அமெரிக்க அரசாங்கத்திடம் இருந்து தடைகள் வருமோ என்ற அச்சத்தில் உள்ளன.

இத்தகைய சூழ்நிலையில், ஜேர்மன் அரசுக்கு ஒரு விமர்சனரீதியான பொதுக்கருத்து அல்லது தீவிர போர்எதிர்ப்பு இயக்கம் எவ்வகையிலும் தேவையற்றதாக உள்ளது. எனவேதான் அரசாங்கமும், செய்தி ஊடகமும் மெளனமாக உள்ளன.

அதே நேரத்தில் ஜேர்மனிய அரசாங்கம் அத்தகைய எதிர்ப்பு இயக்கத்தை எதிர்கொள்ளுவதற்கான தயாரிப்பை முடுக்கி விட்டுக் கொண்டிருக்கிறது. இத்தன்மையில் இருந்துதான் அதிகரித்தளவில் விந்தையான பிரச்சாரம் உள்துறை மந்திரி Wolfgang Schäuble (CDU) மற்றும் பாதுகாப்புச் செயலர் Franz Josef Jung (CDU) இருவரும் ஜேர்மன் பாதுகாப்பு பற்றி வெறித்தனமான உணர்வை உரமூட்டும் வகையில் மேற்கொண்டுள்ளதை ஆராய வேண்டும்.

இவ்வார இறுதியில் Jung கடத்தப்படும் பயணிகள் விமானங்களை சுட்டுத் தள்ள உத்தரவிடப் போவதாக அறிவித்தார்; ஜேர்மனிய அரசயிலமைப்பு நீதிமன்றம் சமீபத்தில் அத்தகைய உத்தரவை சட்டவிரோதம் என்று கண்டித்தும்கூட அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

ஒரு செய்தித்தாளுக்கு கொடுத்த பேட்டியில் Schäuble பயங்கரவாதிகள் ஜேர்மனியின்மீது அணுவாயுதத் தாக்குதல் நடத்துதல் தவிர்க்க முடியாதது என அறிவித்தார். "பல வல்லுனர்கள் இதற்கிடையில் அவ்வாறான ஒரு தாக்குதல் நடக்குமா என்பதை கேள்விக்குரியதாக்கவில்லை என்றும் எப்பொழுது அத்தகைய தாக்குதல் நடைபெறும் என்றுதான் நம்பகத்தன்மை கொண்டிருக்கின்றனர்." இதன்பின் ஒரு பயங்கரான சொற்றொடரை அவர் கூறினார்: "ஆனால் ஒவ்வொருவரும் பதற்றமில்லாமல் இருக்க வேண்டும் என்று நான் கோருகிறேன். எஞ்சியுள்ள நேரத்தில் ஏதோ இறுதி பேரழிவு நாள் வந்துவிட்டது போன்ற உணர்வை நாம் முன்கூட்டியே பெற்றுவிடக்கூடாது."

இப்பிரச்சாரம் இரண்டையுமே நோக்கமாகக் கொண்டுள்ளது : இன்னும் கடுமையான பாதுகாப்பு சட்டங்கள் கொண்டுவருவதற்கு காரணத்தை அளிப்பது, அச்சத்தை தூண்டி போர் ஏற்படுமானால் மக்களின் ஆதரவைத் தவிர்க்க முடியாமல் திரட்டுவது ஆகும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved