World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு

Washington continues propaganda barrage against Iran

ஈரானுக்கு எதிராக வாஷிங்டன் பிரச்சாரக் குண்டுமழை

By Peter Symonds
24 August 2007

Back to screen version

அடுத்த மாதம் ஐக்கிய நாடுகள் சபையில் ஈரானுக்கு எதிராக அரசியல் ரீதியான தாக்குதலுக்கு தயாராகி வருவதால் புஷ் நிர்வாகம், குறிப்பாக, அமெரிக்க ஆக்கிரமிப்பின் கீழ் இருக்கும் ஈராக்கில், ஈரானின் குறுக்கீடு என்று கூறப்படுவது தொடர்பாகவும் மற்றும் தெஹ்ரானின் மீது குற்றம் சாட்டப்படும் அணுஆயுத திட்டங்கள் மீதாகவும் தொடர்ச்சியான அச்சுறுத்தல்கள் மற்றும் பிரச்சாரக் குண்டு மழையை பொழிந்து வருகிறது.

ஈரானிய புரட்சி படை (ஐஆர்ஜி) முழுவதையும் - "ஒரு சிறப்பு காரணத்துடன் நியமிக்கப்பட்ட சர்வதேச பயங்கரவாதிகள் அமைப்பு" என முத்திரையிடுவதற்கான அதன் முடிவை வெள்ளை மாளிகை, ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையில் அறிவிக்க விரும்புகிறது என கடந்த வாரம் நியூயோர்க் டைம்ஸ் மற்றும் வாஷிங்டன் போஸ்ட் குறிப்பிட்டிருந்தன. ஈரானிய ஆயுத படைகளில் மிக முக்கியமானதாக கருதப்படும் ஈரானிய புரட்சி படையை குற்றகரமானதாக்குவது, டெஹ்ரான் மீது இராஜதந்திர அழுத்தத்தை மட்டும் கூட்டவில்லை மாறாக ஈரானுக்கு எதிரான இராணுவ தாக்குதல்களுக்கு ஒரு வசதியான சாக்குப்போக்கை அளிக்க முடியும்.

இந்த ஆண்டு ஆரம்பம் முதலாகவே, அமெரிக்க இராணுவம், ஈராக்கில் ஈரானின் தலையீடுகள் குறித்து அதன் குற்றச்சாட்டுக்களை தொடர்ந்து பட்டியலிட்டு வருவதுடன், ஆயுதங்கள் வினியோகிப்பது, பயிற்சி அளிப்பது மற்றும் ஷியைட் படையினரை அமெரிக்க துருப்புகள் மீதான தாக்குதல்களில் வழிநடத்திவருவதாக தெஹ்ரான் மீது பல்வேறு வகையில் அமெரிக்கா குற்றஞ்சாட்டி வருகிறது. ஜனவரியில் இருந்த 30 சதவீத தாக்குதல்களோடு ஒப்பிடும்போது, தற்போது ஈராக்கில் நடக்கும் 50 சதவீத தாக்குதல்களுக்கு ஈரானியர் ஆதரிக்கும் ஷியைட் குழுக்களே காரணமாகும் என ஈராக்கில் இரண்டாம் இடத்தில் இருக்கும் லெப்டினன்டு ஜெனரல் ரேமண்ட் ஒடிர்னோ, கடந்த வாரம் கூறி இருந்தார்.

அத்தகைய குற்றச்சாட்டுக்கள் தகுந்த ஆதாரங்களைக் காட்டிலும் வெறும் வலியுறுத்தல்களிலேயே தங்கியுள்ளன. ஈரானில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களை பார்வைக்கு காட்டியது மட்டுமே இதுவரை அமெரிக்க இராணுவத்தால் பகிரங்கமாக காட்டப்பட்டு இருக்கும் ஓரே "சான்று" ஆக இருக்கிறது. ஈரான் ஊடுறுவல் பற்றி பாசாங்கு குற்றஞ்சாட்டுக்கள் கூறும் அதே வேளையில், அமெரிக்க மற்றும் சர்வதேச ஊடகங்களின் எவ்வித விமர்சனமும் இல்லாமல், அமெரிக்க இராணுவம், அதன் சட்டத்தை மீறிய ஈராக் மீதான ஆக்கிரமிப்பில் நான்கு ஆண்டுகளை வீணாகக் கடத்தி இருக்கிறது.

கடந்த ஞாயிறன்று, தெற்கு பாக்தாத்தில் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளை கவனித்து வரும் மேஜர் ஜெனரல் ரிக் லயின்ச் இந்த பட்டியலில் மேலும் குற்றச்சாட்டுக்களை சேர்த்திருக்கிறார். அதாவது, ஈராக்கிய போராளிகள் ஈரானுக்குள் மட்டும் போதனைகளை பெறவில்லை, 50 ஈரானிய புரட்சி படையினர் ஈரானுக்குள்ளாகவே ஷியைட் போராளிகளுக்கு பயிற்சியளித்து வருகிறார்கள் என கூறிய அவர், "அவர்கள் ஷியைட் தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளித்து வருகிறார்கள். அவர்கள் இங்கு தான் இருக்கிறார்கள் என்பதை நாங்கள் அறிவோம். அவர்களை நாங்கள் குறி வைத்து வருகிறோம்" என்று தெரிவித்தார்.

லயின்ச் எவ்வித ஆதாரங்களையும் காட்டாத நிலையில், உட்பொருட்கள் அக்கறையுடன் எடுக்கப்படவில்லையானால், செயல்பாடுகள் மிகவும் நகைப்புக்குள்ளாகிவிடும். உண்மையில், ஜெனரலின் துருப்புக்கள் இந்த 50 ஈரானியர்களுக்குக் குறி வைத்திருக்கின்றனர் எனும் உண்மை இருப்பினும், அவர் பாக்தாத்தில் செய்தியாளர்களிடம் கூறும் போது, தமது கட்டுப்பாட்டு பகுதியில் இதுவரை எந்த ஈரானியரும் சிறைபிடிக்கப்படவில்லை என்றும், கடந்த இரண்டு மாதங்களில் ஈரான்-ஈராக் எல்லையின் 125 மைல் ரோந்தில் சட்டவிரோதமான எந்த ஆயுதமும் கைப்பற்றப்படவில்லை என்றும் தெரிவித்தார். ஆனால், அதிகரித்து வரும் நவீன சாலையோர வெடிகுண்டுகள் மற்றும் கிளர்ச்சியாளர்களின் சிறு பீரங்கிகளைக் கொண்டு ஈரானிய புரட்சி படை உறுப்பினர்கள் அங்கு இருக்கிறார்கள் என்பதை அவர் அறிவார்.

லியன்சின் கருத்தைப் பற்றி கொண்ட வாஷிங்டன் போஸ்ட், செவ்வாயன்று (18.08.2007), "ஈரானில் தீவிரம்: அமெரிக்காவுடன் புரட்சி படை யுத்தத்தில் இறங்கும் போது, மீண்டும் ஏன் போரிட கூடாது?" என்ற தலைப்பில் ஒரு தலையங்கத்தை வெளியிட்டு இருந்தது. இந்த தூண்டுதலான எச்சரிக்கைக்கு அப்பாற்பட்டு, ஈரானிய புரட்சி படையை ஒரு தீவிரவாத அமைப்பு என முத்திரையிடுவது தவிர, வேறு எந்த தீவிரமான நடவடிக்கைகளிலும் புஷ் நிர்வாகம் ஆழ்ந்து இறங்குவதில்லை என அந்த செய்திதாள் குறிப்பிட்டிருந்தது. "ஈராக்கில், ஈரானால் பல குண்டு வெடிப்புக்கள் நடத்தப்பட்டு இருக்கும் நிலையில், அமெரிக்கா செய்வது, மிக குறைந்தபட்ச செயல்பாடாக தெரிகிறது." என அப்பத்திரிகை கண்டனம் தெரிவித்திருந்தது.

மேற்கூறிய கண்டனங்களுக்கு அப்பாற்பட்டு, பாக்தாத்தில் நடைபெறும் மாறுபட்ட ஈரான்-அமெரிக்க பேச்சுவார்த்தை கோட்பாட்டையும் எச்சரிக்கும் இந்த தலையங்கம் பின்வருமாறு தொடர்கிறது; "இருப்பினும், அந்த முரண்பாடு தொடருமேயானால், அமெரிக்க துருப்புக்களுக்கு எதிராக அதன் யுத்தத்தை தீவிரப்படுத்தும் போது, அந்த விவாதங்களில் பங்கு பெற்றிருக்கும் ஒரு ஆட்சியுடன் ஒப்பிட்டால் இது மிகவும் சிறிய விஷயமே ஆகும். பேச்சுவார்த்தைக்குப் பதிலாக ஈரான் யுத்தத்தைத் தேர்ந்தெடுத்தால், அனைத்து பொருளாதார ஆயுதங்களையும் ஒன்று திரட்டி மீண்டும் யுத்தத்தைத் தொடங்குவதில் அமெரிக்க பின்வாங்கக் கூடாது." எனக் குறிப்பிட்ட வாஷிங்டன் போஸ்ட், ஈரானுக்குள் இருக்கும் ஈரானிய புரட்சி படையின் தளங்களின் மீது அமெரிக்க இராணுவம் தாக்குதல் நடத்துவதற்கும் இதே வாதத்தை நியாயப்படுத்தலாம் என்பதை மட்டும் வெளியிட தயங்கி இருக்கிறது.

ஒரு முக்கியமான தீடீர் தாக்குதலுக்காக ஈரான் மீது உருவாக்கப்பட்ட இந்த பிரச்சாரம், தவறாக எடுத்துக் கொள்ளப்படுவதற்குரியதல்ல. 2003 -ல் நடந்த ஈராக் தாக்குதலை நியாயப்படுத்த, ஆயுதக் குறைப்பு நடத்தியதாக கூறும் பொய்களையே இந்த முறை மீண்டும் நினைவுபடுத்துகிறது. "ஈரானை பின்புலத்தில் கொண்ட போராளிகள் அமெரிக்க துருப்புகளை கொல்கின்றன" என்ற உறுதிப்படுத்தாத வலியுறுத்தல்களை, அவை உண்மை என ஏற்றுக் கொள்ளப்படும் வரை, ஊடகங்கள் தொடர்ந்து மீண்டும் மீண்டும் அவற்றை எடுத்து கூறின; திரித்து கூறின; புனைந்து எடுத்துரைத்தன.

வெள்ளை மாளிகை தெஹ்ரானுடனான அனைத்து நேருக்கு நேர் பேச்சுவார்த்தைகளையும் தெளிவாக நிராகரித்தது. பாக்தாத்தில் அமெரிக்கா மற்றும் ஈரானிய தூதர்கள் இடையே நடந்த மூன்று சுற்று பேச்சுவார்த்தைகளும், பதட்டத்தை குறைக்க எந்த வழியையும் உருவாக்கவில்லை. ஈராக்கில் அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு ஒத்துழைக்கும் ஈரானின் யோசனைகளுக்கு, "அதன் நடவடிக்கையை மாற்றி கொள்வதில் தோல்வி கண்ட தெஹ்ரான்" என்ற அறிவிப்புடன் இறுதி எச்சரிக்கைகளாலும், கண்டனங்களாலுமே பதிலளிக்கப்பட்டன.

திங்களன்று, அந்நாட்டின் துணை வெளியுறவு அமைச்சர் நிகோலஸ் பேர்ன்ஸ் ஊடகங்களிடையே தெரிவிக்கும் போது, "ஈராக் இராணுவத்தையும், அமெரிக்க படைவீரர்களையும் மற்றும் பிறரையும் தாக்கி வரும் ஷியைட் பயங்கரவாத குழுக்கள் உட்பட, ஈராக்கில் உள்ள பயங்கரவாத குழுக்களுக்கு எதிராக போரிடுவதற்காக - ஈரானியர்கள் சரியானவைகளை செய்தாலும், செய்யாவிட்டாலும் நாங்கள் அவர்களை மதிப்பிட உள்ளோம்." என்று கூறினார். "எதிராக போரிடுவது" என்று அவர் என்ன பொருளில் குறிப்பிட்டுள்ளார்? பேர்ன்ஸ் அதைப் பற்றி கவலைப்படவில்லை. அந்த வார்த்தைகள் பலவற்றை வெளிப்படுத்துகிறது. ஈரானிய புரட்சி படை அளிக்கும் ஆயுத வினியோகம் மற்றும் பயிற்சிகளை முடிவுக்கு கொண்டு வருவது மட்டுமின்றி, அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு இருக்கும் ஷியைட் குழுக்களின் எதிர்ப்பை ஒடுக்குவதிலும் தீவிரமான ஒத்துழைப்பை தெஹ்ரான் அளிக்க வேண்டுமென அமெரிக்கா கோருகிறது.

கடந்த வார டைம் இதழில் வந்திருக்கும் ஒரு விமர்சனத்தில், சிஐஏ இன் முன்னாள் பிராந்திய அதிகாரி ரோபர்ட் பேயர் மொட்டையாக பின்வருமாறு எச்சரித்திருக்கிறார்: "ஈரான் இஸ்லாமிய புரட்சி பாதுகாப்பு படையை பயங்கரவாதிகள் பட்டியலில் போடும் புஷ் நிர்வாகத்தின் அறிக்கைகளை, பின்வரும் இரண்டு வழிகளில் பார்வைக்கு எடுத்துக் கொள்ளலாம்: அது மிகவும் கொந்தளிப்புடன் இருக்கிறது அல்லது ஈரான் மீதான ஒரு தாக்குதலை ஒரு முடிவுக்கு கொண்டு வரும் வகையில் அச்சுறுத்துவதாக இருக்கிறது. வாஷிங்டனில் அதிகாரிகளுடன் நான் பேசிய போது, அடுத்த ஆறு மாதங்களுக்குள் ஈரானிய புரட்சி பாதுகாப்பு படையின் மீது ஒரு தாக்குதலை நடத்த தமது ஆதரவை தெரிவிக்கின்றனர். நம்மிடம் வான் தாக்குதலுக்கான பீரங்கிகள் மற்றும் ஏவுகணைகள் இருக்கும் வரை நம்மால் ஈரானின் அணு உலைகளைத் தாக்க முடியும் என்றும் அவர்கள் எண்ணுகிறார்கள். இதுவொரு ஆபத்தான அதிர்ச்சி அளிக்கும் போராட்ட ஏற்பாடாகும்." என்றார்.

பேயரின் விளங்கங்கள் வாஷிங்டனின் பிராச்சார வாதங்களின் இரண்டாவது முகத்தை காட்டுவதாக உள்ளது. அதாவது, ஈரானின் அணு ஆயுத திட்டங்களுடன் தொடர்புடையதாக உள்ளது. உறுதியான ஆதாரங்களை அளிக்காத நிலையில், தெஹ்ரான் அணு ஆயுதங்களை உருவாக்க முயல்கிறது என தொடர்ந்து கூறி வரும் அமெரிக்கா, ஈரான் அதன் யூரேனியம் செறிவூட்டும் ஆலைகளை மூட வேண்டும் என்றும், ஒரு பெரிய நீர் ஆராய்ச்சி ஆலை அமைப்பதையும் கைவிட வேண்டும் என்றும் கோருகிறது. ஆனால் இந்த திட்டங்கள் ஆக்கபூர்வமாக செயல்படுத்தப்படும் என கூறி வரும் ஈரான், தனது அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தப் படி, அணு எரிசக்திக்கு தேவையான அனைத்து அபிவிருத்திகளை மேற்கொள்வதை தனது உரிமையாக குறிப்பிடுகிறது.

நிலுவையில் இருக்கும் சிக்கல்களை தீர்க்கும் ஒரு முயற்சியாக, ஈரான் சர்வதேச அணுசக்தி அமைப்பு அதிகாரிகளை இந்த வாரம் சந்தித்தது. ஈரான் அணு திட்ட விவகாரங்களை தெளிப்படுத்துவதில் "ஒரு மைல்கல்லாக", சர்வதேச அணுசக்தி அமைப்பு இணை இயக்குனர் ஓலீ ஹெய்நோனென் வரவேற்புடன் ஓர் ஒப்பந்தம் செவ்வாயன்று (18.08.2007) அறிவிக்கப்பட்டது. மேலும் அமெரிக்கா விதித்த அபராதங்களும் இந்த ஒப்பந்தத்தில் கிடப்பில் போடப்பட்டு இருந்தன. இந்த ஒப்பந்தம் ஒரு சார்பாக இருப்பதுடன், அதை செயல்படுத்துவதில் பல சிக்கல்கள் இருப்பதாக கூறி அதை உடனடியாக குற்றஞ்சாட்டிய அமெரிக்க அதிகாரிகள், அடுத்த மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபையில், வாஷிங்டன் ஒரு புதிய சுற்று கடுமையான தீர்மானத்தை வலியுறுத்தும் எனத் தெரிவித்தனர்.

பேர்ன்ஸ், திங்களன்று (17.08.2007) வெளியிட்ட தமது அறிவிப்பில் சர்வதேச அணுசக்தி அமைப்பின் முயற்சிகளை பின்வருமாறு குறிப்பிட்டு ஏளனம் செய்திருந்தார்: "ஈரானியர்கள் என்பதைப் பொறுத்து, அது மிகவும் தெளிவாக இருக்கிறது என நான் நினைக்கிறேன். அது முழுமையாக தெளிவானதாகும். அவர்கள் தற்போது சர்வதேச அணுசக்தி அமைப்புடன் களியாட்டத்தில் இருக்கிறார்கள்....உங்களுக்கு ஈரானியர்கள் இருக்கிறார்கள் மற்றும் சர்வதேச அணுசக்தி அமைப்பில் இருக்கும் சில அதிகாரிகளும் இருக்கிறார்கள். கேள்விகள் தொடர்பாக ஐஏஈஏ ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் வரை, அவர்கள் கடந்த இரண்டு வருடங்களாக எந்த பதிலும் அளிக்கவில்லை. நாங்கள் அவர்களின் தீர்மானங்களை ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் தாக்கல் செய்ய அனுமதிக்க மாட்டோம். இது எவ்வகையிலும் ஏற்கத்தக்க வாதம் கிடையாது." என்று தெரிவித்தார்.

துல்லியமான மட்டம் என்ன என்றால் ஈரானிய ஆட்சி செய்யக்கூடியது முழுமையாக ஒன்றுமே இல்லை. அமெரிக்காவின் முற்றுப்பெறாத தொடர்ச்சியான கோரிக்கைகளுக்கு முழுமையான சரணடைவு உடன்படிக்கையை அளித்தால், ஈரான் அணுத்திட்டங்கள் மீதான நேருக்கு நேர் மோதலை மற்றும் அதன் ஈராக் தலையீடுகளை முற்றிலுமாக முடித்து வைக்கும். ஈரானிய பொருளாதாரத்தை முடமாக்குவது மற்றும் யுத்தத்திற்கான வழியை முன்னேற்பாடாகச் செய்வது என்ற நோக்கில், பிற முக்கிய சக்திகளுக்கு அழுத்தம் கொடுத்து தண்டனைக்குரிய மதிப்பீடுகளை தீவிரப்படுத்தும் பிரச்சாரங்களில் அவைகளை ஆதரவு கொடுக்கச் செய்வதைத் தான் புஷ் நிர்வாகத்தின் இராஜதந்திரம் என்று கூறப்படுவது கொண்டிருக்கின்றது.

"மத்திய கிழக்கில் மிகத்தீவிர மற்றும் ஆபத்தான அரசாங்கம்" என அவர் எதை வரையறுத்தாரோ, அதை ஐக்கிய நாடுகள் சபையில் அணுகும் போது புஷ் நிர்வாகம் கடுமையான இராஜதந்திரத்தை கையாளும் என பேர்ன்ஸ் தெரிவித்தார். ஈரானின் அணுச்சக்தி திட்டங்கள் குறித்து கூறுகையில், "ஐக்கிய நாடுகள் சபையில் செப்டம்பர் மாதத்தில் இதுவொரு மிக பெரிய பிரச்சனையாக இருக்கும். நாங்கள் இதை மிக மிக கடுமையாக அணுக விரும்புகிறோம்" என்றும் தெரிவித்திருக்கிறார்.

இதுபோன்ற 'இராஜதந்திரம்' எப்போதுமே செயல்பாட்டிற்குரியதல்ல என்று கூறிய பேர்ன்ஸ், மேலும் கூறுகையில், "இராஜதந்திரத்தை வெற்றிகரமாக்க எங்களிடம் இன்னும் கால அவகாசம் இருக்கிறது. ஆனால் அதிபர் புஷ் மிகவும் தெளிவாக இருக்கிறார். அதே போன்று காங்கிரசின் இரு கட்சிகளின் பல மூத்த உறுப்பினர்களும் கூட மிக தெளிவாக இருக்கின்றனர். அடிப்படையில் அமெரிக்காவிற்கு பலவிதமான வாய்ப்புகள் இருக்கின்றன. இராணுவ நடவடிக்கைக்கான தேர்வை ஒரு போதும் நாங்கள் மேசையிலிருந்து அகற்றவில்லை." என்று தெரிவித்தார்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved