World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஆசியா : பாகிஸ்தான்

US seeks to save Pakistani dictator, thwart democracy
Musharraf-Bhutto negotiations near end-game

ஜனநாயகத்தை குலைத்து பாகிஸ்தானிய சர்வாதிகாரியை காப்பாற்ற முயலும் அமெரிக்கா

இறுதிக் கட்டத்தை எட்டி இருக்கும் முஷாரப்-பூட்டோ பேச்சுவார்த்தை

By Keith Jones and Vilani Peiris
6 September 2007

Back to screen version

பாக்கிஸ்தான் மக்கள் கட்சியின் "வாழ்நாள் தலைவரான" பெனாசீர் பூட்டோவும், பாகிஸ்தான் இராணுவத்தின் இரும்புமனிதர், ஜெனரல் பர்வேஷ் முஷாரஃப்பின் முக்கிய உதவியாளர்களும் ஒரு அதிகாரப் பகிர்வு உடன்படிக்கையை வடிவமைக்கும் நோக்கத்துடன் இந்த வாரம் துபாயில் சந்தித்து பேச இருக்கிறார்கள்.

இந்த பேச்சுவார்த்தையில் பங்கு பெறுவது குறித்து புஷ் நிர்வாக அதிகாரிகளிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை. ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானை கைப்பற்றுவதற்கான அமெரிக்காவின் யுத்தங்கள் மற்றும் பாகிஸ்தானிய இராணுவ சர்வாதிகாரத்திற்கு அளிக்கப்பட்ட ஊக்கமளிப்புகள் (இதன் சமீபத்திய வரவுதான் முஷாரஃப்) ஆகியவற்றால் பாகிஸ்தானில் அமெரிக்கா பரவலாக கடிந்துகொள்ளப்படுவதால், பாகிஸ்தானிய அரசை வடிவமைக்கும் நோக்கத்துடன் வலிய புகும் அமெரிக்காவின் நிலை, பாக்கிஸ்தானில் அமெரிக்க எதிர்ப்பு உணர்வையே விசிறிவிடும்.

ஆனால், இடதுசாரிகள் என்ற பாசாங்குடன் கடந்த காலத்தில் சோசலிச உரைகளைத் திறமையாக பேசிய ஒரு கட்சியை நடத்தி வரும் பூட்டோவுடன், 1999-ம் ஆண்டின் ஒரு அரசியல் ஆட்சிக் கவிழ்ப்பு சதியில் அதிகாரத்தை கைப்பற்றிய முஷாரஃப்பிற்கு சமரச இணக்கத்தை ஏற்படுத்த புஷ் நிர்வாகம் மற்றும் அதன் நெருங்கிய கூட்டாளியான பிரிட்டனின் பிரவுண் தொழிற்கட்சி அரசாங்கம் பின்னணியில் முயற்சித்து வருகின்றன.

முஷாரஃப் ஆட்சியின் ஒரு தூணாக இருந்து வரும் புஷ் நிர்வாகம், தலிபானுடனான உறவுகளை முறித்து கொண்டு, 2001-ம் ஆண்டு ஆப்கானிஸ்தான் படையெடுப்பின் போது அமெரிக்காவிற்கு சரக்கு கையாளுதலில் முக்கிய ஒத்துழைப்பு வழங்கியது முதல் பாகிஸ்தானுக்கு சுமார் 10 பில்லியன் டாலர்களை மானியமாக அளித்து அதை கெளரவித்திருக்கிறது. ஜனாதிபதி புஷ், வெளியுறவு அமைச்சர் கொண்டலீசா ரைஸ் நாட்டின் செயலாளர் மற்றும் பிற நிர்வாக வல்லுனர்கள்- பயங்கரவாதத்திற்கான போரில் முஷாரஃப் ஒரு தைரியம் மிக்க கூட்டாளி மற்றும் அவர் தமது நாட்டை ஜனநாயகப் பாதையில் முன்னேற்றி செல்வதில் வளைந்து கொடுக்க கூடிய ஒரு ஞானமுள்ள ஆட்சியாளர் எனப் புகழ்ந்து வாழ்த்தி இருக்கிறார்கள். தேவையற்ற இந்த புகழ்ச்சி, சத்தமில்லாமல் கைக்கு கை மாறி இராணுவ ஆட்சி பகுதிகளுக்கு சென்று, கடந்த மே 12-ல் கராச்சியில் பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டிருப்பது உட்பட மொத்தமாக பல மனித உரிமைகளை தவறாகப் பயன்படுத்தவும் இடமளித்திருக்கிறது.

ஆப்கானிஸ்தானில் மட்டுமின்றி புஷ் நிர்வாகத்தின் சுய குற்றங்களிலும் பாகிஸ்தான் இராணுவத்தின் ஒரு பகுதி உடந்தையாய் ஆக்கப்பட்டு இருந்தது. பாகிஸ்தான் மண்ணில் சட்டவிரோதமான சிறைச்சாலைகள் மற்றும் சித்திரவதை கூடங்களை அமைக்க, சிஐஏ மற்றும் பிற அமெரிக்க பாதுகாப்பு நிறுவனங்களை முஷாரஃப் ஆட்சி அனுமதித்து இருக்கிறது.

ஆனால் கடந்த ஆறு மாத நிகழ்வுகளில் - அனைத்திலும் முதன்மையானதாக, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை வெளியேற்றும் முஷாரஃப்பின் முயற்சிக்கு இருந்த ஒட்டுமொத்த எதிர்ப்பைத் தடுப்பதில் இருந்த முஷாரஃப்பின் திறமையின்மை, லண்டன் கலந்தாய்வின் மீது புஷ் நிர்வாகத்தை கவனம் செலுத்த செய்திருப்பதுடன், பூட்டோ மற்றும் அவரின் பாகிஸ்தானிய மக்கள் கட்சியுடன் ஒரு இணக்கத்தை ஏற்படுத்த முஷாரஃப்பை தூண்டும்படியும் செய்திருக்கிறது.

வாஷிங்டனின் நம்பிக்கை என்னவென்றால், பிரபலமான பாரம்பரியம் மிக்க கட்சியாக இதுவரை பொதுவாக கருதப்பட்டு வரும் பாகிஸ்தானிய மக்கள் கட்சி, முஷாரஃப் மற்றும் அமெரிக்க கூட்டு இராணுவ அமைப்பு தொடர்ந்து முடிவெடுக்கும் அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் ஒரு அரசியல் அமைப்பிற்கான சட்ட முறைமையை அளிக்கமுடியும்.

நாட்டின் பழங்குடி இன பிரதேசத்தில் மற்றும் இரண்டு பின்தங்கிய மாகாணங்களான வடமேற்கு எல்லைப்பகுதியிலும், பலுசிஸ்தானிலும் வளர்ந்து வரும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் வளர்ச்சியின் மீது இருக்கும் பயங்களை போக்குவதற்கான ஒரு இராஜதந்திரமாக மட்டுமல்லாமல் இதுபோன்ற ஒரு அரசியல் மறு அணிசேர்தல், இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு எதிரான ஒரு பாகிஸ்தானிய மிதவாத அணியாக உருவாக்கப்பட்டு வருகிறது. அரசியல் ரீதியில் வலுவாக உள்ள முஷாரஃப் ஆட்சி, இஸ்லாமிய போராளிகளை மற்றும் பாகிஸ்தானில் இருந்து செயல்படும் தாலிபான் படைகளை ஒடுக்கவும், வெளியேற்றவும் தேவையான இராணுவ நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் என வாஷிங்டன் மற்றும் லண்டன் எதிர்பார்ப்பதுடன், வலியுறுத்தவும் செய்யும். பெருமளவில் பாகிஸ்தானிய இராணுவ-அரசியல் அமைப்புகளின் உருவாக்கங்களாகவே இருந்த இந்த படைகள், செப்டம்பர் 11, 2001-க்கு பின்னர் இஸ்லாமாபாத்தின் புவி-அரசியல் மூலோபாய மறு அணிசேர்தலின் அடிப்படையில் செல்வாக்கு இழந்து இருக்கின்றன. அதே சமயம், ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்காவின் கொடூர தாக்குதல்கள் மீதான எதிர்ப்புகள் மற்றும் கடந்த இருபது வருடங்களாக அனைத்து பாகிஸ்தானிய அரசாங்கங்களும் பின்பற்றி வரும் நவீன தாராளமய செயற்பட்டியல் மீதான எதிர்ப்புகளிடம் இருந்து இவர்கள் பெருமளவிலான ஒத்துழைப்பையும் பெற்று வருகிறார்கள்.

வாஷிங்டனுக்கு சாதகமாய் ஆதரவைப் பெற பல ஆண்டுகளாய் முயன்று வந்த பூட்டோ, தாலிபான், இஸ்லாமிய போராளிகள் மற்றும் அவர்களின் ஏழ்மைபீடித்த ஆதரவாளர்களின் மீது நடத்தப்படும் கொடூர தாக்குதல்களுக்கான ஒத்துழைப்பில், தம்மையும் கணக்கில் எடுத்து கொள்ள செய்வதற்காக சமீபத்திய சில மாதங்களாக புஷ் நிர்வாகத்தை சமாதானப்படுத்த முயற்சி செய்து வருகிறார். கடந்த ஜூலை மாதம் லால் மஸ்ஜீத் (செம் மசூதி) மீது முஷாரஃப் ஆட்சியால் நடத்தப்பட்ட இராணுவ தாக்குதலுக்கு தமது முழு ஒத்துழைப்பை வலிமையாக தெரிவித்திருந்த அவர், இரண்டாவது முறை அமைந்த தமது அரசு தாலிபான்களுக்கு ஒத்துழைப்பு அளித்தது தவறு தான் என்றும் பொதுப்படையாக அறிக்கையில் தெரிவித்தார். மேலும் தாலிபான் மற்றும் பிற ஆயுதந்தாங்கிய இஸ்லாமிய குழுக்களுக்கு தொடர்ந்து இரகசியமாய் ஆதரவளிக்கும் பாகிஸ்தானிய இராணுவ பாதுகாப்பு அமைப்பில் உள்ள மூலங்களுடன் சந்தர்ப்பத்திற்கேற்ப செயல்பட்டு வரும் முஷாரஃப்பையும் அவர் குறை கூறி இருந்தார்.

அதே சமயம், முஷாரஃப்புக்கு எதிராக பெருமளவில் ஆதரவு திரட்டுவதிலும் உறுதியாக இருக்கும் அவர், அது பாகிஸ்தானிய மக்கள் கட்சியின் மற்றும் பிற மிதவாத அணிகளின் கட்டுப்பாட்டில் இருந்து விரைவிலேயே வெளியில் சுழன்று வரலாம் என எச்சரித்திருந்தார். மேலும், அமெரிக்காவை பின்புலத்தில் கொண்ட ஜெனரல் ஜனாதிபதியுடன் (முஷாரஃப்) பணியாற்ற தாம் தயாராக இருப்பதாகவும் அறிவித்திருந்தார்.

ரைஸின் அவசர தொலைபேசி அழைப்பு

ஜூலை 27-ல், செம் மசூதி படுகொலை நடந்த இரண்டு வாரங்களுக்கு பின்னர் மற்றும் தலைமை நீதிபதி இப்திகார் செளத்ரியை மீண்டும் பணியில் அமர்த்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு சரியாக ஏழு நாட்கள் கழித்து, பூட்டோவுடனான இரகசிய கூட்டத்தில் கலந்து கொள்ள முஷாரஃப் அபுதாபி பறந்தார்.

சில ஆண்டுகளாக இல்லை என்றாலும், சில மாதங்களாவது முஷாரஃப் ஆட்சிக்கும் மற்றும் பாக்கிஸ்தான் மக்கள் கட்சிக்கும் இடையே பின்புலத்தில் பேச்சுவார்த்தைகள் தொடங்குவதும், முடிவதுமாக இருந்தன. ஆனால் 1999-ம் ஆண்டு அரசியல் சதிக்குப் பின்னர் ஜெனரல் ஜனாதிபதிக்கும், பூட்டோவுக்கும் இடையே நடந்த முதல் பேச்சுவார்த்தை இதுவேயாகும். இது போன்ற ஒரு அரசியல் சூது - முஷாரஃப்பின் நம்பிக்கையின்மைக்கான மற்றும் உடனே நிகழ இருக்கின்ற உடன்படிக்கைக்கான ஓர் அறிகுறி என்று உலகளவில் கூறப்பட்டது.

எப்படி இருப்பினும், விரைவில் பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட இருக்கின்றன மற்றும் கொண்டலீசா ரைஸிடம் இருந்து ஆகஸ்டு 16-ம் தேதி இரவு வந்த ஒரு அவசர தொலைபேசி அழைப்பு, கடுமையான சட்டங்கள் விதிப்பதிலிருந்து முஷாரஃப்பின் மனதை மாற்றி நற்பெயர் பெற்று தந்திருக்கிறது.

புஷ் நிர்வாகம், நீண்ட காலமாகவே பாக்கிஸ்தான் மக்களின் ஜனநாயக உரிமைகள் மீது அதன் அவமதிப்பை மற்றும் அக்கறையின்மையை காட்டி வருகிறது. முஷாரஃப்பின் அதிகார விளையாட்டால் திருப்பித்தாக்கும் விளைவுகள் ஏற்படும் என அது அஞ்சுகிறது. தலைமை நீதிபதியை நீக்கியது, எதிர்ப்பாளர் கலகங்களுக்கு ஆத்திரமூட்டியது ஆகியவை நாட்டின் கட்டுப்பாட்டுத்தன்மையை குலைத்து, இராணுவத்தை உடைத்து, அமெரிக்காவின் முக்கிய நலன்களுக்கும் அச்சுறுத்தலாக இருக்கும் என அது அஞ்சுகிறது.

பூட்டோவுடனான ஒரு இணைக்கத்தை பெறுவற்கான ஒரு புதிய முயற்சியை உருவாக்க, ரைஸின் தலையீடு முஷாரஃப்பிற்கு சிறிதளவிலான வாய்ப்பை ஏற்படுத்தி தந்திருக்கிறது. ஜனாதிபதியாக இருந்த ஜெனரலின் ஐந்து வருட பதவிக்காலம் விரைவில் முடிய இருக்கிறது. மேலும் அவர் அரசியல் விதிகளை மீறி தன்னைத்தானே மீண்டும் தேர்வு செய்து தேசிய மற்றும் மாகாண பாராளுமன்ற தொகுதிகளில் அமரும்படி செய்வதற்கு, 2002-ல் செய்தது போன்று இராணுவத்தால் தேர்தல் ஒத்திகை செய்யப்பட்டதை தேர்ந்தெடுத்தாலும் கூட அவருக்கு பாகிஸ்தான் மக்கள் கட்சியின் ஆதரவு தேவைப்படுகிறது. (2003-ல் முஷாரஃப், தனது ஆட்சியை அதிகாரபூர்வமானதாக ஆக்க கூடிய ஒரு தொடர்ச்சியான அரசியல் சட்ட திருத்தங்களுக்காக, இஸ்லாமிய அடிப்படைவாத கட்சிகளான எம்எம்ஏ -வுடன் கூட்டனி சேர்ந்து ஒரு உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொண்டார்.)

ஜனநாயக கட்சியின் பெரும்பான்மை பிரிவுகள் உட்பட, அமெரிக்க அரசியல் அமைப்பின் கணிசமான பிரிவுகள், முஷாரஃப்பின் பின்புலத்தை அறிய விரும்பின, ஏனென்றால் குறிப்பாக அவர் ஆட்சிக்கு வாஷிங்டன் பெரியளவிலான மிதமிஞ்சிய உதவிகளை அளித்திருந்ததை எடுத்துக் கொண்டால் அவர் அமெரிக்க கூட்டணியின் மீது போதிய கீழ்ப்படிதலை காட்டியிருக்கவில்லை என அவர்கள் நம்பியிருந்தார்கள். பாகிஸ்தானில் இருக்கும் தாலிபான்களை ஒடுக்கும் நடவடிக்கைகளை "முன்னேற்றுவதற்கு" இஸ்லாமாபாத்திற்கு அமெரிக்கா சில உதவிகளை அளிக்கும் மசோதாவை ஆதரித்து மற்றும் நிறைவேற்றியதன் மூலமும் அவர்கள் முஷாரஃப்பின் மீதிருந்த தங்கள் அதிருப்தியை வெளிக்காட்டி இருந்தார்கள்.

ஆனால் இராணுவ பின்புலத்துடன் வலிமையான ஜனாதிபதியாக முஷாரஃப் இருக்க வேண்டும் என்றும், அதில் பூட்டோ ஒத்துழைப்பு பங்களிப்பை அளிக்க வேண்டும் என்றும் புஷ் மற்றும் துணை ஜனாதிபதி விரும்பியதற்கான நிறைய ஆதாரங்கள் இருக்கின்றன. இது ஒரு அரசியல் மறுசீரமைப்பு என்பதால், அதிகாரம் மற்றும் தீவிர அரசியல் நெருக்கடிகளுக்கிடையிலும் மற்றும் கடுமையான போட்டிகளின் கீழும் நிச்சயமாக பேச்சுவார்த்தை நடத்த முடியாது.

முஷாரஃப் மற்றும் பூட்டோவிற்கு இடையிலான பேச்சுவார்த்தை தடைபடாமல் நடக்குமேயானால், அது ஜனநாயகத்தின் வெற்றியாக கருதப்பட்டு வாஷிங்டன், லண்டன் மற்றும் பாக்கிஸ்தானிய மக்கள் கட்சியால் புகழப்படலாம். ஆனால் உண்மையில், அது மிகவும் எதிர்மறையாகத் தான் இருக்கும்: அதாவது, வாஷிங்டன் தரகு வேலை செய்யாமல் இருந்தால், முன் வைக்கப்படும் ஒரு உடன்படிக்கையானது -ஆண்டாண்டுகளுக்கும் பாகிஸ்தானில் இராணுவ ஆட்சியின் பாதுகாப்பு அரணைத் தொடரவும், மத்திய ஆசியாவில் சூறையாடும் அமெரிக்க இராணுவ தலையீடுகளை தொடரவும், பெருமளவிலான பாகிஸ்தானியர்களை மிகத் தேவைக்கும் பின்தங்கியநிலைமைக்கும் சபிக்கின்ற அதேவேளை, தொழில் அதிபர்கள், ஜெனரல்கள் மற்றும் அதிகாரத்துவத்தினரது ஒரு சிறு மேற்தட்டை செழிப்படையச் செய்யும் ஒரு முதலாளித்துவ சமூக அரசியலைத் தக்க வைக்கவுமாக இத்திட்டம் அமையும்.

அது போன்ற ஒரு உடன்படிக்கையின் கீழ், 2012-ம் ஆண்டு வரை பாகிஸ்தானிய ஜனாதிபதியாக இருக்க முஷாரஃப்பிற்கு பாகிஸ்தானிய மக்கள் கட்சி ஒத்துழைக்கலாம். முஷாரஃப், பாகிஸ்தானிய இராணுவம் மற்றும் அவர்களின் அரசியல் கூட்டுறவுகள், அதுவரை, பாகிஸ்தானிய மக்கள் கட்சி தலைவர்களின் ஊழல் வழக்குகளை கிடப்பில் போட்டு வைக்கலாம்; மூன்றாவது முறையாக பிரதம மந்திரியாக இருப்பதற்கு எதிரான அரசியல் அமைப்பு சட்டங்களை தடுத்து வைக்கலாம்; மற்றும் முடிக்கப்படாத சட்டமன்ற தேர்தல்களை கவனிக்க ஒரு மத்தியஸ்த அரசாங்கத்தை உருவாக்கலாம். இந்த நடவடிக்கைகள், தாமாக புலம்பெயர் வாழ்வை விதித்துக் கொண்டு தங்கி இருக்கும் பூட்டோவின் வருகைக்கு ஒரு வழியை வகுக்கும் என்பதுடன், 2008-ம் ஆண்டு ஆரம்பபத்தில் வரும் தேர்தல்களின் பின்னர் பிரதம மந்திரியாகவும் வரலாம்.

பல்வேறு நெருக்கடிகள் சூழ்ந்திருக்கும் ஒரு ஆட்சி

பாக்கிஸ்தானிய பாதுகாப்பு படையின் தலைமைப் பதவியை அல்லது ஜனாதிபதி மற்றும் பிரதம மந்திரி அதிகாரத்தின் சமத்தன்மையை முஷாரஃப் விட்டால் அல்லது விடும்போது ஏற்படும் வேறுபாடுகள் உட்பட பல்வேறு தடைகள் இது போன்றதொரு உடன்பாட்டில் இருக்கின்றன. பூட்டோவுடனான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தால், தற்போதைய ஆட்சிகாலத்தை நீடிப்பது, எம்எம்ஏ மற்றும் அதன் அணிகளுடன் ஒரு முனைப்பான உடன்படிக்கையை ஏற்படுத்துவது மற்றும் அவசரகால சட்டங்களை பிரயோகிப்பது உட்பட, பல்வேறு வகையான சாத்தியகூறுகள் ஆலோசிக்கப்பட்டு வருவதாக, இராணுவத்தால் முன்னிறுத்தப்படும் முஷாரஃப் ஆதரவு கட்சியான பிஎம்எல் (க்யூ) -வின் முக்கிய தலைவர்கள் கூறி இருக்கிறார்கள்.

அந்த உடன்படிக்கை தடைபட்டாலும், முஷாரஃப் ஆட்சியின் கீழ் இருக்கும் பல்வேறு நெருக்கடிகளின் முக்கியத்துவத்தின் காரணமாக விரைவிலேயே அந்த சிக்கல் நீங்கிவிடும்.

தலைமை நீதிபதி செளத்ரியை நீக்குவதற்கான முஷாரஃப்பின் முயற்சிகளுக்கு எதிராக போராட்டங்களை வழிநடத்திய பாக்கிஸ்தான் வழக்கறிஞர்கள் சங்கம், தற்போது அமர்ந்திருக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் மூலம், மீண்டும் தம்மை ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்து அறிவிக்க திட்டமிடும் முஷாரஃப்பின் அனைத்து முயற்சிகளுக்கும் எதிராக நாட்டை செயல்படுத்த உறுதி பூண்டிருக்கிறது. பாகிஸ்தானின் ஜெனரல் ஜனாதிபதி மற்றும் அவரின் ஆதரவாளர்கள், அவர் (சட்டமன்ற உறுப்பினர்களின் அதிகாரம் அக்டோபர் மத்தியில் முடிவு பெறுகின்றன) மிகச் சரியாக வரும் வாரங்களில் செயல்பட நோக்கங்கொண்டுள்ளதாகவும் அனைத்து வகையிலும் விவாதிக்கப்பட்டு வரும் பூட்டோவுடனான அதிகாரப் பகிர்வு உடன்படிக்கையானது, துல்லியமாக ஜனநாயகத்திற்கு எதிராகவும் அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணானதாகவும் எல்லாவகையிலும் கணிக்கப்பட்டுள்ளதாக மீண்டும் தெரிவித்து இருக்கிறார்கள்.

1999-ல் முஷராப்பால் தூக்கி எறியப்பட்ட, பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் தலைவரான நவாஸ் ஷெரீப், தனிப்பட்ட முறையில் முஷாரஃப் மீதான எதிர்ப்புகளை வழிநடத்தி செல்ல வரும் திங்கட்கிழமை (10.09.2007) நாடு திரும்ப இருப்பதாக உறுதியாக அறிவித்திருக்கிறார்.

அந்த அரசியற் சதிக்குப் பின்னர், முஷாரஃப் மற்றும் இராணுவம், தேசத்துரோகம் உட்பட பல வழக்குகளுடன் ஷெரீப்பை நீதிமன்றத்தின் முன்னால் இழுத்து வந்து நிறுத்தியது மற்றும் அவருக்கு ஆயுள்தண்டனையும் அளிக்கப்பட்டது. ஆனால் பின்னர், சவூதி அரேபிய அரசாங்கத்துடன் செய்யப்பட்ட ஒரு உடன்படிக்கையின்படி, ஷெரீப் 10 வருடங்களுக்கு நாடு கடத்தப்பட்டார். ஆகஸ்டு 23-ல், நாட்டிற்கு சட்டப்படி திரும்பி வர தன்னை அனுமதிக்கும்படி ஷெரீப் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த சில நாட்களுக்கு பின்னர், பாகிஸ்தானின் உயர்நீதிமன்றம், நாடு கடத்தும் உடன்படிக்கையை இரத்து செய்து அவருக்கு சாதகமாக தீர்ப்பளித்தது.

ஷெரீப்பின் ஜனநாயகத்தின் சாதனை பற்றிய ஆரம்ப ஆவணங்கள் அக்குவேறாக கிழிந்திருக்கின்றன. தொழிலதிபர்களின் செல்வாக்கான கூட்டு குடும்பங்களுடனும், முன்னாள் சர்வாதிகாரி ஜெனரல் ஜியா மற்றும் இராணுவ சிந்தனையாளர் குழுக்களின் ஆதரவுடனும் அவர் தமது அரசியல் பாதையை நடத்தி வருகிறார். ஆனால் அவர் சமரசத்திற்கு இடம் தராத எதிர்தரப்பாளர் முஷாரஃப்பைப் போன்றே பூட்டாவுடன் முரண்படுவதால் நிறைய ஆதாயம் பெற முடியும் என துல்லியமாக கணக்கிடுகிறார்.

முஷாரஃப் ஆட்சியின் இது போன்ற மதிப்பிழந்த நிலையில், ஷெரீப்பின் வரவு அவரின் மொத்த எதிர்ப்பாளர்களுக்கு ஒரு பெரிய விழாவாக அமைந்து விடும். இந்த வாய்ப்பை கருதி அஞ்சும் அரசாங்கம், பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (நவாஸ்) கட்சி ஆதரவாளர்களை சுற்றி வளைத்திருக்கிறது.

முஷாரஃப்-பூட்டோ உடன்படிக்கையின் வெற்றியானது, பாகிஸ்தான் மக்கள் கட்சி மற்றும் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (க்யூ) கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவை சார்ந்திருக்கிறது. அவ்வாறு இல்லையானால், அரசியல் அமைப்பை திருத்தி தங்களுக்கு சாதகமான பிரிவுகளை உருவாக்க, மத்திய பாராளுமன்றத்தில், இரண்டு கட்சிகளுக்குமே மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இருக்காது. பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (க்யூ) கட்சியை விட முஷாரஃப்புடனான கூட்டனி மீதான பூட்டோவின் விருப்பத்திற்கு, பாக்கிஸ்தான் மக்கள் கட்சிக்குள், முஷாரஃப்-பூட்டோ உடன்படிக்கைக்கு எதிரான சில முக்கிய தலைவர்களின் பகிரங்கமான போராட்டம் உட்பட, கணிசமான அளவில் கருத்து வேறுபாடு இருக்கிறது. பாகிஸ்தான் மகள் கட்சி உடனான எந்த வகையான இணக்கமாக இருப்பினும், அவர்களின் அதிகாரம் மற்றும் ஆதரவில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (க்யூ) கட்சியை சேர்ந்தவர்களுக்கும் கணிசமான பங்களிப்பை அளிக்க வேண்டி இருக்கும்.

அதே போன்று, தமது மறுதேர்தலை அல்லது அரசியல் அமைப்பில் மிக மோசமான வன்முறைகளுடன் இராணுவ படையின் தலைமையில் தொடர்ந்து நீடிப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் கண்மூடித்தனமான அங்கீகாரத்தை முஷாரஃப் எதிர்பார்க்க முடியாது. (பூட்டோ, தாமே பொதுமக்களுக்கான ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என முஷாரஃப்பை வற்புறுத்தி இருக்கும் நிலையில், ஜெனரல், தமது இராணுவ இருப்பில் அவருக்கு இருக்கும் கட்டுப்பாட்டை விட்டுக் கொடுக்க விருப்பப்படவில்லை, ஏனெனில் அதுவே அவருக்கு உண்மையாக ஒத்துழைக்கும் அடித்தளமாக இருக்கிறது.) இராணுவத்தின் கட்டளைகளை செயல்படுத்துவதில், நீதிமன்றம் ஒரு நீண்ட மற்றும் படுமோசமான வரலாறை கொண்டிருந்தாலும், தலைமை நீதிபதியை நீக்குவதன் மீது இராணுவத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதில் அது ஒரு புதிய சுதந்திரத்தை வெளிப்படுத்தி இருக்கிறது.

முஷாரஃப்பின் ஆட்சி சமூகரீதியில் ஒதுக்கப்பட்டு இருக்கிறது என்பதில் எவ்வித கேள்வியும் இல்லை. அது அதன் பொருளாதார வெற்றிகளை பறைசாட்டிக் கொண்டாலும், மக்கள்தொகையில் 32 சதவீதத்தினர் வறுமையில் இருப்பதாக ஆசிய அபிவிருத்தி வங்கி தெரிவிக்கிறது. உணவு பொருட்களின் விலை மற்றும் பிற தேவைகள் கடந்த ஐந்து ஆண்டுகளை விட 50 சதவீதம் உயர்ந்திருக்கிறது. மின்தட்டுப்பாடு மற்றும் இருட்டடிப்பு ஆகியவற்றுடன், உருவாக்கப்பட்ட புதிய உள்கட்டமைப்புகளும் மிக மோசமாகவும், மட்டமாகவும் இருக்கும் தொற்றுநோய் நாட்டை பிடித்து கொண்டிருக்கிறது. கடந்த வாரம் நாட்டின் மிக பெரிய நகரமான கராச்சியில், திறக்கப்பட்டு சில மாதங்களே ஆன ஒரு பாலம் உடைந்ததில் ஒன்பது பேர் பலியாகி உள்ளனர்.

நகர மையங்களில் அடிப்படை ஜனநாயக உரிமைகளின் பறிப்பு மற்றும் மத வெறியர்களை கண்டு கொள்ளாமல் இருக்கும் இந்த ஆட்சிக்கு பரவலாக எதிர்ப்பு வலுத்து வருகிறது. அரசாங்க ஒப்பந்தங்கள் மற்றும் தனியார் ஒப்பந்தங்களில் இராணுவம் மற்றும் அதன் அரசியல் கூட்டாளிகள் ஏகபோக உரிமை கொண்டிருப்பதால் பெரும்பாலான தொழில்துறை மேற்தட்டுக்களும் ஆத்திரமடைந்து உள்ளனர்.

வலதுசாரிகளின் சமூக பொருளாதார கொள்கைகளை நடைமுறைப்படுத்தியதால் முன்னர் இரண்டு முறை உடனடியாக செல்வாக்கை இழந்த பூட்டோ, தமது அதிகாரத்தை விட்டு கொடுத்தால், பயங்கரவாதத்தின் மீதான யுத்தத்தை புதுப்பிப்பதுடன், அதை தாராளமான முறையில் கொண்டு செல்லலாம் என முஷாரஃப் மற்றும் அவரின் அமெரிக்க கூட்டாளிகள் நம்புகின்றனர். ஆனால், முஷாரஃப் மற்றும் புஷ்ஷூடன் பூட்டோ அதிகமாக நெருங்கினால், பாக்கிஸ்தானில் இருக்கும் அவரின் செல்வாக்கு குறையும் என பாக்கிஸ்தானிய மக்கள் கட்சியின் குழம்பி இருக்கும் அடிமட்ட செயல்பாடுகள் பூட்டோவை எச்சரிக்க முயற்சித்துள்ளன.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved