World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

German Greens prepare for coalition with CDU

கிறிஸ்தவ ஜனநாயக யூனியனுடன் கூட்டணிக்கு ஜேர்மன் பசுமைக் கட்சியினர் தயாரிப்பு

By Michael Regens
20 November 2008

Back to screen version

கடந்த வார இறுதியில், பசுமைக் கட்சி கிழக்கு ஜேர்மனிய நகரமான எர்ஃவூர்ட்டில் ஒரு மாநாட்டை கூட்டியது. இம்மாநாட்டின் நோக்கம் வரவிருக்கும் "முக்கிய தேர்தல்கள் ஆண்டான'' 2009ல் முக்கியமான மாநில, ஐரோப்பிய மற்றும் கூட்டாட்சி தேர்தல்களுக்கு கட்சியை தயார் செய்வதாக இருந்தது.

கடந்த ஏப்ரல் மாதம் பசுமைக் கட்சிக்கும் பழமைவாத கிறிஸ்தவ ஜனநாயக யூனியனிற்கும் (CDU)க்கும் இடையே முதல் முறையாக மாநில அளவில் கூட்டணி அமைக்கப்பட்டதை அடுத்து, பசுமைக் கட்சி விரைவாக மோசமாகி வரும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் விதத்தில் இன்னும் கூடுதலாக வலதுபக்கம் தாவியுள்ளது. எர்ஃவூர்ட் மாநாட்டில் கட்சி, கூட்டாட்சி மட்டத்திலும் கிறிஸ்தவ ஜனநாயக யூனியனுடன் கூட்டணி வேண்டும் என்ற தன் விருப்பத்தை தெளிவாக்கியுள்ளது.

மாநாட்டின் மிக முக்கியமான நிகழ்வு செம் ஒஸ்டிமிர் (Cem Özdemir) ஐ பசுமைக் கட்சியின் புதிய தலைவராக தேர்ந்தெடுத்தது ஆகும். 2004ல் இருந்து ஒஸ்டிமிர் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் பசுமைக் கட்சி பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி வகித்து வருகிறார். பசுமைக் கட்சியின் கூட்டாட்சி அரசியலில் முன்பு தீவிரமாக இருந்த இவர் வணிகச் செல்வாக்கு திரட்டுபவர்கள் மற்றும் கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் அரசியல்வாதி மோரிட்ஸ் குன்ஸிங்கர் உடன் தொடர்புடைய ஊழல் விவகாரம் அம்பலமானதை அடுத்து ஜூலை 2002ல் அனைத்து பொறுப்புக்களையும் இராஜிநாமா செய்யும் கட்டாயத்திற்கு உட்பட்டார். தன்னை ஒரு "நடைமுறைவாத பசுமைவாதி" என்று அழைத்துக் கொள்ளும் இவர், கட்சியின் வலதுசாரி பிரிவுடன் இணைந்தவர் ஆவார்.

மாநாட்டில் ஒஸ்டிமிர் கட்சித் தலைவராக பிரதிநிதிகளில் 79.2 சதவிகிதத்தினர் வாக்களித்த வகையில் தேர்ந்தெடுக்கப்பட்டார். கிளவ்டியா ரோத் மீண்டும் இணைத் தலைவராக 82.7 சதவிகித வாக்குகளை பெற்ற வகையில் தேர்ந்தெடுக்கப்பட்டார். பேராளர்கள் 92 சதவிகித வித்தியாசத்தில் இரண்டு முக்கிய கட்சி புள்ளிகளான யூர்கன் ரிட்டின் (முன்னாள் கூட்டாட்சி சுற்றுச் சூழல் செயலர்), மற்றும் ரெனாட்ட கூனாஸ்ட் (முன்னாள் நுகர்வோர் பாதுகாப்பு மந்திரி) இருவரும் 2009 கூட்டாட்சி தேர்தல்களில் கட்சியின் முக்கியஸ்தர்களாக பணியாற்ற நியமிக்கப்படுவதற்கு வாக்களித்தனர்.

பசுமைக் கட்சியினை கிறிஸ்தவ ஜனநாயக யூனியனுடன் ஒரு கூட்டணிக்காக தயாரிப்பதில் ஒஸ்டிமிர் உறுதியாக உள்ளார். ஒரு ஜேர்மனிய நாளேட்டிடம் அவர் கூறினார்: "ஒரு சில துறைகளில் பசுமையின் கொள்கைகள் சிவப்புடன் (சமூக ஜனநாயகக் கட்சி-SPD) என்பதைவிட கறுப்புடன் (CDU) கூடுதலாக இயைந்துள்ளது எனக் கூறலாம்." இதற்கு முக்கிய நிபந்தனை அணுசக்தி கொள்கை தொடர்பாக கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் தன் கருத்தை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதுதான்.

மாநாட்டில் ஒஸ்டிமிர் பசுமைவாதிகள் மீண்டும் அரசாங்கத்தில் மீண்டும் நுழைவதன் மூலம்தான் தமது பொறுப்பை செயல்படுத்த முடியும் என்று வலியறுத்தினார். அதே நேரத்தில் பிரதிநிதிகளிடம் தேசிய அளவில் சமூக ஜனநாயகக் கட்சியுடன் கூட்டணியில் கட்சி இருந்த காலம் பற்றி வெட்கப்படுவதற்கு எவ்வித காரணமும் இல்லை என்றும் உத்தரவாதம் அளித்தார். இந்த ஆண்டுகள் (1998-2005) ஆக்கபூர்வமாக இருந்ததாக நிரூபணம் ஆகியுள்ளது என்பதே ஒஸ்டிமிரின் கருத்தாகும்.

உண்மையில் சமூக ஜனநாயகக் கட்சி- பசுமைவாதிகள் கூட்டணி ஆட்சி ஆண்டுகள் முன்னோடியில்லாத வகையில் போருக்குப் பிந்தைய ஜேர்மனிய சமூகநல அரசின் மீதான தாக்குதல்கள் நிறைந்த வகையில் அமைந்திருந்ததுடன், அதையொட்டி மில்லியன் கணக்கான சாதாரண மக்களுக்கு பேரழிவுதரக்கூடிய விளைவுகளையும் ஏற்படுத்தியது.

கட்சியின் புதிய தலைவர் ஒரு முக்கிய ஜேர்மனிய அரசியல் கட்சியில் முதல்தடவையாக வெளிநாட்டு பின்னணியில் இருந்து வருபவர் ஆவார். துருக்கியை பின்னணியாக கொண்டு, சில நேரம் முற்போக்கான சுற்றுசூழல் வார்த்தைஜால சொற்களையும் உதிர்க்கும் வகையில் உள்ள இவருடைய தேர்தல் மற்றும் கட்சி மாநாடு பற்றி பல வர்ணனையாளர்கள் இது பசுமைக்கட்சியின் இடதுபக்கத்திற்கான மாற்றம் எனக் கூறியுள்ளனர். ஆனால் உண்மையில் இது அதற்கு முற்றிலும் எதிரிடையானது ஆகும்.

இது மிகத் தெளிவான முறையில் செய்தி ஊடகத்திற்கு ஒஸ்டிமிர் கொடுத்துள்ள கருத்துக்கள் மூலமும் தெளிவாகியுள்ளது. நவம்பர் 10ம் தேதி அவர் Hamburger Morgenpost பத்திரிகைக்கு கூறினார்: "உள்ளடக்கமும் குரலும் ஒன்றாக இருந்தால் கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் உடன் எங்களுக்கு பிரச்சினைகளுக்கு இடம் இல்லை. கூட்டணி அரசாங்கத்தினுள் விருப்பத்துடன் இணைய நாம் செயல்பட்ட பாடன் வூர்ட்டம்பேர்க் மாநிலத்தில் இதைத்தான் நாங்கள் கண்டோம். பலவித பிரிவுகளில் இருந்தும் வாக்காளர்கள் ஆதரவைப் பெறுவதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம். பழமைவாத மதிப்புகளை கொண்ட வாக்காளர்களுக்கு ஒரு அரசியல் உறைவிடத்தை கொடுக்கவும் நாங்கள் விரும்புகிறோம்; அந்த கருத்தை ஒட்டி நாங்கள் கிறிஸ்தவ ஜனநாயக யூனியனுடன் போட்டியும் போடுகிறோம்.

பசுமைக் கட்சியின் மாநாடு மற்ற பிரச்சினைகளிலும் ஒரு வலதிற்கான மாற்றத்தைப் பிரதிபலித்தது; எல்லாவற்றிற்கும் மேலாக நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டுவரும் இராணுவத் துருப்புக்கள் பிற இடங்களுக்கு அனுப்பப்படுவது பொதுவாகவும் மற்றும் குறிப்பாக ஆப்கானிஸ்தானில் ஜேர்மனிய இராணுவம் சம்பந்தப்பட்டுள்ளது பற்றியும் இம்மாற்றம் உள்ளது. மாநாட்டில் ஏற்கப்பட்டுள்ள தீர்மானம் கூறுகிறது: "சில சூழ்நிலையில் இராணுவத் தலையீடு வன்முறையை கட்டுப்படுத்தவும், சமாதானத்தை உறுதிப்படுத்துவும் தேவைப்படுகிறது."

கொசவோவிலும் ஆப்கானிஸ்தானிலும் சமூக ஜனநாயகக் கட்சியுடன் கூட்டாட்சிக் கூட்டணிக் காலத்தில் இராணுவப் படைகள் நிலைகொள்வதற்கு ஏற்கனவே ஆதரவு கொடுத்துவிட்ட நிலையில், பசுமைக் கட்சி இப்பொழுது வெளியுறவுக் கொள்கையின் சட்டபூர்வமான கருவியாக இராணுவம் அனுப்பப்படுதல் உள்ளது என்பதைத் தெளிவாக்கியுள்ளது.

1998ம் ஆண்டு அப்பொழுது ஹெகார்ட் ஷ்ரோடர் தலைமையில் இருந்த சமூக ஜனநாயகக் கட்சி உடன் கூட்டணி என்பதற்குக் கொடுக்கப்பட்ட விலை கொசவோ போருக்கான தயாரிப்புக்களில் பசுமைவாதிகளின் உடன்பாடாகும். வருங்காலத்தில் கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் உடன் கூட்டணி என்பதற்கு மிச்சம் இருக்கும் சமாதான அலங்காரச் சொற்களையும் கைவிட்டுவிட வேண்டும்; இதைத்தான் எர்ஃவூர்ட்டில் கூடிய பிரதிநிதிகள் செய்தனர்.

கூட்டாட்சிக் குடியரசு நிறுவப்பட்டதில் இருந்து, மில்லியன் கணக்கான மக்கள் வேலையின்மை வறுமை ஆகியவற்றை எதிர்கொள்ள வைக்கும் மிக மோசமான பொருளாதார நெருக்கடியினால் உலகப் பொருளாதாரம் பீடித்திருந்தாலும், இந்தப் பிரச்சினைகள் பற்றி பசுமைக் கட்சி மாநாட்டில் அதிகம் பேசப்படவில்லை. முதலாளித்துவ நெருக்கடிக்கு கட்சியின் விடையிறுப்பு அந்த அமைப்புமுறைக்கு சுற்றுச் சூழல்ரீதியான நட்பான முகத்தை வழங்குவதுதான்.

மாநாட்டில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகளில் ஒன்று மின் உற்பத்தி முறையை 2030ம் ஆண்டிற்குள் புதுப்பிக்கப்படக்கூடிய விசை ஆதாரங்களுக்கு முற்றிலும் மாற்றுதல் என்பதாகும். மோட்டார் வாகனங்கள் மீதான வரிகளும் கரியமிலை வாயு (கார்பன் டையாக்சைட்) வெளியேற்றத்துடன் தொடர்புபடுத்தி தீர்மானிக்கப்படும். "பசுமைவாதிகளின் புதிய உடன்பாடு" என்ற கோஷத்தின்கீழ் கட்சி மாற்றீட்டு வகை விசை மற்றும் ஜேர்மனிய ரயில் முறை கட்டமைப்பிற்கு 15 பில்லியன் யூரோக்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்று திட்டமிட்டுள்ளது. அதே நேரத்தில் கட்சி மிக அப்பட்டமான முறையில் இருக்கும் ஊக வகைகளைத் தடுக்கும் நோக்கத்துடன் நிதியச் சந்தைகளில் ஒரு சில சிறிய கட்டுப்பாடுகளை கூறியுள்ளது.

மோட்டார் வாகன தொழில் மற்றும் பொருளாதாரத்தின் பிற பிரிவுகளில் வரவிருக்கும் சரிவு பற்றி பசுமைவாதிகள் அதிக அக்கறை காட்டவில்லை. மாறாக, யூர்கன் ரிட்டீன் வலியுறுத்தியுள்ளது போல், கட்சியின் முக்கிய நோக்கம் 2009 கூட்டாட்சித் தேர்தலை வருங்காலத்தில் அணுசக்தி நாடாக மாற்றுவது பற்றிய சர்வஜன வாக்கடுக்கும் தன்மையைக் கொண்டிருக்க வேண்டும் என்று உள்ளது.

இந்தக் கொள்கைகள் கட்சி பிரதிபலிக்கும் சமூக அடுக்குகளுடன் முற்றிலும் பொருந்தி இருக்கும். பல ஆய்வுகள் ஒரு பசுமைக் கட்சி உறுப்பினரின் சராசரி வருமானம் மற்ற அரசியல் கட்சி எதையும்விட அதிகமாக உள்ளது என்பதைத்தான் காட்டியுள்ளன. Greens' Heinrich Boll Institute உடைய தலைவரான யூர்கன் வுக்ஸ், கடந்த வாரம் Süddeutsche Zeitung பத்திரிகைக்கு கொடுத்துள்ள பேட்டி ஒன்றில் "புள்ளிவிவரக் கணக்குகளின்படி எங்கள் கட்சிதான் நிறைய சம்பாதிப்பவர்களின் கட்சி... தாராளவாத சுதந்திர கட்சி (FDP) அனைத்து பிரச்சினைகளிலும் ஒன்றும் முக்கிய விரோதி அல்ல. பல பகுதிகளில் பசுமை வாதிகளும் [புதிய] தாராளவாதிகளும் ஒருவருக்கு ஒருவர் மிக நெருக்கமாகத்தான் உள்ளனர்.

கட்சி மாநாட்டுடன், பசுமைவாதிகள் கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் அல்லது தாராளவாத சுதந்திர கட்சியுடன் ஒரு கூட்டணிக்கும் வழிவகுத்துள்ளனர். இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடி இருக்கும் பின்னணியில் அத்தகைய கூட்டணி தவிர்க்க முடியாமல் பெருவணிகத்தின் நலன்களுக்காக வரவுசெலவு திட்ட செலவினக் குறைப்புக்களையும், சிக்கன நடவடிக்கைகளையும் எடுக்கும். இவை முந்தைய சமூக ஜனநாயக கட்சி- பசுமைவாதிகள் கூட்டணியில் இருந்ததை விட மிக அதிகமாக இருக்கும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved