World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : தென் அமெரிக்கா

Latin America: What are the real interests behind the creation of the Union of South American Nations?

லத்தீன் அமெரிக்கா: தென்னமெரிக்க நாடுகள் ஒன்றிய உருவாக்கத்தின் பின்னாலிருக்கும் உண்மையான நலன்கள் என்ன?

By Carlos Prado
28 May 2008

Back to screen version

மே 23, சென்ற வெள்ளிக்கிழமை அன்று, தென்னமெரிக்க நாடுகளின் ஒன்றியம், அல்லது Unasur ஐ உருவாக்குவதற்கான ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திடுவதற்காக 12 தென்னமெரிக்க நாடுகளின் ஜனாதிபதிகளும் பிரதிநிதிகளும் பிரேசிலியாவில் கூடினர்.

Unasur உருவாக்குவதற்கான முன்மொழிவானது முதன்முதலில் 2004 இல் பெரு நகரமான Cuzco இல் நடந்த வருடாந்திர பிராந்திய கூட்டத்தில் வழங்கப்பட்டது. ஆரம்பத்தில் இந்த முன்மொழிவானது Casa (தென் அமெரிக்க தேசங்களின் சமூகம் என்பதன் ஸ்பானிய சுருக்கம்) என்று அழைக்கப்பட்டது, பின் சென்ற வருடம் வெனிசூலாவில் நடந்த முதலாவது தென் அமெரிக்க மாநாட்டில் இதன் பெயர் மாற்றியமைக்கப்பட்டது.

Unasur தற்காலிக மற்றும் சுழற்சி முறை தலைவர் பதவியுடன் செயல்பட இருக்கிறது. தற்போது இந்த தலைமைப் பதவி பொலிவியாவிடம் உள்ளது. அடுத்து இது கொலம்பியாவிற்கு செல்வதாக இருந்தது, அந்நாடு மறுத்து விட்டதால், இது சிலிக்கு செல்ல இருக்கிறது. சிலியின் ஜனாதிபதியான மிசெல் பெசெலட் தனது அரசாங்கம் இந்த பொறுப்பை ஒப்பந்தம் கையெழுத்திட்ட அனைத்து 12 நாடுகளின் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் ஏற்றுக் கொள்ளும் என்று அறிவித்தார்.

Unasur சில ஆலோசனை அமைப்புகளின் அடிப்படையில் நடத்தப்பட இருக்கிறது, வருடாந்திர சந்திப்பு நடத்தும் வகையிலான அரசாங்கங்களின் தலைவர்களின் ஒரு கவுன்சில், வெளியுறவு அமைச்சர்களின் ஒரு கவுன்சில், ஆறு மாதங்களுக்கு ஒருமுறை கூடவிருக்கும் பிரதிநிதிகளின் கவுன்சில் ஆகியவை இதில் அடக்கம். இதனையும் தாண்டி, Unasur இன் ஐக்கிய நாடாளுமன்றம் ஒன்றை உருவாக்குவதற்கான திட்டம் ஒன்றும் இருக்கிறது. இருப்பினும், இதுவரை அத்தகையதொரு நாடாளுமன்றம் உடனடியான எதிர்காலத்தில் நடைமுறைக்கு வருவதற்கான உண்மையான சாத்தியக்கூறுகள் எதுவுமில்லை. Unasur ஒரு நிரந்தர தலைமை செயலகத்தையும் கொண்டிருக்கும், இது ஈக்வடாரின் தலைநகரான கிடோவில் இருந்து இயங்கும்.

Unasur இன் குறிக்கோள்கள் யாவை?

ஒப்பந்தத்தின் முதன்மை நோக்கங்களில் ஒன்று தென் அமெரிக்க அரசாங்கங்களிடையே அரசியல், பொருளாதார மற்றும் சமூக ஒருங்கிணைப்பினை வளர்ப்பதாகும். அறிவிக்கப்பட்டுள்ள இலக்கானது இணைந்த நிதி பொறியமைப்புகளை கைக்கொள்வது, மற்றும் முன்னெப்போதையும் விட மேம்பட்ட பிராந்திய நிதி, எரிசக்தி மற்றும் தொலைத்தொடர்பு ஒருங்கிணைப்பு, அத்துடன் அறிவியல் மற்றும் கல்வி போன்ற பிரிவுகளில் இணைந்த திட்டங்களை கைக்கொள்வது ஆகியவற்றுக்கு Unasur ஐ பயன்படுத்துவது என்பதே. Itamaraty (பிரேசிலின் வெளியுறவு அமைச்சகம்) கூற்றுப்படி, Unasur இன் குறிக்கோள்கள் "உறுப்பு நாடுகளிடையே அரசியல் பேச்சுவார்த்தையை வலிமைப்படுத்துவதும் பிராந்திய ஒருமைப்பாட்டினை ஆழமாக்குதலும்" ஆகும்.

இருப்பினும், இந்த பிராந்திய ஒன்றியம் ஆற்ற வேண்டிய உண்மையான பணி குறித்த விஷயத்தில் Unasur இன் உறுப்பு நாடுகள் வெவ்வேறு கருத்துகளையும் நோக்கங்களையும் கொண்டிருக்கின்றன. சிலியின் வெளியுறவு அமைச்சர் அலெஜான்ட்ரோ ஃபாக்ஸ்லி தனது நாடு மூன்று முதன்மையான நலன்களை கொண்டிருப்பதாக சுட்டிக் காட்டினார்: எரிசக்தி, உள்கட்டமைப்பு மற்றும் சமூக உள்ளிணைவுக்கான ஒரு பொதுவான கொள்கை. பொலிவியாவின் வெளியுறவு அமைச்சர் டேவிட் சோக்யுஹுவான்கா கூறும்போது, Unasur தன்னை வெறும் வர்த்தக எல்லைக்குள் சுருக்கிக் கொள்ளாமல், "மக்களின் ஒன்றியமாக" உருவாவதற்கு உழைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

வெனிசூலா ஜனாதிபதி ஹியூகோ சாவேஸ் இந்த சந்திப்பின் போது, Unasur இக்கண்டத்திற்கான மிக முக்கியமான ஒப்பந்தம் என்றும் இது தெற்கு கோளத்தின் அரசாங்கங்களை வலிமைப்படுத்தும் என்றும் தெரிவித்தார். "நாங்கள் அனைவரும் இடது சாரி அரசாங்கங்கள், எங்களிடம் பல பொதுவான விஷயங்கள் உள்ளன, நாங்கள் தென் அமெரிக்க ஒன்றியத்தை செயற்திறம் உள்ளதாக்குவதற்கு உறுதி கொண்டிருக்கிறோம்", என்று அவர் அறிவித்தார்.

பிரேசில் ஜனாதிபதி லுயிஸ் இனசியோ லுலா ட சில்வா கூறும்போது, "ஒன்றிணைந்த தென் அமெரிக்கா உலகின் அதிகார பலகையில் காய்களை மாற்றி அமைக்கும், தங்களது சொந்த நலன்களுக்காக மட்டுமல்ல, ஒவ்வொருவரின் நலனுக்காகவும்". வளர்ந்த நாடுகளுக்கு நிகராக Unasur இந்த பிராந்திய நாடுகளை வலுப்படுத்தும் என்று லுலா உறுதிபடத் தெரிவித்தார். இந்த கூட்டத்தின் போது, "எங்களது விடுதலையாளர்களை ஒருங்கிணைக்கும் கனவை நனவாக்குவதான மாற்றத்தில் நாங்கள் நுழைந்திருக்கிறோம். தென்னமெரிக்க ஒருங்கிணைப்பு என்பது லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியனை வலிமைப்படுத்த அத்தியாவசியமானது என்பதை இந்த ஒப்பந்தம் எங்களுக்கு நினைவூட்டுவதாய் இருக்கிறது. இது பன்மைவாதத்தின் அறிகுறியின் கீழ் பிறந்ததாகும்".

அனைவரின் நலனுக்காகவும் ஒவ்வொரு நாட்டின் வளர்ச்சித் திட்டங்களின் ஒரு பகுதியாக Unasur கட்டப்பட வேண்டும் என்பது லுலாவின் கருத்தாகும். "நமது தென் அமெரிக்கா இனியும் வெறும் புவியியல் கருத்தாக்கமாக மட்டும் இருக்காது. இன்று தொடங்குவது தனது சொந்த செயல்பாடுகளுடனான ஒரு அரசியல், பொருளாதார மற்றும் சமுதாய யதார்த்தம்" என்று அவர் வலியுறுத்தினார்.

வேற்றுமைகளுக்கு இடையே ஒற்றுமையை தேடுவது

கடந்த பல வருடங்களில் தென்னமெரிக்க நாடுகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு சில விஷயங்களில் ஆழமுற்றிருக்கிறது என்கிறபோதிலும், எந்த திறம்பட்ட ஒருங்கிணைப்பிலும் பல சிக்கல்கள் நிலவவே செய்கின்றன. முதன்மை சிக்கல்களில் ஒன்று பொருளாதார ஒற்றுமையின்மை. உதாரணமாக, பிரேசில் ஒட்டுமொத்தமாக Unasur இன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏறக்குறைய பாதியைக் கொண்டிருக்கிறது. CEPAL (லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியனுக்கான பொருளாதார கமிஷன்) இல் இருந்துவரும் தரவுப்படி, 2006 இல் தென்னமெரிக்காவின் 12 நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 2.5 டிரில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியது. பிரேசில் மட்டும் சாதனையளவாக 2006 இல் 1.06 டிரில்லியன் அமெரிக்க டாலர்களையும் 2007 இல் 1.3 டிரில்லியன் அமெரிக்க டாலர்களையும் சாதித்தது.

இந்த பொருளாதார பேதத்தைத் தாண்டி, லத்தீன் அமெரிக்காவின் அரசாங்கங்கள் மாறுபட்ட அரசியல் பார்வைகள், மாறுபட்ட தேசிய நலன்கள் மற்றும் மாறுபட்ட சர்வதேச கூட்டணிகளை கொண்டிருக்கின்றன. இத்தகைய அரசியல் பன்மைவாதம் பிராந்தியத்தின் எந்த ஒரு முக்கியமான ஒன்றிணைப்பையும் தூரத்து லட்சியமாகத் தான் ஆக்குகிறது.

தென் அமெரிக்காவின் வெவ்வேறு நாடுகளுக்கு இடையே நிலவும் தேசிய அளவிலான மோதல்கள் பரவலாகவே தொடர்கின்றன. சிலி மற்றும் பெருவுக்கு இடையே 19 ஆம் நூற்றாண்டின் பசிபிக் யுத்தம் தொடங்கி நடந்து வரும் எல்லை பிரச்சினை தொடர்ந்து இருக்கிறது. இந்த பிரச்சினை இன்னமும் ஹேக் சர்வதேச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இதே யுத்தத்தில், தான் இழந்த கடல்வழிக்கான பாதைக்கு சிலியின் பிராந்தியத்தில் பொலிவியாவும் உரிமை கோருகிறது.

வெனிசூலா, ஈக்வடார் மற்றும் கொலம்பியா ஆகிய நாடுகள் சம்பந்தப்பட்ட மிகச் சமீபத்திய பிராந்திய மோதலானது, சென்ற மார்ச்சில் ஈக்வடாரின் உள்ளே FARC (கொலம்பியாவின் புரட்சிகர இராணுவ படைகள்) கெரில்லா இயக்க முகாம் மீது எல்லை தாண்டிய கொலம்பிய இராணுவ தாக்குதலுக்கு தூண்டியது. இந்த மோதல் இன்னமும் தீர்க்கப்படாமல் உள்ளதோடு எந்த உண்மையான ஒன்றிணைப்புக்கும் இன்னுமொரு தடையாக இருந்து வருகிறது.

ஒரு பாதுகாப்பு கவுன்சிலின் உருவாக்கம்

இந்த மோதல்களின் முகத்தில், Unasur கொள்கைத்திட்டத்தில் இருந்த ஒரு முக்கிய கேள்வியானது ஒரு பாதுகாப்பு கவுன்சிலை உருவாக்குவது பற்றியது. இந்த கவுன்சிலை உருவாக்குவதற்கான முன்மொழிவு பிரேசிலின் லுலாவினால் வழங்கப்பட்டது. "பாதுகாப்புத் துறையில் நமது கண்டத்தை பலப்படுத்துவதற்கான தருணம் இது. மரியாதை, இறையாண்மை போன்ற பொதுவான மதிப்புகள் மற்றும் கொள்கைகளின் அடிப்படையில் நிறுவப்பட்ட ஒரு பாதுகாப்பு இலக்கினை நாம் இந்த பிராந்தியத்தில் திறம்பட உருவாக்க வேண்டும். இந்த காரணத்திற்காக, தென்னமெரிக்காவின் அனைத்து நாடுகளுடன் தென்னமெரிக்க பாதுகாப்பு கவுன்சில் விவகாரம் தொடர்பாக கலந்தாலோசனைகளை மேற்கொள்ள எனது பாதுகாப்பு அமைச்சரை வலியுறுத்தி இருக்கிறேன். இந்த முன்முயற்சி குறித்து நாம் இங்கு விவாதிக்கலாம் என்று கருதுகிறேன்" என்பது அவர் கருத்து. வெனிசூலா, கொலம்பியா மற்றும் ஈக்வடார் சம்பந்தப்பட்ட நெருக்கடியினை ஒட்டி இந்த பாதுகாப்பு கவுன்சில் உருவாக்கத்திற்கான முன்மொழிவு வேகம் பெற்றுள்ளது.

பல்வேறு நாடுகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு, தகவல்தொடர்பு மற்றும் கூட்டிணைவு இவற்றை தனது நோக்கங்களாக கொண்டதான இந்த கவுன்சிலுக்கான முன்மொழிவு ஏற்கனவே வரையறுக்கப்பட்ட ஒன்று என்று பிரேசிலின் பாதுகாப்பு அமைச்சர் நெல்சன் ஜோபிம் தெரிவித்தார். எப்படியாயினும், இந்த கவுன்சில் பிராந்திய இராணுவ ஒருங்கிணைப்புக்கான ஒரு கட்டமைப்பினை உருவாக்குவதாக தோன்றவில்லை.

கொலம்பிய ஜனாதிபதி அல்வரோ யூரிப் லுலாவின் முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார், அமைப்பு ஏற்கனவே OAS (அமெரிக்க அரசாங்கங்களின் அமைப்பு) கொண்டிருக்கிறது என்று வாதிட்ட அவர், சட்டவிரோதமாக ஆயுதம் கொண்டுள்ள குழுக்களான FARC போன்றவற்றை "பயங்கரவாதிகளாக" வகைப்படுத்துவதில் அண்டை நாடுகளுக்கிடையில் உள்ள பேதத்தை - அவற்றில் பிரேசிலும் வெனிசூலாவும் உண்டு- சுட்டிக் காட்டினார். இந்த முட்டுக் கட்டையால் எதிர்கொள்ளப்பட்டு, ஒரு பாதுகாப்பு கவுன்சில் உருவாக்கம் குறித்த கேள்வியானது இப்போதிலிருந்து அடுத்த ஆறு மாத காலம் வரை ஒத்தி வைக்கப்பட்டது.

எப்படியாயினும், இத்தகையதொரு திட்டமானது, லத்தீன் அமெரிக்காவின் இறையாண்மைக்கு உத்தரவாதமளிக்க உதவுவதில் இருந்து விலகி, லாபகரமான ஆயுதங்கள் துறையில் முதலீடுகளை குவிப்பதற்கான சாக்கையும், ஐக்கிய நாடுகளின் "நீல ஹெல்மெட்டுகள்" என்றழைக்கப்படுவதை போன்ற - இது பிரேசிலிய தலைமையின் கீழ் ஹைதியில் பட்டினியால் வாடும் மக்களை ஒடுக்கி வருகிறது - சர்வதேச தலையீடுகளுக்கான மற்றுமொரு படை உருவாக்கத்துக்கும் மட்டும் உதவும்.

தொழிலாள வர்க்கத்திற்குரிய மாற்றினை Unasur பிரதிநிதித்துவப்படுத்துகிறதா?

இந்த Unasur திட்டமானது, உண்மையில், தங்களுடைய சொந்த நாடுகளில் தொழிலாளர்களை சுரண்டிக் கொண்டே உலகச் சந்தையின் ஒரு பங்கை கைப்பற்றுவதற்கு தென்னமெரிக்காவின் முதலாளித்துவ அரசாங்கங்கள் (மற்றும் அவர்களைக் கட்டுப்படுத்தும் மூலதனத்தின் பிரிவுகள்) செய்யும் மற்றுமொரு முயற்சி தான். தேசியவாத பல்லவிகள் இருந்தாலும், இந்த திட்டமானது உண்மையில் பெரும் சர்வதேச மூலதனத்திற்கு எந்த உண்மையான அச்சுறுத்தலும் இல்லை. கொலம்பிய அரசு மட்டும் அல்ல, பிரேசில் அரசு மற்றும் பிற நாடுகளினுடையதும், பன்னாட்டு நிறுவனங்களின் நலன்கள் மற்றும் பெரும் சர்வதேச முதலீட்டின் நலன்களுடன் வெளிப்படையான உடன்பாட்டில் செயல்படுகின்றன.

இத்தகையதொரு பொருளாதார கூட்டமைப்பு உருவாவதென்பது, இறுதி ஆய்வில், சம்பந்தப்பட்ட நாடுகளின் தேசியவாத பொருளாதார நலன்களின் பாதுகாப்பைக் கூட உள்ளடக்கி இருப்பதில்லை. இந்த ஒப்பந்தத்தின் முதன்மையான நோக்கங்களில் ஒன்று ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவால் விதிக்கப்படும் பாதுகாப்புவாத தடைகளை வெல்வதற்கு அவசியமான வலிமையை திரட்டுவதும், அதன் மூலம் ஏற்றுமதிகளுக்கான பாதைகளை திறந்து வளர விட்டு பெரும் நுகர்பொருள் உற்பத்தியாளர்களின் ஆதாயங்களை அதிகரிக்கச் செய்வதும் தான் என்பது உண்மை என்றாலும், பொதுவாக இந்த பெரும் உற்பத்தியாளர்களே தாங்கள் ஒரு பெரும் சர்வதேச மூலதனமாக ஒன்றிணைந்து கொள்கிறார்கள்.

உதாரணமாக, 2006 இல் சோயா உற்பத்தியில், பிரேசில் மாநிலமான மடோ கிராஸோவில் செயல்பட்டு வந்த நான்கு பெரிய நிறுவனங்கள் பன்னாட்டு நிறுவனங்களாகவோ அல்லது பெரிய சர்வதேச மூலதனத்துடன் நெருங்கிய இணைப்புகளை பராமரிப்பவர்களாக இருந்தன. அமாகி, பங்கே, கார்கில் மற்றும் ADM மடோ கிராஸோவில் இருந்து ஏற்றுமதியான பயிரில் 80 சதவீத பங்களிப்பை கொண்டிருந்தன. பிரேசில் மூலம் கொண்ட ஒரே நிறுவனமாக இருந்த அமாகியும் இன்று அமெரிக்க அடிப்படை பன்னாட்டு நிறுவனமான மான்ஸான்டோவுடன் நெருக்கமான தொடர்புகளை கொண்டிருக்கிறது.

அப்படியென்றால், தென்னமெரிக்காவின் தொழிலாளர்களுக்கு இந்த Unasur திட்டத்தின் முக்கியத்துவம் என்ன? அதிகரித்துக் கொண்டே செல்லும் நடப்பு உலக பொருளாதார நெருக்கடி நிலையில், திருகுச்சுருள் பணவீக்கம் மற்றும் உணவுப்பொருள் நெருக்கடியின் அச்சுறுத்தல் அதிகரித்துக் கொண்டே இருக்கும் சூழலில், Unasur உழைக்கும் வர்க்கத்துக்கான திட்டம் என்ன கொண்டிருக்கிறது? தொழிலாளர்களை பொறுத்த வரை, இது வெற்று வாக்குறுதிகளையும் இட்டுக் கட்டப்பட்ட வாய்ஜாலங்களால் நிரம்பிய உரைகளையும் தவிர வேறெதனையும் தரவில்லை. அவர்கள் "மக்களின் ஒன்றியம்", "சமூக உள்ளிணைவு", "பொருளாதார வளர்ச்சி" போன்றவை குறித்தெல்லாம் பேசுகிறார்கள், ஆனால் உண்மையான நோக்கமெல்லாம் பிராந்திய மக்களின் பெரும் எண்ணிக்கையினரை பலியிட்டு சர்வதேச தொடர்புகளுள்ள வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களுக்கு அதிகரித்த ஆதாயங்களை அளிப்பதாகும்.

Unasur உருவாக்கத்தின் மூலம் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் பிராந்திய ஒருங்கிணைப்புக்கான முன்மொழிவு தென்னமெரிக்க தொழிலாளர்களுக்கு எந்த மாற்று அல்லது எந்த நம்பிக்கையையும் வழங்கவில்லை. இறுதி ஆய்வில், இந்த திட்டமானது கண்டத்தின் ஆளும் மேல்தட்டினரின் ஆழமான நெருக்கடி மற்றும் தொழிலாள வர்க்கத்திற்குள்ளேயேயான புரட்சிகர தலைமையின் நெருக்கடியின் அறிகுறி ஆகும். Unasur அல்லது சாவேஸ் அல்லது மோரேல்ஸ் அல்லது லுலா யாரும் லத்தீன் அமெரிக்க உழைக்கும் மக்களின் வாழ்க்கை சூழலை மேம்படுத்துவதற்கான மாற்றினை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை.

தனித்துவமான பிராந்திய ஒற்றுமையின் இலக்கு, தேசிய அரசாங்க எல்லைகளை பிரிப்பது மற்றும் கண்டமெங்கிலுமான பொருளாதார மற்றும் சமூக வாழ்க்கையின் ஒற்றுமையான வளர்ச்சி ஆகியவை முதலாளித்துவ வர்க்க ஆதிக்கத்தின் கீழ் நனவாக முடியாது. இது தொழிலாள வர்க்கம் அதிகாரத்தை கைப்பற்றுவது மூலமும் லத்தீன் அமெரிக்க சோசலிச ஐக்கிய அரசுகளின் ஸ்தாபிதத்தின் மூலமும் சாதிக்கப்பட முடியும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved