World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

German rail union in crisis

ஜேர்மன் இரயில்வே தொழிற்சங்கம் நெருக்கடியில்

By Sybille Fuchs
6 June 2008

Back to screen version

மே 30ஆம் திகதியன்று, ஜேர்மன் பாராளுமன்றம் (Bundestag) நாட்டின் இரயில்வேதுறையில் ஒரு பகுதியை தனியார்மயமாக்குவதற்கு ஆதரவாக வாக்களித்தது. அரசாங்க திட்டத்தின்படி, தற்போது அரசாங்கத்திடம் இருக்கும் ஜேர்மன் இரயில்வேயின் (ஞிமீutsநீலீமீ ஙிணீலீஸீஞிஙி) 24.9 சதவீத பங்குகள் நவம்பர் ஆரம்பத்தில் பங்குச்சந்தையில் பட்டியலிடப்படும்.

ஜேர்மன் இரயில்வேயின் பயணிகள் மற்றும் நீண்டதூர போக்குவரத்து, பிராந்திய மற்றும் புறநகர் இரயில் (பேருந்து வழித்தடங்கள் மற்றும் விரைவு இரயில் போக்குவரத்து உட்பட) மற்றும் பிற இரயில் சேவைகள் முதல்கட்டமாக தனியார்மயமாக்கப்பட இருப்பவையாகும். இரயில்வே துறையின் இந்த அனைத்து பிரிவுகளும் ஜேர்மன் இரயில்வேயின் சேய் நிறுவனமான Mobility Logistics (DB-ML) உடன் இணைக்கப்பட்டிருக்கிறது. இந்நிறுவனம் தற்போதிருக்கும் மொத்த இரயில்வே ஊழியர்களில் நான்கில் மூன்று பங்கு தொழிலாளர்களை கொண்டிருக்கிறது.

பாராளுமன்றத்தின் முடிவை வரவேற்றிருக்கும் ஜேர்மன் இரயில்வேயின் தலைவர் ஹார்ட்முட் மெஹ்டோர்ன், நிறுவனத்தின் எதிர்காலம் குறித்து நம்பிக்கை தெரிவித்ததுடன், அதை சர்வதேச பங்கு வகிக்கும் நிறுவனமாக மாற்ற வேண்டும் என்ற தமது விருப்பத்தையும் வெளியிட்டார்.

ஆரம்ப தனியார்மயமாக்கம் என்பது வெறும் முதல்படி மட்டுமே என்று வல்லுனர்கள் கருதுகிறார்கள். பகுதி தனியார்மயமாக்கலுக்கும் மற்றும் பிற சேவைகளை முழுமையாக விற்கவும் வசதியாக, Mobility Logistics (DB-ML) அதன் சொந்த சேய் நிறுவனத்தை உருவாக்க அனுமதிக்கும் ஒரு வரைவு உடன்படிக்கை தற்போது சுற்றிற்று விடப்பட்டுள்ளது. தொலைதூர போக்குவரத்து, பிராந்திய அல்லது நகர போக்குவரத்து துறையில் சேய் நிறுவனங்களின் 49 சதவீத பங்குகளை முதலீட்டாளர்கள் வாங்குவதை அனுமதிக்கும் விதிகளை அந்த வரைவு கொண்டிருக்கிறது. மேலும், இலாபமில்லாத இரயில் வழித்தடங்களை மூடுவதற்கும் அந்த வரைவு கணிசமான அளவில் வழி வகுக்கிறது.

பாராளுமன்றத்தின் வாக்கெடுப்பிற்கு முன்னதாக Bild செய்தித்தாளின் பேட்டி ஒன்றில், மெஹ்டோனின் புதிய தொழிலாளர்துறை இயக்குனர் நோர்பேர்ட் ஹன்சென் கூறுகையில், இரயில்வே துறையின் 49.9 சதவீத பங்குகளைத் தனியார்மயமாக்குவதில் எவ்வித பிரச்சனையும் இருப்பதாக தாம் கருதவில்லை என அவர் தெரிவித்தார். ஜேர்மன் இரயில்வே செயற்குழுவிற்கு மாறுவதற்கு சில வாரங்களுக்கு முன்னர் வரை, இரயில்வே தொழிலாளர் சங்கமான Transnet இல் ஹன்சென் தலைவராக இருந்தார். Bildக்கு அவர் அளித்த பேட்டியில், தனது முன்னுரிமைகள் தொழில்வழங்குனர்களின் இலாப நலன்களுக்கு 100 சதவீதம் சாதகமாக இருக்கும் என்பதை ஹன்சென் சந்தேகத்திற்கிடமின்றி தெளிவுபடுத்தி இருந்தார்.

"இரயில்வேதுறையில் நாம் மேலும் தேவையற்றவற்றை அகற்ற வேண்டியுள்ளது, சில பிரிவுகளில் ஊழியர்களை குறைக்காமல் அது சாத்தியப்படாது." என அவர் அறிவித்தார். ஏற்கனவே Transnetஇன் தலைவராய் இருந்த போதிலிருந்தே பணிக்குறைப்பைக் கையாள்வதில் அவருக்கு அனுபவம் உள்ளது என்பதுடன் கட்டாய வேலை நீக்கங்கள் இல்லாமல் குறைப்பை உறுதிப்படுத்துவதே அவரின் நோக்கமாகும். அதாவது இரயில்வே தொழிலாளர்கள், முதலும் முற்றிலுமாக, தங்களின் பணிகளில் நிறைய உழைப்புத்திறனையும், வளைந்து கொடுக்கும் தன்மையையும் காட்ட வேண்டும்.

அதுபோன்ற வளைந்து கொடுக்கும்தன்மை எவ்வாறு சாத்தியம் என்பதை எடுத்துக்காட்ட ஒரு தனியார் பிராந்திய இரயில் நிறுவனத்தையும் சான்றாக எடுத்துக்காட்டினார். அதுபோன்ற நிறுவனங்களில் (அவையெல்லாம் குறைந்த கூலி அளிக்கின்றன) சாரதிகள் இரயில்களை மட்டும் ஓட்டுவதில்லை; "அவர்கள் சில நேரங்களில் பயணிகள் பெட்டியைச் சுத்தம் செய்வதிலும் உதவுகிறார்கள் அல்லது சிறு இரயில் நிலையங்களில் பொதிகளை கையாள்வதிலும் உதவியாய் இருக்கிறார்கள்." என அவர் தெரிவித்தார்.

ஹன்செனின் இதுபோன்ற உச்சரிப்புகள் Transnetஇன் தலைவராக வெற்றி பெற்றிருக்கும் லோதர் கிரெளவுஸ் மட்டும் தர்மசங்கடத்தில் ஆழ்த்தவில்லை, அதற்கும் மேலாக ஜேர்மன் இரயில்வேயின் தலைவராக இருக்கும் மெஹ்டோனையும் சென்றடைந்திருக்கிறது. தொழிலாளர்களைக் குறைக்கும் எண்ணம் நிறுவனத்திற்கு கிடையாது என மெஹ்டோன் உடனடியாக பகிரங்கமாக உறுதியளித்த போது, ஹன்செனின் கருத்து குறித்து, அவர் "மிகவும் கசப்படைந்திருப்பதாக" கிரெளவுஸ் அறிவித்தார். "பகுதி தனியார்மயமாக்கம் செய்யப்பட்டாலும், நிச்சயமாக, 2023க்கு முன்னதாக கட்டாய வேலை நீக்கங்கள் இருக்காது." என ஜேர்மன் அரசாங்கத்தின் செய்தி தொடர்பாளர் மெஹ்டோனின் கருத்தை உடனடியாக உறுதிப்படுத்தினார்.

எவ்வாறிருப்பினும், 1994ன் இரயில்வே சீர்திருத்தத்திற்கு பின்னர் இரயில்வே நிர்வாகம் ஆயிரக்கணக்கான பணிகளை நீக்கியிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். பங்குச்சந்தை தனியார்மயமாக்கலுக்கான அதன் ஆயத்தமானபோது, ஜேர்மன் தொழிலாளர்களின் எண்ணிக்கை பாதியாக குறைக்கப்பட்டு தற்போதைய 185,000 எண்ணிக்கைக்கு கொண்டு வரப்பட்டது. இந்த அனைத்து பணிவெட்டுக்களும் Transnet மற்றும் பிற இரயில்வே சங்கங்களின் நெருங்கிய உறவுடனும், நிர்வாகம் கட்டாய வேலை நீக்கங்கள் இல்லாமல்தான் செய்யப்பட்டன. வழமையான பதவி விலகல், ஓய்வூதிய திட்டங்கள் மற்றும் மாற்று திட்டங்களின் ஈடுபடுத்தல் ஆகியவையே விரும்பிய பணிவெட்டுக்களைச் செய்ய போதுமானதாக இருந்தன.

ஜேர்மன் இரயில்வேயை தனியார்மயமாக்கும் உத்தியோகப்பூர்வ முடிவுக்கு முன்னதாக, தனியார் நிறுவனங்களுடன் போட்டியிடும் வகையில் 30 புதிய சேய் நிறுவனங்களை உருவாக்க நிர்வாகம் அதன் விருப்பத்தை ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த சேய் நிறுவனங்களில் நியமிக்கப்படும் தொழிலாளர்களும் தாய் நிறுவனத்தில் உழைக்கும் தொழிலாளர்கள் பெறும் அதே கூலியைத் தான் பெறவிருந்தார்கள். எவ்வாறிருப்பினும், அவர்கள் அதிக நேரம் உழைக்க வேண்டியிருக்கும் என்பதுடன் சம்பள பிடிப்புகளுடன் குறைந்த விடுப்புகளைப் பெறுவார்கள் என்று கருதப்பட்டது. போட்டிகளைச் சமாளிப்பதில் தொழிலாளர் செலவுகள் ஒரு முக்கிய காரணியாகும் என அறிவித்ததன் மூலம் சேய் நிறுவனங்களை உருவாக்கும் திட்டங்களை ஜேர்மன் இரயில்வேயின் முக்கிய பங்குகளை கொண்ட நிறுவனமான DB Regio பாதுகாப்பளித்தது.

Transnet இற்குள் ஏற்பட்ட பீதி

ஹென்சென், Transnet இல் இருந்து பகுதியாக தனியார்மயமாக்கப்பட்ட ஜேர்மன் இரயில்வேயின் செயற்குழுவிற்கு மாறிய சுமார் ஒரு மாதத்திற்குப் பின்னர், சங்க தலையிடத்திற்குள் பீதியான சூழல் உருவானது. சங்கத்தின் முன்னாள் தலைவரால் கடைபிடிக்கப்பட்ட கடுமையான மற்றும் எரிச்சலூட்டும் நிலைப்பாடுகளால் சாதாரண உறுப்பினர்கள் ஆத்திரமடைந்தனர். தொழிற்சங்க அதிகாரத்துவம் ஒரு சரியான எண்ணிக்கையை வெளியிட மறுத்ததாலும், பலர் சங்கத்திலிருந்து வெளியேறுவதற்கான தங்களின் விருப்பத்தை வெளியிட்டனர்.

கீழ்மட்ட மற்றும் மத்திய தர அதிகாரத்துவத்திடம் இது எச்சரிக்கையை எழுப்பியுள்ளதால், அவர்கள் தொழிற்சங்கத்தின் மதிப்பிழந்த நிலைக்கு புத்துயிரூட்ட முனைகின்றனர். முழு செயற்குழுவின் இராஜினாமாவை வலியுறுத்தி ஒரு சிறப்பு சங்க பேரவை கூட்ட வேண்டும் என்றும், இரயில்வே தனியார்மயமாக்கல் திட்டத்தை ஹன்சென் வலியுறுத்துவதற்கான பின்னனியைத் தெளிவுபடுத்த வேண்டுமென்றும் கோரிய பிராந்திய குழுக்கள் மற்றும் சங்க பிரதிநிதிகளின் கோரிக்கைகள் மற்றும் தீர்மானங்களால் "rank and file rail" என்ற தொழிற்சங்க குழுவின் இணையத்தளம் நிறைந்துள்ளது.

வடகிழக்கு மாவட்டத்தின் சங்க பிரதிநிதிகள் தொழிற்சங்கம் ஜனநாயக முறைப்படி புதுப்பிக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறார்கள். அவர்கள் தங்களின் கடிதத்தில், "கூட்டு நிர்வாக கொள்கை தோல்வியடைந்துவிட்டது." என வலியுறுத்துகிறார்கள். "கடந்த நடவடிக்கைகளை அனுமதித்த தற்போதுள்ள செயற்குழு பதவி விலக வேண்டும். நோபெர்ட் ஹன்சென் (தொழிற்சங்க தலைவர் பதவியிலிருந்து ஜேர்மன் இரயில்வே தொழிலாளர்துறை இயக்குனர் பதவிக்கு) தாவி இருப்பதற்கான பின்புலம் முழுமையாக தெளிவுபடுத்தப்பட வேண்டும்." பல்வேறு பிற பிராந்திய சங்க அமைப்புகளும் இதே போன்ற போராட்டங்களை நடத்தியிருக்கின்றன.

தனியார்மயமாக்கலில் Transnet செயற்குழுவின் பங்களிப்பு குறித்து அதுவும் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. கடந்த எட்டு ஆண்டுகளாக தனியார்மயமாக்கலை எதிர்த்து வந்த "rank and file rail" இன் செய்தி தொடர்பாளர் ஹன்ஸ் ஹெயர்டு ஓபிங்கர் கூறியதாவது: "ஹன்சென்னைச் சுற்றியுள்ள அதிகாரிகள் தனியார்மயமாக்கல் குறித்த எவ்வித வெளிப்படையான விவாதத்தையும் தடுத்துவிட்டனர்." ஹன்சென் தமது சொந்த தனிப்பட்ட இலக்குகளுக்காக பாராளுமன்ற கட்சிகளை ஏமாற்ற முடியும் என அவர் தெரிவித்தார்.

எவ்வாறிருப்பினும், தங்களை ஏமாற்ற அனுமதிக்கும் சங்க அதிகாரிகளும் இருக்கிறார்கள். பல ஆண்டுகளாக ஹன்சென்னுடன் நெருக்கமாக பணியாற்றி இருப்பதன் அடிப்படையில், நிர்வாகத்திற்கு தாவி இருக்கும் அவரின் செயல்பாடு பின்னால் நின்ற அதிகாரத்துவத்திற்கு ஒரு பெரிய தர்மசங்கடத்தை ஏற்படுத்தி இருக்கிறது. Transnetஇன் புதிய தலைவர் கிரெளஸ் விரைவாக ஒரு தீவிர நிலைப்பாட்டை எடுக்க விரும்பி இரயில்வேயில் மலிவு கூலி தொழிலாளர் திட்டத்திற்கும் அவர் எதிர்ப்பு தெரிவித்தார். DB Regio ஆல் முன்வைக்கப்பட்ட பயணியர் போக்குவரத்தைத் தாராளமயமாக்கும் திட்டங்களையும் அவர் நிராகரித்தார். Transnetஇன் செயற்குழு உறுப்பினர் கார்ல்-ஹென்ஸ் கார்பெண்டர், DB Regio ஆல் கருதப்படும் தாராளமயமாக்கல் திட்டங்கள், அனைத்து இரயில் தொழிலாளர்களும் கிடைத்து வரும் தற்போதைய ஒப்பந்த கூலி முறைக்கு குழி பறிக்கும் என அவரின் அச்சத்தை வெளியிட்டார்.

இந்த ஒட்டுமொத்த தொழில்துறையில் ஒரு சட்டபூர்வமான குறைந்தபட்ச கூலி "தெளிவாக ஒரு மணி நேரத்திற்கு 5.50 யூரோவுக்கும் அதிகமாக இருக்கவேண்டும்" என்ற அனுதாப கோரிக்கை ஒன்றை கிரெளவுஸ் முன்வைத்தார். தற்போதுள்ள ஒப்பந்த முறையை உடைக்க முயன்றால் போராட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்கள் நடத்தப்படும் என அவர் எச்சரித்தார். இந்த வகையில், பிற ஜேர்மன் தொழிற்சங்கங்களுடன், குறிப்பாக பொதுச்சேவை தொழிற்சங்கமான Verdi உடன் தாம் ஒருங்கிணைந்திருக்க விரும்புவதை அவர் அறிவித்தார்.

கிரெளவுஸின் முன்மொழிவுகள் பற்றி Transnet உறுப்பினர்கள் முழுமையானதொரு கவனமானதொரு அணுகுமுறையுடன் எடுக்க வேண்டும். சில வாரங்களுக்கு முன்னர் பேர்லின் போக்குவரத்து நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது உட்பட, Verdiஆல் ஏற்றுக்கொள்ளப்பட்ட சமீபத்திய ஒப்பந்தங்கள், Transnetஐ போன்றே தொழில்வழங்குனர்களுக்கு சாதகமான ஒப்பந்த விதிகளில் Verdi கவனமாயிருக்கிறது என்பதையே எடுத்துக்காட்டுகிறது. இதன் அடிப்படையில், இந்த இரு சங்கங்களும் ஒன்றோடு ஒன்று சில காலம் இணைந்து பணியாற்றி இருக்கின்றன. கடந்த ஆண்டு இரயில் சாரதிகளால் முன்வைக்கப்பட்ட 31 சதவீத ஊதிய கோரிக்கையை Verdi மற்றும் Transnet ஆகிய இந்த இரண்டு சங்கங்களும் வெளிப்படையாகவே கண்டித்தன என்பதுடன் கிரெளவுஸினால் முன்மொழியப்பட்ட 5.5 யூரோ குறைந்தபட்ச கூலி என்பது சங்கங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட வழி என்பதற்கான அறிகுறியே ஆகும். இந்த வெட்கக்கேடான தொகை ஜேர்மன் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பால்(DGB) வலியுறுத்தப்பட்ட சட்டப்பூர்வ குறைந்த கூலியாகிய 7.5 யூரோவை விட குறைவாகும்.

"Rank and file rail"

இந்த நிலைமைகளின் கீழ், அதிகாரத்துவத்திற்கு இடதுசாரி முகமூடியாக தொழிற்சங்க குழுவான "rank and file rail" முக்கிய பாத்திரத்தை ஏற்கிறது. தனியார்மயமாக்கல் திட்டங்களை ரத்து செய்ய கோரும் அந்த குழு, போக்குவரத்து தொழிலாளர்கள் மற்றும் ஒட்டுமொத்த மக்களின் ஜனநாயக கட்டுப்பாட்டில் ஐரோப்பிய போக்குவரத்து அமைப்பு கொண்டு வரப்பட வேண்டுமென அழைப்பு விடுக்கிறது. ஆனால் "rank and file rail" உக்கிரமாக நிராகரித்து வரும், Transnet மற்றும் அதன் ஒட்டுமொத்த தொழிற்சங்க முன்னோக்கிலிருந்து உடைத்துக்கொண்டுவாராத வரை இதுபோன்ற இலக்குகளை நடைமுறைப்படுத்துவது சாத்தியமில்லை.

ஜேர்மன் இரயில்வே செயற்குழுவிற்குள் தற்போது ஹன்சென்னின் உயர் பதவியை அடைந்திருக்கும் கூட்டு நிர்வாக முறையில் (அதாவது தொழிற்சங்கங்கள் மற்றும் நிர்வாகத்திற்கிடையிலான நெருக்கமான கூட்டுறவு முறையில்) வெறும் தனிப்பட்ட தொழிற்சங்க தலைவர்கள் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது பற்றிய ஒரு பிரச்சனை இல்லை. அது மீண்டும் முதலாளித்துவத்தை சீர்திருத்தம் செய்யும் தொழிற்சங்கங்களின் முன்னோக்குகளின் நேரடி விளைவாக உள்ளது. உற்பத்தி பூகோளமயமாக்கல் ஆக்கப்பட்டிருக்கும் நிலையிலும், சர்வதேச நிதி நெருக்கடி கொழுந்து விட்டிருக்கும் நிலையின் கீழ், ஒரு தொழிற்சங்கத்தின் முன்னோக்கு (அது தீவிரவான வடிவத்தை கொண்டிருந்தாலும் கூட) இலாபங்களை அதிகரிக்க தொடர்ச்சியாக அழுத்தம் கொடுக்கும் முதலாளித்துவ பொருளாதாரத்திற்கு சவால் விட முற்றிலும் இயலாததாகும். அதுபோன்றதொரு போராட்டத்திற்காக, முதலாளித்துவ முறைக்கு எதிராக சோசலிச மாற்றீட்டிற்காக போராடும் உழைக்கும் வர்க்கத்தின் அரசியல் இயக்கத்தை கட்டியெழுப்புவதற்கான தேவை இருக்கிறது.

சமீபகாலம் வரை, முற்போக்கான மாற்றத்திற்காக "rank and file rail" குழுவினுள் சேர்ந்திருக்கும் தொழிற்சங்கவாதிகள், இரயில்வே துறையை தனியார்மயமாக்குவதன் பின்புலத்தில் இக்கட்சி ஒரு முக்கிய முனைவாக இருந்தாலும் கூட கடந்த பத்து ஆண்டுகளாக அரசாங்க போக்குவரத்து மந்திரி பதவியை தக்க வைத்திருக்கும் சமூக ஜனநாயக கட்சியின் பக்கம் சந்தேகத்திற்கிடமின்றி தங்களை ஒழுங்மைத்திருந்தனர்.

24.9 சதவீதத்திற்கு மேற்பட்டு எவ்வித தனியார்மயமாக்கலையும் தாம் நிராகரிப்பதாக சமூக ஜனநாயக கட்சியின் மாநாட்டில் கூறிய சமூக ஜனநாயக கட்சியின் தலைவர் குர்ட் பெக், தனியார்மயமாக்கல் என்பது எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வாகாது என ஏப்ரல் 19 ஆம் திகதி உரையில் அவர் அறிவித்ததைத் தொடர்ந்து, "rank and file rail" ஒரு நிம்மதி பெருமூச்சு விட்டது. "எல்லாம் தனியார் கைகளில் இருப்பது நல்லதும், செலவு குறைவானதும் ஆகும் என்ற எண்ணத்திற்கு கடவுள் அருளால் முடிவு ஏற்பட்டிருக்கிறது." என அது எழுதியது. "நம் வாழ்க்கை பாதுகாப்பின் மீது நாம் மீண்டும் ஒருமுறை அர்த்தப்பூர்வமாக பேசவார்த்தை நடத்த வேண்டும்." என அது குறிப்பிட்டது.

எவ்வாறிருப்பினும், பத்து நாட்களுக்கு பின்னர், பகுதி தனியார்மயமாக்கலுக்கு ஆதரவாக வாக்களிக்க சமூக ஜனநாயக கட்சி, கூட்டணி அரசாங்கத்தில் அதன் கூட்டாளிகளுடன் சேர்ந்தது. இருந்த போதினும், தனியார்மயமாக்கலைத் தடுக்க வேண்டும் என்ற அரசாங்கம் மீதான அழுத்தத்தை "rank and file rail" தொடர்ந்து கடைபிடித்தது. மே தினத்தன்று வினியோகிக்கப்பட்ட அதன் துண்டறிக்கையில், "தற்போது எந்த இரயில்வே பங்கும் விற்கப்படவில்லை. இரயில்வே துறையை முதலாளித்துவ தனியார்மயமாக்கலின் பக்கம் அரசாங்கம் திருப்பாமல் இருப்பதை உறுதிப்படுத்தும் நோக்கில் நாம் அழுத்தத்தை அதிகரிக்க வேண்டும்." என அக்குழு அறிவித்தது.

அவநம்பிக்கையில் இருந்த Transnet உறுப்பினர்கள், போட்டி இரயில் சாரதிகள் சங்கமான GDL க்கு மாறுவதும் ஒரு முட்டுச்சந்திக்கு இட்டுச்செல்வதாகும். கடந்த ஆண்டு, ஒரு கணிசமான ஊதிய உயர்வு மற்றும் அதன் சொந்த ஒப்பந்த உடன்பாட்டிற்கு தனது கோரிக்கையை GDL வலியுறுத்திய போது, தொடர்ச்சியான சம்பள வெட்டுக்கள் மற்றும் வேலை நிலைமைகளின் சீரழிவதற்கு எதிராக முந்தைய ஆண்டுகளைப் போல அணிதிரளுவதற்கான சாத்தியக்கூறுகளை பிற இரயில் தொழிலாளர்கள் கண்டார்கள். எவ்வாறிருப்பினும், எட்டு மாதங்களுக்கு பின்னர், பெருமளவில் மக்கள் ஆதரவைப் பெற்ற மற்றும் GDL உறுப்பினர்களிடம் போர்க்குணமிருந்த போதிலும், தொழிற் பிரச்சனைகளின் மீதான தமது கோரிக்கையை GDLஇன் தலைமை பின்வாங்கிக்கொண்டது. ஜேர்மன் இரயில்வே நிர்வாகம் பிற இரயில் தொழிற்சங்கங்களுடன் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்த முறைக்கு வெகுவாக பொருந்த கூடிய ஒரு குறைந்தபட்ச சம்பள உயர்வை உள்ளடக்கிய ஓர் ஒப்பந்தத்தில் GDL தலைவர்கள் கையெழுத்திட்டனர்.

இரயில்வேத்துறை தொழிலாளர்கள், அவர்கள் எந்த தொழிற்சங்கத்தில் உறுப்பினராக இருந்தாலும், சங்கங்களின் முன்னோக்கிலிருந்து உடைத்துக்கொண்டு ஒரு சர்வதேச சோசலிச முன்னோக்கின் பக்கம் திரும்புவதன் மூலம் மட்டுமே, தங்களின் சம்பளம் மற்றும் வாழ்க்கை தரத்தை அவர்கள் பாதுகாத்து கொள்ள முடியும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved