World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Germany: Union and works council announce final shutdown of Nokia factory

ஜேர்மனி: தொழிற்சங்கமும் தொழிற்சாலை தொழிலாளர்குழுவும் நோக்கியா தொழிற்சாலையின் இறுதி மூடலை அறிவிக்கின்றன

By Dietmar Henning
21 February 2008

Back to screen version

"அவ்விடத்தை இதற்கு மேலும் எங்களால் காப்பாற்ற முடியவில்லை." செவ்வாயன்று, பொக்கும் (Bochum) நகரில் உள்ள நொக்கியா ஆலையின் இறுதி மூடலை அறிவிப்பதற்கான ஒரு பேரணியில், IG Metall உள்ளூர் தொழிற்சங்கத்தின் தலைவர் உல்றீக்க கிளென்ப்ராஹ்ம் ஆல் மேற்கண்ட வார்த்தைகளே பயன்படுத்தப்பட்டன. பேரணி தொடங்குவதற்கு சற்று முன்னால், பொக்கும் தொழிற்சாலை தொழிலாளர் குழுவும் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் பின்லாந்து நகரான எஸ்பூவிலுள்ள நொக்கியா தலைமை அலுவலகத்தில் அந்நிறுவன செயல்குழுவை சந்தித்திருந்தார்கள்.

தொழிற்சாலை தொழிலாளர் குழுத்தலைவர் கீசலா அசன்பாக்கால் தலைமை தாங்கப்பட்ட பொக்கும் பிரதிநிதிகள் குழு, முன்னதாக, செல்பேசிகள் உற்பத்தி செய்யும் இந்த ஆலை ஜேர்மனியின் ரூர் பகுதியில் நிலைத்திருப்பதை சங்கம் விரும்புவதாக பொக்குமிலுள்ள 2,300 நொக்கியா தொழிலாளர்களுக்கு உறுதியளித்திருந்தது.

ஆனால் எஸ்பூவில் நடந்த கூட்டம் வெறும் கண்துடைப்பாக மட்டுமே இருந்தது, Spiegel Online இதையொரு "பொய்க்கூட்டம்" என்று எடுத்துரைத்தது. பொக்குமில் ஆலை மூடுவதற்கான பணிகள் முடிக்கப்பட்டு விட்டன. ருமேனியாவின் குளூஜ் நகரின் அருகிலுள்ள புதிய நொக்கியா ஆலை சில நாட்களுக்கு முன்னதாக ஏற்கனவே தயாரிப்புகளை தொடங்க ஆயத்தமாகிவிட்டது. அடுத்த 12 மாதங்களில், அந்த புதிய ஆலையில் ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவிற்கு தேவையான செல்பேசிகளை உற்பத்தி செய்ய 3,500 தொழிலாளர்கள் வரை புதிதாக நியமிக்கப்பட இருக்கிறார்கள். ருமேனியாவில் நொக்கியா தொழிலாளர்களின் சராசரி ஊதியம் மாதத்திற்கு (மொத்தமாக) சுமார் 220 யூரோவாகும்.

மேலும், பொக்குமில் ஆலையை தக்க வைக்க தொழிற்சாலை தொழிலாளர் குழுவால் உருவாக்கப்பட்டு கடந்த ஆண்டு நிர்வாகத்திடம் தரப்பட்ட திட்டங்களையும் அது ஓரங்கட்டிவிட்டது. 14.3 மில்லியன் யூரோ முதலீட்டில், அதே அளவிலான தொழிலாளர் எண்ணிக்கையுடன் உற்பத்தியை இரட்டிப்பாக்கி, கிழக்கு ஐரோப்பிய நாடான ஹங்கேரியின் தொழிலாளர்களை போன்று மிகமலிவாக ஜேர்மனி ஆலையில் உற்பத்தி செய்ய முடியும் என தொழிற்சாலை தொழிலாளர்கள் குழு கணக்கிட்டிருந்தது.

கிளெனப்ராஹ்ம் இன் கருத்துப்படி, நோக்கியா செயற்குழு தொழிற்சங்க திட்டத்தை சிறிதும் கண்டு கொள்ளவில்லை: "அந்த மேலாளர்கள் எங்களின் மாற்று திட்டத்தை கண்டு கொள்ள விரும்பவில்லை." நொக்கியாவை பொறுத்த வரை, எவ்வாறு ஆலையை மூடுவது என்பது மட்டுமே பிரச்சனையாக உள்ளது என்பது தெளிவாக தெரிந்தது.

இது முதன்மையான பிரச்சனை என்பதை தொழிற்சாலை தொழிலாளர் குழு உணர்ந்திருந்த போதிலும், வழக்கம்போல் ஜேர்மனியிலுள்ள பிற ஆலைகளை மூடுவதற்கு ஒத்துழைக்கும் அவர்களால் கோபத்தை வெளிப்படுத்த கூட அவர்கள் விரும்பவில்லை. இதற்கிடையில், தொழிற்சங்க பிரதிநிதிகள் நிர்வாகத்துடன் விரைவாக ஒரு கூட்டு உடன்பாட்டை ஏற்படுத்திக் கொண்டார்கள், அது பின்வருமாறு தொடங்குகிறது: "பொக்குமிலுள்ள நொக்கியா ஆலையின் எதிர்காலம் குறித்து ஆக்கபூர்வமான விவாதங்கள் நடத்தப்படும்." அதாவது, ஆலையின் அடைப்பு குறித்த விவாதம்! "பெப்ரவரி 20, 2008 இல் பேச்சுவார்த்தையை தொடக்க இருதரப்பும் ஒத்துக் கொண்டுள்ளன."

தொழிற்சங்கத்தால் முன்வைக்கப்பட்ட திட்டம் குறித்து, நிர்வாகத்தின் அறிக்கை சாதாரணமாக குறிப்பிடுவதாவது: "துரதிஷ்டவசமாக, நொக்கியா நிர்வாகம் இந்த மாற்று ஆலோசனைகளை பயனற்றவை என ஒதுக்கித் தள்ள வேண்டியுள்ளது. அதில் தேவையானது கிடைப்பதாய் இல்லை, மேலும் அது நொக்கியாவின் முழுமூலோபாயத்திற்கு உதவுவதாகவும் இல்லை."

நொக்கியா குழு உத்தியோகப்பூர்வமாக தொழிற்சாலை மூடுவதை அறிவிப்பதற்கு எட்டு நாட்களுக்கு முன்னதாகவே, நொக்கியாவின் 2,300 தொழிலாளர்களுக்கான மாற்று பணிவாய்ப்பை ஏற்படுத்திக்கொடுப்பது தொடர்பாக இப்பேச்சுவார்த்தைகளில் உள்ளடங்கியிருந்தன. இந்த அறிக்கையில் இழக்கப்படவிருக்கும் 2,000 இற்கும் மேலான சார்பு தொழில்கள் (முகமை தொழில்கள் மற்றும் வினியோகஸ்தர்கள்) குறித்தும் ஒன்றும் குறிப்பிடப்படவில்லை. நொக்கியா நிர்வாகம் மற்றும் தொழிற்சாலை தொழிலாளர் குழு ஆகிய இருதரப்பும் இந்த தொழிலாளர்களை பற்றி தங்களுக்கு பொறுப்பு இல்லை என்பதாக உணர்கிறார்கள்.

"பொக்குமிலுள்ள நொக்கியா தொழிலாளர்களின் எதிர்காலத்திற்கு புதிய தீர்வைக் கண்டறிவதற்காக தொழிற்சாலை தொழிலாளர் குழு மற்றும் நொக்கியா நிர்வாகம் தங்களுக்குள் ஒரு பொதுவான இலக்கை அமைத்துக் கொண்டிருப்பதாக" தெரிவித்து அந்த அறிக்கை தொடர்கிறது. முதன்மையாக பொக்குமிலுள்ள நொக்கியா தொழிலாளர்களுக்கு நம்பகமான மற்றும் "நீண்ட கால தொழில் திட்டங்களை பின்பற்றும்" நிறுவனங்களில் தொழில்களை கண்டறிவது முக்கிய தேவையாகும்.

கிறிஸ்துமஸூக்கு முன்னதாக செய்யப்படவேண்டிய வேலைகள் அனைத்தும் தொழிற்சாலை மூடுதலுக்கு முன்னதாகவே முடிக்கப்பட வேண்டும் என்பதை நீண்ட காலத்திற்கு முன்பே வரையறுக்கப்பட்ட ஒரு திட்டத்தில், தொழிற்சாலை தொழிலாளர் குழு, தொழிற்சங்கம் மற்றும் நொக்கியா நிர்வாகம் ஆகியவை இறங்கி இருக்கின்றன என்பதை IG Metall பிரதிநிதிகள் மற்றும் பொக்கும் தொழிற்சாலை தொழிலாளர் குழுவின் எஸ்பூ பயணம் ஒரு நடுநிலையான பார்வையாளருக்கு எடுத்துக்காட்டுகிறது. "புதிய தீர்வுகள்", "ஆக்கபூர்வமான ஒத்துழைப்பு" மற்றும் "நம்பகமான நிறுவனங்கள்" என்பன போன்ற பேச்சுக்கள் அனைத்தும் வெறும் கண்துடைப்பாகும்.

ஆயிரக்கணக்கான தொழில்களை அழிப்பதில் IG Metall தொழிற்சங்கம், தொழிற்சாலை தொழிலாளர் குழு, நிர்வாகம் மற்றும் தேசிய அரசியல்வாதிகளுக்கு இடையே ஒரு வகையிலான நெருக்கமான கூட்டுறவை ரூர் பகுதி கொண்டிருக்கிறது எனும் அவமதிப்பை அது பல தசாப்தங்களாக பெற்றிருக்கிறது. இருபது ஆண்டுகளுக்கு முன்னர், டியூஸ்பேர்க் ரைன்ஹாவுசனில் இருந்த எஃகு ஆலையில் இருந்த 5,000 த்திற்கும் மேலான தொழிலாளர்களின் (இவர்கள் இந்த பிராந்தியத்தின் ஒட்டுமொத்த மக்களையும் ஒன்று திரட்டினர்) கடும் எதிர்ப்பை சந்தித்தும் அந்த ஆலை மூடப்பட்டதை இன்னும் பல தொழிலாளர்கள் மறந்திருக்க மாட்டார்கள்.

பின்னர் அந்த பிராந்தியத்தில் ஆலைகள் ஒன்றன் பின் ஒன்றாக மூட ஆரம்பித்தார்கள். ஒவ்வொரு முறையும், தொழிற்சங்கம் மற்றும் தொழிற்சாலை தொழிலாளர் குழு "மாற்று திட்டங்களை" அளித்ததுடன், மாற்று பணிகளுக்கான உறுதிமொழிகளையும் அளித்தன, சமூக திட்டங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியதுடன் மற்றும் வேலைவாய்ப்பிற்கான முகாமைகளை திறந்தன. அவை வேலைவாய்ப்பின்மைக்கான வழியை திறத்து விட்டனவேயன்றி வேறெதும் செய்யவில்லை. பல்வேறு இடங்களிலுள்ள தொழிலாளர்களை ஒன்று திரட்டுவதின் அடிப்படையில் தொழிலாளர்களின் பிரச்சனைகளை தீர்க்க எந்த நிலையிலும் தொழிற்சங்கங்கள் தயாராகவில்லை. அதற்கு பதிலாக, "சமூக கூட்டு" என்ற ஜேர்மன் முறையினுள், 'சமூகத்திற்கு பொருத்தமான'' விதத்தில் எவ்வாறு சிறப்பாக பணிகளை நிர்மூலமாக்குவது என்பதில் நிர்வாகத்தை விளம்பரப்படுத்துவதிலேயே அவர்கள் முக்கிய பங்கு வகித்தார்கள்.

சமீபத்தில், காம்ப் இலின்ட்போர்ட் நகரில் இருந்த BenQ ஆலை மூடப்பட்டபோது சரியாக இதுவே நடந்தது. தொடர்ச்சியான வெற்றிபெறாத எதிர்ப்புகள், ஆர்பாட்டங்கள், ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் மற்றும் கூடி இயங்குவதற்கான தொடர் விட்டுக்கொடுப்புகளுக்கு பின்னால், மாற்று பணிவாய்ப்பை ஏற்படுத்த சேய் நிறுவனம் ஒன்றை அமைக்க BenQ தொழிற்சாலை தொழிலாளர் குழு ஒத்துக் கொண்டது. ஒரு வருடங்களுக்குப் பின்னர், சேய் நிறுவனத்திற்கு மாறுவதற்கு ஒத்துக் கொண்ட பாதிக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்திருந்தனர்.

தற்போது, நொக்கியா தொழிற்சாலை தொழிலாளர் குழுவும் இதே போன்ற ஒரு திட்டத்தை ஏற்படுத்த முயல்கிறது. அதே சமயம், பொக்குமிலுள்ள நொக்கியா பணியாளர்களில் சிலர் முன்னாள் பென்க் தொழிலாளர்கள் ஆக உள்ளதால் தொழிற்சாலை தொழிலாளர் குழுவிற்கு இது ஒரு கூடுதல் பிரச்சனையாக உள்ளது. அதனால் அது ஒரு புதிய சேய் நிறுவனத்திற்கான திட்ட முன்மொழிவில் அது முழுவதும் விழிப்புடனும், ஐயப்பாட்டுடனும் இருக்கிறது.

உடைந்த வாக்குறுதிகள் மற்றும் பொய்களின் ஒரு வலையமைப்பு

இதுபோன்றதொரு சேய் நிறுவனத்திற்கான திட்டங்கள் தொழிற்சாலை தொழிலாளர் குழுவால் உறுப்பினர் வொல்ஃகாங்க் சைபெர்ட்டால் பின்லாந்து கூட்டத்தின் விளைவாக அவரின் அறிக்கையில் முன்வைக்கப்பட்டு இருந்தது.

"ஒவ்வொரு நொக்கியா பணியாளருக்கும் ஒரு வேலையை கண்டுபிடிக்க நொக்கியா ஒப்புக் கொண்டுள்ளது," என அறிவித்த சைபெர்ட், BenQ அனுபவத்தை போன்று மீண்டும் ஏற்படுவதை தவிர்க்க தொழிற்சாலை தொழிலாளர் குழு மிகவும் எச்சரிக்கையாக இருக்கிறது என்றும் உறுதியளித்தார். அதே நேரத்தில், தற்போதைய பணிகளை பாதுகாக்க எவ்வித போராட்டம் நடத்துவதற்கும் தொழிற்சாலை தொழிலாளர் குழு முற்றாக விரும்பவில்லை என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.

பணிகளை பாதுக்காக்க தொழிற்சங்கம் ஒரு பிரச்சாரத்தை மேற்கொள்ள ஏதேனும் விருப்பம் கொண்டால்... என உலக சோசலிச வலைத்தள இதழாளர் கேட்ட போது, எந்த வடிவிலான போராட்ட நடவடிக்கையையும் சைபெர்ட் மறுத்தார். "இன்று தொழிற்சாலை தொழிலாளர் குழுவுடன் நாங்கள் ஒரு சிறந்த உடன்பாட்டிற்கு வந்திருக்கிறோம் என்பதுடன், 'வேலைநிறுத்தம்' என்ற வார்த்தையே அதில் எழவில்லை." என்று தெரிவித்தார். "அது உற்பத்திக்கு எதிரானதாகும் என்று தெரிவித்த அவர், நாம், நமக்கு நாமே கேடு விளைவித்துக் கொள்வோம்." என்று குறிப்பிட்டார். பின்னர் அவர் அவரைச் சுற்றி இருந்த தொழிலாளர்களை அழைத்து: "நீங்கள் வேலைநிறுத்தம் செய்ய விரும்புகிறீர்களா?" என கேட்ட அவர், பதிலளிக்க யாருக்கும் அவகாசம் அளிக்காமல், தம் சொந்த கேள்விக்கு அவரே "இல்லை" என்று உரக்க பதிலளித்துக் கொண்டார். பின்னர் உ.சோ. வலைத்தள இதழாளரிடம் திரும்பி, "பாருங்கள், நான் கூறியது இதைத்தான்!" என்று தெரிவித்தார்.

வேலைநிறுத்த நடவடிக்கை இடம்பெறுமானால், சில மணி நேர இடைவெளியில் பிற ஐரோப்பிய தொழிற்சாலைகளின் உற்பத்தியும் பாதிக்கப்படும் என சைபெர்ட் அறிவித்தார். பிற நாட்டு தொழிலாளர்களையும் ஆதரவிற்கு அழைப்பதற்கான கோரிக்கையை முன்வைத்த போது, பிற நாடுகளின் தேசிய தொழிற்சங்களின் ஆதரவில்லாத நிலையில் அதுபோன்றதொரு திட்டம் சாத்தியமில்லை என சைபெர்ட் பதிலளித்தார்.

உண்மையில், தொழிற்சங்களின் முன்நோக்கின் அடிப்படையில் வெவ்வேறு நாடுகளில் மற்றும் வெவ்வேறு இடங்களில் உள்ள தொழிலாளர்களின் எவ்வித பொதுவான போராட்டமும் சாத்தியமில்லை. ஆரம்பத்தில் பின்லாந்து தொழிற்சங்கங்களின் செயல்பாடுகள், பொக்கும் ஆலையை மூடுவதற்கு ஆதரவாய் அமைந்திருந்த போதிலும் ருமேனிய தொழிற்சங்கமான Cartel Alfa புதிய நொக்கியா ஆலை அமைப்பதற்கு அதன் உற்சாகத்தை வெளிப்படுத்தியிருக்கின்றது. உள்ளூர் ருமேனிய தொழிற்சங்க தலைவர் கிரிகோர் போப் பற்றி Frankfurter Rundschau இதழ் குறிப்பிடும் போது: "ஜேர்மனியர்களின் ஐக்கியத்திற்கான அழைப்பு அவரை சிலிர்க்கச் செய்கிறது." என்று குறிப்பிடுகிறது.

ஒரு வாரம் முன்னதாக, தொழிற்சாலை தொழிலாளர் குழு தலைவர் சைபெர்ட் Frankfurter Rundschau இதழுக்கு கூறும் போது, ஒரு வித்தியாசமான தொனியைப் பயன்படுத்தி, வேலைநிறுத்தங்களால் நிறுவனத்தை அச்சுறுத்தி இருந்தார்: "இறுதி முடிவு எடுக்கப்பட்ட உடனேயே, அமைதியான காலம் முடிந்துவிடும்." தொழிற்சாலையை மூடுவதற்கான முடிவு எடுக்கப்பட்டு விட்டால், பின்னர் ஒரு வேலைநிறுத்தம் உருவாகலாம் என சைபெர்ட் குறிப்பிட்டிருந்தார். "தொழிற்சாலை மூடுதல் அறிவிக்கப்பட்ட பின்னர், நாங்கள் அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து தொலைபேசிகளை இணைத்துக்கொண்டிருப்போம் என்பதை என்னால் கற்பனையும் செய்ய முடியாது." என்று தெரிவித்தார்.

எவ்வாறிருப்பினும், ஆரம்பத்தில் தொழிற்சாலை தொழிலாளர் குழுக்கள் தங்களை "அமைதியாக இருங்கள்!" என அறிவுறுத்தியதாக பெண் தொழிலாளர்கள் தெரிவித்தனர். எஸ்பூ கூட்டத்திற்கு முன்னர், பொக்குமிலுள்ள தொழிலாளர்கள் "ஒரு நம்பிக்கைக்குரிய தொழிலாளர்குழு" என்பதை நிரூபிக்க, அவர்கள் வேலைநிறுத்தத்தில் இருந்து தங்களை விலக்கிக் கொள்ள வேண்டும் என தொழிற்சாலை தொழிலாளர் குழு தொழிலாளர்களுக்கு கூறியது. ஆனால் கூட்டம் முடிந்த பின்னர், வேலைநிறுத்தங்களால் எவ்வித பயனுமில்லை ஏனென்றால் எவ்வாறிருப்பினும் தொழிற்சாலை மூடுவதை எதுவும் தடுத்துவிடப் போவதில்லை என தொழிலாளர்களுக்கு எடுத்துரைத்தது.

மாற்று பணிவாய்ப்பு குறித்து தொழிற்சங்கத்தால் அளிக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளும் நீக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு நிறுவனத்தால் அளிக்கப்படும் உதவித்தொகையின் அளவை குறைப்பதை குறிக்கோளாகக் கொண்டிருந்தன என ஒரு நொக்கியா தொழிலாளியான பிரைட் போரஜ் உலக சோசலிச வலைத் தளத்துடனான விவாதத்தின் போது தெரிவித்தார். இதுபோன்றதொரு சேய் நிறுவனம் ஒரு மாற்று ஏற்பாடல்ல: "ஓரிரு ஆண்டுக்களுக்கு பின்னர், எவ்வகையிலும் ஒருவர் தம்மைத்தாமே வேலை இல்லாதவராகவே காண்பார்."

நிர்வாகம் என்ன திட்டமிடுகிறது என்று தொழிற்சாலை தொழிலாளர் குழுவிற்கு தெரியாது என்பதால் அது அளிக்கும் உறுதிமொழிகளின் மீது சந்தேகத்தை வெளிப்படுத்திய அதே தொழிலாளி: "அதை நம்புவது எனக்கு மிகவும் சிரமமாக இருக்கிறது." என்று தெரிவித்தார். தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களை விட நிர்வாகத்திற்கு நிறைய கடமைப்பட்டுள்ளன. "இப்போது அவர்கள் இங்கு வந்து தங்களின் ஒற்றுமையை வெளிப்படுத்துவார்கள், ஆனால் அவர்கள் இதற்கு முன்னர் என்ன செய்து கொண்டிருந்தார்கள்?" என பிரெட் கேள்வி எழுப்பினார்.

பெரும்பான்மையான நொக்கியா தொழிலாளர்கள் எதிர்காலம் குறித்து ஐயுறவுவான கருத்தை கொண்டுள்ளனர். இந்த ஆலையில் 13 ஆண்டுகள் பணியாற்றிய தான்ஜா நோப்கி கூறுகையில், "நொக்கியாவிற்கு, தொழிற்சாலை மூடுதல் மட்டுமே ஒரே முடிவாக உள்ளது." என்று தெரிவித்தார். தான்ஜா தொழிலாளர்கள் நடத்தப்படுவது குறித்து மிகவும் கோபம் கொண்டிருந்தார்: "குறைந்தபட்சம் அவர்கள் எங்களுக்கு முறையான அறிவிப்பையாவது அளித்திருக்க வேண்டும். ஏற்கனவே 2006ல் அரசமானியங்கள் நீக்கப்பட்ட போதே, இந்த ஆலை தடுமாற்றத்தில் உள்ளது என்பது அவர்களுக்கு தெரியும். ஆனால் பின்னர், ருமேனியாவில் ஆலை திறக்கப்பட்ட போது, அந்த அறிவிப்பு சுவரில் இருந்தது. ஆனால் அவர்கள் எதுவும் தெரிவிக்கவில்லை. இப்போது, புதிய வேலை தேடும் 2,000 நபர்களில் ஒருவனாக நானும் இருக்கிறேன்." என்று தெரிவித்தார்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved