World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு

Turkey hails Iraq incursion as success

ஈராக் மீதான படையெடுப்பை துருக்கி வெற்றியாக அறிவிக்கிறது

By James Cogan
4 March 2008

Back to screen version

பிரிவினைவாத குர்திஷ் தொழிலாளர் கட்சியின் கெரில்லாக்களுக்கு எதிராக வடக்கு ஈராக்கில் நடத்திய தமது செயல்பாடுகள் முடிவுக்கு வந்துவிட்டதாகவும், பெப்ரவரி 21 அன்று எல்லை தாண்டி அனுப்பப்பட்ட துருப்புகளும் திரும்பப் பெறப்பட்டுவிட்டதாகவும் வெள்ளியன்று துருக்கி இராணுவம் அறிவித்தது. துருக்கி ஊடக வட்டாரங்களின் செய்திப்படி, தாக்குதல் படையின் கடைசி பிரிவுகள் ஞாயிறன்று தமது தளங்களுக்கு திரும்பி வந்திருந்தன.

இந்த படையெடுப்பு முழுவதும் வெற்றி பெற்றிருப்பதாகவும், மத்திய கிழக்கில் முடிவெடுக்கும் அதிகாரங்களில் பங்களிப்பளிக்கும் ஒரு முக்கிய பிராந்திய சக்தியாக துருக்கி உருவெடுத்திருப்பதாகவும் அங்கு எடுத்துக்காட்டப்பட்டிருக்கிறது. தேவைப்படும் போது ஈராக்கில் இராணுவ தலையீட்டை அளிக்கும் உரிமை துருக்கிக்கு உள்ளது என்பதற்கான முன்மாதிரி நடவடிக்கையாக இதை தாங்கள் கருதுவதாக அரசாங்க மற்றும் இராணுவ செய்தி தொடர்பாளர்கள் தெளிவுபடுத்தி இருக்கிறார்.

தீவிர தணிக்கையின் கீழ் நடைபெற்ற இந்த தாக்குதல் பற்றிய தன்மைகள் தற்போது வெளியிடப்பட்டு இருக்கின்றதுடன், அவை தற்போது குறிப்பிடத்தக்க அளவில் தவறான தகவல்களை கொண்டதாகவும் தெரிகின்றன. ஆரம்பத்தில் கூறப்பட்டதற்கு மாறாக, துருக்கி, ஈராக் மற்றும் ஈரான் ஆகியவைகளின் எல்லைக்கருகிலுள்ள கரடுமுரடான குவாண்டில் மலைகளில் துருக்கிய துருப்புகள் ஈடுபடுத்தப்படவில்லை. நிகழ்வுகளின் புதிய செய்திகளின்படி, குர்திஷ் ஈராக்கிய நகரங்களான ஜாஹ்கோ மற்றும் அமாதியாஹ் ஆகியவற்றின் வடக்கில் ஈராக்-துருக்கிய எல்லையிலுள்ள ஜாப் மலைப்பிராந்தியத்தில் குவிந்துள்ள குர்திஷ் தொழிலாளர் கட்சி கெரில்லாக்களுக்கு எதிராக ஒரு மிகத்திட்டமிட்ட தாக்குதல் நடத்தப்பட்டது. கடந்த வாரம் முழுவதும் வெளியான செய்திகள், இந்த பகுதியில் குறிப்பிடத்தக்களவில் சண்டை நடந்ததற்கான ஆதாரங்களை உறுதிப்படுத்துகின்றன.

துருக்கிய இராணுவத்தின் செய்திப்படி, இலக்குவைக்கப்பட்ட பகுதியில் சுமார் 300 குர்திஷ் தொழிலாளர் கட்சி போராளிகள் செயல்பட்டு வருகிறார்கள். அமெரிக்க இராணுவத்தால் அளிக்கப்பட்ட விபரமான தகவல்களின்படி, உறைய வைக்கும் குளிர் மற்றும் கடுமையான பனிப்பொழிவுக்கு மத்தியில் துருக்கிப் படைகள் விமானங்கள் மூலம் மலைகளில் இறக்கப்பட்டன. விமானத் தாக்குதல் மற்றும் தரைவழி தாக்குதல் ஆகிய இரு முறைகளிலும் நடந்த தாக்குதலில் குர்திஷ் தொழிலாளர் கட்சியால் பயன்படுத்தப்பட்ட கிராமங்கள், இராணுவ தளங்கள், கட்டுப்பாட்டு மையங்கள் மற்றும் வினியோக கிடங்குகள் ஆகியவை அழிக்கப்பட்டன. நான்கு பாலங்கள் தகர்க்கப்பட்டன.

வாரம் முழுவதும் நடந்த இராணுவ தாக்குதலில், 24 துருக்கி துருப்புகள் மற்றும் மூன்று எல்லையோர காவலாளிகளை பறிகொடுத்து, குறைந்தபட்சம் 240 போராளிகளை கொன்றுவிட்டதாக துருக்கி அறிவித்துள்ளது. உள்ளூர் குடியானவர்களில் காயம்பட்டவர்கள் குறித்து எவ்வித விபரமும் இல்லை. யுத்த பகுதியில் படையினர் அல்லாதோர் நுழையக் கூடாது என்பதால், துருக்கியின் அறிவிப்பின் உண்மையைக் கண்டறிய பத்திரிகையாளர்களால் அப்பகுதிகளில் இன்னும் நுழைய முடியவில்லை.

புஷ் நிர்வாகத்தின் அரசியல் அழுத்தத்தின் காரணமாகவே துருப்புக்கள் திரும்பப் பெறப்பட்டன என்பதை துருக்கி செய்திதொடர்பாளர்கள் மறுத்திறுத்திருக்கிறார். கடந்த வியாழன்று, துருக்கி அதிகாரிகளுடன் அன்காரா கூட்டத்தில் இருந்த அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் ரொபர்ட்ஸ் கேட்ஸ், "முடிந்த வரை இவற்றை எல்லாம் விரைவாக முடித்துக் கொள்ளுமாறு" கேட்டுக் கொண்டார். அவரின் கருத்துக்கள் வாஷிங்டனில் புஷ்ஷாலும் பிரதிபலிக்கப்பட்டது.

எவ்வாறிருப்பினும், "எடுக்கப்பட்ட முடிவின் மீது வெளியில் இருந்தோ அல்லது உள்ளிருந்தோ எவ்வித அழுத்தமும்" இல்லை என்றும், "இந்த பிரச்சனை (அமெரிக்காவின் அழுத்தம்) குறித்து சில அறிக்கைகள் வந்தபோது, அன்றே [வியாழனன்று] துருப்புக்களில் சில ஏற்கனவே திரும்பி விட்டதாகவும்" துருக்கி இராணுவம் ஓர் அறிக்கையில் கூறியது. துருக்கி அதிகாரிகள் கூற விரும்புவது என்வென்றால், தமது இராணுவ நோக்கத்தை எட்டிவிட்டது என்பது தான்.

"அமெரிக்கா வெளியே போ என்று கூறியதால் தான் துருக்கி வெளியேறியது என்ற ஊகம் உண்மையல்ல என சனியன்றும் மற்றும் நேற்றும் (03.03.2008) துருக்கிய இராணுவத்தின் தலைவர் ஜெனரல் யாசர் புயூகனிட் வலியுறுத்தி கூறினார். அவர்கள் அதை நிரூபிப்பார்களேயானால் நான் பதவியில் இருந்து விலகத் தயாராக உள்ளேன்." எனவும் அறிவித்தார். துருக்கிய படை எதிர்கொண்ட கடுமையான தட்பவெப்ப நிலைக் குறித்து அவர் குறிப்பிடுகையில், "அடுத்த ஒரு வாரத்திற்கு எங்களால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை, அப்படி எடுத்திருந்தால் நாங்கள் இழப்புகளை சந்தித்திருப்போம்" எனத் தெரிவித்தார்.

இராணுவத்தின் அறிக்கையை உறுதிப்படுத்திய துருக்கி ஜனாதிபதி அப்துல்லாஹ் குல், படைகளை திருப்பிப் பெறுவதற்கான எவ்வித அறிவிப்பையும் அரசாங்கம் பெறவில்லை என துருக்கிய பத்திரிகையாளர் கூட்டத்தில் ஊகங்களை மறுத்தார். அவர் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்ததாவது: "உண்மையில் படைகளை திரும்பப் பெறுவது குறித்து நான் அறிந்திருந்தேன். அந்த நடவடிக்கை எவ்வாறு திட்டமிடப்பட்டு இருந்ததோ, அவ்வாறே முடித்துக் கொள்ளப்பட்டது. இராணுவ திட்டங்களை வெளிப்படையாக பேசுவது என்பது வடக்கு ஈராக்கில் உள்ள எங்களின் துருப்புக்களை ஆபத்திற்குள்ளாக்கியிருக்கும்." எனத் தெரிவித்தார். "நடவடிக்கை தொடங்கியதில் இருந்தே, அதன் ஒவ்வொரு வினாடியிலும் தாம் தளபதிகளுடன் நெருக்கமாக தொடர்பு கொண்டிருந்ததாக" கூறி பிரதம மந்திரி ரெயிப் தாயிப் எர்டோகானும் ஓர் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

துருக்கி ஆளும் மேற்தட்டை பொறுத்த வரை, வாஷிங்டனிடமிருந்து பெற்ற முக்கிய சலுகை என்னவெனில், துருக்கியின் நலன்களை பின்பற்றி அதன் ஆயுதமேந்திய படைகள், ஈராக்கிய தேசிய இறையாண்மையை மீறுவதற்கான உரிமையாகும்.

துருக்கியை பொறுத்த வரை, குர்திஷ் தொழிலாளர் கட்சி மீதான தாக்குதலை முன்னிறுத்தி எதிர்காலத்தில் படையெடுப்புகள் நடத்த துருக்கியின் கைகள் கட்டப்படவில்லை என்பதை துணை பிரதம மந்திரி மெஹ்மெத் அலி ஷாஹின் தெளிவுபடுத்தினார். அவர் கூறியதாவது: "சூரியன் நடவடிக்கை (Operation Sun- பெப்ரவரி 21 தாக்குதலுக்கான அடைமொழி) முடிந்துவிட்டது என்பதற்காக குர்திஷ் தொழிலாளர் கட்சி மகிழ்ச்சி அடைந்து விடக்கூடாது. சூரியன் ஒவ்வொரு நாள் காலையிலும் உதிக்கிறது." என்று அவர் தெரிவித்தார். ஜெனரல் புயூகனிட் நேற்று தெரிவித்ததாவது: "தேவைப்படும் போது நடவடிக்கைகள் எடுக்கப்படும். நாங்கள் அதை தொடர்வோம். குர்திஷ் தொழிலாளர் கட்சியின் மீது கடுமையான தாக்குதல்களை ஏற்படுத்தவே நாங்கள் முயல்வோம்." என்றார்.

மறுப்புக்கள் இருந்த போதிலும், துருக்கியின் நடவடிக்கைகளை நீடிப்பதை தீர்மானிப்பதில் அமெரிக்காவின் நிலைப்பாடுதான தீர்மானகரமானதாக இருந்தது என்பது கேள்விக்கிடமற்றதாகும். துருக்கியிலுள்ள சில மூலோபாய ஆலோசகர்கள் கூறியபடி, குர்திஷ் தொழிலாளர் கட்சியின் மலைமுகாம்களுக்கு உணவு, எரிபொருள் மற்றும் பிற தேவையான பொருட்களைப் வழங்கும் நகரங்களை ஆக்கிரமிக்க வேண்டும் என்பதற்கேற்ப அதன் படைகள் நடந்து கொள்ளவில்லை.

துருக்கி படையெடுப்புக்கு புஷ் நிர்வாகம் பச்சைக்கொடி காட்டியது என்றாலும், ஈராக்கிய குர்திஷ் பிராந்திய அரசு மற்றும் எல்லையோர ஈராக்கிய குர்திஷ் மக்களின் அதிருப்தி குறித்து தெளிவாக கவலை கொண்டிருந்தது.

குர்திஷ் தொழிலாளர் கட்சியின் போராளிகளை வேட்டையாடுவதில் மட்டும் துருக்கி கவனமாக இருந்தது என்ற கற்பனையை மத்திய கிழக்கில் கூடுதலான மக்கள் நம்பவில்லை. சதாம் ஹுசேனின் பாதிஸ்ட் ஆட்சியை அமெரிக்கா தூக்கி எறிந்ததால் ஈராக் தேசிய அரசின் இருப்பினையே கேள்விக்குரியதாக்கி உள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக, 2003ல் அமெரிக்க ஆக்கிரமிப்பால் குறிப்பிட்ட அளவு சுயாட்சி பெற்ற வடக்கு குர்திஷ் பிராந்தியம் தம்மை சுதந்திர நாடாக அறிவிப்பதற்கான வாய்ப்புகளை அதிகரித்திருக்கிறது. 2003ல் ஈராக்கில் அமெரிக்கா தாக்குதல் நடத்த குர்திஷ் முதலாளித்துவ கட்சிகள் மிக ஆர்வமிக்க ஆதரவாளராக இருந்ததுடன், குர்திஷ் பிராந்திய அரசின் பகுதிகள் மட்டுமே தொடர்ந்தும் ஓரளவு ஸ்திரமாக இருந்தது.

துருக்கிய ஆளும் மேற்தட்டுக்கு, துருக்கியின் தெற்கு எல்லையில் ஒரு சிறிய குர்திஷ் சுயாட்சி அரசு இருப்பது ஒரு நேரடி அச்சுறுத்தலாக உள்ளது. அது, ஒரு பெரிய குர்திஷ்தானுக்காக ஈரான், சிரியா மற்றும் மத்திய கிழக்கில் மிகப் பெரிய குர்திஷ் சிறுபான்மையினரை கொண்டுள்ள தென்கிழக்கு துருக்கி ஆகியவற்றில் பிரிவினைவாத உணர்வுக்கு எண்ணெய் ஊற்றி பற்ற வைத்து விடலாம். இதுமட்டுமின்றி, எவ்வித சிரமமும் இல்லாமல் வடக்கு ஈராக் மலைகளில் செயல்படும் குர்திஷ் தொழிலாளர் கட்சியின் திறமையும் துருக்கிக்கு எரிச்சலூட்டுகிறது.

எனவே, இருதரப்பையும் சமமாக பாவிப்பது அமெரிக்காவிற்கு மிகவும் சிரமமாக இருப்பதால் வாஷிங்டன் இதை மிகவும் மென்மையாக கையாண்டு வருகிறது. ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் தாக்குதல்களுக்கான உண்மையான காரணமாக விளங்கும் மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவிலுள்ள எண்ணெய் மற்றும் எரிவாயுக்களை ஆக்கிரமிப்பதற்கான அமெரிக்க திட்டங்களுக்கு, துருக்கி அசாதாரணமான மூலோபாய மற்றும் பொருளாதார முக்கியத்துவத்தை கொண்டிருக்கிறது. அவ்விரு பிராந்தியங்களில் இருந்தும் எரிசக்தி வளங்களை பல்வேறு குழாய்கள் மூலம் வெளியே கொண்டு வருவதற்கு துருக்கி ஒரு மையமாக விளங்குகிறது. இராணுவரீதியாக, அமெரிக்காவிற்கு அடுத்ததாக நேட்டோவில் மிகப் பெரிய ஆயுதந்தாங்கிய துருப்புக்களை துருக்கி கொண்டிருக்கிறது. வரலாற்றுரீதியாக, அமெரிக்க நலன்களுக்கான இரு தடைகளான ரஷ்யா மற்றும் ஈரான்களுக்கு அதுவொரு பூகோள-அரசியல் சார்ந்த போட்டியாக அமைந்துள்ளது.

எவ்வாறிருப்பினும், துருக்கி உடனான அதன் கூட்டணியை உறுதிப்படுத்துவதற்கு, குர்திஷ் தொழிலாளர் கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளுக்கான அதன் கோரிக்கைகளை அமெரிக்கா திருப்திப்படுத்த வேண்டும் என்பதுடன் குர்திஷ் பிராந்திய அரசின் சுயாட்சி மீதும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும். குறிப்பாக, கிர்குக் நகரைச் சுற்றியுள்ள முக்கிய வடக்கு ஈராக் எண்ணெய் கிணறுகளை குர்திஷ் பிராந்திய அரசுடன் இணைக்க கோரும் குர்திஷ் கோரிக்கையை அன்காரா எதிர்க்கின்றது. ஈராக்கில் இருந்து முறையாக சுதந்திரம் கேட்கும் பாதையில் குர்திஷ் கட்சிகள் நகருமேயானால், இதுபோன்றதொரு சலுகை ஒரு குர்திஷ் ஆட்சிக்கு குறிப்பிடத்தக்க அளவில் பொருளாதார வளங்களை அளிக்கும்.

துருக்கியின் கோரிக்கைகளை நிறைவேற்ற கடந்த ஆண்டு முதல் அமெரிக்கா குறிப்பிடத்தக்க முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கிறது. கிர்குக் நிலை தொடர்பாக டிசம்பரில் நடத்தப்பட இருந்த பொதுஜன வாக்கெடுப்பை ஜூன் வரை தள்ளி வைக்க ஈராக்கிய குர்திஷ் கட்சிகளை சம்மதிக்க வைப்பதில் புஷ் நிர்வாகம் வெற்றி பெற்றது. வடக்கு ஈராக்கிலுள்ள குர்திஷ் தொழிலாளர் கட்சியின் தளங்கள் குறித்த விபரமான தகவல்களை அமெரிக்க இராணுவம் துருக்கிய ஆயுதமேந்திய படைகளுக்கு அளிக்க தொடங்கியது. மேலும் தொடர்ச்சியான விமானத் தாக்குதல்களை தொடர ஈராக்கிய விமானத் தளங்களை பயன்படுத்தவும் துருக்கிய விமானப்படைக்கு அது அனுமதி அளித்தது. இறுதியாக, தரைவழி தாக்குதல் நடத்தவும் இந்த மாதம் ஒத்துக் கொண்டது.

துருக்கி மற்றும் ஈரானுக்கு இடையே வளரும் உறவுகளை வெட்டவும், ஈரான் ஆட்சியை அச்சுறுத்த மற்றும் ஒதுக்கித் தள்ள வாஷிங்டனுடனின் முயற்சிகளுடன் அன்காராவை இணைக்க கோரவும் ஒரு குறிப்பிடத்தக்க முயற்சியில் புஷ் நிர்வாகத்தின் நிலை உள்ளது. எவ்வாறிருப்பினும், அதே நேரத்தில், துருக்கி மற்றும் ஈராக்கிய குர்திஷ் இடையே வடக்கு ஈராக்கில் ஒரு யுத்தம் உருவாவதையும் அமெரிக்கா விரும்பவில்லை என்பதால் துருக்கியின் இராணுவ நடவடிக்கைகள் குர்திஷ் தொழிலாளர் கட்சியின் கட்டுப்பாட்டிலுள்ள மலைகளில் மட்டுமே இருக்க வேண்டும் என்று கடுமையாக கட்டுப்படுத்தி வைத்தது.

அமெரிக்க கொள்கையின் ஒட்டுமொத்த விளைவு என்னவென்றால், இருதரப்பையும் அது திருப்தி செய்யமுடியவில்லை. குர்திஷ் மேற்தட்டின் விருப்பங்களுக்கு குறுக்கே நிற்கும் ஈராக்கிலுள்ள அமெரிக்க ஆக்கிரமிப்பு, குர்திஷ் பிரிவினைவாதத்துடன் தொடர்புடைய அச்சுறுத்தல்கள் குறித்து துருக்கிக்கு போதிய உறுதிமொழியை அளிக்க தவறுகிறது. ஜூனில் முடிவு செய்யப்படவிருக்கும் கிர்குக் விடயம் பல விவகாரங்களை வெளியே கொண்டு வரும். பொதுஜன வாக்கெடுப்பு நடத்தப்படவில்லையானால், அது அமெரிக்கா மீதான நம்பிக்கையை குலைத்துவிடும். பொதுஜன வாக்கெடுப்பு நடத்தப்பட்டால், அது நடப்பதற்கு முன்னதாகவே துருக்கி தாக்குதலை தொடங்கலாம். வாஷிங்டன் எதை தேர்ந்தெடுத்து சென்றாலும், அது ஒரு அரசியல் வெடிமருந்து பீப்பாவை மூட்டி விடுவதற்கான முக்கியத்துவத்தைப் பெறும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved