World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

Unresolved status of Kirkuk heightens tensions in Iraq

கிர்குக்கின் தீர்க்கப்படாத அந்தஸ்து ஈராக்கில் பதட்டங்களை அதிகப்படுத்துகிறது

By James Cogan
10 April 2009

Back to screen version

ஈராக்கில் "பூசலுக்குட்பட்ட பகுதிகள்" என்றழைக்கப்படும் - குர்திய வட்டார அரசாங்கம் (KRG) கோரும் -வடக்கில் உள்ள பகுதிகள் -- விதி பற்றி நீண்டகாலமாக கொதிநிலையில் உள்ள மோதல் இம்மாதம் ஒரு ஐக்கிய நாடுகள் அறிக்கை வெளியிடப்படும் போது வெடித்தெழ இருக்கிறது.

பாதிப்பிற்கு மிகவும் உட்படக்கூடிய பகுதி கிர்குக் மாநிலம் ஆகும்; இங்கு ஈராக்கின் எண்ணெய் வளத்தில் 40 சதவிகிதம் உற்பத்தியாகிறது: இன்னும் பயன்படுத்தப்படாத இருப்புக்களில் 15 சதவிகிதமும் உள்ளது. பூசலுக்கு உட்பட்ட மற்ற பகுதிகள் குர்திய மக்கள் அதிகமாக இருக்கும் நிநேவா மற்றும் தியாலா மாநிலங்கள் ஆகும். இவை KRG கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் பகுதியில் எல்லையில் இருப்பவை.

ஐக்கிய நாடுகள் வரைவு அறிக்கையில் கிர்குக் 10 ஆண்டு காலத்திற்கு "சிறப்பு அந்தஸ்து" உடைய மாநிலம் என்று குறிக்கப்படுவது உள்பட கசியவிடப்பட்டுள்ளது. இந்த அந்தஸ்து அம்மாநிலத்திற்கு அதிக அரசியல் தன்னாட்சி உரிமையை கொடுக்கும்; ஆனால் அது KRG உடன் சேர முடியாது; அல்லது மத்திய ஈராக்கிய அரசாங்கத்திடம் இருந்து தனித்த முறையில் வருவாய்களை பெற முடியாது. குர்திய உயரடுக்கு கிர்குக் மீது கட்டுபாட்டை கொள்ள வேண்டும் என்ற விழைவுகள் தகர்க்கப்பட்டுள்ளன.

கிர்குக் மீது குர்திய உரிமை கோரல்கள் முதலாம் உலகப் போர்க் காலத்தில் ஒரு குர்திய தேசிய இயக்கம் வெளிப்பட்ட காலத்திற்கு செல்லுகின்றன. துருக்கிய ஓட்டோமன் பேரரசை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் வகையில், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் அதன் குர்திய மக்கள் நிறைந்த பகுதிதிகளில் ஒரு சுதந்திர குர்திஸ்தான் நிறுவப்பட ஆதரவு தரும் உறுதிகளைக் கொடுத்தது. போருக்குப் பிந்தைய ஓட்டோமன் பேரரசு துண்டாடப்பட்டு, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் அதைச் செய்யவில்லை; குர்திய மக்கள் பிளவுபடுத்தப்பட்டு, புதிதாக ஏற்படுத்தப்பட்ட துருக்கி, சிரியா, ஈராக், ஈரான் ஆகிய நாடுகளில் ஒடுக்கப்படும் சிறுபான்மையினாராயினர்.

குர்திஷ் தேசியவாதிகள் சிலநேரங்களில் கிர்குக் நகரத்தை குர்திஷின் "ஜெருசலேம்" என்று குறிப்பிட்டுள்ளனர்--அதாவது குர்திஷ் பண்பாட்டின் வரலாற்று இதயத்தானம் என்று. ஆனால் குர்திய உயரடுக்கின் முக்கிய அக்கறை மாநிலத்தின் எண்ணெய் வயல்கள் ஒரு சுதந்திர குர்திஷ்நாட்டிற்கு கணிசமான செல்வத்தின் ஆதாரமாக இருக்கும் என்பதாகும்.

குர்திஷ் தேசியவாதக் கட்சிகள் 2003ம் ஆண்டு ஈராக்கின் மீது அமெரிக்கப் படையெடுப்பிற்கு ஆதரவு கொடுத்தன; ஏனெனில் ஆரம்பத்தில் அது அவர்களுடைய விழைவுகள் அடையப்பட உதவும் என்று கருதப்பட்டது. பல்லாயிரக்கணக்கான குர்திஷ் பெஷ்மெர்கா போராளிகள் பூசலுக்கு உட்பட்ட பகுதிகளில் அமெரிக்கப் படைகளால் அனுமதிக்கப்பட்டனர்.

குர்திஷ் ஆதரவிற்கு கூடுதலான வெகுமதி போல் நாட்டின் இடைமருவும் நிர்வாக சட்டத்தை (Transitional Administrative Law TAL) இயற்றிய அமெரிக்கர்கள், பூசலுக்குட்பட்ட பகுதிகள் KRG யில் சேருவதற்கான வாக்கெடுப்பு கடைசி பட்சம் 31, டிசம்பர் 2007க்குள் நடத்தப்பட வேண்டும் என்று கூறியிருந்தனர். வாக்கெடுப்பிற்கு முன்பு, அரசியலமைப்பு ஈராக்கிய அரசாங்கம் சதாம் ஹுசைனின் பாத்திஸ்ட் ஆட்சிக்காலத்தில் நடந்த இனப்படுகொலைகளின்போது வெளியேற்றப்பட்ட குர்திஷ் மக்கள் மீண்டும் அங்கு செல்ல உதவவேண்டும் என்று கூறியிருந்தது.

அக்டோபர் 15, 2005ல் ஏற்கப்பட்ட ஈராக்கிய அரசியலமைப்பில், குர்திஷ் பிரச்சினை உட்பட, TAL விதிகள்140வது விதியின்கீழ் இணைக்கப்பட்டிருந்தன.

அப்பொழுதில் இருந்து 140வது விதியை செயல்படுத்துவதற்கான கோரிக்கைகள் கிர்குக்கில் உள்ள பெரும் அரேபிய, துருக்கோமன் சமூகங்களிடம் இருந்தும் பெரும்பாலான அரபுத தளம் கொண்ட ஈராக்கிய கட்சிகளிடம் இருந்து ஆக்கிரோஷமான எதிர்ப்பையும் எதிர்கொண்டுள்ளது. துருக்கிய அரசாங்கமும் 140வது விதியை எதிர்க்கிறது; அது KRG வடக்கு எண்ணெய் வயல்களை எடுத்துக் கொள்ளுவது துருக்கியின் கிழக்கில் இருக்கும் அதிக குர்டிஷ் மக்கள் இருக்கும் பகுதிகளில் பிரிவினை போராட்டத்தை ஊக்குவிக்கும் என்று அஞ்சுகிறது.

கிர்குக்கிலேயே குர்திய ஆதிக்கம் நிறைந்த மாநில அரசாங்கம், KRG மற்றும் பெஷ்மெர்கா ஆதரவிற்கு உட்பட்டது, நகரத்திற்குள் பல ஆயிரக்கணக்கான குர்திஷ் மக்கள் மறு குடியிருப்பை நடத்தி வருகிறது. குர்திஷ் துருப்புக்கள் அரேபியர்கள், துருக்கோமன், அசிரிய கிறிஸ்துவர்கள் மீது இடத்தை விட்டு அகலும்படி கொலைகள், கடத்தல்கள் மற்றும் மிரட்டல்களை விடுத்துள்ளதாக ஏராளமான குற்றச்ச்சாட்டுக்கள் வந்துள்ளன.

வெடிப்புத்தன்மை நிறைந்த இனவகை பதட்டங்கள் ஏற்பட்டன. குர்திஷ், அரேபிய, துர்க்கோமன் பகுதிகள் என்று திறமையுடன் பிரிக்கப்பட்டுள்ள நகரம் தொடர்ந்து வாடிக்கையாக குண்டுவீச்சுக்கள், படுகொலைகள் மற்றும் வன்முறையினால் அதிர்கிறது. 2007ம் ஆண்டு வாக்கெடுப்பு காலக் கெடு நெருங்கிய அளவில், அமெரிக்க இராணுவம் முழு அளவு இரத்தக் களரி ஏற்படும் என்று அஞ்சியது; அதுவும் அது ஈராக்கின் மற்ற பகுதிகளில் சுன்னி, ஷியைட் எழுச்சியாளர்களை அடக்குவதில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது. தேர்தலை ஒத்திவைக்கும் வகையில் KRG மீது துருக்கியும் படையெடுக்கக்கூடும் என்றும் வாஷிங்டன் கவலை கொண்டது.

2007ம் ஆண்டு நடுப்பகுதியில் அமெரிக்க அழுத்தத்தில், கூட்டாட்சிப் பாராளுமன்றத்தில் இருக்கும் குர்திஷ் கட்சிகளும் KRG யும் வாக்கெடுப்பு நடத்துவது ஒத்திவைக்கப்படுவதற்கு உடன்பட்டன. கடந்த ஆண்டு புதிய தேதி பற்றி உடன்பாடு இல்லாமல், ஈராக்கியப் பாராளுமன்றம் ஐக்கிய நாடுகளை ஒரு தீர்மானத்தை முன்வைக்குமாறு கோரியது.

அமெரிக்க நலன்களுடன் பொருந்திய வகையில் ஐநா குழுவின் அறிவிக்கப்பட்ட நிலைப்பாடு வடக்கிலொரு உள்நாட்டு யுத்தம் ஏற்படாது தடுப்பதும் துருக்கி தலையீடு ஏற்படாமற் தடுப்பதும் ஆகும் என்பதில் சந்தேகமில்லை. கிக்குக்கில் உள்ள குர்திய பெரும்பான்மை குர்திய வட்டார அரசாங்கத்தில் இணைய வாக்களிக்கலாம் மற்றும் மோதலைத் தாண்டிவிடலாம் என்பதால், பொது ஜன வாக்கெடுப்பு நடத்தப்பட முடியாது. குர்திய செல்வந்தத்தட்டை சாந்தப்படுத்துவதற்காக ஒரு "சிறப்பு அந்தஸ்து" முன்மொழியப்பட்டிருக்கிறது.

அத்தகைய திட்டம் குர்திஷ் கட்சிகளுக்கு கோபமூட்டி பதட்டங்களை அதிகரிக்கச் செய்யும் அபாயம் இருந்தது. ஆனால் வாஷிங்டன் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க சார்புடைய அரசாங்கத்தை ஒருங்கிணைப்பது பற்றி கூடுதல் கவலையை காட்டியதே ஒழிய, KRG அபிலாசைகளை பாராட்டுவதற்கு அல்ல. ஈராக்கின் மற்ற பகுதிகள் பற்றி எரிகையில், ஒப்புமையில் உறுதியாக இருந்த குர்திஷ் வடபகுதி ஒரு முக்கியமான சொத்து ஆகும். ஆனால் கார்டியன் கட்டுரையாளர் ரஞ்சி அலால்டின் குறிப்பிட்டபடி, "ஈராக்கிய நிலைமை முன்னேறுகையில், குர்திஷ் மக்கள் மெதுவாக ஒதுக்கப்பட்டுவிடுவர்."

பிரதம மந்திரி நூரி அல்-மாலிகியின் ஈராக்கிய அரசாங்கம் மேலே செல்ல முடியாத நிலையைப் பயன்படுத்தி தன்னுடைய பிடியை பூசலுக்கு உட்பட்ட பகுதிகளில், குறிப்பாக கிர்குக்கில் வலுப்படுத்த முயன்று வருகிறது.

மார்ச் 26ம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ், ஈராக்கிய இராணுவத்தின் 12வது பிரிவில் உள்ள மேலாதிக்கம் நிறைந்த அரபுத் துருப்புக்கள் கிர்குக் அருகில் உள்ள சாலைகளைப் பாதுகாக்கின்றன என்றும் பெஷ்மெர்கா மற்றும் குர்திஷ் உளவுத்துறை அதிகாரிகளை நகரத்தில் இருந்து கட்டாயமாக வெளியேற்றிவருகிறது என்றும் கூறியுள்ளது. அவர்களுடைய தளபதியான மேஜர் ஜேனரல் அப்துல் அமிர் ஜைதி செய்தித் தாளிடம் கூறினார்: "இது அவர்களுடைய அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டது."

இந்த நடவடிக்கைக்கு தலைமை தாங்க ஜைதியை மாலிகி தேர்ந்தெடுத்து குறிப்பிடத்தக்க வகையில் தூண்டிவிடும் தன்மையாகும். 1990களில் அவர் சதாம் ஹுசைனின் இராணுவத்தில் பிரிகேட் தளபதியாக இருந்து, ஆட்சியின் அதிகாரத்தை குர்திஷ் பகுதிகளில், கிர்குக்கிற்கு வடக்கே நிலைநிறுத்தும் பொறுப்பைக் கொண்டிருந்தார்.

பாக்தாத்தில் மாலிகி குர்திஷ் கட்சிகளை ஒதுக்கத் தயாரிப்பு நடத்திவருகிறார்: அக்கட்சிகள் கூட்டாட்சி பாராளுமன்றத்தில் தங்களுக்கு இருக்கும் எண்ணிக்கையை பயன்படுத்தி ஆளுபவர்களை நியமிக்கும் செயலை மேற்கொள்ளுவதுடன், ஷியைட் மற்றும் சுன்னிக் கட்சிகளுக்கு இடையே பிளவையுப் பயன்படுத்துகின்றன.

மாலிகியின் தாவா கட்சியில் ஜனவரி 31 மாநிலத் தேர்தல்களில் கிர்குக்கை குர்துகள் எடுத்துக் கொள்ளுவதற்கான எதிர்ப்பு உள்ளது: இத்தேர்தல்கள் மூன்று வடக்கு குர்திஷ் மாநிலங்கள் மற்றும் கிர்குக்கைத் தவிர எல்லா இடங்களிலும் நடைபெற்றன. அரபு தேசியத்திற்கு இதன் அழைப்புக்கள் தாவாவை மிக அதிக வாக்குகள் பங்கை --25 சதவிகிதம்-- பெறச்செய்தன.

முதல் தடவையாக, தாவா ஷியைட் இஸ்லாமிய ஈராக்கியத் தலைமைக் குழுவுடன் (Shiite Islamic Supreme Council of Iraq ISCI) கூட்டாக இல்லை; அது 140வது விதிக்கு எதிராக அதிகம் கூறவில்லை. மாறாக தாவா குர்திய விரிவாக்கத்திற்கு அதன் எதிர்ப்பில் பங்கு கொள்ளும் கட்சிகளுடன் கூட்டணியை நாடியுள்ளது. ஒரு சில மாநிலங்களில் அது அரசாங்கங்களை ஷியைட் மதகுருமார் மற்றும் ஈராக்கிய மொக்டாடா அல்சதர் ஆதரவாளர்களுடன் நிறுவியுள்ளது. பாக்தாத், பாபில், சலா அல் டின் மற்றும் தியாலா மாநிலங்களில் சலே அல் முட்லக் தலைமையில் உள்ள சுன்னி தளக் கட்சியுடன் தாவா முகாம் அமைக்க முற்பட்டுள்ளது; இதற்கு முன்னாள் பாத்திஸ்ட்டுக்கள் பலரின் ஆதரவு உள்ளது.

கடந்த ஒரு மாதத்தில் தாங்கள் ஒதுக்கப்பட்டது நன்கு தெளிவான பின்னர், குர்திஷ் தேசிய தலைவர்கள் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று ஆக்கிரோஷத்துடன் கூறியுள்ளனர். குர்திஷ் போர்ப்பிரபுவும் KRG தலைவருமான Massoud Barzani மற்றும் உள்ளூர் கிர்குக் தலைவர்கள் குழுவும் ஒருமனதாக மார்ச் 30 அன்று நடைபெற்ற கூட்டத்தில் 140வது விதியை செயல்படுத்துவது ஒன்றுதான் பிரச்சினைக்கு ஏற்கப்படக்கூடிய தீர்வு என்று கூறியுள்ளனர்.

இப்பொழுது ஈராக்கின் ஜனாதிபதியாக இருப்பவரும் மற்றொரு முக்கிய குர்திஷ் தலைவருமான ஜலால் தலாபானி, ஏப்ரல் 1 அன்று கூறினார்: "140வது விதி அரசியலமைப்பு விவகாரம் ஆகும்; எவரும் அதை மாற்ற முடியாது."

ஜனாதிபதி ஒபாமா துருக்கிக்கு இந்த வாரம் வருகை செய்திருந்தபோது அவர் துருக்கிய அரசாங்கத்தை பாராட்டி அதை அமெரிக்காவின் முக்கியமான உற்றநாடு என்றும் கூறியது, வெள்ளை மாளிகையில் இருந்து ஆதரவைப் பெறுவது குர்திஷ் மக்களுக்கு இயலாது என்பதற்கு இன்னும் ஒரு சான்று ஆகும்.

மீண்டும் குர்திஷ் உயரடுக்குகள் ஏகாதிபத்தியத்தின் நலன்களுக்கு குர்திஷ் மக்களின் நலன்களைத் தாழ்த்திவிட்டனர்; இதையொட்டி தாங்களும் ஒதுக்கப்பட்டுவிட்டதை அறிந்துள்ளனர். 20ம் நூற்றாண்டின் பல முறை நடந்துள்ளதுபோல், ஒரு சுதந்திர முதலாளித்துவ அரசு அல்லது தன்னாட்சிப் பகுதிக்கான இழிவான பெரும் சக்திகளுடனான சூழ்ச்சிக்கையாளல் என்பது, குர்திஷ் மக்களுக்கு மேலே செல்ல முடியாத பாதை என்று நிரூபணம் ஆகிவிட்டது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved