World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா
 

Nationalism and the British trade union strike

தேசியவாதமும், பிரிட்டிஷ் தொழிற்சங்க வேலைநிறுத்தமும்

By Joe Kishore
5 February 2009
 

Back to screen version

"பிரிட்டிஷ் வேலைகள் பிரிட்டன் தொழிலாளர்களுக்கே" என்றவொரு தேசியவாத வேலைத்திட்டத்தின் அடிப்படையில், பிரிட்டனின், லிங்கன்ஷெரில் உள்ள லிண்ட்சே எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் நடந்த போராட்டம், சர்வதேசரீதியாக தொழிலாள வர்க்கத்திற்கு அடிப்படை பிரச்சனைகளை எழுப்புகிறது.

உலக சோசலிச வலைத் தளமும், சோசலிச சமத்துவக் கட்சியும் இந்த நடவடிக்கைகளை எதிர்த்துள்ளதுடன், வெவ்வேறு நாட்டு தொழிலாளர்களை ஒருவருக்கு ஒருவர் எதிராக திருப்பிவிடும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் பாத்திரத்தையும் கண்டிக்கின்றன. சுத்திகரிப்பு ஆலையின் ஓர் ஒப்பந்தத்தை எடுத்துக்கொண்ட ஒரு இத்தாலிய ஒப்பந்ததாரரால் நியமிக்கப்பட்ட 100 இத்தாலிய மற்றும் போர்ச்சுகீசிய தொழிலாளர்களின் வரவை எதிர்த்து இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள், தங்களின் தொழில்கள் அழிவது குறித்த நியாயமான இடர்ப்பாடுகளை கொண்டிருந்தார்கள். இந்த பொருளாதார நெருக்கடியால் அவர்களும், உலகளவிலுள்ள பிற தொழிலாளர்களுடன் சேர்த்து அழிக்கப்பட்டு வருகிறார்கள். எவ்வாறிருப்பினும், இந்த கவலைகள் தொழிற்சங்கங்களாலும், அவற்றின் அரசியல் ஆதரவாளர்களாலும் பிரிட்டிஷ் தொழிலாளர்களை ஒரு முட்டுச்சந்திக்கு இட்டுச்செல்லும் ஒரு பிற்போக்கான பாதையில் முழு நனவோடு திருப்பி விடப்பட்டுள்ளன.

தேசியவாதத்திற்கான அழைப்பானது பிரிட்டிஷ் தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கு மட்டும் உரிய தனியுரிமையல்ல. அது உலகமெங்கும் உள்ள தொழிற்சங்கங்களின் ஒரு பொதுவான கோரிக்கையாக உள்ளது. சான்றாக, அமெரிக்காவில் AFL-CIO, "அமெரிக்கா முதலில்" என்ற தேசியவாதத்தை பல தசாப்தங்களாக பரப்பியுள்ளது. அமெரிக்க பெருநிறுவன மேற்தட்டு பிரிவுகளின் கூட்டணியுடன், தொழிற்சங்க அதிகாரத்துவம், ஒபாமா நிர்வாகத்தால் கொண்டு வரப்படும் எந்த பொருளாதார திருத்த மசோதாவிலும் "அமெரிக்க பொருட்களையே வாங்குங்கள்" என்பது உள்ளடங்கி இருக்க வேண்டும் என்று கடுமையாக பிரசாரம் செய்கிறது.

அமெரிக்காவின் ஒருங்கிணைந்த எஃகு தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் லியோ ஜெரார்ட், அவரின் ஒரு சமீபத்திய கட்டுரையில் அதிகாரத்துவத்தின் மனநிலையை வெளிப்படுத்தி இருந்தார். அமெரிக்கர்கள் "தங்களைத் தாங்களே பொருளாதார நாட்டுபற்றாளர்களாக காட்டிகொள்ளவேண்டும்" என்று அழைப்பு விடுத்திருந்த அவர், வேலைவாய்ப்பற்ற அமெரிக்கர்களின் வரிப்பணத்தை சீனா, இந்தோனேஷியா, கொரியா மற்றும் இந்தியாவிலும் வேலைகளை உருவாக்க செலவிடப்படுவதாக அமெரிக்கன் தொழிற்துறை அமைப்பான அமெரிக்க வர்த்தக கூட்டமைப்பை (US Chamber of Commerce) குற்றஞ்சாட்டி இருந்தார். அமெரிக்க நிறுவனங்களின் வெற்று வார்த்தைஜாலம் ஒருபுறம் இருக்க (இதில் தொழிற்சங்க அதிகாரத்துவமும் மிக நெருக்கமாக பங்களிப்பு அளித்துள்ளன), அந்த அறிக்கை ஆசிய தொழிலாளர்கள் மீதான விரோதத்தை எடுத்துக்காட்டும் ஒரு தெளிவான அறிப்பாக உள்ளது.

தொழிற்சங்கங்களின் தேசியவாத நிலைநோக்கு ஒரு திட்டவட்டமான தர்க்கத்தை கொண்டிருக்கிறது. இரண்டாம் உலக போரைத் தொடர்ந்து கீன்சீயன் (Keynesian) கொள்கைகளின் அதியுயர் நாட்களின் போது, இந்த தொழிற்சங்கங்கள் பலம் பெற்றன. தொழிற்சங்கங்களில் சேர்ந்த தொழிலாளர்கள், தொழில் வழங்குனர்களிடமிருந்தும், அரசிடமிருந்தும் உயர்ந்த சம்பளங்கள், நலன்கள் போன்ற சில குறிப்பிட்ட சலுகைகளை பெற முடிந்தது. தேசிய சீர்திருத்த முன்னோக்கானது, தேசிய கட்டுப்பாட்டு பொருளாதாரம் மற்றும் பொதுவான சர்வதேச பொருளாதார விரிவாக்கம் (இரண்டுமே இன்று நடைமுறையில் இல்லை) என்ற நிலைமைகளின் கீழ் குறிப்பிட்ட சாத்தியப்பாடுகளை கொண்டிருந்தது.

தொழிற்சங்க அதிகாரத்துவம், தனியார் இலாப முறையை ஏற்றுக் கொண்டு தேசிய பெருநிறுவன அபிவிருத்தியுடன் தொழிலாளர்களை கட்டிவைத்து தன் அணிகளில் இருந்த சோசலிசவாதிகளை (குறிப்பாக அமெரிக்காவில்) அகற்றியது. தொழிற்சங்க உறுப்பினர்களின் எண்ணிக்கை அமெரிக்காவில் குறைய தொடங்கிய போது, அவர்கள் வெளிகாட்டிய இந்த முன்னோக்கு, 1950 களில் அவர்களை அடையாளம் காட்ட தொடங்கியது.

1970 கள் மற்றும் 1980 களின் ஆரம்பங்களிலும், முதலாளித்துவ உற்பத்தியின் தன்மையில் ஏற்பட்ட மாற்றங்கள், ஒரு விரைவான சீரழிவு காலத்தைத் தொடங்கி வைத்தது. பூகோளமயமாக்கப்பட்ட உற்பத்தியும், தொழில்துறை அழிக்கப்பட்டமையும் (குறிப்பாக அமெரிக்காவிலும், பிரிட்டனிலும்) தேசிய தொழிலாளர் சந்தையில் சலுகைகளுக்காக மூலதனத்தை அழுத்தம் கொடுப்பதற்கான தொழிற்சங்கங்களின் திறனிற்கு குழிதோண்டியது. மலிவு தொழிலாளர்களின் தேடுதலில் உலகின் எந்த மூலையிலும் உற்பத்தியை மாற்றுவதற்கு அனுமதிக்கும் பூகோளமயமாக்கப்பட்ட உற்பத்தியானது, உண்மையில், ஓர் உலகளாவிய தொழிலாளர் சந்தையை உருவாக்கியது.

இந்த உலகளாவிய மாற்றங்களின் விளைவுகளின் காரணமாக, தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் அவற்றின் உறவுகளை தேசிய அரசுடனும், பெருநிறுவன கட்டமைப்புகளுடனும் தக்க வைத்துக் கொண்டன. மேலும் அவற்றுடன் நிலையாக ஒன்றுபட்டும் விட்டன. தேசியவாதமும் மற்றும் பெருநிறுவனவாதம் இரண்டும் சகோதர கோட்பாடுகளேயாகும். பிரிட்டிஷ், அமெரிக்கன், ஜேர்மன், இன்னும் இதரபிற தொழில்களை பாதுகாப்பதற்கான பல்வேறு பிரச்சாரங்கள், பிரிட்டிஷ், அமெரிக்கன் அல்லது ஜேர்மன் தொழிலாளர்களின் முக்கிய சலுகைகள் மற்றும் சம்பள வெட்டுகளை ஏற்றுக்கொள்வதுடன் மாற்றமில்லாமல் ஒன்றிணைந்துள்ளது.

சோசலிச சமத்துவ கட்சியின் முன்னோடியான அமெரிக்க தொழிலாளர் கழகம் 1933 இல் எழுதும் போது, இந்த அபிவிருத்திகளையும் மற்றும் அவற்றின் விளைவுகளையும் குறிப்பிட்டு காட்டியது. முதலாளித்துவ உற்பத்தியின் பூகோளமயமாக்கலும் தொழிலாளர் வர்க்கத்தின் சர்வதேச பணிகள் எனும் ஒரு முன்னோக்கு தீர்மானத்தில், நாங்கள் குறிப்பிட்டிருந்தோம், "பழைய தொழிலாளர் அமைப்புகளின் அடிப்படை நிலைநோக்கு (தேசிய தொழில்துறை பாதுகாப்பு மற்றும் தேசிய தொழிலாளர் சந்தை) சர்வதேச ஒருங்கிணைந்த உற்பத்தி மற்றும் முன்னொருபோதும் இல்லாத மூலதன திரட்சியால் குழிதோண்டப்படும். ஒவ்வொரு நாட்டில் உள்ள இந்த அதிகாரத்துவ இயந்திரங்களின் பங்கு, முன்பு தொழில் வழங்குனரிடமும், அரசிடனும் சலுகைகளுக்கு அழுத்தம் அளிப்பதிலிருந்து, இப்பொழுது மூலதனத்தை ஈர்ப்பதற்காக தொழில் வழங்குனர்களுக்கான விட்டுக்கொடுப்புகளுக்காக தொழிலாளர்களுக்கு அழுத்தம் அளிப்பதாக மாறியுள்ளது."

பழைய அமைப்புகளுக்கு குழி தோண்டிய போதினும், உலக பொருளாதாரத்தின் அபிவிருத்திகள் உழைப்பின் உலகளாவிய பங்கீட்டை பாரியளவில் அதிகரித்துள்ளது. தொலைதொடர்பு மற்றும் போக்குவரத்தில் ஏற்பட்டிருக்கும் புரட்சிகர முன்னேற்றங்கள் தேசிய எல்லைகளை உடைத்தெறிந்துள்ளது. எரிசக்தி, மூலப்பொருட்களைப் பிரித்தெடுத்தல், உணவு பொருட்கள் உற்பத்தி, பிற உற்பத்திகள், தொலைதொடர்பு, இதர பிறவற்றின் உற்பத்தியில் ஒருங்கிணைந்த உற்பத்தி முறையையும், உலகின் எதேவொரு மூலையிலுள்ள தொழிலாளர்களையும் ஏதாவதொரு வழயில் உள்ளடக்காத எந்த பொருளோ அல்லது பொருளாதார செயல்முறையோ இருக்கவில்லை. பன்னாட்டு பெருநிறுவனங்களின் வளர்ச்சியினால், பொருட்கள் உற்பத்தியின் பல நிலைகள் வெவ்வேறு நாடுகளில் நடந்து வருகின்றன. சர்வதேச சந்தைகளில் தினசரி ட்ரில்லியன்கணக்கான பண பரிமாற்றத்துடன், நிதி உலகளவில் ஒன்றிணைக்கப்பட்டுள்ளது.

இந்த சர்தவேச ஒருங்கிணைப்பின் அடிப்படையில் அல்லாமல், எந்தவொரு தேசிய அரசின் பொருளாதார வாழ்வையும் தக்க வைப்பதென்பது நினைத்தும் பார்க்க முடியாததாகும். உலகின் ஆறு பில்லியன் மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த உற்பத்தியில் பெருமளவிலான இந்த அபிவிருத்திகள் தேவைப்படுகின்றன என்பது இன்னும் கணக்கில் எடுக்கப்படவில்லை.

இந்த நோக்கில், தொழிற்சங்கங்களின் தேசியவாத முன்னோக்கு முற்றிலும் சாத்தியமற்றதும், பிற்போக்குவாத அடித்தளமுமாகும். அமெரிக்க பொருளாதார நடவடிக்கைகளில் பெருமளவு சீனாவிலிருந்து வரும் வரும் மூலதனத்தைச் சார்ந்துள்ளது என்பதை கவனிக்காமல், ஜெரார்டு போன்ற பிரபலங்கள் சீன தொழிலாளர்களுக்கு எதிராக ஆத்திரத்தை மூட்ட முயல்கின்றனர். இதில் குட்டி முதலாளித்துவ பார்வை கொண்ட தொழிற்சங்க அதிகாரியின் முட்டாள்தனமும், பிற்போக்குவாதமும் தான் உள்ளடங்கி இருக்கிறது. அத்துடன் சர்வதேச பொருளாதார செயல்பாடுகள் உண்மையில் எவ்வாறு இயங்குகின்றது தொடர்பான பெரும் அறியாமையும் உள்ளடங்கியுள்ளது.

முதலாளித்துவ கட்டமைப்பிற்குள், பூகோளமயமாக்கலும், உற்பத்தி சக்திகளின் அபிவிருத்தியும் தான் தொழிலாளர் வர்க்கத்தை பெருமளவில் சுரண்டுவதற்கு அடிப்படையாக இருந்திருக்கின்றன. எவ்வாறிருப்பினும், இந்த இதே உற்பத்தி சக்திகள் தான், உலக மக்களின் தேவைகளை அளிக்க கூடிய சர்வதேச சமத்துவ சமூகத்தை உருவாக்குவதற்கு தேவையான அடிப்படை அடித்தளமாக உள்ளன. உலகளாவிய உற்பத்தி என்பது பிரச்சனையல்ல; தனியார்இலாப நோக்கமுடைய முதலாளித்துவ அமைப்புமுறை தான் பிரச்சனை.

அதே நேரத்தில், பூகோளமயமாக்கல் ஒரு பரந்த தொழிலாளர் வர்க்க விரிவாக்கத்தையும் அதனுடன் கொண்டு வந்துள்ளது. அது அவர்களின் அடிப்படை பொருளாதார வலிமையையும், ஒற்றுமையையும் அதிகரித்துள்ளது. உண்மை என்னவென்றால், பிரிட்டிஷ், இத்தாலி, போர்ச்சுகல் போன்ற வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் அனைவரும் உண்மையில் பிரிட்டிஷ் சுத்திகரிப்பு ஆலையால் சுரண்டப்படுகிறார்கள் என்பது தான் ஒற்றுமையாக உள்ளது. தொழிற்சங்கங்களின் தேசியவாத பிரதிபலிப்பானது, இந்த தொழிலாளர்கள் தங்களின் பொதுவான சுரண்டல்வாதிகளுக்கு எதிராக ஓர் ஒருங்கிணைந்த போராட்டத்தைத் தொடுப்பதற்கான அடிப்படையை வெட்டித் தள்ளுகிறது.

தேசியவாதத்தின் நடைமுறை விளைவு இராணுவவாதம் தான். முதலாம் உலக போர் காலத்தில், மிக பெரிய தொழிற்சங்க அதிகாரத்துவங்கள், பெருமளவில் தேசியவாத போக்குகளால் ஆதிக்கம் செலுத்தப்பட்டிருந்தன. அவை ஐரோப்பிய தொழிலாளர் வர்க்கத்தின் பெரும் பேரழிவுக்கு வித்திடும் வகையில் தங்களுக்குரிய தேசிய அரசுகளுக்கு ஆதரவளித்தன. இன்று பெரிய சக்திகளுக்கு இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைப் போன்று, இருபதாம் நூற்றாண்டின் உலக போர்கள் வெடிப்பானது, உலக பொருளாதாரத்திற்கும், போட்டி நிறைந்த தேசிய அரசுகளுக்கும் இடையிலான முரண்பாட்டின் விளைவாகவே அமைந்தது.

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு வெளியே, வெவ்வேறான மற்றும் போட்டி நிறைந்த பெருநிறுவன பிரிவுகளைப் பிரதிநிதிப்படுத்தும் உலகெங்கும் உள்ள தேசிய அரசாங்கங்கள் மீண்டும் பாதுகாப்புவாதம் மற்றும் அண்டைநாட்டின் இழப்பில் இலாபத்தை அடையும் கொள்கைகளுடன் கூடிக்குலாவுகின்றன. எவ்வாறிருப்பினும், தேசிய அரசு கட்டமைப்பிற்குள் தங்களின் பிரச்சனையைத் தீர்க்க முடியாமலும், மிக ஆழமாக உலக பொருளாதாரத்தில் தங்கியிருப்பதாலும் போட்டி மூலதன பிரிவுகள் அழித்தொழிக்கப்படும். இரண்டாம் உலக யுத்தம் தொடங்குவதற்கும் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர், 1934 இல் எழுதும் போது, பொருளாதார தேசியவாதத்தின் தாக்கங்கள் குறித்து டிராட்ஸ்கி பின்வருமாறு எச்சரித்தார்: "உண்மை என்னவென்றால், தேசியவாதம் ஊற்றெடுக்கும் இடங்கள் எல்லாம் எதிர்காலத்தில் பயங்கர மோதலுக்கான ஆய்வுகூடங்களாகும்; ஒரு பசித்த புலி போன்று, ஏகாதிபத்தியம் அதுவே ஒரு புதிய பாய்ச்சலுக்காக அதன் சொந்த தேசிய குகைக்குள் பின்வாங்கியுள்ளது." ("தேசியவாதமும், பொருளாதார வாழ்வும்")

ஒரு தேசத்திற்குள் அல்லது அதற்காக ஒரு பிராந்திய கட்டமைப்பினுள் தொழிலாளர்களின் பாதுகாப்பை முன்வைப்பதன் விளைவுகள் பேரழிவாகத்தான் இருக்கும். தொழிலாளர் வர்க்கம் பொருளாதார நெருக்கடிக்கான அதன் சொந்த தீர்மானங்களை, அதாவது தொழிலாளவர்க்கம் பொருளாதார நெருக்கடிக்கு தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் அமைப்புரீதியான மற்றும் கோட்பாட்டு மேலங்கியிருந்து உடைத்துக்கொண்டு தனது சொந்த தீர்வை முன்வைக்கவேண்டும்.

முதலாளித்துவ நெருக்கடி அதிகரித்து வருவதுடன், பல்வேறு பிரிவுகளையும், உலக பொருளாதாரத்தில் சமமின்மையும் தீவிரப்படுத்துவதுடன், தேசிய அரசுகளுக்கு இடையில் மோதல்களையும் வெடிக்க செய்கிறது. முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான ஒரு போராட்டத்தில் அதன் பொதுவான நலன்களின் அடிப்படையில் ஒன்று திரண்ட சர்வதேச தொழிலாளர் வர்க்கம் மட்டும் தான், உலக பொருளாதாரத்தை புரட்சிகரமாக மறுஒழுங்கமைப்பு செய்வதன் மூலம் மனிதகுலத்தின் நெருக்கடியை புறநிலைரீதியாக தீர்க்கும் நிலையில் உள்ளது.

முதலாளித்துவ தேசிய அரசு முறை மற்றும் உற்பத்தி மூலம் தனியார் சொத்துரிமை ஆகியவற்றிற்கான ஒரே மாற்றீடு சர்வதேச சோசலிசம் மட்டுமே. ஆகவே சோசலிச புரட்சிக்கான ஒரு சர்வதேச கட்சியான நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவை கட்டியமைப்பதென்பது ஓர் அவசியமான வரலாற்று தேவையாக உள்ளது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved