World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு

Hands off Gaza!

காசா மீது கைவைக்காதே!

By Barry Grey and David North
5 January 2009

Back to screen version

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் உலக சோசலிச வலைத் தளமும் காசாவில் இருக்கும் பாலஸ்தீனிய மக்கள் மீது நடத்தப்படும் இஸ்ரேலிய இராணுவத்தின் கொலைகாரத் தாக்குதலை கண்டிக்கின்றன. மக்கள் நெருக்கமாய் வாழும், முற்றிலும் பாதுகாப்பற்ற ஏனைய நாடுகளால் சூழப்பட்ட பகுதிகள் மீது விமான மற்றும் தரைப்படை இணைந்து நடத்தும் தாக்குதல்கள் ஒரு போர்க்குற்றம் ஆகும்.

டாங்கிகள் மற்றும் பீரங்கிகளுடன் உள்ளே நுழைந்த படையினரதும் மற்றும் விமானத்தில் இருந்தும் கடலில் இருந்தும் சாதாரண மக்கள் மீது நடத்தப்படும் தொடர்ச்சியான குண்டுவீச்சுக்கள், ஆக்கிரமிப்பு தொடங்கிய எட்டு நாட்களில் குருதி சிந்துவதை மிகவும் தீவிரப்படுத்தியுள்ளன. ஏற்கனவே இதனால் 500 பாலஸ்தீனியர்கள் பலியாகியுள்ளதுடன், தொகையான மகளிர், குழந்தைகள் உட்பட 2,400 பேருக்கும் மேலாக காயமுற்றுள்ளனர்.

எப்பொழுதும் போல், இஸ்ரேலிய ஆட்சி இராணுவ வன்முறையை இழிந்த உணர்வு, பாசாங்குத்தனம், ஏமாற்றுத்தனம் ஆகியவற்றுடன் இணைந்து பயன்படுத்துகிறது. உலகின் ஒரு மிக நவீன, தொழில்நுட்ப உயர்வுடைய இராணுவ இயந்திரங்களை கொண்ட அரசாங்கம் மீண்டும் தன்னை ஒரு பாதிக்கப்பட்டவனாக காட்டிக் கொள்கிறது.

இச்சமீபத்திய ஆக்கிரமிப்பு ஹமாஸ் ராக்கெட்டுக்களுக்கான நியாயமான பிரதிபலிப்பு என்ற கூற்று காசா மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு முன் நடந்த நிகழ்வுகளை பிழையானதாக காட்டுகிறது. டிசம்பர் 27 அன்று இஸ்ரேல் விமானத் தாக்குதலை தொடங்கு முன், காசாப் பகுதியில் இருந்து உள்ளூர்தயாரிப்பான, பாதிப்புக்களை உருவாக்கமுடியாத Quassam ராக்கெட்டுக்களின் விளைவுகளில் ஒரு இஸ்ரேலியர் கூட கொல்லப்படவில்லை. அத்தகைய ராக்கெட் தாக்குதல்கள் அதிகரிப்பு நவம்பர் மாதம் எல்லை கடந்து நடத்திய குண்டுவீச்சினால் ஹமாஸ் பாதுகாப்புப் பிரிவினர் ஆறு பேர் கொல்லப்பட்டதால் ஆத்திரமூட்டப்பட்டதாகும். போர்நிறுத்த ஒப்பந்த விதிகளை இஸ்ரேல் மீறி, காசா மீது மேற்கொண்டிக்கும் கொடுமையான முற்றுகையையும் கைவிடவில்லை; இது 18 மாதங்களாக வறிய மக்களுக்கு உணவு, மருந்துகள், குடிநீர் மற்றும் மின்விசையை மறுத்துள்ளது. தானே கூறியபடி போர்நிறுத்தத்திற்கு அது ஒப்புக் கொண்டதற்கான முக்கிய காரணம் தற்போதைய போருக்கு தீவிரமான தயாரிப்புக்களை நடத்துவதற்குத்தான்.

சமீபத்திய தாக்குதல்களை இஸ்ரேல் தொடங்கியதில் இருந்து, தெற்கு இஸ்ரேலில் நான்கு பேர் பாலஸ்தீனிய ராக்கெட்டுக்களால் கொல்லப்பட்டுள்ளனர். உயிரிழப்பு மிகவும் வருந்தத்தக்கது ஆகும்; ஆனால் இஸ்ரேலிய பாலஸ்தீனிய உயிர்களை மதிப்பிடுகையில் செய்தி ஊடகம் வெவ்வேறு தரங்களை கடைப்பிடிப்பது கசப்பான உண்மையாகும். CNN மற்றும் மேலைச் செய்தி ஊடகம் நிகழ்வுகளை பற்றிக் கூறுவதைக் கவனிக்கும்போது, பாலஸ்தீனிய உயிர்கள் அவற்றிற்கு ஒரு பொருட்டாக தோன்றுவதில்லை. தற்போதைய போரில் பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலியர்கள் என்ற விகிதத்தில் இறப்பைப் பார்த்தால் 100:1 என்பதற்கும் மேலாக உள்ளது. கடந்த எட்டு ஆண்டுகளில் கிட்டத்தட்ட 20 இஸ்ரேலியர்கள் காசாவில் இருந்து வந்த தாக்குதல்களினால் மடிந்துள்ளனர்; இஸ்ரேலிய துருப்புக்களோ கிட்டத்தட்ட 5,000 பாலஸ்தீனியர்களை கொன்றுள்ளன.

காசாப்பகுதியில் இருந்து செல்லும் ராக்கெட்டுக்கள் ஹமாஸ் மற்றும் பாலஸ்தீனிய மக்களின் நம்பிக்கையற்ற நிலையை பிரதிபலிக்கின்றன. தன்னுடைய ஆக்கிரோஷ, விரிவாக்க நோக்கங்களை தொடர்வதற்கு போலிக்காரணம் நாடும் வகையில் இஸ்ரேல் வேண்டுமென்றே அத்தகைய ஆத்திரமூட்டல்களை நடத்துகிறது.

அமெரிக்கா, ஐரோப்பிய ஆட்சிகளும் அவற்றின் அரேபிய முதலாளித்துவ ஆட்சிகள், அமெரிக்க இஸ்ரேலிய கைக்கூலி அரசாங்கமான பாலஸ்தீனிய அதிகாரத்தின் ஜனாதிபதி மஹ்முத் அப்பாஸ் உட்பட அனைத்தின் ஆதரவுடன் தோற்றுவிக்கப்பட்டுள்ள இஸ்ரேல் தாக்குதலால் காசாவில் நிலைமை எப்படி உள்ளது? ஒன்றரை மில்லியன் மக்கள் டெட்ரோயிட் பெருநகர அளவான மத்தியதரைக் கடலுக்கும் பாலைவனத்திற்கும் இடையே உள்ள ஒரு சிறு பகுதியில் சிறையில் இருப்பது போல் உள்ளனர். அவர்கள் வடபுறம் இஸ்ரேலியத் துருப்புக்களாலும் தென்புறம் எகிப்திய சர்வாதிகாரி முபாரக்கின் துருப்புக்களாலும் வெளியேறவிடாது தடுக்கப்படுகின்றனர்.

இஸ்ரேலிய ஆட்சிக்கு இந்த ஒப்புமை உவப்பானதாக இருக்காது என்றாலும், காசாவின் நிலைமை நாசியினால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த போலந்தில் இருந்த வார்சோ குடியிருப்புப்பகுதியில் இருந்து யூதர்களுடைய சோகம் ததும்பிய நிலைமைய ஒத்துத்தான் உள்ளது.

இஸ்ரேலிய புத்திஜீவிகள், இளைஞர்கள் மற்றும் வர்க்க உணர்வுடைய தொழிலாளர்கள் என்று பலரும் காசா மீது நடத்தப்படும் தாக்குதலை எதிர்த்து அவர்கள் பெயரில் அங்கு நிகழ்த்தப்படும் கொடுமைகள் பற்றி வெட்கப்படுபவர்களாக இருக்கின்றனர் என்பதில் ஐயமில்லை. நாசிக்களுடைய கொடுமைகளை நினைவுகூரும் வகையில் யூதமக்கள் செய்யும் குற்றங்களின் தாக்கங்கள் பற்றி அவர்கள் அச்சமடைந்துள்ளனர் என்று நமக்கு உறுதியாகத் தெரியும். ஆனால் கருத்துக் கணிப்பில் கூறப்படுவது போல் 80 சதவிகித இஸ்ரேலியர்கள் இராணுவத் தாக்குதலை இந்த சித்திரவதைக்குட்பட்ட பகுதி மீது நடத்துவதற்கு ஆதரவு தருகின்றனர் என்பது உண்மையானால், எந்த அளவிற்கு பரந்துபட்ட மக்களிடையே ஆழ்ந்த நோக்குநிலையின்மை, குழப்பமானநிலை உள்ளன என்பதைத்தான் அது காட்டுகிறது. தன்னுடைய குற்றம் சார்ந்த நடவடிக்கைகளை நியாப்படுத்துவதற்கு ஹோலோகோஸ்ட்டின் கொடூரங்களையும் இழிந்த முறையில் கூறிப் பயன்படுத்துவது இஸ்ரேலின் குற்றங்களில் மிகமோசமான ஒன்றாகும்.

அமெரிக்காவின் பங்கு பற்றிய முக்கிய தன்மையை வலியுறுத்தாமல் காசா மீதான தாக்குதலை பற்றி விவாதிக்க இயலாது. அமெரிக்க ஆளும் உயரடுக்கு 1967 போரில் மேற்கு கரையையும் காசாவையும் இஸ்ரேல் கைப்பற்றியதில் இருந்து இஸ்ரேலுக்கு முக்கிய உதவியாகவும், ஒத்துழைப்பு தருபவராகவும் கடந்த நான்கு தசாப்தங்களாக நடந்து வருகிறது.

2006 ம் ஆண்டு லெபனான்மீது இஸ்ரேல் படையெடுத்தபோது கொண்டிருந்த குற்றம் சார்ந்த பங்கைத்தான் புஷ் நிர்வாகம் மீண்டும் செய்கிறது. அப்பொழுது இஸ்ரேலியர்களுக்கு மிக அதிக கால அவகாசம் கொடுத்து பாலஸ்தீனியர்களை கொல்லுவதற்கும் விரோதப் போக்கு உடைய ஒரு அரபு இயக்கத்தை நசுக்குவதற்கும் அது அனைத்து இராஜதந்திர முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதையும் தடுத்து நிறுத்தியிருந்தது. கடந்த சில தினங்களாக கொடுக்கப்படும் கால அவகாசமும் இஸ்ரேலியர்களை தரைவழியே தாக்குமாறு புஷ் நிர்வாகத்தினர் வலியுறுத்தி வருவதைத்தான் காட்டுவதுடன், ஐரோப்பிய ஒன்றியம் சமாதானத்தை கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதை தவிர்க்கும் வகையில்தான் உள்ளது.

வெள்ளியன்று ஐரோப்பிய ஒன்றியமும் பிரெஞ்சு ஜனாதிபதி சார்க்கோசியும் திங்களன்று ஒரு குழு இஸ்ரேலுக்கு சென்று போர்நிறுத்தத்திற்கு இஸ்ரேலியர்கள் ஒப்புக்கொள்ள அழுத்தம் கொடுக்க முயலும் என்ற அறிவிப்பு வந்தபின், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் கொண்டலீசா ரைஸ் வெள்ளை மாளிகைக்கு வெளியே நடந்த செய்தியாளர் மாநாட்டில் போருக்கான குற்றம் ஹமாஸ் மீதுதான் என்று கூறியதுடன் போர்நிறுத்தத்தையும் எதிர்த்தார். சனிக்கிழமையன்று ஜனாதிபதி புஷ் தன்னுடைய வாராந்திர வானொலி உரையில் இஸ்ரேல் தடையின்றிச் செயல்படலாம் என்ற வாஷிங்டனின் நிலைப்பாட்டை மீண்டும் கூறி அன்று பின்னர் நடந்த படையெடுப்பிற்கு அரங்கு அமைத்தார்.

தன்னுடைய சுருக்கமான தொகுப்பில் புஷ் ஒன்றின்மேல் ஒன்றாக பொய்களை அடுக்கியிருந்தார். 2006 தேர்தலில் தேர்தலில் வென்ற ஹமாஸ்மீது, 2007 ஜூன் மாதம் பத்தா (Fatah) தலைமையில் அமெரிக்க ஆதரவு பெற்ற பாலஸ்தீனிய அதிகாரத்தை அகற்றும் முயற்சியில் "காசா பகுதியை சதிமூலம் ஆட்சியை எடுத்துக் கொண்டது என்று கூறிய விதத்தில் குற்றம்சாட்டினார். இதை தொடர்ந்து 18 மாதங்களுக்கு முன்பு சுமத்தப்பட்ட இஸ்ரேலிய பொருளாதாரத் தடையினால் ஏற்பட்டுள்ள மனிதாபிமான நிலைப் பேரழிவுகளுக்கும் ஹமாஸ்தான் காரணம் என்றார். இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு முடிவிற்கு வரவேண்டுமானால் அமெரிக்க இஸ்ரேலிய கைப்பாவை அப்பாசினால் ஹமாஸ் அகற்றப்பட வேண்டும் என்பதுதான் புஷ்ஷின் முக்கிய கோரிக்கை ஆகும்.

சனிக்கிழமை பிற்பகுதியில் இஸ்ரேலியர்கள் தங்கள் தரைப்படை தாக்குதலை தொடங்கியபின், அமெரிக்கா ஐக்கிய நாடுகள் பாதுகாப்புக் குழுவில் தலையிட்டு உடனடியான போர் ஒப்பந்தம் வேண்டும் என்று வலியுறுத்திய அறிக்கை ஒன்றைத் தடுத்து நிறுத்திவிட்டது.

எதிர்பார்த்தபடி ஜனாதிபதியாக வரவிருக்கும் பராக் ஒபாமாவும் இதேபோன்ற மதிப்பிழந்த பங்கைத்தான் ஆற்றிக் கொண்டிருக்கிறார்; "ஒரு நேரத்தில் அமெரிக்காவில் ஒரு ஜனாதிபதிதான் இருகக்கிறார்" என்ற அடிப்படையில் பகிரங்கமாக அவர் மெளனம் சாதிக்கிறார். இங்குத்தான் மெளனம் என்பது சம்மதத்திற்கு அறிகுறி என்ற சட்டரீதியான கோட்பாடு முழுமையாக் கடைபிடிக்கப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு பில்லியன் கணக்கான மக்கள் வரிப்பண நிதியை தன்னுடைய வோல்ஸ்ட்ரீட் ஆதரவாளர்களுக்கும் நண்பர்களுக்கும் அள்ளிக் கொடுத்தபோது இத்தகைய மெளனத்தை காட்டவும் இல்லை, அவரிடம் உள உறுத்தலும் இருக்கவில்லை.

ஒபாமா மதிப்பிழந்த வகையில் மெளனம் சாதிக்கையில், காங்கிரஸில் இருக்கும் உயர்மட்ட ஜனநாயகக் கட்சியினர், மன்றத் தலைவர் நான்ஸி பெலோசி, செனட் பெரும்பான்மைக் கட்சித் தலைவர் ஹாரி ரீட், இல்லிநோய்ஸ் செனட்டர் டிக் டர்பன் ஆகியோர் உட்பட, அனைவரும் இஸ்ரேலிய நடவடிக்கைகளுக்கு ஆதரவைக் காட்டப் பெரிதும் முயன்றுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் மன்றத்தின் பிரதிபலிப்பும் நன்கு வெளிப்படையாகியுள்ளது. செயலற்ற தன்மை, இரட்டை வேடம் என்று இணைந்து 1930 களில் லீக் ஆப் நேஷன்ஸ் (அனைத்து நாட்டுக் கழகம்) எதியோப்பியைவை பாசிச இத்தாலி அழித்தொழித்தபோது நடந்து கொண்ட முறையைத்தான் இது நினைவுபடுத்துகிறது. சர்வதேச முதலாளித்துவ முறையினால் நிறுவப்பட்ட "சமாதான" அமைப்புக்கள் தங்களை ஏகாதிபத்திய சக்திகளின் அதிகார அரசியல் கருவிகளாக வெளிப்படுத்திக் கொள்ளும் நிலையில்தான் நாம் மீண்டும் வாழ்கிறோம். ஐ.நா. மற்றும் அதை ஆதிக்கத்திற் கொண்டுள்ள ஏகாதிபத்திய அரசாங்கங்களின் பாசாங்குத்தனம் மிகத் தெளிவாக அவை "போர்க்குற்றம்" என்ற சொல்லை சந்தர்ப்பவாதமாக பயன்படுத்துவதில் காண்கிறோம். போர்க்குற்றம் என்பது என்ன, எவர் ஹேக் நீதிமன்றத்திற்கு அனுப்பப்படுகின்றனர் என்பது பல முற்றிலும் ஏகாதிபத்திய சக்திகளின் பூகோள-அரசியல் மற்றும் பொருளாதார நலன்களை ஒட்டித்தான் வரையறுக்கப்படுகிறது.

இறுதியாக மத்திய கிழக்கில் இருக்கும் முதலாளித்துவ ஆட்சிகளின் காட்டிக்கொடுக்கும் பங்கு பற்றியும் குறிப்பிடப்பட வேண்டும். இவற்றில் குறிப்பாக எகிப்து, ஜோர்டான், சவுதி அரேபியா போன்ற அமெரிக்காவினதும் இஸ்ரேலினதும் அப்பட்டமான கூட்டு நாடுகள் மட்டும் இல்லாமல், சியோனிசம் மற்றும் ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதாகக் கூறிக்கொள்ளும் நாடுகளான ஈரான் சிரியா போன்றவையும் உள்ளன. தெஹ்ரானையும் டமாஸ்கஸையும் வலுவிழக்கச் செய்ய வேண்டும், அந்நாடுகளில் "ஆட்சி மாற்றத்திற்கு" வழிவகுக்க வேண்டும் என்பது இஸ்ரேலிய, அமெரிக்க கொள்கையின் இலக்குகளில் ஒன்றாக இருந்தாலும்கூட, அமெரிக்க வெளியுறவு அமைச்சரகம் மற்றும் இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சரகத்தில் சில பிரிவுகள் இந்த ஆட்சிகளுடனும் பின்புற வழியே தொடர்பு கொண்டுள்ளன என்பதில் சந்தேகம் இல்லை. முதலாளித்துவ அரசாங்கங்கள் பலவீனமான தமது கூட்டுநாடுகள் தம்முடன் ஒரு கூட்டிற்கு வரும் என உறுதியளிக்கையில் அவற்றின் தலைவிதி பற்றி முதலைக் கண்ணீர் வடிப்பது இது ஒன்றும் முதல் தடவை அல்ல.

இஸ்ரேலியர்கள் காசாவில் நடத்தும் படுகொலைகள் பாலஸ்தீனிய பிரச்சினையில் "இரு நாடுகள்" என அழைக்கப்படும் தீர்விற்கு வகை செய்யக்கூடும் என்று அறிவிக்கும்போது, அவர்கள் கூறவருவதைவிட அதிகமாக கூறுகின்றனர். இதன் பொருள் இக்கொள்கையின் பிற்போக்குத்தன தன்மையைத்தான் இது வெளிப்படுத்துகிறது; அதன்படி பாதுகாப்புச் சாலைகள், இஸ்ரேலிய குடியுருப்புக்கள், தடைகள் ஆகியவற்றை கொண்டிருக்கும் ஒரு இஸ்ரேலிய ஆதிக்கத்திற்கு உட்பட்ட தோற்றுவிக்கப்படும் ஒரு சிறு நாடு, பாலஸ்தீனிய மக்களுக்கு ஒரு சிறைபோல் இருப்பது மட்டுமல்லாது, ஒரு கைப்பாவை பாலஸ்தீனிய முதலாளித்துவ ஆட்சியினால் பாதுகாக்கப்பட்டு, கட்டுப்பாட்டிற்குள் வைக்கப்படும். அத்தகைய விளைவு அன்றாட வாழ்வில் வறுமை மற்றும் அடக்குமுறைக்கு உட்பட்டிருக்கும் பாலஸ்தீனிய தொழிலாளர்கள், இளைஞர்கள் ஆகியோருக்கு எந்த வித நன்மையையும் தராது; அதே நேரத்தில் சியோனிச அரசாங்கத்திற்கு இஸ்ரேலை இனச்சுத்திகரிப்புக்கு உட்படுத்தி அரேபிய மக்களை பாலஸ்தீனியர்களுக்கு என் ஒதுக்கப்பட்ட பகுதிக்கு வெளியேற்றுவதற்கு உதவும்.

பாலஸ்தீனிய மக்களுக்கு உண்மையான ஒரேயொரு கூட்டு சர்வதேச தொழிலாளர் வர்க்கம்தான். இஸ்ரேலிய ஆக்கிரமிப்புற்கு எதிராக ஐரோப்பா, ஆசியா மற்றும் வட அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கில் நக்கும் சர்வதேச எதிர்ப்பு அலை மக்கள் உணர்வில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தின் தெளிவான அடையாளம் ஆகும். இஸ்ரேலிய போர்க் குற்றங்கள் பற்றிய தொழிலாளவர்க்கத்தின் சீற்றமும் இகழ்வுணர்வும் ஏகாதிபத்திய இராணுவவாதத்திற்கு எதிராக மட்டும் இல்லாமல், பெரு மந்த நிலைக்குப் பின்னர் உலக முதலாளித்துவ முறைக்கு ஏற்பட்டுள்ள ஆழ்ந்த பொருளாதார நெருக்கடிக்கும் ஒரு விடையிறுப்பு ஆகும்.

அரபு, யூதத் தொழிலாளர்கள் உட்பட அனைத்து நாடுகளின் தொழிலாள வர்க்கத்தினரையும் ஐக்கியப்படுத்தி ஒன்றுதிரட்டுவதுதான் மத்திய கிழக்கில் ஒரு உண்மையான ஜனநாயகபூர்வ, முற்போக்கான தீர்விற்கு திறவு கோல் ஆகும். இது சியோனிசம், ஏகாதிபத்தியம் மற்றும் மத்திய கிழக்கு முதலாளித்துவம் ஆகியவற்றிற்கு எதிரான போராட்டத்தில் உலக சோசலிசப் புரட்சியின் ஒரு பகுதியாக, ஓரு சோசலிசக் கூட்டமைப்பிற்கான நனவான ஒரு வடிவத்தை கட்டாயம் எடுக்கும்.

சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மேற்கோண்டுள்ள போராட்டத்தின் சர்வதேச சோசலிச முன்னாக்கு இதுதான். இஸ்ரேலிய படைகள் காசாவில் இருந்து உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும், பொருளாதார முற்றுகை உடனடியாக அகற்றப்பட வேண்டும் மற்றும் வழமையான வணிக, பொருளாதார சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டும் மற்றும் பாலஸ்தீனிய மக்களுக்கு மிகப் பெரிய உதவி அளிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved