World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு

Israel's war on Gaza and the role of the Middle East bourgeoisie

காசா மீதான இஸ்ரேலின் யுத்தமும், மத்திய கிழக்கு முதலாளித்துவத்தின் பாத்திரமும்

By Jean Shaoul
14 January 2009

Back to screen version

காசாவில் பாதுகாப்பற்ற பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இஸ்ரேலின் இனப்படுகொலை தாக்குதலுக்கு உலகெங்கிலும் உள்ள மக்கள் தங்களின் அதிர்ச்சியையும், கோபத்தையும் பிரதிபலிக்கும் நிலையில், இந்த திடீர் தாக்குதலுக்கான காரணிகளை மீள்பார்வையிடுவது முக்கியத்துவம் பெறுகிறது.

முதன்மையாக, இஸ்ரேலிய அரசாங்கம் அமெரிக்காவின் நிபந்தனையற்ற ஆதரவைப் பெற்றுள்ளது. அப்பிராந்தியத்தில் அமெரிக்காவின் போலீஸ் ஆளாக இஸ்ரேல் செயல்படவும், அதன் சொந்த புவிஅரசியல் திட்டங்களை தொடரவும் தேவையான இராணுவ, பொருளாதார மற்றும் இராஜாங்கரீதியான ஆதரவை அமெரிக்கா பல தசாப்தங்களாக இஸ்ரேலுக்கு அளித்து வருகிறது.

இரண்டாவதாக, ஐரோப்பிய சக்திகள் இஸ்ரேலின் யுத்த குற்றங்களை, சுயபாதுகாப்பிற்கான சட்டத்திற்குட்பட்ட நடவடிக்கையாக, நியாயப்படுத்தியதன் மூலம் குற்றங்களை மூடி மறைத்துள்ளன. அத்துடன் வாஷிங்டன் மற்றும் Tel Aviv இரண்டும் ஒத்துக்கொள்ளக் கூடிய ஒரு போர்நிறுத்தத்திற்கும் அவை செயலாற்றி வருகின்றன. இந்த போர்நிறுத்த உடன்படிக்கை, எகிப்திய ஜனாதிபதி ஹோஸ்னி முபாரக்கை உட்கொண்டிருக்கும் என்பதுடன் அமெரிக்காவின் கைப்பாவை ஆட்சியான மஹ்மது அப்பாஸின் பாலஸ்தீனிய நிர்வாகம் காசாவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்.

ஆனால் இவை, மூன்றாவது முக்கிய காரணியான மத்திய கிழக்கில் உள்ள முதலாளித்துவத்தின் பாத்திரத்தையும் குறிப்பிட்டு காட்டுகின்றன. இந்த பேரழிவில் இவர்களின் அரசியல் முக்கியத்துவம் நீண்ட காலமாக பாலஸ்தீனியர்களின் பின்னணியில் இயங்கி கொண்டிருக்கிறது.

ஆளும் மேற்தட்டுகள் பாலஸ்தீனியர்களுக்கு உதவத் தவறியதோடு மட்டுமில்லாமல், இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்கும் ஆதவளித்துள்ளன. அத்துடன் அவை அவற்றின் சொந்த நாட்டுக்குள் இருந்த பரந்த எதிர்ப்புகளையும் சிதைக்க தீவிரமாக செயல்பட்டன.

1979ல், அரேபிய நாடுகளில் மிகவும் பிரபலமான மற்றும் சக்தி வாய்ந்த நாடாக இருந்த எகிப்து தான் பாலஸ்தீனியர்களை வெளிப்படையாக கைவிட்ட முதல் நாடாகும். அது இஸ்ரேலுடன் அமைதியை விரும்பியது, அதன் மூலம் அமெரிக்காவுடனும் அமைதியை ஏற்படுத்த விரும்பியது. தொடக்கத்தில் எகிப்து அதன் அண்டை நாடுகளால் ஒதுக்கப்பட்ட போதினும், இன்று Tel Aviv மற்றும் வாஷிங்டனுடனான உறவுகளில் அது மட்டுமே மிக வெளிப்படையாக இருக்கிறது.

2005ல் காசாவிலிருந்து இஸ்ரேல் இராணுவம் திருப்பிப் பெறப்பட்டதில் இருந்து, அதன் தெற்கு எல்லையை ரஃபாவில் இருந்து கண்காணிக்கவும், மக்களின் நடமாட்டம் மற்றும் பொருட்களின் வினியோகத்தை தடுக்கவும், முற்றுகையை வலுப்படுத்தவும் ஒத்துக் கொண்டதன் மூலம் காசாவை ஒரு திறந்தவெளி சிறைச்சாலையாக மாற்றுவதில் ஜனாதிபதி ஹோஸ்னி முபாரக் ஒரு முக்கிய பாத்திரம் வகித்துள்ளார்.

கடந்த ஜூனில், ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் உடனான ஒரு போர்நிறுத்தத்திற்கு முபாரக் இடைதூதராக இருந்தார். ஆனால், இஸ்ரேலுடன் சேர்ந்து காசா மீதான முற்றுகையை கைவிட மறுத்துவிட்டார். இதுவே உடன்படிக்கைக்கு வருவதற்கான ஹமாஸின் முதன்மை காரணமாக இருந்தது. தடைகள் சிறிதளவு தளர்த்தப்பட்ட போதினும், காசாவின் இறக்குமதி எப்போதும் தேவைக்கும் மிக குறைவாகவே இருந்தது என்பதுடன் ஏற்றுமதியோ எப்போதும் போல் இருந்தது.

காசாவின் மீது நவம்பர் 4ல் ஒரு தாக்குதல் நடத்தியதன் மூலமும், ஹமாஸ் போராளிகள் குழுவின் குவாஸம் பிரிகேட்ஸின் ஆறு உறுப்பினர்களை கொன்றதன் மூலமும் இஸ்ரேல் போர்நிறுத்தத்தை மீறியது. பழிக்குபழி நடவடிக்கையில் ஈடுபட ஹமாஸை தூண்டிவிடுவதும், தற்போது நடந்து வரும் இரத்தவெறி தாக்குதலை நியாயப்படுத்துவதும் தான் இஸ்ரேலின் நோக்கமாக இருந்தது. முற்றுக்கையை மேலும் கடுமையாக்க இஸ்ரேலுக்கு ஒத்துழைத்ததன் மூலம் எகிப்து தனது பிரதிபலிப்பை காட்டியது. இஸ்ரேல், அதன் விமானத்தளங்கள் மற்றும் துறைமுகங்கள் ஆகியவற்றுடன் எல்லைப்புறங்களையும் மூடிவிட்டதால், காசா உலகின் பிற பகுதிகளில் இருந்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டு, மனிதயின பேரழிவுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

2005ல் இஸ்ரேல், பாலஸ்தீனிய நிர்வாகம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையில் அமெரிக்காவால் முன்வைக்கப்பட்ட முத்தரப்பு ஒப்பந்தத்தின்படி, பாலஸ்தீனிய நிர்வாக அதிகாரிகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய பார்வையாளர்கள் இல்லாமல் ராஃபா எல்லையை திறந்து விட முடியாது என எகிப்து கூறுகிறது. ஆனால் இந்த ஒப்பந்தத்தில் எகிப்து கையெழுத்தும் கூட இடவில்லை. மேலும் அந்த ஒப்பந்தம் அதற்கடுத்த ஓர் ஆண்டிலேயே காலாவதி ஆகிவிட்டதுடன், அது புதுபிக்கப்படவில்லை. இது, ராஃபா மூடப்பட்டிருக்க வேண்டும் என்பதற்கும், எகிப்தின் முக்கிய எதிர்கட்சியும், மிக நெருக்கமான முஸ்லீம் சகோதரர்களான ஹமாஸ் ஒதுக்கப்பட வேண்டும் என்பதற்கும் கூறப்படும் ஒரு வெற்று காரணமாக மட்டும் தான் உள்ளது.

இஸ்ரேலுடனான எகிப்தின் கூட்டுறவு எல்லை பிரச்சனைக்கும் அப்பாற்பட்டு செல்கிறது. ஹமாஸ் தான் போர்நிறுத்த ஒப்பந்தத்தை உடைத்தார்கள் என்ற இஸ்ரேலின் தவறான பிரச்சாரத்திற்கு கண்டனம் தெரிவிக்க கூட அது எந்த முயற்சியும் செய்யவில்லை, அல்லது ஹமாஸ் தலைவர்கள் மீதான அவதூறுகளுக்கு கண்டனம் தெரிவிக்கவும் அது முன்வரவில்லை.

இந்த அனைத்து அறிகுறிகளும், இஸ்ரேலும், எகிப்தும் நடவடிக்கைகளின் தொடக்கத்தில் இருந்தே அவற்றின் செயல்பாடுகளில் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகின்றன என்பதையே காட்டுகின்றன. காசா மீதான தாக்குதல் தொடங்குவதற்கு 48 மணி நேரத்திற்கும் முன்னதாக, கெய்ரோ சென்றிருந்த இஸ்ரேல் வெளியுறவுத்துறை மந்திரி Tzipi Livni, இஸ்ரேலின் நோக்கங்களை முபாரக்கிற்கும், வெளியுறவுத்துறை மந்திரி அஹ்மது அபுல்-கெயிட்டிற்கும் எடுத்துரைத்து தாக்குதலுக்கான மெளனமான ஒப்புதலைப் பெற்று கொண்டார்.

"எகிப்து பச்சை விளக்கு காட்டாமல் இஸ்ரேலினால் இதுபோன்று காசாவை தாக்க முடியாது. ஹமாஸை முடித்து விட வேண்டும் என்ற நம்பிக்கையில் தான் காசா மீதான இந்த தாக்குதலுக்கு எகிப்திய அரசாங்கம் அனுமதி அளித்தது" என்று ஒரு முஸ்லீம் சகோதர மந்திரி ஹாம்தி ஹாசன் தெரிவித்தார்.

கெய்ரோ பேச்சுவார்த்தைக்கு பின்னர், எகிப்திடமிருந்து தமது இயக்கத்திற்கு, காசா பகுதியில் இஸ்ரேல் தாக்குதல் உடனடியாக நிகழப்போவதில்லை என்ற பொய் தகவல் கிடைத்ததாக ஹமாஸின் செய்தி தொடர்பாளர் Fawzi Barhoum தெரிவித்தார்.

இஸ்ரேலினால் முன்கூட்டியே எகிப்திய பாதுகாப்பு துருப்புகள் எச்சரிக்கப்பட்டு விட்டனர் என்பதை உறுதிப்படுத்தும் வகையில், இஸ்ரேலின் தாக்குதலுக்கு முன்னதாகவே ராஃபாவிலிருந்து எகிப்து தனது பாதுகாப்பை திரும்ப பெற்று கொண்டது. யுத்தத்தின் முதல் இரண்டு நாட்களின் போது, எல்லைகளை முற்றிலுமாக மூடிய எகிப்திய அரசாங்கம், காசாவிற்கான அனைத்து உதவிகளையும் தடுத்து நிறுத்தியது. மூன்றாவது மற்றும் நான்காம் நாட்களில் அது குறிப்பிட்ட சில உதவிகளை மட்டும் அனுமதித்தது. அதுவும் பெரியளவில் அழுத்தம் அளிக்கப்பட்டதன் காரணமாக மட்டுமே அனுமதிக்கப்பட்டது.

காசாவின் தெற்கு எல்லையில் எகிப்தில் ஒரு சர்வதேச படையை நிறுத்துவதற்கும், காசா கடற்கரை பகுதியில் ஒரு கப்பற்படையை நிறுத்துவதற்குமான தமது உடன்படிக்கையை காப்பாற்ற பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசி, முபாரக்குடன் தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். எகிப்து மற்றும் ஃபதாஹை கட்டுப்படுத்தி வரும் பாலஸ்தீன நிர்வாகம் காசாவை கண்காணிக்க நியமிக்கப்படலாம். இதனால், சர்வதேச விதிப்படி, ஆக்கிரமிக்கும் நாடு காசாவில் உள்ள 1.5 மில்லியன் மக்களுக்கு உணவுபொருட்கள் வழங்க வேண்டும் என்ற பொறுப்பில் இருந்து இஸ்ரேல் விடுவிக்கப்படலாம். இவற்றால் காசாவில் மீண்டும் அப்பாஸின் ஆட்சி கொண்டு வருவதற்கான வாய்ப்பு ஏற்படும்.

ராபாஹ் எல்லையின் கட்டுப்பாட்டை அப்பாஸ் தலைமையிலான பாலஸ்தீன ஆணையம் ஏற்காத வரை, இஸ்ரேல் வழியாக செல்லாத ஒரேயொரு காசாவிற்கான வழியான ராபாஹ் எல்லை தடுப்பை நிரந்தரமாக திறந்து விட முபாரக் மறுத்திருக்கும் போதினும், அவர் இன்னும் தயக்கம் காட்டி வருகிறார். இதுபோன்றதொரு உடன்படிக்கை உள்ளாட்டு பொதுமக்களின் கருத்துக்களை மேலும் ஆத்திரமூட்டும் என்பதுடன் இதன் விளைவாக முஸ்லீம் சகோதரர்கள் பயனடைய கூடும் என்றும் அவர் அஞ்சுகிறார். எவ்வாறிருப்பினும், வாஷிங்டன் மற்றும் ஐரோப்பாவிடமிருந்து நிதியுதவிக்கு அவர் சார்ந்திருப்பதானது, அவர் நல்ல இலாபத்தைப் பெறுவதற்காகவே காத்திருக்கிறார் என்பதை எடுத்துக்காட்டுகிறது.

பிற அரேபிய ஆட்சிகளும் இதற்கு குறைவாக கீழ்படியாமலில்லை.

ஜோர்டான், அதன் முன்னாள் ஆட்சியாளர் ஹூசைன் அரசர் காலத்திலிருந்து ஆண்டுக்கணக்காக CIA விடயத்தில் நீண்டகாலமாக அமெரிக்காவின் நேச நாடாக செயல்பட்டு வருகிறது. பாலஸ்தீன அகதிகள் மற்றும் அவர்களின் வழிதோன்றல்கள் ஜோர்டானின் மக்கள்தொகையில் பெரும்பான்மை வகிக்கும் நிலையில், பாலஸ்தீன தேசியவாதம் அவரின் சொந்த ஆட்சிக்கு இணைவாக இருந்த போதினும், அதை எதிர்க்கும் முன்னணி எதிர்ப்பாளர்களில் ஹூசைனும் எப்போதும் ஒருவராக இருக்கிறார். அவரின் சொந்த அனுமதியின் பேரில், அவர் 1,100க்கும் மேலான மணி நேரத்தை இஸ்ரேலுடனான இரகசிய பேச்சுவார்த்தையில் செலவிட்டுள்ளார்.

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன விடுதலை இயக்கத்திற்கு இடையிலான ஓஸ்லோ அமைதி ஒப்பந்தங்களை தொடர்ந்து, 1994ல் இருநாடுகளுக்கும் இடையில் வர்த்தக உறவுகளை திறந்து விடுவதற்கு இஸ்ரேலுடனான ஓர் உடன்படிக்கையில் ஜோர்டான் கையெழுத்திட்டது. காசா மீதான சமீபத்திய தாக்குதலில், அரசர் அப்துல்லாஹ் பக்கத்தில் நின்று தாக்குதலை பார்வையிட்டார். இஸ்ரேலுக்கான உள்நாட்டு எதிர்ப்பு, அவரை இஸ்ரேலுக்கு எதிராக அவரை குரலெழுப்ப கட்டாயப்படுத்தியது என்பதுடன் காசாவில் பாதிக்கப்பட்டவர்களுக்காக அவர் சுயமாக இரத்தம் அளிக்கும் ஒரு நடவடிக்கைக்கு அவரை தள்ளியது.

சவூதி அரேபியா போன்ற எண்ணெய் வளம் மிக்க நாடுகளும், காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு அவற்றின் எதிர்ப்பை சம்பிரதாயமான கண்டனங்களுடன் தெரிவித்துள்ளன. "பாலஸ்தீன மக்கள் ஒரே தலைமையின் பின்னால் கூடியிருந்தால், இந்த படுகொலைகள் நடந்திருக்காது" என்று கூறியதன் மூலம் சவூதியர்கள் இந்த தாக்குதலுக்கு ஹமாஸை குற்றஞ்சாட்டியுள்ளனர்.

22 உறுப்பினர்களை கொண்ட அரேபிய ஒன்றியம் அரசியல்ரீதியாக மிகவும் ஏமாற்றியது. தங்களைத் தாங்களே அம்பலப்படுத்திக் கொள்ள கூடாது என்பதற்காகவும், இஸ்ரேலையும், தங்களின் சொந்த அரசாங்கங்களின் குழப்பங்களையும் எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்து வந்த தங்களின் சொந்த குடிமக்களிடம் மேலும் வெறுப்பை வளர்த்துக் கொள்ளக் கூடாது என்பதற்காகவும் அது ஓர் உடனடி மாநாட்டைக் கூட்ட மறுத்துவிட்டது. அதற்கு மாறாக, எந்த அரேபிய இராணுவமும் தலையிடாது என்ற ஒப்புதலுடன், தாக்குதலை நிறுத்த அதன் வெளியுறவுத்துறை மந்திரிகளின் கூட்டம் மட்டும் பேருக்கு கெய்ரோவில் கூட்டப்பட்டது.

தீவிரமயப்பட்ட நாடுகள் என்று அழைக்கப்படும் ஈரான் மற்றும் சிரியா மற்றும் ஹமாஸூடன் மிக நெருக்கமாக தொடர்பு கொண்டிருக்கும் லெபனானில் உள்ள ஹெஜ்பொல்லாஹ் போன்றவையும் வித்தியாசமாக ஒன்றும் செய்யவில்லை.

ஹமாஸின் முக்கிய நிதி உதவியாளராக விளங்கிய ஈரானும், வாஷிங்டனுடன் நெருக்கமாக வேண்டும் என்ற ஆர்வத்தில் அதன் கூட்டாளியைக் கைவிட்டிருக்கிறது.

"இஸ்ரேலை வரைபடத்தில் இருந்தே இல்லாதொழிப்போம்" என்று ஜனாதிபதி முகம்மது அஹ்மதினிஜத்தின் பிற்போக்கான அச்சுறுத்தலும், அறிவிப்பும் இருந்த போதினும், இஸ்ரேலுடன் மோதலை வளர்க்க விரும்பவில்லை என்பதை ஈரான் தெளிவுபடுத்தி இருந்தது. இஸ்ரேலுக்கு எதிராக ஈரானின் அச்சுறுத்தலில் ஏதேனும் உண்மை இருந்திருக்குமேயானால், காசா மீதான தாக்குதல் அதற்கு ஒரு யுத்த காரணத்தை அளித்திருக்கும். இதற்கு மாறாக, ஈரான் புரட்சி படையின் முக்கிய தளபதி முஹம்மது-அலி ஜபாரி கூறுகையில், காசாவினருக்கு உதவி தேவைப்படவில்லை. அவர்கள் தங்களின் சொந்த "கரங்களால் செய்யப்பட்ட" ஆயுதங்கள் மற்றும் ராக்கெட்களையே நம்பியுள்ளனர் என்றார்.

முஸ்லீம்கள் காசா மக்களுக்கு இராணுவ மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி ஹசிமீ ராஃப்சான்ஜானி அழைப்பு விடுத்தார். காசாவில் போராளிகளுக்கு பற்றாக்குறை இல்லை. "இஸ்லாமிய நாடுகள் அரசியல் உதவிகளை விரிவாக்க வேண்டும் மற்றும் காசா மக்களுக்கு ஆயுதங்கள் வழங்க வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.ஓர் ஈரானிய இராணுவ தளபதி, முஸ்லீம் எண்ணெய் உற்பத்தியாளர்கள் இஸ்ரேல் ஆதரவாளர்களுக்கு எண்ணெய் விற்பதை நிறுத்த வேண்டும் என்று கேட்டு கொண்டார். (இது எண்ணெய் விலை குறைந்தும், வீழ்ச்சி அடைந்தும் வரும் நிலையில் அளிக்கப்பட்ட ஒரு வெற்று கோரிக்கை)

இராஜாங்க அணியில், ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் தலைவரும், அதன் முதன்மை அணுசக்தி பேச்சுவார்த்தையாளரும் மற்றும் முக்கிய தலைவர் அலி காமினியின் நெருங்கிய ஆலோசகருமான சையது ஜலீலி, இந்த காசா மோதலுக்கு சிரியா மற்றும் லெபனானின் பிரதிபலிப்புகளை ஒருங்கிணைக்கவும், அதுவொரு பிராந்திய யுத்தமாக வடிவெடுப்பதைத் தடுக்கவும் சிரியா மற்றும் லெபனானிற்கு சென்றார். கடந்த வாரம் ஹெஜ்பொல்லாவின் அல் மனார் தொலைகாட்சியில் பேசும் போது, அது (யுத்தம்) அவர்களின் சொந்த முடிவு சார்ந்தது என்று முக்கியமாக ஹமாஸிற்கு அவர் தெரிவித்தார். அரேபிய வட்டாரங்களின் தகவல்களின்படி, இந்த சண்டையை முடிவுக்கு கொண்டு வர ஓர் உடன்படிக்கையை ஏற்படுத்த தெஹ்ரான் விரும்புகிறது என ஜலீலி தெரிவித்திருந்தார்.

எதிர்ப்பு அணியில் ஒரு முக்கிய அரேபிய நாட்டு உறுப்பினராகவும், டமஸ்கசில் ஹமாஸ் தலைவர் கலேட் மஷாலுக்கு ஆதரவளிக்கும் சிரியா, சமீபத்தில் ஐரோப்பிய சக்திகளுடன் அதன் உறவுகளை புதுபித்து கொண்டது. மேலும் ஒபாமா நிர்வாகத்தின் கீழ் அமெரிக்காவுடன் புதுப்பிக்கப்பட்ட பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் குறிப்புகள் காட்டுகின்றன. இதன் விளைவாக, இஸ்ரேலுடன் யுத்தம் செய்ய அதற்கும் விருப்பமில்லை. ஓர் அமைதி உடன்படிக்கையைக் கொண்டு வர இஸ்ரேலுடனான அதிகாரபூர்வமற்ற பேச்சுவார்த்தைகளை தள்ளி வைப்பதிலும், 1967ல் இஸ்ரேலினால் கைப்பற்றப்பட்ட கோலன் ஹைட்ஸை திரும்பப் பெறுவதிலும், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இரண்டும் ஏற்று கொண்ட விரோதங்களை முடிவுக்கு கொண்டு வர சார்க்கோசியின் மத்திய கிழக்கு விஜயத்தின் போது அவரை சந்திப்பதிலும் தான் சிரியா முழுவதும் கவனமாக இருக்கிறது.

அமெரிக்க கைப்பாவை அரசாங்கத்தின் தலைமையில் இருக்கும் லெபனானில், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மீதான எவ்வித எதிர்ப்பும் மற்றும் பாலஸ்தீனியர்களுக்கான ஆதரவும் ஈரானின் பின்னணியில் இயங்கும் ஹெஜ்பொல்லாவுடன் இணைத்து விடப்படும். ஹெஜ்பொல்லாஹ் கூட தடுமாற்றத்தில் உள்ள இடது ஹமாஸைக் கொண்டிருக்கிறது. 2006ல், இஸ்ரேல் காசா மீது தாக்குதல் தொடங்கிய 12 நாட்களுக்கு பின்னர், ஹெஜ்பொல்லாஹ் அதன் இரண்டாவது அணியை இஸ்ரேலின் வடக்கு எல்லையில் ஏற்படுத்திய போது (இதை ஸ்தாபிக்காமல் செய்ய இஸ்ரேல் போராடியது) இந்த முரண்பாடுகள் தீவிரமாகின.

தற்போது அரசாங்கத்தின் ஒரு பகுதியாகவும், (அது ஜூனில் வரவிருக்கும் தேர்தலை எதிர்நோக்கி இருப்பதுடன், இதில் அதன் வாக்குகள் அதிகரிக்க கூடும் என்றும், பாராளுமன்றத்தின் மிக பெரிய கட்சியாக உருவாககூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது) இஸ்ரேலுக்கு எதிரான எவ்வித விரோதபோக்கிற்கும் ஈரானின் ஆதரவில்லாமல் உள்ள ஹெஜ்பொல்லாஹ், அதன் சுய அரசியல் நோக்கங்களை விட்டுக்கொடுக்க தயாராக இல்லை.

ஹெஜ்பொல்லாஹ் தலைவர் ஹாசன் நஸ்ரல்லாஹ், இஸ்ரேலுடன் தாம் மீண்டுமொரு யுத்தம் தொடங்க விரும்பவில்லை என்று முன்னதாக உறுதியளித்திருந்தார். 34 நாள் யுத்தத்தின் மூலமாக இஸ்ரேல் அதன் பிரதிபலிப்பைக் காட்டும் என்று தெரிந்திருந்தால், 2006 மோதலைத் தூண்டும் வகையில் தாம் எல்லை தாண்டிய தாக்குதலுக்கு உத்திரவிட்டிருக்க மாட்டேன் என்று அவர் கூறியிருந்தார். அந்த தாக்குதலில் 1,000 நபர்கள் உயிரிழந்தனர் என்பதுடன் நாட்டை அது நாசமாக்கி விட்டிருந்தது.

ஒரு மாபெரும் பேரணியில், நஸ்ரல்லாஹ், காசாவின் உதவிக்காக அரேபிய மற்றும் இஸ்லாமிய உலகம் எழுந்து நிற்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார். காசா மீதான எவ்வித தரைவழி தாக்குதலும் இஸ்ரேலுக்கு பேரிழப்பை ஏற்படுத்தும் என அவர் இஸ்ரேலை எச்சரித்தார். அவ்வாறு கூறும் போது காசாவை அவர் கைவிடவில்லை என்ற போதினும், அவர் அழுத்தமான எந்த ஆதரவையும் அதற்கு அளிக்கவில்லை. அதற்கு மாறாக, இஸ்ரேல் ஆயிரக்கணக்கான யுத்த துருப்புகளை அதன் வடக்கு பகுதிக்கு அழைத்திருந்த நிலைமைகளின் கீழ், இஸ்ரேல் லெபனானின் மீது தாக்குதல் நடத்த தீர்மானித்தால் எச்சரிக்கையாக இருக்குமாறு அவர் தம் சொந்த போராளிகளுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார்.

கடந்த வாரம் தெற்கு லெபனானிலிருந்து வடக்கு இஸ்ரேலில் இரண்டு கத்யுக்சா ஏவுகணைகள் வீசப்பட்ட போது, ஹெஜ்பொல்லாஹ் அரசாங்கத்தின் ஒரு மந்திரி இதில் ஹெஜ்பொல்லா சம்பந்தப்படவில்லை என்று மறுப்பு தெரிவித்திருந்தார். இந்த தாக்குதலுக்கு பின்னர் இஸ்ரேல் ஐந்து பீரங்கு குண்டுகளை திரும்ப வீசியிருந்தது. Popular Front for the Liberation of Palestine-General Commandம் (PFLP-GC) இதுவரை இதற்கான பொறுப்பை ஏற்கவில்லை.

ஒரு முன்னாள் ஹெஜ்பொல்லாஹ் அதிகாரியும், ஹெஜ்பொல்லாவுடன் இணைந்திருந்த ஓர் ஆராய்ச்சி பயிலகத்தின் இயக்குனருமான அலி ஃபயாத், ஹமாஸ் அவர்கள் அளவிற்கு சிறப்பாகவே செயலாற்றி வருவதாக தெரிவித்ததன் மூலம் ஹமாஸிற்கு உதவிகள் கிடைக்காததை நியாயப்படுத்தினார். "சண்டையின் எதிர்காலம் குறித்து நாங்கள் எதிர்மறையாக நினைப்பவர்கள் அல்லர்" என்று அவர் தெரிவித்தார். "எதிர்ப்பு போதியளவில் இருப்பதாகவே நாங்கள் கருதுகிறோம். மேலும், 2006 ஜூலை யுத்தத்தில் செய்த அதே தவறை இஸ்ரேலியர்கள் இதிலும் செய்வதாக நாங்கள் நினைக்கிறோம்." என்றும் அவர் தெரிவித்தார்.

நஸ்ரல்லாஹின் வார்த்தைகளுக்கும், நடவடிக்கைகளுக்கும் இடையில் உள்ள வெளிப்படையான முரண்பாட்டை அரேபிய செய்திதாள்கள் அவற்றின் சொந்த கொடுங்கோல் ஆட்சியாளர்களின் ஆதரவுடன் இதையே ஹெஜ்பொல்லாவின் நிலைப்பாடாக அறிவித்தன.

அப்பிராந்தியத்தில் உள்ள ஆளும் மேற்தட்டுக்களின் நடவடிக்கைகள், இஸ்ரேலுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதை வலியுறுத்தும் பரந்துபட்ட ஆர்ப்பாட்டங்களுக்கு முற்றிலும் முரணாக உள்ளது. ஒடுக்கப்பட்ட நாடுகளில் அடிப்படை ஜனநாயகம் மற்றும் தேசிய பணிகளை உணரச் செய்வதென்பது ஒரு சோசலிசம் மற்றும் சர்வதேச முன்னோக்கின் அடிப்படையில் தொழிலாளர் வர்க்கத்தை சுயாதீனமாக அரசியல்ரீதியாக ஒன்றிணைப்பதன் மூலமாகவே அடைய முடியும் என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது.

சுமார் ஒரு நூற்றாண்டாக இருந்து வரும் கசப்பான முரண்பாடுகளையும், அரசியல் பரிதாபங்களையும் கருத்தில் எடுக்கும் பாலஸ்தீனிய கேள்விக்கான தீர்வு, பிரிக்க முடியாத வகையில் மத்திய கிழக்கிலும், சர்வதே அளவிலும் ஏற்படக்கூடிய சோசலிச புரட்சியின் வெற்றியை சார்ந்தே இருக்கிறது. அப்பிராந்தியத்தில் உள்ள அனைத்து கொடுங்கோல் முதலாளித்துவ ஆட்சிகளையும் தூக்கி எறியவும், மத்திய கிழக்கில் ஒரு சோசலிச அமைப்பை உருவாக்கவும் அரேபிய மற்றும் யூத தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவது தான் இதன் மைய கேள்வியாக முன் நிற்கிறது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved