World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Winnenden rampage killings

What lies behind the latest school shooting in Germany?

வின்னெண்டென் அட்டூழியப் படுகொலைகள்

ஜேர்மனியில் சமீபத்திய பள்ளித் துப்பாக்கிச் சூட்டின் பின்னணியில் உள்ளது என்ன?

By Sybille Fuchs and Ulrich Rippert
17 March 2009

Back to screen version

அச்சிறுவன் அமைதியான, நட்பு மிகுந்த, சற்றே ஒதுங்கிக் கொள்ளும் இயல்பும், நாணமுள்ளவனாக இருந்தாலும் அனைவரும் விரும்பும் நபராக இருந்ததாகத்தான் கருதப்பட்டது. அவனுடைய நண்பர்கள், முன்னாள் வகுப்புத் தோழர்கள், அண்டை வீட்டார்கள் கூற்றின்படி கடந்த புதனன்று பதினைந்து பேரைக் கொன்று தன்னையும் சுட்டுக் கொண்ட 17 வயது Tim K. சிறந்த, அமைதியான இளைஞனாகத்தான் இருந்தது போல் தோன்றியது.

மென்மையான உணர்வுகள் நிறைந்த, குழந்தை போன்ற முகத்தைக் காட்டிய அவனுடைய புகைப்படங்களும் ஒரு ஆக்கிரோஷ நபர் என்பதற்கான சிறு அடையாளத்தையும் காட்டவில்லை. ஐந்து ஆண்டுகள் அவனுடைய வகுப்பிலேயே படித்த ஒரு முன்னாள் வகுப்புத்தோழி லிண்டா, Der Spiegel ன் இணையப்பதிப்பிற்கு தான் வேறு சிலர் வன்முறையில் இறங்கக்கூடும் என்ற சந்தேகம் கொண்டிருந்தாலும், "நிச்சயமாக இவன் அவ்வாறு அல்ல" என்று கூறினாள்.

ஸ்ருட்கார்ட்டில் இருந்து 20 கி.மீ. தொல்வில் உள்ள வின்னண்டெனின் Alibertville உயர்நிலைப் பள்ளி ஒரு தலைசிறந்த பள்ளி என்று கூறப்பட்டது ஆகும். ஒரு இலக்கணப்பள்ளி மற்றும் ஒரு இடைநிலைப் பள்ளியைக் கொண்ட சிறுநகரத்தில் கல்வி வசதிகள் தம் சிறப்பு சமூக ஒழுங்கை அடக்கியிருந்தன. பள்ளியின் சமூக அலுவலகம் மாணவர் சிற்றுண்டி விடுதிக்கு அருகேயே இருந்தது; விடுதியில் டார்ட் மறறும் மேசை கால்பந்து ஆகியவை விளையாடப்பட்டன; ஆசிரியர்கள் அங்கு வரக்கூடாது. ஒருவேளை ஏதேனும் பூசல் ஏற்பட்டால் சமாளிப்பதற்கு சில மாணவர்கள் மத்தியஸ்தர்களாக செயல்பட பயிற்சி அளிக்கப்பட்டிருந்தனர்.

இவை அனைத்தும் மக்களுடைய அதிர்ச்சி மற்றும் பீதியை, கொடூரமான செயல்பற்றியும் பெரும் குருதி சிந்தும் நிதானத்துடனும் Tim K. அதைச் செய்ததை, ஆழமாக்கியுள்ளது. சாட்சி ஒருவர் Tim K. முழு தன்னம்பிக்கையுடன் "தான் மிகச் சரியானதை செய்வது போன்ற உணர்வுடன்" இச்செயலைப் புரிந்தான் என்று கூறியுள்ளார்.

முகமூடி அணிந்து, கறுப்பு உடை அணிந்து, ஒரு பெரெட்டா பகுதி தானியங்கி துப்பாக்கியுடன் நூற்றுக்கணக்கான தோட்டாக்களையும் வைத்திருந்து, அவன் தன்னுடைய முன்னாள் பள்ளியில் நுழைந்து மூன்று பெண் ஆசிரியர்கள், ஒரு ஆண் மாணவன், மற்றும் எட்டு பெண் மாணவிகளை கொன்றான்; அவர்களுடைய தலையில் குறிவைத்து சுடப்பட்டன. போலீஸ் வந்தவுடன் அவன் ஓடி, வழியில் சென்று கொண்டிருந்த ஒருவரைக் கொன்றான்; வெண்டிங்கன் என்னும் 40 கி.மீ. தொலைவில் இருக்கும் நகரத்திற்கு அவனை அழைத்துச் செல்லுமாறு ஒரு காரோட்டியை வற்புறுத்தினான். செல்லுவம் வழியில் கார் ஓட்டுபவர் ஒடிக்கொண்டிருந்த காரில் இருந்து குதித்து தப்பித்துக்கொண்டான்.

ஒரு கார் விற்பனையாளர் பார்வை அரங்கை அடைந்தபின், Tim K. ஒரு வண்டி வேண்டுமெனக் கோரி பின் ஒரு விற்பனையாளரையும், வாடிக்கையாளரையும் கொன்று இரு போலீசாரைக் காயப்படுத்தினான். அவன் கட்டிடத்தை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கையில் போலீசாரால் காலில் சுடப்பட்டு அதன் பின் தனது ஆயுதத்தைத் தனக்கு எதிராகவே இயக்கினான். இந்த அட்டூழியத்தின் கொடூர விளைவாக 16 பேர் இறந்ததுடன் பலர் காயமுற்றனர்.

அப்பொழுதில் இருந்து, இதற்கான காரணங்கள் மற்றும் கொலைகள் பற்றிய பிற பிரச்சினைகளும் அரசியல் வட்டங்களிலும் செய்தி ஊடகத்திலும் விவாதிக்கப்படுகின்றன. ஜேர்மனியின் கூட்டாட்சி தலைவர், அதிபர் ஆகியோர் தங்கள் பெரும் திகைப்பை வெளிப்படுத்தி கொல்லப்பட்டவர்களுடைய குடும்பங்களுக்கு பரிவுணர்வை கூறியுள்ளனர்; கிறிஸ்துவ சமூக யூனியன் (CSU) அரசியில்வாதிகள் கணினி வன்முறை விளையாட்டுக்களுக்கு தடை வேண்டும் என்று கோரியுள்ளனர்; சமூக ஜனநாயக கட்சி (SDP) துப்பாக்கியால் சுடும் கழகங்கள் கடுமையான கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று கோரியுள்ளனர். கொலைகாரனின் தந்தை ஒரு சுடுவதில் போட்டியாளர் என்று தெரியவந்துள்ளது; அவரிடம் 16 ஆயுதங்கள் இருந்தன; போலீஸ் தொழிற்சங்கம் ஆயுதக் கட்டுப்பாட்டில் பாதுகாப்பு விரிசல்கள் இருப்பதாக குறைகூறியுள்ளது.

குருதித்தோயலை அடுத்து, தொலைக்காட்சியில் வாடிக்கையான நிகழ்ச்சிகள் தடைக்குள்ளாகி, சிறப்பு நிகழ்வுகள் நடத்தப்பட்டன; வல்லுனர்கள் இன்னும் கடுமையான முறையில் பள்ளிகள் கண்காணிக்கப்பட வேண்டும் என்பதற்கான வாதங்கள், உலோகத்தை கண்டறியும் கருவிகள் அறிமுகப்படுத்தப்படுதல், பாதுகாப்பு நிறுவனங்கள் மாணவர்களை பள்ளி நுழைவாயிலில் சோதனையிடல், இணையத்தின்மீது கடுமையான கட்டுப்பாடு, வலைத்தள அறை உரையாடல்கள் தீவிரக் கண்காணிப்பிற்கு உட்படல் சில வலைத்தளத்திற்கு அனுமதி தடுக்கப்படல் போன்றவை விவாதிக்கப்பட்டன.

இத்தகைய உரையாடல்கள், சிறப்பு நிகழ்ச்சிகளின்போது ஒளிபரப்புபவர்கள் பலமுறையும் பள்ளி திறந்தவெளியின் படத்தை காட்டினர்; அங்கு ஏராளமான மெழுகுவர்த்திகள் ஏற்றப்ட்டிருந்தன; ஒரு அட்டையில் ஒற்றைச் சொல்: "ஏன்" என்பது இருந்தது. ஜேர்மன் எவங்கலிக்கல் திருச்சபையின் குழுத் தலைவரான பிஷப் Wolfgang Huber அடிக்கடி, "நம்முடைய வேதனை, திகைப்பு இவற்றை அடையாளம் கொண்டு ஆண்டவனிடம் அடைக்கல ஆதரவு கோரவேண்டும்" என்று கூறியது அடிக்கடி மேற்கோளிடப்பட்டது.

பெரும் சோகத்தை விளக்க முற்பட்ட ஆரம்ப முயற்சிகள் Tim K. பள்ளியை விட்டு ஒரு கோபமான முறையில் நீங்கினான் என்றும், முந்தைய ஆண்டு பள்ளி இறுதித் தேர்வில் அவன் தோற்றுவிட்டான் என்றும் பள்ளியில் இருந்து அதையொட்டி அகற்றப்பட்டான் என்றும் கூறின. இவை அனைத்தும் உடனடியாக வாபஸ் வாங்கப்பட்டன. உண்மையில் அவன் இறுதித் தேர்வில் நன்கு தேர்ச்சி பெற்று ஒரு வேலைவாய்ப்புக் கல்லூரியில் வணிகப் பாடத்திட்டம் பயின்று வந்தான். இதைத்தவிர வாழ்வின் பிற கூறுபாடுகளிலும் அவன் வெற்றி கண்டிருந்தான். சிறுவயதில் இருந்தே ஒரு உற்சாகமான டேபிள் டென்னிஸ் விளையாட்டுக்காரனாக இருந்து, பல பரிசில்களை தனக்குப் பிடித்த விளையாட்டில் வாங்கியுள்ளான்.

மற்றொரு கருத்தான Tim K. முந்தைய நாள் மாலை இணையதளத்தில் ஒரு பேச்சு அறையில் தன்னுடைய குருதி கொட்டும் செயலைச் செய்ய விரும்பம் கொண்டதை அறிவித்தான் என்பது ஒரு தவறான அறிக்கையின் அடிப்படையில் வந்தது என்று தெரியவந்தது.

மாறாக இவன் மன அழுத்தத்திற்கு மருத்துவ சிகிச்சை பெற்றுவந்தது உறுதியாயிற்று. ஆனால் அவனுடைய வைத்தியர்கள், அவனுடைய உளப் பிரச்சினைகள் தன்நம்பிக்கையின்மை பற்றிய சந்தேகத்தை ஓரளவு காட்டின என்றும் அவனுடைய வயதில் உள்ள பலரிடமும் காணக்கூடியதுதான் என்றும் கூறினர்.

Tim பள்ளியில் குறிப்பிடத்தக்க மகிழ்ச்சியாக இல்லை என்பதும் தெரிய வந்துள்ளது. ஆனால் இது அவனுடைய சோர்ந்த உணர்வு அல்லது வன்முறை நினைப்புக்களின் விளைவு என்று எடுத்துக் கொள்ளுவது முற்றிலும் ஊகம்தான்.

Tim K பெரும்பாலான மகளிரையும் பெண்களையும் பள்ளியில் கொன்ற உண்மை அவன் பெண் சிநேகிதி ஒருத்தியுடன் கொண்ட உறவு முடிந்தது பற்றிய ஊகத்தை, கொலைக்குப் பின் வெளிக்கொண்டுவந்துள்ளது. பலர் அலபாமாவின் முந்தைய இரவு நடந்த கொலைத் தொடர்ச்சி அவனுக்கு தன் செயலைச் செய்ய ஊக்கம் தந்திருக்கக்கூடும் என்று நினைக்கின்றனர்.

சிலர் முக்கிய குற்றத்தை அவன் தந்தை Jorg K. மீது சுமத்த முற்பட்டுள்ளனர்; ஏனெனில் குற்றத்தில் பயன்படுத்தப்பட்ட ஆயுதம் அவருடைய துப்பாக்கி சேகரிப்புக்களில் இருந்து வந்தது: அவை சரியான முறையில் பூட்டி வைக்கப்படவில்லை. Jorg K. இன் அண்டை வீட்டார்களும் நண்பர்களும் அவரை நிதானமானவர் என்றும் "மிகவும் கண்டிப்பானவர்" என்று விவரித்துள்ளனர்.

பல விவரங்களும் இன்னும் விளக்கப்படவில்லை. ஆனால் வின்னெண்டென் பெரும் சோகம் பரந்த சமூக வளர்ச்சியில் இருந்து தனியாக, ஒதுக்கப்பட்ட முறையில் அறியப்பட முடியாது என்பது வெளிப்படை. இதன் மூலகாரணங்களை மனித உளவியலில் அல்லது ஆசிரியர்கள், பெற்றோர்கள், வைத்தியர்கள், நண்பர்கள்தான் இதற்கு பொறுப்பு என்று கருத முற்படுபவர்கள் மிக அடிப்படைப் பிரச்சினைகளை தவிர்க்க முயல்கின்றனர்.

தனிப்பட்ட நபர்களின் நடவடிக்கைகளில் சமூக நிலைமைகள் நேரடி, உடனடியான முறையில் பிரதிபலிக்கப்படுவதில்லை. சமூக நிகழ்வுபோக்கிற்கும் தனிநபர் செயல்களுக்கும் இடையே இருக்கும் உறவு மிகவும் சிக்கல் வாய்ந்ததும் முரண்பாடுகளை உடையதும் ஆகும். ஆயினும்கூட அவ்வாறான ஒரு உறவு உள்ளது.

பிரத்தியேகமாக என்று இல்லாமல், பெரும்பாலும் அடிக்கடி பள்ளிகளில் நிகழும் அட்டூழியப் படுகொலைகள் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் கடந்த 15 ஆண்டுகளில் கணிசமாகப் பெருகியுள்ளன. கொலராடோவில் உள்ள லிட்டில்டனுக்கு அருகே கொலம்பைன் உயர்நிலைப் பள்ளியில் இரு அமெரிக்க சிறுவயதினர் 12 மாணவர்கள், ஒரு ஆசிரியர் பின்னர் தங்களையும் கொன்றுவிட்டபோது பலரும் அதை ஒரு அமெரிக்க மாதிரியிலான பிரச்சினை என்றுதான் பார்த்தனர்.

ஐந்து ஆண்டுகளுக்கு பின்னர் ரோபர்ட் ஸ்டீன்ஹோஸெர் 12 ஆசிரியர்கள் மற்றும் ஐந்த பேரை தன் முன்னாள் பள்ளியில் ஜேர்மனியில் இருக்கும் ஏர்பேர்ட்டில் கொன்றான். உடனடியாக ஆயுதக்கட்டுப்பாடு பற்றிய சட்டம் கடுமையாக்கப்பட்டது; மற்ற நடவடிக்கைகளும் "அமெரிக்க நிலைமை" உள்ளூர்ப்பள்ளிகளில் வெளிப்படுவதைத் தடுக்க மேற்கோள்ளப்பட்டன.

அப்பொழுதில் இருந்தே, அட்டூழியப் படுகொலைகள் அதிகரித்துள்ளன:

* நவம்பர் 20, 2006: எம்ஸ்டெட்டெனில் ஒரு 18 வயதுப் பையன் தன்னுடைய முன்னாள் பள்ளியில் கண்டபடி சுட்டதில் 11 பேர் காயமுன்றனர். இதன் பின் இதைச் செய்தவன் தன்னையே சுட்டுக் கொன்று கொண்டான்.

* பெப்ருவரி 12, 2007: குறைந்தது 10 பேர் இத்தகைய அட்டூழியத்தில் சால்ட் லேக் நகரம் மற்றும் பிலடெல்பியாவில் கொல்லப்பட்டனர். சால்ட் லேக் சிட்டியில் வணிக மையம் முன் ஒரு மனிதன் துப்பாக்கியால் சுட்டு 5 பேரைக் கொன்றான். ஒரு போலீஸ்காரர் அநத நபரைக் பின்னர் கொன்றார். பிலடெல்பியாவில் ஒரு வணிக மாநாட்டில் பங்கு பெற வந்திருந்த 3 பேர் ஒரு கிறுக்குத்தன துப்பாக்கி வெறியனால் கொல்லப்பட்டனர். துப்பாக்கி ஏந்தியவன் அதன் பின் தன்னையே கொன்று கொண்டான்.

* ஏப்ரல் 16, 2008: ஒரு மாணவன் 32பேரைக் கொன்று இன்னும் 15 பேரை வேர்ஜீனியா டெக் பல்கலைக் கழகத்தில் காயப்படுத்தினான். அமெரிக்க வரலாற்றில் மோசமான பள்ளிப் படுகொலையாக இது உள்ளது.

* செப்டம்பர் 23, 2008: ஒரு 22 வயது வேலைப் பயிற்சி கொடுக்கும் கல்லூரி மாணவன் 10 பேரை பின்லாந்தின் நகரமான Kauhajoki யில் கொன்றான். பின் தன்னையே சுட்டுக் கொண்டு இறந்தான்.

* நவம்பர் 7, 2008. பின்லாந்தில் Jokela நகரத்தில் ஒரு 18 வயது மாணவன் 8 பேரை ஒரு கல்வி மையத்தில் கொன்றான்.

* ஜனவரி 23, 2009. ஒரு 20 வயது பெல்ஜியன், டெண்டெர்மோண்டே என்னும் கிழக்கு பிளேமிய சிறு நகரில் இரு சிறு குழந்தைகளையும் மேற்பார்வையாளரையும் ஒரு பகல் பராமரிப்பு மையத்தில் கொன்றான். இன்னும் 10 சிறுவர்களும் 2 மேற்பார்வையாளர்களும் காயமுற்றனர். அதில் பலர் படு காயமுற்றனர்.

இச்சமீபத்திய அட்டூழியம்--கிட்டத்தட்ட அலபாமாவில் ஒரு 28 வயது மனிதன் தன் முழுக் குடும்பம் உட்பட 10 பேர்களைச் சுட்டுக் கொன்ற அதே நேரத்தில் நடந்தது. இது பரந்த வளர்ச்சியின் ஒரு பகுதியாகக் காணப்பட வேண்டும். பெருகிய வன்முறை என்பது பெருகிய முறையில் மனிதாபிமானமற்ற இராணுவமயமாக சமூகம் முழுவதையும் ஆக்குவதின் பிரதிபலிப்பு ஆகும்--அது அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் உலகெங்கிலும் நடைபெறுகிறது.

இந்த நிலைமையை பயன்படுத்திக் கொள்ளும் அரசியல்வாதிகள் "கொலை உணர்வு" தரும் கணினி விளையாட்டுகள் நிறுத்தப்பட வேண்டும் என்று கூறும்பொழுது காரணம், விளைவுகளை பற்றிய குழப்பத்தில் உள்ளனர். பெருகிய முறையில் கணினியில் காட்டுமிராண்டித்தன விளையாட்டுக்கள் அதிகரித்துள்ளமையே சமூகம் அதிகமாக மிருகத்தனமாக மாறிவருவதற்கான அடையாளம் ஆகும்.

இத்தகைய மனிதத்தன்மையற்ற போக்கும் அதன் விளைவுகள் இளம் உள்ளங்களில் காணப்படுவது வன்முறையான கணினி விளையாட்டுக்களை பார்க்காமலேயே உணரப்படலாம். முக்கிய நேரச் செய்தி ஒளிபரப்புக்களின்போது இது கேட்கப்படலாம், அல்லது பார்க்கப்படலாம். ஒரு சில வாரங்களுக்கு முன்புதான் படங்களும், ஒளித்திரைப்படங்களும் இஸ்ரேலிய இராணுவம் பாலஸ்தீனியர்கள்மீது காசாப் பகுதியில் நடத்திய தாக்குதலை செய்தி ஊடகத்தில் ஆதிக்கம் செலுத்திய விதத்தின் காட்டப்பட்டன. நூற்றுக்கணக்கான சாதாரணக் குடிமக்கள் தீவிர மிருகத்தனத்தின் விளைவாகப் படுகொலையுண்டனர்.

ஜேர்மனிய அதிபர் அங்கேலா மேர்க்கெல் வின்னெண்டென் குருதிப்பெருக்கு பற்றி தன் பீதியை அறிவிக்கும் அதே நேரத்தில், இஸ்ரேலிய இராணுவத்தின் பயங்கர தந்திரோபாயங்களுக்கு தன் தடையற்ற ஆதரவையும் தெரிவிக்கிறார். அவரும் முழு அரசியல் அமைப்பும், செய்தி ஊடகத்தின் முக்கிய பிரிவுகளும்தான் சமூகச் சிதைவு மற்றும் பண்பாட்டு முட்டுச்சந்தி நிலைக்கான காரணம். அவைதான் வின்னெண்டென் போன்ற துன்பியல் நிகழ்வுகளுக்கு வழிவகுக்கின்றன.

இராணுவ வன்முறை ஒவ்வொருநாளும் சமூகத்திற்குள் இருக்கும் வன்முறையுடன் சேர்ந்தே நடைபெறுகிறது. கூடுதலான மக்கள் வறிய நிலைக்கு வேலையின்மை, குறைந்த ஊதிய வேலைகள் மற்றும் சமூகநலக் குறைப்புக்கள் ஆகியவற்றால் தள்ளப்படுகின்றனர். அதே நேரத்தில் ஒரு செல்வ உயரடுக்கு தடையற்ற முறையில் பகட்டு ஆடம்பரவாழ்க்கையில் உள்ளது. அரசாங்கம், அரசியல் கட்சிகள் மற்றும் நீதித்துறை ஆகியவை இந்த நிலைத்துப் பெருகும் சமூக சமத்துவமின்மையை நியாயப்படுத்துகின்றன. சமூக ஒற்றுமை மற்றும் சமூகச் சமத்துவத்திற்கான விழைவுகள் முறையாக அடக்கப்பட்டு குறைமதிப்பிற்கு உட்படுத்தப்படுகையில், தனக்கென வாழும் முறை, சமூக உணர்வு அற்ற நிலை ஆகியவை அரிய நலன்கள் என்று பாராட்டப்படுகின்றன.

கொலைகாரச் செயல்களை தொடர்ந்ததில் Tim K ஒரு தீவிரமான வழியில் சமூகம் அவனுக்கு எதைக் கற்பித்ததோ அதை வெளிப்படுத்தினான்: பயங்கரம், வன்முறை ஆகியவற்றைப் பயன்படுத்தி ஒருவன் தன்னுடைய பிரச்சினைகளை கடக்க முற்படுகிறான் என்பதே அது.

அவனுடைய விரும்பத்தகுந்த ஆளுமைக்கும் மற்றும் வெறுப்பினால் உந்தப்பெற்ற ஆக்கிரோஷத்திற்கும் இடையே இருக்கும் முரண்பாடு, மேல் மட்டத்திற்கு கீழே குவிந்துள்ள சமூக யதார்த்தத்தினை ஒரு குரோதமான விதத்தில் பிரதிபலிக்கிறது. அன்றாட வாழ்வின் மேம்போக்கான அமைதியின் கீழே முரண்பாடுகள் பாரிய முறையில் பெருகியுள்ளன. ஆனால் இந்த முரண்பாடுகள் உத்தியோகபூர்வ அரசியலில் தமது வெளிப்பாட்டை கண்டுகொள்ள முடியவில்லை. இவைதான் பின்னர் வன்முறை வெடிப்பாக மேல்தளத்தில் ஏற்படுகின்றன.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved