World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Torture memos provoke deepening political crisis

சித்திரவதைக் குறிப்புக்கள் ஆழ்ந்த அரசியல் நெருக்கடியைத் தூண்டுகின்றன

By Tom Eley
22 April 2009

Back to screen version

ஜனாதிபதி பாரக் ஒபாமாவின் முடிவான புஷ் நிர்வாகத்தின் நான்கு சித்திரவதை பற்றிய குறிப்புக்களை வெளியிடுதல், மற்றும் சித்திரவதை செய்தவர்களை பாதுகாப்பதாக அவர் கூறிய உறுதிமொழி ஆகியவை அமெரிக்க அரசாங்கத்திற்குள் தீவிர மோதல்களை தோற்றுவித்துள்ளது. அரசாங்கத்திற்குள்ளும் உளவுத்துறைக் அமைப்புக்கும் இடையே நடக்கும் போட்டி நலன்களை சமப்படுத்த முற்பட்ட விவகாரத்தில் பெருகிய முறையில் சீரற்ற முறையில் ஒபாமா நடந்து கொண்டுள்ளது இதனால் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.

நீதித்துறைக் குறிப்புக்களை வெளியிட்டதற்காக குடியரசுக் கட்சி வலதுசாரிகளிடம் இருந்து ஒபாமா தீவிரத் தாக்குதலுக்கு உட்பட்டுள்ளார். இக்குறிப்புகள் "பயங்கரவாத சந்தேகத்திற்கு உரியவர்கள்மீது" CIA நடத்தியதற்கு ஒரு போலி சட்டப்பாதுகாப்பை கொடுக்கின்றன. திங்களன்று புஷ்ஷின் துணை ஜனாதிபதி டிக் சேனேயும் களத்தில் சேர்ந்துகொண்டு தேசிப் பாதுகாப்பை ஒபாமா ஆபத்திற்கு உட்படுத்திவிட்டார் என்ற எச்சரிக்கையை கொடுத்தார்.

அதே நேரத்தில் ஒபாமாவே சட்டபூர்வமாக ஏற்க முடியாத நிலையில் அமெரிக்க, சர்வதேச சட்டத்தை மீறி சித்திரவதைக்கு உத்தரவிட்டு, செயல்படுத்திய தனி நபர்களுக்கு பாதுகாப்பு என்ற உறுதிமொழி கொடுத்த நிலைமையில் உள்ளார். இத்தகைய பாதுகாப்பு கொடுத்தல் ஒபாமாவேயே சட்டத்தை மீறிய நிலையில் வைத்துள்ளது.

மேலும் அமெரிக்காவிலும் மற்றும் சர்வதேச அளவிலும் "பயங்கரவாதத்தின் மீதான போர்" என்ற பெயரில் நடத்தப்பட்ட கொடூரமான குற்றங்கள் பற்றி பெருகிய முறையில் மக்கள் சீற்றம் உள்ளது. ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்கு அமெரிக்க ஏகாதிபத்தியம் தலைமை வகிக்கிறது என்ற போலித்தனத்திற்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பேரடி கொடுக்கப்பட்டுவிட்டது.

பல முறை எந்த CIA முகவர்களும் விசாரணையை எதிர்கொள்ள வேண்டியதில்லை என்ற உத்தரவாதத்தை கொடுத்தபின், செவ்வாயன்று சித்திரவதைக்கு ஒப்புதல் கொடுத்த சட்டக் குறிப்புக்களை தயார் செய்த புஷ் நிர்வாகத்தின் வக்கீல்களை பற்றி விசாரிக்க கதவுகளைத் ஒபாமா திறக்க இருப்பது போல் தோன்றியது.

வெள்ளை மாளிகையில் ஜோர்டன் அரசர் அப்துல்லாவுடன் நடத்திய செய்தியாளர் கூட்டத்திற்கு பின்னர், ஒரு நிருபரின் கேள்விக்கு விடையிறுத்த ஒபாமா, "அக்காலத்தில் என்ன நடந்தது என்பது பற்றி கூடுதலான கவனமெடுக்க தேவைவந்தால், காங்கிரஸ் என்ன செய்யலாம் என்பதை இரு கட்சி முறை ஆய்வில் முடிவு எடுக்கலாம்; அது வழக்கம்போல் நடக்கும் குழு விசாரணை போல் இல்லாமல் இருக்கலாம்; ஏனெனில் அது சில நேரம் கட்சி அடிப்படையில் முறிய நேரிடலாம்; எனவே சுதந்திரமான குற்றம்சாட்டப்படமுடியாத சிறப்பும், நம்பகத்தன்மையும் பெற்றவர்கள் பங்கு கொண்டு அது பற்றி விசாரிக்கலாம், அதுதான் கூடுதலான அறிவார்ந்த செயலாக இருக்கும்..."

தான் ஒன்றும் விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும் என "கருத்து தெரிவிக்கவில்லை" என்று கவனத்துடன் இருந்த ஒபாமாவின் "இரு கட்சி முறை", "வழக்கம்போல் நடக்கும் குழு விசாரணை" ஆகியவை இவர் 9/11 குழு அறிக்கையை மூடிமறைத்த குழு போல் ஒன்றைத் தோற்றுவிக்க ஆதரவு கொடுப்பார் என்பதைக் காட்டுகிறது.

மேலும் எவ்வித விசாரணையும் உயர்மட்ட நிர்வாக அதிகாரிகள்மீது கவனம் செலுத்தாது, மாறாக நீதித்துறை வக்கீல்கள் மீது காட்டும். ஞாயிறன்று வெள்ளை மாளிகை அலுவலர்கள் தலைவரான Rahm Emanuel, "இவற்றை இயற்றியவர்கள்.... குற்ற விசாரணைக்கு உட்படுத்தப்படக்கூடாது" என்றார். திங்களன்று ஒபாமா நிர்வாக அதிகாரிகள் எமானுவல் கூறியது கொள்கைகளை செயல்படுத்த உத்தரவிட்டவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் கொள்கையை இயற்றிய வக்கீல்கள் அல்ல என்றும் இதில் John Yoo, Jay Bybee, Steven Bradbury ஆகியோர் உள்ளனர் என்றும் கூறினர்.

ஜனநாயகக் கட்சி கலிபோர்னியாவின் செனட்டர் Dianne Feinstein முன்னாக தான் தலைமை தாங்கும் செனட் உளவுத்துறைக்குழுக்கள் விசாரணையை முடிக்கும் வரை விசாரணை கூடாது எனக் கூறக்கூடாது என்ற வேண்டுகோளை ஒபாமாவிற்கு விடுத்துள்ளார்; இது முடிவடைய எட்டு மாத பிடிக்கும் என்றார் அவர்.

செவ்வாயன்று வந்த ஒபாமாவின் கருத்துக்கள் அரசாங்கத்திற்குள்ளும் மற்றும் அவருடைய நிர்வாகத்திற்குள்ளேயும் போட்டியிடும் நலன்களுக்கு இடையே, சமசீர்நிலையை காணும் அவருடைய முயற்சிகளை ஒட்டித்தான் இருந்தன. கடந்தகாலத்தில் இருந்து முறித்துக் கொள்வதுபோன்ற தோற்றத்தைக் காட்டுகையில், உண்மையில் இராணுவ/உளவுத்துறையை அரசாங்கத்தை அரசாங்கத்துள் தொடாமல் விட்டுவிடுதல் என்பதே அது.

இந்த மூலோபாயம் இதுவரை தோற்றுள்ளது. இக்குறிப்புக்கள் அமெரிக்கா "பயங்கரவாதத்தின்மீதான போர்" என்ற பெயரில் நடத்திய கொடூரங்கள் பற்றிய மக்கள் உணர்மையை உயர்த்தத்தான் பயன்பட்டன. அதே நேரத்தில் இச்சித்திரவதைகள் பற்றி விசாரிக்கவும் குற்றச்சாட்டவும் ஒபாமா மறுத்தமை அவரை மில்லியன் கணக்கானவர்களின் பார்வையில் இதற்கு உடந்தையாக இருந்துள்ளார் என்ற நிலையில் வைத்துள்ளது.

ஒபாமாவிற்கு உடனடியான கவலை என்ற முறையில், குறிப்புக்கள் வெளியீடு உளவுத்துறைக் கருவிக்குள் உள்ள சக்தி வாய்ந்த பிரிவுகளை எதிர்ப்பில் தள்ளியுள்ளது. இதுதான் திங்களன்று வேர்ஜீனியாவில் உள்ள லாங்க்லி CIA தலைமையகத்திற்கு ஒபாமாவை பயணிக்கச் செய்தது.

CIA சித்திரவதைக்காரர்களைக் பாதுகாக்க ஒபாமா உறுதிகொள்ளுகிறார்

ஊடகத் தகவல்கள் ஒபாமா லாங்லிக்கு பயணித்தது நிர்வாகத்தின் முடிவான சித்திரவதைக் குறிப்புக்களை வெளியிட்டது பற்றிய கோபத்தை குறைப்பதை நோக்கமாகக் கொண்டிருந்து என்று வலியுறுத்துகின்றன. செவ்வாயன்று நியூயோர்க் டைம்ஸ் ஒபாமாவின் முயற்சி "CIA ஐ விரோதப்படுத்துதல்" என்ற கவலைக்கு இடையே "நிலைமையை அமைதிப்படுத்த" என்றும் குறிப்பிட்டது.

இது அமெரிக்க ஜனநாயகத்தின் அதிகமான இழிநிலையை காட்டுகிறது. ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி நான்கு குறிப்புக்களை வெளியிடுகிறார். இது தகவல் அறிதல் சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கு ஒன்றுக்காக நடந்தது. இவற்றில் CIA முகவர்கள்--கூட்டாட்சி அரசாங்க ஊழியர்கள்--சித்திரவதை உட்பட பெரும் தவறான குற்றங்களைச் செய்கின்றனர். ஆயினும்கூட ஏற்கனவே விசாரணை இல்லை என்று உறுதிமொழி கொடுத்துவிட்ட ஒபாமா CIA இடம் முழந்தாளிட்டு மண்டியிட வேண்டும் என்று செய்தி ஊடகம் கருதுகிறது.

அதனுடைய நலன்கள் ஆபத்திற்கு உட்பட்டால் உளவுத்துறை மற்றும் இராணுவக் அமைப்புகள் அரசியல் தலைமைக்கு கீழ்ப்பணிந்து செயல்படாது என்ற பொதுக்கருத்து ஒபாமாவினாலும் செய்தி ஊடகத்தினாலும் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.

அவர் லாங்லியின் பேசுகையில் ஒபாமா CIA பற்றிய பெரும் பாராட்டைத் தெரிவித்தார். லாங்லியில் உரையாற்றுவது "ஒரு பெரிய கெளரவம்" என்றும் "அமெரிக்க மக்களையும் நாம் அனைவரும் போற்றும் சுதந்திரத்தையும் பாதுகாக்கும்" முகவர்களுக்கு நன்றி தெரிவித்தார். உண்மையில் CIA நீண்ட காலமாக அமெரிக்க மக்களுக்கு எதிரான சதி மையமாகத்தான் செயல்பட்டு உலகெங்கிலும் கணக்கிலடங்கா குற்றங்களை செய்துள்ளது.

தற்போதைய மற்றும் முன்னாள் CIA அதிகாரிகள் தன் நிர்வாகத்தில் கொண்டுள்ள முக்கியமான பங்கை ஒபாமா வலியுறுத்தினார்; முதலில் CIA இயக்குனரான லியோன் பனேட்டாவின் "உதவியாளர்" என புஷ் நிர்வாகத்தின் ஸ்டீபன் காப்பிஸைத் தான் தொடர்ந்து பதவியில் தக்க வைத்துக் கொண்டுள்ளது பற்றிக் குறிப்பிட்டார். 30 ஆண்டுகள் அனுபவம் உடைய மூத்த CIA அதிகாரியான காப்பெஸ்தான் உண்மையில் நிறுவனத்தை நடத்துகிறார்; பனேட்டா வெறும் பெயரளவிற்குத்தான் தலைமை தாங்குகிறார்.

இன்னும் கூடுதலான வகையில் பார்வையாளர்களுடன் இணைந்து கொள்ளும் வகையில் ஒபாமா கூறினார்: "உங்களில் ஒருவராகிய ஜோன் பிரென்னனை பயங்கரவாத-எதிர்ப்பு மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவிற்கு ஆலோசகராக நாங்கள் கொண்டுள்ளோம்....எங்கள் மந்திரிசபையில் ஒருவரும் மற்றும் மிக அசாதாரணமான முன்னாள் CIA அதிகாரியும் இயக்குனரும் [தற்பொழுதைய பாதுகாப்பு மந்திரி] பாப் கேட்ஸ் அவ்வப்பொழுது எனக்கு ஆலோசனைகளைத் தருகிறார்."

CIA மீது சில நிமிஷங்கள் புகழாரம் சூட்டியபின் தன்னுடைய வருகையின் நோக்கத்தை ஒபமா எடுத்துரைத்து கூடியிருந்த முகவர்களிடம் குறிப்புக்களை வெளியிட தான் எடுத்த முடிவு சித்திரவதை பற்றிய கொள்கையளவு அக்கறைகளுடன் தொடர்பு கொள்ளவில்லை. "நான் அடிப்படையில் அவ்வாறு செய்தது, அதுவும் பொதுமக்களுக்கு அதிக தகவல்கள் தெரிந்துள்ள நிலையில் இக்குறிப்புக்களைச் சூழ்ந்த அசாதாரண சூழ்நிலையை ஒட்டித்தான். தகவலின் இரகசியத் தன்மை எனவே சமரசத்திற்கு உட்படுத்தப்பட்டது."

இதன் பின் அவர் நிர்வாகம் CIA முகவர்களை சித்திரவதை விசாரணையில் இருந்து பாதுகாக்கும் என்று வலியுறுத்தினார். "கடந்த காலத்தில் இரகசியத் தகவல்கள் பாதுகாக்கப்பட வேண்டிய நெறிக்காக பாடுபட்டிருக்கிறேன்; வருங்காலத்திலும் பாடுபடுவேன்." என்றார் ஒபாமா. "ஒவ்வொருவரும் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும்; நீங்கள் உங்கள் பணிகளைத் தொடர்கையில், உங்கள் அடையாளங்களும் பாதுகாப்பும் காக்கப்படும்."

இதற்குப் பிறகு தனியே ஒபாமா CIA இயக்குனர் லியோன் பானெட்டாவுடனும் 50 முகவர்களுடனும் பேசினார். கூட்டம் அழுத்தத்துடன் இருந்தது என்பதற்கான அடையாளங்கள் தெரிந்தன. தனிக் கூட்டத்தைப் பற்றிக் குறிப்பிட்ட ஒபாமா, "மூத்த அதிகாரிகளுடன் லாங்லியுடன் பேசிய பின்னர் அங்குள்ளவர்கள் கவலை, அக்கறை ஆகியவற்றைத் தெரிவித்துள்ளனர்." பெயரிடாத அதிகாரியை மேற்கோளிட்டு நியூயோர்க் டைம்ஸ் கூட்டத்தின்போது சில "புகார்களும்" "குறிப்பிட்ட வினாக்களும்" எழுப்பப்பட்டன என எழுதியுள்ளது.

ஒரு அறிக்கையில் American Civil Liberties இயக்குனரான Anthony D. Romero ஒபாமாவின் உரையைக் குறை கூறினார். "சித்திரவதை ஒரு குற்றம். பொறுப்பற்ற விதத்தில் நாம் உண்மையில் "முன்னேற முடியாது"; ஏனெனில் கடந்த காலக் கறைகள் நம்மை வருங்காலத்தில் வாட்டி எடுக்கும். சட்டத்தை விட எவரும் உயர்ந்தவர் அல்ல. குற்றவிசாரணைகள்தான் சமூகத்திற்கு குற்றவாளிகள் தங்கள் கடனை சமூகத்திற்கு கொடுக்க வைப்பதின் மூலம் ஆறுதல்களைக் கொடுக்கின்றன. இது சாதாரண குற்றவாளிகளுக்குப் பொருந்துவதைப் போலவே, சித்திரவதைக்கு உத்தரவிட்ட அரசாங்க அதிகாரிகளுக்கும் பொருந்தும். சித்திரவதைக்கு உத்தரவிட்ட அதிகாரிகள், அதை நியாயப்படுத்திய வக்கீல்கள் மற்றும் சட்டத்தை முறித்த விசாரித்தவர்கறள் அனைவர் மீதும் குற்ற விசாரணை செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது. "

ஒபாமா மீது வலதுசாரித் தாக்குதல்கள்

ஒபாமா லாங்லிக்கு செல்லுதல், CIA உடன் சமாதானப்படுத்திக் கொள்ளல் ஆகியவற்றைக் கட்டாயப்படுத்தியது அரசாங்கத்தில் உள்ள செல்வாக்குள்ள நெருக்கமான அல்லது அதற்குள்ளே இருப்பவை காட்டிய எதிர்ப்புத்தான். இந்த எதிர்ப்பு தீவிரமாகியுள்ளது.

திங்களன்று சென்னி Fox News ல் தோன்றி ஒபாமாவின் முடிவை எதிர்த்தார். அது ஒரு அசாதாரணமாக தொலைக்காட்சியில் நிகழ்ச்சியாகும். தற்கால அமெரிக்க வரலாற்றில் ஒரு அபூர்வமானவகையில் தற்போதுள்ள ஜனாதிபதியை உளவுத்துறை விடயங்களுக்கு குற்றம்சாட்டியது மட்டுமல்லாது சித்திரவதை ("விரிவாக்கப்பட்ட விசாரணை உத்திகள்") வெற்றிகரமானவை, தொடரப்பட வேண்டும் என்று அவர் கூறினார்

தாக்குதலில் பங்கு பெறும் மிகமுக்கியமான ஒரே பிரமுகராக சென்னி உள்ளார். லியோன் பனேட்டாவிற்கு முன்பு CIA இல் தலைமை பதவி வகித்த மைக்கேல் ஹேடன் ஞாயிறன்று காலை Monring News Show வில் ஒபாமாவைத் தீவிரமாகத் தாக்கி, 9/11 பயங்கரவாதத் தாக்குதல்கள் நடந்த காரணம் அமெரிக்க 2001க்கு முன்பு சித்திரவதை முறையை கடைபிடிக்காததுதான் என்றார்.

மூன்று பிற முன்னாள் CIA தலைவர்களும் முன்னாள் தலைமை வக்கீல் மைக்கேல் முகசேயும் ஒபாமாவின் முடிவான குறிப்புக்களை வெளியிடுவதை எதிர்த்துள்ளனர். முன்னாள் புஷ் நிர்வாகத்தின் அதிகாரிகள் எழுதிய கருத்துக் கட்டுரைகள் வோல் ஸ்ட்ரீட் ஜர்னலில் திங்களன்றும் வாஷிங்டன் போஸ்ட்டில் செவ்வாயன்றும் வெளிவந்தன.

ஐயத்திற்கு இடமின்றி இராணுவ/உளவுத்துறை அமைப்புகளுக்குள் இன்னும் தீவிரமாக செயல்படும் சக்தி வாய்ந்த கூறுபாடுகளுக்காக பேசும் இந்த நபர்கள் CIA பயன்படுத்தும் வழிவகைகள்தான் 9/11 போன்ற தாக்குல்கள் மீண்டும் வராமல் தடுத்துள்ளன என்று கூறுகின்றனர்; வேறுவிதமாகக் கூறினால் சித்திரவதை முறையாக வேலை செய்கிறது, குறிப்புக்களை வெளியிட்டதில் ஒபாமா அமெரிக்காவின் "பயங்கரவாதத்திற்கு எதிரான போரை" ஆபத்திற்கு உட்படுத்திவிட்டார் என்று கூறுகின்றனர்

கடந்த காலத்தில் பலமுறை இருந்தது போலவே, சென்னி 9/11 ன் குருதிபடிந்த சட்டையை அசைத்துக் காட்டினார்: "நிர்வாகத்தில் நாங்கள் கொண்டிருந்த மிகப் பெரிய பணி அது போன்ற நிகழ்வு மீண்டும் நடக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்ததுதான்."

"அதைச் செய்வதற்கு சில கொள்கைகளை நடைமுறைக்குக் கொண்டுவந்தோம்" என்று அவர் கூறினார்; கிட்டத்தட்ட சித்திரவதைக் குறிப்புக்களை எழுதியது தான்தான் என்பதுபோல். "நான் படித்த அறிக்கைகள், பார்த்த அறிக்கைகள் விசாரணை முறை மூலம் நாங்கள் கற்றது மற்றும் நாட்டில் அதன் விளைவுகள் எப்படி என்பவை எல்லாவற்றையும் காட்டின." அதாவது மற்றொரு 9/11 வராமல் அமெரிக்காவைச் சித்திரவதை முறைதான் காத்தது என்பது போல்; ஆனால் 9/11 ஐச் சூழ்ந்துள்ள உண்மைகளோ இன்னமும் புதிராக உள்ளன. சென்னி இக்குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க இன்னும் அதிக குறிப்புக்களை வெளியிடுமாறு கோரினார்.

வாஷிங்டன் போஸ்ட் கட்டுரை ஒன்றில் முன்னாள் புஷ் நிர்வாகத்தின் உரை எழுதுபவர், Marc Theissen ஹேடன் கூற்றை எதிரொலிக்கும் வகையில் CIA சித்திரவதை செயல்கள் பற்றிய விவரங்களை வெளியிடுவதன் மூலம், "பயங்கரவாதிகள்" எளிதில் விசாரிப்பவர்களை எதிர்த்து நிற்க முடியும் என்று கூறியுள்ளார்.

"ஒபாமா நிர்வாகத்தின் முடிவான இந்த இரகசியத்தை பயங்கரவாதிகளுடன் பகிர்ந்துகொள்ளுவது என்பது நம்முடைய தேசியப்பாதுகாப்பை அச்சுறுத்தும்" என்று அவர் எழுதினார். "அல் குவைடா இத்தகவலையும் குறிப்புக்களில் உள்ள மற்ற விவரங்களையும் அதன் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த எடுத்துக் கொள்ளும். திட்டமிட்ட தாக்குதல்கள் பற்றி தகவல் கொடுக்காமலும் வினாக்களை எதிர்க்கவும் பயிற்சி கொடுக்கும்."

இத்தகைய வாதங்கள் அமெரிக்க மக்களின் பரந்த பிரிவில் அதிகம் எடுபடப்போவது இல்லை. மாறாக இவை இராணுவ, உளவுத்துறைக்குள் இருக்கும் எதிர்ப்பை அணிதிரட்டத்தான் பயன்படுத்தப்படும்.

ஹேடன், சென்னி இன்னும் பலரும் வலதுபக்கமிருந்து தாக்கியது விவாதத்தின் பரிமாணத்தை மாற்றும் விளைவைக் கொண்டிருந்தது. செய்தி ஊடகத்தில் பல பிரிவுகளும் இப்பொழுது குற்றங்கள் நடத்தப்பட்டனவா என்பது பற்றி இல்லாமல் CIA உடைய விசாரணை வகைகள் உண்மையில் பயனுடையதாக இருந்தனவா என்பது பற்றி குவிப்பு காட்டுகின்றன--செய்தி ஊடகம் "சித்திரவதை" என்ற சொல்லைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கிறது.

CIA க்கும் முன்னால் ஒபாமா பெரிதும் தாழ்ந்து நிற்பது ஒரு எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். ஆளும் உயரடுக்கிற்குள் ஜனநாயக உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்கு கணிசமான ஆதரவு இல்லை. அல்லது சித்திரவதை குறிப்பு நிகழ்வு எடுத்துக்காட்டுவது போல் சட்டத்தின் ஆட்சிக்கும் ஆதரவு இல்லை.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved