World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

German trade union implements wage cuts at Opel

ஜேர்மன் தொழிற்சங்கம் ஓப்பலில் ஊதிய குறைப்புக்களைச் செயல்படுத்துகிறது

By Dietmar Henning
1 May 2009

Back to screen version

கடந்த வாரம் ஜேர்மனிய தொழிற்சங்கம் IG Metall (IGM), உள்ளூர் தொழிற்சாலை தொழிலாளர் குழுவின் ஆதரவுடன் Bocuhum நகரில் உள்ள ஓப்பல் ஆலையில் தொழிலாளர்கள் மீது ஊதியக் குறைப்பை சுமத்தியது. ஜெனரல் மோட்டார்ஸின் ஐரோப்பிய துணை நிறுவனமாக ஓப்பல் உள்ளது.

பெப்ருவரி 1ம் தேதி ஆரம்பிக்கவிருந்த 2.1 சதவிகித ஊதிய உயர்வை செயல்படுத்த சட்டவிரோதமாக ஓப்பல் மறுத்து விட்டது. இதைத் தொடர்ந்து நிர்வாகம் தொழிற்சங்கத்திடம் ஊதிய உயர்வை நிறுத்தி வைப்பதற்கு இசைவு கொடுக்கமாறு கேட்டது. IGM உடனடியாக அதற்கு தான் உடன்படுவதாக அடையாளம் காட்டியது, ஆனால் உறுப்பினர்களிடம் இருந்து பலத்த எதிர்ப்பு வந்ததால் அதுபற்றி வாக்கெடுப்பு நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

வாக்கெடுப்பின்போது பல தொழிலாளர்களும் "முறைகேடுகள்", "திரித்தல்கள்" பற்றி புகார் கூறினர். பலநூறு IGM உறுப்பினர்கள் வாக்குச் சீட்டை பெறவில்லை, எனவே வாக்கு பதிவு செய்ய முடியவில்லை என்று சில தொழிலாளர்கள் கூறினர். வாக்குகள் எண்ணும் பணி பலமுறையும் ஒத்தி வைக்கப்பட்டது.

கடந்த வாரம் IGM ஒரு சிறிய பெரும்பான்மையுடன், 1,191 உறுப்பினர்கள் ஊதியக்குறைப்பிற்கும் 961 பேர் எதிர்த்தும் வாக்களித்திருந்ததாக அறிவித்திருந்தது. சிறிய வெற்றி மற்றும் வாக்குப் பதிவில் முறைகேடுகள் என்று இருந்த போதிலும்கூட, IGM அதிகாரி Oliver Burkhard, "பெரும்பாலான ஊழியர்கள் இந்த ஒப்பந்தத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்" என்று கூறினார்.

இது ஒரு பொய் ஆகும். மொத்த 5,000 ஓப்பல் Bochum தொழிலாளர்களில் கிட்டத்தட்ட 4,500 பேர் IGM உறுப்பினர்கள் ஆவர். இவர்களுள் 2,133 பேர்தான் வாக்கெடுப்பில் பங்கு பெற்றனர். மேலும் 31 வாக்குகள் செல்லாதவை என்று IGM அறிவித்துள்ளது. இதன் பொருள் 26.4 சதவிகித தொழிற்சங்க உறுப்பினர்கள்தான் உடன்பாட்டிற்கு ஆதரவு கொடுத்துள்ளனர் என்பதாகும். கிட்டத்தட்ட தொழிற்சங்க உறுப்பினர்களில் முக்கால்வாசிப் பேர் ஊதியக் குறைப்பிற்கு தங்கள் நிராகரிப்பை வெளிப்படுத்தியுள்ளனர், அல்லது IGM மீதான வெறுப்பை காட்டும் வகையில் எதிராக வாக்களித்தனர் அல்லது வாக்களிக்காமல் இருந்தனர். .

இதைத்தவிர ஓப்பல் ஆலையில் வேலைபார்க்கும் பிற நிறுவனங்களின் 2,000 தொழிலாளிகள் தேர்தலில் வாக்கு போட முடியாது. இவ்விதத்தில் ஒப்பந்தத்திற்கு ஆதரவு மிகக் குறைவு ஆகும். ஆலையில் தொழிற்சங்கத்திற்கு செல்வாக்கு குன்றிவிட்டதின் அடையாளம் ஆகும் இது.

கடந்த சில வாரங்களில் தொழிற்சாலை தொழிற்சங்கக்குழு ஊதியக் குறைப்பை தொழிலாளர் தொகுப்பு ஏற்பதற்கு இயன்றளவு அழுத்தத்தை கொடுத்தது. அவை தொழிலாளர்களிடையே அவர்கள் வேலை பற்றி பாதுகாப்பற்ற தன்மை, அச்சம் என்ற சூழ்நிலையை வளர்க்க உதவி, ஊதியக் குறைப்பை ஏற்றால்தான் வேலைகள் பாதுகாக்கப்படும் என்ற போலித் தோற்றத்தை பெருக்கினர்.

தொழிலாளர்களுடைய வீடுகளுக்கு வாக்கு அட்டையுடன் அனுப்பப்பட்ட கடிதத்தில் Burkhardஉம் மற்றொரு முக்கிய IGM அதிகாரியான Ulike Kleinebrahm ம் ஓப்பலில் தற்பொழுது உள்ள நிலைமை "விந்தையாக உள்ளது" என்று எழுதினர். அச்சுறுத்தும் வகையில் அவர்கள் கூறியதாவது: "நிறுவனத்தின் வருங்காலம் தீவிர ஆபத்திற்கு உட்பட்டுள்ளது [...] உங்களுக்கும் Bochum இற்கும் எவ்வளவு ஆபத்து என்பதை நீங்கள் அறிவீர்கள்."

தங்கள் கடிதத்தில் இருவரும் கூறியிருப்பது: "நிரந்தரமாக வேலைகள் பாதுகாக்கப்படுவதற்கும், ஓப்பலுடன் வருங்காலம் என்பதற்கும் ஒரே தீர்வு ஒரு சுதந்திரமான ஐரோப்பிய ஓப்பல் அமைப்பை நிறுவுவதுதான். இந்த இலக்கிற்காக ஐரோப்பிய நிர்வாகக் குழு "ஊழியர்கள் மீதான செலவினங்களைக் குறைக்கும்" திட்டத்தை கொண்டுள்ளனர்."

Burkhard உம் Kleinebrahm உம் அத்தகைய நடவடிக்கைக்கு தங்கள் ஆதரவை இரகசியமாக ஒன்றும் வைத்திருக்கவில்லை. தொழிலாளர்களுக்கு ஊதியக் குறைப்பு இல்லாவிடில் ஓப்பல் இருக்காது, எனவே வேலைகளும் இருக்காது என்று அவர்கள் வாதிடுகின்றனர். இவ்வாறு விவாதிக்கும் வழிவகைக்கு ஒரு சொல் உண்டு: அது அச்சுறுத்தலாகும்.

வாக்கெடுப்பு முடிவு அறிவிக்கப்பட்டபின், தொழிற்சங்கம் ஒரு செய்தி ஊடக அறிவிப்பில் கூறியது: "வடக்கு ரைன் வெஸ்ட்பாலியாவின் IG Metall ஒப்பந்தத்தில் கையெழுத்திடும்." ஊழியர்களுக்குக் கொடுக்கப்பட வேண்டிய 2.1 சதவிகிதம், நிறுவனத்தில் "தொழிலாளர் நிதியப் பங்கு பெறுதல்" என்பதற்கு ஊழியர்கள் கொடுக்கும் அளிப்பாக எடுத்துக் கொள்ளப்படலாம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். வடக்கு ரைன் வெஸ்ட்பாலியாவின் IGM கூற்றின்படி, இத்தகைய உடன்பாடுகள் ஜேர்மனியில் மற்ற ஓப்பல் ஆலைகளான Russelsheim, Eisenach, Kaiserslautern ஆகிய இடங்களிலும் செயல்படுத்தப்பட்டுள்ளன.

2.1% ஊதிய உயர்வு என்பது "ஒத்திப் போடப்பட்டுள்ளதே ஒழிய, கைவிடப்படவில்லை" என்று IGM கூறுகிறது. இதுவும் உண்மை அல்ல. ஓப்பல் பிரிக்கப்பட்டால் (அநேகமாக அப்படித்தான் நடக்கும் போல் தெரிகிறது) பின் பணம் கொடுக்கப்பட மாட்டாது. ஓப்பல் வேறு நிறுவனத்தால் எடுத்துக் கொள்ளப்பட்டால் இன்னும் அதிக குறைப்புக்கள், கணிசமான வேலைக் குறைப்புக்கள் ஆகியவை தவிர்க்கப்பட முடியாதவை ஆகும்.

ஓப்பல் Bochum இன் வாக்கெடுப்பு இரண்டு விஷயங்களை தெளிவாக்குகிறது.

முதலில் IGM மற்றும் தொழிற்சாலை தொழிலாளர் குழு ஆகியவை தங்கள் முழுக் அமைப்புகளையும் பயன்படுத்தி ஊழியர்களை ஊதியக் குறைவை ஏற்கச் செய்கின்றனர். மொத்த தொழிலாளர் தொகுப்பில் ஒரு சிறுபான்மையைத்தான் தமக்கு பின்னால் வெற்றி கொள்ளமுடிகிறது என்றாலும், தவறாக பெயரிடப்பட்ட "தொழிற்சங்கம்" நிர்வாகத்தின் ஊதியத்திட்டத்திற்கு ஆதரவைத் தொடர்கிறது.

இரண்டாவது, IGM மற்றும் அதன் அதிகாரிகள் நிர்வாகத்தின் நிறைவேற்றும் பிரிவாகக் கூடுதலாக வெளிப்படும்போது, பெருநிறுவன ஒத்துழைப்பு என்னும் தொழிற்சங்க கொள்கைக்கு எதிராக எதிர்ப்புக்களும் அதிகமாகும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved