World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Hundreds dead as Sri Lankan army launches final assault

இலங்கை இராணுவம் இறுதித் தாக்குதலை முன்னெடுக்கின்ற நிலையில் நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்துள்ளனர்

By K. Ratnayake
22 April 2009

Back to screen version

இலங்கை இராணுவம் நாட்டின் வடக்கில் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் எஞ்சியுள்ள சிறிய துண்டு நிலத்தை கைப்பற்றுவதற்கான தாக்குதலை முன்னெடுத்துள்ளது. அரசாங்கம் கூறிக்கொள்ளும் "பாதுகாப்பு" வலயத்துக்குள் ஒரு மதிப்பீட்டின் படி 100,000 பொதுமக்கள் இன்னமும் சிக்கிக்கொண்டுள்ள நிலையில் ஒரு மனிதப் பேரழிவு பற்றி தொண்டு நிறுவனங்கள் எச்சரிக்கை செய்துள்ளன.

ஐ.நா., பெரும் வல்லரசுகள் மற்றும் சர்வதேச அமைப்புக்களும் மோதல்களை நிறுத்துமாறு விடுத்துள்ள அழைப்பை அரசாங்கம் நிராகரித்துள்ளதோடு பொதுமக்களை விடுவிப்பதற்கான உலகின் "மாபெரும் விடுவிக்கும் நடவடிக்கை" என இந்தத் தாக்குதலை சிடுமூஞ்சித்தனமாக வருணிக்கின்றது. உண்மையில், கடந்த இரு நாட்களில் மாத்திரம் நூற்றுக்கணக்கான பொதுமக்களின் உயிர்களை ஏற்கனவே பலிகொண்ட யுத்தக் குற்றங்களே இடம்பெறுகின்றன.

புலிகள் மண்ணால் அமைத்திருந்த பாதுகாப்புத் தடைகளை இராணுவம் மீறியதை அடுத்து புலிகளின் கடடுப்பாட்டுப் பகுதியில் இருந்து பொதுமக்கள் வரிசை வரிசையாக வெளியேறுவதை அரசாங்கப் பிரச்சாரம் காட்சிப்படுத்தியது. கடந்த இரு நாட்கள் பூராவும் 62,000 க்கும் அதிகமானவர்களை "விடுவித்ததாக" இராணுவம் கூறிக்கொள்வதோடு கொழும்பு தொலைக்காட்சி நிலையங்களுக்கு வீடியோ காட்சிகளையும் வெளியிட்டுள்ளது. "1989 நவம்பரில் பேர்லின் சுவர் வீழ்ந்ததிலும் பார்க்க" இந்த மக்களின் வெளியேற்றம் "சுதந்திரத்துக்கான பெரும் வாக்குக்கும் குறைந்ததில்லை" என ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ தெரிவித்தார்.

அரசாங்கம் யுத்த வலயத்தில் சுயாதீனமான செய்தி சேகரிப்பையும் பெரும்பாலான தொண்டு நிறுவனங்களையும் தடை செய்துள்ளதால் சரியான எண்ணிக்கையை உறுதிப்படுத்திக்கொள்வது சாத்தியமில்லை. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பேச்சாளர் சரசி விஜேரட்ன செய்திச் சேவைகளுக்கு கருத்துத் தெரிவிக்கையில், தனது அமைப்பிடம் உள்ள தரவுகள் மிகக் குறைவாகும் -திங்கட் கிழமை 11,000 பேரும் செவ்வாய்கிழமை 5,000 பேரும் இடம்பெயர்ந்துள்ளனர் என்றார்.

தனது நடவடிக்கைகள் தொடர்பான சர்வதேச விமர்சனங்களை திசை திருப்பவும் தனது குற்றங்கள் தொடர்பாக தீவு பூராவும் உள்ள உழைக்கும் மக்களை இருட்டில் வைக்கவும் வெளியேறும் சிவிலியன்களின் எண்ணிக்கையை மிகைப்படுத்திக் காட்ட வேண்டிய அவசியம் அரசாங்கத்துக்கு உண்டு. பொதுமக்களை "மனிதக் கேடயங்களாக" பயன்படுத்துவதாக புலிகள் மீது இராஜபக்ஷ குற்றஞ்சாட்டிய போதிலும், சிக்கிக்கொண்டுள்ள பொதுமக்களின் உயிரை அலட்சியம் செய்து "இறுதி வெற்றியை" அடைய பாதுகாப்பு வலயத்துக்குள் செல்லுமாறு இராணுவத்துக்கு கட்டளையிட்டுள்ளார்.

பொதுமக்கள் தனது கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து வெளியேறுவதை புலிகள் தடுப்பது பற்றி நிச்சயமான செய்திகளை தொண்டு நிறுவனங்கள் வெளியிடும் அதே வேளை, பொதுமக்களின துன்பங்களுக்கான பிரதான காரணம் பாதுகாப்பு வலயத்தில் உள்ள கொடூரமான நிலைமையே. நிவாரண விநியோகங்களை தடுத்துள்ள இராணுவம், பத்தாயிரக்கணக்கான பொதுமக்களை உணவு, தங்குமிடம் மற்றும் மருத்துவம் இன்றி வாழத் தள்ளியுள்ளது. மக்களை விரட்டுவதற்காக திட்டமிடப்பட்ட உபாயத்தில், இராணுவம் அந்தப் பிரதேசத்துக்குள் மீண்டும் மீண்டும் கண்மூடித்தனமாக ஆட்டிலறித் தாக்குதல் நடத்துகிறது.

செஞ்சிலுவைச் சங்கத்தின் நடவடிக்கைகளுக்கான ஆணையாளர் பியெரி கிரஹென்புல் நேற்று விவரிக்கையில், தற்போதைய நிலைமையை "பேரழிவுக்கும் குறைவானதல்ல" என விவரித்தார். "எந்தவொரு பொதுமகனுக்கும் அடிப்படைத் தேவைகள் கிடைக்கவில்லை, மற்றும் போசாக்கின்மை, தொற்று நோய் ஆபத்தும் இருப்பதோடு சிகிச்சை பற்றாக்குறையின் காரணமாக உயிரிழக்கும் எண்ணிக்கையும் அதிகரிக்கின்றது," என அவர் மேலும் தெரிவித்தார்.

"1,000 க்கும் மேற்பட்டவர்களின் காயங்களுக்கு சிகிச்சை தேவைப்படுவதோடு அவர்கள் மோதல் பகுதியில் இருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டும என நாம் நம்புகிறோம். புலி போராளிகளுக்கு எதிராக அரசாங்கப் படைகள் அந்தப் பிரதேசத்தில் முன்னெடுக்கும் இறுதித் தாக்குதல்களால் பொதுமக்கள் உயிரிழக்கும் எண்ணிக்கை மேலும் துன்பகரமாக அதிகரிக்கும் என நாம் கவலையடைந்துள்ளோம்."

மட்டுப்படுத்தப்பட்ட உணவு மற்றும் மருத்து விநியோகங்களை படகு மூலம் மேற்கொள்ள பயன்படுத்தப்பட்ட புதுமாத்தளன் கிராமத்தை இராணுவம் கைப்பற்றியதை அடுத்து, திங்கள் முதல் நிலைமை மோசமடைந்துள்ளதாக செஞ்சிலுவைச் சங்கம் சுட்டிக் காட்டியுள்ளது. அந்தக் கிராமத்தில் இருந்த இடைத்தங்கள் ஆஸ்பத்திரி மூடப்பட்டுள்ளது. "அவர்களுக்கு மருத்துவ பராமரிப்பு கிடையாது. நாம் இரு தரப்பையும் மக்களைப் பாதுகாக்குமாறு கேட்டுக்கொண்ட போதும் இதுவரையும் அது நடக்கவில்லை," என செஞ்சிலுவைச் சங்க பேச்சாளர் சிமோன் ஸ்கொர்னோ தெரிவித்தார்.

பொதுமக்கள் உயிரிழக்கும் எண்ணிக்கை அதிகரிக்கின்றது. இந்த ஆண்டு குறைந்தபட்சம் 4,500 பேர் கொல்லப்பட்டும் சுமார் 12,000 பேர் காயமடைந்துமுள்ளனர் என ஐ.நா. மதிப்பிட்டுள்ளது. இந்த ஆண்டு பாதுகாப்பு வலயத்தில் குறைந்தபட்சம் 2,700 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம் கடந்த மாதம் தெரிவித்தது. கடந்த இரு நாட்களில் ஷெல் தாக்குதலால் 1,000 க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளதோடு 2,300 பேர் காயமடைந்துள்ளனர் என புலிகள் இயக்கம் தெரிவிக்கின்றது. பின்னணியில் வெடிச் சத்தங்களின் மத்தியில் பி.பி.சீ. க்கு தொலைபேசியில் பேட்டி கொடுத்த புலிகளின் பேச்சாளர் திலீபன், இராணுவம் ஆஸ்பத்திரியை, அநாதைகள் மடத்தை மற்றும் பல வீடுகளை தாக்கி, மரக்கட்டைகள் மற்றும் தற்காலிக பங்கர்களின் கீழ் ஒழிந்துகொள்ள மக்களை நெருக்கியுள்ளது என்றார்.

பாதுகாப்பு வலயத்தில் இருக்கும் தனது மாமாவுடன் தொலைபேசியில் சுருக்கமாக பேசியதாக ஈசன் கேதீசன் ஆஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டத்தாபனத்துக்கு நேற்றுத் தெரிவித்தார். "துரதிஷ்டமான முறையில் அவர் அழுது விம்மினார். அன்று நிறையபேர் கொல்லப்பட்டிருந்தனர். அவர்கள் நடக்கும் இடம் எல்லாம் சடலங்கள் கிடக்கின்றன... இம்முறை அவர்களில் நிறைய பேர் சிறுவர்கள்."

பாதுகாப்பு வலயத்தை விட்டு வெளியேறுவோரில் பலர் காயமடைந்தவர்களாவர். வவுனியா ஆஸ்பத்திரியில் நிலவும் குழப்பமான நிலைமையை நேற்று எல்லைகளற்ற மருத்துவர்கள் சங்கம் விவரித்தது. அங்கு 36 மணித்தியாலத்துக்குள் 400 பேர் அனுமதிக்கப்பட்டிருந்தனர் -ஏறத்தாள கடந்த வாரத்தை விட இது இரு மடங்காகும். "இன்னமும் பஸ்கள் வந்துகொண்டிருக்கின்றன. வரும் வழியில் காயமடைந்தவர்கள் உயிரிழந்ததால் அவர்கள் உண்மையில் பல தடவைகள் இறந்த உடல்களையே இறக்கினர்," என அந்த அமைப்பின் அதிகாரி கரேன் ஸ்டெவார்ட் தெரிவித்தார்.

"பங்கரில் வாழ்வது மற்றும் திடீரென ஒரு செல் விழுந்து அந்த பங்கருக்குள் இருந்தவர்களில் அரைவாசிப் பேரை கொல்வது போன்ற கொடூரமான விடயங்கள என்னுடன் பேசிய சுமார் 85 வீதமானவர்கள் தெரிவித்தனர். தண்ணீர் எடுப்பதற்காக சென்று திரும்பி வந்து பார்க்கும் போது பங்கரில் இருந்த அனைவரும் சடலமாகக் கிடந்தனர் என ஒர் பெண் என்னிடம் தெரிவித்தார்," என ஸ்டேவார்ட் விளக்கினார்.

பாதுகாப்பு வலயத்துக்குள் வந்துள்ளவர்களை தடுத்து வைத்திருப்பதன் மூலம், சிக்கியுள்ள பொதுமக்கள் பற்றிய அரசாங்கத்தின் கவலை போலியானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அகதிகளாக நடத்தப்படுவதற்கு பதிலாக, எதிரிகளாக நடத்தப்படுவதோடு முட்கம்பிகளாலும் பாதுகாப்பு படையினராலும் சூழப்பட்ட இழி நிலையிலான சிறை முகாம்களுக்குள் தள்ளப்பட்டுள்ளார்கள். எல்லைகளற்ற மருத்துவர்கள் சங்கத்தின்படி, வவுனியாவுக்கு அருகில் உள்ள தடுப்பு முகாம் இப்போது முற்றிலும் நிரம்பிவழிகின்றது -"சில இடங்களில் ஒரு முழு குடும்பமும் ஒரு சோபா இருக்கை அளவிலான இடத்தில் இருக்கத் தள்ளப்பட்டுள்ளன."

ஜனாதிபதி இராஜபக்ஷ, அரசாங்க அமைச்சர்கள் மற்றும் கொழும்பு ஊடகங்களும் அண்மையில் வரவுள்ள இராணுவ வெற்றியைக் கொண்டாடும் சூழ்நிலையை கிளறிவிட முயற்சிக்கின்றனர். பாதுகாப்பு வலயத்தை இராணுவம் தகர்த்து செல்வதை சித்தரிக்கும் வீடியோ காட்சிகளை காண அவர் திங்களன்று கொழும்பில் உள்ள விமானப் படை தலைமையகத்துக்கு சென்றார். "புலிகளின் முழுத் தோல்வியின் நகர்வுகள் இப்போதுதான் தொடங்கியுள்ளன. இப்போது அனைத்தும் புலிகளைப் பொறுத்தது" என அவர் வெற்றிப் பெருமிதத்துடன் பிரகடனம் செய்தார்.

புலிகள் நிபந்தனையின்றி சரணடைவதற்கு திங்கட் கிழமை பகல்வரை 24 மணித்தியால காலக்கெடு விடுத்த அரசாங்கம், தனது இறுதித் தாக்குதலுடன் முன்னேறுகிறது. இரு நாட்களுக்கு மோதலை நிறுத்துமாறு பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிரவுன் விடுத்த அழைப்பை ஜனாதிபதி ஒதுக்கித் தள்ளினார். பொதுமக்களின் அவலம் சம்பந்தமான உத்தியோகபூர்வ அலட்சியத்தை பிரதிபலிக்கும் பிரதமர் ரட்னசிறி விக்கிரமநாயக்க, அத்தகைய சர்வதேச அழைப்புக்கள் புலிகளை காப்பதற்கு திட்டமிடப்பட்ட "ஒரு பெரும் நகைச்சுவை" என விவரித்தார்.

"மனிதாபிமான யுத்த நிறுத்தத்துக்கு" அழுத்தம் கொடுக்கும் அமெரிக்காவும், பிரித்தானியாவும் ஏனைய பெரும் வல்லரசுகளும் செயற்படுவது, சிக்கிக்கொண்டுள்ள ஆயிரக்கணக்கான மக்கள் மீதான கவலையினால் அல்ல. இலங்கை இராணுவம் 2002 யுத்த நிறுத்தத்தை மீறி, பொதுமக்கள் மீது செல் வீச்சு நடத்தி அடிப்படை ஜனநாயக உரிமைகளை மீறி வந்த போதிலும், இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இந்த அரசாங்கங்கள் இராஜபக்ஷ அரசாங்கத்தை இரகசியமாக ஆதரித்து வருகின்றன. வட இலங்கையில் மனிதப் பேரழிவு தீவிலும் அயல் நாடான இந்தியாவிலும் ஸ்திரமின்மையை ஏற்படுத்தினால், அது பிராந்தியத்தில் அமெரிக்காவின் பொருளாதார மற்றும் மூலோபாய நலன்களை பாதிக்கும் என்பதே வாஷிங்டனின் பிரதான பீதியாகும்.

இராஜபக்ஷவின் "பயங்கரவாதத்தின் மீதான யுத்தத்தை" ஆதரிக்கும் மற்றும் ஆப்கானிஸ்தானிலும் ஈராக்கிலும் தனது சொந்த யுத்தத்தை முன்னெடுக்கும் இதே ஏகாதிபத்திய சக்திகளுக்கே புலிகள் தம் பங்கிற்கு தொடர்ந்தும் பயனற்ற வேண்டுகோள் விடுத்துக்கொண்டிருக்கின்றனர். திங்களன்று வெளியிடப்பட்ட புலிகளின் அறிக்கை ஒன்று, "யுத்த நிறுத்தம் செய்யுமாறு அமெரிக்காவும் சர்வதேச சமூகத்தின் ஏனைய உறுப்பினர்களும் விடுத்த அழைப்பில்" அக்கறை செலுத்துமாறு இலங்கை அரசாங்கத்துக்கு அழைப்பு விடுத்தது.

அலட்சியத்துடன் முன் செல்வதற்கு இராஜபக்ஷ அரசாங்கம் எடுத்துள்ள உறுதிப்பாடு, இலங்கை தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு கூர்மையான எச்சரிக்கையாகும். ஒரு இராணுவ வெற்றியானது கொழும்பு ஆளும் தட்டின் அதி பிற்போக்கு சக்திகளின் கைகளை மட்டுமே பலப்படுத்தும். புலிகளின் இராணுவ இயலுமையை தோற்கடிப்பது, சமாதானத்தையும் சுபீட்சத்தையும் கொண்டு வருவதற்கு பதிலாக, உழைக்கும் மக்கள் மீது புதிய தாக்குதல்களுக்கே களம் அமைக்கும். ஆழமடைந்துவரும் பொருளாதார நெருக்கடியின் மத்தியில், கடந்த 25 ஆண்டுகால யுத்தத்தில் கட்டியெழுப்பப்பட்ட பரந்த அடக்குமுறை இயந்திரத்தை, தமது வாழ்க்கைத் தரங்களை காக்க முயற்சிக்கும் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் இளைஞர்களுக்கு எதிராகப் பயன்படுத்த அரசாங்கம் தயங்காது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved