World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Mounting civilian death toll in Sri Lankan war

இலங்கையில் உயிரிழக்கும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது

By our reporter
25 April 2009

Back to screen version

தீவின் யுத்த வலயத்தில் இருந்து எந்தவொரு சுயாதீனமான செய்தி சேகரிப்பையும் இலங்கை அரசாங்கம் தடுத்துள்ள போதிலும், பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளிடம் எஞ்சியுள்ள சிறிய தாக்குதல் திறனையும் அழிப்பதற்கு இராணுவம் முயற்சிக்கின்ற நிலையில், இராணுவத்தின் குற்றங்களின் அளவு பற்றி மேலும் ஆதாரங்கள் வெளிவருகின்றன.

நேற்று ஊடகங்களுக்கு கசிந்த ஐ.நா. அறிக்கை, கடந்த மூன்று மாதங்களில் உயிரிழந்த பொது மக்களின் எண்ணிக்கையை 6,432 என்றும் அவர்களில் பலர் சிறுவர்கள் என்றும், 13,946 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றது. ஜனவரி கடைசியில் 33 ஆக இருந்த ஒரு நாளைக்கு உயிரிழப்போரின் சராசரி எண்ணிக்கை, ஏப்பிரலில் 116 ஆக நாடகபாணியில் அதிகரித்துள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பாக இருப்பதாக கருதப்படும் அரசாங்கத்தால் சுயாதீனமாக பிரகடனம் செய்யப்பட்ட "பாதுகாப்பு" வலயத்தினுள் 5,500 க்கும் மேற்பட்ட உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. புலிகளின் பாதுகாப்பு பகுதிகளை இந்தவாரம் இராணுவம் கடந்த பின்னர் அந்தப் பிரதேசத்தில் இருந்து 100,000 வரையானவர்கள் இடம்பெயர்ந்ததை அடுத்து, கரையோரத்தில் உள்ள குறுகிய பிரதேசத்தில் இன்னமும் 50,000 க்கும் 100,000 க்கும் இடைப்பட்டவர்கள் சிக்கிக்கொண்டிருப்பதாக ஐ.நா. மதிப்பிட்டுள்ளது.

மோதல்களில் சிக்கியுள்ள பொது மக்களின் எண்ணிக்கையை மூடி மறைத்த ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கம், புலிகள் சிவிலியன்களை "மனிதக் கேடயங்களாக" பயன்படுத்திவருவதாக குற்றஞ்சாட்டி உயிரிழப்புக்களுக்கான பொறுப்பை அவர்கள் மீது சுமத்தியது. சிவிலியன்கள் அங்கிருந்த வெளியேறுவதை புலிகள் தடுக்கும் சம்பவங்களை தொண்டு நிறுவனங்கள் அறிவித்துள்ள அதே வேளை, இன்று வட இலங்கையில் ஏற்பட்டுள்ள மனித பேரவலத்துக்கான முழு பொறுப்பும், பாதுகாப்பு வலயத்தின் மீது கண்மூடித்தனமாக ஷெல் தாக்குதல் நடத்திய, நிவாரண விநியோகங்கள் அங்கு செல்லாமல் தடுத்த இராஜபக்ஷ அரசாங்கத்தையும் இராணுவத்தையுமே சாரும்.

மனிதாபிமான நெருக்கடிகள் ஒன்றும் கிடையாது என வெளியுறுவுச் செயலாளர் பாலித கோஹன நேற்று மறுப்புத் தெரிவித்தார். "எங்களுக்கு ஒரு சவால உண்டு மற்றும் எங்களுக்கு அனுபவமும் உண்டு, போதுமானளவுக்கும் மேலாக நாங்கள் அதை தீர்ப்போம்," என அவர் தெரிவித்தார். தமது இனவாத யுத்தத்தை விவரிப்பதற்கு "பயங்கரவாதத்தின் மீதான யுத்தம்" என்ற சொற்பதத்தை இலங்கை அதிகாரிகள் அமெரிக்காவிடம் இருந்து பெற்றுக்கொண்டுள்ளதைப் போலவே, அவர்கள் தமது குற்றங்கள் சம்பந்தமாக குவிந்துவரும் ஆதராங்களுக்கு பதிலளிக்க பெரும் பொய்களை சொல்லும் தந்திரத்தையும் பயன்படுத்துகின்றனர்.

ஐ.நா. புதிதாக வெளியிட்டுள்ள புள்ளி விபரங்கள் ஏற்கனவே காலங் கடந்தவையாகும். இந்த வாரம் இலங்கை இராணுவம் அதனது கடைசி தாக்குதலை முன்னெடுத்ததில் இருந்தே, சிவிலியின்களின் உயிரிழப்பு கூர்மையாக அதிகரித்துள்ளது. நேற்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பேச்சாளர் சரசி விஜேரட்ன, "அண்மைய நாட்களில் நூற்றுக்கணக்கான சிவிலியன்கள் கொல்லப்பட்டுள்ளனர் அல்லது காயமடைந்துள்ளனர்," என தெரிவித்தார்.

பாதுகாப்பு வலயத்திலான நிலைமையை விவரித்த விஜேரன்டன தெரிவித்ததாவது: "மோதல் பிரதேசத்தில் மனிதாபிமான நிலைமை மிகவும் கொடூரமாக உள்ளது. மருத்துவ ஊழியர்கள், விநியோகங்கள் மற்றும் குடி தண்ணீருக்கும் பற்றாக்குறை காணப்படுகிறது. எஞ்சியுள்ள மக்கள் முற்றிலும் மனிதாபிமான உதவியில் தங்கியிருப்பவர்கள் மற்றும் ஏப்பிரல் முதல் வாரத்தில் இருந்து அந்த பிரதேசத்துக்கு உணவு கொண்டு செல்லப்படவில்லை என்பதை நாம் அறிவோம்."

இந்த வாரம் அங்கிருந்து வெளியேறியவர்கள் தாம் எதிர்கொண்ட நிலைமைகளை தொண்டு நிறுவன ஊழியர்களுக்கும், மருத்துவ ஊழிய்ரகளுக்கும் மற்றும் ஊடகங்களுக்கும் விவரிக்கத் தொடங்கினர். புல்மோட்டை கள ஆஸ்பத்திரியை தளமாகக் கொண்டு செயற்பட்ட செஞ்சிலுவைச் சங்கத்தின் வைத்தியர் ஈ.ஜி. ஞானகுணாலன், இடம்பெயர்ந்வர்களில் பெரும்பாலானவர்கள் தீவிரமாக மனநலம் குன்றியுள்ளதாகத் தெரிவித்தார். "அவர்கள் உள ரீதியிலும் சரீர ரீதியிலும் சித்திரவதைக்கு ஆளாகியுள்ளனர். தனது கணவர் மற்றும் பிள்ளைகளுடன் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது வீட்டின் மீது ஷெல் விழுந்ததால் தனது கணவரும் பிள்ளைகளில் சிலரும் கொல்லப்பட்டதாகவும் தனது இரு கால்களையும் இழந்துவிட்டதாகவும் ஒரு பெண் தெரிவித்ததாக," அவர் கூறினார்.

வவுனியா ஆஸ்பத்திரியில் எல்லைகளற்ற மருத்துவர்கள் சங்கத்துடன் வேலை செய்யும் ஒரு சிகிச்சையாளரான போல் மக்மாஸ்டர், காயமடைந்தவர்களில் முக்கால்வாசிப்பேருக்கு வெடிகுண்டு காயங்கள் ஏற்பட்டிருப்பதாகுவும், எஞ்சியவர்களுக்கு துப்பாக்கிக் குண்டு காயங்களும் கண்ணி வெடியால் ஏற்பட்ட காயங்களும் இருப்பதாகவும் கூறினார். "நாங்கள் ஒரு தொகை துண்டிப்பு சிகிச்சைகளை செய்கிறோம். பெரும்பாலனவர்களின் கால்களின் கீழ் பகுதி கடுமையாக, மிகக் கடுமையாக காயமடைந்துள்ளன மற்றும் வெடித்துச் சிதறியுள்ளன... தாய்ப்பால் ஊட்டும் 19 வயது பெண் ஒருவருக்கு காலைத் துண்டிக்கும் சிகிச்சையை செய்ய வேண்டியிருந்தது. அவளதும் அவளது பிள்ளையினதும் எதிர்காலத்தைப் பற்றி எனக்கு திகைப்பு ஏற்பட்டது."

600 பேர் தங்கக்கூடிய ஆஸ்பத்திரி கிட்டத்தட்ட 2,000 நோயாளர்களால் நிரம்பி வழிகிறது என எல்லைகளற்ற மருத்துவர் சங்க இணைப்பாளர் லீசாபெத் லிஸ்ட் தெரிவித்தார். "ஒரு கட்டிலில் இருவரும் கட்டிலின் கீழ் ஒருவரும் அதன் இரு புறத்திலும் இருவரும் படுத்திருக்கின்றனர். அவர்கள் நடைக்கூடத்திலும் நடைபாதையின் வெளியிலும் படுத்திருக்கின்றனர்," அவர் ராய்ட்டருக்குத் தெரிவித்தார். மோதல் பிரதேசத்தில் இருந்து வந்தவர்களில் பெரும்பாலானவர்கள் பட்டினியாலும் தாகத்தாலும் தவிக்கின்றனர் என லிஸ்ட் விளக்கினார்.

இப்போது 200,000 வரை என மதிப்பிடப்பட்டுள்ள அகதிகளில் பெரும்பாலானவர்கள் கூட்டம் நிறைந்த தடுப்பு முகாம்களுக்குள் விரட்டப்பட்டுள்ளனர். இந்த முகாம்கள் சிப்பாய்களால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளன. இந்த முகாம்களில் "அவுக்கு மீறி கூட்டம் உள்ளது, தக்க தங்குமிடங்கள் போதவில்லை மற்றும் மனிதாபிமான நிலைமையை உருவாக்குவதற்கு போதுமான வளங்கள் இல்லை" என ஐ.நா. பேச்சாளர் கோர்கடன் வைஸ் விவரித்தார்.

ஐ.நா. இணைப்பாளர் நெயில் பூஹ்னே பி.பி.சீ. க்கு பேசிய போது, வவுனியாவுக்கு அருகில் உள்ள முகாம்களின் நிலைமைகளை விவரித்தார். "வயிற்றுப் போக்குள்ள குழந்தைகள், போசாக்கற்ற சிறுவர்கள் மற்றும் பெண்கள், பராமரிக்கப்படாத காயங்கள், மற்றும் பலமாதங்களாக உடுத்திக்கொண்டிருக்கும் கந்தல் துணிகளை மக்கள் உடுத்தியிருப்பதையும் நான் பார்த்தேன்."

கடந்த மூன்று ஆண்டுகளாக இராஜபக்ஷவின் குற்றவியல் யுத்தத்தை ஆதரித்த பெரும் வல்லரசுபகளின் பிரதிபலிப்புகள் முற்றிலும் பாசாங்கானவை என்பதை இந்த மனிதப் பேரவலத்தின் அளவு கோடிட்டுக் காட்டுகிறது. வியாழக்கிழமை பாதுகாப்புச் சபையில் ஒன்று கூடிய அவர்கள், இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகளை பற்றி எந்தவொரு கண்டனமும் வெளியிடாததோடு மாறாக அவர்கள் புலிகளை சரணடையக் கோருவதற்காக இந்த அழிவை பற்றிக்கொண்டனர்.

மெக்சிக்கோவின் தூதுவரும் ஐ.நா. பாதுகாப்புச் சபை தலைவருமான குளெட் ஹெல்லர் ஊடகங்களுக்கு தெரிவித்ததாவது: "புலிகள் உடனடியாக ஆயுதங்களை கீழே வைத்துவிட்டு, பயங்கரவாதத்தை கைவிட்டு, மோதல் பிரதேசத்தில் இருந்து எஞ்சியுள்ள சிவிலியன்களை ஐ.நா. உதவியுடன் அப்புறப்படுத்த அனுமதிப்பதோடு அரசியல் முன்னெடுப்பிலும் இணைய வேண்டும்." புலிகளின் தலைமைத்துவத்துக்கு எந்தவொரு மன்னிப்பும் வழங்குவதையும் அல்லது அரசியல் முன்னெடுப்புகளில் புலிகளுக்கு இடமளிப்பதையும் இலங்கை அரசாங்கம் ஏற்கனவே நிராகரித்துள்ளது.

அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் பிரட்டனும் அக்கறையின் வெளிப்பாட்டை முன்னறிவிக்கும் வகையில் உடன்பாட்டை தெரிவித்தன. தமிழ் சிவிலியன்களை காப்பாற்றுவதற்காக பிரிட்டனுடன் சேர்ந்து தலையிடும் சாத்தியம் பற்றி பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் பேர்னாட் குஷ்னெர் பிரேரித்தார். சீனா தன் பங்குக்கு ஐ.நா. பாதுகாப்புச் சபை எந்தவொரு உத்தியோகபூர்வ தீர்மானத்தையும் கொண்டுவருவதை தடுப்பதன் மூலம் இராஜபக்ஷ அரசாங்கத்தை பாதுகாக்க உதவியது. பாதுகாப்புச் சபை தீர்மானத்தை சீனா தடுத்ததை ஏனைய நிரந்தர உறுப்பு நாடுகள் எதுவும் சவால் செய்யவில்லை.

ஐ.நா. சபைக்குள் இடம்பெறும் பலவித சூழ்ச்சித் திறன்கள், அவநம்பிக்கையான நிலையில் உள்ள நூறாயிரக்கணக்கான மக்களின் அவலநிலை பற்றிய உண்மையான கவலையினால் உருவானதல்ல. மாறாக, பெரும் வல்லரசுகளில் ஒவ்வொன்றும், பிராந்தியத்தில் தனது சொந்த பொருளாதார மற்றும் மூலோபாய நலன்களை பாதுகாக்க இந்த துன்பத்தை சுரண்டிக்கொள்ள முயற்சிக்கின்றன. இந்த மனிதப் பேரழிவு இலங்கையை ஸ்திமின்மைக்குள் தள்ளுவதோடு அயல் பிராந்தியமான, குறிப்பாக இந்தியாவில் பல ஆண்டுகளுக்கு ஸ்திரமின்மைக்குள் தள்ளிவிடும் என அவர்கள் பெருமளவு அச்சமடைந்துள்ளனர்.

குறிப்பாக நாட்டின் தேசிய தேர்தல்கள் இப்போது இடம்பெறுகின்ற நிலையில், நிலைமையின் ஆபத்து பற்றி இந்திய அரசாங்கம் வெளிப்படையாக கவலை தெரிவிப்பதானது, தமிழ் நாட்டில் குவிந்துவரும் சீற்றத்தை தணிப்பதை இலக்காகக் கொண்டதாகும். இரு உயர் மட்ட இந்திய அதிகாரத்துவவாதிகளான வெளியுறவு செயலாளர் ஷிவ சங்கர் மேனனும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணனும், இராஜபக்ஷ அரசாங்கத்துக்கு புது டில்லியின் கவலையை தெரிவிக்க நேற்றுக் கொழும்புக்கு பறந்தனர்.

எந்தவொரு யுத்த நிறுத்தத்தையும் ஏற்கனவே நிராகரித்துள்ள இலங்கை அரசாங்கம், நெருக்கடியின் அளவை மதிப்பிட யுத்த வலயத்துக்கு ஐ.நா. மனிதாபிமான குழுவை அனுப்ப கடந்த வியாழனன்று ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் விடுத்த பிரேரணையையும் நிராகரித்தது. இந்தப் பதிலானது என்ன மனித விலை கொடுத்தாவது புலிகளை நசுக்கவும் தனது அரசாங்கத்தின் யுத்தக் குற்றங்களை சாத்தியமானளவு மூடி மறைக்கவும் ஜனாதிபதி இராஜபக்ஷ உறுதிபூண்டுள்ளதையே கோடிட்டுக் காட்டுகிறது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved