World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan SEP holds final election meeting

இலங்கை சோ.ச.க. கடைசி தேர்தல் கூட்டத்தை நடத்தியது

By Sujeewa Amaranath
25 April 2009

Back to screen version

சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ.ச.க.) சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக மாணவர்கள் (ஐ.எஸ்.எஸ்.ஈ.) அமைப்பும் இன்றைய மேல் மாகாண சபை தேர்தலுக்கான கடைசி பகிரங்கக் கூட்டத்தை நடத்தின. கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் ஏப்பிரல் 21 நடந்த கூட்டத்திற்கு பெருந்தொகையான தொழிலாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள், குடும்பப் பெண்கள் மற்றும் கலைஞர்களும் வருகை தந்திருந்தனர்.

சோ.ச.க. கொழும்பு மாவட்டத்தில் 46 வேட்பாளர்களை நிறுத்தியிருந்தது. பெப்பிரவரியில் மத்திய மாகாணத்தின் நுவரெலியா மாவட்டத்திலும் வடமேல் மாகாணத்தின் புத்தளம் மாவட்டத்திலும் கட்சி தேர்தலில் போட்டியிட்டது.

கூட்டத்திற்கு முன்னதாக, சோ.ச.க. மற்றும் ஐ.எஸ்.எஸ்.ஈ. ஆதரவாளர்கள் கொழும்பில் தமிழர்கள் பெருமளவு வாழும் வெள்ளவத்தை, ஜிந்துப்பிட்டி மற்றும் கொட்டாஞ்சேனை உட்பட பல பிரதேசங்களில் பிரச்சாரம் செய்திருந்தனர். அவிஸ்ஸாவலையில் தமிழ் தோட்டத் தொழிலாளர்கள் மத்தியிலும் மற்றும் ரத்மலானை மற்றும் ஹோமாகமவில் கடுவானை போன்ற இடங்களில் உள்ள கைத்தொழில் தொழிலாளர்கள் மத்தியிலும் சோ.ச.க. குழுக்கள் பிரச்சாரம் செய்திருந்தன. சோ.ச.க. யின் தேர்தல் அறிவித்தல், உலக பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி பற்றி உலக சோசலிச வலைத் தளத்தில் வெளியான ஏனைய அறிக்கைகள் உட்பட, ஆயிரக்கணக்கான துண்டுப் பிரசுரங்களை அவர்கள் விநியோகித்திருந்தனர்.

கூட்டத்திற்குத் தலைமை வகித்த சோ.ச.க. அரசியல் குழு உறுப்பினரும் வேட்பாளருமான டபிள்யூ.ஏ. சுனில், தேர்தலும் மற்றும் கூட்டமும் நடக்கும் சூழ்நிலையை விளக்கினார். ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கம் வடக்கில் உக்கிரமாக்கியுள்ள யுத்தத்தால், முல்லைத்தீவு மாவட்டத்தில் பாதுகாப்பு வலயம் என சொல்லப்படுவதில் சிக்கிக்கொண்டுள்ள பத்தாயிரக்கணக்கான சிவிலியன்கள் மத்தியில் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

"யுத்தத்தில் ஈடுபடும் அதே வேளை, அரசாங்கமும் அதன் பல்வேறு பிரதிநிதிகளும் உலக பொருளாதார நெருக்கடி இலங்கையில் உணரப்படவில்லை என மக்களுக்கு அறிவுறுத்த முயற்சிக்கின்றனர். இப்போது அரசாங்கம் அந்நிய செலாவணி காய்ந்து போய்க்கொண்டிருக்கும் நிலையை எதிர்கொள்கின்றது... சர்வதேச நாணய நிதியத்திடம் 1.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடனைப் பெறும் முயற்சியில், அரசாங்கம் வயிற்றிலடிக்கும் திட்டங்களை அமுல்படுத்துவதையும் மற்றும் தவிர்க்க முடியாத சமூக வெடிப்புக்களை கட்டுப்படுத்த பொலிஸ்-இராணுவ அரசு தயாரிப்புக்களையும் ஏற்கனவே தொடங்கிவிட்டது," என சுனில் எச்சரித்தார்.

Photo: Vilani Peiris விலானி பீரிஸ்

சோ.ச.க. தலைமை வேட்பாளரான விலானி பீரிஸ், என்ன விலை கொடுத்தேனும் யுத்தத்தை முன்னெடுக்க இராஜபக்ஷ வலியுறுத்துவதை சுட்டிக் காட்டி உரையைத் தொடங்கினார். "வடக்கில் உள்ள மக்கள் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு பகுதிக்கு எவ்வாறு நகர்கின்றார்கள் என்பதை உற்சாகத்துடன் பார்த்தாக ஒரு கூட்டத்தில் இராஜபக்ஷ தெரிவிப்பதை தேசிய தொலைக்காட்சி ஒளிபரப்பியது. தனது சொந்த இராணுவத்தின் தாக்குதலால் தமது உறவினர்கள் கொல்லப்பட்ட, ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் உட்பட ஆயிரக்கணக்கான மக்களின் துன்பத்தை பார்க்க ஒரு ஆட்சியாளர் முடிவெடுப்பாராயின், அவரை ஒரு முற்றிலும் வங்குரோத்தான ஆட்சியின் பிரதிநிதியாகவே வர்ணிக்க முடியும்."

"சர்வதேச சக்திகள் இப்போது 'யுத்த நிறுத்தத்தை' பிரேரிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவது, இந்த மக்களின் தலைவிதி பற்றிய கவலையினால் அல்ல. தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்டுவரும் மிகப்பெரும் யுத்தக் குற்றங்களுக்கு எதிராக, அயலில் இந்தியாவின் தமிழ் நாட்டு மாநிலத்தில் அபிவிருத்தியடைந்துவரும் அமைதியின்மையால் ஆபத்துக்குள்ளாகக் கூடிய, இந்த தெற்காசியப் பிராந்தியத்தில் தமது நலன்களையிட்டே அவர்கள் அக்கறை காட்டுகின்றனர்."

ஐக்கிய தேசியக் கட்சி (யூ.என்.பி.), மக்கள் விடுதலை முன்னணி ஆகிய இரு பிரதான எதிர்க் கட்சிகளும், அரசாங்கத்தை ஆதரிப்பதோடு தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்டு வரும் பேரழிவுக்கு தமது உத்வேகமான அங்கீகாரத்தையும் வழங்கியுள்ளன, என அவர் தெரிவித்தார்.

இடதுசாரிக் கட்சிகள் என சொல்லப்படும் நவசமசமாஜக் கட்சி மற்றும் ஐக்கிய சோசலிசக் கட்சி பற்றி அவர் கருத்துத் தெரிவிக்கையில், "இந்தக் கட்சிகள் யுத்தத்தை எதிர்ப்பதாகக் கூறிக்கொள்கின்றன. ஆனால் உண்மையில் அவை சமாதான முன்னெடுப்புகள் என சொல்லப்படுவதற்கு புத்துயிரளிக்குமாறு பெரும் வல்லரசுகளுக்கு வேண்டுகோள் விடுத்துக்கொண்டிருக்கின்றன. தற்போதைய முதலாளித்துவ ஒழுங்கினுள் யுத்தத்திற்கு தீர்வு காண முடியும் என வலியுறுத்துவதன் மூலம் அவர்கள் மீண்டும் தொழிலாளர்களை குழப்ப முயற்சிக்கின்றனர். அவர்கள் இடதுசாரிகளாகக் காட்டிக்கொண்டு முதலாளித்துவ அமைப்பை பாதுகாக்கின்றனர்," என அவர் தெரிவித்தார்.

பீரிஸ் விளக்கியதாவது: "தேசியப் பிரச்சினையை தீர்ப்பது மற்றும் சமூகப் பிரச்சினைகளை அணுகுவது உட்பட ஜனநாயகப் புரட்சியின் பணிகளை இட்டு நிரப்ப, முதலாளித்துவ அபிவிருத்தி பிற்போடப்பட்ட நாடுகளின் தேசிய முதலாளித்துவத்தால் முடியாது, என்ற முடிவைத் தெரிவித்த லியோன் ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டின் அடிப்படையிலேயே சோ.ச.க. போராடுகிறது. இந்தப் பணிகளை வறிய விவசாயிகளின் ஆதரவுடன் தொழிலாளர்கள் ஆட்சியைக் கைப்பற்றுவதன் மூலம் மட்டுமே அணுக முடியும்."

ஐ.எஸ்.எஸ்.ஈ. யின் இலங்கை செயலாளர் கபில பெர்ணான்டோ, சர்வதேச ரீதியில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் அரசியல் நனவில் மாற்றங்கள் ஏற்படுவதைப் பற்றி கவனத்தை திருப்பினார். அவர் அண்மையில் வெளியான WSWS கட்டுரையை மேற்கோள் காட்டினார். அமெரிக்காவில் 33 வீதமான இளைஞர்கள் சோசலிசத்துக்கு ஆதரவு தெரிவிப்பதாக கண்ட ஒரு ஆய்வறிக்கை பற்றி அந்தக் கட்டுரை கலந்துரையாடுகிறது.

"வெகுஜனங்கள் மத்தியில் ஆழமான உட்பொருளுடன் நனவு ரீதியான பெரும் மாற்றம் ஏற்படுவதை இது சுட்டிக் காட்டுகிறது," என பெர்ணான்டோ தெரிவித்தார். சோ.ச.க.- ஐ.எஸ்.எஸ்.ஈ. தேர்தல் பிரச்சாரத்தின் அனுபவங்களை சுட்டிக் காட்டிய அவர் தெரிவித்ததாவது: "இத்தகைய நகர்வுகள் இலங்கையிலும் இடம்பெறுகின்றன. யுத்தம் மற்றும் இனவாத பிரச்சாரத்தின் அழுத்தத்தின் காரணமாக இலங்கையில் உள்ள தொழிலாளர்களும் இளைஞர்களும் குழப்பமடைந்துள்ளனர். ஆனால், அவர்களுடன் நாம் கலந்துரையாடும் போது அவர்கள் சோசலிச முன்நோக்கு பற்றி கேட்கவும் அக்கறை செலுத்தவும் தயாராக உள்ளனர்."

பிரதான உரையாற்றிய சோ.ச.க. பொதுச் செயலாளர் விஜே டயஸ், உலக முதலாளித்துவம் ஆழமான பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியில் உள்ளது என விளக்கினார். யுத்தத்துக்குப் பிந்திய சர்வதேச ஒழுங்கின் பிரதான தூணாக அமெரிக்கப் பொருளாதாரம் இருந்து வந்தது. இப்போது, அமெரிக்கா பெரிய கடன் வழங்கும் நாடு என்ற நிலையில் இருந்து பெரிய கடன்கார நாடு என்ற நிலைக்கு மாற்றமடைந்துள்ளதோடு அதன் வீழ்ச்சியானது நீண்ட விளைவுகளைக் கொண்ட பூகோள சமூக, அரசியல் மற்றும் பொருளாதார உட்பொருளைக் கொண்டுள்ளது.

Photo: Wije Dias விஜே டயஸ்

இலங்கை மீதான தாக்கம் பற்றி டயஸ் சுட்டிக் காட்டினார்: "இலங்கை பொருளாதாரம் துரிதமாக சீரழியத் தொடங்கியுள்ளது. பெப்பிரவரி மாத புள்ளி விபரங்களின்படி, ஏற்றுமதி 18.4 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது. வெளிநாட்டில் வேலை செய்யும் தொழிலாளர்கள் அனுப்பிய பணம் 3.8 வீதத்தால் குறைந்துள்ளது. தேயிலை உற்பத்தி 35.4 வீதத்தால் ஒடுங்கிப் போயுள்ள அதே வேளை, கைத்தொழில் ஏற்றுமதிகள் 13.4 வீதத்தால் வீழ்ச்சி கண்டுள்ளன.

"ஏற்றுமதியைப் பொறுத்தளவில், அவை 37.3 வீதத்தால் சரிந்துள்ளன. இந்த சரிவில் பிரதான போட்டியாளன் 31.2 வீதத்தால் வீழ்ந்துள்ள முதலீட்டுப் பொருட்களாகும். இந்த புள்ளி விபரங்கள், கைத்தொழில் உட்பட இலங்கை பொருளாதாரம் ஏறத்தாள பொறிந்து போயுள்ளதை சுட்டிக் காட்டுகின்றன."

நீண்டகால யுத்தமானது இலங்கையில் ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் தொழிலாள வர்க்கத்தை பிரிப்பதற்காக தசாப்த காலங்களாக தமிழர் விரோத பாரபட்சங்களை பயன்படுத்தி வந்ததன் விளைவேயாகும் என டயஸ் விளக்கினார். "ஆளும் கும்பலின் ஒவ்வொரு பாரபட்சமான நடவடிக்கைகளும் தொழிலாள வர்க்கத்துடன் நேரடியாகத் தொடர்பு கொண்டதாகும். 1946 மற்றும் 1947ல் நடந்த பொது வேலை நிறுத்தங்களுக்கான பதில் நடவடிக்கையாகவே 1948ல் பெருந்தோட்டத் தமிழர்களின் பிரஜா உரிமை பறிக்கப்பட்டது. 1953ல் நடந்த ஹர்த்தாலுக்கான பிரதிபலிப்பாகவே 1956ல் சிங்களம் மட்டும் அரசகரும மொழியாக ஸ்தாபிக்கப்பட்டது. இந்த ஹர்த்தாலின் போது, வடக்கு முதல் தெற்கு வரை உழைக்கும் மக்களும் ஒடுக்கப்பட்டவர்களும் ஐக்கியப்பட்டு முன்னெடுத்த ஒரு பரந்த எதிர்ப்பு இயக்கமாகும்," என அவர் தெரிவித்தார்.

"இலட்சக்கணக்கான பெருந்தோட்டத் தொழிலாளர்களை இந்தியாவுக்கு பலாத்காரமாக திருப்பியனுப்ப இலங்கை மற்றும் இந்திய பிரதமர்களுக்கிடையில் 1964ல் கைச்சாத்திடப்பட்ட சிறிமா சாஸ்திரி உடன்படிக்கை, 1963ல் நடந்த தொழிலாள வர்க்கத்தின் 21 அம்சக் கோரிக்கைக்கு ஆளும் கும்பல் எடுத்த எதிர் நடவடிக்கையாகும். 1971ல் இளைஞர்களின் கிளர்ச்சிக்குப் பிரதிபலிப்பாக, அப்போது இருந்த பண்டாரநாயக்க அம்மையாரின் கூட்டரசாங்கம், 1972 அரசியலமைப்பில் பெளத்த மதத்தை அரச மதமாக ஸ்தாபித்தது. இறுதியில், இந்த பாரபட்சங்கள் 1980 பொது வேலை நிறுத்தத்துக்கு பதிலிறுப்பாக யுத்தமாக விரிவக்கப்பட்டது. இந்த வேலை நிறுத்தத்தின் போது இலட்சக்கணக்கானவர்கள் தமது வேலையை இழந்தனர்."

புலிகளின் பிரிவினைவாத வேலைத் திட்டம் இனவாத பிளவை ஆழப்படுத்துகிறது என டயஸ் சுட்டிக் காட்டினார். "ஒரு தனியான தமிழ் அரசை அமைக்கும் முன்நோக்கு, கொழும்பில் உள்ள கும்பலின் சிங்களப் பேரினவாத நாணயத்தின் மறு பக்கமாகும். முதலாளித்துவ ஆட்சிக்கு எதிரான ஒரு பொதுப் போராட்டத்தில் சிங்கள மற்றும் தமிழ் தொழிலாளர்களும் ஒடுக்கப்பட்ட மக்களும் ஐக்கியப்படுவதை தடுப்பதே இந்த இரு சாராரதும் இலக்காகும். இந்த நிலைப்பாட்டுக்கு எதிராக, சோ.ச.க. சிங்களம் மற்றும் தமிழ் பேசும் தொழிலாளர்களின் வர்க்க ஐக்கியத்துக்காக போராடுகிறது."

1940களில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கும் உள்ளூர் ஆளும் தட்டுக்களுக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட அரசியல் தீர்வுகளின் போது ஸ்தாபிக்கப்பட்ட தேசிய அரசுகளின் செயற்கைப் பண்பில் இருந்தே இந்த இனவாதப் பிளவுகள் ஊற்றெடுக்கின்றன என அவர் விளக்கினார். "இந்த அரசுகள் பிராந்தியத்தில் உள்ள வெகுஜனங்களின் விருப்புக்கு எதிராகவும் சோசலிசப் புரட்சியை தவிர்ப்பதற்காகவும் ஸ்தாபிக்கப்பட்டன. 1940 களில் இந்தியா மற்றும் இலங்கை மட்டுமன்றி பர்மா உட்பட, தெற்காசிய சோசலிசக் குடியரசு ஒன்றியத்தை ஸ்தாபிக்க ட்ரொட்ஸ்கிஸ்டுகள் போராடினர்.

"அந்த உற்சாகமான போராட்டத்தின் தொடர்ச்சியாக, இன்று நாங்கள் இந்தியத் துணைக் கண்டத்தின் சோசலிச குடியரசு ஒன்றியத்தின் ஒரு பாகமாக ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசுக்காகப் போராடிக்கொண்டிருகின்றோம். இதற்கான முன்நிபந்தனையாக, இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து சகல துருப்புக்களும் உடனடியாகவும் நிபந்தனையின்றியும் திருப்பியழைக்கப்பட வேண்டும் என நாம் அழைப்பு விடுக்கின்றோம்."

கூட்டத்தின் முடிவில், சோ.ச.க. மற்றும் ஐ.எஸ்.எஸ்.ஈ. உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்குபற்றியவர்களுடன் கலந்துரையாடல் செய்தனர். ஒரு தொழிலற்ற 30 வயது இளைஞரான திஷான் தெரிவித்ததாவது: "மஹிந்த இராஜபக்ஷ அரசாங்கம் இராணுவ சர்வாதிகாரத்தை நோக்கி அடியெடுத்து வைக்கின்றது என நான் நினைக்கின்றேன். அவ்வாறிருந்த போதிலும், வாழ்க்கைத் தரம் வீழ்ச்சி, தனியார்மயமாக்கம் மற்றும் வேலையின்மைக்கு எதிராக மக்கள் தவிர்க்க முடியாமல் போராட முன்வருவார்கள். யூ.என்.பி., ஜே.வி.பி, ஆகிய எதிர்க் கட்சிகளிடம் எந்தவொரு மாற்றீடும் கிடையாது. இவற்றுக்கு எதிராக, தொழிலாள வர்க்கத்துக்கு ஒரு சுயாதீனமான வேலைத் திட்டத்துடன் உங்களது கட்சி இந்த தேர்தலில் தலையிடுவது மிகவும் முக்கியமானது. உங்களது உத்வேகத்தை நான் பாராட்டுகிறேன்."

ஸ்ரீலங்கா டெலிகொம் பொறியியலாளர் தெரிவித்ததாவது: "நான் தமிழ். நான் வடக்கில் பிறந்தவன். நான் யுத்தத்துக்கு முடிவுகட்டும் ஒரு வேலைத் திட்டத்தை தேடிக்கொண்டிருக்கின்றேன். நேற்று நான் விக்கிரமபாகு கருணாரட்னவின் [நவசமசமாஜக் கட்சி] கூட்டாளிகளின் உரைகளைக் கேட்க இங்கு வந்தேன். தாம் தமிழர்களின் உரிமைகளுக்காப் போராடுவதாக அவர்கள் கூறிக்கொண்ட போதிலும், எவரும் ஒரு வேலைத் திட்டத்தை முன்வைக்கவில்லை. வெற்று உறுதிமொழிகளையே வழங்கினர். அவற்றுக்கு மாறாக, நீங்கள் யுத்தத்தின் வேர்களை தெளிவுபடுத்துவதோடு ஒரு உறுதியான வேலைத் திட்டத்தை முன்வைக்கின்றீர்கள். அதை நீங்கள் முன்வைக்கும் விஞ்ஞானப்பூர்வமான விதத்தை நான் மெச்சுகிறேன். ஆம் தொழிலாள வர்க்கத்தால் மட்டுமே இந்த பிரச்சினையைத் தீர்க்க முடியும்."


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved