World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

New evidence of Sri Lankan army atrocities

இலங்கை இராணுவக் கொடுமைகள் பற்றிய புதிய ஆதாரங்கள்

By K. Ratnayake
4 May 2009

Back to screen version

அரசாங்கம் மறுப்பறிக்கைகளை வெளியிட்ட போதிலும், மோதல்களில் சிக்கிக்கொண்டுள்ள ஒரு மதிப்பீட்டின் படி 50,000 பொது மக்களின் மரண ஓலத்தை அலட்சியம் செய்தவாறு தமிழீழ விடுதலைப் புலகளுக்கு எதிரான இலங்கை இராணுவத்தின் தாக்குதல்கள் தொடர்கின்றன.

அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு வலயத்தின் மீது இராணுவம் தொடர்ந்தும் வெள்ளி மற்றும் சனி கிழமைகளில் ஷெல் தாக்குதல்களை நடத்தியதோடு முள்ளிவாய்க்காலில் உள்ள இடைத்தங்கள் ஆஸ்பத்திரியையும் தாக்கியுள்ளன. அந்த ஆஸ்பத்தரியில் வேலை செய்யும் துரைராஜா வரதராஜா, 60க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டதாகவும் மேலும் 87 பேர் காயமடைந்துள்ளதாகவும் சனிக்கிழமை தொலைபேசி மூலம் அல் ஜஸீராவுக்குத் தெரிவித்தார்.

"நேற்று ஆஸ்பத்திரி மீது ஷெல் தாக்குதல் நடத்தப்பட்டது.... இன்றும் நடந்தது, காலையில் பிரதானமாக ஆஸ்பத்திரி முன்னாலும் மற்றும் வேறு இடங்கள் மீதும் தாக்குதல் நடந்தது. இன்று [இரு தடவைகள்] ஆஸ்பத்திரி பகுதியில் ஷெல் விழுந்ததில் 60 முதல் 70 வரையானவர்கள் கொல்லப்பட்டனர். 87 பேர் காயமடைந்தனர்," என வரதராஜா தெரிவித்தார்.

முன்னரங்குப் பகுதிகளில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் இந்த ஆஸ்பத்திரி அமைந்திருப்பதாகவும், ஷெல் வீச்சுக்கள் அரசாங்க துருப்புக்களாலேயே நடத்தப்பட்டன என்பதில் சந்தேகம் இல்லை என்றும் அந்த வைத்தியர் இன்டிபென்டன்ட் என்ற ஊடகத்துக்கு பிரத்தியேகமாக வழங்கிய பேட்டியில் தெரிவித்தார். இரு வைத்தியர்களுடன் மேற்கொண்ட தொடர்புகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட பி.பி.சி. கட்டுரையொன்று 91க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளதோடு சேதங்களை காட்டும் படங்களையும் வெளியிட்டிருந்தது.

இந்த கூற்றுக்களை அரசாங்க மற்றும் இராணுவ அதிகாரிகள் முழுமையாக நிராகரித்தனர். இந்தச் செய்திகள் புலி ஆதரவாளர்களின் "மிகைப்படுத்தப்பட்ட கதைகள்" என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார நிராகரித்தார். "அங்கு ஷெல் தாக்குதல்கள் நடத்தப்படவில்லை, இந்த இடத்தின் மீது நாங்கள் ஷெல் தாக்குதல் நடத்தவேயில்லை மற்றும் இது புலிகள் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களிலேயே இடம்பெற்றுள்ளன," என்று தெரிவித்தார்.

இந்த மறுப்பை நம்ப முடியாது. கடந்த மாதம், குவிந்துவந்த சர்வதேச அழுத்தங்களின் கீழ், பாதுகாப்பு வலயத்தைக் கைப்பற்றுவதற்கான தனது நடவடிக்கையில் சகல கனரக ஆயுதங்களையும் பயன்படுத்துவதை நிறுத்துவதாக இலங்கை அரசாங்கம் அறிவித்தது. பெப்பிரவரி 12 அன்று பாதுகாப்பு வலயத்தை அறிவித்த அரசாங்கம், அதன் மீது ஆட்டிலறி மற்றும் விமானத் தாக்குதல்கள் நடத்துவதில்லை என முன்னரும் மறுப்புத் தெரிவித்துள்ளது.

எவ்வாறெனினும், பாதுகாப்பு வலயத்தில் குண்டுகள் மற்றும் ஆட்டிலறித் தாக்குதல்களால் ஏற்பட்ட நிலக்குழிகளை காட்டும் செய்மதி புகைப்படங்கள் அடங்கிய ஐ.நா. உள்ளக அறிக்கையொன்று ஊடகங்களுக்கு கசிந்திருந்தது. "பொதுமக்கள் பாதுகாப்பு வலயத்தின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளுக்குள், ஷெல் வீச்சுக்கள் மற்றும் விமானத் தாக்குதல்களின் விளைவாக ஏற்பட்ட கட்டிட இடிபாடுகள் மற்றும் சேதங்களின் புதிய அறிகுறிகள் காணப்படுகின்றன," என அது தெரிவிக்கின்றது. இந்தப் புகைப்படங்கள் பெப்பிரவரி 15 மற்றும் ஏப்பிரல் 19க்கும் இடைப்பட்ட காலத்தில் எடுக்கப்பட்டுள்ளன.

வெளியுறவு செயலாளர் பாலித கோஹன இராணுவம் இப்பிரதேசத்தின் மீது தாக்குதல் நடத்தியதை முதலில் ஏற்றுக்கொண்ட போதிலும், பொதுமக்களுக்கு பாதிப்பில்லை எனக் கூறிக்கொண்டார். "[புலிகளின்] பதில் தாக்குதல்கள் சமவிகிதமாக இருக்கும் வரை, அது தெளிவாக நியாயப்பூர்வமானது மற்றும் நாங்கள் துல்லியமாக செய்தது என்னவெனில், இந்த துப்பாக்கிகள் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து அவற்றுக்கு எதிராக பதில் தாக்குதல்களை நடத்தியதே," என அவர் கூறினார்.

இந்த ஏற்றுக்கொள்ளல் கூட உடனடியாக தலைகீழாக மாற்றப்பட்டது. கோஹனவின் கருத்துக்களின் பின்னர் வெளியிடப்பட்ட பாதுகாப்பு அமைச்சின் அறிக்கையொன்று பிரகடனப்படுத்தியதாவது: "இத்தகைய படங்கள் பற்றிய பொருள் விளக்கங்களில் இருந்து எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு விஞ்ஞானப்பூர்வமான செல்லுபடியாகும் தன்மை கிடையாது." இந்த புகைப்படங்கள் புலிகளின் "சதியாக" இருக்கக் கூடும் என பாதுகாப்புப் பேச்சாளர் கேஹெலியே ரம்புக்வெல்ல தெரிவித்தார். ஆயினும், யுனோசட் வரைபட பிரிவின் தலைவர் எய்னர் பிஜோர்ஜ், இந்தப் புகைப்படங்கள் "நம்பத்தக்கவாறு தெளிவானது" என வலியுறுத்தியுள்ளார்.

பாதுகாப்பு வலயத்தை கைப்பற்றுவதற்கான தாக்குதலை இலங்கை இராணுவம் தொடர்கின்றது. முல்லைத்தீவுக்கான ஏ 35 வீதியை தடுத்திருந்த 500 மீட்டர் நீளமான மண் மேட்டு பாதுகாப்பு அரணை இராணுவம் கைப்பற்றியுள்ளதாக ஞாயிற்றுக் கிழமை ஊடகங்களுக்கு பிரிகேடியர் நாணயக்கார தெரிவித்தார். நான்கு இராணுவப் படையணிகள் மோதல்களில் ஈடுபடுகின்றன.

நாணயக்கார பல புலி போராளிகள் மோதல்களில் கொல்லப்பட்டதாகத் தெரிவித்த போதிலும் இராணுவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை கூறவில்லை. கடந்த அக்டோபரில் இருந்தே, குறிப்பிட முடியாத "பாதுகாப்பு காரணங்களால்" இராணுவத்தில் உயிரிழப்பவர்களின் விபரங்களை வெளியிட அரசாங்கம் மறுத்துவிட்டது. உண்மையில், வறிய கிராமப்புற இளைஞர்கள் மத்தியில் இருந்து சேர்க்கப்படும் சிப்பாய்கள் உயிரிழக்கும் எண்ணிக்கை அதிகரித்துவருவது தொடர்பாக வெகுஜன எதிர்ப்பு வெடிக்கும் என்பதையிட்டு அரசாங்கமும் இராணுவமும் கவலைகொண்டுள்ளன.

பாதுகாப்பு வலயத்தில் சிக்கிக்கொண்டுள்ள தமிழ் பொதுமக்கள் மீது அதிக கவனம் செலுத்துமாறு கடந்த வாரம் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் தெற்காசிய நடவடிக்கைகளுக்கான உப தலைவர் மொனிகா ஸனாரெல்லி வேண்டுகோள் விடுத்தார். "இன்னமும் மோதல் பிரதேசத்தில் இருக்கும் இடம்பெயர்ந்த, சுகயீனமுற்றுள்ள மற்றும் காயமடைந்துள்ள ஆயிரக்கணக்கான மக்களின் அழிவுகரமான நிலைமையில் அக்கறை கொண்டு, அனைத்து தரப்பினரும் அவர்களைப் பாதுகாக்க மேலும் நடவடிக்கை எடுக்கவேண்டும், மற்றும் அந்தப் பிரதேசத்துக்கு மேலும் உணவும் மருந்துப் பொருட்களும் அனுப்பிவைக்க வேண்டும்," என அவர் தெரிவித்தார்.

பாதுகாப்பு வலயத்துக்குள் போதுமானளவு உணவு, தண்ணீர் மற்றும் மருந்துப் பொருட்களை அனுமதிப்பதில்லை. அங்கிருந்து வெளியேறுவதில் சமாளித்துக்கொண்டவர்களில் பலர், காயமடைந்து, மெலிந்தும் உள்ளதோடு ஈரப்போக்கை அனுபவிக்கின்றனர். அவர்கள் இராணுவக் கட்டுப்பாட்டிலான முகாம்களுக்குள் தள்ளப்பட்டு யுத்தக் கைதிகளாக நடத்தப்படுகின்றனர். அங்கிருந்து வெளியேற எவரும் அனுமதிக்கப்படுவதில்லை மற்றும் பார்வையாளர்களும் உட்செல்ல அனுமதிக்கப்படுவதில்லை.

"இடம்பெயர்ந்துள்ள சகல மக்களதும் பாதுகாப்பையும் மற்றும் உணவு, மருத்துவ வசதி, சுத்தமான நீர் மற்றும் சுகாதாரம் அவர்களுக்கு கிடைப்பதையும் உறுதிப்படுத்த வேண்டியது அதிகாரிகளின் பொறுப்பாகும்... இடம்பெயர்ந்துள்ள மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ள நடமாடுவதற்கான கட்டுப்பாடுகளை அகற்றுவதற்கான கால நேரத்தை தெளிவுபடுத்துவதோடு மீள் குடியேற்ற நடவடிக்கைகள் எப்போது ஆரம்பிக்கப்படும் என்பதையும் அறிவிக்க வேண்டும்" என ஸனாரெல்லி வலியுறுத்தினார்.

இலங்கைக்கான ஐ.நா. பேச்சாளர் கோர்டன் வைஸ் ஊடகங்களுக்குத் தெரிவித்ததாவது: "கடந்த 10 நாட்களில் வந்து சேர்ந்துள்ள மக்கள், மெலிந்து, பலவீனமாகி, பெருந்தொகையான யுத்தக் காயங்களுடன் இருக்கின்றனர். அந்தப் பிரதேசத்தில் தீடீரென அதிகரித்து பெருமளவு மக்கள் தொகையினால் மருத்துவ வசதிகளை சமாளிக்க இன்னமும் போராட வேண்டியுள்ளது."

ஜனவரி மாதத்தில் இருந்து தடுத்து வைக்கப்பட்டுள்ள சிவிலியன்களின் எண்ணிக்கை 188,022. பெரும்பகுதி வவுனியா நகரில் உள்ள 32 முகாம்களில் வாழும் அதே வேளை, ஏனையவர்கள் யாழ்ப்பாணக் குடாநாட்டிலும் மற்றும் வடக்கில் திருகோணமலை நகரிலும் உள்ளனர். காயமடைந்தவர்கள் மற்றும் சுகயீனமுற்றவர்களால் ஆஸ்பத்திரிகள் நிரம்பி வழிகின்றன; பலருக்கு இன்னமும் சிகிச்சையளிக்கப்படவில்லை.

முகாம்கள் முற்கம்பிகளால் சுற்றி வைளைக்கப்பட்டுள்ளதோடு இராணுவத்தினர் காவல் இருக்கின்றனர். கடந்த வாரம், இந்த தடுப்பு நிலையங்களை மேற்பார்வை செய்வதற்காக முன்நாள் யாழ்ப்பாண இராணுவத் தளபதி மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளின் தலைவருமான, மேஜர் ஜெனரல் ஜ.ஏ. சந்திரசிரியை அரசாங்கம் நியமித்தது.

"வெளியார்" முகாம்களுக்குள் நுழைவது பாதுகாப்பு படையினருக்கு "சிரமங்களை ஏற்படுத்துகிறது" என பிரகடனம் செய்த பாதுகாப்பு அமைச்சு, கடந்த வியாழக்கிழமை முகாம்களுக்குள் நுழைவதற்கு மேலும் கட்டுப்பாடுகளை விதித்தது. பாதுகாப்பு அமைச்சின் முன்கூட்டிய அனுமதியின்றி சகல குழுக்கள் மற்றும் தனி நபர்களும் இப்போது வவுனியாவுக்கு செல்வது தடை செய்யப்பட்டுள்ளது.

தமிழ் அகதிகள் எதிர்கொள்ளும் கொடூரமான நிலைமைகள் மற்றும் இலங்கை இராணுவத்தின் குற்றங்கள் பற்றி சுயாதீனமாக செய்தி எழுதுவதை தடுப்பதற்கு அரசாங்கமும் இராணுவமும் எடுத்துள்ள இன்னுமொரு முயற்சியே இந்த அறிவித்தல் ஆகும். வடக்கில் யுத்த வலயத்தில் ஏற்கனவே ஒரு உத்தியோகபூர்வ ஊடக இருட்டடிப்பு இருந்துகொண்டுள்ளது.

இலங்கை அரசாங்கம் வடக்கில் யுத்தத்தை நிறுத்துமாறு பெரும் வல்லரசுகள் விடுக்கும் அழுத்தத்தை எதிர்கொள்கிறது. கடந்த வாரம், தற்காலிக யுத்த நிறுத்தமொன்றைக் கோருவதற்காக பிரிட்டிஷ் வெளியுறவுச் செயலாளர் டேவிட் மிலிபன்ட் மற்றும் பிரான்ஸ் வெளியுறுவு அமைச்சர் பேர்னாட் குஷ்னரும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதர்களாக இலங்கைக்கு வந்திருந்தனர். அரசாங்கம் அந்த வேண்டுகோளை நிராகரித்ததோடு தூதுதவர்களை முன்னரங்குப் பகுதகளுக்கு செல்ல அனுமதிக்கவில்லை.

யுத்த நிறுத்தத்துக்காக இலங்கை அரசாங்கத்தை நெருக்குமாறு நேற்று மிலிபன்டுக்கும் குஷ்னருக்கும் புலிகள் இன்னுமொரு அவநம்பிக்கையான வேண்டுகோளை விடுத்தனர். இரு வெளியுறவு அமைச்சர்களும் மீண்டும் மீண்டும் புலிகள் மீதான தமது பகைமையை பிரகடனம் செய்ததோடு அண்மையில் புலிகள் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும் என அழைப்புவிடுத்து ஐ.நா. பாதுகாப்புச் சபை விடுத்த அறிக்கையையும் அவர்கள் ஆதரித்ததனர். புலிகளின் இந்த பயனற்ற வேண்டுகோளானது அவர்களின் தனியான முதலாளித்துவ அரசு முன்நோக்கின் வங்குரோத்தின் தொடர்ச்சியாகும் -இந்த வேலைத் திட்டம் எப்போதும் ஏதாவதொரு ஏகாதிபத்தியத்தின் ஆதரவையே நம்பியிருக்கின்றது.

.

கடந்த வார விஜயத்தின் காரணத்தை பி.பி.சி. க்கு விளக்கிய மிலிபன்ட், "இது ஒரு உள்நாட்டு யுத்தம், இது பிராந்திய ரீதியில் பரந்தளவு தாக்கத்தை ஏற்படுத்துவதோடு, பிரமாண்டமானளவு அவசர மனிதத் தேவைகளையும் கொண்டிருப்பது தெளிவு," என கூறினார். "பிராந்திய தாக்கங்கள்" எனக் குறிப்பிடுவதானது, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் அதே போல் அமெரிக்காவினதும் பிரதான கவலை சிவிலியன்களின் அவலத்தை பற்றியதல்ல, மாறாக, யுத்தம் ஸ்திரமின்மையை ஏற்படுத்தும் என்பதைப் பற்றியதே என்ற உண்மையை கோடிட்டுக் காட்டுகிறது. இந்த யுத்தம் குறிப்பாக தென்னிந்தியாவில் தமிழ்நாட்டில் ஸ்திரமின்மையை ஏற்படுத்துவதோடு மற்றும் அது இந்த நாடுகளின் மூலோபாய மற்றும் பொருளாதார நலன்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

கொழும்பு அராசங்கத்தின் யுத்தத்துக்கு ஆதரவளிப்பதோடு இலங்கைக்கு உதவியும் முதலீடும் வழங்கும் சீனாவின் செல்வாக்கு வளர்ச்சி கண்டுவருதைப் பற்றியே அமெரிக்கா குறிப்பாக அக்கறை காட்டுகிறது. அமெரிக்கா, சீனாவை ஆசியாவிலும் மற்றும் சர்வதேசரீதியிலும் சாத்தியமான மூலோபாய எதிரியாகக் கருதுகிறது.

மிலிபன்ட் மற்றும் குஷ்னரின் விஜயத்துக்கு பதலளித்த ஜனாதிபதி இராஜபக்ஷ கடந்த வியாழக்கிழமை பிரகடனம் செய்ததாவது: "அரசாங்கம் பயங்கரவாதிகளுடன் எந்தவிதமான யுத்த நிறுத்தத்துக்கும் செல்ல தயாரில்லை. இந்த நாட்டின் மக்களைக் காக்க வேண்டியது எனது கடமை. மேற்கத்தைய பிரதிநிதிகளின் விரிவுரைகள் எனக்குத் தேவையில்லை... ஆப்கானிஸ்தானுக்கு குண்டு வீசப்படுவது எப்படி என்பதை நாம் பார்த்துள்ளோம். ஏனையவர்களைக் குற்றஞ்சாட்டுவதற்கு முன்னதாக, நீங்கள் என்ன செய்கின்றீர்கள் என்பதை தெரிந்துகொள்வதற்கு உங்களுக்கு பலம் இருக்க வேண்டும் என்ற விடயத்தை தெளிவுபடுத்த வேண்டும்."

ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் மீது அமெரிக்கத் தலைமையிலான ஆக்கிரமிப்பை எதிர்ப்பதற்கு மாறாக, இராஜபக்ஷவின் அரசாங்கம் உட்பட ஆட்சியில் இருந்த கொழும்பு அரசாங்கங்கள், இத்தகைய நவ-காலனித்துவ நடவடிக்கைகளை ஆதரித்தன. இராஜபக்ஷ தனது சொந்த "பயங்கரவாதத்தின் மீதான யுத்தத்துக்கும்" இலங்கை இராணுவம் இழைத்துக்கொண்டிருக்கும் சகல குற்றங்களுக்கும் ஏகாதிபத்தியத்தின் நிபந்தனையற்ற ஆதரவை கோருகின்றார்.

இராஜபக்ஷவின் யுத்தப் பேரிகை தொழிலாள வர்க்கத்திற்கு தெளிவான எச்சரிக்கையாகும். பிரமாண்டமான யுத்தச் செலவுகள் மற்றும் பூகோள பொருளாதார பின்னடைவாலும் ஆழமடைந்துவரும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இந்த அரசாங்கம், தமது வாழ்க்கை மற்றும் சமூக நிலைமைகளை காக்க முயற்சிக்கும் உழைக்கும் மக்களின் எந்தவொரு எதிர்ப்பையும் தாங்கிக்கொள்ளாது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved