World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

A socialist answer to the capitalist crisis

Statement of the Socialist Equality Party (Germany)

முதலாளித்துவ நெருக்கடிக்கு ஒரு சோசலிச தீர்வு

ஜேர்மன் சோசலிசச் சமத்துவக் கட்சியின் அறிக்கை
5 May 2009

Back to screen version

சோசலிச சமத்துவ கட்சி (Partei fur Soziale Gleichheit- PSG), ஜூன் 7ம் தேதி நடைபெறும் ஐரோப்பியத் தேர்தல்களில் தேசியரீதியாக வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. எங்கள் நோக்கம் ஐரோப்பா முழுவதும் உள்ள உழைக்கும் மக்களைக் கொண்டு ஒரு புதிய கட்சியைக் கட்டமைப்பதாகும். அது நடைமுறையில் இருக்கும் கட்சிகளிடம் இருந்து சுயாதீன முறையில் அரசியல் நிகழ்வுகளில் குறுக்கீடு செய்ய வேண்டும். எங்கள் இலக்கு பெருவணிகத்தின் இலாப நலன்களுக்கு மேலாக சமூகத் தேவைகளை முன்னிறுத்தும் ஒரு சோசலிச சமூகத்தை நிறுவுதல் ஆகும். பெருநிறுவனங்களினதும், வங்கிகளின் ஒரு கருவியான ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிராக நாங்கள் ஐரோப்பாவை ஒரு சோசலிச அடிப்படையில் ஒன்றுபடுத்த வேண்டும் என்பதை முன்வைக்கின்றோம்.

1930களுக்குப் பிறகு மிக ஆழ்ந்த உலகந்தழுவிய பொருளாதார நெருக்கடியின் மத்தியில் 2009 ஐரோப்பிய தேர்தல்கள் நடைபெறுகின்றன. தொழில்துறை உற்பத்தி மிக அதிகமான முறையில் குறைந்துவிட்டது, வேலையின்மை இதுகாறும் இல்லாத அளவிற்கு உயர்ந்து கொண்டு வருகிறது. மேல்மட்டத்திற்கு கீழே பாரிய சமூகப் புயல் உருவாகிக் கொண்டிருக்கிறது. அத்தகைய புயலை அரசியல்ரீதியாக ஒரு முற்போக்கான திசையில் இயக்குவது மற்றும் அதற்கான தயாரிப்புக்களை மேற்கொள்ளுவது என்பதைத்தான் எங்கள் பணியாக நாங்கள் காண்கிறோம். மூலதனத்தின் அதிகாரத்தை உடைத்து தொழிலாளர் அரசாங்கங்களை நிறுவக்கூடிய ஒரு சோசலிச வெகுஜன இயக்கத்திற்கான அடித்தளத்தை அமைக்க நாங்கள் விரும்புகிறோம்.

நாங்கள் ஒரு சக்திவாய்ந்த வரலாற்று மரபினை கொண்டுள்ளோம். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஜேர்மனியப் பிரிவு என்ற முறையில், சோசலிச சமத்துவ கட்சி டிராட்ஸ்கிய இயக்கத்தின் தொடர்ச்சியை உள்ளடக்கியுள்ளது. அவர்தான் மார்க்ஸிஸத்தை ஸ்டாலினிசம், சமூக ஜனநாயகம் ஆகியவற்றிற்கு எதிராக மிகக் கடினமான சூழ்நிலையில் பாதுகாத்தார். பிரிட்டனில் உள்ள சோசலிசச் சமத்துவக் கட்சியுடன் நாங்கள் நெருக்கமாக ஒத்துழைக்கிறோம். அதே போல் ஐரோப்பா, அமெரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா ஆகிய இடங்களில் உள்ள எங்கள் சக சிந்தனையாளர்களுடனும் இணைந்து செயலாற்றுகிறோம்.

முதலாளித்துவத்தின் நெருக்கடி

தற்பொழுதைய பொருளாதார நெருக்கடி தனிப்பட்ட நபர்களின் பேராசையின் விளைவு மட்டும் அல்லாது, முழு முதலாளித்துவ முறையின் திவால்தன்மையின் விளைவாகும். முதலாளித்துவத்தின் உள்முரண்பாடுகள் தவிர்க்க முடியாமல் ஒரு புரட்சிகர நெருக்கடிக்கு இட்டுச் செல்லும் என்னும் கார்ல் மார்க்ஸின் பகுப்பாய்வை இது உறுதிபடுத்துகிறது.

கடந்த 12 மாதங்களில் இந்த நெருக்கடி கிட்டத்தட்ட $50 டிரில்லியன் மதிப்புள்ள சொத்துக்களை அழித்துவிட்டது. இது உலகின் ஓராண்டு பொருளாதார உற்பத்திக்கு சமனாகும். சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) கொடுத்துள்ள மதிப்பீடுகளின்படி, 50 மில்லியன் மக்கள் இந்த நெருக்கடியின் விளைவாக இந்த ஆண்டு வேலைகளை இழப்பர். வறுமையில் இருப்பவர்களுடைய எண்ணிக்கை 200 மில்லியனாக உயரும், குழந்தைகள் இறப்புக்கள் ஆண்டிற்கு 400,000 என உயரும்.

ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் இடையே இருக்கும் பிளவு நீண்ட காலமாகவே அதிகரித்து வருகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் .அறிக்கை ஒன்றின்படி, 1990 களின் நடுப்பகுதியில் ஏற்கனவே 358 பில்லியனர்களின் சொத்துக்கள் உலகின் வறிய மக்கள் பாதிப்பேரின் வருமானத்திற்கு சமம் ஆகிவிட்டது. அப்பொழுது முதல் நிதிய தன்னலக்குழு இணையற்ற சுய செழிப்பாக்கும் களியாட்டத்தில் ஈடுபட்டு உண்மைப் பொருளாதாரத்தில் இருந்து முற்றிலும் விலக்கிக் கொண்டுவிட்டது; பரந்த மக்களின் பிரிவுகளின் வாழ்க்கைத் தரங்கள் தொடர்ந்து சரிகின்றன. வங்கிகளும் தனியார் முதலீட்டு நிதிகளும் நம்பமுடியாத அவர்களுக்கு இலாபங்களை பொறுப்பற்ற செயல்கள்மூலம் அடைந்தன. வங்கியாளர்களும், நிர்வாக மேலதிகாரிகளும் மில்லியன் கணக்கில் ஆண்டு ஊதியத்தைப் பெறுகின்றனர். அவர்களுடைய கொள்ளைமுறை நடவடிக்கைகள் அவர்களுக்கு "வெட்டுக்கிளிகள் (locusts)" என்ற அடைமொழியை ஈட்டித் தந்துள்ளன.

இப்பொழுது பங்குச் சந்தைக் குமிழ் வெடித்து, முதலாளித்துவத்தின் உண்மை முகம் தெளிவாகத் தெரிகிறது. "தடையற்ற" அல்லது "சமூக சந்தைப் பொருளாதாரம்" என்று இடக்கரடக்கலாக அழைக்கப்படுவது நிதிய மூலதனத்தின் அப்பட்டமான சர்வாதிகாரம் என்று நிரூபணம் ஆகியுள்ளது. பல ஆண்டுகளாக கல்வி, சுகாதாரம், ஓய்வூதியங்கள், சமூகப் பாதுகாப்பு நலன்கள் ஆகியவற்றிற்கு பணம் இல்லை என்று கூறப்பட்டு வந்தது. ஆனால் இந்நெருக்கடிக்குப் பொறுப்பான சீர்குலைந்த வங்கிகள் மக்கள் வரிப்பணத்தில் இருந்து டிரில்லியன்களைப் பெற்றுள்ளன. இதற்கான செலவினம் தொழிலாளர்களால் கொடுக்கப்படுகிறது.

அமெரிக்காவில் ஒபாமா நிர்வாகம் வங்கிகளின் செலுத்தமுடியாத கடன்களை எடுத்துக் கொண்டுள்ளது. இது தேசியக் கடனை தலைசுற்றும் உயரத்திற்கு அனுப்பிவிட்டது. அதே நேரத்தில் கார்த் தொழிலாளர்கள் நெருக்கடிக்கு ஆழ்ந்த இழப்புக்கள் மூலம் விலை கொடுக்கும் கட்டாயத்தில் தள்ளப்பட்டுள்ளனர். ஐரோப்பாவில் அரசாங்கங்கள் பொது நிதிகளை வங்கிகளுக்கு உட்செலுத்துகின்றன. அதே நேரத்தில் மில்லியன் கணக்கான தொழிலாளர்களும் மத்தியதர வர்க்கத்தின் பரந்த பிரிவுகளும் தங்கள் வேலைகள், வருமானங்கள், சேமிப்புக்கள், சமூக நலன்கள் ஆகியவற்றை இழுந்து கொண்டிருக்கின்றன.

ஜேர்மனியில் அரசாங்கம் வங்கிகளுக்கு மீட்புப் பொதியாக 500 பில்லியன் யூரோக்களை அளித்துள்ளதுடன், அவற்றின் கடன்களையும் இன்னும் ஒரு டிரில்லியன் யூரோக்களுக்கு ஏற்றுக் கொண்டுவிட்டது. செப்டம்பரில் வரவிருக்கும் கூட்டாட்சித் தேர்தல்தான் அரசாங்கத்தை இன்னும் கடுமையான சமூகச் செலவினக் குறைப்புக்களை செயல்படுத்தி இப்பணத்தை மேலும் பெறுவதை தடுத்து நிறுத்தியுள்ளது. தேர்தலுக்குப் பிறகு இவை அனைத்தும் மாறிவிடும்.

1789 பிரெஞ்சுப் புரட்சிக்கு முன், நிலமானிய முறை பிரபுத்துவம் அதன் செல்வம் மற்றும் சலுகைகள் எதையும் விட்டுக் கொடுக்கத் தயாராக இருக்கிவில்லை. இன்று நிதிய பிரபுத்துவமும் அதே முறையில்தான் நடந்து கொள்ளுகிறது. நெருக்கடியை எதிர்கொள்ளுவதற்கு தொழிலாளர்கள் மீது தாக்குதலை அதிகரித்தும் சர்வதேசப் போட்டியாளர்களுடன் மோதலை தீவிரப்படுத்தும் விதத்திலும் நடந்து கொள்ளுகிறது. உலகில் எல்லா இடத்திலும், அரசாங்கம் அதிக அதிகாரம் வேண்டும் என்றும், இராணுவவாதத்திற்கு மாறுவதுமாக இருக்கிறது. கடந்த நூற்றாண்டின் முதல் பாதியில் இருந்தது போலவே நெருக்கடி மனிதகுலத்தின் முன் சோசலிசமா அல்லது காட்டுமிராண்டித்தனமா என்ற மாற்றீட்டை முன்வைக்கின்றது. எந்த சமூக அல்லது அரசியல் பிரச்சினையும் நிதிய மூலதனத்தின் மேலாதிக்கத்தை முறிக்காமல் தீர்க்கப்பட முடியாது. முதலாளித்துவத்திற்கு ஒட்டுப்போடும் விதத்தில் நெருக்கடியைக் கடக்க முடியாது. அதற்கு சமூக மாறுதல் தேவை, ஒரு சோசலிச சமூகம் கட்டமைக்கப்படுதல் தேவையாகும்.

எங்கள் நிலைப்பாடு என்ன?

சமூகத்தை சோசலிச வகையில் மாற்றுவது என்பது அரசியல் வாழ்வில் வெகுஜனங்கள் உணர்மையுடன் தலையிடும் என்பதை முன்கருத்தாகக் கொண்டுள்ளது. சோசலிச சமத்துவகட்சி இத்தகைய தலையீட்டிற்கான அரசியல் சூழ்நிலையை தோற்றுவிக்க போராடுகின்றது.

* தொழிலாளர் வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்திற்காக

முதலாளித்துவ முறையின் நெருக்கடிக்கு தொழிலாளர் வர்க்கம் பொறுப்பு அல்ல. அது ஒன்றும் இழப்பு தரக்கூடிய ஊக நடவடிக்கைகளில் பங்கு பெறாததுடன், பல மில்லியன்கள் பணத்தை தனக்கென ஒதுக்கியும் வைத்துக் கொள்ளவில்லை. வேலைநிறுத்தங்கள், ஆலை ஆக்கிரமிப்புக்கள், வெகுஜன ஆர்ப்பாட்டங்கள் என்று அனைத்து துவக்க முயற்சிகளுக்கும் நாங்கள் ஆதரவு தருகிறோம். இவைதான் தொழிலாளர்களின் தன்னம்பிக்கைக்கு வலிமை தருவதுடன், பெருவணிகம் மற்றும் அரசியல் நடைமுறையிலுள்ள ஒட்டுண்ணிகளின் சர்வாதிகார சக்திக்கு எதிராக சவால் விடும். ஆனால் அத்தகைய போராட்டங்கள் சமூக ஜனநாயக கட்சி (SPD) மற்றும் தொழிற்சங்கங்களில் இருந்து பிரிந்து சுயாதீனமாக நடத்தப்பட்டால்தான் வெற்றி பெற முடியும். இப்போராட்டங்களின் தலைமை அதிகாரத்துவ அமைப்புகளின் கரங்களில் விட்டுவிடக் கூடாது. மாறாக, சுயாதீன, ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட, தொழிலாளர் வர்க்கத்திற்கு நேரடியாக பதில் கூறக் கடமை கொண்டுள்ள, வேலை நிறுத்தக் குழுக்கள், தொழிலாளர் குழுக்கள் ஆகியவை வளர்க்கப்பட வேண்டும்.

நெருக்கடி ஆழ்ந்து செல்லுகையில், இன்னும் வெளிப்படையாக சமூக ஜனநாயக கட்சி மற்றும் தொழிற்சங்கங்கள் பெருவணிக நலன்களை காக்கின்றன. கடந்த காலத்தில் சமூகச் சீர்திருத்தம் என்ற பெயரில் அவை முதலாளித்துவத்திற்கு பாதுகாப்பு கொடுத்த நிலையில், இன்று அவை முதலாளித்துவத்தைக் காப்பாற்றுவதற்கு அவற்றை கைவிட வேண்டும் என உபதேசிக்கின்றன. சமூக ஜனநாயக கட்சியின் முன்னாள் சான்ஸ்லர் ஹெகார்ட் ஷ்ரோடர்தான் செல்வந்தர்களுக்கு வரிகளைக் குறைத்து நெருக்கடிக்குக் காரணமான ஊக வணிகர்களுக்கு மடையெனத் திறந்து விட்டார். சமூக ஜனநாயக கட்சி தலைவர் பிரன்ஸ் முன்ரபெயரிங் ஓய்வூதிய வயது 67 என்று உயர்த்தப் பொறுப்பு ஆவார். அதேபோல் Hartz சட்டங்கள் எனப்படும் தீமை மிகுந்த சமூகநல எதிர்ப்புச் சட்டங்களில் இருக்கும் பொதுநல, தொழிலாளர் சீர்திருத்தங்களை அறிகமுகப்படுத்தியற்கும் பொறுப்பு ஆவார். தொழிற்சங்கங்கள், தொழிற்சாலை தொழிலாளர்குழுக்களில் அமரும் அவர்களின் அதிகாரிகளைப் பொறுத்த வரையில் இணை நிர்வாகிகளாக செயல்பட்டு, நெருக்கடியின் சுமையைத் தொழிலாளர்கள் மீது மாற்றி எதிர்ப்பு இல்லாமல் பார்த்துக் கொள்ளுகின்றனர். அவர்களுடைய கையெழுத்துக்கள் இல்லாமல் ஊதியக் குறைப்பு, பணி நேர உயர்வு, அல்லது பணி நீக்கம் என்பது இல்லை.

சமூக ஜனநாயக கட்சி மற்றும் தொழிற்சங்கங்கள் வலதுநோக்கிய திருப்பம் தனிப்பட்ட ஊழலின் விளைவு மட்டுமல்லாது, முதலாளித்துவத்தையும் அதன் நோக்கங்களை தூக்கிவீசும் அவசியத்தை நிராகரித்த வேலைத்திட்டத்தின் தர்க்க பூர்வ விளைவாகும். மாறாக அவர்கள் அதை பாதுகாக்க விரும்புகின்றனர். 1914ம் ஆண்டு முதல் உலகப் போருக்கு சமூக ஜனநாயக கட்சி ஆதரவு கொடுத்தது. முதலில் தந்தை நாடு காப்பாற்றப்பட வேண்டும் என்ற வாதத்தை அது முன்வைத்ததுடன், அதன் பின்தான் தொழிலாளர்கள் நிலைமை முன்னேற்றப்படலாம் என்றது. இன்று அவர்கள் வங்கிகள் காப்பாற்றப்படுதல் முக்கியம் என்கின்றனர். அதற்காக தியாகங்கள் செய்யவேண்டும், வாழ்க்கைத்தரங்கள் பின்னர் உயரும் என்கின்றனர். கடந்த காலத்தைப் போலவே அத்தகைய போக்கு பேரழிவிற்குத்தான் செல்லும்.

ஆளும் உயரடுக்கு இந்த நெருக்கடி வன்முறையிலான வர்க்கப் போராட்டத்திற்கு வழிவகுக்கும் என்பதை நன்கு அறியும். மற்றவர்கள் இத்தகைய சாத்தியம் உண்டு என்று கூறினாலே எழுச்சிகள் ஏற்பட்டுவிடும் என்று அஞ்சுகின்றபோது ஜேர்மனிய தொழிற்சங்கக் கூட்டமைப்பின் (DGB) தலைவரான மிகைல் சம்மர் "ஒரு சமூக அமைதியின்மை" வரும் என்று எச்சரித்துள்ளார். போலீஸ் அதிகாரங்கள் அதிகப்படுத்தப்படல், கூடுதலான கண்காணிப்பு என ஐரோப்பிய ஒன்றியத்தினதும் மற்றும் உள்துறை மந்திரி ஷொய்பிள இனதும் காரணங்கள் வேறுபட்டாலும், பெருகிய சமூக எதிர்ப்பிற்கு எதிராகத்தான் முக்கியமாக இயக்கப்படும். இதற்கு இணைந்தவிதத்தில் ஆளும் வர்க்கம் பல "இடது" கட்சிகளை முன்னணிக்குகொண்டுவந்து தொழிலாளர்களையும், இளைஞர்களையும் தீவிரவாத வெற்றுப் பேச்சுக்கள் மூலம் ஈர்க்க வகை செய்து, அவர்கள் பழைய அதிகாரத்துவக் அமைப்புகளின் கட்டுப்பாட்டின் கீழ் அடிபணிய வைக்க முயல்கின்றது.

இந்தப் பங்கைத்தான் ஜேர்மனியில் ஒஸ்கார் லாபொன்டைனின் இடது கட்சி, பிரான்ஸில் ஒலிவியர் பெசன்ஸிநோட்டின் NPA எனப்படும் முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி மற்றும் இதேபோன்ற அமைப்புக்கள் ஐரோப்பா முழுவதும் செய்கின்றன. இவை தன்னியல்பாக வெளிப்பட்டுள்ள தொழிலாளர்களின் இடதுநோக்கிய திருப்பத்தின் விளைவு அல்ல; மாறாக உண்மையான இயக்கங்கள் கீழிருந்து உருவாகுவதை தடைசெய்யும் நோக்கம் கொண்ட மேலிருந்துவரும் ஆரம்ப முயற்சிகளாகும்.

இரு அதிகாரத்துவ அமைப்புகளின் இணைப்பினால் அமைக்கப்பட்ட இடது கட்சி முன்னாள் கிழக்கு ஜேர்மனியின் ஸ்டாலினிச அமைப்பு மற்றும் மேற்கு ஜேர்மனியின் சமூக ஜனநாயக கட்சி பிரிவுகள் மற்றும் தொழிற்சங்கங்கள் இணைந்ததால் உருவானதாகும். சோசலிசம் தொனிக்கும் வார்த்தைகளை பேசினாலும், இடது கட்சி முதலாளித்துவ சொத்து உரிமையைக் பாதுகாத்து அரசாங்கம் வங்கிகள் மீட்பு பொதி கொடுப்பதற்கு "மாற்றீடு" ஏதும் இல்லை என்று கூறுகின்றது. பேர்லின் நகரசபை போன்று அரசாங்கப் பொறுப்பை அது எடுத்துக் கொண்டபோது எல்லாம் சமூக நலன்கள் மற்றும் வேலைகளை சமூக ஜனநாயக கட்சி, கிறிஸ்துவ ஜனநாயக யூனியன் (CDU) போலவே இரக்கமற்ற முறையில் இல்லாதொழித்தது. பிரெஞ்சு புதிய முதலாளித்துவ எதிர்ப்புகட்சி(NPA) டிராட்ஸ்கிசத்திற்கு உதட்டளவு மரியாதை காண்பித்தது உள்ளடங்கலான அனைத்து வரலாற்றுக் கொள்கைகளையும் தூக்கி எறிந்ததுவிட்டு ஸ்டாலினிஸ்ட்டுக்கள் மற்றும் சீர்திருத்தவாதிகளுடன் உடன்பாடு கொண்டு, ஒரு எதிர்கால அரசாங்கத்தில் பங்குபெறுவதை சாத்தியமாக்க முனைகின்றது.

சோசலிச சமத்துவகட்சி இக்கட்சிகளுடன் எவ்விதமான ஒத்துழைப்பையும் உறுதியாக நிராகரிக்கிறது. அவற்றை நாங்கள் எங்கள் அரசியல் விரோதிகள் என்று கருதுகிறோம். தொழிற்சங்கத்தின் மேலாதிக்கத்தைக் பாதுகாக்கும் அனைத்து அமைப்புக்களுக்கும் இதுவே பொருந்துவதுடன், இடது கட்சியுடன் ஒத்துழைக்க வேண்டும் என்று வாதிடுபவர்களுக்கும் மற்றும் கம்யூனிஸ்ட் அரங்கு (Kommunistische Plattform), சோசலிஸ்ட் மாற்றீடு (SAV), Linkstruck (Left Turn) போல் அவற்றிற்குள் செயல்படும் அமைப்புக்கள் பற்றியும் இதே கருத்துத்தான். இவை அனைத்தும் அதிகாரத்துவத்தின் தந்திரோபாயங்களுக்கு ஒரு இடது மூடுதிரையை கொடுக்கின்றன.

எங்கள் பணியின் ஒவ்வொரு கூறுபாட்டையும் தொழிலாளர் வர்க்கத்தின் அரசியல் சுயாதீனப் போராட்டத்தினை நோக்கி இயக்குகிறோம். சர்வதேச சோசலிச இயக்கத்தின் மூலோபாய அனுபவங்களை அடித்தளமாக் கொண்ட ஒரு சுயாதீன கட்சியைக் கட்டமைத்து வருகிறோம். இருபதாம் நூற்றாண்டின் தொழிலாளர்கள் இயக்கத்தின் வெற்றி தோல்விக் காரணங்களை விளங்கிக்கொள்ளாமல் எந்தமான நனவான புரட்சிகர நிலைநோக்கும் இன்று சாத்திமில்லை. அவற்றில் அந்நூற்றாண்டின் மிகப் பெரிய தோல்வியான சமூக ஜனநாயக கட்சியின் வலதுசாரி அரசியல் மற்றும் 1933 பேரழிவைக் கட்டவிழ்த்த ஹிட்லரின் வெற்றிக்கு காரணமான ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சியின் (KPD) தீவிர இடதுசாரிப்போக்கு அனைத்தும் அடங்கும். இந்த அனுபவங்கள்தான் இடது எதிர்ப்பாளரிடமும் மற்றும் அது நிறுவப்பட்டது முதல் புரட்சிகர மார்க்ஸிஸத்தைக் பாதுகாப்பதற்கு இடைவிடாமல் போராட்டம் நடத்தியுள்ள நான்காம் அகிலத்திலும் இயைந்துள்ளன.

இப்பொழுது நான்காம் அகிலத்தின் முன்னோக்கு வரலாற்றினால் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடி ஒரு புதிய சர்வதேச வர்க்கப் போராட்ட சகாப்தத்திற்கு கட்டியம் கூறுகிறது. பெருகிய முறையில் தொழிலாளர்களும் இளைஞர்களும் தங்கள் உரிமைகள் மற்றும் நலன்களுக்கான போராட்டம் தவிர்க்க முடியாதது என்பதைக் காண்பர். தடையற்ற சந்தைப் பொருளாதாரத்திற்கு மாற்றீடு இல்லை எனக்கூறும் உத்தியோகபூர்வ சிந்தனை இந்த நெருக்கடியினால் பெரும் பாதிப்பிற்கு உட்பட்டுள்ளது. கிரேக்கம், ஹங்கேரி, பல்கேரியா, லிதுவேனியா, ஐஸ்லாந்து உள்ளடங்கலாக பல ஐரோப்பிய நாடுகளில் ஏற்கனவே வன்முறைமிக்க சமூக போராட்டங்கள் ஆரம்பித்துவிட்டன. பிரான்ஸில் தொழிலாளர்கள் பல ஆலைகளிலும் பணிநீக்கத்தைத் தவிர்க்கவும், கூடுதலான நலன்களைப் பெறுவதற்கும் நிர்வாகத்தினரை தடுத்துவைத்துள்ளனர்.

* தொழிலாளர் வர்க்கத்தின் சர்வதேச ஒற்றுமைக்காக

கடந்த தசாப்தங்களின் பொருளாதார மாறுதல்களின் பொருள் தொழிலாளர் வர்க்கத்தின் சமூக பலம் மகத்தான முறையில் உலகெங்கிலும் வளர்ந்துள்ளது என்பதாகும். தகவல்தொடர்பு மற்றும் தொழில்நுட்பப் பிரிவில் புதிய முன்னேற்ற வளர்ச்சிகள் முன்னோடியில்லாத வகையில் உலகப் பொருளாதாரம் ஒருங்கிணைய வழிவகுத்துள்ளது. உற்பத்தி முறை மற்றும் வணிகம் இரண்டும் மில்லியன் கணக்கான மக்களை உலகம் முழுவதும் ஒன்றாகக் கொண்டுவருகிறது. இவர்கள் ஒருவரில் ஒருவர் தங்கியுள்ளனர். சில மரபார்ந்த தொழில்துறை வேலைகள் மறைந்து கொண்டிருந்தாலும், பல புதிய அடுக்குகள் ஊதிய உழைப்பாளர்கள் என்ற பட்டாளத்தில் சேர்ந்துள்ளனர். 100 ஆண்டுகள் முன்வரை விவசாயத்தை நம்பியிருந்த சீனா போன்ற நாடுகள் இன்று உலகின் மிக முக்கிய தொழில்துறை பகுதிகளாக கருதப்படுகின்றன. நகரத்தில் வாழும் மக்களின் சதவிகிதம் இதுகாறும் இருந்ததைவிட அதிகம் ஆகும். இவர்கள் நேடியாக உலக உற்பத்தி நிகழ்போக்குடன் ஒருங்கிணைந்துள்ளனர்.

சர்வதேச தொழிலாளர் வர்க்கத்தின் ஒற்றுமைக்கு சோசலிச சமத்துவகட்சி போராடுகிறது. உலகம் முழுவதும் செயல்படும் பெறுநிறுவனங்களின் தாக்குதல்களை எதிர்த்து நிற்பதற்கு, தொழிலாளர்களும் சர்வதேச அளவில் ஒன்றுபட வேண்டும். ஜேர்மனிய மற்றும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு இடையே பிளவு ஏற்படுத்தும் அனைத்து முயற்சிகளையும் நாங்கள் எதிர்க்கிறோம். அது போல் கிழக்கு ஐரோப்பா அல்லது ஆசியாவில் உள்ள தங்கள் சக ஊழியர்களுக்கு எதிராக ஜேர்மனிய தொழிலாளர்களைத் தூண்டிவிடுவதையும் எதிர்க்கிறோம்

தொழிற்சங்கங்கள் தங்கள் போராட்டங்களை தேசிய அரங்கிற்குள் மட்டுப்படுத்திக்கொண்டு சர்வதேசத் தொழிலாளர் வர்க்கத்தை பிரிக்கப்பார்க்கின்றன. மற்றும் ஒரு பிரிவுத் தொழிலாளர்களை மற்ற பிரிவிற்கு எதிராகத் தூண்டுவதுடன், பாதுகாப்புவரிக் கொள்கை நடவடிக்கைகளுக்கு வாதிடுவதுடன் தேசியவாத உணர்வைத் தூண்டுகின்றன.

* சமூகத்தில் ஒரு சோசலிச மாற்றத்திற்காக

தற்கால உலக உற்பத்தி சக்திகள் உலகெங்கிலும் இருக்கும் வறுமை மற்றும் பிற்போக்குத்தனத்தை கடக்க போதுமான பொருளாதாய நிலைமைகளை அளித்துள்ளன. அதேபோல் மனிதகுலத்தின் வாழ்க்கை, கலாச்சார தரத்தை கணிசமாக உயர்த்தவும் இயலும். இதன் பொருள் இந்த உற்பத்தி சக்திகள் முழுசமூகத்திற்கும் சேவைசெய்யும்வகையில் ஒழுங்கமைக்கப்படவேண்டியதுடன் மற்றும் முதலாளித்துவ தனியார் உடைமைத் தளையில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்பதாகும்.

இதற்கு பெரு வணிகத்தின் நலன்கள் என்பதற்குப் பதிலாள தொழிலாளர் வர்க்கத்தின் நலன்களுக்கு உறுதி கொண்டுள்ள அரசாங்கங்கள் தேவையாகும். அத்தகைய அரசாங்கங்கள்தான் நெருக்கடியைக் கடப்பதற்குத் தேவையான முற்போக்குப் பொருளாதார நடவடிக்கைகளை எடுக்க இயலும்.

ஒரு தொழிலாளர்கள் அரசாங்கம்தான் மக்களின் முக்கியமான பெரும்பான்மையினரின் தேவைகள் பூர்த்தி செய்யப்படக்கூடியவகையில் பொருளாதார வாழ்வை முழுமையாக புதிதாக ஒழுங்கமைக்க முடியும். பொருளாதாரத்தின் நெம்புகோல்களான வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், பெரும் தொழில்துறை அறக்கட்டளைகள் பொது உடைமையாக மாற்றப்பட வேண்டும். மில்லியன் கணக்கான மக்களுடைய வாழ்வைப் பற்றிய முடிவுகள் சந்தை விதிகளின் கட்டுப்பாட்டிற்குள் விடப்படக்கூடாது.

மாறாக, வங்கிகளுக்குக் கொடுக்கப்பட்ட பில்லியன்கள் பரந்த அளவில் பொதுப் பணிகளுக்கான நிதியம் வழங்குதல், கல்விக்கு நிதி கொடுத்தல், சுகாதாரம், ஓய்வூதியங்களுக்கு பணம் வழங்கல் மற்றும் கெளரவமான ஊதியம் உள்ள மில்லியன் கணக்கான வேலைகளைத் தோற்றுவித்தல் ஆகியவற்றிற்குப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். இது குறைவூதியங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து, அதிக வருமானம் பெற்வோர் மற்றும் செல்வந்தர்களுக்கு அதிக வரி விதிப்பைச் சுமத்தும்.

ஒரு தொழிலாளர்களின் அரசாங்கம் என்பது இன்றைய அரசாங்கத்தைவிட கூடுதலான ஜனநாயகத் தன்மையைக் கொண்டிருக்கும். அது அரசியலில் உணர்மையுடைய மக்களின் தீவிர ஆதரவை அடித்தளமாக கொண்டிருப்பதோடு, முடிவெடுப்பது மற்றும் கொள்கையைச் செயல்படுத்தும் நடவடிக்கைகளில் மக்களை பங்கு பெறச் செய்யும். மாறாக, ஒரு முதலாளித்துவ அரசாங்கத்தின் கீழ் இருக்கும் ஜனநாயக வடிவமைப்புகள் கூட முற்றிலும் போலித்தன்மை கொண்டுள்ளதாக மாறிவிட்டன. வங்கிகளுக்கு பில்லியன் கணக்கில் பணத்தைக் கொடுக்க எடுத்த முடிவு ஒரு சில தனி நபர்களால் எடுக்கப்பட்டது. சமூக வளர்ச்சியின் மீது ஆதிக்கம் செலுத்தும் சாத்தியப்பாடு மக்களுக்கு மறுக்கப்படுகிறது.

ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகள்

ஐரோப்பியப் பாராளுமன்றம் உட்பட ஐரோப்பிய ஒன்றியத்தின் நிறுவனங்கள் அதிகரித்தளவில் ஐரோப்பியப் பெரும் சக்திகள் மற்றும் பெருவணிகத்தின் மிக செல்வாக்குடைய பிரிவுகளின் எடுபிடிகளாகத்தான் வெளிப்படையாக நடந்து கொள்கின்றன. ஐரோப்பிய ஒன்றியத்தை ஐரோப்பிய அரசாங்கங்கள் நிதியப் பொருளாதார நெருக்கடியை மக்கள் முதுகில் ஏற்றுவதற்குத்தான் பயன்படுத்துகின்றன. இதற்கு உறுதுணையாக இருப்பது பிரஸ்ஸல்ஸில் இருந்து வரும் போட்டி விதிகள், முறையாக ஜனநாயக உரிமைகள் தகர்க்கப்படல், ஐரோப்பிய போலீஸ் அரசாங்கம் நிறுவப்படல் ஆகியவை ஆகும். ஐரோப்பியக் ஆணைக்குழு என்பது கட்டுப்பாடுகளை அகற்றுவது, தாராளமயமாக்குதல், தொழிலாளர்கள் உரிமைகளை அகற்றுதல் ஆகியவற்றிற்கு அடையாளமாக உள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம், அதன் நிறுவனங்கள் மற்றும் திட்டமிடப்பட்டுள்ள அரசியல் அமைப்பு ஆகியவற்றை சோசலிச சமத்துவ கட்சி நிராகரிக்கிறது. ஐரோப்பாவை படிப்படியே, முற்போக்கான வகையில் ஒன்றுபடுத்தும் முயற்சி சோசலிச அடிப்படையில்தான் இயலும். இதற்கு தொழிலாளர் வர்க்கத்தின் அரசியல் ஒருங்கிணைப்பும் தேவையாகும். கிழக்கு ஐரோப்பா மற்றும் துருக்கி ஆகியவற்றில் உள்ள தொழிலாளர் வர்க்கத்தினர் ஐரோப்பிய ஒன்றியத்தின் போக்கை நிர்ணயிக்கும் பெருவணிக நலன்களுக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய நண்பர்கள் ஆவர்.

ஐரோப்பிய எல்லைகளைக் கடந்து, கண்டத்தின் மகத்தான தொழில்நுட்ப, கலாச்சார வழங்களையும் மற்றும் பொருளாதாய செல்வத்தையும் அனைவருக்கும் பொதுவாகப் பயன்படுத்துவது வறுமை, பிற்போக்குத்தனம் ஆகியவற்றால் ஏற்படும் பிரச்சினைகளைக் கடக்கும் சூழலை ஒரு குறுகிய காலத்தில் உருவாக்குவதோடு ஐரோப்பா முழுவதும் வாழ்வின் பொது நிலைமையை உயர்த்தும்.

ஜனநாயக உரிமைகள் பாதுகாப்பு மற்றும் குடியேறுபவர்கள் உரிமையை பாதுகாத்தல்

சமூகச் சமத்துவமின்மை என்பது ஜனநாயகத்துடன் இயைந்து இருக்காது. ஐரோப்பா முழுவதும் வரவிருக்கும் வர்க்கப் போராட்டங்களுக்கு தயாரிப்பு என்ற முறையில் அடிப்படை ஜனநாயக உரிமைகள் குறைக்கப்படுகின்றன. ஜேர்மனியில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத் தொகுப்புக்கள் பல 100க்கும் மேற்பட்ட புதிய சட்டங்களை நிறுவியுள்ளன பாதுகாப்புப் பிரிவுத் துறைகள்(போலீஸ், இரகசியப் பிரிவினர், கூட்டாட்சி எல்லைப் போலீஸ் என) விரிவான அதிகாரங்களையும் கூடுதலான நிதியங்களையும் பெற்றுள்ளன. மக்களின் பரந்த பிரிவினர் வாடிக்கையாக இணைய கண்காணிப்பு, தகவல் பாதுகாப்புத் தகர்ப்பு மூலம் கண்காணிப்பு வலைக்குள் இருத்தப்படுகின்றனர்.

அகதிகள் மற்றும் குடியேறுபவர்கள்மீது மனிதத்தன்மையற்ற தாக்குதல்கள் அனைவரினதும் ஜனநாயக உரிமைகள் அழிக்குமளவிற்கு பரவும். ஆயிரக்கணக்கானவர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஐரோப்பிய எல்லையைக் கடந்துவரும் முயற்சியில் இறக்கின்றனர். நாடுகடத்துவதற்கு நீதிமன்ற உத்தரவு இல்லாமல் காவலில் வைத்தல், புலம் பெயர்வோருக்கான சிறை முகாம்கள், குடும்பங்களைப் பிரித்தல், அரசியல் சமூக உரிமைகள் இல்லாத நிலை ஆகியவை ஐரோப்பாவில் உள்ள புலம் பெயர்ந்தவர்களின் அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாக உள்ளது.

ஐரோப்பியத் தொழிலாளர்கள் கண்டத்தில் இருக்கும் மில்லியன் கணக்கான அகதிகள், குடியேறுபவர்களின் உரிமைகளைக் பாதுகாக்காமல் தங்கள் அடிப்படை ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க இயலாது. குடியேறுபவர்களை வேட்டையாடுதல் தொழிலாளர் வர்க்கத்தை பிரித்து இயக்கமிமைக்குத்தான் உதவும். அகதிகளும், குடியேறுபவர்களும் தொழிலாளர் வர்கற்கத்தின் முக்கிய கூறுபாடு ஆவர்; எதிர்வரவிருக்கும் வர்க்க போராட்டங்களில் அவர்கள் முக்கிய பங்கைக் கொள்ளுவர்.

சமூக செல்வம் ஒரு சிலரின் கைகளில் குவிந்துருக்கும் வரை, செய்தி ஊடகமும் ஆகியவை பெருநிறுவனக் கட்டுப்பாட்டின்கீழ் இருக்கும் வரை, கல்வியும் பண்பாடும் ஒரு சிறிய உயரடுக்கின் சலுகை என்று இருக்கும் வரை வேலைத்தலங்களில் ஜனநாயகம் ஒதுக்கப்படுகிறது. இத்தகைய சூழலில் உண்மையான ஜனநாயகம் என்ற பேச்சிற்கு இடமில்லை. கலாச்சாரம், கலைக் கல்வி ஆகிய பிரிவுகளில் நடத்தப்படும் செலவுக் குறைப்புக்கள் சமூகத்திற்கு கணக்கிலடங்கா சேதத்தை ஏற்படுத்துகின்றதுடன், இராணுவவாதம், மூர்க்கத்தனம், தன்முனைப்பு போன்றவற்றிற்கும் முந்தை காலத்தின் கலை, கலாச்சார மரபுகளை நிராகரிப்பதற்கும் இடையே ஐயத்திற்கு இடமில்லாத பிணைப்பு உள்ளது.

பாதுகாப்புவரி முறை, இராணுவவாதம் மற்றும் போருக்கு எதிரான போராட்டம்

ஐரோப்பிய ஒன்றியத்தில் பாதுகாப்புவரி முறைகள் அதிகமாகிக் கொண்டிருக்கின்றன. அதிகமாகும் நிதிய மற்றும் பொருளாதார நெருக்கடியின் பொருள் சுயநலம் மிக அதிகமாக லண்டன், பாரிஸ், பேர்லின் ஆகியவற்றில் ஆதிக்கம் செலுத்துகிறது என்பதாகும். இச் சூழ்நிலையில், கடந்த காலத்தின் பேயுருக்கள் மீண்டும் தோன்றுகின்றன.

பாதுகாப்பு வரிகள் முறையும் வணிப் போரும் வரவிருக்கும் இராணுவப் போரின் முன்னோடி அறிகுறிகள் ஆகும். பல ஆண்டுகளாக பெரிய சக்திகள், எல்லாவற்றிற்கும் மேலாக அமெரிக்கா, தங்கள் பொருளாதார வலுவற்றை நிலைமையை ஈடு செய்வதற்கு இராணுவ சக்தியை பயன்படுத்தியுள்ளன. அமெரிக்காவின் பொருளாதார வலுவற்ற தன்மை அதன் ஐரோப்பியப் போட்டியாளர்களை தங்கள் பொருளாதார இராணுவ முனைப்புகள் அமெரிக்காவிற்கு இனியும் தாழ்த்தப்பட்டிருக்கக் கூடாது என்று தூண்டியுள்ளது. ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் நடக்கும் போர்கள், காஸாப் பகுதியில் பெரும் படுகொலைகளை நிகழ்த்தி இஸ்ரேலிய இராணுவம், தமிழ் சிறுபான்மைக்கு எதிராக ஸ்ரீலங்கா அரசாங்கம் நடத்தும் கொலை நடவடிக்கைகள் ஆகியவை தங்கள் அதிகாரத்தைக் பாதுகாக்க ஆளும் உயரடுக்கு மேற்கொண்டுள்ள மிருகத்தன முறையை காட்டுகின்றன.

கடந்த நூற்றாண்டின் குருதி கொட்டிய நிகழ்வுகள் ஐரோப்பாவில் மீண்டும் நிகழாது என்று நினைப்பவர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்ளுகின்றனர். ஐரோப்பிய அரசாங்கங்கள் தொழிலாளர்கள் எதிர்ப்பை ஒரு நாட்டு மக்களுக்கு எதிராக மற்றவர்களைத் தூண்டி விட்டு அவர்களைப் போரில் ஈடுபடுத்தி அடக்குவது ஒன்றும் முதல் தடவையாக இருக்காது. பால்கன்களில் நடைபெற்ற நிகழ்வுகள் அத்தகைய ஆபத்து இன்னும் தீவிரமாக உள்ளது என்பதைத் தெளிவாக்குகின்றன. ஐரோப்பியத் தொழிலாளர் வர்க்கத்தின் பொது சோசலிச எதிர்ப்பு ஒன்றுதான் அத்தகைய ஆபத்துக்களை திறமையுடன் எதிர்க்கும்.

நாங்கள் உடனடியாக NATO கலைக்கப்பட வேண்டும், மற்றும் ஐரோப்பாவில் அனைத்து அமெரிக்கத் தளங்களும் மூடப்பட வேண்டும் என்று கூறுகின்றோம். பால்கன் பகுதியில் இருந்தும் ஆப்கானிஸ்தான், ஆபிரிக்காவில் இருந்தும் ஐரோப்பியத் துருப்புக்கள் உடனடியாக திரும்பப் பெறப்பட வேண்டும் என்று கோருகிறோம்.

ஸ்டாலினிசமும் சோசலிசமும்

பேர்லின் சுவர் தகர்க்கப்பட்டு இரு தசாப்தங்களுக்குப் பிறகு, முதலாளித்துவத்தின் உலகளாவிய நெருக்கடி கிழக்கு ஜேர்மனியிலும் சோவியத் ஒன்றியத்திலும் சோசலிசம் தோல்வி அடைந்துவிட்டது எனவே முதலாளித்துவத்திற்கு மாற்றீடு ஏதும் கிடையாது என பரந்த அளவில் இருந்த கற்பனையை நிராகரித்து விட்டது. கிழக்கு ஐரோப்பாவில் பேரழிவு தரக்கூடிய நெருக்கடி முதலாளித்துவத்தின் மறு அறிமுகம் ஒரு பாரிய, பிற்போக்குத்தன சமூக நடவடிக்கை என்பதை வெளிப்படுத்தியுள்ளது. முன்னாள் ஸ்டாலினிஸ்ட்டுக்களை கொண்ட ஒரு சிறிய உயரடுக்கான புதிய பணக்காரர்கள் சமூகச் சொத்தை அபகரித்து, இப்பொழுது வெளியே காட்டிக் கொள்ளும் செல்வச் செருக்கில் திளைக்கிறது. அதே நேரத்தில் பெரும்பாலான மக்கள் வறுமையில் வாடுகின்றனர்.

கிழக்கு ஐரோப்பாவிலும் சோவியத் ஒன்றியத்திலும் சோசலிசம் தோற்கவில்லை, மாறாக ஒரு சலுகை பெற்றிருந்த அதிகாரத்துவம், தேசிய வடிவமைப்பிற்குள் சர்வாதிகார வழிவகைகளைக் கையாண்டு சோசலிச சமூகம் என்று கூறி நிறுவ முற்பட்டிருந்த ஒரு சமூகம்தான் தோல்வியுற்றது. ஒரு சோசலிச சமுதாயத்தைக் கட்டமைக்க தொழிலாளர்களின் ஜனநாயகமும், உலகப் பொருளாதாரத்திற்கு செல்லும் பாதையும் இணை பிரியாத முன்னிபந்தனைகள் ஆகும்.

ஸ்டாலினிச அதிகாரத்துவம் ஒரு தலைமுறை புரட்சிகர சோசலிஸ்ட்டுக்களை அடக்கி, கொலை செய்ததின் மூலம் அதிகாரத்தை நிலை நிறுத்திக் கொண்டது. இறுதியில் வெள்ளை இராணுவமோ ஜேர்மனிய டாங்குகளோ செய்ய முடியாததை சாதிக்கத்தான் முடிந்தது. அதாவது அக்டோபர் புரட்சியின் சாதனைகளை அழித்து முதலாளித்துவ சொத்துடமை முறையை அறிமுகப்படுத்தியதின் மூலம் தன்னுடைய சலுகைகளை பாதுகாத்தது.

மார்க்ஸிய மரபு

ஒரு நீண்ட மார்க்ஸிய மரபை சோசலிச சமத்துவக்கட்சி அடித்தளமாகக் கொண்டுள்ளது. மார்க்ஸ் மற்றும் ஈங்கல்ஸின் ஆர்வ எழுச்சியை பல தலைமுறைத் தொழிலாளர்களிடையே பயிற்றுவித்த சமூகஜனநாயகத்தின் ஆரம்ப ஆண்டுகள், லெனின், ரோசா லக்சம்பெர்க் மற்றும் சமூகஜனநாயகத்தின் சந்தர்ப்பவாதத்தையும் அது முதல் உலகப் போருக்கு முன் முதலாளித்துவத்திடம் சரணடைந்தது பற்றியும் எதிர்த்த கார்ல் லீப்க்நெட் ஆகியோரின் படைப்புக்கள், ஸ்டாலினிசத்தின் குற்றங்களுக்கு எதிராகப் போரிட்டு சர்வதேச தொழிலாளர் இயக்கத்தின் மறு பிறப்பிற்கு தளத்தைக் கொடுத்த நான்காம் அகிலத்தை 1938ல் நிறுவிய இடது எதிர்ப்பு மற்றும் டிராட்ஸ்கி இனதும் போராட்டங்களை உள்ளடக்கிய தொழிலாளர் வர்க்கத்தின் அரசியல், கலாச்சார விடுதலை அதன் மையத்தானத்தில் உள்ளது.

சமூகஜனநாயகம் மற்றும் ஸ்டாலினிச கம்யூனிச கட்சிகள் தொழிலாளர்கள் இயக்கத்தின்மீது ஆதிக்கம் செலுத்தியவரை இந்த மார்க்ஸிஸ மரபை தனிமைப்படுத்த முடிந்தது. இப்பொழுது அவர்களுடைய அரசியல் திவால்தன்மை ஒரு புதிய சகாப்தத்தை திறந்து வைப்பதுடன், அதில் நான்காம் அகிலத்தின் வேலைத்திட்டம் அதிகரித்தளவில் பிரதிபலிப்பை காண்கிறது. இன்று உலக சோசலிச வலைத்தளத்தினூடாக நான்காம் அகிலம் சர்வதேச வாசகர்கள் விரைவில் அதிகரிப்பை காண்பதுடன், அது மார்க்ஸிஸத்தின் உண்மைக் குரல் என்று பெருகிய முறையில் கருதப்படுகிறது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved