World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : கலை விமர்சனம்

An interview with Dawn Mikkelson, co-director of The Red Tail

The Red Tail திரைப்படத்தின் இணை இயக்குனர் டௌன் மெக்கெல்சனுடன் ஒரு நேர்காணல்

6 July 2010

Back to screen version

உலக சோசலிச வலைத்தளத்தின் ஜோஆன் லோறியெர், சமீபத்தில் ஒரு திரைப்பட விழாவிற்காக டெட்ராய்டிற்கு வந்திருந்த The Red Tail திரைப்படத்தின் இணை இயக்குனர் டௌன் மெக்கெல்சனைச் சந்தித்து பேசினார்.

ஜோஆன் லோறியெர்: ஒரு தொழிலாளி தன்னுடைய வேலை என்ன ஆனது என்று கண்டறியவும், அதை எடுத்துக் கொண்ட அந்த தொழிலாளியைச் சந்திக்கவும் பயணத்தைத் தொடங்க முடிவெடுப்பதென்பது மிகவும் வித்தியாசமாக இருக்கிறதே.

டௌன் மெக்கெல்சன்: கோஹ் குடும்பமும் வித்தியாசமானது தான். அமைதி மற்றும் நீதிக்கான பிரச்சினைகளில் சூசன் கோச் மிகவும் ஈடுபாடு கொண்டிருந்தார். பூகோளமயமாக்கல் மற்றும் வெளியாட்களிடம் பணியை ஒப்படைப்பது (outsourcing) குறித்து அவர்கள் நன்கு அறிந்திருந்தார்கள். ஆகவே சீன தொழிலாளர்கள் மீது கோபமடைந்து, ரோய் கோஹ் இந்த பிரச்சினையை அணுகவில்லை. அதையும் தாண்டி சிலவிஷயங்கள் இருக்கின்றன என்பதையும், அவரும் அவரைப் போன்றே எதிர்தரப்பிலிருந்த சீன தொழிலாளரும் ஒருவருக்கு எதிராக நிறுத்தப்பட்டிருந்தார்கள் என்பதையும் அவர் அறிந்திருந்தார்.

ஜோஆன்: இந்த மனோபாவத்திற்கு அரசாங்கமோ, சங்கமோ அல்லது ஊடகமோ வரவேற்பளிப்பதில்லை.

மெக்கெல்சன்: உலக நிகழ்வுகள், ஹாங்காங்கிலும், சீனாவிலும் பெரும் வித்தியாசமான விதத்தில் கையாளப்படுகின்றன. அவை பரந்த உலக கண்ணோட்டத்தைக் கொண்டிருக்கின்றன. உண்மையில், அவற்றின் ஊடகங்கள் உலகம் முழுவதையும் கவனத்தில் கொள்கின்றன. நான் ஒவ்வொரு முறை வெளிநாட்டிற்கு பயணம் போகும் போதும், நம்முடைய ஊடகம் எவ்வளவு குறுகியும், சுருங்கியும் இருக்கின்றன என்பதை நினைத்து அதிர்ச்சியும், வெறுப்பும் அடைகிறேன்.

ஜோஆன்: ஹாங்காங்கிலும், சீனாவிலும் படமெடுத்த போது எவ்வாறு இருந்தது?

மெக்கெல்சன்: முன்கூட்டியே இணையத்தில் நேர்காணல்கள் செய்ய தடுக்கப்பட்டதால், எங்களுடைய பல வேலைகளை நாங்கள் அடிமட்டத்திலிருந்து செய்ய வேண்டி நிலையில் இருந்தோம். குறிப்பாக சீனாவில், அந்நிலைமை இருந்தது. அந்த உறவுகளை நாங்கள் உருவாக்க வேண்டியிருந்தது; முன்னேறி செல்வதற்கு, அதைத்தவிர வேறு வழியில்லாமல் இருந்தோம். ஆகவே, நாங்கள் அங்கிருந்தபோது, நிறைய தயாரிப்புக்கு-முந்தைய பணிகளைச் செய்தோம்.

நாங்கள் ஹாங்காங்கைச் சென்றடைந்த போது, இரும்புத்துறை தொழிலாளர்கள் (bar benders) போராட்டத்தில் இருந்தனர் என்பது எங்களுக்குத் தெரிய வந்தது. இந்த தொழிலாளர்கள் தான் உண்மையில் கட்டுமானத்தில் மிக கடுமையான வேலையைச் செய்பவர்கள். அதுவொரு மிகப் பிரமாண்டமான போராட்டமாக இருந்தது. இந்த நூற்றாண்டிலேயே அது மிக பெரிய போராட்டம் என்று கேள்விப்பட்டோம். கோஹ் குடும்பமும் அதில் இறங்கியவுடன், அவர்கள் என்ன செய்திருந்தார்களோ அதே விஷயத்தைச் செய்ய அந்த தொழிலாளர்களின் குழுவால் அவர்கள் நகர்த்தப்பட்டார்கள். மேலும் சீனாவிலிருந்த தொழிலாளர்கள் வேறுபகுதிகளிலிருந்தும் தங்களுக்கு ஆதரவு கிடைப்பதைப் பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

ஜோஆன்: உங்களால் தொழிலாளர்களைத் தனிப்பட்ட முறையில் சந்தித்து பேச முடிந்ததா?

மெக்கெல்: முடிந்தது. ஆனால் இவற்றில் பல புகைப்படக்கருவியில் பதிவாகாத வகையில் செய்யப்பட்டது. தாங்கள் அவ்வகையில் அடையாளப்படுவதை அவர்கள் விரும்பவில்லை. நாங்களும் அதை மதித்தோம். சீனாவின் பெரும்நிலப்பரப்பிலும், ஹாங்காங்கிலும் கூட, மனம் திறந்து பேசுவதென்பது முடியாது. ஆவணப்படங்கள் செய்து முடித்த பின்னர் அவை காணாமல் போகும் வரலாறு எங்களுக்குத் தெரியும்.

இயந்திர வல்லுனர்களிடமிருந்து கிடைத்த வரவேற்பை விட ஹாங்காங்கில் இரும்புத்துறை தொழிலாளர்களிடமிருந்து எங்களுக்கு ஒரு வித்தியாசமான வரவேற்பு கிடைத்தது என்ற போதினும், நாங்கள் அங்கு இருந்தது குறித்து தொழிலாளர்கள் மிகவும் ஆர்வமாக இருந்தார்கள். இயந்திர வல்லுனர்கள் ரோயின் வாழ்வில் தங்களின் பாத்திரம் என்னவென்பதைப் புரிந்து கொண்டிருந்த போதினும், அவரைப் பார்க்க மிகவும் உற்சாகம் காட்டினார்கள். மேலும் தங்களின் வேலையும் கூட, எப்போதும் அங்கே நிலைத்திருக்க போவதில்லை என்பதையும் அவர்கள் புரிந்து கொண்டார்கள். அதனால் ஓரளவிற்கு பயத்தையும் உணர்ந்தார்கள்.

அமெரிக்காவை விட்டு செல்வதற்கு முன்பே, ஹாங்காங் நிறுவனத்தின் ஒரு சேய் நிறுவனமான ஒரு பராமரிப்பு நிறுவனம் ஜியாமென்னில் இருந்தது என்பதை நாங்கள் அறிந்திருந்ததாலே தான், நாங்கள் சீனாவிற்குச் சென்றோம். ஆனால் சீன தொழிலாளர்களாலும், ஒருவருக்கு எதிராக ஒருவர் செயல்படச் செய்யப்பட்டதாலும் ஹாங்காங் தொழிலாளர்கள் சம்பள வெட்டுக்களால் அச்சுறுத்தப்பட்டிருந்தார்கள் என்பதை நாங்கள் அறிந்திருக்கவில்லை. நாங்கள் ஹாங்காங்கிற்குச் செல்வதற்கு முன்னால் வரையில், அது எங்களுக்குத் தெரியாது.

நாங்கள் திரும்பி வந்து, செலவிற்கான பணத்தைத் திரட்ட வேண்டி இருந்ததால், ஒன்பது மாதங்களுக்குப் பின்னர்தான் மீண்டும் ஜியாமென் பயணத்தையே மேற்கொள்ள முடிந்தது. மேலும், சீனாவில் படமெடுக்கையில் நிறைய குறுக்கீடுகள் இருந்தன. நாங்கள் சுற்றுலா பயணிகளுக்கான விசா வாங்க வேண்டி இருந்தது. ஏனென்றால், இதழாளர்களுக்கான விசா வாங்கினால், எப்போதும் ஓர் அரசாங்க அதிகாரியைக் கூடவே வைத்திருக்க வேண்டும். நாங்கள் அங்கிருந்த நேரத்தில், படமெடுக்கும் மேலும் இரண்டு குழுக்கள் அங்கிருந்ததாகவும், ஆனால் அவர்கள் அங்கே வரும் போது இதழாளர்களுக்கான விசாவில் வந்ததால், அவர்களோடு எப்போதும் பாதுகாப்பிற்காக அரசாங்க ஆட்கள் இருந்ததாகவும் எங்களுக்குத் தெரிய வந்தது. ஆனால் நாங்கள் அந்நாட்டில் இருந்த வரையில், எங்களை யாரும் கண்டுகொள்ளவே இல்லை.

எங்களுடைய அருமையான மொழிபெயர்ப்பாளர் எங்களை TAECO தொழிலாளர்கள் வசிக்குமிடத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கே பாதுகாவலர் இருந்த போதினும், எங்களால் பிரச்சினையில்லாமல் செல்ல முடிந்தது. அவர் எங்களைத் தடுக்கவில்லை. ஏனைய படங்களில் நான் பார்த்திருக்கும் காட்சிகளோடு ஒப்பிட்டால், இந்த நிலைமைகள் எவ்வளவோ பரவாயில்லை. அவர்களுக்கு மாதத்திற்கு வெறும் $300 மட்டுமே அளிக்கப்படுகிறது என்றாலும், ஜியாமென்னில் அதுவொரு நல்ல வேலையாக கருதப்படுகிறது.

ஜோஆன்: சீனாவின் தற்போதைய போராட்டம் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

மெக்கெல்சன்: உற்சாகமாக இருக்கிறது. இது “மஞ்சள் சங்கங்களுக்கு” (yellow unions) வெளியில் நடக்கின்றன. இந்த தொழிலாளர்களை ஏனைய போராட்டங்களில் ஈடுபட்ட தொழிலாளர்களோடு, எடுத்துக்காட்டாக, ஐரோப்பிய தொழிலாளர்களோடு இனங்காண முடிகிறது என்பது, சீனாவின் பெருந்தடைகளையும் உடைத்துக் கொண்டு இணையத்திலிருக்கும் வசதிகளில் ஒன்றாக தான் அது இருக்கிறது என்பது தான் உண்மை. ஒருவர் வெளியுலகத்தை ஒரு வழியில் பார்க்க முடிகிறதென்பது முன்பிருந்ததைவிட வித்தியாசமாக இருக்கிறது. மேலும் நாங்கள் எங்கிருந்து வந்திருக்கிறோம் என்பதை அறிந்ததும் மக்கள் மிகவும் உற்சாகமடைந்தார்கள்; அவர்கள் நியூயோர்க், லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் இவை போன்றவற்றைக் குறித்து மிகவும் ஆர்வமடைகிறார்கள்.

ஜோஆன்: உங்கள் படத்தில் உலக தொழிலாளர்களுக்கு இடையிலான விஷயத்தைப் பதிவு செய்திருக்கிறீர்கள்.

மெக்கெல்சன்: ரோயின் வேலையைத் “திருடிய” தொழிலாளியை எதிர்க்கத் தான் நாங்கள் சீனாவிற்குச் சென்றோம் என்று மக்கள் நினைத்திருக்கக்கூடும். ஊடகத்தாலும், சங்கங்களாலும் கூட, உருவாக்கப்பட்ட ஒரு வதந்தி நிலவியது. அவர்கள் எதிரியல்லாத ஒருவரை எதிரியாக உருவாக்கி இருக்கிறார்கள். சீன தொழிலாளர்கள் குறித்தும் கூட, இனத்தை அடிப்படையாக கொண்டு வதந்திகள் இருப்பதாக நான் நினைக்கிறேன். சீனர்கள் எல்லோருமே அடிமையுழைப்புக்கூடங்களில் (sweatshops) வேலை செய்பவர்கள் இல்லை. மாறாக அவர்களுக்கு நல்ல சம்பளங்களும் கிடைக்கின்றன, ஆனால் இதே சுழற்சி தொடர்கிறது—நாம் ஹாங்காங்கில் பார்த்ததைப் போலவே நிறுவனங்கள் வேறிடங்களுக்குத் தேடிச்செல்லும்.

ஜோஆன்: நார்த்வெஸ்ட் போராட்டத்தில் தொழிற்சங்கங்களின் பாத்திரம் குறித்து ஏதேனும் கூற முடியுமா?

மெக்கெல்சன்: AMFA செய்ததெல்லாம் சரியானதில்லை என்ற போதினும், அவர்கள் ஒரு சுயாதீனமான சங்கமாக இருந்தார்கள். மேலும் அது IAM-AFL-CIO ஆகியவற்றால் பரிதாபகரமாக கையாளப்பட்டது. விமான உதவியாளர்கள் போராட்டத்திற்கான ஆதரவைக் கைவிட்ட உடனேயே தாங்கள் போரில் தோற்றுவிட்டோம் என்பதை ரோயும், இயந்திர வல்லுனர்களும் நன்கு புரிந்து கொண்டார்கள். படத்தில் எங்களால் நிறைய விஷயங்களைக் கொண்டு வர முடியவில்லை. ஏனென்றால், மக்களை ஐக்கியப்படுத்துவது குறித்து அது இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம். இந்த படத்திற்குத் தாங்கள் ஆதரவளிக்க போவதில்லை என்பதை AFL-CIO தெளிவுபடுத்தி இருந்தது. அது எனக்கு வெறுப்பாக இருக்கிறது, ஏனென்றால் இது AMFA பற்றிய ஒரு படமல்ல. இது தொழிலாளர்களைக் குறித்த ஒரு படம். அவர்களைத் தானே AFL-CIO பிரதிநிதித்துவப்படுத்துகிறது.

ஜோஆன்: ஒரு தொழிலாளரின் கண்ணோட்டத்திலிருந்து பூகோளமயமாக்கலைப் பற்றிய ஒரு படத்தை நீங்கள் உருவாக்கி இருக்கிறீர்கள்.

மெக்கெல்சன்: ஆம், ஒரு துல்லியமான திட்டத்தைக் கொண்ட அரசாங்கத்தின் கண்ணோட்டத்திலிருந்தும், பெருநிறுவன தலைவர்களின் கண்ணோட்டத்திலிருந்தும் இந்த தலைப்பில் நிறைய படங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. ஒரு திட்டத்தைக் கொண்டிருக்கும் மக்களுக்காக அல்லாமல், உண்மையாக தங்கள் வாழ்க்கையை வாழும் மக்களுக்காக மற்றும் இந்த பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்காக, ஒரு திரைப்பட இயக்குனராக இருந்து கதைகளை எடுப்பதென்பது எப்போதும் எனக்கு படிப்பினையாக உள்ளது.