World Socialist Web Site www.wsws.org


 WSWS :Tamil : வரலாறு

This week in history: May 24-May 30

வரலாற்றில் இந்த வாரம்: மே 24 -மே 30

24 May 2010

Back to screen version

வரலாற்றில் இந்த வாரம் என்ற பகுதி, இந்த வாரம் ஆண்டுப் பூர்த்தியடையும் முக்கிய வரலாற்று நிகழ்வுகள் பற்றிய சிறிய பொருட் சுருக்கத்தை வழங்குகிறது.

25 ஆண்டுகளுக்கு முன்னர்/ 50 ஆண்டுகளுக்கு முன்னர்/ 75 ஆண்டுகளுக்கு முன்னர்/ 100 ஆண்டுகளுக்கு முன்னர்

25 ஆண்டுகளுக்கு முன்னர்: மூன்று மைல் தீவில் உள்ள அணு உலையின் ஒரு பகுதி உருகி, ஆறு ஆண்டுகளின் பின்னர் மீண்டும் தொடங்கியது

1985 மே 29 அன்று, அமெரிக்க அணு ஒழுங்குபடுத்தல் முகவரமைப்பு (என்.ஆர்.ஏ.), தென்-மத்திய பென்சில்வேனியாவில் உள்ள மூன்று மைல் தீவில், 1979ல் ஒரு பகுதி உருகிப் போன அணு உலைகளில் ஒன்றை மீண்டும் தொடங்க நான்கிற்கு ஒன்று என்ற வீதத்தில் வாக்களித்தது. இந்த விபத்து 80 கதிர்வீச்சளவு (petabecquerels) கொண்ட (13 மில்லியன் கியூரிகள்-curies) கதிரியக்க உயர் வாயுக்களை சூழலுக்குள் பரவச் செய்திருந்தது. மிக அதிக நச்சுத்தன்மை கொண்ட புற்றுநோயை உருவாக்கும் தனிமமான ஐயோடின்-131, சூழல் மாசுக்கு மிகவும் சிறிய பகுதியை உற்பத்தி செய்யும் அதே வேளை, ஒரு முழு அளவான அணு அழிவு மிகவும் அரிதான நிலையிலே தவிர்த்துக்கொள்ளப்பட்டது. மனித நெருக்கடிக்கு வழிவகுத்த தொழிற்துறை கட்டுப்பாட்டு முறைமையின் வடிவமைப்பின் தரமின்மைக்கு, கிட்டத்தட்ட முழுமையான உருகு நிலை காரணமாகக் காட்டப்பட்டது.

இந்த விபத்தில் இருந்து உயிரிழப்புக்கள் அல்லது காயங்கள் ஏற்படவில்லை என அணு தொழிற்துறை கூறிக்கொண்டாலும், இந்த விபத்தை அடுத்து வந்த இரு ஆண்டுகளில் இந்த உலையினால் சமூகத்தில் குழந்தைகள் இறப்பு வீதம் அதிகரித்ததாக கதிரியக்க மற்றும் பொது சுகாதார திட்டம் அறிவித்தது. வடக்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட கற்கையில், இப்பிரதேசத்தில் சுவாசப்பை புற்றுநோய் மற்றும் குருதிச் சோகை வழமைக்கு மாறாக அதிகரித்துக் காணப்படுவதாக பேராசிரியர் கண்டுபிடித்துள்ள போதிலும், இவை கதிரியக்க வெளிப்பாட்டால், மன அழுத்தத்தால் அல்லது கதிர் மூலமான சோதனை வழிமுறை அதிகரித்ததால் ஏற்பட்டதா என்பது ஸ்தாபிக்கப்படவில்லை.

மே 29 நடந்த என்.ஆர்.ஏ. கூட்டத்தில், மூன்று மைல் தீவின் நிர்வாகத்தின் "புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கை" பற்றி அதிகாரிகள் பேசிக்கொண்டிருக்கும் போது, பார்வையாளர் பகுதியில் இருந்த அணு உலையைச் சூழவுள்ள சமுதாயத்தில் உள்ளவர்கள் "கொலைகாரன்" "கொலைகாரன்" என சத்தமிட்டனர். மூன்று மைல் தீவு அமைந்துள்ள பென்சில்வேனியாவின் மிடில்டவுனில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. 83 பேர் கைது செய்யப்பட்டனர்.

50 ஆண்டுகளுக்கு முன்னர்: இரத்தம் சிந்தா சதிப் புரட்சியில் துருக்கி அரசாங்கம் தூக்கிவீசப்பட்டது

துருக்கிய பிரதமர் அட்னன் மென்டெரெஸ், 1960 மே 27 அன்று நடந்த இரத்தம் சிந்தாமல் நடந்த இராணுவ சதிப் புரட்சியில் தூக்கிவீசப்பட்டார். அவரும், அவருடன் சேர்த்து ஜனாதிபதி செலல் பயர் மற்றும் அவரது அமைச்சரவை உறுப்பினர்களும், நாட்டின் 37 இளம் இராணுவத் தலைவர்களின் கும்பலொன்றால் அதிகாரத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதோடு, பின்னர் அவர்களால் அரசின் தலைவராக ஜெனரல் செமல் குர்செல் நியமிக்கப்பட்டார்.

மென்டெரெஸ் மற்றும் அவரது அரசாங்கத்தின் பல உறுப்பினர்களுக்கும் மர்மரா கடலில் உள்ள யசியடா தீவில் வைத்து போலி விசாரணைகள் நடத்தப்பட்டதோடு துருக்கிய அரசியலமைப்பை மீறியமைக்காக மரண தண்டனை வழங்கப்பட்டது. அடுத்த ஆண்டு செப்டெம்பரில் மென்டெரெஸ் தூக்கிலிடப்பட்டார். ஜனாதிபதி பயரின் தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்ட போதிலும், சுகயீனம் காரணமாக 1964ல் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

இந்த சதிப் புரட்சி துருக்கியில் வளர்ச்சி கண்டுவந்த அமைதியின்மையினால் தூண்டிவிடப்பட்டது. ஆளும் வர்க்கத்துக்குள் நிலவிய பிளவுகள் மற்றும் அரசியல் சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் கெமலிச எதிர்ப்பு வார்த்தைகளை மேலும் மேலம் பயன்படுத்தி ஆட்சி நடத்த அட்னன் எடுத்த முயற்சிகள் தொடர்பாக இராணுவத்தின் சில பிரிவினர் மத்தியில் எழுந்த சீற்றமும் இந்த சதிப் புரட்சியை தூண்டிவிட்டன. அச்சமயம் துருக்கிய பொருளாதாரம் உயர்ந்த பணவீக்கம் மற்றும் கடும் கடன் சுமையில் மூழ்கிப் போயிருந்தது. ஏப்பிரலில், நாட்டின் பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டதோடு மாணவர்கள் பொலிசாருடன் வன்முறை மோதல்களில் ஈடுபட்டனர். மே 1 அன்று மார்ஷல் சட்டம் அமுல்படுத்தப்பட்டதோடு ஆர்ப்பாட்டக் காரர்களை சுற்றிவளைத்தபோதிலும், நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை.

இந்த சதிப் புரட்சி இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ், தேசிய ஐக்கியத்துக்கான குழு என்ற பெயரில் ஒரு காபந்து அரசாங்கத்தை அமைக்க வழிவகுத்தது. இந்த இராணுவ ஆட்சி 1961 அக்டோபர் வரை நீடித்தது.

75 ஆண்டுகளுக்கு முன்னர்: அமெரிக்க உயர் நீதிமன்றம் தேசிய தொழிற்துறை மீட்பு சட்டத்தை அரசியலமைப்புக்கு முரணானது என தீர்ப்பளித்தது

அமெரிக்க உயர் நீதிமன்றம், 1935 மே 27 அன்று, தேசிய தொழிற்துறை மீட்பு சட்டத்தை (என்.ஐ.ஆர்.ஏ.) அரசியலமைப்புக்கு முரணானது என தீர்ப்பளித்தது. இந்த ஒருதலைப்பட்சமான தீர்ப்பு, "கோழி வியாதி வழக்கு" (sick chicken case) என பிரசித்திபெற்றிருந்த, ஸ்கெச்டர் கோழி வளர்ப்பு கூட்டுத்தாபனம் எதிர் அமெரிக்கா வழக்கிலேயே வழங்கப்பட்டது.

என்.ஐ.ஆர்.ஏ. இன் கீழ் ஸ்தாபிக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான தொழிற்துறை சீரமைப்பு விதிகளில் ஒன்றான நியூ யோர்க்கின் ஸ்கெச்டர் கோழி வளர்ப்பு கூட்டுத்தாபனத்தின் மீது, உயிர் கோழி வளர்ப்பு விதியை மீறியதாக கீழ் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்தத் தீர்ப்பை நிராகரித்த உயர் நீதிமன்றம், சர்வ மாநில ரீதியில் இயங்காத ஸ்கெச்டர் கோழிவளர்ப்பு போன்ற கம்பனிகளை கட்டுப்படுத்துவதற்கான விதிகளை புறக்கணித்ததில் வர்த்தக விதிகளை மீறியதாகவும் மத்திய அரசாங்கம் அதன் அதிகாரத்தில் வரம்பு மீறியுள்ளதாகவும் தீர்ப்புக் கூறியது. "நீதித்துறை அதிகாரத்தின் அரசியலமைப்புக்கு அப்பாற்பட்ட ஒரு பிரதிநிதித்துவமாக" இருக்க என்.ஐ.ஆர்.ஏ. இன் கீழ் ஜனாதிபதிக்கு "விதிகளை உருவாக்கும் அதிகாரத்தை" வழங்கியுள்ளதையும் நீதிமன்றம் கண்டுபிடித்தது.

1933ல் ஜனாதிபதி பிரங்க்லின் டி. ரூஸ்வெல்டின் அதிகாரத்தின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட என்.ஐ.ஆர்.ஏ., மாபெரும் பொருளாதார பின்னடைவின் நெருக்கடியுடன் போராட மேற்கொள்ளப்பட்ட மத்திய புதிய உடன்படிக்கை சமூக சீரமைப்பு நடவடிக்கைகளில் ஒன்றாகும். அது அமெரிக்க தொழிற்துறையை ஒழுங்குபடுத்தும் நியாயமான போட்டிக்கான ஒழுங்கு விதிகளை அமைக்க வழிவகுத்தது. அது பொது வேலைகள் சம்பந்தப்பட்ட திட்டங்களை உருவாக்க 3 பில்லியன் டொலர்களுக்கும் மேலாகவும் ஒதுக்கியது. பிரேரிக்கப்பட்ட மறுசீரமைப்புக்களை நிர்வகிக்க தேசிய மீட்சி நிர்வாகம் (என்.ஆர்.ஏ.) ஸ்தாபிக்கப்பட்டது.

நீதிமன்ற முடிவால் ஏறத்தாழ 750 தொழிற்துறை சீரமைப்பு விதிகளை வெற்றிடமாக்கப்பட்ட நிலையில், உயர் நீதிமன்ற தீர்ப்பு வந்த உடனேயே என்.ஆர்.ஏ. விதிகளை அமுல்படுத்தும் முயற்சிகளை நிறுத்தியது. புதிய உடன்படிக்கை மற்றும் ஏனைய சமூக சீரமைப்புக்களை கவிழச் செய்த, பிரதம நீதியரசர் சார்ல்ஸ் ஹுகஸின் உயர் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட ஒரு தொகை தீர்ப்புகளில் மே 27 வழங்கிய தீர்ப்பு கடைசியானதாகும். பனாமா ரெஃப்னிங் கூட்டுத்தாபனம் எதிர் ரேன் மற்றும் ரயில் பாதை ஊழியர்கள் ஓய்வு சபை எதிர் எல்டன் ரயில்பாதை கம்பனி போன்ற வழக்குகளில் ஏற்கனவே தோல்விகள் காணப்பட்டன.

100 ஆண்டுகளுக்கு முன்னர்: சீன-அமெரிக்கர்கள் சீனாவில் அமெரிக்கத் தயாரிப்புப் பொருட்களை பகிஷ்கரிக்குமாறு அழைப்புவிடுத்தனர்

1910 மே 29 அன்று சீன பூராவும் அமெரிக்கப் பொருட்களை பகிஷ்கரிக்குமாறு அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட சீன வர்த்தக சம்மேளனம் (சி.சி.சி.) அழைப்புவிடுத்தது. சான் பிரான்சிஸ்கோ குடாவில் உள்ள ஏஞ்சல் தீவில், புலம்பெயர் சீனர்களுக்கு ஒரு தடுப்பு நிலையத்தை உருவாக்குவதை எதிர்க்குமாறு சி.சி.சி. யின் நீதித்துறை குழு இந்த வேண்டுகோளை விடுத்தது. வாஷிங்டனின் பாகுபாட்டு நடவடிக்கைகளை கைவிடுமாறு அதற்கு அழுத்தம் கொடுக்கும் முயற்சியில், அமெரிக்காவில் செய்யப்பட்ட பொருட்களை கொள்வனவு செய்ய மறுக்குமாறு வேண்டுகோள் விடுத்து சீனா பூராவும் வர்த்தக நிறுவனங்களுக்கு அந்த அமைப்பு தந்திகளை அனுப்பியது.

ஏஞ்சல் தீவில் இந்த தடுப்பு முகாம் 1882 சீனர்களை வெளியேற்றும் சட்டத்தை அமுல்படுத்தவே அமைக்கப்பட்டது. கலிபோர்னியா தங்கத் தேடலை நிறுத்திய பின்னரும் மற்றும் அதைத் தொடர்ந்து வந்த பொருளாதார வீழ்ச்சியை அடுத்தும், சீனாவில் இருந்து உழைப்பாளிகள் நாட்டுக்குள் நுழைவதை கடுமையாக வரையறுப்பதற்கு அமெரிக்க அரசாங்கம் முயற்சித்ததுடன் சீன-எதிர்ப்பு உணர்வையும் தூண்டிவிட்டது. இந்தச் சட்டம், ஏற்கனவே அமெரிக்காவில் வாழ்ந்து வந்த சீன நிரந்தரக் குடியிருப்பாளர்கள் அமெரிக்க பிரஜா உரிமையைப் பெறுவதையும் தடுத்தது.

சீனாவில் இருந்து புலம்பெயர்ந்த ஆயிரக்கணக்கானவர்கள் ஏஞ்சல் தீவில் சிறை முகாம் போன்ற நிலைமையின் கீழ் பல வாரங்களாக, மாதங்களாக மற்றும் சிலர் பல வருடங்களாக கைதிகளாக வைக்கப்பட்டிருந்தனர். குடும்ப உறுப்பினர்களில் இருந்து பிரித்து குறுகலான, இனரீதியான வீடுகளில் வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்ட நிலையில், குடிவரவு நிலையமானது அவநம்பிக்கை மற்றும் அதிருப்தியின் மறுபக்கமாக இருந்தது. ஏஞ்சல் தீவு தடுப்பு முகாமின் சுவர்களில் தமது துன்பங்கள் பற்றி கைதிகள் துன்பகரமான கவிதைகளை எழுதியுள்ளனர்.

1910ல் முதலில் திறக்கப்பட்ட குடிவரவு நிலையம், 1940ல் தீப்பிடித்து நாசமாகும் வரை இயங்கியது. சீனர்களை வெளியேற்றும் சட்டம், 1943 வரை மீண்டும் அமுலுக்க வரவில்லை. பின்னர் அது பங்கு முறைமைக்கு மாற்றீடு செய்யப்பட்டது.