|
தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
The Italian election: A political watershed இத்தாலிய தேர்தல்: ஓர் அரசியல் பள்ளத்தாக்கு
Peter Schwarz use this version to print | Send feedback கடந்த வார இத்தாலிய பொதுத் தேர்தல் ஐரோப்பிய அரசியல் அபிவிருத்தியில் ஒரு திருப்புமுனை வாய்ந்ததாகும். ஐரோப்பிய நிதிய உயரடுக்கின் முக்கியமனாவரான மரியோ மொன்டி, ஒரு அவமானகரமான தோல்வியை சந்தித்தார்; தன்னுடைய நண்பர் ஜனநாயகக் கட்சியின் Pir Luigi Bersai உடன் சேர்ந்து செயல்படக்கூடிய அரசாங்கத்தை அமைக்க முடியவில்லை. இது ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கும் மற்றும் ஜேர்மனிய அரசாங்கத்திற்கும் ஒரு பெரிய அடியாகும். வர்ணனையாளர்கள் யூரோ நெருக்கடியில் ஒரு புதிய வெடிப்பு ஏற்படும் என்று கணித்துள்ளனர். ஆளும் வர்க்கத்தின் பிரச்சினை, அரசாங்கத்தின் எந்த முடிவுகளையும் செனட்டில் தடுக்கும் நிலையில் உள்ள பெப்பே கிரில்லோவோ மற்றும் சில்வியோ பெர்லுஸ்கோனியோ பற்றியது அல்ல. சற்றே கணித்துக் கூறமுடியாதவர்கள் என்றாலும், இருவரும் முதலாளித்துவ அரசியல்வாதிகள், முதலாளித்துவத்தை காப்பவர்கள், மிருகத்தன சிக்கன நடவடிக்கைக்கு ஆதரவு கொடுக்க தயாராக இருப்பவர்கள். பிரச்சினை இத்தாலிய மக்களுடைய எதிர்ப்புத்தான், அவர்கள் உறுதியாக தங்களுக்கு வறுமையையும், வேலையின்மையையும் தவிர வேறு எதையும் கொடுத்திராத கொள்கையை நிராகரித்துள்ளனர்; அதே நேரத்தில் நிதிய உயரடுக்கு சற்றும் வெட்கமின்றி தன்னைச் செல்வக் கொழிப்புடையதாக ஆக்கிக் கொண்டது. இத்தகைய எதிர்ப்பு வெளிப்பட்டுக் கொண்டிருப்பது இத்தாலியில் மட்டும் அல்ல. ஐரோப்பா முழுவதும், அதிகரித்த வகையில் தொழிலாளர்கள் போர்க்குணத்தை வெளிப்படுத்துகின்றனர், சமூக எதிர்ப்புரட்சிக்கு எதிராக தங்களைக் காக்க முற்பட்டுள்ளனர்; அந்த எதிர்ப்புரட்சியோ முந்தைய 70 ஆண்டுகளில் வெற்றி கொள்ளப்பட்ட அனைத்து சமூக நலன்களையும் அழிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. பல்கேரியாவில், அளவுகடந்த மின்சார விலைக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள், அரசாங்கத்தையே கீழிறக்கியது. கிரேக்கத்திலும், ஸ்பெயினிலும் வேலைநிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்புக்கள் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரானவை பெருகிய முறையில் தீவிரமயப்பட்ட வடிவமைப்புக்களை எடுத்துள்ளன. கடந்த 15 ஆண்டுகளாக, ஐரோப்பிய நிதிய உயரடுக்கு முக்கியமாக சமூக ஜனநாயகக் கட்சிகளையும் தொழிற்சங்கங்களையும் அவற்றின் போலி இடது ஆதரவாளர்களையும் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரங்களைப் பெரிதும் குறைத்து, நிதியச் சந்தைகளின் இலாபத்திற்கான வேட்கையை திருப்தி செய்வதற்கு நம்பியுள்ளது. பிரித்தானியாவில் டோனி பிளேயர், ஜேர்மனியில் ஹெகார்ட் ஷ்ரோடர், பிரான்சில் லியோனல் ஜோஸ்பன் ஆகியோர் இக்கட்டத்தின் ஆரம்பத்தில் சிக்கன நடவடிக்கைகளை செயல்படுத்தினர். 2008 நிதிய நெருக்கடியை தொடர்ந்து, ஸ்பெயினில் ஜோஸ் சபாத்தேரோ, போர்த்துகல்லில் ஜோஸ் சாக்ரடிஸ் மற்றும் கிரேக்கத்தில் ஜோர்ஜ் பாப்பாண்ட்ரூ ஆகியோர் இக்கொள்கைகளை தொடர்ந்து விரிவாக்கினர். அவர்கள் தொழிலாளர்கள், ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் வேலையின்மையில் இருப்பவர்களுக்கு எதிராக 1930க்குப் பின் ஐரோப்பாவில் முன்னோடியில்லாத அளவிற்கு தாக்குதல்களை மேற்கொண்டனர். இந்த சமூகத் தாக்குதல்களில், பரந்துபட்ட மக்கள் எதிர்ப்பை நசுக்கி, பயனற்ற எதிர்ப்பு போராட்ட வழிவகையில் திருப்புவதின் மூலம் தொழிற்சங்கங்கள் அரசாங்கங்களுடன் ஒத்துழைத்தன. போலி இடது குழுக்கள் சிக்கன நடவடிக்கைகளை சொற்களில் குறைகூறின, நடைமுறையில் சமூக ஜனநாயக வாதிகளுக்கு ஆதரவு கொடுத்தன. இத்தாலியில் கம்யூனிஸ்ட் ரிபௌண்டேஷன் மற்றும் பல ஜேர்மனிய மாநிலங்களில் இடது கட்சியைப் பொறுத்தவரை அவை அரசாங்கங்களில் பங்கு பெற்றன. சமூக ஜனநாயகக் கட்சி தலைவர்கள் தங்கள் கொள்கையின் செல்வாக்கற்ற தன்மையால் பதவியிழந்தனர். அவர்கள் கன்சர்வேடிவ் அரசாங்கங்களுக்கு அதிகாரத்தை ஒப்படைத்தனர்; பிந்தையவை சமூக எதிர்ப்புரட்சியை தொடர்ந்தன. அவை பெரும் எதிர்ப்பை முகங்கொடுத்தபோது சமூக ஜனநாயகவாதிகள் ஆட்சிக்குத் திரும்பிவந்து முந்தைய வலதுசாரிக் கொள்கைகளையே தொடர்கின்றனர். கடந்த வார இறுதியில் இத்தாலியிலும் இதே விளையாட்டுத்தான் திட்டமிடப்பட்டது, ஆனால் அது கனியாமற் போய்விட்டது. எந்தவித ஜனநாயகபூர்வ தன்மையும் இல்லாமல் 13 மாதங்களுக்கு மொன்டி ஆட்சி நடத்தினார். தேர்தல் என்று இல்லாமல் பதவியில் இருந்தப்பட்ட அவர் முன்னோடியில்லாத சமூகத் தாக்குதல்களை தொடக்கினார். தன்னுடைய செயற்பட்டியலுக்கும், பெர்சானி தலைமையில் உள்ள சமூக ஜனநாயக முகாமிற்கும் இடையே கருத்துக் கணிப்புக்கள் தெளிவான பெரும்பான்மை இருப்பதாகத் தெரிவித்தபோது அவர் முன்கூட்டிய தேர்தல்களுக்கு அழைப்பு விடுத்தார். தன்னுடைய சிக்கனக் கொள்கைகளுக்கு உறுதியான பாராளுமன்றப் பெரும்பான்மையை அடைந்துவிடலாம் என்று நம்பினார். ஆனால் தேர்தல்கள் அருகில் நெருங்கியபின், இந்தப் பெரும்பான்மை கரைந்துவிட்டது. மொன்டியின் கொள்கைகளுடைய பேரழிவு விளைவுகள் ஒவ்வொரு நாளும் இன்னும் தெளிவாயின. இத்தாலிய பொருளாதாரம் ஆழ்ந்த மந்த நிலையில் உள்ளது. இளைஞர்களுக்கு வேலை கிடைப்பது என்பது கிட்டத்தட்ட அரிதாகிவிட்டது. ஓய்வூதியம் பெறுவோர் இழிந்த வறுமையில் தள்ளப்படுகின்றனர். குறைவூதியக் குடும்பங்கள் அதிக வரிகளின் சுமையைத் தாங்குகின்றன. தொழிலாள வர்க்க விரோத சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக போராடாத உத்தியோகபூர்வ “இடதின்” திவால்தன்மை, பெர்லுஸ்கோனி போன்ற வலதுசாரி வார்தைஜால பேச்சாளரையும், போலி ஜனரஞ்சக வாத இரக்கமற்ற கிரில்லோ போன்றவர்களையும் இலாபம் அடைய வைத்துள்ளது, இக்கொள்கைகளோ சமூக ஜனநாயகவாதிகளுடன் அடையாளம் காணப்பட்டு அவர்களின் ஆதரவையும் பெற்றிருந்தன. ஆனால் பெர்லுஸ்கோனியும் கிரில்லோவும் சமூக நெருக்கடிக்கான எந்த விடையையும் கொண்டிருக்கவில்லை. உதாரணமாக சில பிரமைகள், பெர்லுஸ்கோனி ஒரு வலதுசாரி என்பதைத் தவிர வேறொன்றுமில்லை அதேபோல் கிரில்லோ பற்றிய பிரமைகளையும் காலம் விரைவில் அகற்றிவிடும். வர்க்கப் போராட்டம் அதிகரித்த வகையில் மேலும் போர்க்குணம் மிக்கதும் வெளிப்படையானதுமான வடிவமைப்புக்களைக் எடுக்கும். ஐரோப்பிய அரசியல் வாதிகள், ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கனக் கொள்கைகளுக்கு எதிராக வாக்களிக்கப்பட்டுள்ள வாக்காளர்களின் விருப்பத்தை ஏற்கமாட்டோம் என பகிரங்கமாகவே கூறியுள்ளனர். இவ்வகையில் மிகவும் அப்பட்டமான அறிக்கை ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் ஜோஸ் மானுவல் பரோசோவிடம் இருந்து வந்துள்ளது. இத்தாலியத் தேர்தல் பற்றி விமர்சிக்கையில், அவர் அறிவித்தார்: “இப்பொழுது நடக்க இருக்கும் தவறு மக்கள் விருப்பத்திற்கு அடிபணிவதாக இருக்கும். இந்த வினாவை இப்பொழுது நாம் கேட்க வேண்டும்: நம்முடைய பொருளாதாரக் கொள்கையை, குறுகியகால தேர்தல் கருத்துக்களை ஒட்டி வரையறுக்க வேண்டுமா அல்லது ஐரோப்பாவை நீடித்த வளரச்சிப் பாதையில் செலுத்தும் வகையில் வரையறுக்க வேண்டுமா? என்னைப் பொறுத்தவரை விடை தெளிவு: நாம்.... உடனடிக் கட்சி அரசியல் நிலைப்பாடுகளுக்கு விட்டுக் கொடுத்துவிடக்கூடாது.” வேறுவிதமாகக் கூறினால் மக்கள் விருப்பப்படி வாக்களிக்கலாம், ஆனால் அரசாங்கத்தின் கொள்கையில் அது எப்பாதிப்பையும் ஏற்படுத்தாது. நாங்கள் சமூக எதிர்ப்புரட்சியைதான் தொடர்வோம். இத்தகைய அறிக்கைகள்தான் பிற அரசியல்வாதிகள், செய்தி ஊடக விமர்சகர்கள் ஆகியோராலும் வெளியிடப்படுகின்றன. ஐரோப்பிய ஆளும் வட்டங்கள் மொன்டியின் தேர்தல் பேரழிவுக்கு, பெருகிய முறையில் சர்வாதிகார வகை ஆட்சிக்குத் திரும்புவதின் மூலமும் தங்களின் பிற்போக்குத்தன கொள்கைகளுக்கான எதிர்ப்பை பலத்தைக் கொண்டு நசுக்குவதின் மூலம் எதிர்கொள்ளும். தொழிலாளர்களும் இளைஞர்களும் சமூக ஜனநாயக வாதிகள், தொழிற்சங்கங்கள், அவற்றின் போலி இடது ஆதரவாளர்களின் திவால் தன்மையில் இருந்து படிப்பினைகளை எதுத்துக் கொண்டு, தங்களை சுயாதீனமாக அணிதிரட்டிக்கொள்ள தயாரிப்புக்களை மேற்கொள்ள வேண்டும். இத்தாலியில் கம்யூனிஸ்ட் ரிபௌண்டேஷன், பிரான்சில் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக்கட்சி, பிரித்தானியாவில் சோசலிச தொழிலாளர் கட்சி, கிரேக்கத்தில் சிரிசா மற்றும் அமெரிக்காவில் சர்வதேச சோசலிஸ்ட் அமைப்பு போன்ற போலி இடது அமைப்புக்கள் மத்தியதர வகுப்பின் செல்வச் செழிப்பு மிக்க தட்டை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன; அவற்றின் வருமானமும் சமூக அந்தஸ்த்தும் நெருக்கமாக முதலாளித்துவ அரசுடன் பிணைந்துள்ளவை. தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பு மேலும் போர்க்குணம் மிக்கதாக இருந்தால், அவர்கள் மேலும் வலதிற்கு நகர்வர். இப்பொழுது மிக அவசரமான பணி, வரவிருக்கும் போராட்டங்களுக்கு தயாரிப்புக்களை மேற்கொள்வதற்கு ஒரு புதிய புரட்சிகரத் தலைமையை தயார்செய்வதாகும். சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள், சமுதாயத்தை ஒரு சோசலிச அடித்தளத்தில் மறுஒழுங்கமைப்பு செய்வதின் மூலம்தான் பாதுகாக்கப்பட முடியும். பெருநிறுவனங்கள் மற்றும் வங்கிகள் பறிமுதல் செய்யப்பட்டு ஜனநாயகக் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட வேண்டும். உற்பத்தி, சமூகத்தின் தேவைகளுக்கு ஏற்ப அமைய வேண்டுமே அன்றி இலாப பேராசையை நிறைவு செய்வதற்கு அல்ல. இந்த முன்னோக்கின் மையத்தானத்தில் இருப்பது, தொழிலாளர் அரசாங்கங்கள் மற்றும் ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகளை நிறுவதல் ஆகும். |
|
|
|