World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : கிரீஸ்

Greek government courts fascist Golden Dawn with anti-immigrant law 

கிரேக்க அரசாங்கம் குடியேறுவோர் எதிர்ப்புச் சட்டத்துடன் பாசிச கோல்டன் டோனுக்கு ஆதரவளிக்கிறது

By Christoph Dreier
11 March 2013

Back to screen version

கிரேக்கத்தில் சமூக நெருக்கடி மோசமடைகையில், பாசிச Chrysi Avgi (Golden Dawn) அரசாங்கத்துடன் இணைந்து கூடுதல் பங்கைக் கொண்டு மக்களை மிருகத்தனமாக அடக்கும் நிலைமைகளை ஏற்படுத்த ஆளும் உயரடுக்கு முயல்கிறது.

பெப்ருவரியில், பழமைவாத ஆளும் கட்சியான புதிய ஜனநாயகத்தின் (ND) 125 பிரதிநிதிகளில் 84 பேர் பாராளுமன்றத்தில் குடியுரிமை பெற்ற கிரேக்கர்கள் இராணுவ உயர்கல்விக்கூடங்கள் அல்லது இராணுவம் பொலிஸ் பணிகளில் ஈடுபடுவது தடைசெய்யப்பட வேண்டும் என்ற சட்டவரைவைக் கொண்டுவந்தனர். இதற்குக் கொடுக்கப்பட்ட காரணம் கிரேக்க வம்சாவளி அல்லாத வகையில் வந்தவர்கள் இந்த அமைப்புக்களில் ஒரு பாதுகாப்பு ஆபத்தை ஏற்படுத்துகின்றனர் என வாதிடப்பட்டது.

இச்சட்டவரைவை தொடக்கியவர்களின் முக்கிய நோக்கம், ஆளும் கட்சி, பாசிச கோல்டன் டோனின் இனவெறிக்கொள்கைகளை ஏற்பதோடு ஒரு புதிய கூட்டரசாங்கத்திற்கு தயாரிப்பு செய்கிறது என்ற சமிக்ஞையை அனுப்புவதாகும். ND இன் இரண்டு கூட்டாட்சி பங்காளிக் கட்சிகளான சமூக ஜனநாயக PASOK மற்றும் ஜனநாயக இடது DIMAER இரண்டும் இம்முயற்சிக்கு ஆதரவு கொடுக்க மறுத்துவிட்டன.

கோல்டன் டோன் இதை வரவேற்று, தான் பாராளுமன்றத்தில் இதற்கு ஆதரவு கொடுக்கும் என்று கூறியுள்ளது. இக்கட்சி நீண்ட காலமாக குடியேறுபவர்களை  பொலிஸ், இராணுவம் ஆகியவற்றில் இருந்து ஒதுக்கி வைக்க வேண்டும் என்று கோரிவந்துள்ளது. ஆனால் இச்சட்டவரைவின் மீதான வாக்கெடுப்பு தொழில்நுட்பக் காரணங்களினால் கடந்த வாரம் ஒத்திப் போடப்பட்டு பின்னர் திரும்பப் பெறப்பட்டு விட்டது.

ND இன் பிரதிநிதி அடோனிஸ் ஜோர்ஜியடிஸ் சட்ட மாற்றத்திற்கான தன் ஆதரவை நியாயப்படுத்தும் வகையில் இது பெரும்பாலான கிரேக்கர்களின் விருப்பத்தைப் பிரதிபலித்தது என்று வாதிட்டார். கோல்டன் டோனின் பங்கை அவர் குறைத்துக்கூறும் வகையில், நெருக்கடியை ஒட்டி சிலர் சற்று தீவிரவாதிகளாக உள்ளனர் என்றார்.

சற்றே மாற்றியமைக்கப்பட்டுள்ள ஸ்வாஸ்திகாவைத் தன் அடையாளச் சின்னமாகக் கொண்டுள்ள கோல்டன் டோன், ஒரு நாஜி வகையிலான மரியாதை செலுத்தும் முறையை பயன்படுத்தி குடியேறுவோர், ஓரினச் சேர்க்கையாளர்கள், அரசியல் எதிரிகள் ஆகியோர் மீது படுகொலை வகை தாக்குதல் திட்டத்தையும் மேற்கொள்கின்றனர்; இக்கட்சி முறையாக வணிக வட்டங்கள் மற்றும் அரசியல் நடைமுறையில் ஆதரவிற்கு உட்பட்டுள்ளது.

கன்சர்வேடிவ் கிரேக்க நாளேடான கதிமெரினியில் உள்ள செய்தியாளர் தாசோஸ் டெலோக்லோ கோல்டன் டோன் பெறும் நிதியங்களைப் பற்றிய தகவல்களை ஆராய்ந்தார்: “அரசியலமைப்பு நெறிக்குள் இருப்பதாகக் கூறப்படும் கட்சிகளால் கோல்டன் டோன் நிதிய ஆதரவு பெறுகிறது. அவை இதற்கு முந்தைய தேர்தல் போட்டிகளிலும் தங்கள் தேர்தல் கருத்துக்களை அச்சடித்துக் கொடுப்பதின் மூலம் உதவினர்: இது வலது தீவிர LAOS கட்சி ஏற்றத்தை முறிக்கச் செய்யப்பட்டது. ஆனால் 2012ல் இந்த நிதிகள் போதுமானதாக இல்லை. கடந்த ஆண்டு மே மாதத் தேர்தல்களுக்கு முன்பு அக்கட்சியினர் கப்பல் பெருநிறுவன அதிபர்கள், சொத்து விற்பனையாளர்கள், வக்கீல்கள், ஏன் ஒரு வங்கிகூட இருக்கலாம், ஆகிய பிரிவினரிடம் இருந்து ரொக்கம் பெற்றனர் என்பதைக் காட்டும் தகவல்கள் என்னிடம் உள்ளன.”

டிசம்பர் மாதம் சமரஸ் பாராளுமன்றத்தின் முடிவுகளை மீறி, கோல்டன் டோன் பிரதிநிதி Eleni Zaroulia வை ஐரோப்பியக் குழுவின் பாராளுமன்ற சபைக்கு அனுப்பி வைத்தார்; அது மற்ற எல்லாவற்றுடனும் மனித உரிமைகளுக்கான  ஐரோப்பியக் குழுவின் ஆணையர் தேர்தலுக்கும் பொறுப்பைக் கொண்டுள்ளது. இத்தகைய வழிவகைகளில் பாசிஸ்ட்டுக்கள் கண்ணியமானவர்கள்போல் காட்டப்படுகின்றனர்.

இதே மாதத்தில், சமரஸ் 2010ம் ஆண்டு Ragousi Act ஐ அகற்றினார்; அது கிரேக்கத்தில் பிறந்து, குறைந்தப்பட்சம் கிரேக்கப் பள்ளியில் ஆறு ஆண்டு காலங்கள் படித்தவர்கள் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க அனுமதித்திருந்தது. அச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டபின், கிட்டத்தட்ட 200,000 தகுதிஉடைய நபர்களில் 6,072 பேரால்தான் அணுகப்படக்கூடியதாக இருந்தது. இப்பொழுது அரசாங்கம் சட்டபூர்வ தடையை இன்னும் அதிகமாக்க விரும்புகிறது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து, அரசாங்கம் மிருகத்தனமாக கோல்டன் டோனின் மையக் கோரிக்கைகளில் ஒன்றை செயல்படுத்தியது. அதன் Xenios Zeus பிரச்சாரத்தில், வெளிநாட்டினரைப் போல் தோன்றியவர்களை பொலிசார் தடுப்புக் காவலில் வைத்தனர். பெப்ரவரி முற்பகுதியில் கிட்டத்தட்ட 60,000 பேரை பொலிசார் தங்கள் சோதனைகளின்போது நிறுத்தியதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவர்களில் 4,200 பேர் ஆவணங்கள் இல்லாமல், வெளியேற்றப்படுவதற்கு காத்திருப்பவர்கள்.

இப்படிப் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் அரசாங்கம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்முயற்சி, நிதிய ஆதரவுடன் நிறுவப்பட்டுள்ள 30 சிறப்பு முகாம்களில் நெருக்கடியில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த முகாம்களில் போதிய வெப்பமோ, சுடுநீரோ கிடையாது; இதைத்தவிர உணவு, அடிப்படை சுகாதார பொருளான சவுக்காரம் போன்றவையும் கிடைப்பதில்லை.

சர்வதேச மன்னிப்பு சபை குடியேறுபவர்களையும் அரசியல் விரோதிகளையும் தவறாக கிரேக்கப் பொலிஸ் நடத்துவது (ஜூன் 2012 தேர்தல்களின் போது பொலிசில் 60%த்தினர் கோல்டன் டோனுக்கு வாக்களித்தவர்கள்) குறித்து தகவல் கொடுத்துள்ளது. பாசிச எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டபின் அவர்களுடைய சிறை அறைகளில் அடித்து அவமானப்படுத்தப்பட்டதும் வெளிவந்துள்ளது.

அரசாங்கத்தின் பாதுகாப்புடன், பாசிஸ்ட்டுக்கள் பெருகிய முறையில் ஆக்கிரோஷத் தன்மை கொண்டு, வாடிக்கையாக குடியேறுவோர் மற்றும் அரசியல் கூட்டங்களை தாக்குகின்றனர். Konstasntinos Georgousis என்னும் திரைப்படத்துறை மாணவர் எடுத்துள்ள வீடியோ காட்சி, பிரித்தானிய சானல் 4ல் காட்டப்பட்டது, கோல்டன் டோனின் பாராளுமன்ற வேட்பாளர் Alexandros Plomaritis இனவெறிப் பிரச்சாரம் நடத்துவதைக் காட்டுகிறது. அவர், குடியேறுபவர்களை மனிதத்தரத்தைவிட குறைந்தவர்கள் என்று கூறி, நாஜி சித்திரவதை முகாம்களைக் சுட்டிக்காட்டி, ஒவ்வொருவரும் அவர்களுக்காக அடுப்புக்களை (ovens) மீண்டும் பற்றவைக்கவேண்டும் என்றும் இடதுகளின் பற்கள் ஆபரணங்களைத் தயாரிக்க பதனிடப்பட வேண்டும் என்றும் அறிவித்தார்.

இத்தகைய இழிந்த பாசிஸ்டுகளை, கிரேக்க முதலாளித்துவ தட்டுக்கள் மற்றும் ND ஊக்குவிப்பது கிரேக்க மற்றும் ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு தெளிவான எச்சரிக்கை ஆகும். ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கன நடவடிக்கைகளை அடக்குவதற்கு ஏதென்ஸ் மிக மிருகத்தன நடவடிக்கைகளை தயாரித்து வருகிறது. ஏற்கனவே நவம்பர் 2011ல் ஐரோப்பிய ஒன்றியம் அதி-வலது LAOS அரசாங்கத்தில் இணைவதற்கு இசைவு கொடுத்துள்ளது.

பெப்ருவரி மாதம் இரு சந்தர்ப்பங்களில், அரசாங்கம் வேலைநிறுத்தம் செய்த தொழிலாளர்கள் மீது இராணுவச் சட்டத்தை சுமத்தி ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவுடன் அவர்களை மீண்டும் பணி செய்யக் கட்டாயப்படுத்தியது. தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் போராட்டங்களை தாங்களே அடக்க முடியாத நிலை ஏற்படுகையில், அரசாங்கம் பெருகிய முறையில் சர்வாதிகார ஆட்சி வகைகளைத்தான் நாடவேண்டும்.

PASOK, DIMAR இரண்டும் தொழிற்சங்கங்களுடன் நெருக்கமாகப் பிணைந்து சமூகத் தாக்குதல்களை செயல்படுத்த அவற்றை நம்பியிருக்கையில், ND பெருகிய முறையில் வலதுசாரி Independent Greeks மற்றும் பாசிச கோல்டன் டோன் ஆகியவற்றுடன் ஒரு கூட்டணிக்கு கவனம் செலுத்துகின்றது. இச்சக்திகள் இணைந்தால் அரசாங்க பெரும்பான்மைக்கு போதுமான இடங்கள் இருக்கும்.

பாசிஸ்ட்டுகளின் வளர்ச்சி மற்றும் ND இச்சக்திகளுடன் வெளிப்படையாக ஒத்துழைப்பது என்பதற்கு கிரேக்கத்தின் பல போலி இடது சக்திகளின் வலதுசாரிக் கொள்கைகள் ஊக்கம் அளிக்கின்றன. 2010ல் சிரிசாவில் இருந்து பிரிந்த DIMAR, அரசாங்கத்தின் சமூகத் தாக்குதல்களுக்கு ஆதரவு கொடுப்பதோடு மட்டும் அல்லாமல், குடியேறுவோரை அது வேட்டையாடுதல் மற்றும் வேலைநிறுத்தங்களை அடக்குதல் ஆகியவற்றிற்கும் ஆதரவைக் கொடுக்கிறது.

முக்கிய எதிர்க்கட்சியான சிரிசாவும் (தீவிர இடதுக் கூட்டணி) பல தீர்க்கமான சந்தர்ப்பங்களில் அரசாங்கத்தின் கொள்கைக்கு ஆதரவு கொடுத்துள்ளது. பல முறை தான் ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு ஆதரவுதரத் தயார் என்றும் தெளிவாக்கியுள்ளது. இதன் தலைவர் அலெக்சிஸ் சிப்ரஸ் கடந்த புதன் அன்று ND  உடைய நிறுவனர் Konstantinos Karamanlis இறந்த 15வது ஆண்டு நினைவு நாளில் பேசினார். அந்த பிற்போக்குவாதியை அவர் பெரிதும் பாராட்டிப் பேசினார்; Karamanlis 1974ல் கிரேக்கத்தை இராணுவ கேர்னல்கள் ஆட்சியில் இருந்து பாராளுமன்ற ஆட்சிக்கு மாற்றத்திற்கு ஏற்பாடு செய்திருந்தபோதும் வெளியேறும் ஆட்சிக்கு ஏராளமான சலுகைகளை கொடுத்திருந்தார்.

சிறிய கம்யூனிஸ்ட் கட்சியுடன் (KKE) சேர்ந்து சிரிசா பாசிஸ்ட்டுக்களுக்கு எதிராக எந்தவொரு தீவிரமான எதிர்ப்பையும் ஒழுங்கமைக்க மறுக்கிறது. இதற்குக் காரணம் அவர்களும் அதே சமூக நலன்களைத்தான் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்: அவர்கள் சமூகத் தாக்குதல்களுக்கு ஆதரவு கொடுத்துள்ளனர். பாசிசத்தின் எழுச்சியைவிட தொழிலாள வர்க்க இயக்கத்தின் எழுச்சியைக் கண்டுதான் அஞ்சுகின்றனர்.