|
தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
The right-wing threat in Greece கிரேக்கத்தில் வலதுசாரி அச்சுறுத்தல்
Cristoph Dreier use this version to print | Send feedback கிரேக்கத்தின் மிகப் பெரிய ஆளும் கட்சியான புதிய ஜனநாயகம் (ND) பாசிச கோல்டன் டோனுடைய வாக்குகளுக்கு அழைப்புவிடும் முயற்சிகள் —குடியேறுவோரை பொலிஸ், இராணுவத்தில் நியமிப்பதைத் தடுப்பது மற்றும் நூறாயிரக்கணக்கான குடியேறியோரின் பிள்ளைகளை பாதிக்கும் வகையில் குடியுரிமை பெறும் முறையைத் தாக்குதல்— தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு தெளிவான எச்சரிக்கையாகும். கிரேக்க நீதிமன்றங்கள் 2010 Ragousis இன் குடியுரிமை பெறும் சட்டத்தை, ND மற்றும் கோல்டன் டோன் இரண்டும் அதற்கு எதிராக பிரச்சாரம் நடத்தியதைத் தொடர்ந்து அகற்றிவிட்டன. ND யின் 125 பிரதிநிதிகளில் கிட்டத்தட்ட 85 பேர் இராணுவத்தில் சேரும் தடைக்கு ஆதரவு கொடுத்தனர், இது இன்னும் தீவிர வலது, இனத் தூய்மை பாதுகாப்புப் படையை தோற்றுவிக்கும் நோக்கத்துடன் இப்பொழுது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள், கிரேக்க ஆளும் வர்க்கம் கோல்டன் டோனை உத்தியோகபூர்வ அரசியலுடன் ஒருங்கிணைக்கும் பரந்த பிரச்சாரத்தின் ஒரு பகுதி ஆகும். அன்றாடம் குடியேறுவோரையும் அரசியல் எதிரிகளையும் தாக்கும் அக் கட்சி சமீபத்திய ஆண்டுகளில் முறையாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. கிரேக்க முதலாளித்துவத்தின் செல்வாக்குமிக்க பிரிவுகளால் நிதியுதவி கொடுக்கப்பட்டு, பொலிசின் ஆதரவைக் கொண்ட இக் கட்சி தற்பொழுது தேர்தலில் 14% வாக்குகளைப் பெற்றுள்ளது. ND ஐ தவிர சமூக ஜனநாயக PASOK மற்றும் ஜனநாயக இடது (DIMAR) கட்சிகளைக் கொண்டுள்ள கிரேக்க அரசாங்கத்தின் செயற்பாடுகள் ஐரோப்பா முழுவதும் காணப்படும் போக்கின் தீவிர வெளிப்பாடாகும். ஆளும் வர்க்கம் பெருகிய முறையில், தீவிர வலது அல்லது குடியேறுவோர் எதிர்ப்பு சக்திகளுக்கு முறையீடு செய்து, முழுக் கண்டத்திலும் தொழிலாள வர்க்கத்தின் மீது சுமத்தப்படும் சிக்கன நடவடிக்கைகளுக்கு ஒரு தளத்தை அதிகப்படுத்த முயல்கிறது. பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்ட், ரோமா வெளியேற்றம் மற்றும் நாடு கடத்தல்; ஹங்கேரிய அரசாங்கம் ரோமா எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் பாசிச சக்திகளை தூண்டிவிட செயல்படுவது; ஜேர்மனிய உள்துறை மந்திரி Hans-Peter Friedrich சமீபத்தில் கிழக்கு ஐரோப்பிய குடியேறுவோரை எதிர்த்துப் போராடியிருப்பது ஆகியவை அனைத்தும் இந்த ஆழ்ந்த பிற்போக்குத்தனக் கொள்கைக்கு உதாரணங்கள் ஆகும். ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பு நாடுகளாக இருக்கும் ஐரோப்பிய அரசாங்கங்கள் உள்நாட்டில் இத்தகைய கொள்கையைத்தான் நம்பியுள்ளன, கிரேக்கத்தில் இது இன்னும் ஒப்புதல், அங்கே ஐரோப்பிய ஒன்றியம் சமூக வெட்டுக்களுக்கு மட்டும் உத்தரவிடவில்லை, மேலும் இது பொலிஸ் சோதனைகளுக்கும் அகதிகளை வேட்டையாடி, வெளியே அனுப்ப நிதியுதவியும் அளிக்கிறது; வேலைநிறுத்தங்களை அடக்குவதற்கு ஒப்புதல் கொடுக்கிறது; கோல்டன் டோன் உடன் ND இன் சூழ்ச்சி நடவடிக்கைகளையும் ஏற்கிறது. ஐரோப்பாவில் நாஜி ஆட்சி முடிந்து கிட்டத்தட்ட 68 ஆண்டுகளுக்குப் பின் பாசிச அமைப்புக்கள் மீண்டும் உத்தியோகபூர்வ அரசியலின் ஒரு பாகமாக வந்துள்ளன; முழு இனவழி குழுக்களும் வெளியேற்றப்பட்டு அவமானப்படுத்தப்படுகின்றன. ஆழ்ந்த சமூகச் சரிவின் மத்தியில் ஐரோப்பிய முதலாளித்துவத்தின் காட்டுமிராண்டித்தனம் மீண்டுமொருமுறை மேற்பரப்பிற்கு வருகின்றது. ஒவ்வொரு நாட்டிலும் நடத்தப்படும் சமூகத் தாக்குதல்கள், ஜனநாயக ஆட்சியின் நெறிகளுடன் இணங்கிப்போக முடியாதது. கிரேக்கத்தில் மட்டும், சமீபத்திய ஆண்டுகளின் வெட்டுக்கள் சராசரி 30சதவீத ஊதிய இழப்புக்களை ஏற்படுத்தியுள்ளன. வேலையின்மை தொடர்ந்து உயர்ந்து வருகிறது ஏற்கனவே 27 சதவீதத்தை எட்டிவிட்டது. ஐரோப்பிய முதலாளித்துவத்தின் வலதுசாரித் தாக்குதல், இக்கொள்கைக்கு தொழிலாளர்கள் எதிர்ப்பு நசுக்கப்பட்டு, எந்த வெகுஜன சக்தியும் பாசிஸ்ட்டுக்களை எதிர்க்கவில்லை என்ற சூழலில்தான் சாத்தியமாகும். இந்த சூழ்நிலைக்கு முதன்மையான பொறுப்பு ஐரோப்பிய தொழிற்சங்கங்களும் மத்தியதர வர்க்கத்தின் வசதிமிக்க பிரிவுகளை அடித்தளமாக கொண்ட போலி இடது கட்சிகளுமாகும். இவை ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கனக் கொள்கைகளை செயல்படுத்த உதவுகின்றன, தொழிலாளர் போராட்டங்களை முதுகில் குத்துகின்றன, கோல்டன் டோன் செல்வாக்கை அழிக்க போராடும் தொழிலாள வர்க்கத்தின் ஒரு அரசியல் கட்சியின் வளர்ச்சிக்கு தடையாய் இருக்கின்றன. DIMAR கிரேக்கத்தில் அத்தகைய ஒரு கட்சி, அது ஏற்கனவே அரசாங்கத்தின் ஒரு பாகம் ஆகும்; ND க்கும் சமூக ஜனநாயக PASOK க்கும் பெரும்பான்மை கிடைக்க உதவுகிறது. தொழிலாளர்கள் மீது நடத்தப்படும் அனைத்து தாக்குதல்கள் மற்றும் குடியேறுவோர் மீது நடத்தப்படும் வேட்டை இவற்றிற்கு இது கூட்டுப் பொறுப்பைக் கொண்டுள்ளது. ND உடைய தந்திர உத்திகள் கோல்டன் டோனுடன் இருக்கிறது என்பதை அறிந்தும் DIMAR கூட்டணியில் தொடர்கிறது. ஆனால் தொழிலாளர்களின் எதிர்ப்பை அடக்குவதில் முக்கிய பங்கு மிகப் பெரிய எதிர்க்கட்சியான சிரிசாவால் (முற்போக்கு இடது கூட்டணி) கொள்ளப்பட்டுள்ளது—இதில் இருந்து மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து வந்ததுதான் DIMAR. சமீபத்திய ஆண்டுகளில் கிரேக்கம் மிகப் பெரிய சமூக எதிர்ப்புக்கள், வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களைக் கண்டுள்ளது. ஆனால் தொழிற்சங்கங்கள் அரசாங்கத்துடன் நெருக்கமாக ஒத்துழைத்து எதிர்ப்புக்களை தனிமைப்படுத்தி அவற்றை தீமை பயக்காத வழிவகைகளில் செலுத்திவிடுகின்றன. இதில் அவை வெற்றிபெறவில்லை என்றால், சுரங்க இரயில் தொழிலாளர்கள், கப்பல்துறை ஊழியர்கள் செயல்களில் நடந்ததைப் போல், பின்னர் அரசாங்கம் இராணுவச் சட்டத்தை சுமத்தி தொழிலாளர்களை மீண்டும் பணியில் ஈடுபடுத்துகிறது. தொழிற்சங்கங்கள் தங்கள் பங்கிற்கு இராணுவச் சட்டம் உடனடியாக செயல்படுத்தப்பட உறுதியளிக்கின்றன. சிரிசா, இந்த தொழிலாளர்களின் போராட்டங்களை தொழிற்சங்கங்கள் அடக்குவதற்கு ஆதரவு கொடுப்பது மட்டுமின்றி, அரசாங்கத்திற்கு ஒவ்வொரு இக்கட்டான சூழ்நிலையிலும் உதவுகிறது. கடந்த நவம்பர் மாதம், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஐந்தாம் சிக்கனப் பொதி இயற்றப்பட்டு, நூறாயிரக்கணக்கான தொழிலாளர்கள் தெருக்களுக்கு வந்து எதிர்ப்புத் தெரிவித்தபோது, சிரிசாவின் தலைவர் அலெக்சில் சிப்ரஸ், தன் கட்சி கிடைக்கும் பாராளுமன்ற வழிவகையை அரசாங்கத்தை வீழ்த்த பயன்படுத்தாது என்று உறுதிமொழி கொடுத்தார். அவர் வெளிநாடுகளுக்கு செல்கையில் சிரிசா ஐரோப்பிய ஒன்றித்தையும் அதன் கடன் ஆட்சியையும் பாதுகாக்கும் என்றும் வலியுறுத்தினார். தொழிலாள வர்க்கத்தின் சமூக நலன்களுக்கு இயல்பாகவே விரோதம் காட்டும் சமூக அடுக்குகளின் பேரிலேயே சிரிசா பேசுகிறது. ஐரோப்பிய அரசாங்கங்களுடன் இணைந்து சிக்கன நடவடிக்கைகளுக்கு அதன் ஆதரவு, இன்னும் வலதிற்கு செல்ல உந்துதல் கொடுக்கிறது. ND தன் பாராளுமன்ற தந்திர நடவடிக்கைகளை Chrysi Avgi யுடன் ஆரம்பித்த சில நாட்களிலேயே, சிப்ரஸ், ND நிறுவனர் Konstantinos Karamanlis உடைய 15வது ஆண்டு நினைவு தினத்தை குறிக்கும் கூட்டங்களில் பேசி, பழையை பிற்போக்குவாதி மீது பெரும் புகழாரம் சூட்டினார். சிரிசா இராணுவத்தின் எண்ணிக்கையில் வெட்டுக்கள் கூடாது என்றும் எதிர்க்கின்றது; பொலிஸ் ஆயுதங்களை நவீனமயப்படுத்த கூடுதல் நிதி அளிக்கவேண்டும் என்றும் கூறுகிறது. இத்தகைய அரசியல் நோக்குநிலைதான் சிரிசா அல்லது சிறிய கிரேக்க கம்யூனிஸ்ட் கட்சி பாசிச ஆபத்திற்கு எதிராக எவ்வித தீவிர நடவடிக்கைகளை எடுக்காததற்கும் குடியேறுவோர் மீது தாக்குதல்களுக்கு ஆதரவு கொடுப்பதற்கும் காரணம் ஆகும். அவை பாசிசக் கும்பலின் செயற்பாடுகளைவிட தொழிலாள வர்க்கத்தின் இயக்கம் பற்றி அஞ்சுகின்றன. ஒரு சர்வாதிகார ஆபத்தை எதிர்கொள்வதற்கு, தொழிலாளர்களுக்கு தமது சொந்த சுயாதீன முன்னோக்கு தேவையாகும். இப்பொழுதுள் நிலைமை சமூக தாக்குதல்களுக்கு எதிராக தேசிய எல்லைகளை கடந்து போராடவும், இலாபத்திற்கான பேராசைகள் என்று இல்லாமல் சமூகத் தேவைகளுக்கு முன்னுரிமை தரும் சோசலிச வேலைத்திட்டத்திற்கு ஆதரவு கொடுக்கவும் ஐக்கியப்பட வேண்டும். இதற்கு தொழிற்சங்க அதிகாரத்துவம் மற்றும் அனைத்து போலி இடது போக்குகளுக்கு எதிராகவும் தொழிலாள வர்க்க்கம் விட்டுக் கொடுக்காத போராட்டத்தில் ஈடுபட வேண்டும். |
|
|
|