|
தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை Sri Lanka: Mobs brutally attacked a journalist in Jaffna இலங்கை: யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் மீது கொடூரத் தாக்குதல்
By Subash
Somachandran use this version to print | Send feedback
இலங்கையின் வடக்கில், யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் வலம்புரி நாளிதழின் ஊடகவியலாளர் உதயராசா சாளின் கடந்த 8ம் திகதி குண்டர்களால் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார். இது இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் இருக்கும் வடக்கில் அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான தாக்குதல்களில் அண்மையதாகும். யாழ்ப்பாணம் பொலிஸ் தலமையகத்தில் வழக்கமாக இடம்பெறும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டுவிட்டு, தனது அலுவலகம் நோக்கி துவிச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருக்கும் போதே, ஆறு பேர் கொண்ட குண்டர்களால் அவர் தாக்கப்பட்டார். சுயநினைவு இழந்து வீதியில் கிடந்த அவரை பொதுமக்கள் மீட்டு, வலம்புரி அலுவலர்களின் உதவியுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். அவரது முதுகெலும்பில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் கூறியுள்ளனர். இந்த தாக்குதல் நடந்த விதம், பாதுகாப்புப் படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசத்தில் குண்டர்கள் சுதந்திரமாக செயற்படுவதை தெளிவுபடுத்துகிறது. சாளின், தனது தற்காப்புக்காக சத்தமிட்டுக்கொண்டே ஒடிய போதும், குண்டர்கள் அவரை விரட்டி விரட்டி தாக்கியுள்ளனர். அவர், மணிக்கூட்டு வீதி, நாவலர் வீதி மற்றும் நீராவியடி ஆகிய இடங்கள் ஊடாக தப்பி ஓடும்போது வழி மறித்து தாக்கப்பட்டுள்ளார். முதலில் கை மற்றும் கால்களால் தாக்கிய குண்டர்கள், பின்னர் மேசன் வேலையில் ஈடுபட்டவர்களிடம் மண்வெட்டியைப் பறித்தெடுத்து வந்து அதனால் தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலுக்கு பொலிசார் உடந்தையாய் இருந்தமைக்கான அறிகுறிகள் காணப்படுகின்றன. பொலிஸ் தலைமையகத்தில் நடந்த ஊடகவியலாளர்கள் மாநாட்டில் அவர் பொலிஸ் அதிகாரியை சவால் செய்ததன் பின்னரே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதேவேளை, தான் வலம்புரி பத்திரிகையின் ஊடகவியலாளர் என கூறி, தனது அடையாள அட்டையை குண்டர்களிடம் காட்டிய போது, “நாங்கள் பொலிஸ் புலனாய்வாளர்கள்” எனக் கூறிக் கொண்டே குண்டர்கள் மேலும் தாக்கியுள்ளனர். கடந்த மாதம் 15ம் திகதி, யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடன் மேலும் பல அமைப்புகளும், யாழ்ப்பாணம் வலிகாமத்தில் இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்டுள்ள நிலங்களை மக்களிடம் மீள ஒப்படைக்குமாறு வலியுறுத்தி, உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை நடத்தின. இடைநடுவில், இராணுவத்தினர் என அடையாளங் காணப்பட்ட குண்டர்கள் புகுந்து, மக்களையும் ஊடகவியாளர்களையும் தாக்கி போராட்டத்தை குழப்புவதற்கு முயற்சித்த போது, மக்கள் அவர்களை மடக்கிப் பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்தனர். ஆயினும் தாம் எவரையும் கைது செய்யவில்லை என பொலிஸ் தரப்பில் கூறப்பட்ட போது, குற்றவாளிகளை பொலிசார் அழைத்துச் செல்வதை காட்டும் நிழற்படங்களை ஊடகங்கள் வெளியிட்டன. இது சம்பந்தமாக 8ம் நிகதி நிருபர்கள் மாநாட்டில் கேள்வி எழுப்பப்பட்ட போது “அந்தச் சம்வங்கள் பற்றி யாரும் பொலிசில் முறைப்பாடு செய்யாததினால் நாங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என பொலிஸ் அதிகாரி பதிலளித்துள்ளார். இதை சவால் செய்த சாளின், “உங்கள் கண்முன் ஒரு பெண்ணிடம் நகைகள் திருடப்பட்டால், அந்த திருடனை உடனே கைது செய்யாமல் முறைப்பாடு செய்த பின்னர் கைது செய்யலாம் என திருடனை விட்டு விடுவீர்களா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். இந்த தாக்குதல் பற்றி பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து, யாழ்ப்பாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் இந்து கருணாரட்ன, ஆஸ்பத்திரிக்கு வந்து சாளினிடம் “நடவடிக்கை எடுப்பதாக” வாக்குறுதியளித்தார். ஆயினும், இந்த முறைப்பாடும் ஏனைய முறைப்பாடுகளைப் போலவே பயனற்றதாகவே அமையக்கூடும் என்பதை, அவரே மறைமுகமாக வெளிப்படுத்தியுள்ளார். கடந்த வாரம் நடைபெற்ற நிருபர்கள் மாநாட்டில் பேசிய அவர், “அண்மையில் நடைபெற்ற ஊடகவியலார்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் தனிப்பட்ட காரணங்களுக்காக நடைபெற்றுள்ளதாக புலன் விசாரணைகள் மூலம் அறிய முடிகின்றது” என்று குறிப்பிட்ட அவர், “முறைப்பாட்டைச் செய்த ஊடகவியலாளர்கள் தாக்கியவர்கள் தொடர்பில் முழுமையான தகவலைத் தரவில்லை” என மேலும் குறிப்பிட்டுள்ளார். இந்த ஆண்டின் கடந்த இரண்டரை மாதங்களில், யாழ்ப்பாணத்தில் ஊடகங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட மூன்றாவது தாக்குதல் இதுவாகும். கடந்த ஜனவரி 10 மற்றும் பெப்ரவரி 7 ஆகிய தினங்களில் முறையே உதயன் மற்றும் தினக்குரல் பத்திரிகைகளின் விநியோகஸ்தர்கள் வடமராட்சிப் பிரதேசத்தில் வைத்து தாக்கப்பட்டதுடன், அவர்கள் விநியோகத்துக்காக எடுத்துச் சென்ற பத்திரிகைகள் மற்றும் அவர்களின் மோட்டார் சைக்கிள்களும் தீயிட்டுக் கொழுத்தப்பட்டன. சாளின் தாக்கப்பட்டது முதற்தடவை அல்ல. கடந்த வருடம் நவம்பர் மாதம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாணவர் குழுவொன்று யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூர முயற்சித்தபோது பாதுகாப்பு படையினர் ஆத்திரமூட்டல்களை செய்தனர். அதை எதிர்த்து மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் மீது இராணுவம் தாக்குதல் தொடுத்தபோது, அங்கு செய்தி சேகரிக்கச் சென்ற சாளின் தாக்குதலுக்கு உள்ளானதுடன், அவரது கமராவும் படையினரால் அபகரிக்கப்பட்டது. சாளின், உலக சோசலிச வலைத் தளத்துடன் பேசும் போது, “மக்களுக்கு இருக்கும் பிரச்சினைகளை வெளிக் கொண்டு வருவதற்கு நான் ஊடகவியலைத் தேர்ந்தெடுத்தேன். ஆனால் அதைச் செய்வதற்கு இங்கு ஜனநாய உரிமைகள் மறுக்கப்படுகின்றன. எமது பாதுகாப்பு கேள்விக் குறியாக இருக்கின்றது. இந்த நாட்டில் யாருக்குமே பாதுகாப்பு இல்லை. கொலை செய்யும் நோக்குடன் தான் அவர்கள் என்னை மீண்டும் மீண்டும் துரத்தித் தாக்கினார்கள். நான் தப்பி ஓடியதாலும் பொது மக்கள் வீதிகளில் வந்ததனாலும் தான் நான் அதிஷ்டவசமாக தப்பினேன்”, என்றார் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இனவாத யுத்தம் முடிவடைந்து நான்கு ஆண்டுகள் பூர்த்தியடைய உள்ள நிலையில், ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கமும் அதன் பாதுகாப்புப் படைகளும் வடக்கு மற்றும் கிழக்கில் சமாதானமும் அமைதியும் நிலவுகின்றது என கூறிக்கொள்கின்றன. அதே வேளை, அரசாங்கம் இந்த வாரம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் யுத்தக் குற்றச்சாட்டு பிரேரணைகளை எதிர்கொள்கின்ற நிலையில், வடக்கு கிழக்கில் இடம்பெறும் வன்முறைகள் அம்பலத்துக்கு வராமல் தடுப்பதில் விழிப்பாக உள்ளன. ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் வடக்கில் மட்டும் இடம்பெறும் சம்பவம் அல்ல. கடந்த பெப்பிரவரி 15ம் திகதி கூட கொழும்பில் வெளியாகும் சண்டே லீடர் பத்திரிகையின் ஊடகவியலாளர் பஃராஸ் சௌகட்டலி துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானார். இராஜபக்ஷ ஆட்சிக்கு வந்த பின்னர், பல ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டும், கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ளதோடு சிலர் உயிரைக் காத்துக்கொள்ள நாட்டை விட்டு வெளியேறத் தள்ளப்பட்டார்கள். சாளின் மீதான தாக்குதல் சம்பந்தாமக பல அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. தமிழ் தேசிய மக்கள் முன்னணி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: “யாழ் குடாநாடு முழுவதும் சிறீலங்கா இராணுவத்தினரது தீவிர கண்காணிப்பிலுள்ள நிலையில் இத்தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது என்றால், ஸ்ரீலங்கா இராணுவத்தினருக்குத் தெரியாது ஒருபோதும் நடைபெற்றிருக்க வாய்ப்பு இல்லை. தமிழ் மக்களை தொடர்ந்தும் மரண பயத்தினுள் வைத்திருக்க வேண்டும் என்பதற்காக அரச பயங்கரவாதம் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்படுகின்றது. அதனை தமிழ் ஊடகங்கள் சர்வதேச சமூகத்தின் கவனத்திற்குக் கொண்டுவருகின்ற பணியை துணிச்சலுடன் மேற்கொள்கின்றன.” தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும், ஏகாதிபத்திய சக்திகளுக்கு வேண்டுகோள் விடுப்பதன் மூலம் தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்க்கலாம், என்ற மாயையை விதைத்துக்கொண்டிருக்கும் தமிழ் முதலாளித்துவக் கட்சிகளாகும். அரசாங்கத்தின் பங்காளியும் இராணுவத்துடன் சேர்ந்து இயங்கும் துணைப்படைக் குழுவுமான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பீ.டி.பீ.), தனது அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “மாறிவரும் இயல்பான அமைதிச் சூழலை விரும்பாத, குடாநாட்டை எப்போதும் பதட்ட நிலையில் வைத்திருக்க விரும்பும் தீய சக்திகளின் நடவடிக்கையே வலம்புரி ஊடகவியலாளர் மீதான தாக்குதலாகும். ஜனநாயக விரோத சக்திகளின் வன்முறைத் தாக்குலாகவும், கருத்துச் சுதந்திரத்திற்கும் விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாகவும் இதனை நாம் கருதுகின்றோம்.” தீய சக்திகளை சுட்டிக்காட்ட விரும்பாத ஈ.பீ.டி.பீ. யின் அறிக்கை, அதனை ஒரு ஜனநாயகத்தை காக்கும் அமைப்பாக காட்டிக்கொள்ள எடுத்த அவநம்பிக்கையான முயற்சியாகும். ஈ.பீ.டி.பீ., கடந்த தசாப்தங்களில் நாட்டில், குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கில் இடம்பெற்ற படுகொலைகள், கடத்தல்கள் மற்றும் காணாமல் ஆக்கும் சம்பங்களில் பேர் போன அமைப்பாகும். யுத்தம் முடிவடைந்தவுடன் சுபீட்சம் மலரும் என அரசாங்கம் வாக்குறுதியளித்த போதிலும், வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து பாதுகாப்புப் படைகள் வெளியேற்றப்படாததோடு, மக்களின் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு இராணுவ முகாம்கள் பலப்படுத்தப்படுகின்றன. பல பத்தாயிரக்கணக்கான மக்கள் இன்னமும் மீளக் குடியேற்றப்படாத அதேவேளை, இடம் பெயர்ந்த மக்கள் அடிப்படை வசதிகள் இன்றி கூடாரங்களுக்குள் வாழத் தள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலைமையில், தங்களை மீளக் குடியமர்த்தக் கோரியும், ஜனநாயக உரிமை மீறல்களுக்கு எதிராகவும் நடக்கின்ற போராட்டங்களை அரசாங்கம் வன்முறையின் மூலமே நசுக்குவதற்கு முயற்சித்து வந்துள்ளது. சாளின் மீதான தாக்குதல், வடக்கில் நடக்கும் இராணுவ ஆட்சியை சவால் செய்ய முயற்சிக்கும் எவருக்கும் எதிரான ஒரு அச்சுறுத்தலாகும். |
|
|
|