|
தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை Sri Lankan president rejects fresh war crimes evidence இலங்கை ஜனாதிபதி புதிய யுத்தக் குற்ற ஆதாரங்களை நிராகரிக்கின்றார் By Nanda Wickremasinghe 12 March 2013 use this version to print | Send feedback தனது அரசாங்கத்தின் யுத்தக் குற்றங்களில் ஒன்றான புதிய நிழற்பட ஆதாரத்தை எதிர்கொண்டுள்ள இலங்கை ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ, பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் தலைவர் வி. பிரபாகரனின் 12 வயது மகன் வி. பாலச்சந்திரனை கொலை செய்ததில் இராணுவத்தின் தொடர்பை மறுத்துள்ளார். மார்ச் 2 அன்று இந்திய நாளிதழான இந்து பத்திரிகைக்கு பேட்டி வழங்கிய இராஜபக்ஷ, “அப்படி ஒன்று நடந்திருந்தால் எனக்குத் தெரிந்திருக்கும். [ஆயுதப் படைகளில்] யாராவது செய்திருந்தால் அதற்கு நான் பொறுப்பாளி என்பது தெளிவானது. நாம் அதை முழுமையாக நிராகரிக்கின்றோம். அது நடந்திருக்க முடியாது,” எனக் கூறியுள்ளார். 2009 மே மாதம் புலிகளின் தோல்வியுடன் முடிவுக்கு வந்த யுத்தத்தின் போது, அவரது அரசாங்கம் செய்த மனித உரிமை மீறல்கள் பற்றி குவிந்து வரும் ஆவணங்கள் பற்றிய உணர்ச்சித் துடிப்பையே இராணுவத்தின் மொட்டையான மறுப்பு வெளிப்படுத்துகின்றது. இராஜபக்ஷவின் படி, அவரது ஆயுதப் படைகள் யுத்தக் குற்றங்களை செய்யவில்லை, அதனால் அந்தக் கொலைக்கு அவர் பொறுப்பாளி அல்ல என்ற அவரது உறுதிமொழியை ஒருவர் வெறுமனே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதாகும். லண்டனைத் தளமாகக் கொண்ட தொலைக் காட்சி சேவையான சனல்-4 முன் வைத்துள்ள புதிய வீடியோ, பாலச்சந்திரனின் கடைசி நிமிடங்கள் என நம்பப்படும் இரண்டு புதிய படங்களை காட்சிப்படுத்தியுள்ளது. ஒரு படம், மணல் மூட்டைகளால் செய்யப்பட்ட ஒரு சிறிய அரணுக்குள் இராணுவத்தின் காவலில் அவர் வைக்கப்பட்டுள்ளதை காட்டுகின்றது. அதே இடத்தில் அவர் சிற்றுண்டி சாப்பிட்டுக்கொண்டிருப்பதை இன்னொரு படம் காட்டுகிறது. கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட, பாதுகாப்பு வலையம்: இலங்கையின் கொலைக் களம், என்ற தலைப்பிலான வீடியோ காட்சியில் இந்த இரு படங்களும் இன்னொரு படத்துடன் ஒப்பிடப்பட்டுள்ளன. அதில் பாலச்சந்திரனின் சடலம் தரையில் கிடக்கின்றது. அவரது நெஞ்சில் ஐந்து துப்பாக்கி குண்டுகள் பாய்துள்ளன. இராணுவத்தினர் பாலச்சந்திரனை பிடித்ததோடு, அவரைச் சுடுவதற்கு முன்னதாக அவரது தந்தை எங்குள்ளார் என்பதைப் பற்றி அவரிடம் விசாரித்திருக்கலாம், என்ற விடயத்தை அந்த மூன்று படங்களும் பூர்த்தி செய்துள்ளன என சனல் 4 வீடியோ தயாரிப்பாளர் கலும் மக்ரே தெரிவித்தார். இலங்கை இராணுவம் கூறிக்கொள்வது போல், பாலச்சந்திரன் மோதலின் போது கொல்லப்படவில்லை, மாறாக தடுத்து வைக்கப்பட்டிருந்த போது சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் என்பதை இந்த புதிய படங்கள் உறுதிப்படுத்துகின்றன, என மெக்ரே கூறினார். புதிய படங்கள் சேர்க்கப்பட்ட புதிய வீடியோ, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் (யு.என்.எச்.சி.ஆர்.) ஜெனீவா தலைமையகத்தில் தற்போதைய யு.என்.எச்.சி.ஆர். வருடாந்த கூட்டத்தில் பங்குபற்றிய பிரதிநிதிகளுக்கு காட்சிப்படுத்தப்பட்டது. அங்கு இலங்கையின் தற்போதைய மனித உரிமை மீறல்கள் பற்றி சர்வதேச கண்காணிப்புக்கு அழைப்பு விடுக்கும் அமெரிக்கத் தயாரிப்பிலான தீர்மானம் ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. பாலச்சந்திரனின் சடலத்தைக் காட்டும் நிழற்படத்தை பற்றி, முன்னணி சட்டத்துறை மருத்துவ ஆய்வாளர் டெரிக் பௌன்டரின் மதிப்பீட்டை மெக்றே மேற்கோள் காட்டினார்: “(தோலில்) துப்பாக்கிச் சன்னத்தால் ஏற்பட்ட அடையாளம் காணப்படுகிறது. அது இந்த சிறுவனது நெஞ்சுக்கும் ஆயுத முனைக்கும் இடையிலான தூரம் மூன்று அடி அல்லது அதற்கும் குறைவானதாக இருந்திருக்கும் என்பதை காட்டுகின்றது. அவரால் தன்னைச் சுட்ட துப்பாக்கியை எட்டி தொட்டிருக்க முடியும்.” நீதித்துறை நிபுணர்கள், நிழற்படத்தில் “புனைவுகள் கிடையாது” என்ற முடிவுக்கு வந்துள்ளனர். ஆவண ஆதாரங்களின் எதிரில் இராஜபக்ஷவின் மறுப்பானது, யுத்தக் குற்றங்கள் மற்றும் அடிப்படை ஜனநாயக உரிமை மீறல்கள் உட்பட அப்பட்டமான மனித உரிமை மீறல்கள் பற்றிய ஆதாரங்கள் சம்பந்தமாக அவரது அரசாங்கத்தின் அலட்சியத்தை கோடிட்டுக் காட்டுகின்றது. இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான எந்தவொரு விசாரணையும், உண்மைகளை அம்பலப்படுத்திவிடும் என்ற தெளிவான காரணத்தினால், அவரது அரசாங்கம் அதை கடுமையாக எதிர்க்கின்றது. ஜனாதிபதியின் சகோதரரும் பாதுகாப்புச் செயலாளருமான கோடாபய இராஜபக்ஷ, இந்த ஆவணம் “பிரித்தானியாவில் உள்ள உலகத் தமிழர் பேரவையினர் மற்றும் புலிகளின் கோரமான ஈழம் திட்டத்தை இன்னமும் ஆதரிக்கும் ஏனையவர்களின் கட்டளையின் பேரில் தயாரிக்கப்பட்டுள்ளது தெளிவு” என பிரகடனம் செய்தார். ஆதாரங்களை அலட்சியம் செய்து, ஜனாதிபதி இராஜபக்ஷவும் அவரது பாதுகாப்புச் செயலாளரும், வழமைபோல் யுத்தக் குற்றங்கள் பற்றிய குற்றச்சாட்டை “பயங்கரவாதிகளின் சதித் திட்டம்” என துடைத்துக் கட்டுகின்றனர். 2009 மே 19 அன்று, புலிகள் தோற்கடிக்கப்பட்டு மறுநாள், இலங்கை இராணுவம் “ஒரு உயிரிழப்பு கூட” இல்லாமல் “மனிதாபிமான நடவடிக்கையை” முன்னெடுத்துள்ளது என ஜனாதிபதி கூறிக்கொண்டார். யுத்தத்தில் கொல்லப்பட்ட எவரும் “புலி பயங்கரவாதிகளால்” பாதிக்கப்பட்டவர்களே என அவர் வலியுறுத்தினார். ஐ.நா. நிபுணர்கள் குழு 2011 டிசம்பரில் வெளியிட்ட அறிக்கை ஒன்று, இராணுவத்தினரால் குறைந்த பட்சம் 40,000 பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளதோடு, மருத்துவமனைகள் மற்றும் பாடசாலைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதுடன், பாதுகாப்பு வலையம் என்று கூறப்பட்ட பிரதேசத்தின் மீதும் ஷெல் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக நம்பத்தகுந்த ஆதாரங்கள் இருந்ததாக கண்டுபிடித்தது. அந்த நடவடிக்கைகள் யுத்தக் குற்றத்திற்கு சமமானவை. சட்டத்திற்குப் புறம்பான கொலைகள் மற்றும் காணாமல் ஆக்கும் நடவடிக்கைகளும் தண்டனையில் இருந்து விலக்களிப்புடன் மேற்கொள்ளப்பட்டன. நாட்டினுள்ளும் சர்வதேச ரீதியிலும் குவிந்துவரும் விமர்சனத்தை தணிப்பதற்காக, இராஜபக்ஷ யுத்தக் குற்றங்களை மூடி மறைப்பதன் பேரில் சிலரைத் தேர்வு செய்து கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு என்ற ஒன்றை நியமித்தார். அது மட்டுப்படுத்தப்பட்டு சில விடயங்களை கண்டு பிடித்ததுடன், காணாமல் போனவர்கள் மற்றும் சட்டத்திற்குப் புறம்பாக கொல்லப்பட்டவர்களைப் பற்றி விசாரிக்கவும், ஆயுதக் கும்பல்களை நிரந்தரமாக நிராயுதபாணிகளாக்கவும், தீவின் வடக்கு மற்றும் கிழக்கிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக இராணுவத்தை வெளியேற்றவும், மற்றும் தமிழ் முதலாளித்துவ தட்டுக்களுக்கு சில அதிகாரங்களை பகிர்ந்தளிக்கவும் பிரேரித்தது. பின்னர் இராஜபக்ஷ அந்த ஆணைக்குழுவின் அறிக்கைகளை அலுமாரிக்குள் போட்டார். இராஜபக்ஷவும் அவரது அரசாங்கமும் இப்போது நல்லிணக்க ஆணைக்குழுவின் பிரேரணைகளை அமுல்படுத்துமாறு கொழும்புக்கு வலியுறுத்தும், அமெரிக்க அனுசரணையிலான இன்னொரு தீர்மானத்தை யு.என்.எச்.ஆர்.சி. கூட்டத்தில் எதிர்கொள்ளவுள்ளன. கடந்த மார்ச்சில் நிரைவேற்றப்பட்ட யு.என்.எச்.ஆர்.சி. தீர்மானத்தின் வழியில் நடவடிக்கை எடுக்க இலங்கை அரசாங்கம் தவறியுள்ளது என வாஷிங்டனும் அதன் பங்காளிகளும் இப்போது விமர்சிக்கின்றனர். அமெரிக்காவும் ஏனைய பெரும் வல்லரசுகளும் இராஜபக்ஷ அரசாங்கத்தின் யுத்த முயற்சிகளுக்கு ஆதரவளித்த போதும், பின்னர் சீனாவிடம் இருந்து இராஜபக்ஷவை தூர விலக்குவதற்கு நெருக்குவதற்காக அதன் மனித உரிமை மீறல்களை வஞ்சகமாக சுரண்டிக்கொண்டன. இந்து பத்திரிகைக்கு அவர் கொடுத்த பேட்டியில், “வெறுமனே ஒரு பக்கம் மட்டும் பார்க்க வேண்டாம்” என மேற்கத்தைய சக்திகளுக்கு இராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்தார். “அவர்கள் [அமெரிக்காவும் ஐரோப்பாவும்] ஒரு குழுவுக்கும் மற்றும் எதிர் தரப்பினருக்கும் மட்டும் செவிமடுக்கக் கூடாது,” என அவர் தெரிவித்தார். அவரது அரசாங்கம், இலங்கை பொருளாதாரம் மூழ்காமல் இருக்க, சீனக் கடனில் மேலும் மேலும் தங்கியிருக்கின்ற நிலையில், அவர் இந்த சக்திகளுக்கு இடையில் வேலிகளை செப்பனிட முயற்சிக்கின்றார். “இலங்கை ஒரு கரப்பந்து போல். ஒவ்வொருவரும் தமது பாவங்களை மூடி மறைக்க அதன் மீதே குத்த முயற்சிக்கின்றனர்,” என இராஜபக்ஷ புலம்பினார். “பாவங்களை மூடி மறைக்க குத்துபவர்” யார் என்பதை அவர் சுட்டிக்காட்டவில்லை. இராஜபக்ஷ, தேசியவாத உணர்வை கிளறிவிடுவதற்கும் தனது அரசாங்கம் “சர்வதேச சூழ்ச்சிக்கு” பலியாகியுள்ளது என சித்தரிக்கவுமான ஒரு வழிமுறையாக, மேற்கத்தைய சக்திகளின் சொந்த யுத்தக் குற்றங்களைப் பற்றி மறைமுகமாக விமர்சிக்க கடந்த காலத்தில் முயற்சித்தார். இத்தகைய தோரணைகளைக் காட்டிய போதும், கடந்த ஆண்டு மௌமர் கடாபியை வெளியேற்றி படுகொலை செய்ய அமெரிக்கா லிபியாவில் செய்த தலையீடு, ஈரானை நெருக்குவதற்காக விதிக்கப்பட்ட பொருளாதார தடைகள், சிரியாவில் அரசாங்க-விரோத தரப்பினருக்கு மேற்கத்தைய சக்திகள் வழங்கும் இராணுவ ஆதரவு, அல்லது பாகிஸ்தான் மீதான சட்டவிரோதமான ஆளில்லா விமானத் தாக்குதல்கள் பற்றி இராஜபக்ஷ எதுவும் குறிப்பிடவில்லை. யுத்தக் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் பற்றிய புதிய ஆதாரங்கள், தனது சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பை நசுக்குவதற்காக பொலிஸ் அரச இயந்திரத்தைப் பேணி விரிவுபடுத்தும் இராஜபக்ஷ அரசாங்கத்தின் குற்றவியல் பண்பை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. |
|
|
|