|
WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள் :
ஆசியா :
இலங்கை
Sri Lanka: Plantation trade unions prepare for wage sell out amid soaring prices
இலங்கை: வாழ்க்கைச் செலவு அதிகரிப்பின் மத்தியில் பெருந்தோட்ட தொழிற்சங்கங்கள்
கம்பனிகளுடன் புதிய சம்பள வியாபாரத்திற்குத் தயாராகின்றன
By M. Vasanthan
16 March 2013
Back to screen version
இலங்கை தேயிலை
மற்றும்
இறப்பர் தோட்டத் தொழிலாளர்கள் மீது, தொழிற்சங்கங்களால் 2011ல் திணிக்கப்பட்ட கூட்டு
ஒப்பந்தம் மார்ச் 31ம் திகதியுடன் காலாவதியாவதுடன், புதிய சம்பள வியாபாரத்துக்கு
தொழிற்சங்கங்கள் தயாராகின்றன. வானளாவ உயர்ந்துவரும் வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப
சம்பள உயர்வு வேண்டும் என்ற கோரிக்கை தொழிலாளர் மத்தியில் வலுவடைந்து வரும்
நிலையில், அதற்கு முட்டுக்கட்டை இடுவதே தொழிற்சங்கங்களின் இலக்காகும்.
இலங்கை தொழிலாளர்
காங்கிரஸ்
(இ.தொ.கா),
இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம்
(LJEWU)
மற்றும்
பெருந்தோட்டத்
தொழிற்சங்கக்
கூட்டுக் கமிட்டியும்
இணைந்து
கைச்சாத்திட்ட கடந்த
கூட்டு ஒப்பந்தத்தில், தேயிலை மற்றும் இறப்பர் தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை
ஊதியம் 380 ரூபாவுடன், மேலதிக கொடுப்பனவு 135 ரூபாவும் சேர்க்கப்பட்டு 515 ரூபாய்
நாள்
சம்பளம் வழங்கப்பட்டது.
75 வீதம் வேலைக்கு
சமூகமளித்தால் மட்டுமே மேலதிக கொடுப்பனவில் 105 ரூபா வழங்கப்படும். 75 வீதத்தில்
ஒருநாள் குறைந்தாலும் அந்த மாதத்திற்குரிய
மேலதிக கொடுப்பனவு முழுமையாக
அகற்றப்படும். இதனால் ஒரு தொழிலாளிக்கு மாதத்தில் கிட்டத்தட்ட 2,000 ரூபா இழப்பு
ஏற்படும்.
தோட்டத்
தொழிலாளர்கள், இலங்கை தொழிலாள வர்க்கத்தில் மிகவும் குறைந்த சம்பளம் பெறுபவர்களும்
மிகவும் ஒடுக்கப்பட்ட பகுதியினருமாவர்.
அவர்கள்
இலங்கையின்
பொருளாதாரத்தில் முக்கிய பங்காற்றுகின்ற போதும், அவர்களுடைய சம்பளம் மூன்று நேர
உணவுக்குக் கூட போதாததாகும்.
கூட்டு ஒப்பந்தத்தில்
கைச்சாத்திடும் பிரதான தொழிற்சங்களில் ஒன்றான இ.தொ.கா. தலைவர் ஆறுமுகம் தொண்டமான்,
மார்ச் முற்பகுதியில் வீரகேசரி பத்திரிகைக்கு கருத்துத் தெரிவிக்கையில்,
புதிய கூட்டு ஒப்பந்தத்திற்கான
பேச்சுவார்த்தை ஏப்பிரலில்
ஆரம்பிக்க இருப்பதாக கூறியதுடன்,
“தோட்டப்புற
மக்கள் பாரிய கஷ்டங்ளை அனுபவிக்கின்றார்கள் என ஊடகங்கள் மிகைப்படுத்தி மக்கள்
மத்தியில் கருத்துக்களை பரப்புகின்றன”
எனவும்
குற்றம் சாட்டினார்.
“முன்னைய
சலுகைகள்,
மானியங்கள்
மற்றும் உதவிகள் எல்லாம் தோட்டப்புற மக்களுக்கு இப்பொழுதும் வழங்கப்பட்டு வருகின்றன”
எனவும்
தொண்டமான் தெரிவித்தார்.
தோட்டத்
தொழிலாளர்களுக்கு
‘முன்னைய
சலுகைகள், மானியங்கள் மற்றும் உதவிகள் எல்லாம் வழங்கப்படுகின்றன’
என்பது
முழுப் பொய்யாகும். இவர் இவ்வாறு பேசுவது புதுமையான விடயம் அல்ல. ஜனாதிபதி மஹிந்த
இராஜபக்சவின் அமைச்சரவை அமைச்சரான ஆறுமுகம் தொண்டமான், அரசாங்கம் சர்வதேச நாணய
நிதியத்தின் கட்டளையின் கீழ் தோட்டத் தொழிலாளர்களுக்கு மாத்திரமன்றி, சகல உழைக்கும்
மக்களுக்கும் எதிராக நடைமுறைப்படுத்தி வரும் சமூக சேவைகள் வெட்டு, அத்தியாவசியப்
பொருட்களின் விலை உயர்வு போன்ற சகல சிக்கன நடவடிக்கைகளுக்கும் முழு ஆதரவு வழங்கி
வருகின்றார்.
கூட்டு ஒப்பந்தத்தில்
கைச்சாத்திடாத அரசாங்க மற்றும் எதிர்க் கட்சிகள் சார்ந்த 16 பெருந்தோட்டத்
தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து, புதிதாக மலையக தொழிற்சங்க கூட்டமைப்பு என்ற ஒன்றை
பெப்ரவரி 18 அன்று அமைத்துக்கொண்டன.
“தோட்டத்
தொழிலாளர்களின் சம்பள உயர்வு, நலன் புரிசேவைகளை பெற்றுக் கொடுப்பதற்காக அரசியல்
மற்றும் கட்சி பேதங்களை மறந்து ஒன்றுபட்டுள்ளோம்”
என அந்தக்
கூட்டமைப்பின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
மனோ கணேசன்
தலைமையிலான ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் (ஐ.தொ.கா),
நவ சமசமாசக் கட்சியின் தொழிற்சங்கப் பிரிவான ஐக்கிய இடதுசாரி தோட்டத் தொழிலாளர்
சங்கம், இராஜபக்ச அரசாங்கத்தின் பங்காளிகளான மலையக மக்கள் முன்னணி (ம.ம.மு),
தேசிய தொழிலாளர் சங்கம் (NUW),
பிரபா கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் காங்கிரஸ் மற்றும் அமைச்சர் வாசுதேவ
நாணயக்கார தலைமையிலான ஐக்கிய இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமும் இந்தக் கூட்டணியில்
ஒன்றிணைந்து இருப்பது, தொழிலாளர்கள் நலனுக்காக போராடுவதற்கு அல்ல. மாறாக
அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கும், தோட்ட உரிமையாளர்களுக்கும் எதிராக
கிளர்ந்தெழும் தொழிலாளர் எழுச்சியை கட்டுப்படுத்துவதற்கே ஆகும்.
மலையக மக்கள்
முன்னணியின் செயலாளர் எ. லோறன்ஸ்,
“எதிரணி
தொழிற்சங்களின் அழுத்தங்களே கூட்டு ஒப்பந்தில் கைசாத்திடும் தொழிற்சங்களின் பேரம்
பேசும் ஆற்றலை
அதிகரிப்பதற்கான காரணம்”
என
தெரிவித்ததுடன் அடுத்த ஒப்பந்தத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கு 515 ரூபாய் அடிப்படை
சம்பளம் வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
தேசிய தொழிலாளர்
சங்க தலைவர்
பி. திகாம்பரம், 550 ரூபாய் அடிப்படை சம்பளம் வேண்டும் என அறிவித்ததுடன் 5
வருடங்களுக்கு முன்னர் நாம் 500 ரூபாய் கோரினோம் என்றும் பெருமைபட்டுக்கொண்டார்.
ஐந்து
வருடங்களுக்கு முன்னர் முன்வைத்த கோரிக்கைக்கு
பெரும்பாலும்
சமமான கோரிக்கையை
இப்பொழுது இந்த தொழிற்சங்கங்கள் முன்வைத்திருப்பது, இவற்றின் தொழிலாள விரோத கூட்டை
அம்பலப்படுத்துகின்றது. இன்றய விலைவாசி ஏற்றத்தின் மத்தியில் 4 பேர் கொண்ட
குடும்பத்திற்கு, தாம் மூன்று வேளை உண்ணும் பூரணமற்ற சாப்பாட்டுக்கே குறைந்த பட்சம்
1,000 ரூபாய்க்கு மேல் தேவைப்படுகின்றது என தோட்டத் தொழிலாளர்கள் கூறுகின்றனர்.
ஆனால் இத் தொழிற்சங்கத்
தலைவர்கள் அதிலும் பாதி அற்பத் தொகையையே கோரிக்கையாக முன்வைக்கின்றார்கள்.
எந்தவொரு
தொழிற்சங்கமும் தொழிலாளர்களுடன் கலந்துரையாடி அவர்களின் அவசியத்திற்கு ஏற்ப
கோரிக்கைகளை முன்வைப்பதில்லை. மாறாக கம்பனியின் இலாப நோக்கத்திற்கு ஏற்பவே
கோரிக்கையை முன்வைக்கின்றார்கள். மனோ கனேசன், கடந்தமுறை சம்பளப் பிரச்சாரத்தின்
போது, கூடுதலாக சம்பள உயர்வு கேட்டால் கம்பனிகள்
தோட்டத்துறையை
மூடிவிடத் தள்ளப்படும்
என
பயமுறுத்தினார்.
எல்லாவற்றுக்கும்
மேலாக, இச்சங்கங்கள்
கூறிக்கொள்வது
போல், தொழிற்சங்கங்களின்
அழுத்தத்தின்
காரணமாக கடந்த காலத்தில் சம்பள உயர்வு கிடைக்கவில்லை. மாறாக தோட்டத் தொழிலாளர்கள்
அற்ப சம்பள உயர்வைப் பெறுவதற்காகக் கூட போராடத் தள்ளப்பட்டுள்ளனர். பல சமயங்களில்
தொழிற்சங்கங்களுக்கு புறம்பாக தன்னிச்சையாகவும், தொழிற்சங்கங்களுக்கு எதிராகவும்
தொழிலாளர்கள் போராட்டங்களில் இறங்கியமையால், அவை விரைவில் கூட்டு ஒப்பந்தத்தில்
கைச்சாத்திட்டு போராட்டத்திற்கு முடிவு கட்டத் தள்ளப்பட்டன. போராட்டங்களில்
இறங்கியமையால் தொழிலாளர்கள் பொலிஸ் தாக்குதல்களுக்கு முகங்கொடுத்ததுடன் சிறையிலும்
அடைக்கப்பட்டார்கள்.
2006ல் சம்பள
உயர்வு கோரி முன்னெடுக்கப்பட்ட சக்திவாய்ந்த
வேலை நிறுத்த இயக்கத்தினை காட்டிக் கொடுத்தமைக்கு இந்த தொழிற்சங்கங்களே
பொறுப்பாகும். தொழிற்சங்க நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டு வருமாறு இ.தோ.கா. விடுத்த
உத்தரவை இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் எதிர்த்து நின்றனர். ஜனாதிபதி இராஜபக்ஷ
நேரடியாகத் தலையிட்டு, பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உதவுவதாக வேலை
நிறுத்தம் செய்த தொழிலாளர்களை கண்டணம்
செய்தார். தோட்டப்புற மாவட்டங்களில் தொழிலாளர்களை மிரட்டி வேலைக்கு திரும்ப
வைப்பதற்காக, ம.ம.மு.வின் முன்னால் தலைவர் சந்திரசேகரனுடன் குண்டர்
நடவடிக்கைகளுக்கு பேர் போன அமைச்சர் மேர்வின் சில்வாவும் அங்கு சென்றிருந்த போது,
தொழிலாளர்கள் அவர்களை எதிர்த்து நின்றனர். ஆனால் சந்திரசேகரன் சம்பள வியாபாரத்தை
ஆதரித்து வேலை நிறுத்தத்தை காட்டிக்கொடுத்தார்.
2009ல் இ.தொ.கா.
பெருந்தோட்டக் கம்பனிகளுடன் செய்து கொண்ட கூட்டு ஒப்பந்தத்தை எதிர்ப்பதாகக்
கூறிக்கொண்ட எதிரணி தொழிற்சங்கங்கள்,
தொழிலாளர்களை
சாந்தப்படுத்துவதற்காக
தீபாபளி பண்டிகைக்கு
பின்னர் போராட்டத்தை தொடர்வதாகக் கூறிக்கொண்ட போதிலும்,
வழமைபோல் கைவிட்டன. அப்போது, அக்கரப்பத்தனை பெல்மோரல் தோட்டத் தொழிலாளர்கள், இந்த
தொழிற்சங்களின் காட்டிக் கொடுப்புகளுக்கு எதிராக, சோசலிச சமத்துவ கட்சியின்
அழைப்பின் பேரில் சுயாதீனமான
நடவடிக்கைக் குழுக்களை அமைக்க முன்வந்தார்கள்.
2011ல் சுதந்திர
வர்த்தக வலயத் தொழிலாளர்களின் பிரமாண்டமான போராட்டம் வெடித்தபோது, தோட்டத்
தொழிலாளர்களும் அவர்களைப் பின்பற்றத் தள்ளப்படுவர், என அரசாங்கம் அஞ்சியது.
நேரடியாகத் தலையிட்ட ஜனாதிபதி இராஜபக்ஷ, இ.தொ.கா. தலைவர்களுடன் பேச்சுவார்த்தை
நடத்தி குறைந்த சம்பளத்திற்கு கம்பனிகளுடன் ஒப்பந்தத்திற்கு சென்றபோது, இந்த எதிரணி
தொழிற்சங்கங்கள் அதனை மெளனமாக ஏற்றுக் கொண்டன.
தோட்ட உரிமையாளர்
சங்கத்
தலைவர் லலித்
ஒபயசேகர, மார்ச் 31ம் திகதி கூட்டு ஒப்பந்தம் காலாவதியான பின்னர், மீண்டுமொரு சம்பள
உயர்வை வழங்கும் நிலையில் தோட்டக் கம்பனிகள் இல்லை என அறிவித்துள்ளார். கடந்த மாதம்
டெயிலி மிரர் பத்திரிகைக்கு கருத்துத் தெரிவித்த அவர்,
“இப்பொழுது
நடைமுறையில் இருக்கும் ஒப்பந்தத்தை நீடிக்கவே விரும்புகின்றோம். ஏனெனில், 2011ம்
ஆண்டு கிட்டத்தட்ட 30 வீதமான சம்பள உயர்வு வழங்கிய பின்னர், அதனை ஈடுசெய்வதற்கே
நாம் முயற்சித்துக் கொண்டிருக்கின்றோம்”,
எனக்
கூறினார்.
கடந்த கூட்டு
ஒப்பந்தத்தின் பின்னர், பல கம்பனிகள் ஒரு நாளுக்கு பறிக்கும்
கொழுந்தின்
அளவை 2 அல்லது 3 கிலோக்களால் அதிகரித்தன. இதனால் குறிப்பாக பொகவந்தலாவை,
கொட்டியாகலை தோட்டங்களிலும், ஹட்டனில் வெலி ஒயா, செனன் போன்ற பல தோட்டங்களில் வேலை
நிறுத்தங்களும், மெதுவாக வேலை செய்யும் இயக்கமும் பரவின.
இத்தகைய எல்லா
போராட்டங்களும், சகல தொழிற்சங்கங்களாலும் காட்டிக் கொடுக்கப்பட்டதனால், கடந்த
ஒப்பந்தத்தில் அதிகரிக்கப்பட்ட சிறிய சம்பள உயர்வையும் பறித்தெடுப்பதற்கு,
தோட்டக்கம்பனிகள் தொழிலாளர்கள் மீது மேலும், மேலும் வேலை
சுமையை
சுமத்தி
வருகின்றன. அத்துடன் இந்த வேலைச் சுமையை நியாயப்படுத்துவதற்காக, கம்பனிகள் கென்யா
மற்றும் இந்தியா போன்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இலங்கையில் தோட்டத்
தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் அதிகம் என கூறுகின்றன.
சீரற்ற கால
நிலமையினால் ஏற்பட்ட உற்பத்தி வீழ்ச்சியினாலும்,
சர்வதேச
சந்தை நிலமையாலும் 2012ல் முதல் 11 மாதத்தின்
தேயிலை ஏற்றுமதி வருமானம், அதன் முந்தைய ஆண்டின் அதே காலப்பகுதியுடன் ஒப்பிடும்
போது 6.2 வீதமே வீழ்ச்சியடைந்துள்ளது. ஆயினும் 2012ல் தேயிலை ஏற்றுமதி மூலம் 1.23
பில்லியன் டொலர் வருமானமும், 2011ல் அதேகாலத்தில் 1.35 பில்லியன் டொலர் வருமானமும்
கிடைத்துள்ள அதே சமயம், இலங்கை நாணயம் மதிப்பிறக்கம் செய்யப்பட்டதால், ரூபாயின்
அடிப்படையில் தோட்டக் கம்பனிகள் வருமான அதிகரிப்பையே பெற்றுள்ளன.
எவ்வாறெனினும்
அதற்கு முந்தைய ஆண்டில் கம்பனிகள் பிரமாண்டமான இலாபம் பெற்றிருப்பதை புள்ளிவிபரங்கள்
காட்டுகின்றன.
குறைந்த சம்பளம்
மற்றும் உயர்ந்த விலையின் கராணமாக,
23 தேயிலை
மற்றும் இறப்பர் கம்பனிகள்,
2009ம்
ஆண்டுடன் ஒப்பிடும் போது,
2010ம்
ஆண்டில் தமது இலாபத்தை
935 வீதம்
அதிகரித்துக்கொண்டுள்ளன.
இலாபம்
2009ல்
453
மில்லியன் ரூபாவில் இருந்து
2010ல்
4,690
மில்லியன் ரூபா வரை பாய்ந்துள்ளது.
ஆனால்
தொழிலாளர்களுக்கு எவ்வித சலுகைகளும் கிடைக்கவில்லை. ஆனால் கம்பனிகள் தமக்கு
ஏற்படுகின்ற சிறிய இலாப வீழ்ச்சியையும் தொழிலாளர்கள் மேல் சுமத்துகின்றன.
சோசலிச சமத்துவ
கட்சி (சோ.ச.க.) தொழிலாளர்களின் செலவில் இலாபத்தினைப் பெருக்குவதற்கு
பயன்படும் நாள்
கூலி முறையை நிறுத்துமாறு கோருகின்றது. வாரத்தில் 40 மணிநேர வேலைக்கு 30,000 ரூபா
உத்தரவாதமளிக்கப்பட்ட மாதச் சம்பளம் வழங்குமாறு நாம் கோருகின்றோம். தோட்டத்
தொழிலாளர்களுக்கு முழு சம்பளத்துடனான மருத்துவ விடுமுறை, பொருத்தமான ஓய்வூதியம்
வழங்கப்பட வேண்டும்.
இந்தக் கோரிக்கைகள் 2012ம் ஆண்டு மே 20 அன்று, சோசலிச சமத்துவக் கட்சி ஹட்டனில்
நடத்திய தோட்டத் தொழிலாளர் மாநாட்டில் ஏகமனதாக நிறைவேற்றியது.
ஆனால் இந்தக்
கோரிக்கைகளை
இலாபத்தை
அடிப்படையாகக்
கொண்ட முதலாளித்துவ முறைமையின் கீழும், அத்துடன் முதலாளித்துவ
அரச அமைப்புக்குள் பேரம் பேசுகின்ற தொழிற்சங்கங்களின் கீழும் வென்றெடுக்க முடியாது
என்பதையே
கடந்த தசாப்தகால போராட்டங்கள்
நீரூப்பிக்கின்றன.
1930களின் பின்னர்
ஏற்பட்டுள்ள மாபெரும் உலகப் பொருளாதார நெருக்கடியின் மத்தியில், உலகம் பூராவும்
உள்ள அரசாங்கங்கள் முதலாளித்துவ பொருளாதார நெருக்கடியின் சுமைகளை, சிக்கன
நடவடிக்கைகள் ஊடாக உழைக்கும் மக்கள் மீதே சுமத்தி வருகின்றன. அதற்கு எதிராக
போராட்டத்திற்கு வரும் தொழிலாளர்களை நசுக்குவதற்காக பொலிஸ்-அரச வழிமுறைகளை
பயன்படுத்துகின்றன. இவை இலாபத்தை அடிப்படையாகக் கொண்ட முதலாளித்துவ முறைமையின் கீழ்
தொழிலாளர்களுக்கு உயிர் வாழமுடியாது என்பதையும் அதைத் தூக்கி வீசவேண்டியதன் உடனடி
அவசியத்தையும் தொழிலாள வர்க்கத்தின் முன் கொண்டுவந்துள்ளன.
தொழிலாளர்கள்
தொழிற்சங்கங்களில் இருந்து உடைத்துக்கொண்டு சுயாதீனமாக நடவடிக்கை குழுக்களை
அமைத்து, இக்கோரிக்கையை சூழ போராட்டத்தை ஒழுங்கு
செய்ய
வேண்டும். அத்துடன் சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளையின் கீழ், இராஜபக்ஷ அரசாங்கம்
அமுல்படுத்துகின்ற சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக கிளர்ந்தெழவிருக்கும், நாட்டின்
ஏனைய பகுதி தொழிலாளர்களுடனும் மற்றும் அனைத்துலக தொழிலாளர்களுடனும் இன,
மத
பேதமின்றி ஐக்கியப்பட வேண்டும்.
எல்லாவற்றுக்கும்
மேலாக முதலாளித்துவ அரசாங்கத்தை தூக்கிவீசி தொழிலாளர்- விவசாயிகள் அரசாங்கத்தை
அமைப்பதற்காக சுயாதீனமான புரட்சிகரக் கட்சியை கட்டியெழுப்ப முன்வர வேண்டும்.
அத்தகைய
முன்நோக்கின் அடிப்படையில் போராடும் ஒரே கட்சி சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே.
|