World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

India manoeuvres over UNHRC resolution on Sri Lanka

இலங்கை  மீதான  UNHRC தீர்மானத்தில் இந்தியா சூழ்ச்சி செய்கிறது

By Deepal Jayasekera
19 March 2013

Back to screen version

ஜெனீவாவில் நடைபெற்று வருகின்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் குழுவின் (UNHRC) நடப்பு அமர்வில் மார்ச் 21 அன்று சமர்ப்பிக்கப்படவிருக்கும் இலங்கை மீதான அமெரிக்காவின் தீர்மானத்தின் மீது என்ன நிலைப்பாடு எடுப்பது என்பதை முடிவு செய்வதில் இந்திய அரசாங்கம் தர்மசங்கட நிலையில் இருக்கிறது.

இந்தியா, அமெரிக்கா தீர்மானத்தை ஆதரிப்பதுடன் இலங்கைக்கு எதிரான  ஒரு கடுமையான நிலைப்பாட்டையும் எடுக்க வேண்டும் என்று கோரி கடந்த மூன்று வாரங்களில் தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் இருக்கும் அரசியல் கட்சிகள் ஒரு பிரச்சாரத்தை தொடங்கி நடத்தி வருகின்றன. இலங்கையில் வாழும் தமிழ் சிறுபான்மையினர் மீது இலங்கை அரசாங்கம் நடத்தும் ஒடுக்குமுறையின் காரணமாக தமிழ்நாட்டில் பொதுமக்களிடையே நிலவும் கோபத்தைச் சுரண்டிக் கொள்வதையே இப்பிரச்சாரம் நோக்கமாய் கொண்டிருக்கிறது.

புது டெல்லியில் இருக்கும் மத்திய ஆளும் கூட்டணியில் இரண்டாம் பெரிய கூட்டாளியாக திகழும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரான கருணாநிதி, அமெரிக்க தீர்மானத்திற்கு வலுவூட்டும் வகையிலான திருத்தங்களை காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம் முன்மொழியாத பட்சத்தில் அதில் இருந்து விலகவிருப்பதாக அச்சுறுத்தியிருக்கிறார்.

நேற்று கருணாநிதியை சந்திக்க நிதியமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி உள்ளிட்ட ஒரு உயர் நிலைக் குழுவை இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கும் காங்கிரஸ் தலைவரான சோனியா காந்தியும் அனுப்பினர். அவர்கள் விவாதித்தது என்ன என்பது குறித்து வெளியிடப்படவில்லை, ஆனால் இந்திய அரசாங்கம் அமெரிக்க தீர்மானத்திற்கு ஆதரவாய் வாக்களிக்கும் என்பதை சிதம்பரம் மறைமுகமாக சுட்டிக்காட்டினார்.

தமிழக முதலமைச்சரும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (AIADMK) தலைவருமான ஜெயலலிதா ஜெயராமும் தன் பங்கிற்கு, ஐ.நா. மனித உரிமை குழுவில் தீர்மானத்திற்கு வலுவூட்டும் திருத்தங்களைக் கோரி பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதினார்.

2009 மே மாதத்தில் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) அமைப்பின் தோல்வியுடன் முடிவடைந்த இலங்கை அரசாங்கத்தின் உள்நாட்டுப் போரை அ.இ.அ.தி.மு.க மற்றும் தி.மு.க இரண்டுமே ஆதரித்தன. அடுத்த ஆண்டு வரவிருக்கும் தேர்தலில் தமக்கான ஆதரவை வலுப்படுத்திக் கொள்ள முனையும் பொருட்டே UNHRC தீர்மானம் குறித்து இவ்விரு கட்சிகளும்  கவனம் செலுத்துகின்றன.

அதே சமயத்தில், இந்தியாவின் பிரதான எதிர்க் கட்சிகளும் இந்தப் பிரச்சினையைப் பற்றிக் கொண்டுள்ளன. இந்து மேலாதிக்கவாத பாரதிய ஜனதாக் கட்சி அமெரிக்க ஆதரவுடனான UNHRC தீர்மானத்தை ஆதரித்திருக்கும் அதே சமயத்தில் அரசாங்கம் தனது தனிப்பட்ட சொந்த தீர்மானத்தை வைக்கக் கோருகின்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய இரண்டு பிரதான  ஸ்ராலினிசக் கட்சிகளும் கூட UNHRC கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான ஒரு உறுதியான நிலைப்பாட்டை எடுப்பதற்கு இக்கோசத்துடன்  இணைந்து குரல் கொடுக்கின்றன.

தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகளை சமாதானப்படுத்தும் விதமாக, புது டெல்லி மார்ச்25 அன்று நடப்பதாக இருந்த இலங்கையுடனான ஒரு பாதுகாப்புத் துறை பேச்சுவார்த்தையை இரத்து செய்திருக்கிறது. எவ்வாறாயினும் இலங்கையுடன் இணைந்த இராணுவப் பயிற்சியை இந்திய அரசாங்கம் தொடர்ந்து மேற்கொள்ளும்.

UNHRC ஐச் சுற்றி நடக்கும் மொத்த விவாதமுமே முற்றிலும் கபடநாடகமாய் இருக்கிறது. இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுவது குறித்த அக்கறையினால் அமெரிக்கா இத்தீர்மானத்தைக் கொண்டுவரவில்லை. மாறாக இலங்கை அரசாங்கத்தால் 2006 இல் புதுப்பிக்கப்பட்ட இனவாத யுத்தத்தை அமெரிக்கா ஆதரித்தே வந்திருக்கிறது. இப்போது அமெரிக்கா, இலங்கையை சீனாவில் இருந்து தள்ளி நிறுத்தும் பொருட்டே இராஜபக்ஷே அரசாங்கத்தின் மீது அழுத்தமளிப்பதற்கு இந்தப் பிரச்சினையை சுரண்டிக் கொண்டிருக்கிறது.

அமெரிக்க ஆதரவுத் தீர்மானம் சென்ற ஆண்டில் நிறைவேற்றப்பட்ட இதேபோன்ற தீர்மானத்தை மறுபடி கொண்டு வருவது போன்ற ஒன்று தான். இலங்கை அரசாங்கம் அதன் சொந்த கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் (LLRC) மட்டுப்படுத்தப்பட்ட பரிந்துரைகளை அமல்படுத்துவதற்கு அந்நாட்டிற்கு மீண்டும் அழைப்பு விடுவதாக இது இருக்கிறது. இலங்கை ஜனாதிபதி இராஜபக்ஷே மனித உரிமை விவகாரத்தில் தனது அரசாங்கத்தின் மீது தொடுக்கப்படுகின்ற விமர்சனத்தை திசைதிருப்பி விடுவதற்காகவே இந்த அமைப்பை உண்டாக்கினார். LLRC வெறும் கண்துடைப்பு என்றபோதிலும் கூட இராஜபக்ஷே அரசாங்கம் சென்ற வருடத்தின் UNHRC தீர்மானத்தை எதிர்த்தது.

சமீபத்திய வரைவுத் தீர்மானம் ஜெனிவாவில் புதனன்று இராஜதந்திர அதிகாரிகளிடையே விநியோகிக்கப்பட்டது. ஐ.நாவின் சிறப்பு பார்வையாளர்களுக்கு கட்டுப்பாடற்ற அணுகலைவழங்க இலங்கை அரசாங்கத்தை இந்த வரைவுத் தீர்மானம் வலியுறுத்துகிறது”. ஆனால் இலங்கையில் நடந்த போர்க் குற்றங்களுக்கு எந்த முறையான சர்வதேச விசாரணை குறித்தும் பேசாமலேயே முடிந்து விடுகிறது.

போரின் இறுதி மாதங்களில் குறைந்தபட்சம் 40.000 அப்பாவி மக்களை இராணுவம் கொலை செய்திருப்பதற்கானதும், மருத்துவமனைகள் மற்றும் முதலுதவி மையங்களின் மீது திட்டமிட்டு குண்டுவீசியதும்  பற்றிய  நம்பத்தகுந்த ஆதாரம்கண்டறியப்பட்டிருப்பதாக 2011 டிசம்பரில் வெளியிடப்பட்ட ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை ஒன்று தெரிவித்தது.  ஆயினும் இந்த அறிக்கையும் சரி அதன் பரிந்துரைகளும் சரி ஒரு விலாசமற்ற கடிதம் போல் கவனிப்பாரின்றிக் கிடக்கிறது.

இந்தியாவின் நிலைப்பாட்டை உள்நாட்டின் அரசியல் நோக்கங்களும் மற்றும் அதன் வெளிமுகமான பொருளாதார மற்றும் மூலோபாய நலன்களும் தான் தீர்மானித்து வந்திருக்கிறதே அன்றி ஜனநாயக உரிமைகள் பற்றிய எவ்விதமான கவலைகளும் அல்ல. இராஜபக்ஷேவின் போரில் இந்தியா இராணுவ உதவி உட்பட்ட உதவிகளையும் செய்து ஆதரித்தது. 

இந்தியாவை பொறுத்தவரை அதன் தெற்காசிய செல்வாக்கு வட்டத்தின் ஒரு பகுதியாகவே இலங்கையைக் கருதி வந்திருக்கிறது. தீவில் சீனாவின் செல்வாக்கு வளர்வதற்கு அமெரிக்காவை போலவே இந்தியாவும் எதிர்ப்பை காட்டுகிறது. இராஜபக்ஷேவின் அரசாங்கம் 2006 இல் நாட்டை மீண்டும் போருக்குள் அமிழ்த்தி விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஒரு தொடர் தாக்குதல்களை தொடுத்ததன் பின்னர் அது சீனாவின் பொருளாதார மற்றும் இராணுவ உதவியைப் பெருமளவில் சார்ந்து நின்ற நிலை தோன்றியது.

சீனாவுக்கு அனுகூலமான அணுகுமுறையைக் காட்டிய அதேவேளையில் இந்தியாவின் முதலீட்டுத் திட்டங்களுக்கு முட்டுக் கட்டை போட்டதை கண்டு கொழும்பின் மீது புதுடெல்லிக்கு கோபம் உருவானது. ஒரு தசாப்தத்திற்கும் அதிகமாய் பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர், முன்மொழியப்பட்ட இந்தியாவுடனான பரந்த பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை இராஜபக்ஷேவின் அரசாங்கம் மூட்டை கட்டி வைத்துவிட்டது. இந்திய அரசுக்குச் சொந்தமான தேசிய அனல் மின் நிலையம் நிலக்கரியில் இயங்கும் ஒரு அனல் மின் நிலையத்தைக் கட்டுவதற்கு ஐந்து வருடங்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகும் கூட அனுமதி கிடைக்கவில்லை.   

புது டெல்லியை பொறுத்தவரை இந்தியாவின் இராஜதந்திர ஆதரவுக்கு பிரதிபலனாக சலுகைகளைக் கறப்பதற்கு கொழும்பை நெருக்கும் ஒரு கருவியாகவே அது  UNHRC தீர்மானத்தைக் கருதுகிறது. 2009 இல், இராஜபக்ஷேக்கு அனுகூலமான விதத்தில்இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச விசாரணைக்கு அழைப்பு விடுத்த ஒரு UNHRC தீர்மானத்தை இந்திய அரசாங்கம் எதிர்த்தது. சென்ற ஆண்டில் மிக மட்டுப்படுத்தப்பட்ட அமெரிக்க தீர்மானம் ஒன்றுக்கு ஆதரவளித்த இந்தியா தீர்மானத்தை நீர்த்துப்போகச் செய்த பெருமைக்கு உரிமை கோரியது.

நடப்பு UNHRC அமர்வின் சமயத்தில், இலங்கை மீதான தீர்மானத்தை திருத்துவதற்கு திரைக்குப் பின்னாலான தந்திர வேலைகளில் இந்தியா ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. இலங்கைக்கு ஐக்கிய நாடுகள் சபை  அதிகாரிகளது கட்டுப்பாடற்ற அணுகலைகோரி தீர்மானத்தில் இருக்கக் கூடிய அழைப்பை பலவீனமடையச்செய்ய அது முனைவது இலங்கைக்கு மட்டும் அனுகூலம் பயப்பது மட்டுமன்றி இந்தியாவில் இதேபோன்றதொரு தலையீட்டைச் செய்வதற்கான ஒரு முன்னுதாரணத்தை இது உருவாக்கி விடக்கூடும் என்கிற கவலையினாலுமாகும். ஜம்மு காஷ்மீரின் இந்தியக் கட்டுப்பாட்டுப் பகுதிகள் மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் பிரிவினைவாதக் குழுக்களை மூர்க்கத்தனமாக ஒடுக்குவதில் இந்திய பாதுகாப்புப் படைகள் ஈடுபட்டுள்ளன.   

அதேநேரத்தில் UNHRC தீர்மானத்தை பகிரங்கமாக எதிர்த்து அமெரிக்காவை அந்நியப்படுவதற்கும் இந்தியா விரும்பவில்லை. இந்தியா, தெற்காசியப் பிராந்தியத்திலும் மற்றும் சர்வதேசரீதியாகவும் அதன் பிராந்திய போட்டியாளர்களுக்கு, குறிப்பாக சீனாவுக்கு, எதிரான தனது பூகோள-அரசியல் அபிலாசைகளை முன்னெடுப்பதில் அமெரிக்காவுடனான மூலோபாயக் கூட்டு பயனுள்ளதாகத் திகழ்வதால் அதைப் பராமரிப்பதற்கு இந்தியா விரும்புகிறது.

புதுடெல்லியைப் பொறுத்தவரை, அமெரிக்கக் கோரிக்கைகளுக்கு இலங்கை இணங்குவது என்பதே UNHRC தீர்மான விடயத்தில் இந்தியா எதிர்கொள்ளும் தர்மசங்கடமான நிலைக்கான சிறந்த தீர்வு ஆகும். இந்திய வெளியுறவு அமைச்சரான சல்மான் குர்ஷித் ஊடகங்களிடம் பேசுகையில், இலங்கை வெளியுறவு அமைச்சரை தான் சந்தித்த போது இலங்கை அமெரிக்காவுடன் பேசி”  ”எல்லோரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு ஒருமனதான வரைவுக்கு வருவதற்குஅறிவுறுத்தியதாகத் தெரிவித்தார்.

இலங்கைக்குள்ளாக, இராஜபக்ஷே அரசாங்கத்திற்கும் தமிழ் தேசியக் கூட்டணிக்கும் இடையில் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரப் பகிர்வு உடன்படிக்கை உள்ளடங்கிய ஒரு ஒப்பந்தத்திற்கு இந்திய அரசாங்கம் நெருக்கி வருகிறது. தமிழ் மற்றும் சிங்கள ஆளும் உயரடுக்கினருக்கு இடையில் ஒரு உடன்பாடு ஏற்பட்டால் அது இலங்கைத் தீவிலும், அதனால் தமிழ்நாட்டிலும், பதட்டங்களைக் குறைக்கும் என்பதோடு இந்திய முதலீட்டாளர்களுக்கு பெரும் வாய்ப்புகளையும் வழங்கும்.

இலங்கையிலும் இந்தியாவிலும் இருக்கும் தொழிலாள வர்க்கம் இந்திய அரசாங்கம் மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு கட்சிகள் செய்யும் சூழ்ச்சித் தந்திரங்களை நிராகரிக்க வேண்டும். தமிழர் உரிமைகளை பாதுகாப்பதாகக் கூறும் அவர்களது இனரீதியான நிலைப்பாடு கொழும்பில் இராஜபக்ஷே அரசாங்கம் மேற்கொள்ளும் சிங்களப் பேரினவாதத்தின் இன்னொரு பக்கமே அன்றி வேறில்லை.   

இன, மத மற்றும் மொழி எல்லைகளைக் கடந்து ஐக்கியப்படவும் தெற்காசியாவிலும் சர்வதேச அளவிலும் ஒரு சோசலிச முன்னோக்கிற்காகப் போராடவும் இலங்கையிலும் இந்தியாவிலும் தொழிலாள வர்க்கம் முன்னெடுக்கின்ற ஒரு பரந்த போராட்டத்தின் பாகமாக மட்டுமே தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகள் அடையப்பட முடியும்.