|
தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
The Iraq War ten years on: A turning point for US imperialism ஈராக் போர் ஆரம்பித்து பத்து ஆண்டுகள்: அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு ஒரு திருப்பு முனை
Bill Van
Auken and David North use this version to print | Send feedback ஈராக் மீது ஆங்கிலேய-அமெரிக்க படையெடுப்பு நடத்திய 10 ஆண்டு நிறைவு தினத்தை இன்று குறிக்கிறது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு உலகம் “அதிர்ச்சியையும் அச்சத்தையும்” கொடுக்கும் குண்டுத்தாக்குதல் பாக்தாத்தின் இரவுநேர வானத்தை தீயினாலும், புகைமண்டலங்களினாலும் பகலாக்கியதையும் கண்டது. இத்தாக்குதலும் இதைத் தொடர்ந்த 10 ஆண்டுகால ஆக்கிரமிப்பும் மத்திய கிழக்கிலேயே ஒருகாலத்தில் மிக வளர்ச்சியடைந்த சமூகம் எனக் கருதப்பட்டதின் மீது பேரழிவு தரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. நூறாயிரக்கணக்கான ஈராக்கியக் குடிமக்கள் கொல்லப்பட்டதுடன், இன்னும் மில்லியன் கணக்கானவர்கள் வீடுகளை இழந்து நின்றனர். போரை அமெரிக்க நடத்திய விதம் அதிர்ச்சி தரும் அளவுகளில் குற்ற பரிமாணங்களை தோற்றுவித்தது. இதில் 350,000 மக்கள் வசித்து வந்த பல்லுஜா நகரம் எப்பொழுதும் எவரும் சுடப்படும் பகுதியாக மாற்றப்பட்டு, அங்கு வசிப்பவர்கள் மீது சர்வதேச தடைக்கு உட்பட்ட வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகள் வீசப்பட்டது, காயமுற்ற கைதிகள் கூட்டு மரணதண்டனைக்கு உட்படுத்தப்படுவது ஆகியவையும் அடங்கியிருந்தன. பத்து ஆண்டுகளுக்குப் பின் பல்லுஜாவில் காணப்படும் குழந்தைகளிடையேயான புற்றுநோய் விகிதங்கள் மற்றும் பிறவி ஊனங்கள் ஆகியவை அமெரிக்க அணுகுண்டுவீச்சிற்குப் பின் ஹிரோஷிமாவில் இருந்தவற்றிற்கு ஒப்பாக உள்ளன. அபு கிரைப் இலிருந்து கசிந்த வயிற்றை குமட்டும் புகைப்படங்கள் போரின் காட்டுமிராண்டித்தனத்தினை வெளிப்படையாக காட்டியது. அவற்றில் திட்டமிட்ட சித்திரவதை, மரணப்படைகளின் பயன்பாடு, ஈராக்கிய மக்களைப் பணிய வைக்கவும் அச்சுறுத்தவும் பயன்படுத்தப்பட்ட குறுங்குழுவாதப் படுகொலைகள் ஆகியவை அடங்கியிருந்தன. போரினால் கட்டவிழ்த்துவிடப்பட்ட குறுங்குழுவாத வன்முறை மற்றும் அவர்களுக்கு சுத்தமான குடிநீர், சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் வாழ்வின் பிற அடிப்படைகளை மறுத்த உள்கட்டமைப்பின் அழிப்பு ஆகியவற்றால் ஈராக்கிய மக்கள் தொடர்ந்து இறக்கின்றனர். 18 வயதிற்கு உட்பட்ட ஒரு மில்லியன் குழந்தைகள் ஒன்று அல்லது இரண்டு பெற்றோரையும் இழந்துவிட்டனர். நூறாயிரக்கணக்கான மக்கள் தீவிர காயங்களால் அவதிப்படுகின்றனர். அமெரிக்க இராணுவத்திலேயே, கிட்டத்தட்ட 4,500 துருப்பினர் இறந்துபோனதை தவிர, 34,000 படையினர் தாயகத்திற்கு காயமுற்றுத் திரும்பினர். நூறாயிரக்கணக்கானவர்கள் உளவியல் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தக் கொலைகள் மற்றும் வன்முறைகள் அனைத்தும் ஈராக்கிய அரசாங்கம் “பேரழிவு தரும் ஆயுதங்களை” மறைத்து வைத்துள்ளது என்ற பொய்யின் அடிப்படையில் நடத்தப்பட்டன. போருக்கான இத்தகைய போலிக் காரணங்கள் ஜேர்மனியின் மூன்றாம் குடியரசின் காலத்தில் போலந்து இன்னும் பிற இலக்கு வைக்கப்பட்ட நாடுகளின்மீது இரண்டாம் உலகப் போரின் ஆரம்பத்தில் நடத்திய படையெடுப்பை நியாயப்படுத்தியதற்கு ஒப்பான குற்றத்தைத்தான் கொண்டுள்ளன. தப்பி இருந்த நாஜித் தலைவர்கள் மீது விசாரணை நடத்த நூரெம்பேர்க் விசாரணைகள் முன்னோடியாக நிறுவப்பட்டமை பின்பற்றப்பட்டால், ஈராக் படையெடுப்பிற்குப் பொறுப்பான முதலில் ஜோர்ஜ் டபுள்யூ புஷ், டிக் ஷென்னி, டோனால்ட் ரம்ஸ்பெல்ட், கொலின் பவல் மற்றும் கொண்டலிசா ரைஸ் போன்றோர் உட்பட அனைவரும் விசாரணை வழக்கிற்கு உட்படுத்தப்பட்டு, குறைந்தப்பட்சம் ஆயுட்கால சிறைத் தண்டனையைப் பெற்றிருப்பர் ஐக்கிய இராச்சியத்தில் இதே விதிதான் பதவியிலிருந்து விலகிய முன்னாள் பிரதம மந்திரி டோனி பிளேயர் மற்றும் அவருடைய அரசாங்கத்தில் பலருக்கும் ஏற்பட்டிருக்கும். இனப்படுகொலையை தோற்றுவித்த ஒரு ஐரோப்பிய ஆக்கிரமிப்பு போருக்கு நாஜிக்கள் குற்றவாளிகளாக இருந்தனர் என்றால், வாஷிங்டனின் ஈராக்கிற்கு எதிரான ஆக்கிரமிப்புப் போர் ஒரு முழுச் சமுதாயமும் திட்டமிட்டு அழிக்கப்பட்ட சமூகப்படுகொலையில் முடிந்தது. ஒரு தசாப்தத்திற்கும் மேலான தண்டனைக்குரிய பொருளாதாரத் தடைகளைத் தொடர்ந்து, அமெரிக்க இராணுவத்தின் முழு சக்தியும் நாட்டின் பொருளாதாரத்தில் மிச்சமிருந்த உள்கட்டுமானம் மற்றும் சமூகத்துறையின் கட்டுமானங்கள் அனைத்தையும் உடைத்தெறிய பயன்படுத்தப்பட்டது. முழுச் செய்தி ஊடக அமைப்புமுறையும் இப்போரை தொடக்க உடந்தையாக நின்றன, ஆக்கிரமிப்பிற்குக் கூறப்பட்ட காரணங்கள் பொய்யானவை என்பதை அறிந்திருந்தும் அதை மீண்டும் மீண்டும் கூறின. குறிப்பாக நியூயோர்க் டைம்ஸ் புஷ் நிர்வாகத்தின் செயல்களை நியாயப்படுத்துவதில் முக்கிய பங்கை வகித்தது, ஈராக்கில் இல்லாத பேரழிவுகரமான ஆயுதங்கள் பற்றிய “சான்றுகளை” தயாரிப்பதிலும் பங்கு கொண்டிருந்தது. குறிப்பிட்ட கருத்துக்களை உருவாக்குபவர்களான டைம்ஸின் தோமஸ் ப்ரீட்மன், வாஷிங்டன் போஸ்ட்டின் ரிச்சார்ட் கோஹன் மற்றும் சார்ல்ஸ் க்ரௌட்ஹெம்மர் ஆகியோர் போரை ஊக்குவிப்பதில் பெரும் ஈடுபாட்டைக் கொண்டிருந்தனர். படையெடுப்பு ஆரம்பித்தபின், அதனுடன் “ஒன்றாக இணைந்திருந்த” செய்தியாளர்கள் அமெரிக்க இராணுவத்தின் கொள்கை பரப்பாளர்கள் போல் செயல்பட்டனர். அதே நேரத்தில் போரின் கொடூரங்களையும் அதன் பேரழிவுகரமான பாதிப்புக்களையும் கவனத்துடன் மறைத்தனர். திட்டமிடல் மற்றும் செயல்படுத்தல் ஆகிய இரண்டிலும் அதிர்ச்சியளிக்கும் குற்றத்தன்மையை கொண்டிருந்த இப்போர் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையை குறித்து நின்றது. இது பெரும் குழப்பத்தில் முடிவுற்றாலும், அதை நியாயப்படுத்தப் பயன்பட்ட பொய்கள் முற்றிலும் அம்பலப்படுத்தப்பட்டதுடன், நடைமுறைப்படுத்தப்பட்ட முறையில் போர் ஒரு முழு பேரழிவு எனக்கருதப்பட்டாலும்கூட, இது ஆப்கானிஸ்தானிய போரைத் தீவிரப்படுத்தவும் மற்றும் உலகம் முழுவதும் அமெரிக்க இராணுவவாத வெடிப்பு நீடித்து பரவவும் அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தது. ஈராக்கியப் போர் ஒரு கொள்ளையடிக்கும் ஏகாதிபத்தியப் போர் ஆகும். இது நீண்டகாலமாக இயற்றப்பட்ட அமெரிக்க மூலோபாயமான மத்திய கிழக்கை மறுகட்டமைத்து, அமெரிக்க நலன்களைக் பாதுகாக்க, பிராந்தியத்தின் பரந்த எரிசக்தி வளங்கள் மீது கட்டுப்பாட்டைக் கொள்வது ஆகியவற்றின் ஒரு பகுதியாகும். இம்மூலோபாயத்தின் அடிப்படையாக இருந்தது தீவிரப் பொருளாதார நெருக்கடியினால் ஏற்பட்டுள்ள நிலைமையை இராணுவ சக்தியை பயன்படுத்தி ஈடுகட்டுவதாகும். அதே நேரத்தில் “போரை தேர்ந்தெடுத்தல்” என்ற முறை உள்நாட்டில் சமூக சமத்துவமின்மை தோற்றுவித்துள்ள வெடிப்புத்தன்மை நிறைந்த சமூக பதட்டங்களை வெளிநாட்டில் இராணுவ வன்முறையாக திசைதிருப்ப பயன்படுத்த உதவியது. இந்த நோக்கங்களை தொடர்கையில் 9/11 தாக்குதல்கள் ஒரு சிடுமூஞ்சித்தனமான போலிக்காரணம் என்பதைவிட வேறு எதையும் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. ஈராக்கிய மக்களுக்கு எதிரான அதன் குற்றங்கள் எப்படி இருந்தபோதிலும்கூட, சதாம் ஹுசைனின் ஆட்சி அல் குவேடாவின் விரோதியாக மத சார்பற்ற தன்மையைக் கொண்டிருந்ததோடு, செப்டம்பர் 11 தாக்குதல்களுடன் எத்தொடர்பையும் கொண்டிருக்கவில்லை. இவ்வகையில் இப்போர் மத்திய கிழக்கில் ஆட்சி மாற்றத்திற்காகத் தலையீடுகளைச் செய்யும் ஒரு வடிவமைப்பை நிறுவியது. மதசார்பற்ற அரசாங்கங்கள் இலக்கு வைக்கப்பட்டு, மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ இஸ்லாமியவாத மற்றும் அல் குவைடாவிடன் தொடர்புடைய சக்திகளுக்கு ஆரவைக் கொடுத்து தன் இலக்குகளைச் சாதிக்க முற்பட்டது. இவ்வகையில்தான் 2011ல் லிபியா மீது போரும் இப்பொழுது சிரியப் போரும் நடைபெறுகிறது. இதற்கிடையில், ஈராக் அதன் மையம் என கருதப்பட்ட முடிவிலா “பயங்கரவாதத்தின் மீதான போர்”, முன்னோடியில்லாத வகையில் அரசின் அதிகாரத்தைக் கட்டமைத்தல் மற்றும் அதன் இராணுவ உளவுத்துறை அமைப்புகளை கட்டமைத்தல், அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல் தீவிரப்படுத்தப்பட்டது ஆகியவை நடைபெற்றன. ஒபாமா நிர்வாகத்தின்கீழ் இது ஜனாதிபதி எக்குற்றச்சாட்டுக்களையும் முன்வைக்காமல், ஒரு நீதிமன்றத்தில் அவற்றை நிரூபிப்பது ஒரு புறம் இருக்க, அமெரிக்க குடிமக்களையே ஆளில்லா டிரோன் தாக்குதல்கள் மூலம் படுகொலை செய்யும் அதிகாரத்தை பெற்றுள்ளமை நடைபெற்றது. ஈராக்கிய போர், அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு மட்டுமின்றி, ஐரோப்பிய அரசியல் பரிணாமத்திலும் ஒரு திருப்புமுனையை பிரதிநிதித்துவப்படுத்தியது. பிரித்தானியா தவிர, ஐரோப்பிய முதலாளித்துவம் அமெரிக்கப்படையெடுப்பிற்கு முன்னர் ஒரு எச்சரிக்கையான அணுகுமுறையை கொண்டு பல நாடுகள் தயக்கத்தையும் உடன்பாடின்மையையும் வெளிப்படுத்தின. ஆனால் தொடர்ச்சியான பல பகிரங்க மோதல்களுக்குப்பின், ஐரோப்பிய சக்திகள் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டதோடு போரை, தாங்களும் கொள்ளையடித்தலில் பங்கு பெறக்கூடியவாய்ப்பு, தடையற்ற ஏகாதிபத்தியத்திற்கான வாய்ப்பை திறக்கிறது என்று காணத்தொடங்கின. போருக்குப் பிந்தைய நிகழ்வுகள், மேம்போக்கான போர் எதிர்ப்பு இடது கட்சிகளின் கொள்கைகள் வலதிற்கு தீவிர மாற்றத்தைக்கண்டன, ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் பாசாங்குத்தனத்தைக்கூட அவை கைவிட்டன. உலகெங்கிலும் பரந்த மக்கட் பிரிவின் தன்னெழுச்சியான எதிர்ப்பினால் வெளிப்பட்ட அமெரிக்கப் படையெடுப்பிற்கு எதிரான பாரிய ஆர்ப்பாட்டங்களை, அணிதிரட்ட முயலாமல் இந்த சக்திகள் இன்னும் விரைவாக ஏகாதிபத்தியத் தலையீட்டிற்கு ஆதரவாக தம்மை பிணைத்துக் கொண்டன. ஜேர்மனியில் உள்ள பசுமை கட்சியினர் முதல் இத்தாலிய ரிபோன்டசியோன கம்யூனிஸ்டா வரை அரசியல் இயக்கங்கள் ஆப்கானிய போருக்கு நேரடி ஆதரவைக் கொடுத்தன. அமெரிக்காவிற்குள்ளும் உத்தியோகபூர்வ போர் எதிர்ப்பு இயக்கத்தினர், ஈராக்கிய போருக்கு எதிராகக் கொண்டிருந்த பரந்த மக்களின் எதிர்ப்பை, ஜனநாயகக் கட்சிக்குப்பின்னே திருப்ப அயராது உழைத்தனர். காங்கிரஸில் இக்கட்சியினர் படையெடுப்பிற்கு ஆதரவு கொடுத்து வாக்களித்து, இறுதிவரை நிதியளிக்கவும் தொடர்ந்தனர். ஒபாமா தேர்ந்தெடுக்கப்பட்டபின், போலி இடதுபிரிவுகள் அமெரிக்க இராணுவச் செயற்பாடுகளுக்கு முழு ஆதரவாளர்களாக மாறி, லிபியாவிலும் சிரியாவிலும் “மனிதாபிமான” தலையீடுக்களுக்கு ஆதரவைக் கொடுத்தன. ஒரு ஏகாதிபத்தியத்திற்குப் பிந்தைய சகாப்தத்தில் நாம் வாழ்கிறோம் என்ற கருத்துக்கள் அனைத்தையும் ஈராக்கியப் போர் அகற்றிவிட்டது. உலகம் முழுவதும் ஏகாதிபத்திய செயற்பாடுகளின் விரிவாக்கம் தொடர்கிறது. ஈராக்கில் இருந்து அமெரிக்கப் படைகள் திரும்பப் பெறப்பட்டமை, ஆப்கானிஸ்தானில் நடைபெறும் திரும்பப் பெறுதல் என்பவை, ஒபாமா பலமுறையும் கூறியுள்ளபடி “போர் அலை பின்வாங்குகிறது” என்பதல்ல மாறாக பிற இடங்களில் பெரிய தலையீடுகளை செய்வதற்காக இராணுவத்தின் மனிதசக்தி மற்றும் வளங்கள் விடுவிக்கப்படுவதாகும். ஆப்கானிஸ்தானில் அதன் போரைத் தொடர்கையிலேயே, வாஷிங்டன் ஆபிரிக்காவில் ஆக்கிரோஷமாக தலையிடுகிறது. சிரியாவில் தலையீடு, ஈரானுக்கு எதிரான போருக்குத் தயாரிப்புக்கள் போன்றவற்றுடன் ஆசியாவின் “முன்னிலை” என்பதால் சீனாவிற்கு எதிராக அதிகரிக்கும் ஆக்கிரோஷ நிலைப்பாட்டை கொள்கின்றது. அமெரிக்க, உலக முதலாளித்துவத்தின் தீர்க்க முடியாத நெருக்கடியால் உந்துதல் பெறுவதால் புதிய போர்கள் தவிர்க்க முடியாதவை. ஈராக் போர்க்குற்றங்களுக்காக இவை எந்தவகையிலும் தண்டனைக்கு உட்படுத்தப்படாத காரணத்தால் அதிகம் ஊக்கம் பெற்றுள்ளன. நூறாயிரக்கணக்கான மனித உயிர்களை காவுகொண்ட ஆக்கிரமிப்புப் போரைத் திட்டமிட்டது, நடத்தியது ஆகியவற்றிற்காக போரைத் திட்டமிட்ட அரசியல்வாதிகளோ, வழிநடத்திய தளபதிகளோ, அதை ஊக்குவிக்க பொய்கள் பேசிய செய்தியாளர்களோ சர்வதேச சட்டத்தின் கீழ் எவரும் பொறுப்பு ஏற்குமாறு செய்யப்படவில்லை. உயர்கல்விக்கூடங்களில் சிலர் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் கொண்டலீசா ரைஸ் போல் மிக உயர் பதவிகளைப் பெற்றுள்ளனர். மற்றவர்கள் வசதியாக ஓய்வு பெற்றுள்ளனர் அல்லது பல பெருநிறுவனங்கள் அல்லது சிந்தனைக்குழு இயக்குனர் குழுக்களில் உள்ளனர் அல்லது இலாபகரமான செயல்களில் ஈடுபட்டுள்ளனர். செய்தி ஊடகப் பண்டிதர்கள் எதுவும் நடக்காதது போல் தொடர்ந்து பிரச்சாரம் செய்கின்றனர். ஏகாதிபத்திய நவ-காலனித்துவமுறையின் தீவிரமயமாக்கல் புதிய மோதல்களுக்கு அரங்கு அமைக்கையில் இந்த தண்டிக்கப்படாத அரசியல் குற்றம் உலகம் முழுவதும் நீண்டகால விளைவுகளைக் கொண்டுள்ளது. இன்றும் உலக அரசியல் சூழ்நிலையை உருவமைக்கும் இப்போரினை கடந்த காலத்திற்குரிய ஒரு தனிமைப்பட்ட நிகழ்வு என்று கருதிவிடாமல் ஆழ்ந்த, நிதானமான படிப்பினைகள் பற்றி எடுக்கப்பட வேண்டும். ஈராக்கியப் போர் அனுபவம், ஒவ்வொரு நாட்டின் அரசியல் வாழ்வின் இதயத்தானத்தில் உள்ள போர்களுக்கு எதிரான போராட்டம், தொழிலாள வர்க்கம் இப்போர்களை நடத்தும் மற்றும் போர்களை தவிர்க்க முடியாமல் செய்யும் முதலாளித்துவப் பொருளாதார முறைக்கு தன்னை அடிபணிய செய்துள்ள அரசியல் கட்சிகளுடன் பிணைந்திருக்கும் வரை நடத்தப்பட முடியாது என்பதை நிரூபிக்கிறது. ஈராக்கிய படையெடுப்பிற்கு பத்து ஆண்டுகளுக்கு பின்னரும்கூட, இப்போருக்கு எதிரான தொடர்ச்சியான குரலை உலக சோசலிச வலைத் தளமும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் எழுப்பியது என்பது கூறப்பட வேண்டும். நாங்கள் ஈராக்கியப் போருக்கு முன்னும் போரின்போதும் வெளியிட்ட அறிக்கைகள் இந்த இயக்கத்தின் கொள்கைகள் மற்றும் மார்க்சிச முன்னோக்கின் பலம் ஆகியவற்றின் கொள்கை நிறைந்த தன்மைக்கு சான்றுகளாகும். இன்றைய போருக்கு எதிரான போராட்டத்திற்கு சோசலிச சமத்துவக் கட்சியை கட்டியெழுப்புவது அவசியமாகும். |
|
|
|