World Socialist Web Site www.wsws.org |
The American media, ten years after the Iraq warஈராக்கிய போரின் பத்து ஆண்டுகளுக்கு பின், அமெரிக்கச் செய்தி ஊடகம்Alex
Lantier நேற்று ஈராக்கின் மீதான அமெரிக்கப் படையெடுப்பின் பத்தாம் ஆண்டு நிறைவு தினத்தில் ஈராக் முழுவதும் பல கார் குண்டுகள் ஷியைட் இலக்குகளை தாக்கின, இத்தாக்குதல்களில் 65 பேர் கொல்லப்பட்டதோடு 200 பேர் காயமுற்றனர். இது ஈராக்கில் நவகாலனித்துவ அமெரிக்க ஆக்கிரமிப்பின் ஒரு இரத்தக்களரி நினைவூட்டல் ஆகும், இதில் சிரியப் போர் விரிவாக்கம் மற்றும் இனவழி-குறுங்குழுவாத மோதல்களை எரியூட்டும் வாஷிங்டனின் திட்டங்களும் அடங்கும். நேற்றைய குண்டுவீச்சுக்கள், ஈராக்கில் அல் குவேடாவுடன் பிணைந்துள்ள அல் நுஸ்ரா முன்னணியின் ஷியைட்-எதிர்ப்பு தாக்குதல்களின் ஒரு பகுதியாக வந்துள்ளன, இது தற்பொழுது ஜனாதிபதி பஷர் அல் அசாத்தை கவிழப்பதற்கு போராடும், அமெரிக்க ஆதரவு பெற்ற சிரிய எதிர்த்தரப்புக்களில் ஒரு பிரிவு ஆகும். இந்த தொடர்ச்சியான கொடூரங்களின் பின்னணியில், ஈராக்கிய போர் பற்றிய அமெரிக்க செய்தி ஊடகத்தின் வஞ்சகம் மிக்க, அக்கறையில்லாத கருத்துக்களால் ஒருவர் வெறுப்புத்தான் அடைய முடியும். டிசம்பர் 2011ல் அமெரிக்க துருப்புக்கள் ஈராக்கில் இருந்து முறையாக திரும்பப் பெறப்பட்டு ஒரு ஈராக்கிய அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னரும் கூட கடந்த காலம் போலவே அவர்கள் போரை பாதுகாப்பானதாக கூறுகின்றனர். போரை, பொய்களுடனும் குற்றத்தன்மையுடனும் அமெரிக்க ஏகாதிபத்தியம் தொடர்ந்த விதம், ஈராக்கை பேரழிவிற்கு உட்படுத்தியது, கிட்டத்தட்ட 1.2 மில்லியன் ஈராக்கியர்களை காவுகொண்டதுடன், கிட்டத்தட்ட 4,500 அமெரிக்க துருப்புக்களும் உயிரிழந்தது, 2 டிரில்லியன் டாலர்கள் செலவு செய்யப்பட்டது அனைத்தும் புறக்கணிக்கப்பட்டுவிட்டன அல்லது “உளவுத் துறைத் தகவல் தோல்விகள்” என உதறித்தள்ளப்பட்டன. பரந்த எதிர்ப்புக்கள் இருந்தபோதிலும்கூட, பொய்களை தளமாக கொண்ட ஒரு செல்வாக்கற்ற போர் அமெரிக்க மக்கள் மீது சுமத்தப்பட்டது, இதற்கு எவரும் பொறுப்புக் கூறப்படவில்லை. ஈராக் பேரழிவு விளைவிக்கும் ஆயுதங்களை கொண்டிருந்தது என்பதைக் காட்டும் சான்றுகள் அமெரிக்க அதிகாரிகளால் பொய்யாக தயாரிக்கப்பட்டன, இவற்றில் 2003ம் ஆண்டு ஐ.நா.வில் வெளிவிவகாரச் செயலர் கொலின் பவல் கொடுத்த அறிக்கையும் அடங்கும். அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் மற்றும் துணை ஜனாதிபதி டிக் ஷேனேயும் அல்குவேடாவுடன் நட்பு கொள்வதை தடுப்பதற்காக அமெரிக்கா ஈராக் மீது தாக்குதல் நடத்த வேண்டியிருந்தது என்று கூறினர்—இப்பொழுது அல் குவேடாதான் சிரியாவில் நடக்கும் போரில் அமெரிக்காவின் பினாமியாக உள்ளது. ஈராக்கிய போர் ஏற்படுத்திய குற்றங்களின் அளவுகளும் பேரழிவும் அமெரிக்கச் செய்தி ஊடகம் அதை முகங்கொடுத்த விதமும் ஓர் ஓர்வலியத் தன்மையைக் கொண்டுள்ளது. ஒரு ஆக்கிரமிப்பு போருக்கு ஆதரவு கொடுப்பதற்கு, மக்கள் மீது செய்தி ஊடகங்கள் மகத்தான அழுத்தம் கொடுத்த பத்து ஆண்டுகளுக்கு பின்னர், இப்பேரழிவிற்கு வழிவகுத்த நிகழ்வுகளை பற்றி பரிசீலித்த ஒரு தீவிர விமர்சனம் கூட கிடையாது. இக்கதை இரண்டு நிமிட செய்திச் சுருக்கங்களிலும், சிறுகட்டுரைகளிலும் மறைந்துவிடுகின்றன. அமெரிக்க உயர்கல்விக்கூடத்தினரும் அரசாங்க அதிகாரிகளும் கூறிய சுருக்கமான கருத்துக்களை “அதற்கு அவ்வளவு மதிப்பு இருந்ததா?” என்ற தலைப்பில் நியூ யோர்க் டைம்ஸ் ஒரு பட்டியலாக வெளியிட்டது. ஹார்வர்ட் பல்கலைக்கழகப் பேராசிரியரும் முன்னாள் துணை தேசியப் பாதுகாப்பு ஆலோசகருமான மெகன் ஓ’சுல்லிவன் இழிந்த வாதம் ஒன்றை முன்வைத்தார்: “நம்பினாலும், நம்பாவிட்டாலும், போருக்குப் பின் இப்பொழுது நாம் பாதுகாப்பாக உள்ளோம்.” பேரழிவுதரும் ஆயுதங்கள் பற்றிக்குறிப்பிட்டு அவர் ஈராக்மீது படையெடுப்பை நடத்தியிராவிட்டால், “முன்னாள் ஈராக்கிய ஜனாதிபதி சதாம் ஹுசைன் ஒரு அணுவாயுதத்தை இன்று வைத்திருப்பார் என்பது ஏற்கத்தக்கதே” என்றார். ஈராக் “முன்னேற்றத்திற்கும் குழப்பத்திற்கும் நடுவே தள்ளாடுகிறது” என்று வாஷிங்டன் போஸ்ட் எழுதியது. தற்பொழுது குறுங்குழுவாத போர் நடக்கிறது என்பதை அது ஒப்புக் கொண்டு, “இப்பொழுது பெரும்பாலான மக்கள் நல்ல வேலையில் உள்ளனர், நிறைய வாய்ப்புக்கள் உள்ளன” என்ற நஜப் கவர்னர் அட்னன் ஜுர்பியின் கருத்தை மேற்கோளிட்டுள்ளார். இது ஒரு பொய், உண்மை என வைத்துக் கொண்டாலும் கூட, இதையொட்டி அமெரிக்கப் படையெடுப்பு, ஈராக்கிய ஆக்கிரமிப்பு ஆகியவற்றை நியாயப்படுத்த முடியாது. போரை முக்கியமாக ஆதரித்த பண்டிதர்கள் —நியூ யோர்க் டைம்ஸின் தோமஸ் ப்ரீட்மன் மற்றும் வாஷிங்டன் போஸ்ட்டின் ரிச்சார்ட் கோஹன் மற்றும் டேவிட் இக்நேஷியஸ்— இந்த ஆண்டு தின நிறைவைப் பற்றிக் கருத்து ஏதும் கூறவில்லை. ஈராக்கில் “எண்ணெய் பற்றிய போரில்” தனக்கு ஏதும் பிரச்சினை இல்லை என்ற தனது இகழ்வான அறிக்கை குறித்து ப்ரீட்மன் பொறுப்புக் கூற முற்படவில்லை. போஸ்ட்டின் கட்டுரையாளர்கள் தங்கள் பங்கிற்கு சிரியப் போருக்கு அழைத்து விடுத்துள்ளனரே ஒழிய ஈராக்கின் தங்கள் கடந்தகால கருத்துக்களைப் பற்றி எழுதவில்லை. சிரியாவில் எதிர்தரப்பினருக்கு விமான ஏவுகணை எதிர்ப்பு முறைகளை அனுப்பியதை வரவேற்ற இக்நேஷியஸ் சிரியாவில் அமெரிக்க தலைமையிலான ஆக்கிரமிப்பிற்கு வாதிட்டுள்ளார்; “நேர்மையுடன் பார்ப்போம்: அசாத் அகற்றப்பட்டு, சிரியா இறுதியாக நாட்டைக் கட்டமைக்கும்போது, அதற்கு பாரிய பொருளாதார, இராணுவ உதவி தேவைப்படும்; இதில் அரபு லீக் அல்லது நேட்டோ நாடான துருக்கியில் இருந்து அமைதி காக்கும் துருப்புக்கள்கூட தேவைப்படலாம்.” 2003ல் கோஹன், ஈராக்கிய பேரழிவு தரும் ஆயுதங்கள் குறித்த கொலின் பவலின் ஐ.நா.பொய்களில் களித்து, “நியாயமான மனிதர் நியாயமாக வழக்காடுகிறார்” என்றார். இத்தீர்ப்பு WSWS குறிப்பிட்டபடி, “செய்தித்தாள் வெளியிடும் நேரத்தை கருத்திற்கொண்டு, பவல் உரையை முடிக்குமுன்னரே தட்டச்சு செய்யப்பட்டுவிட்டது. இப்போது சிரியாவில் அல் குவேடாவிற்கு ஆயுதங்கள் கொடுப்பதின் எதிர்பாரா விளைவுகள் திரும்பிப் பாயக்கூடும் என்ற கவலைகளை உதறித்தள்ள அவர் மீண்டும் விரைகிறார். அசாத்தை தொடர்ந்து தாக்குவதை அமெரிக்கா கடைப்பிடிக்க வேண்டும் என்று கோஹன் எழுதுகிகிறார். “திரும்பி தாக்குவது இப்பொழுது ஏற்படலாம், அதைத்தவிர்க்க உறுதியான வழி இல்லை; கட்டுப்படுத்த மட்டும்தான் முடியும். அது நிதான போக்குடையவர்களுக்கு விரைவில் ஆயுதம் கொடுப்பதின் மூலமும் போரை விரைவில் முடிப்பதற்கு அழுத்தம் கொடுப்பதின் மூலமும் முடியும்.” கோஹனின் போர் வெறிக் கருத்துக்கள், முன்னாள் தாராளவாத, ஜனநாயகக் கட்சி சார்பு செய்தி ஊடகத்தில் ஒரு உற்சாகமான போர் ஆதரவுத் தளம் வெளிப்படுவதை பிரதிபலிக்கிறது. ஆக்கிரோஷப் போருக்கு செய்தி ஊடகம் கொடுக்கும் ஆதரவு, அமெரிக்காவின் மத்திய கிழக்குக் கொள்கையில் வினாவிற்கு உட்படாத தளமாகிவிட்டது; நாஜி பிரச்சார எந்திரத்தை செயல்படுத்திய உயர்மட்ட அதிகாரிகளுக்கு எதிராக வழங்கப்பட்ட கண்டனங்களே இதற்கும் கூறப்படலாம். ஐ.நா. தீர்மானம் 110, நூரெம்பேர்க் விசாரணைகளுக்குப் பின் இயற்றப்பட்டது, “எந்த நாடு போர்குறித்து பிரச்சாரத்தை எப்படி நடத்தினாலும், அமைதிக்கு அச்சுறுத்தலை தூண்டும் அல்லது ஊக்கம் கொடுக்கும் வடிவமைப்பில் இருந்தால், அமைதி மீறப்படலாம் என்று கண்டால், ஆக்கிரமிப்புச் செயல் என்று கண்டிக்கப்பட வேண்டும்” எனக் கூறுகிறது. போரில் கணக்கிலடங்கா மனித, நிதிய இழப்புக்கள் இருந்தபோதிலும்கூட, சிலரைப் பொறுத்தவரை Operation Iraqi Freedom இனால் நல்ல இலாபங்களும் ஏற்பட்டுள்ளன. போர், அமெரிக்காவை திவாலாக்கி, ஈராக்கைப் பேரழிவிற்கு உட்படுத்தியது. அதன் எண்ணெய் வயல்கள் இப்பொழுது மேற்கத்தைய நிறுவனங்களால் கொள்ளையடிக்கப்படுகின்றன-- இவற்றுள் ExxonMobil, BP, Chevron, Shell, ஷேனேயின் நிறுவனமான ஹாலிபர்ட்டன் ஆகியவை அடங்கும். ஈராக் எரிசக்தி தட்டுப்பாட்டையும் எதிர்கொள்கிறது; பல ஈராக்கிய குடிமக்கள் இன்னமும் மின்சாரம், நீர் இல்லாமல் தவிக்கின்றனர்; ஈராக்கிய எண்ணெய் ஏற்றுமதியில் 80% வெளிநாட்டு நிறுவனங்களுக்கு செல்கின்றன. அவை பெரிய அளவில் அமெரிக்க தூதரகத்துடன் இணைந்து உழைக்கின்றன; தூதரகம் இன்னமும் பாக்தாத்தின் கோட்டை போலுள்ள பசுமைப் பகுதியில் மறைந்துள்ளது; அது ஈராக்கிய பிரதம மந்திரி நௌரி அல் மாலிக்கை கண்காணிக்கிறது. ஈரான் மற்றும் சிரியாவிலான அமெரிக்க போர்த் திட்டங்கள் ஈராக்கின் ஆரம்ப குற்றத்தில் இருந்து பாய்கின்றது. ஈராக்கில் ஒரு ஷியைட் ஆட்சியை இருத்தியது வட்டார சமபல நிலையை ஈரான் பக்கம் அதிகம் கொடுத்துள்ளது என்னும் கவலையில் அமெரிக்கா, பேர்சிய வளைகுடா முடியரசுகளும் வலதுசாரி சுன்னி சக்திகளும் அல்நுஸ்ரா தலைமையில் சிரியாவிற்கு, ஒரு முக்கிய ஈரானிய நட்பு நாட்டிற்கு ஆயுதங்களை அளிக்க அனுமதித்துள்ளது. நேற்றைய குண்டுத் தாக்குதல் காட்டுவது போல், ஈராக் மீண்டும் இப்போர்த்திட்டங்களுக்கு நடுவே தான் இருப்பதைக் காண்கிறது. ஈராக்கிய போர் தொடங்கி 10 ஆண்டுகளுக்கு பின்னரும் மத்திய கிழக்கில் அமெரிக்க ஏகாதிபத்திய போர்கள் தொடர்கின்றன, புதிய போர்களுக்கு தயாரிப்புக்கள் நடக்கின்றன, போர்களுக்குப் பொறுப்பான அரசியல் குற்றவாளிகளும் செய்தி ஊடகப் பிரச்சாரகர்களும் தண்டனையின்றிச் செல்கின்றனர். |
|
|