|
தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
Europe’s rulers whip up anti-immigrant chauvinism ஐரோப்பிய ஆட்சியாளர்கள் குடியேறுவோருக்கு எதிரான பேரினவாதத்தை தூண்டுகின்றனர்
By Julie Hyland
use this version to print | Send feedback ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கத்துவம் என்பது, ஒரு நாட்டின் குடிமக்களுக்கு தேசிய அடிப்படையில் பாகுபாடின்றி தடையற்ற முறையில் வேறுபகுதிக்கு செல்லும் உரிமை மற்றும் பாரபட்சங்களிலிருந்து சுதந்திரத்தை வழங்குவது என்ற பொருளைக் கொடுக்கும். பல்கேரியா மற்றும் ருமேனியா நாட்டு மக்கள் பிரதான ஐரோப்பிய சக்திகளால் இந்த உரிமைகள் அகற்றப்படுவதற்காக இலக்கு வைக்கப்பட்டுள்ளனர். நுழைவு அனுமதி தேவையற்ற ஷென்கென் பகுதிக்கான -Schengen zone- பல்கேரியா மற்றும் ருமேனியாவிற்கான அங்கத்துவம் பற்றிய முடிவை ஒத்திப்போட ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புக் கொண்டுள்ளது. இரு நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கத்துவ நாடுகளாக உள்ளதுடன், ஐரோப்பிய ஆணையத்தின் கருத்துப்படி உடன்பாட்டின்கீழ் தம் கடமைகளை நிறைவேற்றியுள்ளன. இரண்டு ஆண்டுகள் ஒத்திப்போடப்பட்டபின், அவற்றின் குடிமக்கள் இறுதியில் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் தடையின்றி 2014 முதல் பணிபுரியும் தகுதியை பெற்றனர். ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்தின் நீதி, உள்துறை அமைச்சர்கள் கடந்த வாரம் உடன்பாட்டை தாமதப்படுத்தினர். இதற்குக் காரணம் ஜேர்மனியின் ஹென்ஸ்-பீற்றர் ஃபிரீட்ரிச் தன்னுடைய நாடு அவற்றின் ஷென்கென் பகுதி அங்கத்துவம் குறித்து மீது தடுப்பதிகாரத்தை பயன்படுத்தும் என்று கூறியதை அடுத்து இது நேர்ந்துள்ளது. இழிவுணர்வுடன் ஃபிரீட்ரிச் பின்வருமாறு கேட்டார்: “ஐரோப்பாவிற்குள் தடையற்ற பயணிக்கும் உரிமை என்பதற்கு, ஐரோப்பாவினுள் எங்காவது இருக்கும் மக்கள் தங்கள் சொந்த நாடுகளைவிட ஜேர்மனியின் சமூகநல உதவிகளில் நன்கு வாழலாம் என்ற கருத்தில் ஜேர்மனிக்கு என்றாவது ஒருநாள் வந்துவிடுவர் என்று எதிர்பார்ப்பதா?” “சமூக நலன்களை பெறுவதற்கு மட்டுமே வருபவர்கள், இதனால் தடையின்றி செல்லும் உரிமையைத் தவறாக பயன்படுத்துவதால், அவர்கள் அவ்வாறு செய்ய முடியாமல் திறமையுடன் தடுக்கப்பட்டு விடுவர்” என்று அவர் வலியுறுத்தினார். ஜேர்மனி மட்டும் இதில் தனித்து நிற்கவில்லை. பிரித்தானியா, பிரான்ஸ், நெதர்லாந்து, ஆஸ்திரியா ஆகியவையும் இதேபோல் அறிக்கைகளை வெளியிட்டுள்ளன. அவற்றின் நிலைப்பாடு முன்னேற்றமானவை என்னும் கூற்றையும், சோவியத் ஒன்றியத்தினதும், அதன் ஆதிக்கத்திற்குட்பட்ட நாடுகளின் சரிவின்போது ஐரோப்பிய ஒன்றியம் “சுமுகமாக்கும்” பணியை மிக வலுவாக செய்யும் என்ற கூற்றையும் அம்பலப்படுத்தியுள்ளது. 1990களில் ஐரோப்பிய முதலாளித்துவம் கிழக்கு ஐரோப்பிய நாடுகளை ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் சேர்க்க விரைந்ததுடன், பொருளாதாரச் செழிப்பு மற்றும் அரசியல் உறுதிப்பாட்டிற்கு உத்தரவாதமளித்து நாடுகளின் சமத்துவமான ஒன்றியம் என ஏற்படுத்தப்படும் என்று கூறியது. அடுத்த கட்டத்தில், ஐரோப்பிய ஒன்றியம் விரைவாக தனியார்மயமாக்குவதையும் மற்றும் பரந்த சமூகநலத் திட்டங்கள் அழிக்கப்படுவதையும் கோரியபோது இந்நாடுகளின் பொருளாதாரங்கள் கொள்ளையடிக்கப்பட்டன. “கட்டுமான மறுசீர்திருத்தம்” ஐரோப்பியக் குழுவில் முழுமையாக இணைக்கப்படுவதற்கு தேவை என்ற அடித்தளத்தில் இது நியாயப்படுத்தப்பட்டது. மாறாக, பல கிழக்கு ஐரோப்பியநாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தில் ஏற்கப்பட்டபின் (பல்கேரியா மற்றும் ருமேனியா 2007ல் சேர்ந்தன). வேதனைக்கு முடிவேற்படவில்லை. இதன் விளைவு உயரும் வேலையின்மை, வேலையற்ற நிலை மற்றும் பொருளாதார பாதுகாப்பற்ற நிலை ஆகியவையாகும். பல்கேரியா மற்றும் ருமேனியா ஆகிய இரு நாடுகளும் அவற்றின் மக்கட்தொகை பாதிப்பேர் வறுமை அபாயத்தில் உள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் ஏழ்மையான நாடுகளாகும். பல்கேரியாவிலும் ருமேனியாவிலும் ஆளும் உயரடுக்குகள் அவர்களிடம் கோரிய அனைத்தையும் செய்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புக் கொண்டுள்ளது. ஆனால் அது பிறரைத் துன்புறுத்தி மகிழும் தன்மையில் அதன் நிலத்தை எரித்தல் கொள்கையின் “வெற்றி” என்பது அந்நாட்டின் மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் குடிமக்கள் என்ற வகையில் அவர்களின் உரிமைகளை பயன்படுத்த அனுமதிக்கப்படக்கூடாது என்பது முக்கியமாகும் எனக் கூறியுள்ளது. ஏனெனில் அவர்கள்மீது சுமத்தப்பட்டுள்ள வறிய நிலைமை அவர்களை வேண்டா விருந்தாளிகளாக்கியுள்ளது! பல்கேரியாவில் உள்ள தாராளவாத மூலோபாயங்களுக்கான நிலையத்தின் சிந்தனைக்கூட தலைவர் ஐவன் க்ராஸ்டேவ், பைனான்சியல் டைம்ஸிடம், “மாற்றம் என்னும் கருத்து வேதனை தருவதுதான், அது இடர் அளிப்பதுதான். ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்தின் அங்கத்துவ தன்மையுடன், நாங்கள் முற்றிலும் மாறுபட்ட வாழ்க்கையை பெறுவோம் என நினைத்தோம். ஜேர்மனியர்கள் போல் இல்லாவிடினும், கிரேக்கர்கள் போல் வாழ்வோம் என நினைத்தோம். அது நடைபெறவில்லை” என்றார். ஐரோப்பிய வர்க்க உறவுகளில் ஏற்பட்டுள்ள மாபெரும் மாற்றங்களை அவருடைய அறிக்கை சுருக்கிக் கூறுகிறது. ஒரு தசாப்தத்திற்கும் மேலாக, கிழக்கு ஐரோப்பிய நாடுகள் “கிரக்கேர்கள் போல் வாழ முயன்றனர்”. ஆனால் செழுமை மிகுந்த ஒரு ஐரோப்பாவில் சேருவதற்கு பதிலாக அவர்கள் சிக்கன நடவடிக்கைக்கான ஒரு ஐரோப்பாவில் சேர்ந்துள்ளனர். கண்டம் முழுவதிலும் கிழக்கு ஐரோப்பாவில் அது முன்னோடியாக பரிசோதித்துப் பார்த்த அதிர்ச்சி வைத்தியத்தை பயன்படுத்தி உலக முதலாளித்துவ நெருக்கடி குறித்த ஒரு சோதனைக்களமாக கிரேக்கத்தை ஐரோப்பிய முதலாளித்துவம் பயன்படுத்துகிறது. மிருகத்தனமான சிக்கன நடவடிக்களுக்கு ஐந்து ஆண்டுகள் உட்படுத்தப்பட்ட நிலையில், கிரேக்கத்தில் வேலையின்மை 25%க்கும் மேலாக உள்ளது. இளைஞர்களிடையே கிட்டத்தட்ட இது 50% என உள்ளது. உணவு வங்கிகள்தான் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு உயிர் கொடுக்கிறது; சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் கல்விக்கான வசதிகள் நின்றுபோய்விட்டன. பல்கேரியா மற்றும் ருமேனியாவின் “மட்டத்தை உயர்த்துவதற்கு” பதிலாக கண்டம் முழுவதும் உள்ள சூழ்நிலையை கிழக்கு ஐரோப்பாவின் நிலைக்குகூட இல்லாமல் சீனாவின் ஒரு தரத்திற்கு கீழிறக்கப்படுகின்றது. முக்கிய ஐரோப்பிய சக்திகள் பல்கேரியா மற்றும் ருமேனியா பற்றி கொண்டுள்ள அணுகுமுறை பெரிய சக்திகளின் திமிர்த்தனம் என்பது மட்டும் அல்ல. வர்க்கத்தை அடக்குதல் என்பதும் அதன் பங்கைக் கொண்டுள்ளது. இரு நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியம் ஆணையிட்ட சிக்கன நடவடிக்களுக்கு எதிரான வெகுஜன இயக்கங்களை கண்டுள்ளன. அந்நடவடிக்கைகள் இக்கொள்கைகளுடன் தொடர்புடைய அரசாங்கங்களை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ருமேனியாவிலும், பல்கேரியாவில் கடந்த மாதத்திலும் அகற்றிவிட்டன. ஒரு தண்டனையாக, இந்நாடுகளில் உழைக்கும் மக்கள் இப்பொழுது சமூகநல உதவிகளை சுரண்ட முற்படுபவர்கள் என்ற அவதூறுக்கு உட்படுத்தப்பட்டு, கிட்டத்தட்ட கைதிகள் போல் நடத்தப்படுகின்றனர். அதே நேரத்தில் நிதிய மூலதன்னம் எத்தடையும் இன்றி ஐரோப்பாவை கொள்ளையடிக்கும் உரிமையைக் கொண்டுள்ளது. இதற்கிடையில், “இலாபம்பெறும் சுற்றுலா” விற்கு எதிரான நச்சுத்தனமான பிரச்சாரங்கள் தீவிரப்படுத்தப்பட்டு, சமுதாயத்தின் உண்மையான ஒட்டுண்ணிகளான நிதிய ஒருசிலவராட்சியினால் கட்டளையிடப்படும் அரசாங்கத்தின் கொள்கைகளின் முக்கிய காரணமான வேலையின்மை உயர்வு, குறையும் ஊதியங்கள் என்பவற்றில் இருந்து கவனத்தை திசைதிருப்ப பயன்படுத்தப்படுகிறது. ஊதியங்கள், பணிநிலைமைகள் குறைக்கப்படுகையில் கிரேக்கத்தில் புதிய ஜனநாயக கட்சி தலைமையிலான அரசாங்கம், சமூக ஜனநாயக PASOK மற்றும் ஜனநாயக இடது கட்சியுடன் குடியேறுவோரை ஏராளமாகச் சுற்றி வளைத்தல், இன்னும் பிற இனவெறி நடவடிக்கைகளை எடுக்க இசைவு கொடுக்கிறது. இவை பாசிச கோல்டன் டோன் உடைய கொள்கைகளுக்கு பொருத்தமான நடவடிக்கைகள் ஆகும். இதே போக்குத்தான் மேற்கு ஐரோப்பா முழுவதும் உள்ளது. சமூக ஜனநாயகக் கட்சிகள் அதிகரித்தளவில் இதற்கு தலைமை தாங்குகின்றன. ஜேர்மனியில் டுயிஸ்பேர்க் நகரின் சமூக ஜனநாயக கட்சியின் நகரசபை தலைவர் சோரென் லிங்க் இழிந்த, இனவெறித்தாக்குதலை கிழக்கு ஐரோப்பிய குடியேறுவோர் மீது கட்டவிழ்த்து, அவர்கள் இங்குவருவதால் “உள்ளூர்” மக்களுக்கான உதவிகள் பெருமளவு கிடைக்காது போகின்றது எனப் புகார் கூறியுள்ளார். பிரான்சில் சோசலிஸ்ட் கட்சியின் பிரான்சுவா ஹாலண்டின் அரசாங்கம் கோலிச ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசியின் கொள்கைகளை தொடர்கிறார். குடியேறுவோர் முகாம்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுவதுடன், ஏராளமான மக்கள் நாடு கடத்தப்படுகின்றனர். தேசிய முன்னணியுடன் அது போட்டியிட்டு இவற்றை நடத்துகிறது. பிரித்தானியாவில் தொழிற்கட்சி கிழக்கு ஐரோப்பியர்களின் குடியேற்றம் குறித்து “மிக அதிகக் கட்டுப்பாடுகளுக்கு” ஆதரவைக் கொடுக்கிறது. இது “பிரித்தானிய வேலைகள் பிரித்தானிய தொழிலாளர்களுக்கே” என்னும் பாசிச பிரித்தானிய தேசியக் கட்சியில் இருந்து எடுக்கப்பட்டதாகும். இத்தகைய நடவடிக்கைகளின் இலக்கு முழுத் தொழிலாள வர்க்கத்தின் சமூக உரிமைகள் மீதும் தாக்குதலாகும். குடியேறுவோருக்கு சுகாதாரப் பாதுகாப்பு, வீடுகள் உள்ளடங்கலான சமூகநல உரிமைகளை மறுப்பது பொதுவாக சமூக நல உதவிகளை வழங்குவது இனி இயலாது என்று கூறி, அகற்றப்பட வேண்டும் என்பதை நியாயப்படுத்தப்படுகிறது, இப்பிற்போக்குத்தன தாக்குதலுக்கான அரசியல் பொறுப்பு கிரேக்கத்தில் இருக்கும் சிரிசா போன்ற போலி இடது குழுக்களிடம் உள்ளது. அக்கட்சி சிக்கன நடவடிக்கை, இனவெறி இவற்றை எதிர்ப்பதாகக் கூறினாலும், இரண்டிற்கும் ஆதாரமாக இருக்கும் இலாப முறையை பாதுகாக்கிறது. மேலும் ஆளும் உயரடுக்கின் தாக்குதல் ஒருங்கிணைக்கப்பட்டு சுமத்தப்படுவதற்கான முக்கிய அமைப்பான ஐரோப்பிய ஒன்றியத்தையும் பாதுகாக்க முனைகின்றது. குடியேற்ற-எதிர்ப்பு பேரினவாதத்தை தொழிலாளர்களும் இளைஞர்களும் தீவிரமாக எதிர்க்க வேண்டும். பிரித்தாளும் சூழ்ச்சி முயற்சி பெருவணிகத்தால் கையாளப்படுகையில், குடியேறும் தொழிலார்களின் பாதுகாப்பு ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அதன் அங்கத்துவ அரசாங்கங்கள் ஆகியவற்றிற்கு எதிரான இயக்கத்தின் ஐரோப்பா தழுவிய எழுச்சியின் மையமாக இருக்க வேண்டும். அது தொழிலாள வர்க்கத்தின் அரசாங்கத்திற்காகவும் கண்டத்தை சோசலிச அடித்தளத்தில் ஐக்கியப்படுத்தவும் போராட வேண்டும். |
|
|
|