World Socialist Web Site www.wsws.org |
|
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி Germany’s Left Party closes ranks with German intelligence ஜேர்மனியின் இடது கட்சி ஜேர்மன் உளவுத்துறையுடன் நெருக்கமாகின்றது
By Johannes
Stern மார்ச் 13ம் திகதி, இடது கட்சி (Links partei) ஜேர்மனியின் உள்நாட்டு உளவுத்துறை நிறுவனத்தின் (VS -அரசியலமைப்பு பாதுகாப்பு அலுவலகம்) தலைவர் ஹென்ஸ்-ஜியோர்க் மாஸனை (Hans-Georg Maaßen) “உளவுத்துறையை சீர்திருத்துவதா அல்லது கலைப்பதா” என்ற தலைப்பில் ஒரு பொது விவாதத்திற்கு அழைத்தது. ஜேர்மன் உளவுத்துறையும் பொலிஸும் நவபாசிச பயங்கரவாத தேசிய சோசலிச தலைமறைவு அமைப்பின் (NSU) நடவடிக்கைகளில் கொண்டுள்ள ஈடுபாட்டை சூழ்ந்துள்ள ஊழல்கள் உளவுத்துறை அமைப்பை ஒரு நெருக்கடியில் தள்ளியுள்ளது. NSU செய்துள்ள தொடர் கொலைகள் பற்றிய விசாரணைகள் எப்படி உளவுத்துறை அமைப்பு, வலது தீவிரவாதக் குழுக்களுக்கு ஊக்கம் கொடுத்து, கட்டமைத்து அவற்றிற்கு நிதியையும் வழங்கியது என்பதை அம்பலப்படுத்தியுள்ளது. இந்நிலைமையில், இடது கட்சி உளவுத்துறை அமைப்பை பாதுகாப்பதற்கு உதவ முன்வந்துள்ளது. மாஸன் வருவதற்கு முன், இடது கட்சிப் பிரதிநிதிகள் ஜான் கொர்ட்டே பேற்ரா பௌ மற்றும் ஊலா ஜெல்ப்க ஆகியோர் “உள்நாட்டு உளவுத்துறை அமைப்பைக் கலைப்பதற்கான திட்டங்கள்” பற்றிக் குறிப்பிட்டனர். ஆனால் மாஸனின் வருகைக்குப் பின், அவர்கள் உளவுத்துறையை கலைப்பது குறித்த திட்டம் ஏதும் இல்லை என்பதைத் தெளிவுபடுத்தினர். அவர்கள் மாஸனை ஆர்வத்துடன் வரேவேற்று, ஒரு பெரிய இருக்கையில் அவருடன் அமர்ந்து உளவுத்துறை அமைப்பின் வலிமைகளையும் வலுவற்ற தன்மைகளையும் பற்றிப் பேசி இறுதியாக பியர் அருந்த மதுபானப் பகுதியில் கூடினர். இதனூடாக இடது கட்சி ஒரு தெளிவான சமிக்ஞையை அனுப்புகிறது. உளவுத்துறையை முன்னைக்காட்டிலும் பலம்வாய்ந்ததாகச் செய்ய முனையும் மாஸனின் “சீர்திருத்தத்” திட்டங்களில் இடதுகட்சி பங்குபெற விரும்புகின்றது. இடது கட்சி உளவுத்துறைத் தலைவருடன் விவாதிக்க முற்பட்டது என்னும் உண்மையே அரச அடக்குமுறைக் கருவியுடன் கட்சிக்கு இருக்கும் நெருக்கமான உறவைத் தெளிவாக்குகிறது. ஓர்வெல்லிய பெயரான “அரசியலமைப்புப் பாதுகாப்பு” என்பது ஒரு முற்றிலும் ஜனநாயகத் தன்மை அற்ற அமைப்பிற்கான ஒரு மூடிமறைப்பாகும். இதன் பணி இருக்கும் அரசியல் ஒழுங்கமைப்பை குறைகூறும் எவரையும் உளவுபார்த்தலாகும். இப்பணி கருத்துச்சுதந்திரம் என்று அரசியலமைப்பினால் பாதுகாக்கப்படும் உரிமைகளுடன் பொருத்தமற்றது. அரசியலமைப்பு பாதுகாப்பு அலுவலகத்தின் மத்திய அலுவலகத்தில் உள்ள 2,600 முழு நேர ஊழியர்கள் மற்றும் மாநிலங்கள் அளவில் அதே எண்ணிக்கையினர், மற்றும் தெரியாத எண்ணிக்கையில் இருக்கும் இரகசிய முகவர்கள் மற்ற ஒற்றர்கள் குடிமக்களுடைய அரசியல் கருத்துக்களை விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ளனர். தங்களுடைய பணியைச் செய்கையில் அவர்கள் பொலிசும் பிற விசாரணை அமைப்புக்களும் சட்டபூர்வமாகப் பயன்படுத்த இயலாத முறைகளை உபயோகப்படுத்துகின்றனர். இந்த அமைப்பின்மீது ஜனநாயகக் கட்டுப்பாடு ஏதும் கிடையாது. இடது கட்சிப் பிரதிநிதி பேற்ரா பௌ தெளிவாக்கியுள்ளதுபோல், தேர்ந்தெடுக்கப்பட்ட சில பாராளுமன்ற உறுப்பினர்கள் உளவுத்துறை அமைப்பின் செயல்கள் குறித்து தகவல் கொடுக்கப்படுகையில், அவர்கள் அதுபற்றி கடுமையாக இரகசியமாக வைத்திருப்பதாக உறுதியளிக்க வேண்டும். குழுவில் இருக்கும் பௌ எப்படி பேர்லின் டிரெப்டோவில் (Berlin-Treptow) இருக்கும் உளவுத்துறை தலைமை அலுவலகத்தில் இருக்கும் இரகசியக் கோப்புக்களைக் காண அனுமதி கிடைத்தது என்றும் அவற்றின் பொருளுரை பற்றி எவருடனும் பேச அனுமதிக்கப்படவில்லை என்றும் விளக்கினார். தற்போதைய பாராளுமன்ற குழுவின் முக்கிய பணி NSU விசாரணை குறித்து உள்ளது, “பாராளுமன்ற மற்றும் மக்கள் கருத்தை அறிந்து, அவற்றை இரகசியத் துறையின் வெளியே ஏதும் கூறாத உடந்தைகளாக மாற்றுவதுதான்” என்றார் பௌ. இதை அவர் ஒப்புக் கொண்டாலும்கூட, பாராளுமன்றக் குழுவில் அவர் உறுப்பினராகத் தொடர்வதில் அவருக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. அரசியல் எதிர்ப்பாளர்களை “கண்காணிப்பதுடன்” உளவுத்துறை அமைப்பு அதன் செயல்களை நிறுத்துவதில்லை. அதன் குற்ற அறிக்கைகளும் ,உளவுவேலைகளும் இடதுசாரி மக்கள் ஆயிரக்கணக்கானவர்களின் வாழ்க்கையை அழித்துள்ளன. ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சி (KPD) மீதான தடை 1956ல் வந்தபின், உளவுத்துறை அமைப்பு மற்றும் அரசாங்க வழங்குதொடுனர் அலுவலகங்கள் கிட்டத்தட்ட 125,000 முதல் 200,000 பேருக்கு எதிராக விசாரணை வழக்குகளை ஆரம்பித்தன. 7,000 முதல் 10,000 கம்யூனிஸ்ட்டுக்கள் சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்பட்டனர். குற்றவிசாரணைக்கு உட்பட்ட பலர் நாஜி ஆட்சிக்கு எதிர்ப்பில் தீவிரமாக பங்குபற்றியிருந்தனர். பல முறை அவர்கள் நாஜி சர்வாதிகாரத்தில் தீவிர பங்கு கொண்டிருந்த முகவர்களாலும் நீதிபதிகளாலும் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டனர். 1955 முதல் 1972 வரை உளவுத்துறை அமைப்பின் தலைவராக ஹூபேர்ட் ஸ்ரூப்பர்ஸ் இருந்தார். இவர் நாஜிகளின் விஷேட படையின் (SA) முன்னாள் அங்கத்தவரும் பின்னர் நாஜிக்களின் கீழ் தலைமை வழக்குத்தொடுனராகவும் இருந்தார். 1972ம் ஆண்டு வில்லி பிராண்ட்டின் தலைமையிலான சமூக ஜனநாயக அரசாங்கம் தீவிரமயமானோருக்கு எதிரான சட்டத்தினை நிறைவேற்றிய பின், உளவுத்துறை அமைப்புக்கள் பொதுத்துறையில் வேலை பார்த்த கிட்டத்தட்ட 1.4 மில்லியன் இளம் மனுதாரர்கள் மீது ஆய்வுநடத்தினர். கிட்டத்தட்ட ஆயிரம்பேர் உளவுத்துறை அமைப்பின் குற்ற அறிக்கைகளை அடுத்து தங்கள் வேலையில் ஈடுபடமுடியாது தடுக்கப்பட்டனர். இந்த மரபை பேர்லினில் மாஸன் பகிரங்கமாக ஆதரித்தார். “இந்த அமைப்புமுறை பாதுகாக்கப்பட வேண்டும், மாற்றத்தை விரும்புவோர் அரசியலமைப்பின் விரோதியாவர். ...அமைப்புமுறையை மாற்ற விரும்புவோர் கண்காணிக்கப்பட வேண்டும்.” என்றார். இது குற்ற விசாரணையில் இருந்து விலக்கு பெற்றுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பொருந்தும். உளவுத்துறை அமைப்பின் வலைத் தளம் 31,800 மக்கள் “இடதுசாரித் தீவிர பிரிவுகளில்” இருப்பதாக பட்டியல் இட்டுள்ளது. இவர்கள் கண்காணிக்கப்பட வேண்டும். சமூக அழுத்தங்கள் அதிகரிக்கும் மற்றும் முதலாளித்துவத்திற்கு எதிர்ப்புப் பெருகும் நிலைமைகளின் கீழ், இத்தகைய பட்டியல் விரைவில் அரசியல் துன்புறுத்தலுக்கு அடித்தளமாகக் கூடும். உளவுத்துறை அமைப்பு, இடது கட்சிக்குள் இருக்கும் “தீவிரவாதக் குழுக்களையும்” தொடர்ந்து கண்காணிக்கும் என்று மாஸன் வலியுறுத்தினார். இதில் கம்யூனிஸ்ட் அரங்கம் (Kommunistische Plattform) என்றழைக்கப்படுவதை சேர்ந்தவர்களும் அடங்குவர். தகவல் பெறுவதற்காக குழுக்கள், கட்சிகளுக்குள் கடத்தப்படும் இரகசிய முகவர்கள் பயன்பாடு குறித்தும் மாஸன் ஆதரித்தார். இடது கட்சிப் பிரதிநிதிகளில் எவரும் மாஸனுடன் கருத்து வேறுபாட்டைக் காட்டவில்லை. இதனால் அவர்கள் உளவுத்துறை அமைப்பின் கொள்கைகளும் செயற்பாடுகளும் தங்கள் கட்சிக்கு எதிராக அவை இருந்தாலும் அதற்கு தங்கள் ஆதரவை உறுதிப்படுத்தினர். கிழக்கு ஜேர்மனியின் ஸ்ராலினிச ஆளும் கட்சியில் வேர்களைக் கொண்டுள்ள இடது கட்சி இவ்வகையில் நீண்டகால மரபை பெற்றுள்ளது. முன்னாள் கிழக்கு ஜேர்மனியில் ஸ்டாசி (Stasi) இரகசியப் பொலிஸ் அதன் கண்காணிப்பிற்கும் மற்றும் எதிர்க்கும் தொழிலாளர்கள். அறிவுஜீவிகள் மற்றும் விமர்சனரீதியான நிலைப்பாட்டை கொண்ட கட்சி உறுப்பினர்களை அடக்குவதில் இழிபுகழ் பெற்றது. உளவுத்துறை அமைப்பை ஜனநாயகத்திற்கான “ஒரு முன் எச்சரிக்கை முறை” என்று மாஸன் பாதுகாத்துக் கூறினார். இது “தீவிர இடது”, “தீவிர வலது” போக்குகள் இரண்டிற்கும் எதிராக இயக்கப்படும் என்றும் கூறினார். இதனூடாக அவர் முதலாளித்துவத்திற்கு எதிரான இடதுசாரிகளை உளவுத்துறை அமைப்பு வளர்த்தெடுத்த தீவிர வலதுசாரிகளுடன் சமமாக வைத்துள்ளார். சமீப மாதங்களில் உளவுத்துறை அமைப்பு பயங்கரவாத NSU குழுவின் செயல்களை பொறுத்துக் கொண்டு இருந்தது என்பதைக் குறிக்கும் பல விவரங்கள் வெளிப்பட்டுள்ளன. இவ்வமைப்பு குறைந்தப்பட்சம் 10 கொலைகளை நடத்தியுள்ளது மட்டுமின்றி, உளவுத்துறை அமைப்பினால் மறைமுகமாக ஆதரிக்கப்பட்டுள்ளதுடன் இக்குழு கட்டமைக்கப்படவும் உதவியுள்ளது. NSU அவதூறை அடுத்து உளவுத்துறை அமைப்புடன் கருத்து வேறுபாடுகளை அகற்றிக் கொள்ளும் இடது கட்சியின் நடவடிக்கை, அரச ஒடுக்குமுறை அமைப்புடன் அதன் நெருக்கத்தன்மையை நிரூபிக்கிறது. மாஸனுடன் கூட்டுப் பொதுக் கூட்டம், இடதுகட்சிக்கு ஒரு முதல் செயலாகும். ஆனால் கட்சி உளவுத்துறை அமைப்புடனும் அதன் தலைவருடனும் NSU விசாரணை பாராளுமன்றக் குழு மற்றும் பிற பாராளுமன்ற குழுக்களூடாக நெருக்கமான உறவுகளை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய ஒற்றுமையை தீவிரப்படுத்துவதற்காக, உள்துறை அமைச்சரகம் கடந்த நவம்பர் மாதம் உளவுத்துறை அமைப்பு இடது கட்சியை கண்காணிப்பதை நிறுத்த முடிவு எடுத்தது. பெப்ருவரி மாதம் கூட்டாட்சி அரசாங்கம் இம்முடிவை கொலோன் நகர நிர்வாக நீதிமன்றத் தீர்ப்பில் உறுதிப்படுத்தியது. இடது கட்சி இத்தீர்ப்பை “ஜனநாயக இயல்பில் ஒரு வழமையான படி” என்று குறிப்பிட்டு, மேலும் நெருக்கமான ஒத்துழைப்பை உளவுத்துறை அமைப்புடன் நாடியுள்ளது. பேர்லின் கூட்டத்தில் பாராளுமன்ற உள்துறை விவகாரக் குழுவில் இடது கட்சி சார்பில் இருக்கும் ஜான் கோர்ட்டே, மாஸனிடம் “பொது நிறுவனங்கள், அறக்கட்டளைகள், உயர்கல்விக்கூடத்தினர்” உளவுத்துறை அமைப்பின் பணிகளை எடுத்துக் கொள்ளலாம் என்று தெரிவித்தார். வேறுவிதமாகக் கூறினால், கோர்ட்டே உயர்கல்விக்கூடத்தினரையும் தனியார் அமைப்புக்களையும் பெரும் உளவு வலைப்பின்னலின் சார்பில் செயல்படுத்த விரும்புகிறார். இத்திட்டத்தை மாஸன் “ஒரு நல்ல அணுகுமுறை” என விவரித்தார். NSU அவதூறை அவர் ஒரு வாய்ப்பாக உளவுத்துறையை வலப்படுத்தக் கருதுகிறார். அதை இன்னும் சக்திவாய்ந்ததாக ஆக்க முனைகிறார். ஜேர்மன் உள்துறை அமைச்சர் ஹென்ஸ் பீற்றர் ஃபிரீட்ரிச் உடன் மாஸன் “கூட்டுழைப்பை பொறுத்தவரை இனி பற்றாக்குறைகள்” கூடாது என முடிவெடுத்துள்ளார். உள்நாட்டு உளவுத்துறை அமைப்புக்களுக்கும் மாநிலங்களுக்கும் இடையே உள்ள ஒத்துழைப்பு முன்னேற்றுவிக்கப்பட வேண்டும் என்ற அவர் மத்திய அமைப்பு இப்பொழுது “அனைத்து தகவல்களையும் தனது தலைமையகத்தில் சேகரிக்கும்” என்றார். இடது கட்சிக்கும் உளவுத்துறை அமைப்புக்கும் இடையே ஒத்துழைப்பு என்பது ஜேர்மனி மற்றும் ஐரோப்பா முழுவதும் பெரும் சமூக பதட்டங்கள் வந்துள்ள நேரத்தில் நடைபெறுகிறது. மாஸன் உடன் உறவை வளர்ப்பதில், முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான மக்கள் எதிர்ப்பை அடக்குவதில் தான் ஒரு பங்கை கொள்ளத் தயார் என்ற சமிக்ஞையை ஆளும் உயரடுக்கிற்கு இடது கட்சி அனுப்பியுள்ளது. |
|
|