World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Hands off Syria!

சிரியா மீது கைவைக்காதே!

Bill Van Auken
21 March 2013

Back to screen version

புதன் அன்று இஸ்ரேலுக்கு இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வமாக பயணிக்கும் அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா சிரியா, ஈரான் இரண்டிற்கும் எதிராக மிரட்டும் வகையில் அச்சுறுத்தல்களை வெளியிட்டார். அமெரிக்க இஸ்ரேலிய போர் கவுன்சிலின் தன்மையை கொண்டிருக்கும் இந்த வருகை, ஈராக் மீது அமெரிக்க படையெடுப்பு தொடங்கி 10 ஆண்டகளுக்கு பின் அமெரிக்க ஏகாதிபத்தியம் இன்னும் பெரிய குற்றங்களை மத்திய கிழக்கில் செய்ய தயாரிப்புக்களை கொண்டுள்ளது என்பதை தெளிவுபடுத்துகிறது.

ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி பஷார் அல்-அசாத்தின் சிரிய ஆட்சியை அச்சுறுத்தி, “இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தினாலோ அல்லது அவை பயங்கரவாதிகளுக்கு கிடைக்கச்செய்தாலோ அது பொறுப்பாக்கப்படும்” என்றார். அத்தகைய ஆயுதம் பயன்படுத்தப்பட்டது என்று சான்றுகள் கூறினால் “அவை அனைத்தையும் மாற்றிவிடும்” என்றும் சேர்த்துக் கொண்டார்.

ஈரானை பற்றிக் குறிப்பிடுகையில், ஒபாமா “ஈரான் அணுவாயுதம் வைத்திருப்பதை தடுக்கும் தன் உறுதிமொழியை” மீண்டும் கூறி, “அனைத்து விருப்பத் தேர்வுகளும் மேசை மீது உள்ளன” என்றார்; அதே நேரத்தில் ஈரானுக்கு எதிராக ஒருதலைப்பட்ச நடவடிக்கையை இஸ்ரேல் எடுக்கலாம் என்னும் உரிமையையும் அங்கீகரித்தார். ஈரான் குறித்து அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையே நிறைய பகிர்ந்து கொள்ளுதல்கள் உள்ளன என்றார் அவர்.

ஈராக் மீதான அமெரிக்க படையெடுப்பின் 10 ஆண்டு நிறைவு தினத்திற்கு மறுநாள் ஒமாமாவின் கருத்துக்கள் வந்துள்ளன. ஒபாமா நிர்வாகத்தாலோ, அமெரிக்க காங்கிரசாலோ செவ்வாயன்று போர் தொடக்கம் பற்றி குறிக்கும் விதமான உரைகளுக்கோ நிகழ்வுகளுக்கோ ஏற்பாடு செய்யப்படவில்லை. இப்போருக்கு 1.5 மில்லியன் அமெரிக்கர்கள் அனுப்பப்பட்டனர், கிட்டத்தட்ட 4,500 பேர் அவர்களுள் இறந்தனர், நூறாயிரக்கணக்கானவர்கள் உடல் ரீதியாக அல்லது உளரீதியாக காயமுற்றனர்.

இந்த விஷயத்தில் மௌனம் என்பது குற்றத்தைக் குறிக்கிறது. இரண்டு அரசியல் கட்சிகள், அரசாங்கத்தின் ஒவ்வொரு பிரிவுகள், செய்தி ஊடகம், மற்றும் அமெரிக்க பெருநிறுவனங்கள் ஆகியவை 21ம் நூற்றாண்டில் மிகப் பெரிய போர்க்குற்றம் எனக் கூறத்தக்க நிகழ்வில் ஐயத்திற்கு இடமின்றி நேரடி உடந்தையாக இருந்தன. இது கிட்டத்தட்ட பாதுகாப்பற்ற நாட்டின் மீது, பொய்களின் அடிப்படையில் நடத்தப்பட்ட ஒரு தூண்டுதலில்லா போர் ஆகும். இதில் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் மக்கள் உயிரிழந்தனர், ஒரு முழுச் சமூகமும் பேரழிவிற்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் ஆளும் உயரடுக்கு இப்பொழுது மேலும் பெரிய, மேலும் அழிவுதரக்கூடிய மோதல்களுக்கு அழுத்தம் கொடுக்கிறது, மக்களோ போருக்கு எதிர்ப்பை பெரிதும் தெரிவிக்கின்றனர். ஓர்வெல்லிய முறையில் அறிமுகமான, இழிசரிவில் தள்ளப்பட்ட போலிக் காரணங்களான “பேரழிவு ஆயுதங்கள்”, பயங்கரவாதம், “ஜனநாயக” வளர்ச்சி ஆகியவை இம்முறை சிரியாவிற்கு எதிரான போரை நடத்துவதற்கு மீண்டும் கூறப்படுகின்றன.

காபிடோல் ஹில்லில் ஒரு புதிய கிழக்கு போர்களுக்கான முரசுகள் முழங்குகின்றன. அட்மைரல் ஜேம்ஸ்  ஸ்டாவ்ரிட்டிஸ், பென்டகனின் ஐரோப்பிய கட்டுப்பாட்டின் தலைவர், செனட் ஆயுதப் படைகள் குழுவின் முன் செவ்வாயன்று சிரியாவில் பரந்த தலையீடு குறித்த திட்டம் பற்றிக் கூறினார். லிபியாவில் ஈடுபட்டது போல் தலையிட வேண்டும் என வரும்போது “பரந்தவகை செயற்பாடுகளில் எவை சிறந்தவை எனப் பார்க்கிறோம்”, என்றார் அவர்.

ஸ்டாவ்ரிட்டிஸ் கருத்துப்படி “ஒரு பறக்கக்கூடாது பகுதியை” நிறுவும் திட்டமும் தீவிர பரிசீலனையில் உள்ளது. லிபியாவில் அத்தகைய பறக்கக்கூடாது பகுதிக்கு அழைப்பை விட்டபின், அது மார்ச் 2011ல் ஐ.நா. பாதுபாப்புக் குழுவால் ஒப்புக் கொள்ளப்பட்டபின், அமெரிக்க நேட்டோ குண்டுத் தாக்குதலுக்கும், ஆட்சி மாற்றத்திற்கான போருக்கும் அது வழிசெய்தது.

குழுவுடைய தலைவர் செனட்டர் கார்ல் லெவின் (மிச்சிகன், ஜனநாயகக் கட்சி) வினாக்களை எழுப்புவதற்கு முன்னின்றார். அதற்கு முதல் நாள் அவர் குழுவின் வெளியுறவுப் பிரிவில் பேசி “துருக்கிய சிரிய எல்லையை ஒட்டி ஒரு பாதுகாப்பான பகுதி நிறுவப்பட வேண்டும்” என்றும் இராணுவ சக்தி பயன்படுத்தப்படுவது “சிரிய வான்வழிப் பாதுகாப்புக்களுக்கு எதிராக இருக்க வேண்டும், சில சிரிய வான்சக்திகளுக்கு எதிராக இருக்க வேண்டும்” என்றும் கூறினார்.

மன்றத்தின் இரு பிரிவுகளிலும் தீர்மானங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, செனட் மேலை ஆதரவுடைய “எழுச்சியாளர்களுக்கு” அசாத்தை அகற்ற ஆயுதங்கள், பயிற்சி அளிப்பது முடுக்கிவிடப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

இதற்கிடையில், செவ்வாயன்று 30 சிரிய உயிர்களை பறித்த இரசாயன ஆயுதம் ஒன்றின் வெளிப்படையான பயன்பாடு, காபிடோல் ஹில்லில் நேரடி அமெரிக்க தலையீடு தேவை என்னும் புதுப்பிக்கப்பட்ட கோரிக்கைகளை வரவழைத்தது.

சிரிய அரசாங்கம், மேற்கத்தைய ஆதரவுடைய போராளிகள் இரசாயன ஆயுதங்களை கொண்ட ராக்கெட்டை விடுத்தனர் என்று குற்றம் சாட்டியது. பல தகவல்கள்படி, இத்தாக்குதல் அரசாங்க கட்டுப்பாட்டின் கீழ் அலெப்போக்கு புறத்தே இருக்கும் கிராமத்தை தாக்கியது. அதே நேரத்தில் சிரிய ஆதாரங்கள் அவற்றை அலவைட் குடிமக்கள் மீது நடத்தப்பட்டது என்றும் அவர்கள்தான் அசாத்தை பெரிதும் எதிர்ப்பவர்கள் என்றும் கூறின.

சிரியாவில் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்துவது ஒரு “சிவப்புக் கோடு” அது அமெரிக்க தலையீட்டை தூண்டும் என்ற ஒபாமாவின் முந்தைய அச்சுறுத்தல்களை சட்டம் இயற்றுபவர்கள் பயன்படுத்தினர். “இன்றைய தகவல்கள் ஆதாரம் உடையவை என நிரூபிக்கப்பட்டால், ஜனாதிபதியின் சிவப்புக் கோடு கடக்கபட்டுவிட்டது, நாம் அவர் உடனடி நடவடிக்கை எடுத்து அவர் உறுதியளித்த விளைவுகளை சுமத்த வலியுறுத்த வேண்டும்” என்று குடியரசுக் கட்சியின் லிண்சே கிரஹாமும் ஜோன் மக்கெயினும் ஒரு கூட்டறிக்கையில் கூறியுள்ளனர்.

ஒரு பேட்டியில் கிரஹாம் ஒரு படி மேலே சென்று அமெரிக்க தரைத் துருப்புக்கள் இரசாயன ஆயுதங்களை மீட்க சிரியாவிற்குள் அனுப்பப்பட வேண்டும் என அழைப்பு விடுத்தனர்; இச்செயல்பாட்டிற்கு 75,000 துருப்புகளும், மரைன்களும் தேவைப்படுவர்.

இப்பிரச்சாரங்களின் திரிபுடைய தர்க்கம் அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளான ஐரோப்பா, துருக்கி மற்றும் பேர்சிய வளைகுடா முடியாட்சி நாடுகளும் கடந்த இரண்டு ஆண்டுகளாக குறுங்குழுவாத உள்நாட்டுப் போரை சிரியாவில் வளர்த்து, அசாத் ஆட்சி எதிர்ப்பாளர்களுக்கு ஆயுதங்கள், நிதியை அளித்து அதை வலுவிழக்க செய்து அதன் இரசாயன ஆயுதங்கள் பயங்கரவாதிகளின் கையில் கிடைக்குமாறு செய்துள்ளன என்பதாகும்.

ஆனால், அல்குவேடா பிணைப்புடைய ஜபாத் அல்-நுஸ்ரா இன்னும் பிற ஜிகாதிஸ்ட்டுக்கள் போன்ற இந்தப் பயங்கரவாதிகள் ஆட்சி மாற்றத்திற்கான மேற்கத்தைய ஆதரவுடைய போரில் முக்கிய அதிரச்சி துருப்புக்களாக செயல்படுபவையாகும்.

வாஷிங்டன் சிரியாவில் “ஜனநாயகத்தை” வளர்க்கிறது என்னும் கூற்றைப் பொறுத்தவரை, திங்களன்று ஒரு புதிய பிரதம மந்திரியை, ஒரு புதிய “இடைக்கால அரசாங்கம்” “தேர்தலை” ஒட்டி இருத்தப்பட உள்ளது என்பதை விட அதிகம் நிராகரிப்பை கொடுப்பது ஏதும் இல்லை; இது எழுச்சியாளர்கள் எனப்படுவோரால் கைப்பற்றப்பட்ட சிரியப் பகுதிக்கு அரசாங்கமாக இருக்கும். இதில் வெற்றி பெற்ற காசன் ஹிட்டோ,  சிரியத் தேசியக் குழுவின் 35 உறுப்பினர்களால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டார்: இது அமெரிக்க வெளியுறவுத்துறையின் ஆதரவில் நடைபெற்றது. இவர் 17 வயது இளைஞனாக 30 ஆண்டுகளுக்கு முன் சிரியாவை விட்டு நீங்கிய ஓர் அமெரிக்க குடிமகனும் டெக்சாஸை தளமாக கொண்ட தகவல் தொழில்நுட்ப நிர்வாகியுமாவர்.

சிரியாவில் ஓர் அமெரிக்க போருக்கான கருத்தியல் போலிக்காரணங்கள், ஒரு தசாப்தத்திற்கு முன் ஈராக்கில் நடத்தப்பட்ட போருக்கு பயன்படுத்தப்பட்டதைவிட குறைந்த ஒத்திசைவானதாகும். இரண்டு போருக்கான உண்மையான உந்துதல் காரணங்களும் ஒன்றுதான். இங்கு தொடர்புபட்டுள்ளது, மத்திய கிழக்கின் வரைபடத்தை மாற்றி அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலன்களுக்கேற்ப எழுதப்படும் ஒரு சூறையாடல் வகை போராகும். அதன் நோக்கம், பிராந்தியத்தின் எரிசக்தி வளங்கள் மீது அமெரிக்காவின் மேலாதிக்கம் உறுதிப்படுத்தப்படுவதாகும். சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்கான போர் ஈரான் உடனான பரந்த போரின் ஒரு பகுதியாகும், இதில் ரஷ்யா மற்றும் சீனாவையும் உள்ளிழுக்கும் அச்சுறுத்தல் உள்ளது.

அமெரிக்கா ஆளும் அமைப்புமுறை, ஈராக் போர் நினைவை புதைத்துவிட விரும்பக் கூடும் என்றாலும், உழைக்கும் மக்கள் தமது சொந்த முடிவுகளை பற்றி எடுத்துக்கொள்ள வேண்டும்; ஒவ்வொரு கருத்துக் கணிப்பும் அது தொடக்கப்பட்டிருக்க கூடாத போர் என்பதைத்தான் காட்டுகிறது.

அதே பொய்களை புதுப்பித்து பயன்படுத்தி, வேலைகள், வாழ்க்கைத்தரங்கள் மீது ஆழ்ந்த தாக்குதலுடன் இணைந்தவகையில் அமெரிக்க மக்கள் மீது ஒரு புதிய போரை சுமத்துவது என்பது நிதியப் பிரபுத்துவத்தின் குற்றத்தன்மையை வெளிப்படுத்துவது ஆகும், இதன் நலன்களுக்காகத்தான் இப்போர்கள் நடத்தப்படுகின்றன. இத்தகைய கொந்தளிப்பான கலவை அமெரிக்காவிற்குள் சமூக வெடிப்புக்களுக்கு உரமூட்டுவதோடு ஈராக், சிரியா இன்னும் அப்பாலும் பரந்த அரசியல் இயக்கத்தின் வளர்ச்சிக்கும் உரமூட்டுவதாகும்.