சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

நிறுவனத்தின் ஒடுக்குமுறையின் மத்தியில் ஜேவிபீ தொழிற்சங்கம் ஹொல்சிம் போராட்டத்தை கைவிட்டது

Kapila Fernando and W.A. Sunil
05 June 2014

Use this version to printSend feedback

தொழில் நிரந்தரத்தையும் நியாயமான சேவை நிலைமைகளையும் கோரி நிறுவனத்தின் வளாகத்தில் உள்ளமர்ந்து இரண்டு வாரங்கள் உறுதியான போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஹொல்சிம் தொழிலாளர்களின் போராட்டத்தை, நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் அரசாங்கத்தின் பிரதேச அரசியல்வாதிகளால் ஏவிவிடப்பட்ட குண்டர் தாக்குதலின் எதிரில் கைவிட்டுவிடுவதற்கு மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபீ) சார்ந்த அனைத்து நிறுவன ஊழியர் சங்கம் (அநிஊச) செவ்வாய் கிழமை நடவடிக்கை எடுத்தது. போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிறுவனத்தின் ஒப்பந்த தொழிலாளர்கள் எந்தவொரு கோரிக்கையையும் வெற்றிகொள்ளாமல் மீண்டும் வேலைக்குச் செல்லத் தள்ளப்பட்டனர். புத்தளம் மற்றும் காலி பிரதேசங்களில் உள்ள ஆலைகளில் இருந்து சுமார் 500 தொழிலாளர்கள் இந்த போராட்டத்தில் பங்குபற்றியிருந்தனர்.

நிறுவன வளாகத்தில் உள்ளமர்ந்திருந்த புத்தளம் ஆலையின் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மீது, ஜூன் 1 அன்று இரவு நடத்தப்பட்ட குண்டர் தாக்குதலில் எட்டு வயது சிறுமி உட்பட 9 பேர் காயமடைந்துள்ளனர். சிறுமியும் மற்றும் கடும் காயமடைந்த 4 பேரும் புத்தளம் ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். சிறுமி படுத்திருந்த பாயுடன் சேர்த்து அவர் குண்டர்களால் தூக்கி வீசப்பட்டதால் அவர் காயமடைந்துள்ளார். தொழிலாளர்கள் தங்கியிருந்த கூடாரமும் உடைத்து எறியப்பட்டுள்ளது.



தாக்குதலுக்கு உள்ளான ஒரு தொழிலாளி

தாக்குதலுக்கு உள்ளான தொழிலாளர்கள் பின்வருமாறு சம்பவத்தை விளக்கினர்: “அப்போது இரவு 9.30 மணி இருக்கும். இரவு நேரமாகையால் எம்மவர்கள் அதிகம் இருக்கவில்லை. எப்படியோ குண்டர்கள் வாள், ஈட்டு மற்றும் பொல்லுகள் சகிதம் வந்தனர். என்னை தாக்கும் போது நான் கையால் தடுத்தேன். அது பொல்லு என்று நான் நினைத்தேன் ஆனால் கை வெட்டுபட்ட பின்னரே அது வாள் என்று தெரிந்தது. என்னை விரட்டி விரட்டி அடித்தனர். என்னை தாக்கும் போது பொலிஸ் ஜீப் ஒன்று அதைப் பார்த்துக்கொண்டே சென்றது. ஆனால் என்னை காப்பாற்ற கிட்ட வரவேயில்லை.

குண்டர்கள் முதலில் இருந்தே அச்சுறுத்தல் விடுத்துக்கொண்டிருந்ததாக தாக்குதலில் காயமடைந்த சிறுமியின் தாய் கூறினார். “எனது கணவர் 8 ஆண்டுகள் தற்காலிக தொழிலாளியாக வேலை செய்தார். ஆரம்பத்தில் இருந்தே குண்டர்கள் அச்சுறுத்தல் இருந்ததால்தான் பெண்களும் பிள்ளைகளும் போராட்டத்தில் இணைந்துகொண்டனர். எனக்கு வாய் அதிகம் என்று கூறி, பாயுடன் தூங்கிக்கொண்டிருந்த பிள்ளையை நான்கு அடி தூரம் வீதியில் வீசிவிட்டனர். தலை வீதியில் அடிபட்டு புடைத்துப் போயுள்ளது. வாந்தி எடுத்தததால் ஆஸ்பத்திரிக்கு வந்தோம். எனது கனவருக்கும் ஏதாவது ஆபத்து ஏற்படுத்துவார்கள் என எனக்கு பயமாக இருக்கின்றது.

தாக்குதலில் சுமார் 50 குண்டர்கள் ஈடுபட்டுள்ளனர். ஹொல்சிம் நிறுவனத்தின் ஆலையின் முகாமையாளர் ஜயந்த ரத்னாயக்க மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் பிரதேச அரசியல்வாதியான புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் ரதிக சஞ்ஜீவவும் இந்த குண்டர் குழுவுக்கு தலைமை தாங்கியதாக தொழிலாளர்கள் கூறினர். சஞ்ஜீவ என்பவர், தொழிற்சாலைக்கு தொழிலாளர்களை வழங்கும் ஒரு ஒப்பந்தக்காரராவார். தடங்கல் இல்லாமல் குண்டர்கள் தொழிலாளர்களை தாக்குவதற்கு இடமளித்து, ஆலையின் வளாகத்திலும் பிரதேசத்திலும் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் அமைதியாக இருந்ததாக தொழிலாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். தாக்குதலுக்கு முன்னர், பகல் வேளையில், சஞ்ஜீவ உட்பட ஆயுதம் தாங்கிய குண்டர்கள் பிரதேசத்தில் நடமாடியதாக தொழிலாளர்கள் கூறினர்.

இது சம்பந்தமாக தொழிலாளர்களால் புத்தளம் பொலிசில் செய்யப்பட்ட முறைப்பாடு ஏற்றுக்கொள்ளப்படாததோடு பொலிஸ் அத்தியட்சகரிடம் முறைப்பாடு செய்த பின்னரும் தாக்குதலை நிறுத்த எந்த முன்நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தாக்குதலை நடத்திய குண்டர்கள் சுதந்திரமாக நடமாடுகின்றனர். எனினும், எந்தக் காரணமும் இன்றி காயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் அஜித் குமார, ஏ. புத்ததாச, அமில பிரியந்த, உபுல் சந்தன ஆகியோர் பொலிசாரால் கைது செய்யப்பட்டு 4ம் திகதி நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். புத்தளம் நீதவான் ரங்க திசாநாயக்க, அவர்களுக்கு 100,000 ரூபா பிணையும் மற்றும் 500,000 ரூபா சரீரப் பிணையும் விதித்து விடுதலை செய்துள்ளார். அவர்களுக்கு எதிராக இப்போது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள அதேவேளை, வழக்கு 11ம் திகதி மீண்டும் இடம்பெறவுள்ளது.

இந்த கொடூரத் தாக்குதல்கள், பொலிஸ் மற்றும் ஆலையின் நிர்வாகத்தின் அனுமதியுடன், தொழிலாளர்களின் போராட்டத்தை தகர்ப்பதற்காக வேண்டுமென்றே ஏற்பாடு செய்யப்பட்டவை என்பது தெளிவு. தொழிலாளர்கள் அணிசேர்ந்துள்ள ஜேவிபீ சார்ந்த அனைத்து நிறுவன ஊழியர் சங்கத்தால் (அநிஊச), ஹொல்சிம் தொழிலாளர்களின் போராட்டம் தனிமைப்படுத்தப்பட்டு, நிர்வாகத்துக்கு வெறும் அழுத்தங்கள் கொடுத்து உரிமைகளை வெற்றிகொள்ள முடியும் என்ற மாயைக்குள் அவர்கள் மூழ்கடிக்கப்பட்டுள்ளதாலேயே, போராட்டத்தை தகர்ப்பதற்காக நிறுவனத்தின் நிர்வாகிகள், ஒப்பந்தக்காரர்கள் மற்றும் அரசாங்கத்தினதும் கை பலமடைந்தது.

இந்தப் போராட்டம் மே 19 தொடங்கியது. புத்தளம் தாக்குதலுக்கு முன்னதாக காலியில் வேலைநிறுத்தக்காரர்களுக்கு ஆயுத தாரிகள் தாக்குதல் நடத்தினர். அதில் ஒரு தொழிலாளி காயமடைந்தார். கருங்காலிகள் சேவையில் ஈடுபட்டனர். பொலிஸ், வேலைநிறுத்தக்காரர்களை ஆலை வளாகத்தில் இருந்து வெளியேற்றுவதற்காக நீதிமன்ற உத்தரவு ஒன்றைப் பெறும் முயற்சியில் ஈடுபட்டிருந்தது. புத்தளம் ஆலையில் இருந்து சீமெந்து வெளியில் கொண்டு செல்லப்படுவதை தடுப்பதற்காக வேலைநிறுத்தக்கார்கள் அதன் பிரதான வாயிலை அடைத்துக்கொண்டிருந்ததால் இராணுவத்தைப் பயன்படுத்தி சீமெந்து வெளியில் கொண்டு செல்லப்பட்டது.

புத்தளம் குண்டர் தாக்குல் நடந்த திங்கட் கிழமை காலை, காலியில் தொழிலாளர்களை சந்திக்க வந்த காலி மாவட்டத்தின் சுதந்திர முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் நிசாந்த முதுஹெட்டிகே, மீண்டும் வேலைக்குத் திரும்புமாறு கோரியுள்ளார். அவரின் தலையீட்டின் பின்னர் தொழிலாளர்கள் மத்தியில் பிளவு ஏற்பட்டு கைகலப்பு வரை வளர்ச்சியடைந்துள்ளது. மோதலில் தாக்குதலுக்கு உள்ளான ஒரு தொழிலாளி செய்த முறைப்பாட்டின்படி மறுநாள் இரு தொழிலாளர்கள் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வேலை நிறுத்தத்தை குழப்பத்தில் தள்ளி தொழிலாளர்களை மீண்டும் வேலைக்குத் திரும்பச் செய்வதற்காகவே இவை அனைத்தும் நடந்துள்ளன. ஆயினும் ஒப்பந்த தொழிலாளர்களின் போராட்டத்தை பாதுகாப்பதற்காக அனைத்து நிறுவன ஊழியர் சங்கத்தின் ஏனைய அங்கத்தவர்கள் ஒருபுறம் இருக்க, ஹொல்சிம் நிறுவனத்தின் நிரந்தர தொழிலாளர்களை போராட்டத்தில் இணைத்துக்கொள்ளக் கூட தொழிற்சங்க தலைமைத்துவம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, எந்தவொரு கோரிக்கையும் வெல்லப்படாமலே மீண்டும் வேலைக்குச் செல்லுமாறு தொழிற்சங்கம் அவர்களுக்கு ஆலோசனை கூறியுள்ளது. தனிமைப்படுத்தப்பட்டு மற்றும் போராட்டத்தை முன்கொண்டு செல்வதற்கான முன்னோக்கு ஒன்று இல்லாத நிலைமையில், ஜூன் 3ம் திகதியே புத்தளம் தொழிலாளர்களில் ஒரு பகுதியினர் வேலைக்கு வந்திருந்தனர்.

1997ல் இருந்தே ஹொல்சிம் நிறுவனத்துக்குள் ஜேவிபீ தொழிற்சங்கம் செயற்பட்டு வந்திருந்தாலும், ஒப்பந்த தொழிலாளர்களின் தொழிலைப் பாதுகாக்க மற்றும் நியாயமான தொழில் நிலைமைகளை உறுதிப்படுத்த எந்தவொரு போராட்டத்தையும் அது முன்னெடுக்காமல் இருந்தமை தற்செயலானது அல்ல: தொழிலாளர்கள் மத்தியில் தமது தொழில் நிரந்தரமாக்கப்படாமை மற்றும் தாம் முகங்கொடுத்துள்ள கொடூரமான சுரண்டல் நிலைமைகள் சம்பந்தமாக பல ஆண்டுகளாக வளர்ச்சி கண்டு வந்த சீற்றம் மற்றும் அமைதியின்மை வெடித்துக் கிளம்புவதை தடுப்பதற்காகவே இந்த போராட்டத்துக்கு அது அழைப்பு விடுத்துள்ளது.

முதலாளித்துவ அரசியல் ஸ்தாபகத்தின் ஒரு பாகமான ஜேவிபீ, பெரும் முதலாளித்துவக் கட்சிகளான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (ஸ்ரீலசுக) மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி (யூஎன்பீ) போன்று, வெளிநாட்டு முதலீட்டாளர்களதும் தேசிய முதலாளிகளதும் இலாப தேவைகளைப் பாதுகாக்க வாக்குறுதி அளித்துள்ள கட்சியாகும்.

ஜேவிபீ தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தின் தலைவர் கே.டி. லால்காந்த, “அபிவிருத்தியின் இயந்திரம் தனியார் துறையே என அண்மையில் குறிப்பிட்டார். அதனால், “அபிவிருத்தியின் இயந்திரத்துக்கு தடை ஏற்பாடத வண்ணம் தொழிலாளர்களை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது கட்சியினதும் அதன் தொழிற்சங்கத்தினதும் பிரதான பொறுப்பாக ஜேவிபீ கருதுகிறது.

ஜேவிபீ சார்ந்த தொழிற்சங்கம் போலவே, பொதுவில் தொழிற்சங்கங்களே தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காக முன்நிற்பதில்லை. அதற்கு மாறாக, அவை சர்வதேசிய மூலதனத்தின் மற்றும் முதலாளித்துவ வர்க்கத்தின் தேவைகளை பாதுகாக்கும் அமைப்புகளாக மாறியுள்ளன. தொழிலாள வர்க்கத்துக்கு புதிய அமைப்பு அவசியம். தொழிற்சங்கங்களில் இருந்து பிரிந்து, தொழிலாளர் நடவடிக்கை குழுக்களை கட்டியெழுப்பி, அத்தகைய குழுக்கள் மூலமாக தொழில் மற்றும் நியாயமான தொழில் நிலைமைகளை பெற தொழிலாள வர்க்கத்தின் பொது போராட்டத்தை ஒழுங்கு செய்ய வேண்டும். சகல தேசிய மற்றும் சர்வதேசிய பெரும் நிறுவனங்கள், பெருந்தோட்டங்கள் மற்றும் வங்கிகளை தொழிலாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் மக்கள்மயப்படுத்தும் சோசலிச வேலைத் திட்டத்தை அமுல்படுத்துவதற்காக, இராஜபக்ஷ அரசாங்கத்தை தூக்கி வீசி தொழிலாளர்களதும் விவசாயிகளதும் அரசாங்கம் ஒன்றை ஆட்சிக்கு கொண்டு வருவதே தொழிலாளர்களின் உரிமைகளுக்கான போராட்டத்தின் வேலைத் திட்டமாகும். சோசலிச சமத்துவக் கட்சியில் இணைந்து இந்தப் போராட்டத்தில் சேர்ந்துகொள்ளுங்கள்.