சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan president glorifies military at victory celebrations

இலங்கை ஜனாதிபதி வெற்றி கொண்டாட்டத்தில் இராணுவத்தைப் புகழ்கின்றார்

By Vilani Peiris
24 May 2014

Use this version to printSend feedback

இலங்கை அரசாங்கம், பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியில் தோற்கடிக்கப்பட்ட ஐந்தாம் ஆண்டு நிறைவை மே 18 அன்று கொண்டாடியது. இதில் இராணுவத்தின் போர் குற்றங்கள் மூடி மறைக்கப்பட்டு புகழ்பாடப்பட்டதோடு சிங்களப் பேரினவாத உணர்வும் தூண்டிவிடப்பட்டது. வாழ்க்கை தரத்தின் மீதான அதன் தாக்குதல்களுக்கு விரோதமாக உழைக்கும் மக்கள் மத்தியில் எதிர்ப்பு வளர்ச்சிகாணுகின்ற நிலையில், ஆழமடைந்துவரும் அரசாங்கத்தின் அரசியல் நெருக்கடிகளின் மத்தியிலேயே இது இடம்பெற்றது.

ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ, இனவாதத்தை தூண்டும் பொருட்டு வேண்டுமென்றே சிங்களவர்கள் செறிந்து வாழும் தென் மாகாணத்தில் மாத்தறையில் இந்த கொண்டாட்டத்தை நடத்தினர். ஆயுதமேந்திய ஆயிரக்கணக்கான சிப்பாய்களுடனான இராணுவ அணிவகுப்பு மற்றும் கவச வாகனங்கள், கடற்படை கப்பல்கள் மற்றும் விமானப் பலமும் இங்கு காட்சிப்படுத்தப்பட்டன. இராஜபக்ஷ தெரிவித்ததாவது: "இன்று நாம் இரக்கமற்ற பயங்கரவாதத்தை தோற்கடிக்க பயன்படுத்தப்பட்ட பல்வேறு வகையான ஆயுதங்களை காட்சிப்படுத்தினோம்... நாம் அவைகளை காணும் போது பெருமைப்படவில்லையா?"

இராஜபக்ஷ பொய்களும் பாசாங்கும் நிறைந்த ஒரு உரையை நிகழ்த்தினார். அரசாங்கம் “போரை அன்றி சமாதானத்தையே கொண்டாடுகின்றது" எனக் கூறிக்கொண்ட அவர் மேலும் தெரிவித்ததாவது: "அமைதி, ஸ்திரத்தன்மை, உண்மையான ஜனநாயகம் மற்றும் அனைத்து சுதந்திரமும் இந்த மாதிரி ஒரு நாளில்தான் இலங்கை மக்களுக்கு வழங்கப்பட்டன"

இராஜபக்ஷ, "அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் ஜனநாயகம்," பற்றி பேசும்போது, அவரது அரசாங்கம் தீவின் வடக்கு மற்றும் கிழக்கை, குறிப்பாக யாழ்ப்பாணத்தை இராணுவ முற்றுகையின் கீழ் வைத்துள்ளது. போரினால் கொல்லப்பட்ட தமிழர்களை பகிரங்கமாக நினைவு கூருவது மற்றும் பொது கூட்டங்களை நடத்துவதையும் அது தடை செய்திருந்தது. ஒரு கால் நூற்றாண்டுக்கும் மேலாக நடந்த உள்நாட்டு போரின் போது, கிட்டத்தட்ட 200,000 பேர் உயிரிழந்திருந்தனர். ஐ.நா. நிபுணர் குழு, எண்ணற்ற பிற போர் குற்றங்களுக்கு பொறுப்பான இராஜபக்ஷ அரசாங்கத்தின் கீழ் யுத்தத்தின் இறுதி மாதங்களில் 40,000 பேர் கொல்லப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மரணங்களின் நினைவாக நடந்த நிகழ்வுகளை இராணுவம் "புலி பயங்கரவாதிகளை" கொண்டாடுவதாக முத்திரை குத்தியது. யாழ்ப்பாண ஆயுத படைகளின் தளபதி உதய பெரேரா, எந்தவொரு கூட்டத்தையும் நடத்த வேண்டாம் என யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் மாணவர் சங்க தலைவர்களை எச்சரித்துள்ளார். இந்த எச்சரிக்கையின் பின்னர் மறு நாள், பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் மாணவ தலைவர்கள் பலருக்கு கொலை அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டன. இராணுவம் மே 16 முதல் மே 26 வரை பல்கலைக்கழகத்தை மூடியது. கல்வியாளர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் கோபத்தை பிரதிபலிக்கும் வகையில், யாழ்ப்பாண பல்கலைக்கழக விஞ்ஞான ஆசிரியர்கள் சங்கம் ஒரு அறிக்கையை வெளியிட்டது. "தமிழ் மக்களுக்கு தமது சமூகத்தின் பெருந்தொகையான மக்களின் அகால மரணத்தை நினைவுகூர சுதந்திரம் வேண்டும்," என அறிவித்தது.

யாழ்ப்பாணத்தில் தமிழ் தட்டுக்களின் பிரதான முதலாளித்துவக் கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பின் (TNA) தலைமையகம், மற்றும் உதயன் பத்திரிகை அலுவலகத்தின் நுழைவாயிலில் கவச வாகனங்கள் கொண்டு இராணுவத்தினரால் அடைக்கப்பட்டன. கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வட மாகாண சபை உறுப்பினர்களின் வீடுகள் இராணுவ கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டன. பொதுவாக நினைவு சடங்குகளுக்கு பயன்படுத்தப்படும் யாழ்ப்பாணத்தில் கீரிமலை இந்து கோயிலுக்கான பாதையும் துண்டிக்கப்பட்டது. கிழக்கில், பொத்துவிலில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டமைப்பின் கூட்டத்தை இராணுவம் தடுத்து நிறுத்தியது.

அவரது ஜனநாயகம் மற்றும் சுதந்திரம் பற்றிய பேச்சுக்கள் ஒரு புறம் இருக்க, இராஜபக்ஷ வாழ்க்கை நிலைமைகள், பொது சுகாதாரம் மற்றும் கல்வி மீதான தாக்குதல்களுக்கு எதிராக போராட்டத்துக்கு வந்த தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் ஏழைகளை நசுக்குவதற்கு கடந்த ஐந்து ஆண்டுகளில் இராணுவம் மற்றும் பொலிஸை பயன்படுத்துவதை அதிகரித்துள்ளார்.

மே 2011ல் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தின் 40,000 தொழிலாளர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் மீது அரசாங்கம் ஏவிவிட்ட போலீஸ் கமாண்டோக்களால் ஒரு தொழிலாளி கொல்லப்பட்டார். மார்ச் 2012ல் சிலாபம் மீனவர்களின் ஆர்ப்பாட்டத்தின் மீது சுட்டதில் ஒருவர் இறந்தார். ஆகஸ்ட் 2013ல், சுத்தமான குடிநீர் கோரி கிராம மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் மீது தாக்குதல் நடாத்தியதில், வெலிவேரிய பிரதேசத்தில் மூன்று இளைஞர்கள் கொல்லப்பட்டனர். இராஜபக்ஷ உரையாற்றுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர்தான், போலீஸ் கல்வி வெட்டுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய மாணவர்கள் மீது ஈவிரக்கமற்று தாக்குதல் நடத்தியது.

இராஜபக்ஷ, அரசாங்கம் பெரும் பொருளாதார அபிவிருத்திகளை செய்துள்ளதாக மாத்தறையில் பெருமைபட்டுக்கொண்டார். "நாங்கள் நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள், விமான நிலையங்கள் மற்றும் மீன்பிடி துறைமுகங்களை கட்டியுள்ளோம். நாம் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்ய கோடிக்கணக்கான ரூபாய்களை செலவிட்டுள்ளோம். நாம் மருத்துவமனைகளை கட்டியுள்ளதோடு புதிய மருத்துவமனைகளில் பெரும்பாலான வசதிகளை ஏற்படுத்தியுள்ளோம்."

உண்மையில், அரசாங்கம் வாழ்க்கை தரத்தின் மீது ஒரு ஈவிரக்கமற்ற தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இதன் விளைவாக அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரித்து வருகின்றன. கல்வி தனியார்மயமாக்கல் மற்றும் சுகாதார சேவைகள் வெட்டும் விரிவாக்கப்பட்டுள்ளன. பெருநிறுவன தட்டினருக்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்குமே உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. சாதாரண உழைக்கும் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய அல்ல. வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வரி விடுப்பு போன்ற அதிக சலுகைகள் கொடுக்கப்பட்டுள்ள அதே வேளை, கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான குடிசைவாசிகள் தமது வீடுகளில் இருந்து வெளியேற்றப்படுகின்றனர்.

குறிப்பிடத்தக்க வகையில், முந்தைய ஆண்டுகளில் போலல்லாமல், மேற்கத்திய நாடுகள் நாட்டின் வெற்றி கொண்டாட்டத்தில் இருந்து தூரத்தில் இருந்துகொண்டன. கனேடிய தூதர் அரசாங்கத்தின் அழைப்பை நிராகரித்து பகிரங்கமாக ஒரு அறிக்கை வெளியிட்டார். அமெரிக்க, பிரிட்டிஷ் மற்றும் ஜேர்மன் தூதர்கள் பங்கேற்கவில்லை.

அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் அனைத்தும் ஆட்சியில் இருந்த கொழும்பு அரசாங்கங்களின் புலிகளுக்கு எதிரான இனவாத யுத்தத்தை ஆதரித்தன. அவர்கள், சீனா போருக்கு பிந்தைய இலங்கையில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெறும் என்று தெளிவான போதே, போரின் இறுதி மாதங்களில் மட்டுமே இராணுவத்தின் மனித உரிமை மீறல்கள் பற்றி விமர்சிக்க தொடங்கினார்கள். பெய்ஜிங் இராஜபக்ஷ அரசாங்கத்தின் போருக்கு இராணுவத் தளபாடங்கள் மற்றும் நிதியும் வழங்கியது.

பிராந்தியம் முழுவதும் சீனாவை கீழறுப்பதை இலக்காகக் கொண்ட தனது "ஆசியாவில் முன்னிலையின்," ஒரு பகுதியாக, அமெரிக்கா, பெய்ஜிங்கில் இருந்து தூர விலகுமாறு இராஜபக்ஷ அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கவே இந்த மனித உரிமை பிரச்சினையை சுரண்டிக் கொண்டிருக்கின்றது. போர் குற்றங்கள் பற்றிய ஒரு சர்வதேச விசாரணையை கோரி ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் (UNHRC) மார்ச் மாதம் இலங்கைக்கு எதிரான மூன்றாவது தீர்மானம் ஒன்றை வாஷிங்டன் முன்கொணர்ந்தது.

கொண்டாட்டத்தில் மேற்கத்தைய இராஜதந்திரிகள் கலந்துகொள்ளாமை, பெய்ஜிங் உடனான உறவுகளை சுருட்டிக்கொள்ளாவிட்டால் அரசாங்கம் சர்வதேச ரீதியில் தனிமைப்படுவதைக் காணும் என்ற இன்னொரு எச்சரிக்கையே ஆகும். ஒரு துணிச்சலான முகத்தை காட்டிய இராஜபக்ஷ: “எவரதும் ஆட்சேபனைகளை அலட்சியம் செய்து, யார் பங்கேற்கிறார் அல்லது பங்கேற்கவில்லை என்பதை கருத்தில் கொள்ளாது, நாம் இந்த வெற்றியை கொண்டாட வேண்டும்" என்றார். அவர் எதிர்ப்புக்கள் காட்டிய நாட்டின் பெயர்களை கூறவில்லை.

இந்த மாத முற்பகுதியில், இராஜபக்ஷ ஜப்பானிய துணை வெளியுறவு அமைச்சர் செய்ஜி கிஹாராவை சந்தித்தபோது ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களை தனது அரசாங்கம் செயல்படுத்துகின்ற போதிலும் ஒரு சர்வதேச விசாரணையை ஏற்றுக்கொள்ளாது என்று கூறினார். இராஜபக்ஷ, தான் உட்பட அரசாங்கத் தலைவர்கள், உயரதிகாரிகள் மற்றும் இராணுவத் தளபதிகளும் போர் குற்றங்களுக்கு குற்றம் சாட்டப்படுவதை விளைவாக்கும் ஒரு விசாரணையை தவிர்க்க ஏக்கம்கொண்டுள்ளார்.

அதே நேரத்தில், இராஜபக்ஷ, தனது அரசாங்கம் பெயரிடப்படாத மேற்கத்தைய சக்திகளின் சதியால் பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறிக்கொண்டும், விடுதலைப் புலிகள் புத்துயிர் பெறுகின்றனர் என்ற போலிக் கதைகளின் மூலமும் தேசியவாதம் மற்றும் இனவாதத்தை தொடர்ந்தும் தூண்டிவிடுகின்றார்.

ஒரு ஆழ்ந்த பொருளாதார, சமூக நெருக்கடியை எதிர்கொண்டுள்ள அரசாங்கம், சரியும் வாழ்க்கை தரங்கள் மீதான எதிர்ப்பை நசுக்க யுத்தத்தின் போது கட்டியெழுப்பப்பட்ட பெரும் பொலிஸ்-அரச இயந்திரத்தை பராமரித்து வரும் நிலையில், உழைக்கும் மக்களை இனவாத ரீதியில் பிளவுபடுத்த முயற்சிக்கின்றது.