சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Manifesto of the Socialist Equality Party (Sri Lanka) for the 2015 general election
Against war and austerity! Fight for a workers’ and peasants’ government and socialist program!

2015 பொது தேர்தலுக்கான (இலங்கை) சோசலிச சமத்துவக் கட்சியின் விஞ்ஞாபனம்

போர் மற்றும் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக!

தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்காகவும் சோசலிச வேலைத்திட்டத்திற்காகவும் போராடுவோம்!

By the Socialist Equality Party
03 August 2015

Use this version to printSend feedback

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) இலங்கைப் பகுதியான சோசலிச சமத்துவக் கட்சி (சோ...), இலங்கையில் ஆகஸ்ட் 17 நடக்கவுள்ள பொதுத் தேர்தலுக்கான எமது பிரச்சாரத்துக்கு ஆதரவளிக்குமாறு தொழிலாளர்கள், இளைஞர்கள், கிராமப்புற உழைப்பாளிகள் மற்றும் புத்திஜீவிகளுக்கும் அழைப்பு விடுக்கின்றது.

சோ... கொழும்பு, யாழ்ப்பாணம், நுவரெலியா ஆகிய மூன்று மாவட்டங்களில் 43 வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. சோ... தலைமைத்துவத்தின் மூன்று நீண்டகால உறுப்பினர்களான விலானி பீரிஸ், பரமு திருஞானசம்பந்தர், எம்.தேவராஜா ஆகியோர் வேட்பாளர்களுக்கு தலைமை வகிக்கின்றனர். தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்களும் வேட்பாளர்களில் அடங்குவர். அவர்கள் அனைவரும் சோசலிச சர்வதேசியவாதத்திற்கான போராட்டத்தை கொள்கை ரீதியில் முன்னெடுத்த வரலாற்றை கொண்டவர்கள்.

ஐக்கிய தேசியக் கட்சி (யூ.என்.பீ.), ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (ஸ்ரீ..சு..) மற்றும் ஏதாவதொரு வழியில் இரண்டு பிரதான முதலாளித்துவ கட்சிகளுடன் அணிசேர்ந்துள்ள ஏனைய ஒவ்வொரு அரசியல் போக்குகளுக்கும் எதிராக சோ... போட்டியிடுகின்றது. தொழிலாள வர்க்கத்தின் நலன்களை பிரதிநிதித்துவம் செய்யும் ஒரே கட்சி எமது கட்சி மட்டுமே.

சோசலிச சமத்துவக் கட்சியின் பிரச்சாரத்தின் முக்கிய நோக்கம், வாக்குகளை சேகரிப்பதல்ல, மாறாக, போருக்கும் ஜனநாயக உரிமைகள் மற்றும் வாழ்க்கை தரத்தின் மீதான தாக்குதல்களுக்கும் எதிராக தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு கல்வியூட்டி அவர்களை அணிதிரட்டுவதே ஆகும். முதலாளித்துவத்தை தூக்கிவீசி தெற்காசியாவிலும் மற்றும் உலகம் பூராவும் சோசலிசத்துக்கான போராட்டத்தின் பாகமாக ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசை ஸ்தாபிப்பதற்கான புரட்சிகர போராட்டத்தில், ஒடுக்கப்பட்ட மக்களது கூட்டுடன், தொழிலாள வர்க்கத்தை வழிநடத்துவதே எமது முன்னோக்காகும்.

பொய்கள் மற்றும் ஏமாற்றுக்கள் நிறைந்த தேர்தல்

முழு அரசியல் மற்றும் ஊடக ஸ்தாபனமும் இந்த தேர்தலில் உழைக்கும் மக்களுக்கு எதிரான ஒரு சதியில் ஈடுபட்டுள்ளன. சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே தொழிலாளர்களுக்கு உண்மையை சொல்லும் ஒரே கட்சியாகும்: 2008ல் வெடித்த உலக முதலாளித்துவத்தின் ஆழமடைந்து வரும் நெருக்கடி, பூகோள-அரசியல் பதட்டங்களுக்கு எண்ணெய் வார்ப்பதோடு போருக்கான உந்துதலையும் அதேபோல் ஒவ்வொரு நாட்டிலும் சமூக எதிர்-புரட்சியையும் துரிதப்படுத்தியுள்ளது.

இந்த உலகப் பேரலையில் இருந்து தப்பிக்கொள்வதற்கு மாறாக, இலங்கையானது சர்வதேச மந்தநிலைப் போக்குகள், பண்டங்களின் விலைச் சரிவு மற்றும் நிதியியல் ஸ்திரமின்மையினால் வெகுவாக பாதிக்கப்படும் நிலையில் உள்ளது. யூ.என்.பீ., ஸ்ரீ..சு.. மற்றும் அவற்றின் பங்காளிகளும் சேர்ந்து, அதிகாரத்திற்கு வர வாக்களித்தால் தாம் மக்களின் ஜனநாயகம், நீதி மற்றும் மக்களின் பொருளாதார நல்வாழ்வையும் ஸ்தாபிப்பதாக வெட்கமின்றி கூறிக்கொள்கின்றனர்.

இதற்கு மாறாக, இந்தக் கட்சிகள் அனைத்தும் உலகப் பெரும் நிறுவனங்களின் இலாபத்தை பெருகச் செய்வதன் பேரில், பொதுச் செலவுகளை கடுமையாக வெட்டிக் குறைத்தல், தனியார்மயமாக்கலை அதிகரித்தல், வாழ்க்கைத் தரங்களை இடைவிடாது சீரழித்தல் போன்ற சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளைகளை செயல்படுத்துவதற்கே அர்ப்பணித்துக் கொண்டுள்ளன. கிரேக்க தொழிலாள வர்க்கத்தின் மீது சுமத்தப்படும் கடுமையான சிக்கன நடவடிக்கைகள், சர்வதேச நிதி மூலதனமானது தனது சிக்கன கோரிக்கைகள் சம்பந்தமான எந்தவொரு எதிர்ப்பையும் பொறுத்துகொள்ளாது என எல்லா நாடுகளிலும் உள்ள தொழிலாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கின்றன.

வாழ்க்கை நிலைமையை கடுமையாக வெட்டிச் சரிப்பதை, ஜனநாயக முறையில் முன்னெடுக்க முடியாது. யூ.என்.பீ. மற்றும் ஸ்ரீ..சு.கட்சியும், தமது அரசியல் எதிரிகளுக்கு விரோதமாகவும் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராகவும் கொடூரமான பொலிஸ்-அரச வழிமுறைகளை பயன்படுத்துவதில் நீண்ட வரலாற்றை கொண்டவை. இரு கட்சிகளும் சிங்கள மேலாதிக்கவாதத்தில் மூழ்கிப்போயுள்ளதோடு இலட்சக்கணக்கான உயிர்களைக் காவுகொண்ட கால் நூற்றாண்டு கால இனவாத யுத்தத்துக்கு பொறுப்பாளிகள். எந்தக் கட்சி அடுத்த அரசாங்கத்தை அமைத்தாலும், அது, தமது ஜனநாயக மற்றும் சமூக உரிமைகள் மீதான தாக்குதல்களை எதிர்க்கும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை நசுக்கும் முயற்சியில் பாதுகாப்புப் படையினரை பயன்படுத்த தயங்கப் போவதில்லை.

போருக்கான உந்துதல்

இந்தியப் பெருங்கடலின் கடல் பாதைகளின் சந்தியில் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த முறையில் அமைந்திருப்பதன் விளைவாக, இலங்கையானது கசப்பான புவிசார்-அரசியல் பகைமையின் குவிமையமாக உள்ளது. இது ஜனவரியில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் வெளிப்படையாகி இருந்தது. வாஷிங்டன், முன்கூட்டியே நன்கு திட்டமிடப்பட்டிருந்த ஆட்சி மாற்ற நடவடிக்கை ஒன்றில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க மற்றும் யூ.என்.பீ. தலைவர் ரணில் விக்கிரமசிங்க உடனும் சேர்ந்து, மஹிந்த இராஜபக்ஷவை தோற்கடித்து மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக நியமித்தது.

அமெரிக்கா இராஜபக்ஷவை எதிர்த்தது, அவர் ஜனநாயக விரோதமான முறையில் ஆட்சி செய்ததனாலோ அல்லது பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவத் தாக்குதல்களில் இழைக்கப்பட்ட அட்டூழியங்களுக்கு அவரது அரசாங்கம் பொறுப்பாளி என்பதனாலோ அல்ல. மாறாக, அவரது அரசாங்கம் சீனாவுடன் கொண்டிருந்த பொருளாதார மற்றும் அரசியல் உறவுகளுக்கு வாஷிங்டன் ஆழமான பகைமையை கொண்டிருந்தது.

இலங்கையில் ஆட்சி மாற்றமானது ஒபாமா நிர்வாகத்தின் "ஆசியாவில் முன்னிலை" கொள்கையின் பாகமாகவே இடம்பெற்றது –“ஆசியாவில் முன்னிலை” எனப்படுவது, ஆசியா முழுவதும் பெய்ஜிங்கிற்கு எதிராக இராஜதந்திர முறையில் குழிபறித்து, அமெரிக்காவின் பொருளாதார மேலாதிக்கத்தின் தொடர்ச்சியை உறுதிசெய்து கொள்வதையும், சீனாவை இராணுவ ரீதியில் சுற்றிவளைப்பதையும் இலக்காகக் கொண்டதாகும். தென் சீன மற்றும் கிழக்குச் சீன கடற் பிராந்தியங்களில் ஈவிரக்கமின்றி மோதல்களுக்கு எரியூட்டியுள்ள வாஷிங்டன், பிராந்தியத்தை எளிதில் தீப்பற்றும் நிலைக்குள் தள்ளியுள்ளது. ஒரு விபத்து அல்லது ஏதாவதொரு பக்கத்திலான தவறான கணிப்புக் கூட, அணு ஆயுத சக்திகளுக்கு இடையேயான பேரழிவு மிக்க மோதலுக்குள் ஆசியாவையும் உலகத்தையும் மூழ்கடிக்கும் சாத்தியத்தைக் கொண்டுள்ளன.

ஒவ்வொரு நாடும் இந்த பூகோள-அரசியல் நீர்ச்சுழிக்குள் இழுபட்டுச் செல்கின்றன. சீனாவுடனான கடல் எல்லை முரண்பாடுகளில் கடுமையான நிலைப்பாட்டை எடுக்க வியட்நாம், பிலிப்பைன்ஸ் மற்றும் ஜப்பானுக்கும் அமெரிக்கா ஊக்கம் அளித்து வரும் அதேவேளை, ஆஸ்திரேலியாவானது அமெரிக்கப் படைகளுக்கான ஒரு களமாக மாற்றப்பட்டு வருகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் கீழ், இந்தியா அமெரிக்காவுடனான தனது இராணுவ உறவுகளை மேலும் பலப்படுத்துகின்றது . இது பாக்கிஸ்தானுடன் பதட்டங்களை மட்டுமே உக்கிரமாக்கும். இலங்கையை பொறுத்தவரை, மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவில் இருந்து சீனாவுக்கான எரிசக்தி மற்றும் மூலப் பொருட்கள் விநியோகத்தை துண்டிக்கும் அமெரிக்க யுத்த திட்டங்களின் பாகமாக, இந்தியப் பெருங்கடலில் ஒரு மூலோபாய புறக்காவல் நிலையமாக அதை மாற்றுவதற்கு வாஷிங்டன் விரும்புகிறது.

போருக்கான உந்துதலானது முதலாளித்துவத்தின் தீர்க்க முடியாத முரண்பாடுகளின் விளைவு ஆகும்: அதாவது உலக பொருளாதாரத்துக்கும் காலங்கடந்த தேசிய அரச அமைப்பு முறைக்கும் இடையேயான, மற்றும் சமூக உற்பத்திக்கும் உற்பத்தி சாதனங்களின் தனியார் உடைமைக்கும் இடையேயான முரண்பாடுகளாகும். உலகப் பொருளாதார நெருக்கடி மற்றும் அதனது வரலாற்று வீழ்ச்சிக்கும் பிரதிபலிக்கும் வகையில், அமெரிக்க ஏகாதிபத்தியமானது தனது உலக மேலாதிக்கத்தை ஸ்தாபிக்க இராணுவ வழிமுறைகளை நாடுகின்றது.

போட்டி மற்றும் மோதலுக்கும் மூல காரணமான இலாப நோக்கு அமைப்பு முறையை ஒழிக்க தொழிலாள வர்க்கம் புரட்சிகரமாக தலையீடு செய்யாவிடில் போரைத் தவிர்க்க முடியாது. சோ...யின் தேர்தல் பிரச்சாரமானது ஒரு மூன்றாவது உலக யுத்ததுக்குள் மூழ்குவதைத் தடுத்து நிறுத்த, தொழிலாள வர்க்கத்தின் ஒரு சர்வதேச போர்-எதிர்ப்பு இயக்கத்தில் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்த நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிவுகள் முன்னெடுக்கின்ற அரசியல் போராட்டத்தின் ஒரு ஒருங்கிணைந்த பகுதி ஆகும்.

கொழும்பில் அரசியல் நெருக்கடி

இத்தகைய பூகோள-அரசியல் பதட்டங்கள் வெளியுறவுக் கொள்கை தொடர்பாக இலங்கையின் ஆளும் உயரடுக்கிற்குள் ஆழமான விரிசல்களுக்கு எரியூட்டியுள்ளன. ஜனாதிபதி சிறிசேனவினால் நியமிக்கப்பட்டு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான யூ.என்.பீ.யை முன்னிலையில் கொண்ட சிறுபான்மை அரசாங்கம், மே மாதம் கொழும்புக்கு வந்த அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெர்ரி சுட்டிக் காட்டியது போல், தெளிவாக வாஷிங்டனை நோக்கித் திரும்பியுள்ளது. பெய்ஜிங்கின் பக்கம் திரும்புவதன் மூலம், வாஷிங்டனை பகைத்துக்கொள்வதால் ஏற்படக்கூடிய ஆத்திரமூட்டும் பொருளாதார மற்றும் இராஜதந்திர விளைவுகளையிட்டு அச்சம் கொண்ட ஆளும் வர்க்கத்தின் சில பகுதியினர் இந்த மாற்றத்திற்கு ஆதரவு வழங்கினர்.

எவ்வாறெனினும், கடந்த ஏழு மாதங்களாக, அடுத்தடுத்து தேர்தல் வாக்குறுதிகள் மீறிப்பட்டு வருவதனாலும் வாழ்க்கைத் தரம் தொடர்ந்தும் சரிந்து வருவதனாலும் சிறிசேன-யூ.என்.பீ. அரசாங்கத்தின் மீது பொதுமக்களது எதிர்ப்பு தீவிரமாக அதிகரித்துள்ளது. வாழ்க்கைத் தரம் தொடர்ந்து சரிந்து வருகின்றது. இதன் விளைவாக, இராஜபக்ஷ பொதுத் தேர்தலில் போட்டியிட ஊக்குவிக்கப்பட்டதோடு பிரதமராக மீண்டும் ஆட்சிக்கு வர முயல்கின்றார். சீனாவின் கணிசமான முதலீட்டு திட்டங்களில் இலாபமீட்டிய பெரும் வர்த்தகர்களில் சில பிரிவினர் அவரை ஆதரிக்கின்றனர். சீனாவின் சில முதலீடுகளை யூ.என்.பீ. தற்போது நிறுத்தி வைத்துள்ளது.

ஸ்ரீ..சு.கட்சியை கட்டுப்படுத்த இராஜபக்ஷ மற்றும் சிறிசேன இடையேயான ஒரு அரசியல் போர், இந்த நீண்டகால முதலாளித்துவ கட்சியை துண்டுகளாக பிளந்துள்ளது. இராஜபக்ஷ, புலிகளை இராணுவரீதியில் தோற்கடித்தை தூக்கிப் பிடித்துக்கொண்டும், தீவின் ஐக்கியம் மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியிருப்பதாக யூ.என்.பீ.யை குற்றஞ்சாட்டிக்கொண்டும் தமிழர்-விரோத பேரினவாதத்தை கிளறி வருகின்றார். அமெரிக்கா மற்றும் அதன் பங்காளிகள் பற்றிய தனது விமர்சனத்தில் எச்சரிக்கையாக இருக்கும் அதேவேளை, அவர் சீன திட்டங்களை மீண்டும் தொடங்கி, பொருளாதாரத்தை ஊக்குவிக்கவும் வேலைகள் மற்றும் சிறந்த வாழ்க்கைத் தரத்தை வழங்கவும் போவதாக அறிவித்து, வாக்காளர்களுக்கு ஆசை காட்டினார்.

ஜனவரியில் இராஜபக்ஷவின் வெளியேற்றத்தை திட்டமிட்ட அமெரிக்கா, அவர் பிரதமராக மீண்டும் வருவதையோ, அல்லது பெய்ஜிங் உடனான உறவுகள் மறுசீரமைக்கப்படுவதையோ சகித்துக் கொள்ளப் போவதில்லை. அதிகாரத்திற்கு வருவதற்கான இராஜபக்ஷவின் முயற்சி தோல்வியடைவதை உறுதிப்படுத்திக்கொள்வதில் எவ்வித தயக்கத்தையும் காட்டாது. ஸ்ரீ..சு.. பெரும்பான்மை வெற்றி பெற்றாலும் கூட, பிரதமராக இராஜபக்ஷவை நியமிக்க முடியாது என்று சிறிசேன ஏற்கனவே அறிவித்துள்ளார். இத்தகைய நடவடிக்கை அப்பட்டமாக அரசியலமைப்பிற்கு விரோதமானதுடன் இராணுவம் மற்றும் அரச எந்திரத்தின் ஆதரவுடன் மட்டுமே அதை அமுல்படுத்த முடியும்.

இராஜபக்ஷ வெற்றி பெற்றால், தேர்தல் முடிவை கண்டனம் செய்து அவரை அகற்றக் கோரி வாஷிங்டன் மற்றும் அதன் பங்காளிகளின் ஆதரவுடன் ஒரு தீவிரமான பிரச்சாரத்தை முன்னெடுப்பதற்கு களம் அமைக்கப்படுகிறது. அமெரிக்க ஆதரவிலான இன்னொரு "வண்ணப் புரட்சி" தயாரிக்கப்பட்டு வருகிறது. அரச சார்பற்ற நிறுவனங்கள், தாராளவாத குழுக்கள், கல்விமான்களும் அடங்கிய ஒரு பெரிய உயர் மத்தியதர வர்க்க குழுக்கள், ஜனவரியில் சிறிசேன பின்னால் நின்று செய்தது போல், இப்போது யூ.என்.பீ. மற்றும் அதன் நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி என அழைக்கப்படுவதன் பின்னால் அணிசேர்ந்துள்ளன.

சோசலிச சமத்துவக் கட்சி, அமெரிக்காவினதும், கொழும்பில் உள்ள அதன் அரசியல் பங்காளிகளின் திட்டமிடல்களையும் எதிர்ப்பதன் மூலம், பல பத்தாயிரக்கணக்கான உயிர்களைப் பலிகொண்ட இராணுவத்தின் யுத்தக் குற்றங்களுக்கும், தனது அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளை எதிர்த்த தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை நசுக்குவதற்கு பாதுகாப்பு படைகளை பயன்படுத்தியமை உட்பட படுமோசமான ஜனநாயக உரிமை மீறல்களுக்கும் பொறுப்பாளியான இராஜபக்ஷவுக்கு எந்த வகையிலும் ஆதரவு கொடுக்கவில்லை. சோசலிச மற்றும் சர்வதேசிய வேலைத்திட்டத்திற்கான போராட்டத்தில் ஆளும் வர்க்கத்தின் அனைத்து பிரிவுகளில் இருந்தும் சுயாதீனமாக அணிதிரள்வதன் மூலம், தொழிலாள வர்க்கத்தால் மட்டுமே சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க முடியும் என்று நாம் வலியுறுத்துகிறோம்.

போலி இடது அமைப்புக்கள்

மிகவும் நயவஞ்சகமான பாத்திரத்தை போலி இடது அமைப்புக்களான நவ சம சமாஜக் கட்சி (.... NSSP) ஐக்கிய சோசலிச கட்சி (.சோ.. USP) மற்றும் முன்னிலை சோசலிசக் கட்சியும் (மு.சோ.. FSP) ஆற்றி வருகின்றன. அவை ஜனவரியில் "ஜனநாயகப் புரட்சியின்" ஊக்குவிப்பாளர்களாக செயல்பட்டதோடு இராஜபக்ஷ அரசாங்கத்தை ஒரு "பாசிச சர்வாதிகாரம்" என கண்டனம் செய்தன. நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, அவர்கள் அனைவரும் தற்போதைய தேர்தலில் யூ.என்.பீ.க்கு ஆதரவு கொடுக்கின்றனர்.

கொழும்பு அரசியல் ஸ்தாபனத்துடனான போலி-இடதுகளின் ஒருங்கிணைவு, உயர்மட்ட அரசாங்க ஆலோசனை சபையான தேசிய செயற்குழுவுக்கு ந.... தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ன நியமிக்கப்பட்டதில் வெளிப்படையானது. அங்கு அவர் வெட்கமின்றி அதன் தலைமைப் பிரச்சாரகராக செயல்படுகிறார். ஜனவரியின் "ஜனநாயகப் புரட்சியை" தொடர்வதற்கு அவர் முடிவில்லாத அழைப்பு விடுப்பதானது சிறிசேன மற்றும் விக்கிரமசிங்கவை போன்ற தொழிலாள வர்க்க விரோத நபர்களுக்கு ஒரு முற்போக்கு சாயத்தை பூசுவதற்கும், இராஜபக்ஷவுக்கு எதிராக ஒரு வண்ணப் புரட்சிக்கு களம் அமைப்பதற்கும் எடுக்கும் முயற்சியாகும்.

நவ சம சமாஜக் கட்சி, ஐக்கிய சோசலிசக் கட்சி, முன்னிலை சோசலிசக் கட்சியும் ஆகிய அனைத்தும், கிரேக்கத்தில் சிரிசா அரசாங்கத்தை இலங்கைக்கு ஒரு முன்மாதிரியாக தூக்கிப் பிடித்தது, இங்குள்ள தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு ஒரு எச்சரிக்கை ஆகும். சில மாத இடைவெளிக்குள், தனது சிக்கன எதிர்ப்பு உறுதிமொழிகளை கைவிட்ட சிரிசா, ஜூலை 5 அன்று கிரேக்க மக்கள் 'வேண்டாம்' என வழங்கிய ஏகோபித்த வாக்குகளை அலட்சியம் செய்து, ஐரோப்பிய ஒன்றியத்தின் கொடூரமான நடவடிக்கைகளைச் சுமத்தியுள்ளது. யூ.என்.பீ.க்கு ஆதரவு வழங்குவதன் மூலம் இலங்கை போலி-இடதுகள் உழைக்கும் மக்களை தாமே காட்டிக்கொடுக்கத் தயாராகி வருகின்றன.

யூ.என்.பீ., சிங்கள இனவாதம் மற்றும் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான குற்றங்களில் மூழ்கிப் போயுள்ள இலங்கை முதலாளித்துவத்தின் பழைய கட்சி ஆகும். அது நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட, நாடளாவிய ரீதியிலான தமிழர்-விரோத படுகொலைகள் மூலம் 1983ல் உள்நாட்டு யுத்தம் ஆரம்பிக்கப்பட்டமைக்கு பொறுப்பாளி ஆகும். 1980களின் பிற்பகுதியில் யூ.என்.பீ. அரசாங்கம் ஏறத்தாழ அதன் கூட்டாளியாக இருந்த சிங்கள பேரினவாத மக்கள் விடுதலை முன்னணிக்கு (ஜே.வி.பி.) எதிராக இராணுவ-கொலைக் கும்பல்களை நாடி, ஒரு மதிப்பீட்டின்படி 60,000 கிராமப்புற சிங்கள இளைஞர்களை கொன்று தள்ளியது. ஜனவரியில் இருந்து, அது ஏற்கனவே சுகாதார தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் மற்றும் மாணவர்களின் ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக பாதுகாப்புப் படைகளை பயன்படுத்தியதோடு, தோட்டத் தொழிலாளர்களைப் பழிவாங்கவும் ஆதரவு கொடுத்து வருகிறது.

காஸ்ட்ரோயிச கெரில்லாவாதத்தின் அடிப்படையில் ஸ்தாபிக்கப்பட்ட ஜே.வி.பீ, நீண்ட காலத்துக்கு முன்பே பாராளுமன்ற ஆசனங்களுக்காக தனது ஆயுதங்களைப் பரிமாறிக்கொண்டதோடு முழுவதுமாக கொழும்பு ஸ்தாபனத்துடன் ஒன்றிணைந்தது. 2005ல் இராஜபக்ஷ தேர்வு செய்யப்படுவதற்கு ஆதரவளித்த ஜே.வி.பீ., இப்போது யூ.என்.பீ. உடன் அணிசேர்ந்துள்ளது. ஜே.வி.பீ. ஜனவரியில் சிறிசேன தேர்வு செய்யப்படுவதற்கு ஆதரவளித்ததோடு தேசிய நிறைவேற்றுக் குழுவையும் பிரதிநிதித்துவம் செய்கின்றது. தனது சொந்த வேட்பாளர்களை நிறுத்தியுள்ள ஜே.வி.பீ. தலைவர்கள், யூ.என்.பீ. பற்றி பெரும்பாலும் விமர்சனமின்றி இருந்து கொண்டு, நேரடியாக ஸ்ரீ..சு..க்கு எதிராக தனது பிரச்சாரத்தை திருப்பிவிட்டுள்ளனர்.

மோசமடைந்து வரும் பொருளாதார மற்றும் சமூக நெருக்கடி

அடுத்த அரசாங்கத்தின் அரசியல் உருவமைப்பு எவ்வகையானதாக இருந்தாலும், அது ஆழ்ந்த பொருளாதார நெருக்கடியின் சுமைகளை உழைக்கும் மக்களின் முதுகில் சுமத்த முற்படும் என்று சோசலிச சமத்துவக் கட்சி எச்சரிக்கின்றது.

பொருளாதார வளர்ச்சி பற்றிய ஒப்பீட்டளவிலான உத்தியோகபூர்வ உயர் விகிதங்கள், ஒரு தவறான சித்திரத்தை முன்வைக்கின்றன. பொருளாதாரமானது வீதிகள், உயர்ந்த கட்டிடங்கள் மற்றும் ஹோட்டல்கள் போன்ற உட்கட்டமைப்புக்கான செலவுகளாலும், சொத்து மற்றும் சந்தைகள் பற்றிய ஒட்டுண்னித்தனமான ஊகங்களாலும் முண்டு கொடுத்து நிறுத்தப்பட்டுள்ளது –இவை அனைத்தும் தவிர்க்க முடியாமல் சரிந்துவிழும். தேயிலை மற்றும் ஆடை ஏற்றுமதி வீழ்ச்சியின் காரணமாக அந்நிய செலாவணி நெருக்கடி ஒன்று உருவாகி வருகின்றது.

சர்வதேச நாணய நிதியம் 4 பில்லியன் டாலர்கள் புதிய கடனை வழங்க மறுத்து, ஆழ்ந்த செலவினக் குறைப்புக்களை கோரிய பின்னர், அரசாங்கம் அதிக வட்டிக்கு கடன் வாங்க நெருக்கப்பட்டது. இதனால் வெளிநாட்டு கடன் குவிந்துகொண்டிருக்கின்றது. அரச கடன் செலவு "மிக உயர்ந்த" மட்டத்தில் உள்ளதுடன் அது வருவாயில் 95.4 சதவிகிதத்தை விழுங்கிக்கொள்கின்றது என்று நிதி அமைச்சர் மே மாதம் அறிவித்தார். அதே மே மாதம், முன்னாள் ஜனாதிபதி குமாரதுங்க, அரசாங்கம் திவாலின் விளிம்பில் உள்ளது என எச்சரித்ததோடு அரசாங்க ஊழியர்களின் ஊதியத்தை கொடுக்க முடியாது போகும் என்றும் கூறினார்.

தேர்தல் பிரச்சாரத்தின்போது, ஸ்ரீ..சு.. மற்றும் யூ.என்.பீ.யும் தமது ஆட்சியின் கீழ் உயர் பொருளாதார வளர்ச்சி இருக்கும் என்று கூறிக்கொள்கின்றன. உண்மையில், இரு கட்சிகளும், மக்களின் இழப்பில் சில செல்வந்தர்களின் இலாபத்தை பெருகச்செய்ய சர்வதேச நாணய நிதியத்தின் பொருளாதார மறுசீரமைப்பு நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்து வந்தன.

உத்தியோகபூர்வ அறிவித்தலின்படி, வறுமையானது மக்கள் தொகையில் 6.7 சதவீதத்துக்கு குறைக்கப்பட்டுள்ளது. ஆனால், வறுமைக்கோடு நாள் ஒன்றிற்கு 1 டாலர் வருமானம் என்ற பட்டினி நிலையில் இருந்து நாள் ஒன்றிற்கு 2 டாலருக்கு உயர்த்தப்பட்டாலும், 23 சதவிகிதமானவர்கள் வறுமையில் வாழ்வார்கள். நாட்டின் தொழிலாளர் படையில் பாதிப் பேர், குறைந்த ஊதியம் வழங்கும் தற்காலிக மற்றும் அன்றாட தொழிலில் ஈடுபடுகின்றனர். அவர்களுடைய ஊதியங்கள் உணவு மற்றும் ஏனைய அத்தியாவசியப் பொருட்களின் தீவிரமான விலை உயர்வுடன் பொருந்தவில்லை. கொள்கை கற்கைகள் நிறுவனத்தின் ஆய்வுகள் சமீபத்தில் முன்வைத்த புள்ளிவிவரங்கள், மக்கள் தொகையில் கால்வாசிப் பேர் போசாக்கின்றி உள்ளதாக காட்டுகின்றன.

ஆடம்பர வீடுகளில் வசிக்கும் ஒரு சிறிய அதி-செல்வந்த தட்டுக்கள், நவீன-மாதிரி கார்களை ஓட்டிச் செல்வதோடு, வறிய குடும்பங்கள் ஒரு மாதம் வாழத் தள்ளப்பட்டுள்ள பணத் தொகையை ஒரு நேர உணவுக்கு எந்தக் கவலையும் இன்றி செலவிடுகின்றன. மிக அண்மைய புள்ளிவிவரங்களின் படி, அதி-பணக்கார 20 சதவீதத்தினர் மொத்த வருமானத்தில் 53.5 சதவிகிதத்தை பெறும் அதே வேளை, அதி-வறிய 20 சதவீதத்தினர் வெறும் 4.4 சதவீதத்தையே பெறுகின்றனர்.

தேர்தல் முடிந்தவுடன் அமுல்படுத்த தயாரிக்கப்படுவது என்னவென்பது கிரேக்கத்தில் மிகத் தெளிவாக காட்டப்பட்டுள்ளது. அங்கு ஐரோப்பிய மற்றும் சர்வதேச நிதி மூலதனம், பொது சுகாதாரம், கல்வி, ஓய்வூதியங்கள், வேலைகள், சமூகநல கொடுப்பனவுகள் உட்பட அனைத்து அத்தியாவசிய சேவைகளையும் முழுமையாக அகற்ற வலியுறுத்துகின்றது. அடுத்த அரசாங்கம் தீவின் உள்நாட்டு யுத்தத்தின் போது கட்டியெழுப்பப்பட்ட பொலிஸ்-அரச இயந்திரத்தை தொழிலாள வர்க்கத்திற்கு எதிராகப் பயன்படுத்த தயங்கப் போவதில்லை. சம்பள உயர்வுக்காக பிரச்சாரம் செய்த டீசைட் Deeside மற்றும் இன்ஜஸ்றீ தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பழிவாங்கப்படுவது, நடக்கப் போவதைப் பற்றி சகல தொழிலாளர்களுக்கும் விடுக்கப்படும் ஒரு எச்சரிக்கை ஆகும்.

தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு புரட்சிகர சோசலிச வேலைத்திட்டம்

தொழிலாள வர்க்கம், யூ.என்.பீ. அதே போல் ஸ்ரீ..சு.. போன்ற முதலாளித்துவத்தின் அனைத்து பிரிவுகள் மற்றும் அவர்களின் பங்காளிகள், சேவகர்கள் மற்றும் போலி இடது வக்காலத்து வாங்கிகளிலும் இருந்து தனது அரசியல் சுயாதீனத்தை ஸ்தாபித்துக்கொள்ளாமல் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளை பாதுகாக்க முடியாது என சோ... வலியுறுத்துகிறது. தொழிலாளர்களின் ஐக்கியப்பட்ட ஒரு இயக்கத்தால் மட்டுமே, அதிகாரத்துக்கும் சோசலிச கொள்கைகளை அமுல்படுத்துவதற்கான தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தை நிறுவுவதற்கும் ஒரு புரட்சிகரப் போராட்டத்தில் ஒடுக்கப்பட்ட மக்களை வழிநடத்த முடியும்.

யூ.என்.பீ., ஸ்ரீ..சு.., ஜே.வி.பி. மற்றும் அவற்றின் பல பங்காளிகளினதும் சிங்கள பேரினவாதம் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு போன்ற பல்வேறு தமிழ் முதலாளித்துவக் கட்சிகளின் தமிழ் பிரிவினைவாதம் உட்பட அனைத்துவிதமான தேசியவாதம் மற்றும் இனவாதத்தையும் நிராகரிக்குமாறு தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுக்கின்றது. இலட்சக்கணக்கான உயிர்களை காவுகொண்டு தீவைப் பேரழிவிற்கு உள்ளாக்கிய கால் நூற்றாண்டு கால உள்நாட்டுப் போருக்கு யூ.என்.பீ. மற்றும் ஸ்ரீ..சு.. நேரடியாக பொறுப்பாளிகளாக இருக்கும் அதே வேளை, புலிகளின் இனவாத அரசியலும் தமிழ் மக்களுக்கு ஒரு அழிவுகரமான முட்டுச் சந்து என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகள், தமிழ் தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களை பிரதிநிதித்துவம் செய்யவில்லை, மாறாக விலைபோகும் தமிழ் உயரடுக்கையே பிரதிநித்துவம் செய்தனர். இலங்கை இராணுவம் 2009ல் தாக்குதலை தீவிரமாக்கிய நிலையில், தீவின் ஏனைய பகுதிகளிலும் இந்தியா மற்றும் சர்வதேச அளவிலும் உள்ள தொழிலாள வர்க்கத்திற்கு எந்தவொரு பரந்த அறைகூவலும் விடுப்பது ஒரு புறம் இருக்க, புலிகளின் ஒடுக்குமுறை ஆட்சி வழிமுறைகளால் அந்நியப்பட்டிருந்த தமிழ் தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் எந்தவொரு அறைகூவலும் விடுக்கக்கூட இயலாதவர்களாக இருந்தனர். பதிலாக, கொழும்புக்கும் அதன் குற்றவியல் யுத்தத்துக்கும் ஆதரவளித்த “சர்வதேச சமூகத்துக்கு”, அதாவது அமெரிக்கா, இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் பயனற்ற வேண்டுகோள்களை விடுக்குமளவு புலிகள் இறங்கி வந்தனர். புலிகளின் தோல்வியானது அடிப்படையில் இராணுவ சாதனங்களின் பற்றாக்குறையின் விளைவு அன்றி, அவர்களின் அரசியலின் விளைவே ஆகும்.

புலிகளின் பாராளுமன்ற ஊதுகுழலாக செயல்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு, 2009ல் இருந்து, தமிழ் மேல்தட்டினருக்கு சிறப்புரிமைகளை தக்கவைத்துக்கொள்ள கொழும்பு அரசியல் ஸ்தாபனத்துடன் சூழ்ச்சிகளைச் செய்ய முனைந்து வருகின்றது. வட மாகாண சபையின் கட்டுப்பாட்டை வெற்றி கொண்ட அது, வடக்கில் தற்போது தொடரும் இராணுவ ஆக்கிரமிப்புடன் அனுசரித்துச் செல்வதோடு மாகாணத்தை முதலீட்டாளர்களுக்கான மலிவு உழைப்புக் களமாக மாற்ற முயற்சித்து வருகின்றது. அது தொழில்கள், சேவைகள் மற்றும் வீட்டுப் பற்றாக்குறை பற்றிய பிரச்சினைகளை நிவர்த்தி செய்ய பெரிதாக அல்லது எதுவுமே செய்யவில்லை. இந்த தேர்தலில், தனது சொந்த வேட்பாளர்களை நிறுத்தியுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு, யூ.என்.பீ.க்கு மறைமுகமாக ஆதரவு வழங்குவதுடன் அது வாஷிங்டனுடன் செயற்படும் என்பதையும் தெளிவுபடுத்தி வருகின்றது.

சர்வதேச சோசலிச முன்னோக்கின் அடிப்படையில் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லீம்களுமாக தொழிலாளர்களை ஐக்கியப்படுத்த போராடும் ஒரே கட்சி சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே ஆகும். சோ... மற்றும் அதன் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமும் (பு...), ஆட்சியில் இருந்த கொழும்பு அரசாங்கங்கள் முன்னெடுத்த இனவாத யுத்தத்தை தொடர்ந்து எதிர்த்து வந்ததோடு, தீவின் வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து இராணுவத்தை உடனடியாக, நிபந்தனையின்றி வெளியேற்றக் கோரி வந்துள்ளது. எமது முன்னோக்கானது தெற்காசியா மற்றும் உலகம் பூராவும் சோசலிச குடியரசு ஒன்றியங்களை கட்டியெழுப்புவதன் பாகமாக ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசுக்கான போராட்டத்தில் உருவகமாகியிருக்கின்றது.

சோசலிச சமத்துவக் கட்சி, லியோன் ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. ஜனநாயக உரிமைகள் மற்றும் கௌரவமான வாழ்க்கைத் தரத்துக்கான உழைக்கும் மக்களின் அபிலாஷைகள் எதையும் நிறைவேற்ற இலங்கை முதலாளித்துவத்தின் அப்பட்டமான இயலாமையின் மூலம் நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டின் உண்மை நிரூபணம் ஆகியுள்ளது. கிராமப்புற வெகுஜனங்களை அணிதிரட்டிக்கொள்வதன் மூலம், தொழிலாள வர்க்கத்தால் மட்டுமே சோசலிசத்துக்கான போராட்டத்தின் பாகமாக தீர்க்கப்படாத ஜனநாயக பணிகளை இட்டு நிரப்ப முடியும்.

சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் அதன் வேட்பாளர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் பின்வரும் கொள்கைகளுக்காக போராடுகின்றனர்:

* நாம் அனைத்து ஒடுக்குமுறை சட்டங்களுடன் நாட்டின் ஜனநாயக-விரோத மற்றும் இனவாத அரசியலமைப்பை ஒழிப்பதோடு சேர்த்து, மொத்த பாதுகாப்பு எந்திரமும் கலைக்கப்படுவதற்கு அழைப்பு விடுக்கின்றோம். ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்படும் ஒரு அரசியல் நிர்ணய சபை மூலம் ஒரு புதிய அரசியலமைப்பு வரையப்பட வேண்டும்.

* வேலையற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதிப்படுத்த நாம் எந்த ஊதிய இழப்பும் இன்றி, வேலை வாரத்தை 30 மணி நேரமாக குறைப்பதன் மூலம் வேலை வாய்ப்புகளை விரிவாக்க முன்மொழிகின்றோம். சிறந்த ஊதியத்துடனான தொழில்களை உருவாக்கவும் மற்றும் வீடமைப்பு, பாடசாலைகள், வைத்தியசாலைகள் மற்றும் வீதிகள் போன்ற அவசர பொதுமக்கள் தேவைகளை பூர்த்தி செய்யவும் ஒரு மகத்தான பொதுப் பணித் திட்டம் ஆரம்பிக்கப்பட வேண்டும்.

* முழு தொழிலாள வர்க்கத்தின் சம்பளம் மற்றும் நிலைமைகளை கீழறுக்கப் பயன்படுத்தப்படும் ஒப்பந்த தொழிலாளர் முறை ஒழித்துக்கட்டப்பட வேண்டும். நல்ல ஊதியத்துடனான தொழில்களைச் செய்யும் உரிமை அனைத்து தொழிலாளர்களுக்கும் இருக்க வேண்டும். வாழ்க்கைச் செலவுக்கேற்ப சம்பளம் உடனடியாக உயர்த்தப்படுவதோடு, பின்னர் பணவீக்கத்திற்கு ஏற்ப அதிகரிக்கப்பட வேண்டும்.

* அனைவருக்கும் இலவசமாக கல்வி, சுகாதார பராமரிப்பு விரிவாக்கப்படுவதற்கும் உயர் தரமான சேவைகள் கிடைக்க செய்யவும் கோடிக்கணக்கான ரூபாய்கள் செலவிட சோ... அழைப்பு விடுக்கின்றது. மலிவு விலையில் ஒழுக்கமான குடியிருப்புக்களை வழங்க பொது வீட்டு வசதிகள் பெரிதும் விரிவாக்கப்பட வேண்டும்.

* நாம் இன பாரபட்சமின்றி நிலமற்ற விவசாயிகளுக்கு அரச காணிகள் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என பரிந்துரைக்கின்றோம். அனைத்து ஏழை விவசாயிகள் மற்றும் மீனவர்களின் கடன்கள் உடனடியாக இரத்து செய்யப்பட்டு மலிவு கடன், தொழில்நுட்ப ஆலோசனை மற்றும் பிற உதவிகளும் கிடைக்கச் செய்ய வேண்டும். அவர்களது உற்பத்திப் பொருட்களுக்கான விலை, ஒரு கண்ணியமான வாழ்க்கைத் தரத்தை உறுதி செய்யும் வகையில் உத்தரவாதம் செய்யப்பட வேண்டும்.

மேற் கூறப்பட்ட கொள்கைகள், பிரமாண்டமான கூட்டுத்தாபனங்கள் மற்றும் வங்கிகளின் பொருளாதார மேலாதிக்கத்துடன் ஒத்துப் போகக் கூடியவை அல்ல. கூட்டுத்தாபனங்களும் வங்கிகளும் உழைக்கும் மக்களின் ஜனநாயக கட்டுப்பாட்டின் கீழ் தேசியமயமாக்கப்பட வேண்டும். வெளிநாட்டுக் கடன்கள் நிராகரிக்கப்பட வேண்டும். சமுதாயமானது சிறிய அதி-செல்வந்த தட்டின் இலாபத்துக்காக அன்றி, பெரும்பான்மை மக்களின் அவசர தேவைகளை பூர்த்தி செய்வதன் பேரில் சோசலிச வழிகளில் மேல் இருந்து கீழ் வரை மறு ஒழுங்கு செய்யப்பட வேண்டும்.

எமது அரசியல் பிரச்சாரத்துக்கு ஆதரவளிக்குமாறு தொழிலாளர்கள், கிராமப்புற ஏழைகள், இளைஞர்கள் மற்றும் புத்திஜீவிகளுக்கும் நாம் அழைப்பு விடுக்கின்றோம். எமது பிரச்சாரங்களில் இணைந்துகொள்வதோடு கூட்டங்களுக்கு வருகைதருவதுடன் மற்றும் எமது கட்சியின் தேர்தல் நிதிக்கு ஆகக் கூடிய நிதியுதவி வழங்குங்கள். கொழும்பு, யாழ்ப்பாணம் மற்றும் நுவரேலியா மாவட்டங்களில் சோசலிச சமத்துவக் கட்சிக்கு வாக்களியுங்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, எமது அரசியல் முன்னோக்கு மற்றும் வேலைத்திட்டத்தை கவனமாக படிக்குமாறும், சோசலிச சமத்துவக் கட்சியில் இணைந்து அதை தொழிலாள வர்க்கத்தின் ஒரு வெகுஜன புரட்சிகர கட்சியாக உருவாக்க விண்ணப்பிக்குமாறும் வேண்டுகோள் விடுக்கின்றோம்.