சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

New defeat for ruling Socialist Party in French regional elections

பிரெஞ்சு பிராந்திய தேர்தல்களில் ஆளும் சோசலிஸ்ட் கட்சிக்கு புதிய தோல்வி

By Kumaran Ira
14 December 2015

Use this version to printSend feedback

டிசம்பர் 6 முதல் சுற்று தேர்தல்களைக் காட்டிலும் அதிக வாக்குபதிவு இருந்ததற்கு இடையே, ஞாயிறன்று நடந்த பிராந்திய தேர்தல்களின் இறுதி சுற்றில் சோசலிஸ்ட் கட்சி (PS) ஒரு புதிய தோல்வியைத் தழுவியது. இரண்டு அல்லது மூன்று அல்லது அதற்கு மேலதிகமான பிராந்தியங்களைக் கூட வெல்லும் என நம்பப்பட்ட நவ-பாசிசவாத தேசிய முன்னணி (FN) ஒரு பிராந்தியத்திலும் வெற்றி பெறவில்லை.

முதல் சுற்றில் வாக்குப்பதிவை புறக்கணித்த 50 சதவீதத்தினருடன் ஒப்பிடுகையில், அது இச்சுற்றில் 42 சதவீதமாக இருந்தது. Nord-Pas de Calais-Picardie மற்றும் Provence-Alpes-Côte d’Azur போன்ற தேசிய முன்னணி வெற்றி பெற நின்ற பிராந்தியங்களில் வாக்காளர் பங்களிப்பு பலமாக இருந்தது. கணிசமான எண்ணிக்கையிலான வாக்காளர்கள், முதல் சுற்றில் பரந்த வாக்காளர் ஆதரவைப் பெற்று பிரான்சின் 13 பிராந்தியங்களில் ஆறில் முன்னணி பெற்றிருந்த தேசிய முன்னணிக்கு எதிராக வாக்களிக்கத் திரும்பினர். தேசிய முன்னணி நேற்றைய இரண்டாம் சுற்று போட்டியில் சகல பிராந்தியங்களிலும் போட்டியிட்டது.

ஆரம்ப மதிப்பீடுகளின்படி, சோசலிஸ்ட் கட்சி ஐந்து பிராந்தியங்களை வென்றது: Bretagne, Aquitaine-Limousin-Poitou-Charentes Languedoc-Roussillon-Midi-Pyrénées, Bourgogne-Franche-Comté மற்றும் Centre-Val de Loire. வலதுசாரி குடியரசு கட்சி (LR) ஏழு பிராந்தியங்களை வென்றது: Ile-de-France, Nord-Pas-de-Calais-Picardie, Provence-Alpes-Côte d’Azur, Alsace-Champagne-Ardenne-Lorraine, Auvergne-Rhône-Alpes, Normandie மற்றும் Pays de la Loire. ஒரு கோர்சிகன் தேசியவாத வேட்பாளர்கள் கோர்சிகாவில் (Corsica) வெற்றி பெற்றனர்.

தேசிய முன்னணி எந்த பிராந்தியத்திலும் வெற்றி பெறவில்லை என்றாலும், அது முதல் மற்றும் இரண்டாவது சுற்றில் குறிப்பிடத்தக்க சாதனைகளை ஈட்டியது. ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்ட் இன் சோசலிஸ்ட் கட்சி நடைமுறைப்படுத்தி வரும் பிற்போக்குத்தனமான கொள்கைகளிலிருந்து நேரடியாக ஆதாயமடைந்து, இப்போது அது, பிரதான முதலாளித்துவ அரசியலில் ஒரு மத்திய சக்தியாக எழுச்சி அடைந்துள்ளது. அது, 2017 இளவேனிலில் நடக்கவுள்ள ஜனாதிபதி தேர்தல்களில் பலமான வெளிப்பாட்டை காட்டக்கூடிய நிலையில், அல்லது வெற்றி அடையக்கூடிய சாத்தியமான நிலையில் உள்ளது.

வாக்குகள் இன்னமும் எண்ணப்பட்டு வருகின்ற நிலையில், Libération பின்வருமாறு கருத்துரைத்தது, “இன்னும் 10 சதவீத வாக்குகளே எண்ண வேண்டிய நிலையில், 2012 ஜனாதிபதி தேர்தல்களின் முதல் சுற்றில் மரீன் லு பென் பெற்ற வாக்குகளைக் காட்டிலும், தேசிய முன்னணி இந்த இரண்டாவது சுற்றில் ஏற்கனவே அதிக வாக்குகளை வென்றுள்ளது. லு பென்னின் கட்சி ஒரு தேர்தலில் இந்தளவிற்கு அதிக வாக்குகளை ஒருபோதும் வென்றதில்லை.”

முதல் சுற்றில் சோசலிஸ்ட் கட்சி பேரழிவுகரமான பின்னடைவைச் சந்தித்ததும், தேசிய முன்னணியின் வளர்ச்சியைத் தடுப்பதற்காக மற்றும் "குடியரசு மதிப்புகளைக்" காப்பதற்காக என்ற வெளிவேஷத்தில், அது மூன்றாம் இடத்தில் வந்த பிராந்தியங்களில் அதன் வாக்காளர்களைக் குடியரசுக் கட்சி (LR) வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு அழைப்புவிடுத்தது.

வடக்கு Nord-Pas-de-Calais-Picardie பிராந்தியத்தில், சோசலிஸ்ட் கட்சி FN தலைவர் மரீன் லு பென் க்கு எதிராக LR வேட்பாளர் சேவியே பெத்ரோனுக்கு (Xavier Bertrand) க்கு வாக்களிக்குமாறு அழைப்புவிடுத்தது, இவர் முதல் சுற்றில் 43 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தார். தெற்கு Provence-Alpes-Côte d’Azur பிராந்தியத்தில், சோசலிஸ்ட் கட்சி மரீன் லு பென்னின் அக்காள் மகளும், தேசிய முன்னணி வேட்பாளருமான மரியோன் மரிஷால்-லு பென் க்கு எதிராக LR வேட்பாளரும் மற்றும் நீஸின் வலதுசாரி மேயருமான கிற்ஸ்தியான் எஸ்துறோஸி (Christian Estrosi) ஐ ஆதரித்தது.

தேசிய முன்னணியின் வளர்ச்சியைத் தடுப்பதற்காக மற்றும் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக என்ற போர்வையில், குடியரசு கட்சியுடன் சேர்ந்து "குடியரசு முன்னணியை" உருவாக்குவதற்கான ஸ்ராலினிச பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி (PCF) போன்ற அதன் துணைக்கட்சிகளது மற்றும் சோசலிஸ்ட் கட்சியினது முயற்சிகள், ஓர் எரிச்சலூட்டும் மோசடியாகும். இத்தகைய சக்திகளும், மற்றும் ஒட்டுமொத்த ஆளும் வர்க்கமும், போர், முஸ்லீம்-விரோத நடவடிக்கைகள், சிக்கன திட்டங்கள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள் என அவற்றின் நிரந்தரமான ஊக்குவிப்பின் மூலமாக தேசிய முன்னணியின் அரசியல் நிகழ்ச்சிநிரலை சட்டபூர்வமாக்குவதற்கு கூடி இயங்கி வருகின்றன.

வெள்ளியன்று, பிரதம மந்திரி மானுவெல் வால்ஸ் தேசிய முன்னணியை தடுப்பதற்கு மீண்டும் அழைப்புவிடுத்தார். அவர் அறிவித்தார், “நாம் ஒரு வரலாற்று தருணத்தில் உள்ளோம். இங்கே இரண்டே வாய்ப்புகள் தான் உள்ளன: ஒன்று, பிளவுகளை ஊக்குவித்து ஓர் உள்நாட்டு போரைத் தோற்றுவிக்கும் தீவிர வலது, மற்றது, குடியரசும் அதன் மதிப்புகளும். தேசிய முன்னணி ஒரு யூத-எதிர்ப்பு, இனவாத கட்சியாகும், அது குடியரசை விரும்பவில்லை என்பதோடு பிரெஞ்சு மக்களை முட்டாளாக்கி வருகிறது.”

வால்ஸ் இன் கருத்து ஓர் எரிச்சலூட்டும் அரசியல் மழுப்பலாகும். தேசிய முன்னணியின் பிரதிநிதிகள் ஐயத்திற்கிடமின்றி ஆழ்ந்த தொழிலாள வர்க்க விரோத நிலைப்பாட்டை மற்றும் ஜனநாயக-விரோத பாரம்பரியத்தை —அதாவது நாஜி ஒத்துழைப்புவாத விச்சி ஆட்சி, இனப்படுகொலை மறுப்பு, மற்றும் போர் ஆதரவை நியாயப்படுத்துகிறார்கள் என்றாலும், தொழிலாள வர்க்கம் பிரதான முதலாளித்துவ கட்சிகளிடமிருந்து, அனைத்திற்கும் முதலாவதாக சோசலிஸ்ட் கட்சியிடமிருந்து உடனடியான அபாயத்தை முகங்கொடுக்கிறது. வால்ஸின் சொந்த அரசாங்கமே, பிரான்ஸை ஒரு ஜனாதிபதி சர்வாதிகாரமாக மாற்றும் ஒரு நிரந்தர அவசரகால நெருக்கடி நிலையைக் கொண்டு வர சூளுரைத்து, அடிப்படை ஜனநாயக உரிமைகளை உதறித்தள்ளுகிறது.

பாரிஸில் 130 பேர் கொல்லப்பட்ட நவம்பர் 13 பயங்கரவாத தாக்குதல்களுக்குப் பின்னர் வெறும் ஒரு மாதத்தில் இந்த பிராந்திய தேர்தல்கள் வந்தன. அச்சம்பவத்தை அடுத்து, சோசலிஸ்ட் கட்சி அடிப்படை ஜனநாயக உரிமைகளை நீக்கும் அதன் உள்நோக்கத்தை அறிவித்தது. போராட்டங்களுக்குத் தடைவிதிக்க மற்றும் ஒடுக்க, எதேச்சதிகார தேடல்கள் மற்றும் பறிமுதல்களைச் செய்ய மற்றும் பொது ஒழுங்கிற்கு சாத்தியமான அச்சுறுத்தல் என்று பொலிஸ் குற்றஞ்சாட்டும் எவரொருவரையும் விசாரணையின்றி வீட்டுக்காவலில் வைக்க சோசலிஸ்ட் கட்சியை அனுமதிக்கும் அவசரகால நெருக்கடி நிலையை அக்கட்சி மூன்று மாதங்களுக்கு நடைமுறைப்படுத்தி உள்ளது. இத்தகைய அவசரகால அதிகாரங்களை ஜனாதிபதி காலவரையின்றி நடைமுறைப்படுத்த அனுமதிக்கும் வகையில், அரசியலமைப்பில் திருத்தம் செய்யவும் சோசலிஸ்ட் கட்சி நோக்கம் கொண்டுள்ளது.

புதிய முதலாளித்துவ-எதிர்ப்பு கட்சி போன்ற போலி-இடது கூட்டாளிகள் மற்றும் தொழிற்சங்கங்களின் ஆதரவுடன், சோசலிஸ்ட் கட்சி 2012 இல் அதிகாரத்திற்கு வந்ததிலிருந்து நடைமுறைப்படுத்தி வந்துள்ள கடுமையான சிக்கனத் திட்ட கொள்கைகள் மற்றும் போர் தீவிரப்பாடு ஆகியவற்றுடன், இந்த அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள் இணைந்துள்ளது.

சோசலிஸ்ட் கட்சியின் போலி-இடது கூட்டாளிகளும் தொழிற்சங்கங்களும் தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பை ஒடுக்குவதை மற்றும் பொலிஸ்-அரசு நடவடிக்கைகளை ஆதரிக்கின்ற நிலையில், இடதிலிருந்து சோசலிஸ்ட் கட்சிக்கு ஒழுங்கமைந்த-எதிர்ப்பு இல்லாதிருப்பதால், நவம்பர் 13 பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர் சோசலிஸ்ட் கட்சி நடைமுறைப்படுத்தி உள்ள பொலிஸ்-அரசு நடவடிக்கைகளிலிருந்து முக்கியமாக ஆதாயமடைந்து மேலெழுந்திருப்பது தேசிய முன்னணி ஆகும். அது PS மற்றும் LR மீதான பாரிய ஏமாற்றத்தையும் சுரண்டி வருகிறது.

தேசிய முன்னணி தலைவர் மரீன் லு பென், அதன் பிராந்திய கவுன்சிலர்களின் எண்ணிக்கை மூன்று மடங்காகி இருப்பதைப் பெருமைபீற்றி, PS இன் தோல்வியில் தேசிய முன்னணியினது திறமையைச் சுட்டிக்காட்டினார், “பெரும்பாலான பிராந்திய கவுன்சில்களில் தேசிய முன்னணி முன்னணி எதிர்கட்சியாக இருக்கும்,” என்றார்.

வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து, அப்பெண்மணி கூறினார், “சபாஷ், அருமை நண்பர்களே, குடியரசின் பொன்முலாம் பூசிய மாளிகைகளில் முடிவெடுக்கப்படும் நாகரீகமற்ற முழக்கங்கள், பழி மற்றும் அவதூறு பிரச்சாரங்களிலிருந்து உங்களை நீங்களே விடுவித்துக் கொண்டுள்ளீர்கள்.” “குறிப்பாக கொடுமைப்படுத்தும் உள்ளாட்சி சோசலிஸ்ட் கட்சி எந்திரத்தை வேரூடன் களைந்ததை" வரவேற்ற அப்பெண்மணி, “ஒர் தேர்தல் மாற்றி ஒரு தேர்தலில், தேசியவாத போக்குகளின் தளராத மேலெழுச்சியை" குறிப்பிட்டுக் காட்டினார்.

இரண்டாம் சுற்றை ஒரு வெற்றியாக பாராட்டிக் கொண்ட போதினும், PS மற்றும் LR இரண்டும் தேசிய முன்னணியின் உயர்வை அவை தவிர்க்கவியலாததாக பார்ப்பதாக அறிவித்தன.

வால்ஸ் தெரிவித்தார், “இன்றிரவு அங்கே நிம்மதி, வெற்றி பரவசம், அல்லது வெற்றி உரை இருக்காது. தீவிர-வலது அபாயம் முடிந்துவிடவில்லை, இன்னும் வெகுதொலைவில் உள்ளது. நான் முதல் சுற்று தேர்தல் முடிவுகளையோ அல்லது முந்தைய தேர்தல்களையோ மறந்துவிடவில்லை.”

குடியரசு கட்சி தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான நிக்கோலா சார்க்கோசி அறிவிக்கையில், “இரண்டாம் சுற்றில் நமது வேட்பாளர்களுக்கு ஆதரவான ஒன்றுதிரள்வானது, எல்லா அரசியல் நிர்வாகிகளுக்கும், நமக்கும் சேர்த்து, பிராந்திய தேர்தல்களின் முதல் சுற்றில் அனுப்பிய எச்சரிக்கையை மறக்கச் செய்துவிடவில்லை,” என்றார்.

முன்னாள் பிரதம மந்திரி அலன் யூப்பே, உத்தியோகபூர்வ கட்சிகள் மீது அதிகரித்துவரும் ஏமாற்றம் குறித்து அவரது கவலைகளை வெளியிட்டார். அவர் கூறுகையில், “நாம் இப்போது இத்தேர்தலில் இருந்து படிப்பினைகளை எடுக்க வேண்டும், அது அரசியல் கட்சிகள் மீது நமது சக பிரஜைகள் பலரிடையே அதிகரித்துவரும் அவநம்பிக்கையைக் காட்டுகிறது. நாம் வலதை நோக்கி நிறைய பிரச்சாரம் செய்துவிட்டோமா அல்லது போதுமானளவிற்கு செய்யவில்லையா, மத்திய நிலைப்பாட்டை நோக்கி நிறைய பிரச்சாரம் செய்துவிட்டோமா அல்லது போதுமானளவிற்கு செய்யவில்லையா என்று அறிந்து கொள்வதற்காக, நாம் இப்போது வார்த்தையளவில் விவாதம் நடத்திக் கொண்டிருக்கக்கூடாது,” என்றார்.

ஜூப்பே இன் பிரதான கவலை, PS மற்றும் LR இரண்டினது சிக்கனத் திட்டங்கள், போர்கள் மற்றும் பேரினவாத ஊக்குவிப்பின் விளைவாக ஏற்பட்டுள்ள தேசிய முன்னணியின் வளர்ச்சி அல்ல, மாறாக தொழிலாள வர்க்கத்தில் அதிகரித்துவரும் சமூக கோபமே அவரது கவலையாகும்.

போலி-இடது, அவர்களின் பங்கிற்கு, எரிச்சலூட்டும் பிதற்றல்களோடு இரண்டாம் சுற்று வாக்கெடுப்பிற்குப் பிரதிபலிப்பைக் காட்டின. அவை, இரண்டாம் சுற்றில் தேசிய முன்னணி வெல்வதைத் தடுக்க, எல்லா FN-விரோத வாக்காளர்களை FN-அல்லாத முன்னணி வேட்பாளர்களைச் சுற்றி ஐக்கியப்படுத்துவதற்கான "குடியரசு முன்னணி" என்றழைக்கப்பட்ட அழைப்பை வரவேற்றன. ஆனால், இக்கட்சிகள் அனைத்தும் சோசலிஸ்ட் கட்சியின் ஜனநாயக-விரோத மற்றும் பொலிஸ் அரசு நடவடிக்கைகளை வாய் திறக்காமல் மவுனமாக ஆதரிக்கின்றன.

இடது முன்னணி தலைவர் ஜோன்-லூக் மெலென்சோன் அறிவிக்கையில், “இன்றிரவு, ஒரு பேரழிவு மயிரிழையில் தடுக்கப்பட்டது. … மில்லியன் கணக்கான மக்கள் அவர்களது மிகவும் ஆழ்ந்த நம்பிக்கைகளுக்கு முரண்பட்டிருந்தாலும் வாக்குகளை வழங்கியதற்காக அவர்களுக்குத் நாம் நன்றி கூற வேண்டும்,” என்று தேசிய முன்னணியின் வெற்றிகளைத் தடுக்க LR வேட்பாளருக்கு வாக்களித்த PS வாக்காளர்களை வெளிப்படையாக சுட்டிக்காட்டும் வகையில் அறிவித்தார்.