சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The US terror scare

அமெரிக்க பயங்கரவாத பீதி

Patrick Martin
21 December 2015

Use this version to printSend feedback

டிசம்பர் 17 வாஷிங்டன் போஸ்டில் பிரசுரிக்கப்பட்ட ஒரு கருத்துரையில், கட்டுரையாளர் David Ignatius, அமெரிக்க இராணுவ-உளவுத்துறை எந்திரத்துடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்ட இவர், ஈராக் மற்றும் சிரியாவில் அமெரிக்க இராணுவ தலையீட்டுத் தீவிரப்பாட்டின் அளவு மற்றும் காலத்தைக் குறித்து அமெரிக்க ஆளும் வட்டத்துள் நடக்கும் விவாதத்தின் மீது கருத்துரைத்தார்.

கணிசமான எண்ணிக்கையில் அமெரிக்க தரைப்படை துருப்புகளை ISIS க்கு எதிராக அனுப்புவதற்கான அழைப்புகளை ஜனாதிபதி ஒபாமா இதுவரையில் நிராகரித்துள்ளார் என்று குறிப்பிட்ட பின்னர், Ignatius பின்வரும் முக்கிய கேள்வியை முன்வைக்கிறார்:

“எது ஒபாமாவின் மனதை மாற்றும், ஒரு பிரதான அமெரிக்க இராணுவ தலையீட்டை அவசியப்படுத்தும் வகையில் எது இஸ்லாமிய அரசுக்கு எதிரான போரை ஓர் உயிர்பிழைப்புக்கான நெருக்கடியாக அவரைக் கையாளச் செய்யும்? அனேகமாக அந்த தூண்டுதல், அமெரிக்காவின் வழமையான செயல்பாடுகளையே முடக்கத் தொடங்கி பொதுமக்களைப் பீதியூட்டும் அளவிலான பயங்கரவாத சம்பவத்தால் முடுக்கிவிடப்பட்ட ஒரு மிகப் பெரிய சம்பவமாக இருக்க வேண்டும் போலும். அத்தருணத்தில், ஒருவேளை ஒபாமா பத்து ஆயிரக் கணக்கான அமெரிக்க துருப்புகளுடன் மத்தியக் கிழக்கு குழப்பத்தில் உரிமையோடு தலையிடுவதைத் தவிர வேறு மாற்றீடு இல்லையென முடிவெடுக்கலாம்.”

இந்த கண்டுபிடிப்பு, ISIS (ஈராக் மற்றும் சிரியாவிற்கான இஸ்லாமிய அரசு) மீதான அமெரிக்க அரசியல்வாதிகள் மற்றும் பெருநிறுவன-கட்டுப்பாட்டிலான ஊடகங்களின் துடிப்பார்ந்த குற்றச்சாட்டுக்களை விட, நவம்பர் 13 பாரிஸ் தாக்குதல்கள் மற்றும் டிசம்பர் 2 சான் பெர்னார்டினொ படுகொலைகளின் அரசியல் முக்கியத்துவத்தை அதிகமாக விளக்குகின்றன.

ஈராக் மற்றும் சிரியாவில் அதன் வாய்ப்புகளைக் குறித்து அமெரிக்க ஆளும் உயரடுக்கு ஆழ்ந்து சிந்தித்து வருகையில், மத்தியக் கிழக்கில் விரிவடைந்துவரும் போருக்குப் பலமான உள்நாட்டு எதிர்ப்பு இருப்பதை அது நன்கறியும். பெரும் எண்ணிக்கையிலான தரைப்படை துருப்புகளைப் பிரயோகிப்பது உட்பட, ஒரு பெரிய விரிவாக்கத்தை மேற்கொள்வதானால், மக்களின் போர்-எதிர்ப்பு உணர்வைக் கடந்து செல்ல உரிய போலிக்காரணம் வேண்டியிருக்கும் என்பது வோல் ஸ்ட்ரீட், பெண்டகன் மற்றும் சிஐஏ க்கு நன்கு தெரியும். சான் பெர்னான்டினொ சம்பவத்தைத் தொடர்ந்து வந்த ஊடகப் பிரச்சாரப்புயல், இதை எவ்வாறு செய்வது என்பதற்கு ஒரு விதமான முன்னோட்டமாக சேவையாற்றியது.

சான் பெர்னார்டினோவில் 14 பேர் கொல்லப்பட்ட, கொடூரமான மற்றும் பயங்கரமான அச்சம்பவம், கடந்த சில ஆண்டுகளில் அமெரிக்க மக்கள் மீதான அதுபோன்ற டஜன் கணக்கான துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் அதுவும் ஒன்றாக இருந்தது, மேலும், அது, 2009 இல் மேஜர் நிடல் ஹாசன் படுகொலையில் ஈடுபட்ட டெக்சாஸ், Ft. Hood சம்பவத்தை அடுத்து, தாக்குதல்தாரிகள் வெளிப்படையாக இஸ்லாமிய தீவிரவாதத்தால் உந்தப்பட்டிருந்த இரண்டாவது சம்பவம் மட்டுமேயாகும். 9/11 தாக்குதல்களுக்குப் பிந்தைய காலத்தில், வெள்ளையின மேலாதிக்கச் சக்திகளும் கிறிஸ்துவ அடிப்படைவாத பயங்கரவாதிகளும் அமெரிக்க மக்கள் நிறைய பேரை இஸ்லாமிஸ்டுகளை விட அதிகமாக கொன்றுள்ளனர், ஆனால் அங்கே அதுபோன்ற வலதுசாரி வெறியர்களை அரசு ஒடுக்க வேண்டுமென்று கோரும் எந்த அரசியல் அல்லது ஊடகப் பிரச்சாரபுயலும் இருக்கவில்லை.

ஓர் அரசியல் நிகழ்ச்சிநிரலை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னேற்பாடாக, இணைய சேவைகளது குறியீட்டு (encryption) முறைகளை நீக்குதல், சகல சமூக ஊடக பதிவுகள் மீதும் பாரிய கண்காணிப்பு, நுழைவனுமதி சலுகைகளை நிறுத்துதல் மற்றும் ISIS க்கு எதிரான போர் என்ற பெயரில் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளைத் துரிதமாக தீவிரப்படுத்துதல் ஆகிய கோரிக்கைகளோடு, சான் பெர்னார்டினொ சம்பவம் தயாரிப்பு செய்வதற்காக கைப்பற்றப்பட்டிருந்தது. இந்த இரண்டு கொலைகாரர்கள், கணவனும் மனைவியும், குறியீட்டு முறை தகவல்தொடர்புகளைப் பிரயோகித்து அவர்களது தாக்குதலைத் தயாரிப்பு செய்திருக்கவில்லை, (ஊடகங்கள் குறிப்பிடுவதைப் போலில்லாமல்) அவர்கள் சமூக ஊடகங்களில் அவர்களது பயங்கரவாத நோக்கங்களை அறிவித்திருக்கவில்லை, நுழைவனுமதி சலுகைத் திட்டங்களைப் பயன்படுத்தி இருக்கவில்லை, அனைத்திற்கும் மேலாக ISIS உடன் நேரடி தொடர்பில் அவர்கள் கிடையவே கிடையாது என்ற உண்மைக்கு இடையிலும் இந்த கோரிக்கைகள் வைக்கப்படுகின்றன. ISIS ஓர் அமைப்பாக தற்போதைய வடிவம் எடுப்பதற்கு முன்னரே சையத் பரூக் வெளிப்படையாக தீவிரமயப்பட்டிருந்தார்.

ஓர் ஆழ்ந்த மற்றும் சுதந்திரமான விசாரணையின் விடயமாக கூட 9/11 பயங்கரவாத தாக்குதல்கள் ஒருபோதும் இருக்கவில்லை என்பதுடன், இதுவரையில் புதிராக உள்ள அதன் தோற்றுவாய்களிலிருந்து தொடங்கி, இது கடந்த 15 ஆண்டு காலமாக மீண்டும் மீண்டும் நடந்துவரும் ஒரு நடைமுறையாகி உள்ளது. நடக்கின்ற பயங்கரவாத தாக்குதல்களை, சிஐஏ மற்றும் ஏனைய ஏகாதிபத்திய உளவுத்துறை அமைப்புகளுடன் நீண்டகாலமாக தொடர்பில் உள்ள நிழலுலக இஸ்லாமிய அமைப்புகள் மீதே சாட்ட வேண்டியுள்ளது. (சான்றாக, அல் கொய்தா, 1980 களில் ஆப்கானிஸ்தானில் சோவியத்-ஆதரவிலான ஆட்சிக்கு எதிராக அமெரிக்க ஆதரவிலான கொரில்லா போரிலிருந்து வளர்ந்தது)

ஏகாதிபத்திய சக்திகள் நீண்டகாலமாக திட்டமிட்டிருந்த மற்றும் அவற்றின் சூறையாடும் போர்களைத் தொடங்குவதற்கு ஒரு பொருத்தமான போலிக்காரணம் மட்டுமே அவசியமாக இருந்த நிலையில், இத்தாக்குதல்கள் சாக்குபோக்காக மாறியுள்ளன. இவ்விதத்தில் 9/11 சம்பவம், 2001 இல் ஆப்கானிஸ்தானிலும் மற்றும் 2003 இல் ஈராக்கிலும் அமெரிக்க படையெடுப்புகளுக்கு ஆரம்ப களமாக மாறியது. பாரிஸ் தாக்குதல்கள், சிரியாவில் குண்டுவீசுவதற்குப் பிரெஞ்சு விமானந்தாங்கி போர்க்கப்பலைக் கொண்டு வந்தது, அத்துடன் பிரிட்டிஷ் குண்டுவீசிகளின் பங்குபற்றுதலும் மற்றும் கணிசமான ஜேர்மன் துருப்புகளது நிலைநிறுத்தலும் சேர்ந்துள்ளன.

அன்னிய நாடுகள் மீதான போர், தவிர்க்கவியலாமல், "பயங்கரவாதத்திற்கு" எதிராக சண்டையிட என்ற பெயரில் பொலிஸ்-இராணுவ ஒன்றுதிரட்டுதலுடன் உள்நாட்டு ஒடுக்குமுறையுடன் சேர்ந்துள்ளது, உள்நாட்டில் போர் எதிர்ப்புணர்வையும் மற்றும் ஆழமடைந்துவரும் உலக முதலாளித்துவ நெருக்கடியால் கோரப்படும் சிக்கனத் திட்டங்களுக்கு தொழிலாள வர்க்க எதிர்ப்பையும் ஒடுக்குவதே இதன் நிஜமான நோக்கமாகும். இவ்விதமாக தான் பாரிஸ் தாக்குதல்களைத் தொடர்ந்து பிரெஞ்சு அரசாங்கத்தால் ஒரு மூர்க்கமான ஒடுக்குமுறை நடத்தப்பட்டது. அதற்கு முதன்முதலில் பலியானவர்கள், இம்மாத தொடக்கத்தில் காலநிலை உச்சிமாநாட்டிற்கு வெளியே போராடிய சுற்றுச்சூழல் போராட்டக்காரர்கள் ஆவர்.

டிசம்பர் 15 இல் பதிப்பாசிரியர்கள் மற்றும் கட்டுரையாளர்களின் ஒரு குழுவுடன் வெள்ளை மாளிகையில் மூடிய கதவுகளுக்குப் பின்னால் நடந்த ஒரு கூட்டத்தில் பங்குபற்றியிருந்த Ignatius கருத்துப்படி, சிரியாவில் ஒரு முழு-அளவிலான அமெரிக்க போருக்கு சான் பெர்னார்டினோ சம்பவம் போதுமான உரிய காரணத்தை வழங்குவதாக ஒபாமா நிர்வாகம் காணவில்லை. அதைவிட பெரிய ஒன்று அவசியப்படுகிறது.

இதையொரு எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும். நடப்பிலுள்ள பயங்கரவாத திட்டத்தைத் தொந்தரவின்றி முன்னோக்கி எடுத்துச் செல்ல அனுமதிப்பதன் மூலமாகவோமிக வெளிப்படையாக 9/11 தாக்குதல் விடயத்தைப் போலஅல்லது ஒரு மோசடி அடையாளத்தின் கீழ் அதுபோன்றவொரு ஒரு நடவடிக்கையை நேரடியாக ஒழுங்கமைப்பதன் மூலமாகவோ, அதுபோன்ற சம்பவங்களை உருவாக்க தேவையான அனுபவமும் மற்றும் ஈவிரக்கமற்றத்தன்மையும் கொண்டவர்கள் பலம்வாய்ந்த பரந்த அமெரிக்க உளவுப்பிரிவு எந்திரத்தில் உள்ளனர். அவர்கள் பாரிஸ் மற்றும் சான் பெர்னார்டினொ தாக்குதல்கள் போன்ற சம்பவங்களை, மிகக் குறைந்தபட்சம், ஓர் அரசியல் வரப்பிரசாதமாக கருதுகிறார்கள்.

ஆப்கானிஸ்தானில் கார்டர் நிர்வாகத்தினது சோவியத்-விரோத தலையீட்டில் ஒரு முக்கிய பாத்திரம் வகித்த முன்னாள் பாதுகாப்புத்துறை ஆலோசகர் ஜ்பிக்னீவ் பிரிஜேஜென்ஸ்கி இன் வார்த்தைகளை நினைவுகூர்வது சரியான அறிவூட்டலாக இருக்கும். 9/11 சம்பவத்திற்கு வெறும் நான்காண்டுகளுக்கு முன்னர் பிரசுரிக்கப்பட்ட பிரமாண்ட சதுரங்கப் பலகை (The Grand Chessboard) என்ற அவரது நூல், அமெரிக்க ஏகாதிபத்திய வெளியுறவு கொள்கை குறித்து பின்வருமாறு குறிப்பிட்டது:

அமெரிக்கா வெளிநாட்டில் ஏதேச்சதிகாரமாக இருந்தாலும் உள்நாட்டில் மிகவும் ஜனநாயகமாக இருக்கிறது என்பதும் ஓர் உண்மை தான். இது அமெரிக்காவின் அதிகார பிரயோகத்தை, குறிப்பாக இராணுவ பீதியூட்டலுக்கான அதன் தகைமையை மட்டுப்படுத்துகிறது. ஒரு ஜனரஞ்சக ஜனநாயகம் இதற்கு முன்னர் ஒருபோதும் சர்வதேச மேலாதிக்கத்தை அடைந்ததில்லை. ஆனால் அதிகாரத்தைப் பின்தொடர்வதென்பது, உள்நாட்டு நல்வாழ்வு குறித்த பொதுமக்களின் உணர்வுக்குத் திடீர் அச்சுறுத்தலோ அல்லது சவாலோ முன்வைக்கப்படும் நிலைமைகளில் தவிர, மக்கள் உணர்வுக்காக வழிநடத்தப்படும் ஓர் இலக்கு அல்ல. [அழுத்தம் சேர்க்கப்பட்டது] பொருளாதார சுய-தடை (அதாவது, பாதுகாப்பு செலவுகள்) மற்றும் மனித தியாகம் (பாதிக்கப்படுபவர்கள், உத்தியோகப்பூர்வ சிப்பாய்களுமே கூட) ஆகிய செயல்பாடுகள், ஜனநாயக விருப்பங்களுக்குப் பொருந்தாமல் உள்ளன. ஜனநாயகம் ஏகாதிபத்திய அணித்திரள்வுக்கு இடைஞ்சலாக உள்ளது.

அதுபோன்றவொரு சம்பவம் ஏற்படுகையில், எந்த அமைப்பைப் பொறுப்பாக்குவது மற்றும் அமெரிக்க மக்களைப் "காப்பாற்ற" எந்த நாட்டின் மீது குண்டுவீசுவது அல்லது படையெடுப்பது என்பதில் ஊடகங்கள் வேகமாக ஒருமித்த கருத்தை எட்டிவிடும். மிகவும் நிச்சயமானது என்னவென்றால், நீண்டகாலமாக தயாரிக்கப்பட்ட ஒரு அவசரகால திட்டம் பழுத்து வருகிறது என்பது தான்.

இந்த யதார்த்தம், 2016 ஜனாதிபதி தேர்தலின் முற்றிலும் தந்திரமான மற்றும் ஒத்திகை குணாம்சத்தை எடுத்துக்காட்டுகிறது. தேர்தலுக்கு உதவும் வகையில் அல்லது ஒட்டுமொத்தமாக வாக்கெடுப்பையே இரத்து செய்யும் வகையில், ஒரு போரைத் தூண்டிவிடுவதற்காக, எந்நேரத்திலும் சான் பெர்னார்டினொ போன்றவொரு சம்பவம் அமெரிக்க பொது மக்கள் மீது ஒரு வெடிகுண்டைப் போல வீசப்படலாம். 2004 இல் ஒரு சாத்தியமான பயங்கரவாத தாக்குதலைச் சாக்காக பிரயோகித்து, ஜனாதிபதி தேர்தலையே ஒத்தி வைக்க அல்லது இரத்து செய்வதற்கான சாத்தியக்கூறு பகிரங்கமாக புஷ் நிர்வாகத்திற்குள் விவாதிக்கப்பட்டதை நினைவுக்கூர்வது மதிப்புடையதாக இருக்கும். (பார்க்கவும்: புஷ் நிர்வாகம் அமெரிக்கத் தேர்தலை இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கிறது)

குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சி ஜனாதிபதி வேட்பாளர்களின் கடந்த வார விவாதங்கள், மத்தியக் கிழக்கில் ஒரு புதிய ஏகாதிபத்திய போருக்கான இன்றியமையா அரசியல் விளக்கத்தின் மீது இருகட்சிக்கும் இடையே உடன்பாடு இருப்பதை எடுத்துக்காட்டியது. போலி-சோசலிஸ்ட் பெர்னி சாண்டர்ஸ் இல் தொடங்கி தாராளவாதி ராண்ட் பௌல் வரையில், சகல முதலாளித்துவ அரசியல்வாதிகளும், சான் பெர்னார்டினொ படுகொலைகளே இத்தேர்தலின் மத்திய பிரச்சினை என்றும், அமெரிக்க மக்கள் முற்றிலும் பயங்கரவாத ஆபத்தில் நிறைந்திருக்கிறார்கள் என்றும், அமெரிக்க அரசாங்கத்தின் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு நடவடிக்கை ஒவ்வொன்றும் இந்த கண்ணாடி வழியாகவே முடிவு செய்யப்பட வேண்டுமென்றும் ஊடக சொல்லாடல்களைக் கடைபிடித்தனர்.

சோசலிச சமத்துவக் கட்சி ஒட்டுமொத்தமாக இந்த அரசியல் கட்டமைப்பை நிராகரிக்கிறது. பயங்கரவாத-எதிர்ப்பு என்ற மூடிமறைப்பில் சரமாரியான போர்-ஆதரவு பிரச்சாரத்திற்கு இரையாக வேண்டாம் அல்லது ஏமாற வேண்டாமென நாங்கள் தொழிலாளர்களுக்கு அழைப்புவிடுக்கிறோம். நாம் ஏகாதிபத்திய போருக்கு எதிராக, அதிகரித்துவரும் அரசு ஒடுக்குமுறைக்கு எதிராக, மற்றும் சிக்கனத் திட்ட கொள்கைகளுக்கு எதிராக, வேலைகள் மற்றும் வாழ்க்கை நிலைமைகள் சீரழிக்கப்படுவதற்கு எதிராக மற்றும் இந்த போராட்டத்தை வழிநடத்தும் ஒரு சோசலிச மற்றும் சர்வதேச வேலைத்திட்டத்தை முன்னெடுக்க, தொழிலாள வர்க்கத்தைச் சுயாதீனமாக அரசியல்ரீதியில் ஒன்றுதிரட்ட போராடி வருகிறோம்.