சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : கிரீஸ்

Syriza capitulates to the European Union

சிரிசா ஐரோப்பிய ஒன்றியத்திடம் சரணடைகிறது

By Peter Schwarz
7 February 2015

Use this version to printSend feedback

பதவிக்கு வந்து வெறும் பத்து நாட்களுக்கு உள்ளேயே, புதிய கிரேக்க அரசாங்கத்தின் இடதுசாரி பாசாங்குத்தனங்கள் சீட்டுக்கட்டு வீட்டைப் போல சிதறி வருகின்றன.

கிரேக்க கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டுமென்ற அதன் கோரிக்கையை சிரிசா கைவிட்டுள்ளதுடன், அதன் சமூக வேலைத்திட்டத்தையும் தளர்த்திக் கொண்டுவிட்டது. அதற்கு பதிலாக பிரதம மந்திரி அலெக்சிஸ் சிப்ராஸூம் நிதி மந்திரி யானிஸ் வாரௌஃபாகிஸூம் ஐரோப்பிய அரசாங்கங்களும் வங்கிகளும் சிரிசாவைச் சார்ந்திருக்கலாம் என்பதற்கு உத்தரவாதமளிக்க, அதாவது வாரௌஃபாகிஸின் வார்த்தைகளில் கூறுவதானால், "எங்களுக்கு முன்னர் இருந்த அரசாங்கங்கள் செய்ய மறுத்த ஆழ்ந்த கிரேக்க அரசு சீர்திருத்தங்களை முன்னுக்குத் தள்ள" உத்தரவாதமளிப்பதற்காக, ஐரோப்பா முழுவதிலும் பயணித்து வருகின்றனர்.

இதுவரையில் சிரிசாவிடம் இருந்த திட்டத்தைப் பொறுத்த வரையில், கிரேக்க கடன்களைத் திருப்பி செலுத்துவதன் மீது மறுபேரம் செய்ய அது பல்வேறு ஐரோப்பிய தலைநகரங்களுக்கு இடையிலான போட்டிகளை பயன்படுத்தும் என்றிருந்தது. அதன்படி சிப்ராஸூம் வாரௌஃபாகிஸூம் பதவிக்கு வந்த முதல் நாட்களில் பிரெஞ்சு மற்றும் இத்தாலியர்களின் ஆதரவைப் பெற செலவிட்டனர், இவர்களே அவர்களது சொந்த நாட்டில் சிக்கன நடவடிக்கைகளைத் திணித்து வருகின்ற அதேவேளையில் பேர்லினிடமிருந்து தளர்வான கடன் மற்றும் மேலதிக நிதியியல் இடஒதுக்கீடு ஆகியவற்றைக் கோர உபாயங்கள் செய்து வந்தனர்.

அந்த சம்பவங்களின் போது, பாரீஸும் ரோமும் சிரிசா கிரேக்க கடன்களைத் திரும்ப செலுத்த வேண்டுமென வலியுறுத்தின. புதிய கிரேக்க அரசாங்கத்திற்கு வழங்கப்படும் விட்டுகொடுப்புகள், பிரான்ஸ் மற்றும் இத்தாலி உள்ளடங்கலாக தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பிற்கு நியாயபூர்வத்தன்மையை வழங்கிவிடுமென்றும், ஒட்டுமொத்த ஐரோப்பிய ஒன்றியத்தை ஸ்திரமின்மைக்குள் கொண்டு வந்துவிடுமென்றும் அவை அஞ்சின.

ஐரோப்பிய மத்திய வங்கியின் மீது வைத்திருந்த சிரிசாவின் நம்பிக்கைகளும் ஏமாற்றமாகி போனது. பிராங்க்பேர்டில் ECB தலைவர் மரியோ திராஹியை வரௌஃபாகிஸ் சந்தித்த பின்னர் வெகு விரைவிலேயே, அந்த மத்திய வங்கி கிரேக்க வங்கிகளுக்கு கடன் வழங்குவதற்கு உத்திரவாதமாக கிரேக்க அரசாங்க பத்திரங்களை இனியும் ஏற்க முடியாதென முடிவெடுத்தது. ECB இந்த கொள்கையை பேணி வந்தால், கிரேக்க வங்கிகளும் மற்றும் அரசாங்கமும் இந்த மாத இறுதிவாக்கில் திவாலாகிவிடும்.

அதைத்தொடர்ந்து ஜேர்மன் நிதி மந்திரி வொல்ஃப்காங் சொய்பிளைச் சந்திக்க சென்ற வாரௌஃபாகிஸின் விஜயம் ஒரு பொது அவமதிப்பாக இருந்தது. சிரிசாவின் தேர்தல் பிரச்சாரம், கிரீஸின் அவலத்திற்கு ஜேர்மனியால் கோரப்பட்ட சிக்கன நடவடிக்கைகளைக் குற்றங்கூறியது, ஆனால் சொய்பிள உடனான ஒரு கூட்டு பத்திரிகையாளர் கூட்டத்தில் வாரௌஃபாகிஸ் கூறுகையில், பேர்லின் அதற்கு பொறுப்பாகாது என்றும், அந்த நெருக்கடிக்கு கிரீஸை மட்டுமே குற்றஞ்சொல்ல வேண்டி இருக்குமென்றும் கூறினார்.

இத்தகைய அபிவிருத்திகள், சிரிசாவின் மற்றும் சர்வதேச அளவில் அதைப்போன்ற கட்சிகளின் வர்க்க குணாம்சத்தின் மீது வேண்டுமென்றே அவர்களது கண்களை மூடிக்கொண்டவர்கள் அல்லது புரிந்து கொள்ளாதவர்களுக்கு மட்டும் தான் ஆச்சரியமூட்டுவதாக இருக்கும். ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கன நடவடிக்கைகள் மற்றும் கட்டளைகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக அதற்கு வாக்களித்த அவர்களிடமிருந்து, சிரிசாவைப் பிரிக்கும் இடைவெளியை அத்தகைய அபிவிருத்திகள் உயர்த்திக் காட்டுகின்றன.

அவை சிரிசா மற்றும் அதன் முதாலளித்துவ-சார்பு அரசியலுக்கு எதிரான உலக சோசலிச வலைத் தளத்தின் எதிர்ப்பை மெய்பிப்பதுடன், சோசலிசத்திற்காக மற்றும் சிரிசா போன்ற சக்திகளுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்திற்காக, நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் சரியான போராட்டத்தை அடிக்கோடிடுகின்றன.

சிரிசா அதிகாரம் ஏற்பதற்கு முன்னரே, WSWS எச்சரித்தது: "'நம்பிக்கை' மற்றும் 'மாற்றம்' என்ற வாக்குறுதிகளோடு அதிகாரத்திற்கு வந்து, பின்னர் சிக்கன நடவடிக்கைகள் மற்றும் போர் கொள்கைகளைத் திணித்த அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் கீழ் ஜனநாயக கட்சி உட்பட பல கட்சிகளைப் போலவேஅதன் தோற்றுவாய், சமூக சேர்க்கை, மற்றும் அரசியலின்படி சிரிசாவும் ஒரு முதலாளித்துவ கட்சியாகும்," என்றது.

கம்யூனிஸ்ட் கட்சியின் யூரோ-கம்யூனிஸ்ட் பிரிவு மற்றும் பல்வேறு குட்டி-முதலாளித்துவ முன்னாள்-தீவிர குழுக்களிலிருந்து எழுந்த சிரிசா, சமூகத்தின் மிக மேல்மட்டத்தில் குவிந்த பரந்த செல்வ வள திரட்சியின் மீது பொறாமை கொண்ட, செல்வாக்கு மிகுந்த மத்தியதர வர்க்கத்தின் அடுக்குகளுக்காக பேசுகிறது. இதுவொரு சர்வதேச நடைமுறையாகும். கிரீஸில், பல மில்லியன்களைக் கொண்ட 600 மில்லியனர்கள் அந்த பொருளாதாரத்தை கட்டுப்படுத்துகின்றனர்.

சிரிசா ஐரோப்பிய ஒன்றியம் உட்பட முதலாளித்துவம் மற்றும் அதன் அமைப்புகளைத் தூக்கியெறிவதையோ, அவற்றை ஒரு சோசலிச சமூகத்தைக் கொண்டு பிரதியீடு செய்வதையோ நோக்கமாக கொண்டதில்லை. அது பிரதிநிதித்துவப்படுத்தும் மத்தியதர வர்க்க அடுக்குகள் அரசு அலுவலகங்களின் பிடியுடன் தனிச்சலுகைகளைப் பெறுவதற்கு வழிவகுக்க, மற்றும் முதலாளித்துவ சமூகத்தின் மேலே உள்ள 10 சதவீதத்திற்குள் ஏதோவிதத்தில் சமபங்குகளோடு செல்வ வளத்தை மறுபங்கீடு செய்ய, ஐரோப்பிய ஒன்றியத்தில் சீர்திருத்தம் செய்விப்பதே அதன் நோக்கமாகும். சமூகத்தின் பெரும் பெரும்பான்மையாக உள்ள தொழிலாள வர்க்கத்தின் முறையீடுகளுக்கு, அது முந்தைய அரசாங்கத்தைப் போலவே அதே விரோதத்தோடு எதிர்வினையாற்றும்.

இது தான், முன்னாள் ஆளும் கட்சியான புதிய ஜனநாயக கட்சியிலிருந்து ஒரு வலதுசாரி உடைவு கொண்ட, அதிதீவிர-தேசியவாத சுதந்திர கிரேக்கர்கள் கட்சியுடன் (ANEL) அது செய்து கொண்ட கூட்டணியின் முக்கியத்துவம் ஆகும். ANEL உடன் ஒரு கூட்டணி உருவாக்கும் சிரிசாவின் முடிவானது, புலம்பெயர்வு மீதான விரோதம் மற்றும் பேரினவாதத்திற்கு ஒரு விட்டுக்கொடுப்பாகும்.

அனைத்திற்கும் மேலாக, ANEL தலைவர் பேனொஸ் கமெனொஸைப் பாதுகாப்பு மந்திரியாக நியமித்தமை, கிரேக்க உள்நாட்டு போர் மற்றும் 1967-1974இல் இராணுவ தளபதிகளின் ஆட்சி உட்பட தொழிலாள வர்க்க எதிர்ப்பை இரத்தந்தோய்ந்த விதத்தில் ஒடுக்கிய வரலாறைக் கொண்ட இராணுவம் மற்றும் பொலிஸிற்கு, அவற்றின் பலம் கையிலெடுக்கப்படும் என்பது குறித்து வழங்கப்பட்ட ஒரு சமிக்ஞையாகும்.

கிரீஸின் சம்பவங்கள் ICFIக்கும் மற்றும் எண்ணிறைந்த போலி-இடது போக்குகளுக்கும் இடையிலான இணைக்கவியலாத இடைவெளியை அடிக்கோடுகிறது. WSWS பிரசுரித்து வரும் நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு மட்டுமே சிரிசா வகிக்கும் பாத்திரத்திற்கு எதிராக எச்சரிக்கை விடுத்து, தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான, சோசலிச முன்னோக்கிற்காக போராடி வந்தது.

இந்த வாரம், பிரிட்டிஷ் சோசலிஸ்ட் தொழிலாளர் கட்சியின் அலெக்ஸ் கலினிகோஸ் ஆர்ப்பரித்தார்: "புரட்சிகர சோசலிஸ்டுகள் புதிய அரசாங்கத்தின் வெற்றியைக் கொண்டாட வேண்டும், அது எடுக்கும் முற்போக்கான நடவடிக்கைகளை அவர்கள் ஆதரிக்க வேண்டும்."

பப்லோவாத ஐக்கிய செயலகத்தின் வலைத் தளம், International Viewpoint, "ஐரோப்பாவில் மாற்றத்திற்காக, கிரேக்க மக்களுடன்" என்ற ஓர் அறிக்கையைப் பிரசுரித்தது. அதில் பிரெஞ்சு புதிய முதலாளித்துவ-எதிர்ப்பு கட்சியின் பிரான்சுவா சபாடோ, ஜேர்மன் இடது கட்சியின் மைக்கேல் அகெலிடிஸ், டேனிஷ் Red-Green United List இன் மைக்கேல் வோஸ், இத்தாலியின் Rifondazione Comunista Gigi Malbarba மற்றும் Franco Turigliatto இன் முன்னாள் உறுப்பினர்கள், மற்றும் பிரிட்டிஷ் திரைப்பட இயக்குனர் கென் லோச் ஆகியோர் கையெழுத்திட்டிருந்தனர்.

அந்த அறிக்கை கிரேக்க தேர்தலை ஒரு "திருப்பு முனையாக" பாராட்டுவதுடன், சிரிசாவை "வீதிகளில் நடக்கும் போராட்டங்களுடன் தொடர்புபட்ட ஓர் அரசியல் சக்தியாகவும், மற்றும் அமைப்புகளில் அரசியல் மாற்றத்தைக் கொண்டு வர அது தயாராக இருப்பதாகவும்" பெருமைப்படுத்தியது.

இவர்கள் படிப்பினையைப் பெற மாட்டார்கள் ஏனென்றால் அவர்களும் சிரிசா நிலைநோக்கு கொண்டுள்ள அதே சமூக அடுக்குகள் மற்றும் தொழிலாள வர்க்க விரோதத்தைத்தான் பிரதிநிதித்துவம் செய்கின்றனர். அவர்கள் பிராங்க்பேர்ட் பள்ளி, இருத்தலியல் கொள்கை (existentialism) மற்றும் ஏனைய கருத்துவாத மற்றும் மார்க்சிச-விரோத போக்குகளின் விவாத உரைகளின் அடிப்படையில், உயர் மத்தியதர வர்க்கத்தின் நலன்களுக்கு மார்க்சிசத்தை மாற்றமைவு செய்ய பல தசாப்தங்களாக அதற்கு மறுவிளக்கமளிப்பதில் செலவிட்டுள்ளனர். வர்க்க போராட்டத்திற்குப் பதிலாக அவர்கள், பல்வேறு போராட்ட வடிவங்களையும் மற்றும் அடையாள அரசியலையும் அறிவுறுத்துகின்றனர் மற்றும், லிபியா சிரிசா போன்ற நாடுகளில், "மனிதாபிமான" தலையீடுகள் என்று விற்பனை செய்யப்பட்ட ஏகாதிபத்திய போர்களை ஆதரிக்கின்றனர்.

ஐரோப்பா எங்கிலும் ICFI இன் பிரிவுகளைக் கட்டமைப்பதும், சிரிசாவின் திவாலாகி போன, முதலாளித்துவ சார்பு அரசியலுக்கு தொழிலாள வர்க்கத்தின் ஓர் அரசியல் மாற்றீட்டை முன்னெடுப்பதும், ஓர் அதிஅவசர விடயமாகும். அதற்கு மார்க்சிச வரலாற்று மரபியத்திற்கான ஒரு திட்டமிட்ட போராட்டம் அவசியப்படுகிறது, குறிப்பாக, ஸ்ராலினிசம் மற்றும் சமூக ஜனநாயகத்திற்கு எதிராக, மற்றும் போலி-இடது போக்குகளின் முடமாக்கும் மற்றும் நிலைநோக்கை பிறழச்செய்யும் செல்வாக்கிற்கு எதிராக லியோன் ட்ரொட்ஸ்கி மற்றும் நான்காம் அகிலத்தால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் அவசியமாகும்.

ஒவ்வொரு இடத்திலும், தொழிலாளர்கள் ஆளும் வர்க்கம் மற்றும் அதன் அரசியல் பாதுகாவலர்களுடன் சமரசமற்ற மோதலுக்குள் நுழைந்து வருகின்றனர். சிரிசா அரசாங்கத்தின் அனுபவம் பெரும் அபாயங்களை முன்னிறுத்துவதோடு, தொழிலாள வர்க்கத்திற்கு வாய்ப்புகளையும் வழங்கும்.

சிரிசாவின் முதலாளித்துவ-சார்பு கொள்கைகளிலிருந்து விளையும் ஏமாற்றம் மற்றும் குழப்பம், கிரீஸில் நாஜி-சார்பு கோல்டன் டௌன் கட்சியின் எழுச்சியால் எடுத்துக்காட்டப்பட்டதைப் போல, போர் மற்றும் பாசிசத்திற்கு பாதையைத் திறந்து விட்டு, தொழிலாள வர்க்கத்திற்கு கசப்பான தோல்விகளைக் கொண்டு வர அச்சுறுத்துகின்றன. அதே நேரத்தில், சோசலிச புரட்சிக்கான புறநிலை நிலைமைகள் முதிர்ச்சி அடைந்து வருகின்றன.

தீர்க்கப்பட வேண்டிய அதிமுக்கிய பிரச்சினை, புரட்சிகர தலைமைக்கான நெருக்கடியாகும். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு, தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்காக, கிரீஸிலும் மற்றும் சர்வதேச அளவிலும் சோசலிசத்திற்கான தொழிலாள வர்க்கத்தின் ஓர் அரசியல்ரீதியாக நனவுபூர்வமான புரட்சிகர இயக்கத்தின் எழுச்சிக்கான அடித்தளத்தை அமைத்து, சிரிசாவின் திவால்நிலைமையின் அரசியல் படிப்பினைகளை வரைய போராடி வருகிறது.