சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பிய ஒன்றியம்

HSBC documents reveal criminal conspiracy of banks and governments

HSBC ஆவணங்கள், வங்கிகளதும் அரசாங்கங்களதும் குற்றவியல் சதியை வெளிப்படுத்துகின்றன

By Andre Damon
11 February 2015

Use this version to printSend feedback

ஐரோப்பாவின் மிகப்பெரும் வங்கியான HSBC இன் சுவிஸ் தனியார் வங்கிப் பிரிவு பல ஆண்டுகளாக ஒரு வரி ஏய்ப்பு மற்றும் பணமாற்று நிறுவனமாக இயங்கி வந்து என்பதை எடுத்துக் காட்டுகின்ற ஆவணக்கசிவுகள் மீதான தமது பகுப்பாய்வுகளை அடிப்படையாகக் கொண்ட கட்டுரைகளை ஞாயிறன்று கார்டியன் மற்றும் Le Monde ஆகிய சர்வதேச செய்தி ஊடகங்கள் புலனாய்வு பத்திரிகையாளர்களின் சர்வதேச மன்றத்தின் (ICIJ) உடன் சேர்ந்து வேலைசெய்து வெளியிட்டன.  

அந்நியச் செலாவணி மதிப்புகளில் நூறாயிரக்கணக்கான டாலர்களை ரொக்கமாக கொடுத்து வந்த அத்துடன் தனது வசதிபடைத்த வாடிக்கையாளர்களுக்கு வரி ஏய்ப்பில் ஈடுபடுவது குறித்த ஆலோசனைகளை வழங்கிவந்த ஒரு கிளையை இந்நிறுவனம் நடத்தி வந்திருந்தது என்று அந்தச் செய்திகள் தெரிவிக்கின்றன. 

இந்த உண்மைகள் எல்லாம் பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா உட்பட உலகெங்கும் இருக்கும் அரசாங்கங்கள் மற்றும் சர்வதேச நிதி கட்டுப்பாட்டாளர்களிடம் பலவருடங்களாக இருந்து வருபவையும், அவர்களால் திட்டமிட்டு மூடி மறைக்கப்பட்டு வந்திருப்பவையும் ஆகும். அந்த வங்கியும் சரி, அதன் அதிகாரிகளும் சரி, அல்லது அதன் வரி ஏய்ப்பு சேவைகளை பயன்படுத்திக் கொண்ட அதன் வாடிக்கையாளர்களும் சரி எவருமே குற்றவியல் விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை.   

HSBC ஒரு விதிவிலக்கு என்று யாரும் எண்ணிவிட வேண்டாம்; இதே நடைமுறைகளைத்தான் அத்தனை பெரிய சர்வதேச நிதி ஸ்தாபனங்களும் பின்பற்றி வருகின்றன என்பதில் சந்தேகமேயில்லை. ஒட்டுமொத்த முதலாளித்துவ அமைப்புமுறையிலும் அதனைப் பாதுகாத்து நிற்கும் அரசாங்கங்களிலும் வியாபித்திருக்கக் கூடிய ஊழல், குற்றவியல்தனம், கையூட்டு மற்றும் கூட்டுமோசடிகள் இவற்றின் ஒரு சாக்கடையை HSBC கோப்புகள் வெளிக்கொண்டு வந்திருக்கின்றன.

ஏறக்குறைய ஒவ்வொரு பெரிய நிதி ஸ்தாபனமுமே சிக்கியிருக்கக் கூடிய மோசடிகளின் ஒரு வரிசையில் HSBC கோப்புகள் வெளிக்கொண்டு வந்திருப்பவை சமீபத்தவை மட்டுமே. மோசடியான மறுஅடமான பிணைப் பத்திரங்கள் விற்பனை, சட்டவிரோதமான முன்கூட்டிய மூடல்கள், பண்டச்சந்தை மோசடி மற்றும் LIBOR மற்றும் சர்வதேச அந்நியச் செலாவணி நிர்ணய அளவீடுகளின் கைப்புரட்டல் ஆகியவை எல்லாம் இந்த வரிசையில் முன்னர் இடம்பெற்றிருந்தவை.

தனது பேராசையாலும் சட்டத்தை மதிக்காத தன்மையாலும் 2008 இல் உலகத்தை ஒரு நெருக்கடிக்குள் - அந்த நெருக்கடியில் இருந்து அது ஒருபோதும் மீண்டிருக்கவில்லை - அமிழ்த்திய நிறுவனங்களில் ஒன்றே HSBC. இந்த நெருக்கடி மில்லியன்கணக்கான மக்களை வேலையிழக்கச் செய்திருப்பதோடு உலகெங்கும் சிக்கன நடவடிக்கை அலை ஒன்றைத் தொடக்கி தொழிலாளர்களது ஊதியங்களும் சமூக நலன்களும் வெட்டப்படுவதில் பங்குபெற்றது.

HSBC இன் சேவைகளைப் பயன்படுத்தியோர் பட்டியலில் பெருநிறுவன நிர்வாகிகள், அமெரிக்க, பிரிட்டிஷ் மற்றும் ஆஸ்திரேலிய அரசியல் கட்சிகளுக்கு நிதி திரட்டுபவர்கள் மற்றும் நன்கொடையாளர்கள், மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட குறைந்தபட்சம் 17 நாடுகளில் இருந்தான அரசியல்வாதிகள் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த கறைபடிந்த பணத்தின் நிழல் முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன் வரையிலும் உயர்ந்து செல்கிறது. பிரிட்டிஷ் வணிக அதிபரான ரிச்சர்ட் கேரிங் - இவர் ஒருமுறை வங்கியில் இருந்து ஐந்து மில்லியனுக்கும் அதிகமான சுவிஸ் ஃபிராங்குகளை ரொக்கமாக எடுத்தவர் - 1 மில்லியன் அமெரிக்க டாலர் தொகையை தனது சுவிஸ் வங்கிக் கணக்கில் இருந்து கிளிண்டன் அறக்கட்டளைக்கு நன்கொடையளித்திருக்கிறார்.

அவர் தனது நன்கொடையை அளிப்பதற்கு முந்தைய மாதத்தில், ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்கில் Catherine the Greats Winter Palace இல் நடந்த ஒரு சாம்பெயின் மற்றும் கெவியார் பெருவிருந்திற்கு நிதியுதவி செய்திருந்தார் என்றும் அந்த பெருவிருந்தில் கலந்து கொண்ட 450 விருந்தினர்கள் மகிழ, சர் எல்டன் ஜோன் மற்றும் ரீனா ரேர்னரின் இசை நிகழ்ச்சி நடந்தது, பில் கிளிண்டன் அங்கு பேசினார் என்றும் ICIJ இன் அறிக்கை குறிப்பிடுகிறது.

லிபரல் கட்சியின் முக்கியமான நிதிதிரட்டுபவரும் ஆஸ்திரேலியாவின் மிகப்பெரும் நிதி நிறுவனங்களில் ஒன்றான ANZ வங்கியின் தலைவருமான சார்லஸ் பாரிங்டன் கூடே இந்த வங்கியில் மூன்று பத்தாண்டுகளாய் ஒரு போலிப் பெயரில் கணக்கு வைத்திருந்தார் என்பதையும் அது குறிப்பிடுகிறது.

"முறையான தொழிலதிபர்கள் மற்றும் உயர்நிலை அரசியல்வாதிகள் மட்டுமன்றி, போதைப்பொருள் மன்னர்கள், ஆயுதம் கடத்துபவர்கள் மற்றும் சட்டவிரோத இரத்த வைரங்களில் ஆள்கடத்துபவர்கள் ஆகியோரும் HSBC இன் சேவைகளைப் பயன்படுத்தி வந்திருந்தனர். அறிக்கைகளை ஆய்வுசெய்தால், குற்றவியல் நிழலுலகம் எங்கே முடிகிறது வங்கியாளர்கள் மற்றும் பெருநிறுவன தலைமை நிர்வாக அதிகாரிகள் மற்றும் அவர்களது மில்லியனர் அரசியல் முகப்பு மனிதர்கள் ஆகியோர் கொண்ட ஆளும் வர்க்கம் எங்கே தொடங்குகிறது என்பதைக் கண்டறிவதே சாத்தியமற்றதாக இருக்கிறது.

எந்த வங்கி அதிகாரிகளும் அல்லது வசதிபடைத்த பயனாளர்களும் தண்டிக்கப்பட்டு விடவில்லை என்பது மட்டுமல்ல, இந்த குற்றவியல் சகதியின் காரணமாக தீவிரமான சட்டப் பிரச்சினைகளை ஒருவர் எதிர்கொண்டிருக்கிறார் என்றால் அது அவற்றை அம்பலப்படுத்திய விழிப்பூட்டி மட்டும் தான்.

2009 இல், HSBC இன் Hervé Falciani என்ற பெயர் கொண்ட ஒரு தொழில்நுட்பப் பிரிவு ஊழியர், அதன் தனியார் வங்கியானது பெரும் வரி ஏய்ப்பு நடைமுறையை இயக்கிக் கொண்டிருப்பதை கண்ணுற நேர்ந்தபோது சுவிஸ் அதிகாரிகளுக்கு வழங்குவதற்கு தகவல்களை சேகரிக்கத் தொடங்க, அந்த அதிகாரிகளோ எந்த ஆர்வமும் காட்டவில்லை.

இதனையடுத்து அவர் சுமார் 130,000 பேரது வரி ஏய்ப்பை வெளிப்படுத்தும் கோப்புகளை பிரெஞ்சு போலிசின் பக்கமாய் திருப்ப, அவர்கள் அதனை பிரிட்டன் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட மற்ற அரசாங்கங்களுடன் பகிர்ந்து கொண்டனர். அதுமுதலாக Falciani சுவிட்சர்லாந்தின் வங்கி இரகசியச் சட்டங்களை மீறியதாகவும் துறை ஒற்றுவேலையில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டுகளுக்கு முகம் கொடுத்து வருகிறார்.

2010 ஆம் ஆண்டில், பிரான்சின் அப்போதைய நிதி அமைச்சரான கிறிஸ்டின் லகார்ட் வரி ஏய்ப்பில் சந்தேகப்படுபவர்களாக 2,000 பேர் கொண்டதொரு பட்டியலை கிரேக்க அரசாங்கத்திடம் வழங்க, அந்தப் பட்டியலானது அதனை அச்சிட்ட கிரேக்கப் பத்திரிகை வெளியீட்டாளர்களின் கைவசம் வந்தது. அதனையடுத்து அவர்கள் அந்தரங்க உரிமைச் சட்டங்களை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டு, பின் குற்றமற்றவர்களாய் விடுவிக்கப்பட்டனர்.

Falciani ஆல் சேகரிக்கப்பட்ட கோப்புகளில் ஒரு பகுதி சமீபத்தில் Le Monde இனால் பெறப்பட்டு ICIJ மற்றும் பிற செய்தித்தாள்களால் பகிர்ந்து கொள்ளப்பட்டது. கிட்டத்தட்ட 120 பில்லியன் டாலர் சொத்துக்கள் கொண்ட சுமார் 30,000 வங்கிக் கணக்கு விவரங்கள் இந்தக் கோப்புகளில் அடங்கியிருந்தன.

இங்கிலாந்தில் Falciani இன் கோப்புகளை அடிப்படையாகக் கொண்டு 3,000க்கும் அதிகமானோர் விசாரிக்கப்பட்டனர், ஆனாலும் அவர்களில் எவரொருவருக்கு எதிராகவும் அரசாங்கம் எந்தக் குற்றச்சாட்டையும் கொண்டுவரவில்லை.

மிகப்பெரும் மூடிமறைப்பு அமெரிக்காவில் நடந்தது. HSBC தனது வாடிக்கையாளர்கள் வரி ஏய்ப்பு செய்ய உதவியது என்பதற்கான ஆதாரம் அமெரிக்க அரசாங்கத்திடம் இருந்தது என்றஉண்மையை எங்குமே குறிப்பிடாமலேயே, மெக்சிகோவின் போதைப் பொருள் கும்பல்களுக்கு பணத்தை வெள்ளையாக்க உதவிய குற்றச்சாட்டுகள் விடயத்தில் 1.2 பில்லியன் டாலர் தள்ளிப்போன தண்டனைத் தொகைக்கு நீதித் துறை 2012 இல் ஒப்புக்கொண்டது.

HSBC உடனான தீர்வின் முன்னணி ஏற்பாட்டாளர்களில் ஒருவராய் இருந்த Loretta Lynch - இவர் அச்சமயத்தில் நியூயோர்க்கின் கிழக்கு மாவட்டத்துக்கான அமெரிக்க அட்டர்னியாக இருந்தவர் - இப்போது அட்டர்னி ஜெனரல் பதவியில் எரிக் ஹோல்டரின் இடத்தில் பிரதியீடு செய்யப்படுவதற்காக ஒபாமா நிர்வாகத்தினால் பரிந்துரைக்கப்படுகின்றவராவார். இந்தக் கோப்புகள் சுட்டிக் காட்டும் காலத்தில் HSBC இன் தலைமை நிர்வாகியாக இருந்த மகாகனம் பொருந்திய ஸ்டீபன் கிரீன் பிரபு அதற்கு பின்னர் வர்த்தகம் மற்றும் முதலீட்டிற்கான இங்கிலாந்தின் இணை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

பிரிட்டிஷ் ஆளும் வர்க்கத்தின் ஆயிரக்கணக்கிலான உறுப்பினர்கள் HSBC ஐ வரி ஏய்ப்புக்காக பயன்படுத்திய காலத்தில் ஆட்சியில் இருந்திருந்த பிரிட்டிஷ் தொழிற் கட்சியானது அறிவித்தது, 2010 ஆம் ஆண்டிலேயே இந்த நடப்புகள் குறித்து முழுமையாக [இங்கிலாந்தின் அதிகாரிகளுக்கு] தெரிந்திருக்கிறது ஆனாலும் அதற்குப் பின்னர் பெரிதாக ஒன்றும் செய்யப்பட்டிருக்கவில்லை என்பது தான் உண்மையாகவே அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது.

இந்த அம்பலங்கள் எல்லாம் அவை சித்திரப்படுத்தும் குற்றவியல்தனத்தின் அடிப்படை விடயத்தில் குறிப்பாக அதிர்ச்சியூட்டுவனவாக இருக்கின்றன. இந்த மனிதர்கள் எல்லாம் தொழிலாளர்களுக்கு வறுமை ஊதியங்களை சம்பளமாகக் கொடுத்தும், மூத்த குடிமக்களுக்கு ஓய்வூதியங்களை வெட்டியும் பொதுச் சொத்துகளை தனியார்மயமாக்கியும் ஏற்கனவே மில்லியன்கணக்கான டாலர்களை ஈட்டிக் கொண்டு தானே இருக்கிறார்கள்? அப்படியிருந்தும் கூட அவர்களுக்கு, இந்த ஆவணங்கள் விவரப்படுத்துவது போல, கத்தைகத்தைகளாய் பணத்தை சிலரது விடயங்களில் மில்லியன் கணக்கான டாலர்களின் அளவுக்கு கடத்த வேண்டியது அவசியமாக இருக்கிறதா என்ன?

உலகளாவிய நிதி உயரடுக்கைப் பொறுத்தவரை, முறையான வர்த்தக நடவடிக்கை மற்றும் அரசியல் நன்கொடைகள் கொண்ட ஒரு பக்கத்திற்கும் மோசடி, திருட்டு, இலஞ்சம் ஆகியவை கொண்ட இன்னொரு பக்கத்திற்கும் பிரிப்புக் கோடு கிடையாது. சட்டத்தை ஒரு சின்ன இடைஞ்சலாகக் காணும் திருடர்களாலும் குற்றவாளிகளாலும் தான் முதலாளித்துவ சமூகம் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. Leona Helmsley இன் அழியாத வார்த்தைகளால் சொல்வதென்றால், அற்பமான மனிதர்கள் தான் வரிகள் செலுத்தவேண்டும்.

இந்த ஆவணங்கள் அம்பலப்படுத்துகின்ற சமூக ஒழுங்கு சீர்திருத்தப்பட்டு விட முடியும் என்று இன்னும் கூட நம்பக் கூடியவர்களைப் பார்த்து நாம் கேட்பதெல்லாம், எங்கேயிருந்து ஆரம்பிப்பீர்கள்? என்பது தான். நிதிக் குற்றவாளிகளிடம் இருந்தான அரசியல் நன்கொடைகள் மூலம் விலைக்கு வாங்கப்பட்டவர்களாக இருக்கின்ற அரசியல்வாதிகளிடம் விண்ணப்பிக்கப் போகிறீர்களா? அல்லது இந்தக் குற்றங்களை திட்டமிட்டு மூடி மறைத்து வந்திருக்கின்றனவே அந்த கட்டுப்பாட்டு முகமைகளிடம் விண்ணப்பிக்கப் போகிறீர்களா? அல்லது நிதிக் குற்றவாளிகளுக்கு கவசமளித்து தகவல்வெளிவிடுவோருக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்நிறுத்தும் நீதிமன்றங்களிடம் விண்ணப்பிக்கப் போகிறீர்களா?

பகாசுரப் பெருநிறுவனங்கள் தொடங்கி அரசாங்கங்கள் முதல் கட்டுப்பாட்டு முகமைகள் வரையிலும் சமகால சமூகத்தின் ஒட்டுமொத்த கட்டமைப்புமே பல-பில்லியன் செல்வம் கொண்ட நிதியாதிக்க தன்னலக்குழுக்களால் தான் கட்டுப்படுத்தப்படுகிறது.

சமூகத்தை முற்றிலும் மறுஒழுங்குக்குட்படுத்துவதே HSBC போன்ற முக்கிய வங்கிகளையும் மோசடி செய்ய அதன் சேவைகளைப் பயன்படுத்திக் கொண்ட மில்லியனர்கள் மற்றும் பில்லியனர்களையும் நீதியின் முன் கொண்டுவருவதற்கான ஒரே வழியாகும். ஒவ்வொரு பொது ஸ்தாபனத்தையும் அழுக்காக்குகின்ற முறைகேடான வழியில் பெற்ற செல்வம் பறிமுதல் செய்யப்பட வேண்டும், மாபெரும் பெருநிறுவனங்கள் அரசுடைமையாக்கப்பட வேண்டும், பொருளாதார வாழ்க்கையின் அடிப்படையான சக்திகள் மீது ஜனநாயகக் கட்டுப்பாட்டை ஸ்தாபிப்பதையே தனது முதல் கடமையாகக் கொள்கின்ற ஒரு தொழிலாளர்அரசாங்கத்தைக் கொண்டு, நடப்பில் உள்ள ஒவ்வொரு அரசும் பிரதியீடு செய்யப்பட்டாக வேண்டும்.