சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The Minsk truce: A hiatus in an escalating war

மின்ஸ்க் போர்நிறுத்த உடன்பாடு: உக்கிரமடையும் போரில் ஓர் இடைவேளை

Peter Schwarz
13 February 2015

Use this version to printSend feedback

மின்ஸ்க்கில் 16 மணிநேர பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் ஜேர்மன் சான்சிலர், ரஷ்ய, பிரான்ஸ் மற்றும் உக்ரேனிய ஜனாதிபதிகளுக்கு இடையே எட்டப்பட்ட உக்ரேனிய போர்நிறுத்த உடன்பாடு என்பது உக்கிரமடையும் போரில் வெறுமனே ஓர் இடைவேளை மட்டுமே ஆகும். அந்த உடன்படிக்கையின் சில விபரங்கள் வெளிவந்துள்ள போதினும், மேற்கத்திய ஊடக அமைப்புகள் ஏறத்தாழ ஒருமித்த கருத்துடன்எப்போதும் போல ரஷ்ய ஜனாதிபதியைக் குற்றஞ்சாட்டி அந்த உடன்படிக்கையின் தவிர்க்கவியலாத தோல்வியை அறிவித்தன.

யதார்த்தத்தில், ஓராண்டுக்கு முன்னர் மேற்கத்திய-ஆதரவிலான ஆட்சிக்கவிழ்ப்பில் அதிகாரத்திற்கு வந்த கியேவ் ஆட்சிக்கு, அவசரமாக ஒரு காலஅவகாசம் தேவைப்படுவதால் மட்டுமே, மின்ஸ்க் உடன்படிக்கை எட்டப்பட்டது.

உக்ரேனிய இராணுவம், விட்டோடியவர்களால் மற்றும் ஒரு தொடர்ச்சியான தோல்விகளால் பலவீனமடைந்துள்ளது. வெகு குறைந்த சில இளைஞர்கள் மட்டுமே, அவர்களின் நாட்டுமக்கள் மீதே துப்பாக்கியால் சுடவோ அல்லது வறுமை மற்றும் வேலைவாய்ப்பின்மையை தவிர வேறொன்றையும் வழங்க முடியாத ஓர் ஆட்சிக்காக உயிர்விடவோ விரும்புகின்றனர். கியேவ் ஆட்சி நுட்பமாக கட்டுப்பாட்டில் கொண்டுள்ள அதிதீவிர வலதுசாரி தன்னார்வப் படைகள் மட்டுந்தான் சண்டையிட விரும்புகின்றன.

நிதியியல்ரீதியாக உக்ரேன் திவாலாகி உள்ளது. அதன் பொருளாதார வெளியீடு 8 சதவீத அளவிற்கு வீழ்ச்சி அடைந்துள்ளது, மற்றும் அதன் அன்னிய செலாவணி கையிருப்புகள் 6.6 பில்லியன் டாலருக்கு சுருங்கி போயுள்ளதுவெறுமனே இது ஒரு மாதகால இறக்குமதிகளுக்கு மட்டுமே போதுமானதாகும். மின்ஸ்க் உடன்படிக்கை எட்டப்பட்டதும் உடனடியாக, சர்வதேச நாணய நிதியம் பெட்ரோ பொறோஷென்கோ ஆட்சிக்கு உதவித்தொகையாக 40 பில்லியன் டாலர் வழங்க உறுதியளித்தது. ஒருபுறம் வறுமையில் தள்ளப்பட்ட, போரில் சிதைக்கப்பட்ட மக்களிடமிருந்தும் மற்றும் மறுபுறம் அரசு எந்திரத்தின் வலதுசாரி சக்திகளிடம் வரும் அழுத்தத்தின் கீழ் இது ஒன்றுமில்லாமல் போகும்.

மின்ஸ்க் பேச்சுவார்த்தைகளுக்கு முன்னதாக பொறோஷென்கோவின் கரங்களைப் பலப்படுத்த வாஷிங்டன் அதனால் ஆனமட்டும் அனைத்தையும் செய்தது. ஆயுதங்கள் வழங்கவும் மற்றும் உக்ரேனிய சிப்பாய்களுக்கு பயிற்சிகள் வழங்கவும் அமெரிக்க ஆதாரநபர்கள் ஆலோசனை வழங்கினார்கள். அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவே கூட, ரஷ்யா "உக்ரேனில் அதன் ஆக்கிரமிப்பு முன்னேற்றங்களைத்" தொடர்ந்தால், அதற்கான "கூடுதல் விலைகளைக்" குறித்து அச்சுறுத்த, புட்டினை தனிப்பட்டரீதியில் தொலைபேசியில் அழைத்து பேசியிருந்தார்.

மின்ஸ்கில் ரஷ்ய பிரதிநிதிகள் குழு, “உக்ரேனின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை முழுமையாக மதிப்பதில்" இருந்து கியேவிற்கான ரஷ்ய எல்லையின் கட்டுப்பாட்டை மாற்றுவது வரைக்கும், நீண்டபெரும் விட்டுக்கொடுப்புகளைச் செய்தது. மேர்க்கெல் மற்றும் ஹோலாண்டின் அறிக்கைகளின்படி, அந்த உடன்படிக்கைக்கு ஒப்புக்கொள்ளுமாறு புட்டினுமே கூட பிரிவினைவாதிகளுக்கு அழுத்தம் அளித்தார். அவரது பங்கிற்கு, பொறோஷென்கோ அந்த உடன்படிக்கையை மறுத்தளிக்க தொடர்ந்து அச்சுறுத்தினார்.

என்ன நடந்து வருகிறதென்றால், அது ஒரு உள்நாட்டு உக்ரேனிய விவகாரமோ அல்லது கியேவ் மற்றும் மாஸ்கோவிற்கு இடையிலான ஒரு மோதலோ அல்ல, மாறாக அதையும்விட பரந்த புவிசார் அரசியல் மோதலாகும்.

வாஷிங்டன் உக்ரேனின் 2004 ஆரெஞ்சு புரட்சிக்கு நிதியுதவி அளித்தது, 2014இல் ரஷ்யாவை நசுக்க மற்றும் தனிமைப்படுத்துவற்காக உக்ரேனிய ஜனாதிபதி விக்டொர் யானுகோவிச்சிற்கு எதிரான ஆட்சிக்கவிழ்ப்பு சதியை ஆதரித்தது. வாஷிங்டனை பொறுத்த வரையில், அது வெறுமனே உக்ரேனைக் கட்டுப்படுத்தும் ஒரு விடயமல்ல, மாறாக வாஷிங்டனுக்கு எதிராக மாஸ்கோவ் சிரிய அரசாங்கத்தை ஆதரித்து வருகின்ற மத்திய கிழக்கிலும், மற்றும் ஒரு மூலோபாய ரஷ்ய-சீன கூட்டணி அமைக்கப்பட்டு வரும் தொலைதூர கிழக்கிலும் அதன் மேலாதிக்கத்தை பலப்படுத்துவதற்காக ஆகும்.

அதே காரணங்களுக்காக தான், வாஷிங்டன் தற்போது உக்ரேனில் போரைத் தூண்டிவிட்டு வருகிறது. இது தான் ஆயுதங்கள் அனுப்புவதற்கான முன்மொழிவுகளின் நோக்கமாகும். பைனான்சியல் டைம்ஸிற்கு இராணுவ வல்லுனர்கள் கூறியவாறு, அவை போரில் ஜெயிப்பதற்கு கியேவ்விற்கு உதவப் போவதில்லை, மாறாக "அமைதி குலைந்த வடக்கு காகசஸ் மற்றும் மத்திய ஆசியா போன்ற ஏனைய பக்கவாட்டு பகுதிகளின் மீது அதை இன்னும் கூடுதலாக காயப்படுத்தக்கூடிய ஒரு நீண்டகால, மிகப்பெரிய போருக்குள்" ரஷ்யாவை இழுப்பதற்கு உதவும். “உக்ரேனில் ஓர் இடைவெளியற்ற போரில் சண்டையிட அங்கே போதிய ரஷ்ய வீரர்கள் கிடையாது,” என்று அவர்களில் ஒருவர் தெரிவித்தார்.

ஜேர்மன் ஜனாதிபதி ஜோஹாயிம் கௌவ்க் கடந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிவித்ததைப் போல, உலக அரசியலில் ஒரு பெரும் பாத்திரம் வகிக்கும் மற்றும் போருக்கு பிந்தைய இராணுவ கட்டுப்பாட்டு கொள்கையை முடிவுக்குக் கொண்டு வரும் அதன் நோக்கத்தின் பாகமாக, ஜேர்மனி கியேவ் ஆட்சிக்கவிழ்ப்பு சதியை மற்றும் பொறோஷென்கோ ஆட்சியை ஆதரித்தது. முதலாம் மற்றும் இரண்டாம் உலகப் போர்கள் இரண்டிலும் ஜேர்மன் இராணுவங்கள் ஆக்கிரமித்திருந்த உக்ரேனில் செயலூக்கத்துடன் தலையிடுவதன் மூலமாக, ஜேர்மன் ஆளும் வர்க்கம் கிழக்கை நோக்கிய அதன் பாரம்பரிய விரிவாக்க கொள்கையின் அடியைப் பின்தொடர்ந்து வருகிறது.

வாஷிங்டனும் பேர்லினும் ஆரம்பத்தில் இணக்கத்துடன் செயல்பட்டன. அவை உக்ரேனிய எதிர்ப்பைக் கட்டமைப்பதிலும், 2014 பெப்ரவரியின் ஆட்சிக்கவிழ்ப்புக்கு தயாரிப்பு செய்வதிலும், மற்றும் பொறோஷென்கோவின் ஆட்சியைப் பலப்படுத்துவதிலும் ஒருங்கிணைந்து மிக நெருக்கமாக வேலை செய்தன. ஆனால் இராணுவ விரிவாக்கத்திற்கான சமீபத்திய அமெரிக்க முறையீடுகள் பேர்லினில் எச்சரிக்கை மணியை ஒலிக்கச் செய்திருக்கிறது.

ஜேர்மன் ஏகாதிபத்தியம் உக்ரேனை ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைக்கவும், பொருளாதார தடைகள் மூலமாக ரஷ்யாவை பலவீனப்படுத்தவும் விரும்புகிறது என்றபோதினும், அது ஒரு போர் விரிவாக்கத்தை தவிர்க்கவே விரும்புகிறது. இத்தகைய ஒரு போர், ரஷ்யாவுடன் மிக நெருக்கமான பொருளாதார உறவுகளைக் கொண்டுள்ள மற்றும் ரஷ்ய எரிசக்தி வினியோகங்களைச் சார்ந்துள்ள ஜேர்மனி மற்றும் ஐரோப்பாவின் அனைத்து நாடுகள் மீதும் ஒரு பேரழிவுகரமான தாக்கத்தை உண்டாக்கக்கூடும். ஒரு நீண்டகால போரானது, தவிர்க்கவியலாமல் ஏனைய ஐரோப்பிய நாடுகளுக்குள் சிதறிப் பரவக்கூடும் என்பதுடன், அகதிகளின் அலைகளை உருவாக்கும் மற்றும் ஒட்டுமொத்த ஐரோப்பிய ஒன்றியத்தையே ஸ்திரமின்மைக்குள் கொண்டு செல்லும். இதனால் தான் மேர்க்கெலும் ஹோலாண்டும் மின்ஸ்கில் ஒரு போர்நிறுத்தத்திற்கு பிரச்சாரம் செய்தனர்.

முனீச் பாதுகாப்பு மாநாட்டில், மேர்க்கெல் அமெரிக்க அதிகாரிகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். வியாழனன்று வாரந்தர பத்திரிகை Die Zeit ஒரு தலையங்கத்தில் இவ்வாறு குறை கூறியது: “அமெரிக்காவின் பொறுமையின்மை புட்டினை நோக்கி திரும்பி இருக்கவில்லை மாறாக சான்சிலர் மேர்க்கெலை நோக்கி இருந்தது. ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையாணை கொள்கை நடைமுறை விளைவுகளைக் கொண்டு வருவதற்கு எவரேனும் போதிய அவகாசம் அளிக்கவில்லை என்றால், அவர் கிரெம்ளினின் கரங்களில் விளையாடி வருகிறார். அங்கே ஒரு தீவிரப்பாடு இருக்க வேண்டுமானால், பின் அது தடையாணைகளுடன் தான் இருக்க வேண்டும்!”

நிச்சயமாக மேற்கு இதில் பிளவுபடக்கூடாது. அதற்காக இந்த முறை அமெரிக்கா ஐரோப்பிய தலைவர்களுக்கு விட்டுக்கொடுக்க வேண்டும்,” என்று அந்த கட்டுரை முடிக்கிறது.

வாஷிங்டன் அனேகமாக இதற்கு ஒத்து வராது.

1914இல் முதலாம் உலக போர் பால்கன்களில் தான் வெடித்தது என்பது ஒன்றும் ஏதோ தற்செயலான பொருத்தமல்ல. ஏகாதிபத்திய சக்திகளின் முட்டிமோதும் நலன்கள் அப்பிராந்தியத்தில் ஒன்றுக்கொன்று குறுக்கிடுவதாக இருந்தது. அவை அங்கே மில்லியன் கணக்கான மக்களை விலையாக கொடுத்து ஒரு நான்காண்டு கால போரில் ஈடுபட்டன. அதேபோல தான் உக்ரேனிய நெருக்கடியும், மனிதகுல நாகரீகத்தையே முடிவுக்குக் கொண்டு வரக்கூடிய, ஒரு இரத்தந்தோய்ந்த இனப்படுகொலைக்குள் மூன்றாவது முறையாக உலகை மூழ்கடிக்க அச்சுறுத்துகின்ற பதட்டங்கள் மற்றும் முரண்பாடுகளை எடுத்துக்காட்டுகிறது.

ரஷ்யா, உக்ரேனில் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பிற்குரிய குற்றவாளி அல்ல, அது பாதிக்கப்படும் நாடாக உள்ளது, ஆனால் புட்டின் ஆட்சி போர் அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கு முற்றிலும் தகைமையற்றதாகும். சோவியத் ஒன்றியத்தின் கலைப்பிலிருந்து எழுந்த அது, ரஷ்ய சமூகத்தின் மிகவும் பிற்போக்குத்தனமான அடுக்குகளின் உருவடிவமாக உள்ளது. தேசியவாதம் மற்றும் பழிவாங்கும் இராணுவ அச்சுறுத்தல்களைத் தூண்டிவிடுவதன் மூலமாக, மாஸ்கோ உலகளாவிய அணுஆயுத போர் அபாயத்தை எடுக்கிறது.

சமீபத்திய அபிவிருத்திகள் கடந்த ஆண்டு ஜூலையில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவால் வெளியிடப்பட்ட எச்சரிக்கையை உறுதிப்படுத்துகிறது: “ஒரு புதிய உலகப் போருக்கான அபாயமானது முதலாளித்துவ அமைப்பின் அடிப்படை முரண்பாடுகளில் இருந்து எழுகிறதுஅதாவது, ஓர் பூகோளமயப்பட்ட பொருளாதாரத்தின் அபிவிருத்திக்கும் மற்றும் உற்பத்தி சாதனங்களின் தனியுடைமையில் வேரூன்றியுள்ள எதிர்விரோத தேசிய அரசுகளுக்குள்ளான அதன் பிளவுகளுக்கும் இடையிலான முரண்பாடுகளில் இருந்து எழுகிறது.”

இந்த போர் ஆபத்திற்கு எதிர்நடவடிக்கை எடுக்கக்கூடிய ஒரே சமூக சக்தியாக இருப்பது, சர்வதேச தொழிலாள வர்க்கம் மட்டுமே ஆகும். அது இராணுவவாதம் மற்றும் போருக்கு மூலகாரணமாக உள்ள முதலாளித்துவத்தை தூக்கியெறிவதற்காக அணிதிரட்டப்பட்டு, ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஐக்கியப்பட வேண்டும். இந்த வேலைத்திட்டத்திற்காக தான் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் மற்றும் அதன் பிரிவுகளும், அதாவது சோசலிச சமத்துவ கட்சிகளும், போராடி வருகின்றன.