சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

French government carries out mass arrests

பிரெஞ்சு அரசாங்கம் பாரிய கைது நடவடிக்கைகளை மேற்கொள்கிறது

By Ulrich Rippert
15 January 2015

Use this version to printSend feedback

கடந்த வார பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர் சார்லி ஹெப்டோவின் முதல் பிரதி வெளியான புதன்கிழமை அன்று அதற்கு பொருந்திய விதத்தில், பிரெஞ்சு உள்துறை மந்திரி "பயங்கரவாதத்தை பெருமைப்படுத்தியதாக" குற்றஞ்சாட்டப்பட்ட 54 நபர்களுக்கு எதிராக, சட்டரீதியிலான வழக்குகளை அறிவித்தார்.

பாரீஸில், கருத்துச் சுதந்திரத்தின் பாதுகாப்பிற்காக என்றழைக்கப்பட்ட ஒரு பாரிய அணிவகுப்பு நடந்து வெறும் ஒருசில நாட்களுக்குப் பின்னர், சர்ச்சைக்குரிய பிரெஞ்சு நகைச்சுவையாளர் டியுடொனே கைது செய்யப்பட்டமை ஊடகங்களால் பரந்தளவில் எடுத்துக்காட்டப்பட்டன.

சார்லி ஹெப்டோ பத்திரிகை மீதான கடந்த வார பயங்கரவாத தாக்குதலை அடுத்து பிரபலமாகி இருந்த "நானே சார்லி ஹெப்டோ" முழக்கத்தை, கடந்த வெள்ளியன்று ஒரு யூத மளிகை கடையில் நான்கு பிணைக்கைதிகள் மற்றும் ஒரு பொலிஸைச் சுட்டுக் கொன்ற தூப்பாக்கிதாரி பெயருடன் இணைத்து, டியுடொனே "நான் சார்லி குலிபாலியாக உணர்கிறேன்" என்று பேஸ்புக்கில் பதிப்பித்தார். முன்னதாக பிரெஞ்சு அரசாங்கம் டியுடொனேயின் நகைச்சுவை நிகழ்ச்சிகள் யூத-எதிர்ப்பாக இருப்பதாக குற்றஞ்சாட்டி அவற்றிற்கு தடை விதித்திருந்தது.

நானே சார்லி" பிரச்சாரத்திற்கு எதிராக சமூக ஊடகங்களில் பேசியிருந்த பல இளைஞர்களும், கைது செய்யப்பட்டவர்களில் உள்ளடங்குவர். பயங்கரவாதத்தைப் பெருமைப்படுத்தியதன்" மீதான குற்றஞ்சாட்டுக்களுடன் செவ்வாயன்று கைது செய்யப்பட்ட ஒரு இளைஞர், உடனடியாக சிறை தண்டனைக்கு உட்படுத்தப்பட்டார். 22 வயதான அவர் பேஸ்புக்கில் ஒரு காணொளியைப் பதிப்பித்திருந்தார், அதில் அந்த பயங்கரவாத தாக்குதலின் போது உயிரிழந்த ஒரு பொலிஸ்காரரை அவர் இழிவுபடுத்தி இருந்ததாக கூறப்பட்டது.

சனியன்று ஒரு சுருக்கமான விசாரணையில் 34 வயதான ஒருவருக்கு நான்காண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அவர் குடிபோதையில் ஒரு வாகன விபத்தை ஏற்படுத்தியதோடு, அதற்கு பின்னர் அவர் ஒரு பொலிஸ்காரரைப் பார்த்து, "அங்கே நிறைய கௌச்சிகள் (அந்த பயங்கரவாத சகோதரர்கள்) இருக்க வேண்டும். என்னைப் பொறுத்த வரையில் நீர் தான் அடுத்து பலியாவீர், என்ற வார்த்தைகளைப் பிரயோகித்திருந்தார்.

இளைஞர்களைக் கைது செய்ய இட்டுச் செல்லும் அவர்களது கருத்துக்களில் பல, பொலிஸ் மற்றும் நீதிமன்றங்களின் மீது நிலவும் மக்களின் எதிர்ப்பு மற்றும் கோபத்தின் வெளிப்பாடாக உள்ளன. சார்லி ஹெப்டோ மீதான தாக்குதலுக்குப் பின்னரில் இருந்து, கனரக ஆயுதமேந்திய பொலிஸ் மற்றும் இராணுவ பிரிவுகளைப் பாரியளவில் ஒன்றுதிரட்டியமை, பரந்தளவில் இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்களால் ஓர் ஆத்திரமூட்டலாக உணரப்படுகிறது.

சட்டம் ஒழுங்கைப் பேணுவதற்கும் பொதுத்துறை கட்டிடங்களைப் பாதுகாப்பதற்கும் என்ற சாக்குபோக்கின் கீழ், திங்களன்று பிரெஞ்சு பாதுகாப்பு மந்திரி வீதிகளில் 10,000 சிப்பாய்களை நிறுத்த உத்தரவிட்டார். அரசாங்கமும் "குறிப்பாக முக்கிய நிறுவனங்களைப்" பாதுகாப்பதற்காக என்று பாரீஸில் கூடுதலாக 4,700 பொலிஸ்காரர்களையும் மற்றும் ஆயுதந்தாங்கிய காவற்படையையும் நிறுத்தியது.

இந்த பாரிய கைது நடவடிக்கைகள், "நானே சார்லி" பிரச்சாரத்தின் வெறுப்பூட்டும் இயல்பை அடிக்கோடிடுகின்றன. இனவாத முஸ்லீம்-விரோத கேலிச்சித்திரங்கள் பிரசுரிக்கப்படுவது கருத்து சுதந்திரம் மற்றும் பத்திரிகை சுதந்திரத்தின் பெயரால் பெருமைப்படுத்தப்பட்டு வருகின்றன, அதேவேளையில் அதை எதிர்ப்பவர்கள் மற்றும் பொலிஸ்-இராணுவ ஒன்றுதிரட்டலுக்கு எதிராக பேசுபவர்கள் அரசின் எதிரிகளாக அறிவிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்படுகின்றனர்.

சார்லி ஹெப்டோ மீதான தாக்குதலுக்கு ஒரு வாரத்திற்குப் பின்னர் புதனன்று, அல் கொய்தா பயங்கரவாத வலையமைப்பின் ஏமன் பிரிவு அந்த தாக்குதலுக்கு பொற்றுப்பேற்றது. இணையத்தில் வெளியான ஒரு காணொளியில் அரேபிய தீபகற்பத்தின் அல் கொய்தா (AQAP) தலைவர் நாஸர் அல் அன்சி, மாவீரர்கள் நியமிக்கப்பட்டு, அவர்கள் தான் நடவடிக்கை எடுத்தனர், என்று அறிவித்தார். பத்திரிகை அலுவலர்களின் படுகொலையானது, முகமது நபியை அவமதித்த கேலிச்சித்திரங்களைப் பிரசுரித்ததற்கு பழிவாங்கும் நடவடிக்கையாகும் என்றவர் தெரிவித்தார்.

ஈராக் மற்றும் சிரியாவின் இஸ்லாமிக் அரசுடன் (ISIS) அதற்கிருக்கும் தொடர்புக்கு முட்டுக்கொடுக்கும் ஒரு முயற்சியாக, AQAP, உண்மையில் நடவடிக்கையில் ஒரு முக்கிய பங்கு வகிக்காமலேயே அந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றிருக்க கூடும் என்று Süddeutsche Zeitung குறிப்பிட்டது.

சாய்த் கௌச்சி மற்றும் அவரது சகோதரர் செரிப் ஏமனில் ஆயுத பயிற்சி பெற்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அவர்கள் 2011இன் மத்தியில் ஓமான் வழியாக ஏமனுக்கு பயணித்து, ஏமன் தலைநகர் சானாவிற்கு 100 மைல் கிழக்கில், மரீபிற்கு அருகில் ஒரு அல் கொய்தா முகாமில் தங்கி இருந்ததாக கருதப்படுகிறது.

ஏமன் ஜனாதிபதி அப்த் ரபோ மன்சூர் அவரது நாடு பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்யவில்லை என்றுரைத்து ஒரு அறிக்கை பிரசுரிக்க நிர்பந்திக்கபட்டார். சார்லி ஹெப்டோ தாக்குதலுக்கு சில மணி நேரங்களுக்குப் பின்னர் தலைநகர் சானாவில் பொலிஸ் பயிற்சி மையத்தில் நடந்த ஒரு தற்கொலைப் படை தாக்குதலை அவர் குறிப்பிட்டுக் காட்டினார். அந்த சானா தாக்குதலில் முப்பத்தி ஏழு பேர் கொல்லப்பட்டனர்.

சார்லி ஹெப்டோ பதிப்பு அலுவலகர்கள் மீதான தாக்குதலானது, பிரெஞ்சு மக்களால் பரவலாக எதிர்க்கப்பட்டு வந்த பிரான்சின் மத்திய கிழக்கு இராணுவ தலையீட்டை அதிகரிப்பதற்கு தயாரிப்பு செய்வதற்காக சுரண்டப்பட்டு வருகிறது, என்பதற்கு அங்கே பல அறிகுறிகள் உள்ளன.

நேற்று மாலை பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்ட் சார்ல்ஸ் டு கோல் விமானந்தாங்கி கப்பலில் இருந்த சிப்பாய்கள் மற்றும் அதிகாரிகளுக்கு உரையாற்றினார். ஈராக்கில் அவசியமானால் இன்னும் மேலதிகமான தீவிரத்துடனும் பெரும் முனைப்புடனும் நம்மால் தலையீடு செய்ய முடியும், என்று அவர் அறிவித்தார். அந்த விமானந்தாங்கி கப்பல் தரைப்படை துருப்புகளுடன் நெருக்கமாக ஒத்துழைத்து வேலை செய்வதாக அவர் வலியுறுத்தினார்.

ISIS மீதான தாக்குதலில் பிரான்ஸ் தான் அமெரிக்காவுடன் இணையும் முதல் நாடாகும். Chammal என்ற பெயரில் ஈராக்கில் நடத்தப்படும் பிரெஞ்சு நடவடிக்கையில் 800 சிப்பாய்களும், பல போர்விமானங்களும் மற்றும் ஒரு டாங்கர் விமானமும் (வானிலேயே எரிபொருள் நிரப்பும் விமானம்) உள்ளடங்கும்.

நேற்று பிரசுரமான சார்லி ஹெப்டோவின் எட்டுப்பக்க சிறப்பு பதிப்பு அரசிடமிருந்தும் மற்றும் ஒரு பிரமாண்ட ஊடக பிரச்சாரத்திடமிருந்தும் கிடைத்த பாரியளவிலான பக்கபலத்துடன் வெளியானது. ஒரு சில மணிநேரங்களிலேயே, 3 மில்லியன் அச்சு பிரதிகள் விற்றுத் தீர்ந்ததுடன், மேற்கொண்டும் இரண்டு மில்லியன் அதிகரிக்கப்பட்டது. வழக்கமாக அந்த இதழின் விற்பனை சுமார் 30,000 பிரதிகளாகும், ஆனால் இந்த பதிப்பு ஏற்றுமதிக்கான 300,000 பிரதிகளுடன், 16 மொழிகளில் பதிப்பிக்கப்பட்டு வருகிறது.

Libération நாளிதழ் சார்லி ஹெப்டோ பதிப்பு அலுவலகர்களுக்கு என்றே ஒரு ஒட்டுமொத்த தளத்தையும் ஒதுக்கி அளித்தது. ரேடியோ பிரான்ஸ் மற்றும் பிரான்ஸ் டெலிவிஷனும் வினியோகம் சார்ந்த உதவிகளை வழங்கின. பிரெஞ்சு அரசாங்கம் நிதியுதவியாக 1.2 மில்லியன் யூரோ வழங்க வாக்குறுதி அளித்தது.

இதற்கும் கூடுதலாக கூகுள் 250,000 யூரோ வழங்கியுள்ளது மற்றும் கார்டியன் ஊடக குழுமம் 130,000 யூரோ வழங்கியுள்ளது. ஏனையவற்றில், மிகப்பெரிய பிரெஞ்சு ஊடக பெருநிறுவனம் மற்றும் தனியார் வர்த்தக நிலையம், Le Monde மற்றும் ivendi SA Canal Plus தொகையை வெளியில் தெரிவிக்காமல் கூடுதல் தொகைகளை வழங்கியுள்ளன.

சார்லி ஹெப்டோ சில காலமாகவே பிரெஞ்சு அரசாங்கத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்ததாக நேற்று LObs செய்தியிதழ் குறிப்பிட்டது. அந்த இதழின் (சார்லி ஹெப்டோவின்) நிதியியல் சிக்கல்களை விவரிக்கவும் மற்றும் உதவி கோரவும் அதன் பதிப்பாசிரியர் அலுவலர்களில் நான்கு முன்னணி உறுப்பினர்கள் எலிசே மாளிகையில் ஜனாதிபதி ஹோலாண்டை சந்தித்ததாக செப்டம்பரின் இறுதியில் LObs குறிப்பிட்டது. எலிசேயிற்கு விஜயம் செய்தவர்களில் கேலிச்சித்திர ஓவியர்கள் ஸ்ரெபான் ஷாபோனியேர் மற்றும் ஜோன் கபு, அத்துடன் பேர்னார்ட் மரீ மற்றும் பட்றிக் பெலூ (இவர்கள் நிதித்துறைக்குப் பொறுப்பானவர்கள்) ஆகியோர் இருந்தனர். அவர்களது கவலைகளை ஜனாதிபதி சிரத்தையுடன் எடுத்துக் கொண்டதில் அவர்கள் மகிழ்ச்சி அடைந்ததாக LObs குறிப்பிட்டது.

முகமது நபியின் ஒரு கேலிச்சித்திரத்தை முன்பக்கத்தில் கொண்ட சிறப்பு பதிப்பைப் பிரசுரிப்பதென்ற முடிவு, அரசின் உயர்மட்டங்களால் ஆதரிக்கப்பட்ட ஓர் உள்நோக்கம் கொண்ட ஆத்திரமூட்டலாகும். அந்த பத்திரிகையின் உள்பக்கங்களிலோ, முக்காடு போட்ட அரை-நிர்வாண முஸ்லீம் பெண்களை உள்ளடக்கிய அதிக கொச்சையான மற்றும் ஆபாசமான கேலிச்சித்திரங்கள் இடம் பெற்றுள்ளன.

இஸ்லாமிய அமைப்புகளின் முன்னணி பிரதிநிதிகள் அங்கே விளைவுகள் ஏற்படுமென எச்சரித்தனர். லெபனிய Daily Star பத்திரிகையினது செய்தியின்படி, ஈரானிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் மார்ஜிஹ் அஃப்ஹாம், சார்லி ஹெப்டோவின் அட்டைப்படம் "உலகெங்கிலுமான முஸ்லீம்களின் உணர்வுகளைக் காயப்படுத்தி தூண்டுதலை ஏற்படுத்தக்கூடும் என்பதுடன், அது ஒரு நச்சு வட்டத்திற்குள் இட்டுச் செல்கிறது" என்று தெரிவித்தார்.