சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

Police crackdown after Charlie Hebdo attack spreads across Europe

சார்லி ஹெப்டோ தாக்குதலுக்குப் பின்னர் பொலிஸ் ஒடுக்குமுறை ஐரோப்பா எங்கிலும் பரவுகிறது

By Kumaran Ira
19 January 2015

Use this version to printSend feedback

இந்த வாரயிறுதியில், ஐரோப்பா எங்கிலும் பொலிஸ் மற்றும் இராணுவ படைகள் முன்னொருபோதும் இல்லாத அளவில் நிலைநிறுத்தப்பட்டன. பாரீஸில் சார்லி ஹெப்டோ வாரயிதழின் பதிப்பு அலுவலகங்கள் மீது நடத்தப்பட்ட ஜனவரி 7 தாக்குதலுக்குப் பின்னர், பிரான்ஸ், பெல்ஜியம், ஜேர்மனி, கிரீஸ் மற்றும் பிரிட்டனில் பாதுகாப்பு படைகள், டஜன் கணக்கான மக்களைக் கைது செய்து, சந்தேகிக்கப்பட்ட இஸ்லாமியர்கள் மீது ஒடுக்குமுறையைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

மூன்று தசாப்தங்களில் முதல் முறையாக, சனியன்று பெல்ஜியன் அதிகாரிகள், அந்நாடு முழுவதும் பரந்தளவில் பொலிஸை ஆயிரக் கணக்கில் பலப்படுத்த துணைப்படை துருப்புகளையும் பயன்படுத்தினர். அவர்கள் துறைமுக நகரம் அண்ட்வேர்ப்பில் உள்ள யூத பயிலகங்களை, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலினது உட்பட வெளிநாட்டு தூதரகங்களை, ஐரோப்பிய ஒன்றிய மற்றும் நேட்டோ இராணுவநிலைகளைக் காவல் செய்ய உள்ளனர். பெல்ஜிய அரசாங்கம் 1980களுக்குப் பின்னர் முதல்முறையாக, நான்கு-முனை பாதுகாப்பு அளவீட்டின் கீழ் அதன் பாதுகாப்பு மட்டத்தை இரண்டிலிருந்து மூன்று அடுக்கிற்கு உயர்த்தியது.

வியாழனன்று வேர்வியே பொலிஸ் நடத்திய திடீர் சோதனையில் சந்தேகிக்கப்பட்ட இரண்டு இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டதை தொடர்ந்து, பெல்ஜியன் பொலிஸ் சட்டவிரோத பயங்கரவாத ஜிஹாதிஸ்ட் குழுக்களைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 13 இஸ்லாமியர்களைக் கைது செய்த பின்னர், இராணுவ படைகளின் இந்த நிலைநிறுத்தல் கொண்டு வரப்பட்டது. வேர்வியே சம்பவங்களை அடுத்து, குடியிருப்புகளில் 12 தனித்தனி சோதனைகளுக்குப் பின்னர் பெல்ஜிய அதிகாரிகள் தெரிவிக்கையில், பெல்ஜிய பொலிஸ் படை உறுப்பினர்களைக் கொல்வதற்குரிய ஓர் "உறுதியான திட்டம்" தடுக்கப்பட்டு இருந்ததாக வாதிட்டனர்.     

"அந்த அச்சுறுத்தல்கள் மிகவும் ஆபத்தாகவும், கடந்த காலத்தையும் விட மிகவும் சிக்கலாகவும் உள்ளன, மிகவும் விரைவாகவும் பலமாகவும் நடவடிக்கை எடுத்தாக வேண்டும்," ஐரோப்பிய ஒன்றிய பயங்கரவாத-எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளர் கில்லெஸ் டு கெர்சோவ் Le Soirக்கு தெரிவித்தார்.  

பெல்ஜியத்தில் முறியடிக்கப்பட்ட சதித்திட்டம் தொடர்பாக விசாரணையிட, குறைந்தபட்சம் நால்வர் பிடிக்கப்பட்டு இருப்பதாக சனியன்று கிரேக்க பொலிஸ் தெரிவித்தது.

வெள்ளியன்று இரவு பிரெஞ்சு பொலிஸ் சார்லி ஹெப்டோ தாக்குதலுடன் தொடர்பு கொண்டவர் என்று கருதத்தக்க எட்டு ஆண்கள் மற்றும் நான்கு பெண்கள் உட்பட 12 பேரை சந்தேகத்தின் பேரில் கைது செய்தது. சோசலிஸ்ட் கட்சி அரசாங்கம் 15,000கும் கூடுதலான துருப்புகளையும் பொலிஸையும் நாடெங்கிலும் நிறுத்தி உள்ளது.

ஜேர்மன் பொலிஸ் 11 இடங்களில் தேடல்கள் நடத்திய பின்னர், பேர்லினில் சந்தேகத்துடன் இரண்டு பேரை கைது செய்தது.

ஸ்பெயின் மற்றும் நெதர்லாந்தின் பாதுகாப்பு படைகளும் சமீபத்தில் சிரியா மற்றும் ஈராக்கில் இருந்து திரும்பியவர்கள் உட்பட, ஈராக் மற்றும் சிரியாவின் இஸ்லாமிக் அரசுக்காக போராடுபவர்கள் என்று சந்தேகிக்கப்படுபவர்கள் மீது கண்காணிப்பை அதிகரித்துள்ளன.

ஐரோப்பா எங்கிலும் ஆளும் மேற்தட்டு, நீண்டகாலமாக தயாரிப்பில் இருந்து வந்த பொலிஸ்-அரசு முறைமைகளை அதிகரிக்க, சார்லி ஹெப்டோ தாக்குதலைச் சுரண்டி வருகின்றன. கடந்த வாரம் பிரதம மந்திரி மானுவெல் வால்ஸ் மின்னஞ்சல்கள், தொலைபேசி அழைப்புகள், இடத்தை அறியும் விபரங்கள் மற்றும் இணைய கண்காணிப்பை மேற்பார்வை செய்வதற்கு உளவுவேலை அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கும் 2013 கண்காணிப்பு சட்டத்தை மீளாய்வு செய்வதற்கு பரிந்துரைத்தார்.

பிரிட்டனில் பிரதம மந்திரி டேவிட் கேமரூன், பிரிட்டிஷ் உளவுவேலை சேவைக்கு மறை-குறியீடு தகவல் தொடர்புகளை அணுக அதிகாரம் அளிக்கும் வகையில், "தகவல் சேகரிப்பு சாதனம்" (snoopers’ charter) எனும் தகவல் தொடர்பு சட்டமசோதாவைக் கொண்டு வர அழைப்புவிடுத்துள்ளார்.

ஐரோப்பிய ஏகாதிபத்தியம் பொலிஸ்-அரசு முறைமைகளை நியாயப்படுத்தவும் மற்றும் சமூகத்தின் இராணுவமயமாக்கலை அதிகரிப்பதற்காகவும் அதன் சொந்த இரத்தந்தோய்ந்த வெளிநாட்டு யுத்தங்களிலிருந்து விளையும் எதிர்விளைவுகளைச் சுரண்டி வருகிறது.

சிரியா மற்றும் அரபு உலகின் ஏனைய இடங்களில் ஆட்சி மாற்றங்களுக்கான நேட்டோ போர்களில் இஸ்லாமியவாதிகளின் நியமனங்கள் பினாமி சக்திகளாக செயல்பட்ட வரையில், ஐரோப்பிய அரசாங்கங்கள் அவர்களுக்கு ஆயுத உதவிகள் செய்தும், நிதி கையளிப்புகள் அளித்தும் ஆதரித்து வந்தன. இந்த அரசாங்கங்கள் அவர்களின் பிரஜைகள் சிரியாவிற்கு பயணிப்பதை அனுமதித்ததுடன், ஜனாதிபதி பஷர் அல்-அசாத் ஆட்சிக்கு எதிராக பயங்கரவாத குண்டுவீச்சுக்களையும் மற்றும் தேடுதல் வேட்டைகளையும் நடத்தக் கற்றுக் கொடுத்தன. ஒவ்வொரு பிரதான ஐரோப்பிய நாட்டிலிருந்தும் நூறு கணக்கானவர்கள் சண்டையிட சென்ற நிலையில், ஐரோப்பிய உளவுத்துறை சேவைகள் பல்வேறு சிரிய ஜிஹாதிஸ்டு குழுக்களைச் சேர்ந்தவர்கள் என்று சந்தேகித்தவர்களை நெருக்கமாக கண்காணித்து வந்தது.

பெல்ஜிய அதிகாரிகளின் தகவல்படி, பெல்ஜியத்தில் இருந்து மட்டுமே சிரியா மற்றும் ஈராக்கில் சண்டையிட 350 பிரஜைகள் சென்றிருந்தனர், இது ஐரோப்பாவிலேயே தனிநபர் விகிதத்தில் அதிகபட்ச எண்ணிக்கையாகும். "சுமார் 100 பேர் திரும்பி உள்ளனர், அவர்களை உளவுத்துறை சேவைகள் கண்காணித்து வருகிறது," என்று பெல்ஜிய உள்துறை மந்திரியும், துணை பிரதம மந்திரியுமான ஜன் ஜாம்போன் பிபிசி உலக சேவைக்குத் தெரிவித்தார்.

சார்லி ஹெப்டோ தாக்குதலின் குற்றவாளிகளே கூட துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு முன்னதாக பிரெஞ்சு, பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க உளவுத்துறையின் கண்காணிப்பின் கீழ் இருந்தனர்.

ஆனால் அந்த இஸ்லாமிஸ்ட் சக்திகள் ஐரோப்பாவிற்கு திரும்பியதும், அவை உளவுத்துறை சேவைகளின் முகத்திற்கு நேராகவே தாக்குதல்களை நடத்தி வருகின்றன; பின்னர் அவை, தொழிலாள வர்க்கத்திடையே நிலவும் முன்னில்லாத கோபம் மற்றும் சிக்கன நடவடிக்கைகள் மற்றும் போருக்குரிய ஐரோப்பிய ஒன்றிய கொள்கைகள் மீதான அதிருப்தி ஆகியவற்றிற்கு இடையே, அரசின் ஒடுக்குமுறை அதிகாரங்களைத் தீவிரப்படுத்துவதற்கு கைப்பற்றப்படுகின்றன.

ஊடகங்கள் மற்றும் அரசு அதிகாரிகளால் சுழற்றிவிடப்பட்டு வரும் பிற்போக்குத்தனமான உணர்வும் ஐரோப்பாவில் பதட்டங்களைக் கொதிநிலைக்குக் கொண்டு வந்துள்ளன. சார்லி ஹெப்டோ தாக்குதலில் இருந்து, அரசு மற்றும் ஊடகங்கள் முஸ்லீம்-விரோத உணர்வைத் தூண்டிவிட்டு வருவதால், முஸ்லீம் மக்களுக்கு எதிரான வன்முறை பிரான்சில் கணிசமான அளவிற்கு அதிகரித்துள்ளது.

கடந்த புதனன்று, மொரோக்கோவைச் சேர்ந்த 47 வயதான மொஹம்மது எல் மகோலி, அவினோனுக்கு அருகே போசே கிராமத்தில் அவரது ஆக்ரோஷமான அண்டைவீட்டாரால் அவர் மனைவியின் முன்னாலேயே கொடூரமாக குத்திக் கொல்லப்பட்டார். எல் மகோலி 17 முறை குததப்பட்டார். அவ்வாறு தாக்கிய அந்த 28 வயதான நபர் எல் மகோலியைத் தாக்குவதற்கு முன்னதாக, அவரது அண்டைவீட்டினரின் கதவை பலவந்தமாக தள்ளி திறந்து, "நான் தான் உன் கடவுள், உன் இஸ்லாம்" என்று கத்தினார்.

சார்லி ஹெப்டோ தாக்குதலுக்குப் பின்னர் 50க்கும் மேற்பட்ட தொடர்ச்சியான முஸ்லீம்-விரோத தாக்குதல்களில் இது சமீபத்தியதாகும். முஸ்லீம் மத பிரெஞ்சு கவுன்சிலினது, இஸ்லாமிய-எதிர்ப்புக்கு எதிரான ஆய்வகத்தின் தலைவர் அப்தல்லாஹ் ஜெக்ரி, உள்துறை அமைச்சகத்தின் புள்ளிவிபரங்களை மேற்கோளிட்டு காட்டினார், அது புதன்கிழமையிலிருந்து 54 முஸ்லீம் -எதிர்ப்பு நடவடிக்கைகள் நடந்துள்ளதை எடுத்துக்காட்டியது. இவற்றில் 21 "நடவடிக்கைகளும்" (Aude பகுதியில் துப்பாக்கியால் சுட்டது, லு மான்ஸில் பயிற்சி கிரனேட் வெடித்தது, Rhône பகுதியின் ஒரு மசூதிக்கு அருகில் ஒரு கெபாப் கடை வெடித்தது...) மற்றும் 33 "அச்சுறுத்தல்களும்", முக்கியமாக அவமதிப்புகளும்" உள்ளடங்கும்.

"இந்த எண்ணிக்கையில் பாரீஸ் மற்றும் புறநகர்களுக்கு அருகில் நடந்த சம்பவங்களோ, அல்லது Poitiersஇல் கட்டப்பட்டு வருகின்ற மசூதியில் ஞாயிறன்று இரவு தொடங்கிய துப்பாக்கிச்சூடோ உள்ளடக்கப்படவில்லை," என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.

சார்லி ஹெப்டோவின் சமீபத்திய பதிப்பில் முகமது நபியைக் கேலிசெய்து புதிய இனவாத கேலிச்சித்திரங்களை பதிப்பித்தமையும் சர்வதேச அளவில் முஸ்லீம் நாடுகளில் ஆத்திரத்தையும், போராட்டங்களையும் தூண்டிவிட்டுள்ளது.

லிபியா மற்றும் மாலியில் பிரெஞ்சு ஏகாதிபத்திய போர்களால் ஏற்கனவே நாசமாக்கப்பட்டுள்ள வடமேற்கு ஆபிரிக்கா எங்கிலும் சார்லி ஹெப்டோவிற்கு எதிரான மற்றும் அதிகரித்துவரும் சமூக நெருக்கடிக்கு எதிரான போராட்டங்கள் நடந்தன. நைஜர், மாலி, செனகல், மௌரிடானியா மற்றும் அல்ஜீரியாவின் தலைநகரங்களில்இந்நாடுகள் அனைத்தும் முன்னாள் பிரெஞ்சு காலனிகள் ஆகும்சார்லி ஹெப்டோவின் சமீபத்திய முஸ்லீம்-விரோத கேலிச்சித்திரங்களுக்கு எதிரான போராட்டங்கள் நடந்தன.

நைஜரில் முகமது நபியின் கேலிச் சித்தரிப்பு மீது நடந்த இரண்டு நாள் வன்முறை போராட்டங்களில் குறைந்தபட்சம் 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர். "நியாமெயில் ஐவர் கொல்லப்பட்டனர், அனைவரும் அப்பாவி பொதுமக்கள் ஆவர்" என்று நைஜீரிய ஜனாதிபதி மஹமதௌ இஸ்சௌஃபௌ கூறியதை AFP சுட்டிக் காட்டி இருந்தது. ஒரு நாள் முன்னதாக நைஜரின் இரண்டாம் நகரமான ஜிந்தரின் நடந்த போராட்டங்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை நான்கிலிருந்து ஐந்தாக உயர்ந்திருப்பதையும் அவர் தெரிவித்திருந்தார்

அல் ஜஜீரா செய்தியின்படி, "உள்ளூர் இஸ்லாமிய தலைவர்களால் அழைப்புவிடுக்கப்பட்ட ஒரு கூட்டத்திற்கு அதிகாரிகள் தடைவிதித்ததும், சனியன்று நியாமியில் குறைந்தபட்சம் ஆறு கிறிஸ்துவ தேவாலயங்களுக்கு தீ வைத்த மற்றும் கடைகளைச் சூறையாடிய, கல்லெறிந்த ஒரு இளைஞர் கூட்டத்தை பொலிஸ் கண்ணீர் புகைகுண்டு வீசி கலைத்தது. ஒரு பொலிஸ் நிலையம் தாக்கப்பட்டது, குறைந்தபட்சம் இரண்டு பொலிஸ் கார்கள் எரிக்கப்பட்டன."

அல்ஜீரியா தலைநகர் அல்ஜிர்ஸில், அந்த கேலிச்சித்திரங்களால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்களுடன் ஏற்பட்ட மோதலில் பல பொலிஸ்காரர்கள் காயமடைந்தனர்.