சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : கிரீஸ்

After Berlin dictates EU bailout of Greece

French ruling elite debates how to deal with Germany

கிரீஸின் ஐரோப்பிய ஒன்றிய பிணையெடுப்புக்கு பேர்லின் கட்டளையிடுகையில்

பிரெஞ்சு ஆளும் வர்க்கம் ஜேர்மனியை கையாள்வது குறித்து விவாதிக்கிறது

By Kumaran Ira and Alex Lantier
21 July 2015

Use this version to printSend feedback

பேர்லின் கிரீஸின் மீது கடுமையான சிக்கன கொள்கைகளைக் கட்டளையிட்டதோடு, யூரோ மண்டலத்திலிருந்து அந்நாட்டை தன்னிச்சையாக வெளியேற்றுவது குறித்த அதன் அச்சுறுத்தல், யூரோ நெருக்கடியின் அடியில் பிரதான ஐரோப்பிய சக்திகளுக்கு இடையிலான அடிப்படை முரண்பாடுகளை மேலே கொண்டு வந்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தால் இப்போது நடத்தப்பட்டு வருகின்ற வெட்டுக்களின் தொடர் தாக்குதலில் கிரீஸ் மற்றும் கிரேக்க தொழிலாள வர்க்கம் முதலாவதாக உள்ளது. எவ்வாறிருப்பினும் கிரீஸிற்கான ஐரோப்பிய ஒன்றிய பிணையெடுப்பு மீது ஜூலை 11-12 இல் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள், ஐரோப்பா மீது அதன் மேலாதிக்கத்தை ஸ்தாபிப்பதற்கான பேர்லினின் ஆக்ரோஷமான முயற்சியில் பல்வேறு பரந்த இலக்குகள் உள்ளடங்குகின்றன என்பதைத் தெளிவுபடுத்தினஇதில் முதன்மையாக, ஜேர்மனிக்கு அடுத்து இரண்டாவது மிகப்பெரிய யூரோ மண்டல பொருளாதாரமாக உள்ள பிரான்ஸ் உள்ளடங்குகிறது.

பிரான்சின் சோசலிஸ்ட் கட்சி அரசாங்கம், சர்வதேச நாணய நிதியம் மற்றும் வாஷிங்டனின் பகிரங்கமான எதிர்ப்பு நிலைப்பாடுகளுக்கு இடையே தான் ஜேர்மன் அதிகாரிகள் கிரீஸின் மீது ஒரு தண்டிக்கும் வகையிலான பிணையெடுப்பை வடிவமைத்தனர். பிரதம மந்திரி அலெக்சிஸ் சிப்ராஸின் கிரேக்க அரசாங்கத்திடம், பிரெஞ்சு நிதி அமைச்சக அதிகாரிகளால் கட்டளையிடப்பட்டிருந்த ஒரு கடுமையான 13 பில்லியன் யூரோ சிக்கன பொதியை அவர்கள் [ஜேர்மன் அதிகாரிகள்] கோபத்தோடு நிராகரித்தனர்.

ஜேர்மன் நிதிமந்திரி வொல்ஃப்காங் சொய்பிள கிரீஸை யூரோ மண்டலத்திலிருந்து வெளியேற்ற நிர்பந்திக்க அச்சுறுத்திய அதேவேளையில், இந்த கொள்கையை பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்ட் ஏற்றுக்கொள்ள முடியாதென அறிவித்திருந்த நிலையில், ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெல் ஏதென்ஸ் மீது முன்பினும் கூடுதலாக எலும்பை-முறிக்கும் விதமான கடுமையான நிபந்தனைகளை விதித்தார். சிக்கன நிபந்தனைகள் இறுக்கப்பட்டன என்பது மட்டுமல்ல, மாறாக ஏதென்ஸ் பில்லியன் கணக்கான அரசு சொத்துக்களை தனியார்மயமாக்குவதற்காக ஐரோப்பிய ஒன்றியத்திடம் ஒப்படைக்கவும் நிர்பந்திக்கப்பட்டது. கிரீஸின் கடன்சுமையை, அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 200 சதவீதமாக தற்கொலைக்கு சமமாக உயர்த்துமென அனுமானிக்கப்பட்ட அந்த உடன்படிக்கை, கிரீஸை ஓர் அரை-காலனித்துவ அந்தஸ்திற்கு குறைக்கிறது.

யூரோ மண்டல நாடுகளுக்கிடையே நெருக்கமான பொருளாதார ஒருங்கிணைப்பிற்கு அழுத்தமளித்ததன் மூலமாக கிரேக்க நெருக்கடிக்கு ஹோலாண்ட் விடையிறுத்துள்ள போதினும், எண்ணற்ற பிரெஞ்சு அரசியல்வாதிகளும் மற்றும் ஊடக நிறுவனங்களும் புதிய ஜேர்மன் கொள்கையின் நீண்டகால தாக்கங்களைக் குறித்து அவற்றின் கவலைகளையும் அதிர்ச்சியையும் வெளியிட்டு வருகின்றன.

ஜூலை 18 அன்று, சர்வதேச நாணய நிதியத்தின் முன்னாள் தலைவரும் முன்னணி சோசலிஸ்ட் கட்சி அங்கத்தவருமான டொமினிக் ஸ்ட்ரவுஸ்-கான், “எனது ஜேர்மன் நண்பர்களுக்கு" என்று தலைப்பிட்ட ஒரு பகிரங்க கடிதத்தைப் பிரசுரித்தார். 1943 மற்றும் 1944 இல் நாஜி ஆக்கிரமிப்பு பிரான்சிலிருந்து Albert Camus ஆல் எழுதப்பட்ட ஒரு ஜேர்மன் நண்பருக்கு கடிதம் எனும் தலைப்பை குறிப்பிடும் விதத்தில் உள்ள அந்த தலைப்பு, பட்டவர்த்தனமாக, ஐரோப்பிய ஒன்றியம் உடைவின் விளிம்பில் இருப்பதாக எச்சரிக்கிறது.

சிக்கன திட்டத்தை அவர் ஆதரிப்பதாக வலியுறுத்த ஸ்ட்ரவுஸ்-கான் சிரமமெடுத்தார், அவர் "பலமான நிர்வாகத்தை" பாராட்டியதோடு, “ஒருசமயம் நாம் ஒருசேர விரும்பிய அந்த ஐரோப்பாவை" அவர் நம்புவதாகவும் சேர்த்துக் கொண்டார்.

இருப்பினும் ஒரு "முடக்கும் நிலைமையை" உருவாக்கியதற்காக பேர்லினை அவர் விமர்சித்து எழுதினார், “அந்த உடன்படிக்கையின் நிபந்தனைகள்இன்னமும் ஐரோப்பாவின் எதிர்காலத்தை நம்புகிறவர்களுக்கு சாதகமாக எச்சரிக்கையூட்டுகின்றன,” என்றார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் "உடைவைத் தூண்டிவிடும் அபாயத்தை" மேற்கோளிட்டு, ஸ்ட்ரவுஸ்-கான் பிரான்சிற்கும் மற்றும் தெற்கு ஐரோப்பிய அரசுகளுக்கும் நிபந்தனைகளை ஆணையிடும் ஒரு ஜேர்மன் கொள்கைக்கு எதிராக எச்சரித்தார். “ஒரு யூரோ மண்டலம், இதில் என் ஜேர்மன் நண்பர்களாக நீங்கள், ஒருசில பால்டிக் மற்றும் நோர்டிக் அரசுகளைக் கட்டிப்போடும் உங்களின் சட்டங்களை அமைப்பீர்களேயானால், ஏனையவர்கள் அனைவராலும் அதனை ஏற்க முடியாது,” என்றவர் எழுதினார்.

சில கொள்கைகள், வரலாற்றுரீதியில் வேரூன்றிய மோதல்களை மட்டுமே முன்னுக்குக் கொண்டு வருமென ஸ்ட்ரவுஸ்-கான் வலியுறுத்தினார்: “பத்து நூறு ஆண்டுகளாக, அதன் அடுத்தடுத்த வெற்றிகரமான அத்தியாயங்களுடன், வலிநிறைந்த காலகட்டங்களுடன், பிரமாண்டமாக நம்பிக்கை நிறைந்த, மோதல்களும் நிறைந்த பயிற்சிகாலத்தின் ஒரு நீண்ட வரலாறு ஐரோப்பிய சகோதர்களுக்கு இடையே உள்ளது. நாம் நமது விரோதங்களை, பயங்கர வன்முறையைக் கூடத்தான், அவற்றை எப்போதும் மறக்காமல் கடந்து வந்திருந்தோம், வந்துள்ளோம். … ஆனால் கடந்தகால நமது தவறுகளையே, நம்மை திரும்ப செய்விக்கின்ற அசுரன் ஒருபோதும் வெகுதொலைவில் இல்லை.”

ஸ்ட்ரவுஸ்-கானின் கடிதம் ஐரோப்பிய முதலாளித்துவத்தின் முழு திவால்நிலையை சுட்டிக்காட்டுகிறது. கிரேக்க மக்களின் தலைமுறைகளையே தரித்திர நிலைக்குக் கொண்டு வருவதற்காக வடிவமைக்கப்பட்ட நிபந்தனைகள் திணிக்கப்படுகையில், அது கடந்த ஒன்றரை நூற்றாண்டில் மூன்று முறை ஜேர்மனி மற்றும் பிரான்சிற்கு இடையே முழு போருக்கு இட்டுச் சென்றுள்ள பிரதான ஐரோப்பிய சக்திகளுக்கு இடையிலான பிளவுகளை புதுப்பிக்கின்றது.

இரண்டாம் உலகப் போருக்குப்பிந்தைய அதன் இராணுவ கட்டுப்பாடுகளை பேர்லின் கடந்த ஆண்டு முடிவுக்கு கொண்டு வந்தது உட்பட, ஜேர்மன் கொள்கையானது பிரெஞ்சு ஆளும் உயரடுக்கின் நலன்களை அச்சுறுத்துகிறது என்பதை பிரெஞ்சு ஆளும் உயரடுக்கின் காலங்கடந்த பகிரங்க ஒப்புதலையே ஸ்ட்ரவுஸ்-கானின் கருத்து பிரதிநிதித்துவம் செய்கிறது.

ஜேர்மனியின் 1989 மறுஐக்கியம், 1991 சோவியத் ஒன்றிய கலைப்பு, 1992 மாஸ்ட்ரிச்ட் உடன்படிக்கையைக் கொண்டு ஐரோப்பிய ஒன்றிய ஸ்தாபிதம் என இவற்றின் புவிசார் மூலோபாய தாக்கங்களுக்கு, கடந்த கால் நூற்றாண்டாக, பிரெஞ்சு ஆளும் உயரடுக்கு அரைகுறை-மறுப்பை வெளிப்படுத்திய நிலையில் இருந்து வந்தது. ஐரோப்பிய ஒன்றியத்தினூடாக, அது ஐரோப்பிய சந்தைகளை அணுக முயன்றதுடன், மாஸ்ட்ரிச்ட் நிதிய அளவுகோல்களின் பெயரால் வேலைகள், கூலிகள் மற்றும் சமூக சேவைகளில் வெட்டுக்களையும், வரவு-செலவு திட்ட வெட்டுக்களையும் நியாயப்படுத்தியது. 1990-1991 இன் வளைகுடா போரிலிருந்து, மாலி, மத்திய ஆபிரிக்க குடியரசு மற்றும் சிரியாவில் ஆகிய அதன் முன்னாள் காலனித்துவ சாம்ராஜ்ஜியத்தில் பிரான்ஸ் தற்போது நடத்தி வரும் பினாமிப் போர் வரையில், ஏகாதிபத்திய போர்கள் பரவுவதையும் பாரீஸ் ஆதரித்தது.

பிரான்சில் பரந்தளவில் தொழிற்சாலைமூடல்கள் மற்றும் சமூக பின்னோக்கிய திருப்பம் ஆகியவற்றால் குறிக்கப்பட்ட இந்த காலகட்டத்தில், ஜேர்மனி ஒரு மிகவும் பலமான தொழில்துறை மற்றும் வணிகத்துறை சக்தியாக உருவாகியது. அது கிழக்கு ஐரோப்பாவில் பலமான நிதியியல் மற்றும் தொழில்துறை அந்தஸ்தை ஸ்தாபித்தது. அனைத்திற்கும் மேலாக, அதன் இராணுவ ஆற்றல் கட்டவிழ்ந்து வருகின்ற நிலையில், பேர்லின் கிரீஸ் மீதான அதன் கொள்கையினூடாக, ஐரோப்பாவின் அடிப்படை அரசியல் கட்டமைப்பு மீதான பிரச்சினைகளை தீர்க்கவும் மற்றும் பாரீஸ் அதன் அடிப்படை மூலோபாய நலன்களாக கருதுவதை மிதித்து நசுக்கவும் விரும்புவதை இப்போது சமிக்ஞை காட்டி வருகிறது.

இவ்விதத்தில் பிரெஞ்சு முதலாளித்துவம் ஓர் ஆழ்ந்த குழப்பநிலையை எதிர்கொண்டுள்ளது. ஜேர்மன் ஆணைக்கு அதன் அடிபணிவை அது தொடர்ந்து ஆழமாக்கினால், அவமானகரமாக, சாத்தியமான அளவிற்கு அபாயகரமாக இரண்டாந்தர அந்தஸ்திற்கு பின்னுக்கு இழுக்கப்படுவதை அது முகங்கொடுக்கிறது. ஆனால் வெளிப்படையாக எதிர்த்தால்ஒன்று கிரீஸிற்கு என்ன செய்யப்பட்டதோ அதே வழியில் பிரெஞ்சு கடனுக்கு எதிராக ஊக வணிகத்தின் வடிவிலோ அல்லது, இறுதியாக, முழு அளவிலான இராணுவ மோதல் வடிவிலோஜேர்மனி உடன் முழு மோதல் அபாயம் முன்வருகிறது.

ஜேர்மனி உடனான மோதல் பிரான்சில் வர்க்க பதட்டங்களை தீவிரப்படுத்தும் என்ற உண்மையே பிரெஞ்சு முதலாளித்துவத்தின் மிக முக்கிய கவலையாகும். தற்போதைக்கு, ஹோலாண்ட் நிர்வாகம் உள்நாட்டில் தொழிலாளர்களுக்கு எதிராக ஆழ்ந்த மக்கள்விரோத சிக்கன  நடவடிக்கைககைகளை திணிப்பதன் மூலமாக பிரெஞ்சு போட்டித்தன்மையை ஊக்குவிக்க முயன்று வருவதால், கிரீஸ் மீதான ஜேர்மன் கொள்கையை எதிர்ப்பதன் மூலமாக அதை நியாயமற்ற சிக்கன திட்டமாக காட்ட விரும்பவில்லை.

ஏனைய ஐரோப்பிய முதலாளித்துவத்தை போலவே, அது உள்நாட்டு நிலைமைகள் மற்றும் கிரீஸ் நிலைமைகள் இரண்டிலும், தொழிலாள வர்க்கத்தின் அதிகரித்துவரும் சமூக கோபத்தை குறித்து ஆழமாக கவலை கொண்டுள்ளது.

கிரீஸில் கடுமையான வெட்டுக்களுக்கு ஓர் ஆதரவாளரான ஐரோப்பிய ஒன்றிய கவுன்சில் தலைவர் டோனால்டு டஸ்க், சமீபத்தில் பைனான்சியல் டைம்ஸிற்கு அளித்த ஒரு பேட்டியில் புரட்சி குறித்து எச்சரித்தார். “இந்த சூழ்நிலை 1968க்குப் பிந்தைய ஐரோப்பிய காலத்திற்கு சற்றே ஒத்த வகையில் உள்ளது. ஒரு புரட்சிகர மனோபாவமாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் பரந்த அமைதியின்மை போன்ற ஏதோவொன்றை நான் உணர்கிறேன். அமைதியின்மை தனிநபர் சார்ந்தில்லாமல் ஒரு சமூக உணர்வின் அனுபவமாக மாறும்போது, அதுவே புரட்சிகளுக்கான தொடக்கமாக ஆகின்றன,“ என்றார்.

ஒரு விமர்சகர், பிரெஞ்சு வரலாற்றாளரும் மானுடவியலாளருமான எமானுவேல் டோட், கிரேக்க மக்களின் விருப்பத்திற்கு எதிராக நிற்பதில், பாரீஸ் பேர்லினால் திணிக்கப்பட்ட ஒரு திவாலான கொள்கையுடன் மிகவும் நேரடியாக அணிசேர்ந்திருப்பதாக பார்க்கப்படக்கூடிய அபாயம் குறித்து எச்சரித்தார்.

பெல்ஜியன் நாளிதழ் Le Soirக்கு டோட் கூறுகையில், ஹோலாண்டை பொறுத்த வரையில், அது உண்மையின் தருணமாகும். கிரேக்கர்கள் தோல்வியடைவதை அவர் அனுமதித்தால், வரலாற்றில் அவர் [இரண்டாம் உலக போர் சகாப்திய பிரான்சின் நாஜி-ஒத்துழைப்புவாத சர்வாதிகாரி] மார்ஷல் பெத்தானுக்கு அவசரகால அதிகாரமளிக்க வாக்களித்த சமூக ஜனநாயகவாதிகள் அளவிற்கு வீழ்ச்சியுறுவார். கிரேக்கர்கள் ஏதோவிதத்தில் பிரான்சின் ஒத்துழைப்புடனும் இணக்கத்துடனும் கடுமையாக தாக்கப்படுகிறார்கள் என்றால், பின்னர் அதிகாரத்தில் இருப்பது பெத்தானின் பிரான்ஸே என்பதை நாம் அறிந்து கொள்ளலாம், என்றார்.

இறுதியாக பிரெஞ்சு அரசாங்கம் என்ன முடிவெடுத்தாலும், பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் முழுமையான பிற்போக்குத்தனமான குணாம்சத்தைப் பொறுத்த வரையில் டோட் இன் நாசகரமான கருத்தில் ஒரு குறிப்பிடத்தக்க உண்மையின் கூறுபாடும் உள்ளடங்கி உள்ளது. கிரீஸில் அதன் முந்தைய நடவடிக்கைகள், அவற்றின் மூலமாகத்தான் அது அதன் சொந்த வங்கிகளுக்கு அதிகபட்சம் கடன்களைத் திரும்ப பெற முனைந்தது என்ற நிலையில், அங்கே உள்நாட்டில் தொழிலாள வர்க்கத்தின் வேலைகள், கூலிகள் மற்றும் சமூக உரிமைகள் மீதான அதன் முழுமையான தாக்குதலைத்தான் வெளியுறவு கொள்கையில் அது பிரதிபலிக்கிறது.

கோபமடைந்த கிரேக்க தொழிலாளர்கள், கிரீஸ் மீதான 1940களின் நாஜி ஆக்கிரமிப்புடன் பேர்லினின் கிரீஸிற்கு எதிரான பொருளாதார தாக்குதலை ஒப்பிட்டால், பிரெஞ்சு ஏகாதிபத்தியம் கிரேக்க மக்களைக் கொள்ளையடிப்பதில் பேர்லினுடன் ஒரு கோழைத்தனமான ஒத்துழைப்பாளராக இருந்துள்ளது என்பதே அது வகித்த பாத்திரமாகும்.